Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label இன்று நாளை. Show all posts
Showing posts with label இன்று நாளை. Show all posts

நேற்று! இன்று ! நாளை! – 3 36

அதிரைநிருபர் பதிப்பகம் | June 04, 2013 | , , , , ,

பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த வேளையில் 1967 தேர்தலில் அடித்த தேர்தல் அலை ஆடிக்காற்றில் ஒரு சாதாரண மாணவரால் சொந்தத் தொகுதியிலேயே  தோற்கடிக்கப் பட்டார். (இதற்குரிய தண்டனையைத்தான் இன்றைய தமிழகம் அனுபவிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கிறார்கள்). அண்ணாவுடைய மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப் பட்ட  வரலாற்றுக் களங்கத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  காந்தி சொன்ன, அண்ணா வலியுறுத்திய இராஜாஜி போன்றவர்கள் எதிர்த்த உயரிய   கொள்கை  தமிழ்நாட்டில் தனது உயிரை விட்டது. 

தமிழ்நாட்டில் தேர்தலில் தோற்றாலும் மத்தியில் காங்கிரஸ் கட்சியே அரசாண்டு கொண்டு இருந்தது. ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்திராகாந்தி ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று  அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து இந்திரா காந்தி விஸ்வரூபம் எடுத்தார். காங்கிரசின் மூத்த தலைவர்களான காமராஜர், நிஜலிங்கப்பா ஆகியோரின் அறிவுரையை மீறி அவர் எடுத்த நடவடிக்கைகள் பல அரசியல் மாற்றங்களைக் கொண்டுவந்தன. 

ஜனாதிபதியாக சஞ்சீவ ரெட்டியை கொண்டுவருவதா அல்லது வி. வி. கிரியைக் கொண்டுவருவதா என்ற சர்ச்சையில் கட்சி கட்டுப்பாடுகளை மீறி மனசாட்சிப்படி அவரவர் வாக்கு அளிக்க வேண்டுமென்ற புதிய சித்தாந்தத்தை இந்திராகாந்தி முன்வைத்ததே  கட்சி உடைய உடனடிக் காரணமாயிற்று. 

காங்கிரஸ் கட்சி என்கிற பாரம்பரியக் கட்சி இந்திரா காங்கிரஸ் என்றும் , ஸ்தாபனக் காங்கிரஸ் என்றும் உடைந்தது. ஸ்தாபனக் காங்கிரஸ்  சிண்டிகேட் காங்கிரஸ் என்றும் அழைக்கப்பட்டது. இரட்டைக் காளை பூட்டிய காங்கிரசின் தேர்தல் சின்னம் முடக்கப்பட்டு  பசுவும்  கன்றாகவும், இராட்டையாகவும் வழங்கப் பட்டது. பாராளுமன்றம் கலைக்கப் பட்டு தேர்தல் வந்தது. 

நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியைத் தருக! என்று ‘கூவி’ கருணாநிதி இந்திராகாந்தியுடன் தேர்தல் கூட்டு வைத்ததுடன் இன்னும் ஆயுள் இருந்த தமிழக சட்டமன்றத்தையும் கலைத்ததால்   1971- ல்  ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்றம் இரண்டுக்கும் தேர்தல் நடைபெற்றது. காமராசரும் இராஜாஜியும் மாற்று அணியில் இந்திரா மற்றும் கருணாநிதிக்கு எதிராக கைகோர்த்தனர். தேர்தல்  முடிவுகள் வந்தன. திமுக இந்திரா கூட்டணிக்கு மாபெரும் வெற்றி. காமராசர் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசுக்கு பாராளுமன்றத்தில் ஒரு இடம் கூட தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கவில்லை. இந்த வெற்றியை எம் ஜி யாரின் உழைப்புக்கு காணிக்கையாக்குகிறேன் என்றார் கருணாநிதி. 

நாகர்கோயிலில் ஒரு இடைத்தேர்தல் வந்ததால் காமராஜர் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று டில்லி பாராளுமன்றம் சென்றார். நேரு இறந்த பின் லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கியவர், லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும் மொரார்ஜி தேசாயின் எதிர்ப்பை மீறி இந்திராகாந்தியை பிரதமராக்கியவர் கிங் மேக்கர் என்று புகழப்பட்ட காமராசர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அமர்ந்தார். காமராஜர் தனது தோல்வியை மிகச் சாதாரண அரசியல் நிகழ்ச்சியாகக்  கருதி ஒதுக்கிவிட்டார். வேறு யாராக இருந்தாலும், ”தமிழ்நாட்டு மக்கள் நன்றி கெட்டவர்கள், இந்த மக்களின் நல்வாழ்விற்காகத் தானே நான் நேற்று வரை பாடுபட்டேன்” என்று புலம்பியிருப்பார்கள். அரசியல் துறவறம் பூண்டிருப்பார்கள். அல்லது தன்னைத் தோற்கடித்த கட்சியின் மீது சதாசர்வகாலமும் ஏதாவது குற்றம், குறை கூறிக் கொண்டே காலத்தை ஓட்டியிருப்பார்கள். தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதியாக இருந்தார் காமராஜர். அதுவே அவரது பெருந்தன்மைக்கு சான்றானது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்க் காமராஜர் டெல்லி வீட்டில் இருந்து வந்தார். 1966 – ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 7 – ஆம் தேதி, டெல்லியில் பசுவதைத் தடுப்புக் கிளர்ச்சி நடந்தது.

காமராஜர் டெல்லி வீட்டில்தான் இருந்தார். கிளர்ச்சியாளர்கள் காமராஜர் வீட்டைக் கற்களால் வீசித் தாக்கினார்கள். காவலாளியை அடித்துத் தள்ளிவிட்டு உள்ளே நூழைந்தார்கள். வீடு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. ஆனால் ஜன்னல்கள் திறந்து இருந்தது.

காமராஜர் மேல் வெறுப்பும், பொறாமையும் கொண்ட அந்தக் கும்பல் ஜன்னல் வழியே தீப்பந்தங்களை வீசினார்கள். வீடு தீப்பிடித்து எரிந்தது. மலை குலைந்தாலும் மனங்குலையாத காமராஜர் வீட்டிற்குள் தான் இருந்தார். படுக்கை மெத்தை தீப்பிடித்தும்கூட அவர் அஞ்சவில்லை. அலறவில்லை. பின்புறக்கதவைத் திறந்து கொண்டு காமராஜர் வெளியேறிவிட்டார்.

இந்தச் சம்பவம் டெல்லியில் காட்டுத்தீபோல் பரவியது. மறுநாள் பார்லிமெண்டிலும் இந்த நிகழ்ச்சி குறித்துக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காலமெல்லாம் பற்பல எதிர்ப்புகளைச் சந்தித்துச் சகித்துக் கொண்டு மௌனமாக இருந்து வெற்றி கண்டவர் ஆயிற்றே காமராஜர். யாரோ வேண்டாதவர்கள் செய்த இந்த நிகழ்ச்சிக்காக அவர் வேதனைப்படவில்லை. அதை அரசியலாக்க வேண்டாமென்று கூறிவிட்டார். இன்று இப்படி நடந்து  இருந்தால் பாராளுமன்றம் பலநாட்களுக்கு முடக்கப் பட்டு இருக்கும். 

அண்ணா அமெரிக்கா சென்று இருந்தபோது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜான்சனை சந்திப்பதற்காக சென்றாராம். அங்கே பலமணி நேரம் காக்க வைக்கபட்ட பின்னர் கூட அண்ணாவுக்கு அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையாம். பின்னர் தமிழகம் திரும்பிவிட்டார்.

சில ஆண்டுகள் பின்னர் லிண்டன் ஜான்சன்  இந்தியாவுக்கு விஜயம் செய்தாரம். அவர் சந்திக்க விரும்புபவர்கள் பட்டியலில் முதலில் இடம்பிடித்த பெயர் கர்மவீரர் காமராஜர். அப்பொழுது அமெரிக்க ஜனாதிபதியுடன் நின்று புகைப்படம் எடுக்கவே பல இந்தியத் தலைவர்கள் விரும்பினார்கள். ஆனால் காமராஜர் தன்னால் அவரை சந்திக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம்.

எல்லோருக்கும் வியப்பு... ஏன் என்று வினவியபொழுது அவர் சொன்ன பதில் ''ஒரு தமிழனான அண்ணாவைச் சந்திக்காமல் அவமானப்படுத்திய அவரைச் சந்திக்க என்னால் முடியாது. ஏன் என்றால் நானும் ஒரு தமிழன்.." என்றாராம். அதனால் தான்  அவரைப் பச்சைத் தமிழன் என்று தமிழர்கள் அனைவரும்  பெருமையாகப் பேசுகின்றர்கள். 

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழன் ஒருவனின் கவுரவம் என்று வரும்போது விட்டுக்கொடுக்காத அன்றைய தலைவர்களை காவிரிப் பிரச்னை உட்பட்ட ஜீவாதாரப் பிரச்னைகளுக்காககூட ஒன்றாக தலைநகர் செல்ல விரும்பாத இன்றைய தலைவர்களோடு ஒப்பிடக்கூட முடியவில்லை.  இறப்பு முதலிய நிகழ்வுகளில் கூட ஆளும் கட்சியினர் போகும் வீட்டுக்கு எதிர்க் கட்சியினரும் எதிர்க் கட்சியினர் போகும் வீட்டுக்கு ஆளும் கட்சியினரும் போய் துக்கம் விசாரிப்பது கூட அற்றுப் போய்விட்டது. தப்பித்தவறி யாராவது சொந்தக் காரணங்களுக்காக போனால் அவர்களின் பதவி பறிக்கப்படுகிறது. அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்வார்கள். அது உண்மைதானோ என்று இன்றைய தமிழ்நாட்டைப் பார்த்து உறுதியுடன் தெரிந்து கொள்ளலாம் போல இருக்கிறது.  

காமராசர் முதலமைச்சராக இருந்த போது அவரின் தாயார் சிவகாமி அம்மையார் சென்னையில் தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டு காமராசரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் இங்கு வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் எனக்கு கெட்டப்பெயர் தான் உருவாகும் என்று கூறி தாயாரின் விருப்பதை ஏற்க மறுத்தார். சில மாதங்களுக்குப் பிறகு சிவகாமி அம்மையார் காமராசரிடம் மேலும் ஒரு கோரிக்கையை வைத்தார். "நீ முதலமைச்சராக ஆகிவிட்டதால் என்னைப் பார்ப்பதற்கு நம் வீட்டிற்கு பலர் வருகிறார்கள். அவர்களுக்கு கலர் சோடா போன்றவற்றை வாங்கித் தர வேண்டிய உள்ளது. எனவே மாதந்தேறும் ரூ.150 ரூபாயை அனுப்பிவை என்றார். அதற்கு காமராசர் மாதம் ரூ.120 ரூபாயை அனுப்புகிறேன், அதைவிட ஒரு ரூபாய் கூட அதிமாக தரமுடியாது. கொடுக்கிறதையே சிக்கனமாகச் செலவு செய்து கொள் என்று இந்தக் கோரிக்கையையும் நிராகரித்தார்.  இது நடந்தது நேற்று! இன்று என்ன நடக்கிறது? நாளை என்ன நடக்கும்?

ஒருமுறை , கருணாநிதிக்கும் திரு. கருத்திருமனுக்கும் சட்டமன்றத்தில் வாக்குவாதம் நடைபெற்றது. வணிகர்கள் நலம் மற்றும் அவர்களுக்குரிய சலுகைகள் பற்றிய விவாதம் அது.     அந்த விவாதத்தில் காமராஜர் பெயரை கருத்திருமன் இழுத்தார். காமராஜர் சார்ந்திருக்கும் சாதி என்பதால் நாடார்களுக்கு இந்த அரசு எந்த நன்மையையும் செய்ய மறுக்கிறது என்று கூறினார். உடனே கருணாநிதி தனக்கே உரிய பாணியில் “ எதிர்க் கட்சித்தலைவரே சொல்லிவிட்டார் நாங்கள் நாடாருக்கு ஒன்றும் செய்யவில்லை என்று. அதை மனதார ஒப்புக் கொள்கிறேன்.  இந்த அரசு நாடாருக்கு ஒன்றும் செய்யாது தன்னை நாடுவோருக்கே எல்லாம் செய்யும் “ என்று கூறி தூள் கிளப்பினார். 

இதேபோல் மற்றொருமுறை கருணாநிதி  ஒரு மானியக் கோரிக்கையில் விவாதம் நடைபெற்றது. எதிர்க் கட்சி உறுப்பினர் “ முதல்வர் தனது பெயரிலேயே கருணை என்றும்  நிதி என்றும்  வைத்து இருக்கிறார். ஆனால் என் தொகுதிக்கு கருணை காட்டி  நிதி   ஒதுக்க மறுக்கிறார் ” என்று கூறினார். உடனே கருணாநிதி எழுந்து “ எதிர்க் கட்சி உறுப்பினர் சொல்வது மிகவும் சரிதான். என் பெயரில் கருணையும் இருக்கிறது – நிதியும் இருக்கிறது. கருணை மூன்று எழுத்தாக நிறையவே   இருக்கிறது. ஆனால் நிதி இரண்டே எழுத்தாக குறைவாக இருக்கிறது. இதை உறுப்பினர் புரிந்து கொள்ளவேண்டும்” என்று சொன்னார். எதிர்க்கட்சி உறுப்பினர்  உட்பட எல்லோருக்கும் இத்தகைய சொற்சுவை வழங்கப் பட்டது. 


சிண்டிகேட் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக பாராளுமன்றத்தில் காமராஜர் பதவி வகித்துக் கொண்டிருந்தபோது இந்தி தேசிய மொழியாகும் பிரச்னை ஏற்பட்டது. இந்திய தேசிய மொழியாக ஆக்கும் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஓட்டெடுப்புக்கு நாள் குறிக்கப் பட்டது. காமராசரின் நிலை இருதலைக் கொள்ளி         எறும்பானது. மசோதாவை ஆதரித்தால் தமிழ்நாடு கொந்தளிக்கும் ஆதரிக்காவிட்டால் இந்திவாலாக்கள் நிறைந்த சிண்டிகேட் காங்கிரசில் குழப்பம் வரும். இந்த இக்கட்டான நிலையைத் தவிர்க்க ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் காமராசர் தவிர்த்து விட்டார். அதே போல் இருபத்தி ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தி. மு. க  தரப்பிலும் இரண்டு பேரைக் காணவில்லை. 

இந்த நிகழ்வின் எதிரொலி தமிழக சட்டமன்றத்திலும் கேட்டது. காமராசர் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் தமிழுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தி மு க தரப்பில் பேசப்பட்டது. அப்போது கருத்திருமன் எழுந்து , “ காமராசர் கலந்து கொள்ளாததை மட்டும் குறை கூறும் நீங்கள் உங்கள் கட்சி உறுப்பினர்களில் இரண்டு பேர்  கலந்து கொள்ளாமல் எங்கே போனார்கள் என்று கண்டுபிடித்தீர்களா?” என்று ஆவேசமாகக் கேட்டார். உடனே கருணாநிதி அமைதியாக எழுந்து சொன்ன வார்த்தைகள் விவாதத்தின் சூட்டைக் குறித்து சுகத்தை கொடுத்தது. கருணாநிதி சொன்னார் “ எங்கள் கட்சி உறுப்பினர்கள் இருவர் எங்கே சென்று இருந்தார்கள் என்று கண்டு பிடித்துவிட்டோம். அவர்கள் ஒளிந்து கொண்டிருந்த காமராசரைத் தேடிக் கண்டுபிடிக்கப் போயிருந்தனர் “ என்று நகைச்சுவையாகச் சொன்னார். தனது கட்சி உறுப்பினர்கள் செய்த தவறை தனது நாவன்மையால் சமாளிப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
முத்துப் பேட்டை P. பகுருதீன். B.Sc.,


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு