Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ரியல் எஸ்டேட். Show all posts
Showing posts with label ரியல் எஸ்டேட். Show all posts

ரியல் எஸ்டேட் - சிந்திப்போம் ! [தொடர் - 1] 5

அதிரைநிருபர் | May 31, 2015 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முகவுரை:

மனிதன் தன் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதற்கான வாழ்வாதாரங்களை தேடி அலைகிறான். அதற்காக அவன் பல்வேறு வழி முறைகளை தெரிவு செய்கிறான். மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வழி காட்டும் இஸ்லாம் மனிதன் தன்னுடைய வாழ்வாதாரங்களை எவ் வழியில் தேடிக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறையையும் சொல்லித் தறுகின்றது.

பொதுவாகச் சொன்னால் இஸ்லாம் எதையெல்லாம் ஹராம் (பாவம்/விலக்கப்பட்டது) என்று சொல்கிறதோ அது போன்ற காரியங்களிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருள் ஈட்டுவதை இஸ்லாம் தடை செய்து ஏனைய வழிகளில் பொருள் ஈட்டுவதை அனுமதித்துள்ளது. சிலர் கேளியாகவோ அல்லது தர்க்க ரீதியாகவோ "நாய் விற்ற காசு குறைக்குமா?" என்று கேட்பதுண்டு. நிச்சமாக நாய் விற்ற காசு நாளை மறுமையில் குறைக்கும்(தீவினையைப் பெற்றுத் தறும்) என்பதில் எந்த இறை நம்பிக்கையாளருக்கும் சந்தேகம் இருக்க முடியாது, அவ்வாறு சந்தேகம் கொள்பவர் இறை நம்பிக்கையாளராகவும் இருக்க முடியாது.

மேலும் சில நேரங்களில் சில காரியங்களை இது அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா? என்று தீர்மானம் செய்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. அது சமயம் செய்வதறியாது சிலர் திக்கு முக்காடிப் போவதுமுண்டு. இது போன்ற சூழ்நிலைக்கும் இஸ்லாம் மிகவும் எளிமையான முறையில் வழிகாட்டுகிறது. அதாவது "ஹராமும் தெளிவு, ஹலாலும் தெளிவு இதற்கிடையில் சந்தேகமானதை தவிர்த்துவிடுங்கள்". மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்.. அவர்கள் இதற்கு ஒரு அழகிய உதாரனத்தையும் சொன்னார்கள். அதாவது "உங்களுடைய கால்நடைகளை வரப்பிலே மேய்க்காதீர்கள்!" ஏனெனில் அது வரப்பிற்கு உள்ளே மேய்ந்ததா அல்லது வரப்பிற்கு வெளியே மேய்ந்ததா? என்று இனம் காண முடியாது என்பதற்காக. அதே போலத்தான் நாம் சந்தேகமான காரியங்களில் ஈடுபடும் போது நாம் அனுமதிக்கப்பட்டதை செய்தோமா அல்லது விலக்கப்பட்டதை செய்தோமா? என்று தெரியாது. ஒரு வேலை நாம் ஈடுபட்டது விலக்கப்பட்ட காரியமெனில் அது நாளை மறுமையில் அல்லாஹ்விடத்திலே தண்டனையைப் பெற்றுத்தந்துவிடும்! அல்லாஹ் பாதுகாப்பானாக!

**************************************************************************

ரியல் எஸ்டேட்:


கால ஓட்டங்களுக்கேற்ப மனிதர்கள் பொருளீட்டுவதற்கான புதுப் புது வழிமுறைகளை கையாள்வதுண்டு. சில காலகட்டங்களில் சில வகையான தொழில்கள் கோலோச்சியிருக்கும். அந்த வரிசையில் சமீபகாலத்தில் உச்சத்தில் இருந்த தொழில்களில் ஒன்றுதான் ரியல் எஸ்டேட் தொழில்.

உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்தது இந்த ரியல் எச்டேட் தொழில் என்பது யாவரும் அறிந்ததே. உலகப் பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு உலகின் பல பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் தொழில் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக நமதூரில் என்றும் ஏறு முகம்தான். எனவே தான் நம்தூரில் மட்டும் தோராயமாக வீட்டிற்கு ஒரு தரகர் இருப்பாரோ என்று எண்ணும் அளவிற்கு ஏராளமான ரியல் எஸ்டேட் தரகர்கள் இருக்கிறார்கள்.

விவசாய நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக மாறிக்கொன்டிருக்கின்றன. இதற்கு ஒரு முக்கிய காரனம் நமதூரில் இருக்கும் வழக்கம். அதுதாங்க பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வீடு கட்டிக் கொடுப்பது. [இப்பழக்கம் பெரும்பாலோரால் விமர்சிக்கப்பட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இதன் நிலை என்ன என்பதை அல்லாஹ் நாடினால் வேறொரு பதிவில் பார்க்கலாம்]. இதனால் ஏறிக்கொன்டே இருக்கும் வீட்டுமனைகளின் விலையும் கூடிக்கொன்டே இருக்கும் தரகர்களின் எண்ணிக்கையும் ஏழைகளை பெரு முச்சு விட வைத்திருக்கிறது. நாமெல்லாம் ஒரு இடம் வாங்கி வீடு கட்ட முடியுமா என்று நடுத்தர வர்க்கத்தினரையும் ஏங்க வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இத் தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இத் தொழில் அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா என்று எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள்?

மார்க்க அனுமதி:

இந்த ரியல் எஸ்டேட் தொழிலின் மார்க்க அனுமதி பற்றி பார்ப்பதற்கு முன்னால் ஒரு விசயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்வோம். மனித சமுதாயத்தின் சுபிட்சமான வாழ்க்கைக்குத் தேவையான தீர்க்கமான சட்டங்களையும், தெளிவான வழிகாட்டுதல்களையும் இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ளது. இருப்பினும் மனித சமுதாயத்தின் பெரும்பகுதி இஸ்லாமின் வழிகாட்டுதலை பின்பற்றாமையே இன்று மனித சமுதாயம் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கும் காரனம்.

பதுக்கல்:

அத்தியாவசியப் பொருட்களை தேக்கி வைத்து சந்தையில் அதற்கான தட்டுப்பாடு ஏற்படும் போது விற்பனை செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் அனுமதிக்க வில்லை. மாறாக இதை பெருங்குற்றமென இஸ்லாம் பரை சாற்றுகிறது. பதுக்கல் இந்திய சட்டத்தின் படியும் குற்றமாகும். இங்கே பதுக்கலைப் பற்றி ஏன் விவாதிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஐய்யம் ஏற்படலாம். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இம்மூன்றும் இவ்வுலகில் ஒரு மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளாகும். உணவுப் பொருட்களைப் பதுக்குவது கூடாது என்று விளங்கி வைத்திருக்கிற நாம் உறைவிடங்களைப் பதுக்குவதைப் பற்றி சிந்திக்கவில்லை.

ஒரு காரியத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் புரிந்து கொன்டோம் என்றால் பின் அது அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா என்பதை விளங்குவது எளிமையாகிவிடும். பொதுவாக வர்த்தகத்தில் ஒரு பொருள் எத்தனை கை மாறுகிறதோ அந்த அளவிற்கு அதன் விலை உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கே ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நாம் என்ன செய்கிறோம் எதிர்காலத்தில் விலை ஏறும் போது விற்கலாம் என்று வீட்டு மனைகளை வாங்கி பதுக்கி வைக்கிறோம்! நம்மிடத்தில் வருகிற தரகர் அப்படியான ஒரு திட்டத்தோடுதான் நம்மை அனுகுவார். இன்ன இடத்திலே இன்னார் மனை போட்டிருக்கிறர், நல்...ல இடம், இன்னும் ஒரிரு ஆண்டுகளில் இது சென்டராகிவிடும், இப்பொழுது ஒரு இலட்சம் கொடுத்து வாங்கினால் ஒரிரு ஆண்டுகளில் 5, 6 இலட்சம் விலை போகும், அதற்கு முன்னால் இருக்கிற மனை இப்போ 3 இலட்சத்திற்கு கேட்கப்படுகிறது என்று நமக்கு பொடி வைப்பார். மேலும், 40 மனை போட்டார்கள் எல்லாம் போச்சு, அவர்களுக்காக முகப்பில் 4 மனை வைத்துக் கொன்டார்கள், இப்பொழுது ஒரு 7, 8 மனை தான் மீதி இருக்கிறது, நாம் தாமதித்தால் அதுவும் போய்விடும் என்று நம்மை அவசரப்படுத்துவார்.

இப்பொழுது நாம் அந்த மனைய வாங்கப்போகிறோம்! இங்கே நம்மைத் தூண்டியது பண ஆசை! சில ஆண்டுகள் இதைப் பதுக்கி வைத்து பின் விற்றால் நல்ல இலாபம் கிடைக்கும் என்ற பண ஆசை! பணம் சும்மா வங்கியில் தானே கிடக்கிறது அதை இதில் போட்டு முடக்குவோம் என்கிற முடிவுக்கும் நாம் வந்துவிடுகிறோம். நம்முடைய சக்திக்கேற்ப 1, 2, 3, 4 என்று வாங்கி பதுக்கிக் கொள்கிறோம். சில ஆண்டுகளில் நமக்கு பணத் தேவை ஏற்படும் போது வாங்கிய நிலத்தை விற்போம்! அப்பொழுது தரகர் மற்றொருவரிடத்திலே போய் ஒரு வருசம் தான் ஆகிறது ஒரு இலட்சத்திற்கு நான் தான் வாங்கிக் கொடுத்தேன், இப்பொ 4 இலட்சத்திற்கு அந்த ஏரியாவிலேயே மனை கிடையாது, அவங்களுக்கு விற்க மனசு இல்லை, இருந்தாலும் அவசரத் தேவைக்காக கொடுக்கிறார்கள், நான் உங்களுக்கு 3 மனையையும் சேர்த்து 10 இலட்சத்திற்கு முடிச்சுத் தருகிறேன் இன்னும் 2 வருசம் போனா ஒரு மனை 10 இலட்சம் போகும் என்று பழைய சோப்பை மறுபடியும் அப்படியே போட்டு அந்த நிலத்தை வாங்க வைப்பார். இப்படியாக கை மாற்றி, கை மாற்றி அந்த நிலத்தின் விலையை அப்படியே ஏற்றி விடுவார்.

ஒன்றை நாம் உற்று கவனிக்க வேன்டும். அதாவது இங்கே நிலம் ஒரு வியாபாரச் சரக்காக பயன்படுத்தப் படுகிறது! அப்படி என்றால் நீங்கள் விற்பனக்காக வைத்திருக்கிற ஒரு பொருளை விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைத்திருந்தால் அதற்குப் பெயர் பதுக்கல் அல்லாமல் வேறென்ன?

அடுத்தாக, இப்படி பணம் இருப்பவர்கள் மாறி, மாறி நிலத்தைக் கைமாற்றி விலையை ஏற்றினால் அத்தியாவசியமுல்ல ஏழைகளுக்கு எவ்வாறு வீட்டுமனை கிடைக்கும்? சாமானியர்கள் / ஏழ்மையிலிருப்பவர்கள் எவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்க சக்தி பெறுவார்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

**************************************************************************

சிந்தனைக்காக:

அப்படியே சற்று இதையும் சிந்தித்துப் பாருங்களேன்!

மனை போடப்படுகிறது! வாங்கிப் பதுக்கி வைப்பது கூடாது என்று அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக எவரும் வாங்கவில்லை! மனையின் விலையில் பெரிய ஏற்றம் ஒன்றும் இருக்காது! தேவையுடையவர்கள் தனக்குத் தேவையான அளவை தேவையான சமயத்தில் வாங்கிக் கொள்ளலாம்! காலத்திற் கேற்ப, இருப்பிற்கேற்ப விலையில் சிறிய ஏற்ற இறக்கம் மட்டுமே காணப்படும்! ஆனால் ஒவ்வொரு கையாக மாறுவதால் ஒவ்வொருவருக்கும் இலாபம், முத்திரைத் தாள் செலவு, பதிவருக்குக் கொடுத்த இலஞ்சம், தரகருக்குக் கொடுத்த தரவு(கமிஷன்), என்றும் எல்லாம் சேர்ந்து மனையின் விலையை அல்லவா உயர்த்திவிடுகிறது!?

மேலும், அவரவர் பணம் இருக்கிறது என்று 4, 5 வாங்கி பதுக்கி வைக்காததால் எல்லா மனைகளும் விற்றுத் தீர்ந்துவிடாது. அதனால் அதை அடுத்துள்ள தோப்பும், வயலும் மனைகளாக மாறிவிடாது! பேராசையால் இயற்கை அழிக்கப்படாது! விவிசாய நிலங்கள் வெறுமையாக்கப்படாது! விவசாய நிலங்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும்! அதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகமாகும்! அத்தியாவசியப் பொருள்களின் விலை உயராது! முத்திரைத் தாளுக்காக செலவளிக்கும் பணமும், பதிவருக்குக் கொடுக்கும் இலஞ்சமும், தரகருக்குக் கொடுக்கும் தரவும் மிச்சமாகும்! ஆனால் பேராசையின் காரனமாக மனிதன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான்!? இதுதான் எதார்த்தம்.

இப்பொழுது நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்! அதாவது எது இஸ்லாம் அங்கீகரிக்கும் முறையாக இருக்கும்? எது மனித சமூகத்திற்கு நன்மை பயப்பதாக இருக்கும்? எதை நாம் நடைமுறைப்படுத்த வேன்டும்? என்ற முடிவுக்கு இன்ஷா அல்லாஹ் இப்போது நாம் வர முடியும் என்று நம்புகிறேன்.

நிறைவுரை:

இங்கே ரியல் எஸ்டேட் தொழில் சம்மந்தமாக நடைமுறையில் இருக்கின்றவற்றையும் அதனால் ஏற்படுகிற விளைவுகளையும் நான் அறிந்தமாத்திரத்திலே உங்கள் முன் உங்கள் சிந்தனைக்காக விட்டு விடுகிறேன். இவ்விசயத்தில் என்னுடைய நிலைபாடு அவசியமில்லாமல் நிலங்களை வாங்குவதும், விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைப்பதும் கூடாது, இஸ்லாத்தின் பார்வையில் அது தடுக்கப்பட்டது என்பதே!

மேலும் இங்கே மானுடன் சொத்துக்களை வாங்குவதும், தன்னை வளப்படுத்திக் கொள்ளவதும் கூடாதா? என்ற கேள்வி எழும் அதற்கான பதிலை அடுத்த பதிவில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

இது என்னுடைய சிந்தனையில் உதித்தது! மனிதன் என்ற அடிப்படையில் நானும் தவறிழைக்கக்கூடியவனே. மேலும் என்னுடைய கருத்தாடலே தவிர முடிவனதல்ல. அல்லாஹ்வின் வார்த்தையும் அவனுடைய தூதரின் வழிகாட்டுதலுமே இறுதியானது. இஸ்லாத்தின் ஒளியில் மாற்றுக் கருத்து சொல்லப்பட்டால் அதை ஏற்காமல் மன முரன்டாக இருப்பதைவிட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம'அஸ்ஸலாம்

அன்புடன்
அபு ஈசா

**************************************************************************

மற்றுமொரு துவக்கவுரை!

ஆன் லைன் வர்த்தகம்...
பங்குச் சந்தை முதலீடுகள்...

இப்படியாகத் தொடரும் (இன்ஷா அல்லாஹ்)...

ரியல் எஸ்டேட் - சிந்திப்போம்! [தொடர் - 4] - நிறைவு 37

அதிரைநிருபர் பதிப்பகம் | July 19, 2011 | ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்...


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


உலகெங்கும் நிலம் மற்றும் கட்டிடம் ஆகியவற்றின் மதிப்பு குறைந்திருந்தாலும் நமதூரான அதிரைப்பட்டினத்தில் மட்டும் இதன் மதிப்பு ஏறிக்கொண்டே இருப்பதற்கான காரணங்களையும், நம்முடைய தவறுகளை ரியல் எஸ்டேட் என்ற தலைப்பில் பார்த்துகொண்டு வருகிறோம். அதன் முக்கிய காரணங்களில் ஒன்றான பெண் பிள்ளைகளுக்கு வீடு கொடுப்பதையும் அதனால் அரங்கேற்றப்படுகிற அவலங்களையும் முந்தைய தொடரில் பார்த்தோம். அதனைத் தொடர்ந்து மனைவி வீட்டிற்கு கணவன் செல்லும் முறையையும் அதன் சாதக பாதகங்களையும் ஆய்வதற்கே இப்பதிவு.

முகவுரை:

நம் நாட்டில் மக்கள் என்னதான் தங்களுடைய மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கம், உணவு முறை என்று வேறுபட்டிருந்தாலும் ஒரு விசயத்தில் அநேகருக்கு மத்தியில் ஒரே வகையான நிலைபாடு இருப்பதைக் காணலாம்! அது என்னவென்று கேட்கிறீர்களா? அதுதாங்க திருமணத்திற்குப் பிறகு பெண் தன்னுடைய கனவன் வீட்டிற்குச் சென்று வாழ்வது! இந்தியர்கள் நிறத்தால் மொழியால் வேறுபட்டிருந்தாலும் இவ்விசயத்தில் அனைவரும் ஒரே விதியைப் பின்பற்றுவது உண்மையில் வியப்பிற்குறியதே. இதில் விதிவிலக்காக, அதிரைப்பட்டினம், காயல் பட்டினம், கீழக்கரை இன்னும் கேரளாவில சில பகுதிகளிலும் மாப்பிள்ளை திருமனத்திற்குப் பிறகு மனைவி வீட்டிற்குச் செல்லும் பழக்கம் உள்ளது.

ஒரு பாடலில் "தவளைக்கும், பெண்புள்ளைக்கும் இரண்டும் இடம் தாண்டி" என்ற வரி தவளை எவ்வாறு நீரிலும் நிலத்திலும் வாழ்கிறதோ அது போல பெண்கள் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீடு என்று இரண்டு வீடுகளில் வாழவேண்டி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படும். ஆனால் நம் ஊரான அதிரைப்பட்டினத்தைப் பொறுத்தமட்டில் ஆண்களுக்கே இரண்டு இடம்! இவ்வாறு நமதூரின் கலாச்சாரம் பெரும்பான்மைக்கு மாற்றமாக இருப்பதால் சில சமயங்களில் பிற ஊர் சகோதரர்களின் வசை பாட்டிற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை நமதூர் சகோதரர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஏன் இப்படி ஒரு சில ஊர்களில் மட்டும் பெரும்பான்மைக்கு மாற்றமான பழக்க வழக்கம்? இதற்கு காரனம் தான் என்ன?

அதிரைப்பட்டினத்தில் ஏன் இவ்வாறான நடைமுறை பின்றப்படுகிறது என்பதை யான் அறியேன் [உங்களில் யாருக்காவது தெறிஞ்சா சொல்லுங்களேன், ஒருவேளை நம்ம அகமது காக்கா? தெரிந்ததை விளக்கினால் நன்றாக இருக்கும்]. ஆனால் காயல் பட்டினத்தில் ஏன் இது போன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதை சன் TV யின் நிஜம் நிகழ்சியின் போது சகோதரர் மர்ஹூம் சாகு(அப்து)ல் ஹமீது என்பார் கூறும்போது "முன்பெல்லாம் குடிப்பதற்காக ஊற்று நீர் எடுத்து வர வெகுதூரம் நடக்க வேண்டியிருக்கும். அப்போது ஒரு முறை நிறை மாத கர்ப்பினி தண்ணீர் சுமந்து வரும் வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது. இந்நிலையை ஆய்வு செய்த ஊர் பெரியவர்கள், பிறருடை மகள் என்பதால் தானே இது போன்று செய்தார்கள், அதுவே தன் மகளாக இருந்தால் இப்படி நிறை மாத கர்ப்பினியாக இருக்கும் போது தண்ணீர் எடுக்க அனுப்பி இருப்பார்களா? எனவே இனிமேல் திருமணமான பெண்கள் தன் தாய் வீட்டிலேயே இருப்பது என்றும், கணவன்மார்கள் பெண் வீட்டிற்கு சென்றுவற வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள்" அன்று முதல் இப்பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

என்ன காரணமாக இருந்தாலும், அதில் நியாயங்கள் நிறைந்திருப்பதாக நமக்குத் தோன்றினாலும் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் நாம் பார்க்க வேண்டியது, இவ்விசயத்தில் இஸ்லாம் என்ன சொல்கிறது? அதன் நிலைபாடு என்ன? என்பதையே.

அப்படி என்றால் இதைப்பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது என்று பார்த்தால் நான் [என்னைப் பற்றி தெறிந்துகொள்ள பார்க்க தொடர் - 1] அறிந்தமட்டில் திருமணத்திற்குப் பிறகு மனைவி கணவன் வீட்டிற்குச் சென்று வாழ வேண்டும் என்றோ அல்லது கனவன் மனைவி வீட்டிற்குச் சென்று வாழ வேண்டும் என்றோ எந்த ஒரு நிபந்தனையையும் இஸ்லாம் முன் வைக்கவில்லை.

பொதுவாகவே இஸ்லாம் எதை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறதோ அதை செய்வதும், எதை தடுத்திருக்கிறதோ அதை விட்டு விலகி இருப்பதும் ஒவ்வொரு முஃமினான ஆண், பெண் மீதும் கடைமையாகும். அதைத் தவிர்த்து ஏனைய விசயங்களில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. அவ்வாறான விசயங்களில் எது இஸ்லாமிய வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்குமோ, எது நமக்கும் நாம் வாழும் சமூகத்திற்கும் நன்மை பயக்குமோ அதை நம் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து செயல்படுவதே சிறந்தது. அதுவே அனைவருக்கும் நலம் பயக்கும்.

உதாரணத்திற்கு அசைவ உணவு தான் உண்ண வேண்டும் என்றோ சைவ உணவு உண்ணக் கூடாது என்றோ இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. எனவே, ஒரு முஸ்லிம் சைவ மற்றும் அசைவ உணவுகளை தாராளமாக உண்ணலாம். அதே சமயம் பிரயானத்தில் இருக்கும் ஒருவர் உண்பதற்காக உணவு விடுதிக்குச் செல்கிறார். அங்கே அவர் சைவ உணவை உண்பதே சிறந்தது. காரனம் அசைவ உணவில் ஹராம் / ஹலால் பிரச்சனை உள்ளது. ஆனால் சைவ உணவவில் அப்படி ஹராம் / ஹலால் என்ற பிரச்சனை இல்லை. இல்லை, எனக்கு கவுச்சி இல்லாமல் உணவு செல்லாது! என்போர் முட்டையை அல்லது கடல் வாழ் உயிரினக்களை சேர்த்துக்கொள்ளலாம். இதுவே ஒரு இறை நம்பிக்கையாளருக்கு உகந்ததாக இருக்கும். சமூக நிலைகளப் பொறுத்து சிறந்ததைத் தெரிவு செய்வது நமது கடமையாகும். இல்லையெனில், காக்கையும், கழுதையும், தானாய் செத்ததும், அல்லாஹ்வுடைய பெயர் சொல்லி அறுக்கப்படாததும் நமக்கு உணவாக்கப்பட்டுவிடும்! அல்லாஹ் பாதுகாப்பானாக! நர மாமிசம் விற்ற உணவகங்களும் இருக்கத்தானே செய்கிறது.

மேற்சொன்ன உதாரணத்தின் அடிப்படையில் கணவன் மனைவி வீட்டிற்குச் செல்வதாயினும், மனைவி கணவன் வீட்டிற்குச் செல்வதாயினும் இரண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது இரண்டில் எது சிறந்தது என்பதை நாம் தான் முடிவுசெய்ய வேண்டும். அதற்கு இரண்டின் சாதக பாதகங்களும் ஆய்வு செய்யப்பட் வேண்டும்.
************************************************************************************
இதன் சாதக பாதகங்களை ஆய்வு செய்வதற்கு முன் நம் அதிரைப்பட்டினத்தின் கணவன் மனைவி வீட்டிற்கு செல்லும் முறையை சற்று விளக்கிவிடுகிறேன். [மற்ற ஊர் சகோதர சகோதரிகளும் இவ்வளைப்புவை தொடர்ந்து படிப்பதனால்]

பொதுவாகவே, கணவன் மனைவி வீட்டிற்குச் செல்வது என்றால் மனைவி கணவன் வீட்டிற்குச் செல்லும்போது எவ்வாறு அதுநாள் வரை தான் வாழ்ந்த வீட்டை விட்டு, தன் தாய் தந்தை, உடன் பிறந்தவர்கள், தாத்தா, பாட்டி சுற்றம், நட்பு என்று எல்லோரையும் விட்டுச் செல்வாளே அது போல நினைத்து விடுகிறார்கள். மேலும் பொழுதை சீரழிக்கும் திரைப்படங்களிலே காட்டுவதுண்டு; பெண் பெரும் வசதி படைத்தவளாக இருப்பாள், ஆணோ தினக்கூலியாய் இருப்பான். உடனே ஆணிடம் பெண்ணின் தந்தை சொல்லுவார் "என் மகள் விரும்பி விட்டதால் இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்கிறேன்; ஆனால் வீட்டோடு மாப்பிள்ளையாக நீ வந்துவிட வேண்டும்". உடன் அதை பெரும் இழிவாக எண்ணி தன் விரும்பிய பெண்ணை உதரித் தள்ளிவிட்டு வந்துவிடுவார். இது போன்ற சம்பவங்கள் மனதை பாதித்து விட்டதாலும் அதிரைப்பட்டினம் போன்ற ஊர்களில் கணவன் மனவி வீட்டிற்குச் செல்வதை ஏதோ பெரிய இழிசெயலை செய்தாற் போல் நினைதுக் கொள்கின்றனர். பிற ஊர்வாசிகள் தான் அவ்வாறு நினைத்துக் கொள்கிறார்களென்றால் நமதூர்வாசிகள் பலரும் ஏதோ பெரும் தவறிழைப்பதாய் எண்ணி குற்ற உணர்வோடு வாழ்ந்து கொன்டிருப்பதை பல சந்தர்பங்களில் நம்மால் உணர முடிகிறது. அல்லாஹ் நாடினால் இங்கே நம்முடைய ஐயங்களுக்கு விடை கிடைக்கலாம். சரி! விசயத்துக்கு வருவோம்.

அதிரைப்பட்டினத்தில் திருமணத்திற்குப் பிறகும் கணவனும், மனைவியும் அவரவர் வீட்டிலேயே தான் இருப்பார்கள். ஆனால் கணவன் மனை வீட்டிற்குச் செல்வார்! உண்பார்! உறவாடுவார்! தினமும் தன் தாய் வீட்டிற்கும், மனைவி வீட்டிற்குமென போய் வர இரு வீட்டோடும் தொடர்போடு இருப்பார். இதுதான் அதிரைப்பட்டினத்தில் கனவன் மனைவி வீட்டிற்குச் செல்வது. பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்று "வீட்டோடு மாப்பிள்ளை" யாய் சென்றுவிடும் படலமெல்லாம் இங்கில்லை. அது எப்படி தினமும் தாய் மற்றும் மனைவி வீட்டோடு தொடர்பாய் இருக்கமுடியும்? என்கிற கேள்வியும் எழலாம். ஆனால் இது எமதூரில் சாத்தியமே! காரனம் எங்களுடைய திருமன உறவுகளெல்லாம் 1 கி.மீ சுற்று வட்டாரத்திற்குள்ளேயே அமைந்துவிடும். நாங்கள் பெண் கொடுப்பதும் பெண் எடுப்பதும் எங்கள் ஊருக்குள்ளேயே. அதிலும் உறவுகளுக்குள் உறவாடுவதே அதிகம்.
*************************************************************************************
மனைவி கணவன் வீட்டிற்கு செல்வதன் சாதக பாதகங்கள்.

சாதகங்கள்:

திருமணம் முடித்து பெண் கனவன் வீட்டிற்குச் செல்வதால் அவள் மீதான பொருளாதாரச் சுமைகளை கனவனே சுமந்து கொள்வான்.

பிள்ளைகள் தந்தையினுடைய வாரிசுகளாக (தந்தையின் குடும்பப் பெயர் கொன்டு) அடையாளப்படுத்தப்படுவர்.

தவிர வேறு சாதகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. (அப்படி இருந்தா நீங்க சொல்லுங்க)

பாதகங்கள்:

ஹிஜாப்: ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் முன்கை தவிர்த்து ஏனைய பகுதிகளை ஆடையால் மறைத்துக் கொள்வதாகும். ஒரு பெண் தனக்கு மகரமல்லாதவர்களுக்கு (மனம் முடிக்க ஆகுமாக்கப்பட்டவர்கள்) முன்னால் தோன்றும்போது இறை மார்க்கமான இஸ்லாம் ஹிஜாபை கட்டாயமாக்குகிறது.

சாதாரணமாக பெண்கள் அணியும் ஆடைகள் எதுவும் ஹிஜாபை முழுமைப்படுத்தாது என்பதை யாவரும் அறிவோம். கணவன் வீட்டிற்கு வாழப்போகும் பெண்கள் அங்கே ஹிஜாபைப் பேனுவது அவசியமாகும். ஏனெனில் அங்கே கனவனுடைய சகோதரர்கள் இருப்பார்கள். வீட்டில் இருக்கும்போது பெண்கள் ஹிஜாபைப் பேனுவது சிரமமாகும். காரனம் ஹிஜாபோடு வீட்டு வேலைகளைச் செய்வது அத்தனை எளிதல்ல.

பிழைப்பு: நம் மக்கள் வெளிநாடு அல்லது வெளியூர்களுக்குச் சென்று பொருளிட்டுபவர்களாக இருக்கிறார்கள். எனவே மனைவியை தன் வீட்டில் விட்டுவிட்டு செல்வது அத்தனை ஆரோக்கியமானதல்ல.

பனிச் சுமை: வீட்டிற்கு வரும் மருமகள் ஏதோ பனியமர்த்தப்பட்டது போல் அநேக வேலைகளை ஏவலின் பேரிலோ, தானாகவோ, விரும்பியோ, விரும்பாமலோ செய்ய வேண்டியிருக்கிறது.

பாசப் பிணைப்பு: தாயிடத்திலே உரிமையோடு நடப்பதைப்போல் மாமியாரிடத்தில் பெண்கள் நடந்து கொள்வதில்லை. அதற்கு அச்சம், மரியாதை என்று எதுவும் காரணமாக இருக்கலாம்.

மேலும், எதிர்பாராத விதமாக தன் மகளுடை வாழ்க்கை நிம்மதியற்றதாக இருக்கும் போது தன் மருமகள் நிம்மதியாக இருப்பதை மாமியார்களில் சிலர் விரும்புவதில்லை.

புதுமாப்பிள்ளை மனைவியோடு அதிக நேரம் செலவு செய்தால் வசைகளை சுமப்பவள் மருமகளே.

வயது வந்த பெண்பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒரு மருமகள் தன் கணவோடு இன்புற்று இருபப்து பெரும் குறை கானும் குற்றமாகக் கருதப்படும்.

மணமாகிச் சென்றவள் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பதை அவள் சொன்னால் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும்.

நிம்மதியற்ற வாழ்க்கையாயினும் நிர்பந்திக்கப்படுவர் எளியவர்கள். தங்களின் சகோதரிகளுடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காக.

கணவன் மனைவி வீட்டிற்கு (அதிரைப்பட்டினத்தில் இருப்பது போல) செல்வதன் சாதக பாதகங்கள்.

சாதகங்கள்:

ஹிஜாப் சம்பந்தமான எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனெனில் அங்கே இருப்பவர்கள் அப்பெண்ணுக்கு மகரமானவர்களாகவே இருப்பர். அங்கே மனைவியின் சகோதரிகள் இருப்பார்களே! அவர்களுக்கு சகோதரியின் கணவர்கள் மஹரமல்லாதவர்களாக இருக்க பின் ஹிஜாப் பிரச்சனை எப்படி வராமல் இருக்கும்? என்ற கேள்வி எழலாம். ஆனால் அவர்கள் சகோதரியின் கனவர்கள் முன்னால் வர மாட்டார்கள். கனவன் மனைவி வீட்டினுல் நுழைய அனுமதி கேட்கும் போது மனைவியின் சகோதரிகள் மறைந்துகொள்வார்கள்.

நாம் வெளிநாடுகள் சென்று பொருளீட்டுவதால் பெண்களுக்கு அவர்களுடைய தாய் வீடு மிகவும் பாதுகாப்பானதாகவும், அவர்கள் இயலாதவர்களாக இருக்கும்போது தாய் மற்றும் சகோதரிகளின் அரவணைப்பும் கிடைக்கும். தன் தாயினிடத்திலே ஒரு வேலையக் கூட உரிமையோடு ஏவிவிடுவாள்.

கணவன் மனைவியை நன்றாக கவனித்துக் கொள்ளும்போது தாய் பூரித்துப் போவாள். தன் மகளின் மகிழ்சியில் தாயின் உள்ளம் உள்ளபடியே நிறைந்துபோகும்.

அதிரைப்பட்டினத்தில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, என்பது அறவே இல்லை.

திருமணமான பெண் தாய் வீட்டில் இருப்பது பெரும்பாலும் சாதகமான சூழ்நிலைகளையே கொண்டுள்ளது.

பாதகங்கள்:

கணவன் பொறுப்பற்றவனாக இருக்கும் போது திருமணத்திற்குப் பிறகும் மகளின் சுமையை தாய்வீடு சுமக்க வேண்டியிருக்கும். சில சமயம் அவளுடை கணவனின் சுமையையும் சேர்த்தே சுமக்க வேண்டியிருக்கும்.

பிள்ளைகள் தாயினுடைய வாரிசுகளாக (தாயின் குடும்பப் பெயர் கொண்டு) அடையாளப்படுத்தப்படுவர்.

தவிர வேறு பாதகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. (அப்படி இருந்தா நீங்க சொல்லுங்க)

மேற்படி சாதக பாதகங்களை மார்க்க அடிப்படையிலும் சமூக நிலையின் அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது திருமணமான பெண் கணவன் வீட்டிற்குச் செல்வதைவிட தாய்வீட்டில் இருப்பதே சிறந்தது எனும் கருத்துக்கே என்னால் வர முடிகிறது.

ஆனால் கணவன் மனைவி வீட்டிற்குச் செல்வதை விரும்பாவிடில் தனிவீடே சிறந்தது. ஏனென்றால் வெகு சில வீடுகளில் மாத்திரமே மருகளுக்கு பாதகமில்லாத சூழல் நிலவுகிறது என்பது உள்ளங்கையில் நெல்லிக் கனி.

நான் இங்கே அதிரைப்படினத்து சகோதர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் நமதூரில் இருக்கும் வழக்கம் மணமான பெண் தாய்வீட்டிலிருப்பது) உள்ளபடியே போற்றத்தக்கது. ஆனால் மனைவி வீட்டினர் அவளுக்கு தனி வீடு கட்டித் தர வேண்டும் என்று கணவன் தரப்பிலிருந்து கட்டாயப்படுத்துவதே தவிர்க்கப்பட வேண்டும்.

பெண்களுடைய பொறுப்பை ஆண்கள் சுமக்க வேண்டுமே தவிர ஆண்களுடைய பொறுப்புகளை பெண்கள் மீது சுமத்திவிடக் கூடாது

அவரவர்களுடைய தகுதிக்குத் தகுந்தாற் போலும் பிறருக்கு சிரமம் கொடுக்காமலும் ஒவ்வொருவரும் வாழப் பழகிக்கொன்டால் எல்லோருக்கும் நலமே.

மேலும், நம் நாட்டில் அநேகரும் கணவன் வீட்டிற்குச் சென்று வாழ்வது ஒன்றை தெளிவாகவே உணர்த்துகிறது. அதாவது மனைவி கணவனின் பொறுப்பில் இருப்பவள் என்பதை ஜாதி, மதம், மொழி, இனம் என்று அத்துனையும் கடந்து அனைவரும் ஏற்றுக்கொன்ட ஒன்று. அப்படி இருந்தும் மனைவியிடத்தில் கையேந்தும் கனவர்கள் சமூகம் உருவாகியிருப்பது வேதனைகுறியதே.

இங்கே மேலும் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதாவது பெரும்பாலோரால் பின்பற்றப்படுவதுபோல் எப்படி மனைவி கணவன் வீட்டிற்கு சென்று வாழ்வதே சிறந்தது என்ற எண்ணம் நமக்குள்ளும் வேரூண்டியதைப் போல் வேறு ஒரு விசயத்திலும் நாம் தேசிய நீரோடையில் கலந்திருக்கிறோம். அது தான் மணமான பெண்களின் பெயரோடு கனவனின் பெயரை சேர்துக் கொள்வது. இதைப் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவே என்னால் கருத முடிகிறது. எந்த சகாபியப் பெண்ணும் கனவனுடைய பெயரோடு சேர்த்து அழைக்கப் படவில்லை. முஃமின்களின் தாய் ஆயிஷா ரலி.. ஆய்ஷா பின்த் அபுபக்கர் ரலி.. என்றே அழைக்கப்படுகிறார்கள். ஒரு ஆணுடைய பெயர் திருமனத்திற்கு முன்பும் பின்பும் எவ்வாறு தந்தையின் பெயரைத் தாங்கி நிற்கிறதோ அது போல பெண்களின் பெயரும் திருமனத்திற்கு முன்பும் பின்பும் தந்தையின் பெயரைத் தாங்கி நிற்க வேண்டுமே தவிர கனவனின் பெயரையல்ல.

மனைவிக்கு பாஸ்போர்ட் எடுத்தாலும் அல்லது வேறு எதிலாவது அவர்களுடைய பெயர் எழுதப்பட்டாலும் தந்தையின் பெயரையே சேர்த்து எழுதுங்கள். அதுவே நிரந்தரமானதும் காலத்தால், சூழ்நிலையால் மாற்றப்படாததுமாகும்.

நிறைவுரை:

இக்கட்டுரை மனைவி வீட்டிற்குச் சென்று வாழந்து கொண்டிருக்கிறோமே என்ற குற்ற உணர்வுகளோடு இருக்கின்றவர்களுக்கும், நம் வீட்டிற்கு அழைத்தாலும் வர மறுக்கிறாளே மார்க்கப்படி(?) நம் வீட்டில் தானே இருக்க வேண்டும், என்ன செய்வது? என்று ஏக்கத்தோடு வாழ்ந்து கொன்டிருப்பவர்களுக்கும், வெளியூர் நண்பர்களின் கேளி கின்டல்களில் சிக்கி செய்வதறியாது தவித்துக் கொன்டிருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதலாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன், அல்ஹம்துலில்லாஹ்!

ரியல் எஸ்டேட் என்ற தலைப்பின் கீழ் நமதூரின் நிலையையும் அதற்கான காரணங்களையும் நான் அறிந்த மாத்திரத்தில் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். இதோடு இத்தொடரை முடித்துக் கொள்கிறேன்.

இது என் சிந்தனை மாத்திரமே, இஸ்லாத்தின் ஒளியில் இதைவிட மேலான கருத்து மற்றவரால் சொல்லப்பட்டால் அதுவே பின்பற்றப்பட வேண்டும். எனினும் குர் ஆனும், ஹதீஸுமே இறுதியானது.

இன்ஷா அல்லாஹ் வேறு ஒரு சிந்தனையோடு மீண்டும் ச(சி)ந்திப்போம்!

வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வுடைய வார்த்தை, வழிகாட்டுதலில் சிறந்தது அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதல்.

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம அஸ்ஸாலாம்
- அபு ஈசா


ரியல் எஸ்டேட் - சிந்திப்போம் ! [தொடர் - 3] 23

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உலகப் பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் நமதூரில் மட்டும் நிலம் மற்றும் கட்டிடங்களின் விலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏறிக்கொன்டே தான் இருக்கிறது. இப்படி பிற பகுதிகளில் இல்லாத அளவிற்கு ரியல் எஸ்டேட் தொழில் இங்கு மட்டும் அமோகமாய் நடைபெற்றுக் கொன்டிருப்பதற்கான காரணம் தான் என்ன? என்று பார்ப்போமேயானால் முக்கியக் காரணமாக நமதூரில் பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வீடு கட்டிக் கொடுக்கும் பழக்கம் இருப்பதைச் சொல்லலாம். வேறு சில காரணங்களும் உண்டு இன்ஷா அல்லாஹ் அதையும் தொடர்ந்து பார்ப்போம்.

இவ்வாறு பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வீடு கட்டிக் கொடுக்கும் பழக்கம் நாம் அறிந்த வரை அதிரைப்பட்டினத்தில் மட்டுமல்லாது காயல்பட்டினம், கீழக்கரை மற்றும் கேரளாவில் சில ஊர்களிலும் உண்டு. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில பகுதிகளில் மாத்திரமே இப்பழக்கம் இருப்பதால் பிற ஊர் மக்கள் இதைக் கடுமையாகச் சாடுவதும் உண்டு. ஒரு சபையில் நான் இருக்கும் போது நமதூர் சகோதரர் ஒருவரை அங்கிருந்த ஒருவர் ஏக வசனத்தில் விமர்சனம் செய்து கொன்டிருந்தார். அங்கே வரதட்சனைக் கொடுமை சம்பந்தமாக அன்றைய தினம் அவர் பேச வேண்டியிருந்தது. அந்த சகோதரர் விமர்சிக்கப்பட்டது அவர் செய்த குற்றத்திற்காக அல்ல அதிரைப்பட்டினத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கத்திற்காக.

பிற ஊர்களைக்காட்டிலும் வரதட்சனைக் கொடுமைகள் அதிரைப்பட்டினத்தில் குறைவே. அதிரைப்பட்டினத்தில் மாப்பிள்ளைக்கு பைக், மைனர் சைன் என்று எதுவும் இல்லை. பெண்ணுக்கு இத்தனை பொவுன் நகை போட வேண்டும் என்ற கெடுபிடியும் இல்லை. இருந்தாலும் மூஸா நபியின் கைத்தடி பாம்பாய் மாறி அனைத்து மந்திரவாதிகளின் பாம்பையும் விழுங்கினாற் போல் நமதூரில் சீதனமாகக் கொடுக்கின்ற வீடு பிற ஊர்களின் அனைத்து சம்பிரதாயஙகளையும் அதற்கான செலவிணக்களையும் சேர்த்தே விழுங்கிவிடும்!? பிற ஊர் சம்பிரதாயங்களான மாப்பிள்ளைக்கு மோதிரம், சைன், பைக், மற்றும் பணம், பெண்ணுக்கு நகை, பாத்திரம் பன்டம் என எல்லா செலவுகளும் சேர்ந்து அதிகப்பட்சமாக 5, 6 இலட்சத்தை எட்டும். ஆனால் நமதூரில் வீடு மட்டுமே ஏறத்தாழ 15, 20 இலட்சத்தை எட்டிவிடும். இதனால் நமதூரில் ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தினர் படும் கஷ்டம் சொல்லி மாலாது.

ஒரு சகோதரியோடு பிறந்துவிட்டால் அல்லது ஓரிரு பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் அவர்களுக்கான காரியங்கள் முடியும் வரை தன்னைத்தானே உருக்கிக் கொள்ளும் மெழுவர்த்தியாய் தன்னுடை ஆசா பாசம் அத்துனையும் துறந்து தங்களுடைய இளமையை வெளிநாடுகளில் தொலைத்த இன்னும் தொலைத்துக் கொன்டிருக்கிற ஆண்களும் அவர்களின் பிரிவால் தாய் நாட்டில் தவித்துக் கொன்டிருக்கிற பெண்களும் ஏராளம். தண்ணீருக்குள் மீன் அழுதால் அதன் கண்ணீரை யார் அறிவார் என்பதைப்போல் இவர்களுடைய வாழ்க்கை நகர்ந்து கொன்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல என்றே நினைக்கின்றேன்.

நமதூரில் வீடுகட்ட ஆகும் செலவை விட வீட்டு மனை வாங்குவதற்கு ஆகும் செலவே அதிகம். இதற்கு பெண்களுக்கு வீடு கொடுக்குப்பது மாத்திரம் காரனமல்ல. வேறு சில காரனங்களும் உண்டு. நமதூரில் பெரும்பாலும் யாரும் வெளியூர் சம்பந்தங்களை விரும்புவதில்லை. 95 சதவிகிதத்திற்கும் அதிகமான திருமனங்கள் ஊருக்குள்ளேயே அதுவும் உறவுகளுக்குள்ளேயே நடைபெற்றுவிடுகிறது. பிற ஊர்களில் ஏற்கெனவே உறவுகளுள்ள வெகு சிலரே வெளியூர்களில் திருமன உறவுகளை வைத்துக் கொள்கின்றனர். இதனால் ஊருக்குள்ளேயே அதிகரிக்கும் குடும்பங்கள், அவர்களுக்கான வீடுகள் என வீடு மற்றும் மனைகளுக்கான தேவை அதிகம். பற்றாக்குறைக்கு பணம் இருக்கின்றது என்பதற்காக நிலங்களிலே முதலீடு செய்து நம் மக்கள் 4, 5 மனைகளை வாங்கி பதுக்கி வைத்துக் கொள்கின்றனர். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு நிலங்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்துவிடுகிறது.

தன்னுடைய வீட்டைத் தானே கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஆண்களுக்கு இருந்திருந்தால் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே அதிகம் விரும்பியிருப்பார்கள். ஒரு வீட்டிலேயே இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்ந்து கொன்டிருக்கும். எனவே வீட்டு மனைகளின் தேவையும் பாதியாகக் குறைந்திருக்கும். இது தான் பிற ஊர்களில் இருக்கின்ற நிலை. இதனால் தான் பிற ஊர்களில் வீட்டு மனைகளுக்கான விலை ஏற்றம் என்பது சொற்பமாகவே இருக்கிறது. ஆனால் நமதூரில் தனக்கான வீட்டைத் தன்னுடைய மனைவியின் தகப்பனோ, அவளின் சகோதரர்களோ, அல்லது அவளின் உறவினர்களோ தானே கட்டப்போகிறார்கள்! முட்டையிடும் கோழிக்குத்தானே ( _ ) எரியும்! அதனால் மாப்பிள்ளைகளுக்கு என்ன கஷ்டம்? எனவே தான் தன்னுடைய மனைவி வீட்டார் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை என்று மின்சார வரி கட்டக் கூட தகுதியில்லாதோரும் தனக்கு தனி வீடு கட்டிக் கேட்கின்றனர்.

மேலும் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் தன் மனைவி வீட்டார் மீது அதிகாரம் செலுத்துவதும் அவர்களுடைய வீட்டில் தான் நாம் இருக்கின்றோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அவர்களை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்வதும் ஜீரனிக்க முடியாதவை. இதனால் சொந்த வீடிருந்தும் அனாதையாய் தன் இளமையைத் தன் பிள்ளைகளுக்காக இழந்த எத்தனையோ பெற்றோர்கள் முதுமையில் தங்களுடைய பிள்ளைகளின் அரவனைப்பின்றி அகதிகளாக தர்காக்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்!? இன்னும் சில இடங்களில் அவர்களுடைய பெண்மக்களே இதற்குக் காரனமாக இருந்திருகிறார்கள் என்பது வேதனையின் உச்சம்!

நம்முடைய மனைவி வீட்டுக்கு மாப்பிள்ளைகளாகவே சென்றிருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அங்கே பெண் வீட்டார்களோடு கூடி வாழ்வதில் நமக்கு அசௌகரியங்கள் இருந்தால் நாம் தான் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டுமே தவிர அவர்களை வெளியேற்ற நினைப்பது எவ்வகையில் நீதமாகும் என்பதை நாம் அனைவரும் சிந்திக்கக் கடமைப்படிருக்கிறோம். நமக்கு தனி வீடு வேண்டும் என்று நினைப்பதில் குற்றமில்லை. ஆனால் நம்முடைய தேவைகளை நாம் தான் பூர்த்தி செய்துகொள்ள வேண்டுமே தவிர பெண் வீட்டாரல்ல.

மேலும் பெண் எடுப்பவர்களும் பெண்ணுக்குத் தனி வீடு இருக்கின்றதா என்று பார்த்து நிச்சயம் செய்கின்றனர். ஏனென்றால் வீடு கட்ட வேண்டிய பொறுப்பு அவர்களுடய பிள்ளைக்கு வந்துவிடுமாம்! என்ன ஒரு நல்ல(?) எண்ணம். இதனால் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வீடு வைத்திருந்தால் தான் தங்களுடைய பிள்ளைகளுக்கு திருமனம் முடித்துக் கொடுக்க முடியும் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றனர். இந்த நிலை தீவிரமடைந்தால் அது பெரும் சாபக்கேடாகவே அமையும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

முஸ்லிம்களாகிய நாம் ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய மார்க்கத்தை அதில் பிறந்துவிட்டோம் என்பதற்காக அல்ல உண்மையிலேயே நேசிக்கின்றோம், இஸ்லாத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதில் பெருமிதம் கொள்கிறோம் என்பது உண்மையானால் ஒரு விசயத்தை நம்முடைய மனதில் ஆழமாய்ப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்துல்லாஹ், அப்துல் ரஹ்மான், அப்துல் காதிர் என்றும் பாதிமா,ஆய்ஷா, மர்யம் என்றும் பெயர் வைத்துக் கொள்வதினால் நாம் முஸ்லிம்களாக ஆகிவிட முடியாது. என்னதான் நாம் வணக்கத்திற்கு உறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மது ஸல்... அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் சாட்சி கூறுபவர்களாக இருந்தாலும் தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விறும்பாத வரை உண்மையான ஈமான் கொன்டவர்களாக முடியாது. அல்லாஹ்-வின் தூதரின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 13 (ஹதீஸ்: புகாரி)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

இஸ்லாம் கூட்டு வாழ்க்கையையும், கூட்டுத் தொழுகையையும் நம் மீது கடைமையாக்கி இருப்பதும் முஸ்லிம்கள் ஒரு கட்டிடத்தைப் போன்றவர்கள் என்றும் உடல் உறுப்புக்களைப் போன்றவர்கள் என்றும் உருவகப்படுத்தப்பட்டிருப்பதும் நாம் ஒருவருக் கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே யன்றி வேறில்லை.

திருமனம் என்ற பெயரில் பெண் வீட்டாரை கசக்கிப் பிழிந்து அவர்களை சக்கைகளாக்க நினைப்பது கொள்ளையடிப்பதை விட கொடிய செயலாகும். இஸ்லாம் அனுமதித்த பிரகாரம் நம்முடைய மனைவியருக்கு அவர்களுடைய பெற்றோர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காவிட்டால் அவர்களின் சார்பாக அதனை பெறுவதற்கு போராட மட்டுமே நமுக்கு உரிமை இருக்கிறதே தவிர மனைவி வீட்டாரின் ஒட்டு மொத்த உரிமைகளையும் அபகரிக்க நினைப்பதை சமூகம் எவ்வாறு சரி கண்டது என்பது வியப்பிற்குரியாதே!

யாரெல்லாம் இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆலிம்கள் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும். தங்களுடைய செயல்களை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்கக்கூடாது. திருமனங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் புறக்கனிக்கப்பட்டால் தங்களுடைய செயல்களை அவர்கள் திருத்திக் கொள்வார்கள், மற்றவர்களுக்கும் அது ஒரு பாடமாக அமையும் இன்ஷா அல்லாஹ்!

மேலும் சமூக அங்கத்தினர்களும் தங்களுடைய செயல்களை பிறரைப் பாதிக்காத வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பிறரை பாதிக்கக் கூடிய செயல்கள் நம்மிடமிருந்தால் அது நம்முடைய ஈமானைக் கேள்விக் குறியாக்கிவிடும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்-வின் தூதரின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 10 (ஹதீஸ்: புகாரி)

'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

******************************************************************************

பெண்களுக்கு வீடு கொடுப்பதை நாம் குற்றமென்று கொள்ள வாய்பில்லை. ஆனால் வீட்டை மாப்பிள்ளை வீட்டார் கேட்டுப் பெறுவதையோ அல்லது தன்னுடைய மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பதையோ, ஒரு போதும் ஏற்க முடியாது. அவ்வாறு செய்வதும் வரதட்சனையின் ஒரு அங்கமே. நிச்சயமாக வரதட்சனை இஸ்லாத்தின் பார்வையில் பெருங் குற்றமே. தனியாக இருக்க வேண்டுமென்பதற்காக பெண் வீட்டாரை வீட்டை விட்டு வெளியேற்ற நினைப்பது மிகப் பெரும் இழி செயலேயன்றி வேறு இல்லை.

பிறருக்கு துன்பம் தரும் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது என்பதை நாம் அனைவரும் மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய செயல்களை ஒருமுறை சீர்தூக்கிப் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் எவ்வளவுதான் நல்ல அமல்களைச் செய்திருந்தாலும் நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை மறுமையில் அது பறிகாரமாக்கப்பட்டு இறுதியாக நரகத்தைச் சுவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்! என்பதையும் உணர்ந்து மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் நரகத்தின் அனைத்து தீங்குகளை விட்டும் பாதுகாப்பானாக

மேலும் இப்பழக்கத்தை பிற ஊர் சகோதரர்கள் விமர்சிப்பதற்கும், உங்கள் ஊரில் பெண்களுக்குத்தான் வீடாமே? நீங்களெல்லாம் பொண்டாட்டி வீட்டுக்கு போவீர்களாமே? என்றெல்லாம் கேள்விகளைத் தொடுப்பதற்கும் இத்தனை பிரச்சனைகளும் குழப்பங்களும் நமதூரின் இப்பழக்கதின் (பெண்களுக்கு வீடு) பின்னே இருக்கிறது என்பதற்காகவா? என்றால் பெரும்பாலும் இதற்காக இல்லை என்பதே உண்மை! பின் எதற்காக விமர்சிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இதன் மற்றொரு அம்சமாகிய "மாப்பிளை பெண் வீட்டுக்கு போவது" இதுதான் பிற ஊர் மக்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது!

இன்ஷா அல்லாஹ் இதன் சாதக பாதகங்களை அடுத்து அலசுவோம்.


நீங்களும் வாங்க தவறுகளைச் சுட்டிக் காட்ட!


நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!


ம அஸ்ஸலாம்

- அபு ஈசா

ரியல் எஸ்டேட் - சிந்திப்போம் ! [தொடர் - 2] 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 14, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முந்திய பதிவில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பணம் சம்பாதிப்பதற்காக நிலங்களை வர்த்தகப் பொருளாக்கி வாங்குவதும், விற்பதுமாக நிலம் பல கை மாற்றப்படுவதும், புதிய மனைகள் விற்பனைக்கு வரும்போது 4, 5 மனைகளை வாங்கிப் பதுக்கி வைப்பது பற்றியும் எழுதி இருந்தேன். நிலங்கள் பல கை மாறுவதால் ஒவ்வொரு முறையும் இலாபம், மற்றும் செலவுகள் நிலங்களின் கொள்முதல் விலையோடு சேர்க்கப்பட்டு அதன் விற்பனை விலை உயர்த்தப்படுகிறது. மேலும் ஒருவர் 4, 5 மனைகளை வாங்குவதால் அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டு தேவை அதிகரிப்பின் காரனமாகவும் நிலங்களின் விலை உயர்கிறது. இதனால் மனைகளின் அவசியத் தேவையுள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினர் பாதிப்படைகின்றனர்.

புதிய மனைகள் போடப்பட்டாலும் நாளை நல்ல இலாபம் கிடைக்கும் என்று அவசியமில்லாதவர்களும் மனைகளை வாங்குவதற்கு போட்டி போடுவதால் எப்படியும் விற்றுத் தீர்ந்துவிடும் என்று நில உரிமையாளர்கள் எண்ணம் கொள்வதற்கும், ஆரம்பத்திலேயே விலையை உயர்த்தி நிர்ணயம் செயவதற்கும் வழி வகுத்துவிடுகிறது. இதனாலும் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினரின் உரிமை பாதிக்கப்படுகிறது.

நிலம் வியாபாரப் பொருள் என்ற நிலையை அடைந்துவிடுவதால் அதை விலை ஏறும் வரை வைத்திருப்பது பதுக்கலாகிவிடும்.

இது போன்ற காரனங்களால் அவசியமில்லாமல் நிலங்களை வாங்குவதும், விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைத்திருப்பதும் இஸ்லாத்தின் பார்வையில் தடுக்கப்பட்டதே - நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன் - என என்னுடை நிலைபாட்டையும் பதிந்திருந்தேன்.

"இவ்வாறு அவசியமில்லாமல் நிலங்களை வாங்குவது கூடாது என்றால் அவசியமில்லாதவருக்கு நிலங்களை விற்பதும், அதற்கு தரகராக இருப்பதும் தடுக்கப்பட்டதே!"

அவ்வாறு அவசியமில்லாமல் நிலங்களை வாங்குவது கூடாது எனும் நிலைபாட்டை நாம் எடுக்கும் போது ஒரு மனிதன் எவ்வாறு தன்னுடைய வளங்களைப் பெருக்கிக் கொள்ள முடியும்? எவ்வாறு சொத்து சேகரிக்க முடியும் போன்ற கேள்விகள் எழ வாய்ப்புள்ளது அதற்கான விளக்கமாக இப்பதிவு அமையும் இன்ஷா அல்லாஹ்!

*********************************************************************************

இங்கே புரிந்துகொள்வதற்காக முந்தைய பதிவில் மேற்கோல் காட்டிய உதாரனத்தை மீன்டும் எடுத்துக் கொள்வோம். அதாவது நாய் விற்ற காசு குரைக்குமா?

எந்து ஒரு விசயத்தையும் நாம் பகுத்துப் பார்க்கப் பழகிக் கொன்டால் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அதன் நிலை என்ன என்பதையும் அல்லாஹ்வின் உதவியால் இன்ஷா அல்லாஹ் புரிந்து கொள்ளலாம்.

நாய் விற்ற காசு குரைக்குமா என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னால் நாய் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். அதாவது இஸ்லாம் நாயை செல்லப் பிரானியாக வளர்ப்பதைத் தடை செய்கிறது. அதே சமயம் நாயை வேட்டைக்கு மற்றும் காவலுக்குப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறது.

எனவே தடுக்கப்பட்ட ஒரு காரியத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவது கூடாது என்ற அடிப்படையில் நாய் செல்லப் பிரானியாக விற்கப்பட்டால் அந்த காசு குரைக்கும் மற்றும் வேட்டைக்கு அல்லது காவலுக்கு விற்கப்பட்டால் அந்த காசு குரைக்காது என்பதை வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் மார்க்கத்தில் சொத்து சேர்ப்பதற்கோ வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்கோ எந்த தடையும் இல்லை. எனவே செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக நிலங்களை வாங்குவதும், விற்பதும் அனுமதிக்கப்பட்டதே!

மனைகளை வாங்கி வைப்பவரும் தன்னுடைய வளங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றுதானே வாங்கி வைக்கின்றார்! பின் அதை மட்டும் ஏன் கூடாது? என ஒரு கேள்வியும் இங்கே எழ வாய்ப்புண்டு.

*********************************************************************************
சொத்து (ASSET)

பொதுவாக சொத்துக்களை அசையும் சொத்து அசையா சொத்து என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரிந்து கொன்டால் எந்த வகையான சொத்து வாங்கலாம், எந்த வகையான சொத்து வாங்கக் கூடாது என்பதை புரிந்து கொள்வதும் எளிதாகிவிடும், இன்ஷா அல்லாஹ்.

அசையும் / அசையாச் சொத்துகளைப் பட்டியலிட்டுத மனனம் செய்து தெறிந்து கொள்வதைவிட அதன் பன்பின் அடிப்படையில் வேறுபடுத்தித் தெறிந்து கொன்டால் அதை இனம் கான்பது எழிதாகிவிடும்.

இப்போது நாம் வனிகவியல் பாடத்திற்கு வருகிறோம்!

அசையும் சொத்து (CURRENT ASSET):

அசையும் சொத்து என்றாலே அதன் உரிமை மாறிக்கொன்டே இருக்கும். உதாரனமாக ஒரு கார் தொழிற் சாலையில் கார் உற்பத்தி செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கார் அவர்களுக்கு அசையும் சொத்து. ஏனெனில் அது விற்பனை செய்ய (உரிமை மாற) வேண்டும் என்பதற்காக உற்பத்தி செய்யப்படுகிறது. அதை ஒரு மொத்த வியாபாரி கொள்முதல் செய்து விற்பனைக்காக வைத்திருக்கிறார். இங்கேயும் கார் ஒரு அசையும் சொத்தாகவே கருதப்படும்.

சுறுங்கக் கூறின் "ஒரு வாணிபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிற சொத்து அசையும் சொத்து" ஆகும்.

அசையாச் சொத்து (FIXED ASSET):

தன்னுடைய பயன்பாட்டிற்காக வாங்கப்படுகின்ற சொத்து அசையா சொத்து எனப்படுகிறது. மேற்படி உற்பத்தியாளருக்கும், வியாபரிகளுக்கும் அசையும் சொத்தாக இருக்கின்ற கார் நுகவோரிடத்தில் வரும் போது அசையா சொத்தாக மாறிவிடுகிறது. காரனம் நுகர்வோர் காரை விற்பனைக்காக வாங்கவில்லை, மாறாக பயன்பாட்டிற்காகவே வாங்குகிறார்.

இப்பொழுது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கான நுட்பம் புறிந்திருக்கும் என நம்புகிறேன்.

*********************************************************************************

இங்கே நாம் தடுக்கப்பட்டதென சொல்வது விற்கும் நோக்கத்தோடு (அசையும் சொத்தாக) நிலங்களை வாங்கி விலை ஏறும் வரை சில கால அலவிற்கு விற்காமல் வைத்திருக்கும் வாணிபத்தை.

விற்க வேண்டும் என்பதற்காக வாங்குகிற சரக்கை எந்த ஒரு வியாபாரியும் விற்காமல் வைத்திருக்க மாட்டார். அதை வாங்குவதற்கான நுகர்வோர் இல்லை என்றாலும் எப்பாடியாவது விற்க வேண்டும் என்பதற்காக விளம்பரம் கொடுப்பார், பல வியூகங்களை வகுப்பார். அவருடைய நோக்கம் எப்பாடியாவது வாங்கிய சரக்கை விற்க வேண்டும் என்பதாகவே இருக்கும்.

அதே போல் ஒரு வனிகர் தன்னுடைய சரக்கை வாங்குவதற்கான நுகர்வோர் இருந்தும் விற்பனை செய்யாமல் விலை ஏறிய பின் விற்பனை செய்யலாம் என்று வைத்திருந்தால் அதனைப் பதுக்கல் என்றே சொல்வோம். எனவே நிலங்களை விற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வாங்கி அதை விலை ஏறும் வரை வைத்திருப்பது பதுக்கல். ஆகாவே இஸ்லாமின் பார்வையில் இது ஹராம் (தடுக்கப்பட்டது/ பாவம்) என முந்தைய தொடரில் குறிபிடிருந்தேன்.

அதே சமயம் நம்முடைய தேவைக்காக (அசையா சொத்தாக) வாங்கப்படும் நிலம் மற்றும் ஏனைய சொத்துகள் வாங்குவதும் விற்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே. மேலும் ஒரு மனிதன் எவ்வளவு சொத்துக்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்பதற்கு எல்லையும் இல்லை. ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில் சொத்துக்களுக்கான செல்வ வரியை (ஜகாத்) தகுதியானவருக்குக் கொடுத்து விட வேண்டும்.

அசையா சொத்துக்களும் தானே விறகப்படுகிறது என்ற ஒரு கேள்வி எழவும் வாய்ப்புண்டு. இருப்பினும் அசையா சொத்துகள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாங்கப்படுகிறது. மேலும் அதன் விற்பனை சூழ்நிலையின் காரானமாகவே தவிர ஏற்கெனவே திட்டமிடப்பட்டதள்ள.
செயலுக்கான கூலி எண்ணததின் அடிப்படையிலேயே அமையும் என்பதே மார்கத்தின் நிலைபாடு!

மேலும் அசையா சொத்து நிலையான சொத்தாக வாங்கப்படுவதால் அது அடிக்கடி கை மாறவும் அதனால் விலை ஏறவும் வாப்பில்லை.

எனவே "நிலங்களை நிலையான சொத்தாக வாங்கிக் கொள்வது கூடும், வியாபாரச் சரக்காக வாங்கி விலை ஏறும் வரை விற்பனையை தாமதிப்பது கூடாது என்பதே என்னுடைய நிலைபாடு"

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

யா அல்லாஹ் ஹலாலானவற்றைக் கொன்டு எங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்வாயாக! ஹாராமானவற்றின் தேவையை விட்டும் எங்களைப் பாதுகாத்துக் கொள்வாயாக!

அல்லாஹ் நாடினால் பெண் பிள்ளைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் நமதூரின் பழக்கத்தையும் தொடர்ந்து அலசுவோம்!

ம'அஸ்ஸலாம்

அன்புடன்
- அபுஈசா

மேலே பதியப்பட்டுள்ள ஆக்கம் கட்டுரையாளரின் தன்னார்வத்தாலும், அவரால் சேகரிக்கப்பட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு