Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வங்கி. Show all posts
Showing posts with label வங்கி. Show all posts

கடன் வாங்கலாம் வாங்க.... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 14, 2014 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! இதுவரை கடன் கொடுக்கல் வாங்கல், வருமானத்திட்டம், சேமிப்பு  வரை அனைத்தையும் பார்த்தோம். இனி நமக்கு நாமே என்ற திட்டத்தில் வட்டியில்லா கடன் திட்டத்தைப்பற்றி பார்ப்போம்.

வட்டியில்லா கடன் திட்டம்:

சீட்டு நடத்துவது போல்தான் இந்த திட்டம், எப்படி நடத்துவது ஏலச்சீட்டு நடத்துவதை பற்றி முன்பு ஒரு தொடரில் கூறியிருந்தேன். ஏலச்சீட்டு (ஏலச்சீட்டு வட்டியின் அடிப்படையில் உள்ளது) போல் இது கிடையாது. இந்த திட்டத்தில் குறைந்தது 10 பேர் வரை (அதிகமாகவும்) சேர்க்கலாம். குறைந்தது ஒரு நபருக்கு 3000ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். மொத்தம் 30ஆயிரம் வருகிறது. முதல் மாதத்தில் அனைவரின் பெயரையும் ஒவ்வொரு சீட்டில் எழுதி குலுக்கி ஒவ்வொன்றாக எடுத்து உதாரணத்திற்கு ஏப்ரல் மாதத்தில் ஒருவர் பெயர், மே மாதத்தில் ஒருவர் பெயர் என்று சீட்டை ஆரம்பிக்கும் தினத்திலேயே குறித்து வைத்துக்கொண்டு மாதாமாதம் யார் பெயர் குறித்து வைத்திருக்கிறீர்களோ  அதன்படி கொடுத்துவிடலாம். மாதா மாதம் பெயர் குலுக்கல் தேவையில்லை. முதல் மாதத்திலேயே பெயர் சீட்டை குலுக்கி வரிசைப்படி எடுத்து எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். (இதில் சீட்டை நடத்துபவரும் ஒரு உறுப்பினர். சீட்டை நடத்துபவர்  முதல் சீட்டை எடுத்துக்கொள்ளலாம், விட்டும் கொடுக்கலாம்).


இந்த முறையில் நடத்தும்பொழுது நடத்துபவரும், உறுப்பினர்களும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும். இருவரும் ஏமாற்றுப்பேர்வழிகளாக இருக்கக் கூடாது. இது கடன் வாங்குவதுபோல்தான். வட்டி என்ற பேச்சுக்கே இந்த திட்டத்தில் இடமில்லை.

வளைகுடா சகோதரர்கள் தங்கள் ரூமில் உள்ளவர்கள் தெரிந்தவர்கள் என்று சேர்த்து 500திர்ஹம் முதல் 1000திர்ஹம் வரை இதுபோல் சீட்டு சேர்த்து நடத்தலாம். இதன்மூலம் நமது தேவைகள் நிறைவேறும். இங்கு யாரிடமும் கடன் வாங்க வேண்டியதில்லை. 10பேரின் பணம் சுழற்சி முறையில் அவர் அவர் பணம் அவர்களுக்கே போய்ச்சேர்கிறது. குறைந்த கால அளவு 6 மாதம் அல்லது 12 மாதம் வைத்து நடத்தலாம். இதற்கு மேல் நீடிப்பது நல்லதில்லை. நடத்துபவரும், உறுப்பினர்களும் நம்பிக்கையானவர்களாக இருக்கவேண்டும். வல்ல அல்லாஹ்வை நம்பி இதனை செயல்படுத்தி பாருங்கள். அவசரத்தேவைகளுக்கு கடன் வாங்காமல் சமாளிக்கலாம்.

பைத்துல்மால்:

பைத்துல்மால்கள் மூலம் செல்வந்தர்களின் உதவியுடன் கஷ்டப்படும் நம் சமுதாயத்தவர்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் பொருள்கள் வாங்கிக் கொண்டும், பொருள்கள் எதுவும் இல்லாதவர்களுக்கு சாட்சிகள் வைத்துக்கொண்டும் கடன்கள் வழங்கலாம். நிறைய ஊர்களில் இத்திட்டம் நடந்து வருகிறது. இருந்தாலும் இன்னும் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. முழுக்க முழுக்க பைத்துல்மால்கள் செயல்படும் நேரத்தில் பிறமதக்காரர்களின் வட்டிக்கடைகள் முஸ்லிம்கள் பகுதியை விட்டு வெளியேறும்.

பொருளாதார சுனாமி

தற்பொழுது ஜப்பானில் சுனாமியும், நில நடுக்கமும் வந்து பலவிதமான இழப்புகளை ஏற்படுத்தியது. (வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் கோபத்தால் உருவாகும் அனைத்துவிதமான ஆபத்துகளிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்க தினமும் துஆச் செய்து வருவோம்). கடந்த வருடங்களில் ஒரு பொருளாதார சுனாமி வந்து உலகையே குலுக்கி எடுத்ததை மறந்து இருக்க மாட்டீர்கள். இதில் நமக்கும் படிப்பினைகள் இருக்கிறது. பல பேர் வேலை இழந்தனர். ஐடி துறையும், ரியல் எஸ்டேட்  என்ற துறையும் மேலோங்கி இருந்தது. இந்த துறையில் உள்ளவர்கள் வானத்திற்கும்  பூமிற்கும் குதித்து கொண்டு இருந்தார்கள்.

வல்ல அல்லாஹ் அனுப்பி வைத்த இந்த பொருளாதார சுனாமி பல பேர்களை தெருவுக்கு அனுப்பி பல சோதனைகளை ஏற்படுத்தியது. மன்னர்கள் கண்ட கனவு கனவாகவே போய்விட்டது. இதில் பெரிய பெரிய பண முதலைகளின் பேராசையினால்  மக்களையும் பேராசைப்பட வைத்து, அமெரிக்க மக்களில் பல பேரை தெருவுக்கு கொண்டு வந்து சேர்த்தது, பல வங்கிகளும் திவாலாகியது. வளைகுடா நாடுகளில் நிறைய பேருக்கு வேலைகள் பறிபோனது.

பொருளாதார சுனாமி வந்த நேரத்தில் ஒருவரின் பேட்டியை படித்தேன்: அவர் சொன்னது நான் வேலை இழந்து விட்டேன் என்னுடைய கவலையெல்லாம் இதுநாள்வரை மிக ஆடம்பரமாக என் பிள்ளைகளுக்கு பிட்சா போன்ற உணவுகளை வாங்கி கொடுத்தேன். இனி அவர்களுக்கு ரசம் சோறு கொடுக்க கூடிய நிலைக்கு வந்து விட்டேன் என்பதை நினைக்கும்பொழுது கண்ணீர் வடிக்கிறேன் என்றார். (ரசம் சோறு அவருக்கு கேவலமாக தெரிகிறது - இது கூட இல்லாமல் உலகில் நிறைய பேர் பட்டினி கிடக்கிறார்கள் என்பது தெரியவில்லை இந்த நவீன மனிதருக்கு).

வட்டியின் அடிப்படையில் கொண்ட பேராசை வியாபாரங்கள், எந்த தொழிலையும் வட்டியின் அடிப்படையில் தொடங்குவது, பங்கு சந்தை என்ற பெயரில் வெளிப்படையாக நடக்கும் மிகப்பெரிய சூதாட்டங்கள், எந்த தகுதியும், திருப்பி அடைக்க வழியும் இல்லாதவர்களுக்கு வங்கிகள் கடன்கள் கொடுத்தது, தன் நலம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு அப்பாவி மக்களின் செல்வங்களை சுரண்டி வாழும் கூட்டங்கள், இன்னும் இது போன்ற பல காரணங்களால் பொருளாதார சுனாமி மூலம் மக்களுக்கு சோதனைகள் வந்து சேர்ந்தது. ஏன் நல்லவர்களுக்கு வேலை போக வேண்டும் என்று நினைக்கலாம். நல்லவர்கள், தீயவர்கள் என்று எல்லோருக்கும் குறிப்பிட்ட காலம் நலம், குறிப்பிட்ட காலம் சோதனை என்று வல்ல அல்லாஹ்விடமிருந்து மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் நாம் உயிருடன் இருக்கும்வரை.

இந்தியாவில் உள்ள வங்கிகளும், வளைகுடாவில் உள்ள ஷரியத்தை கடைபிடித்த வங்கிகளும் தப்பித்துக்கொண்டன. இந்தியா பாதிப்படையாமல் இருந்தது பற்றி ஆய்வாளர்கள் கூறும்பொழுது இந்தியர்களின் சேமிக்கும் பழக்கமே காரணம் என்றார்கள். ஷரியத் வங்கிகள் திவாலாகமல் இருப்பதை பார்த்த மேலை நாட்டு வங்கிகள். தற்பொழுது ஷரியத்படி செயல்படுத்த முயற்சிகள் செய்து சில வங்கிகளும் செயல்பட்டு வருகிறது.

இந்த பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு 50பேர் இருந்த கம்பெனியில் 25பேரை ஊருக்கு கேன்சலில் அனுப்பி விட்டு 50பேர் வேலையையும் 25பேர் தலையில் வைத்துவிட்டார்கள். நாமும் வேறு வழி இல்லாமல் வேலையில் தொடர்ந்து இருந்து வருகிறோம். கடலில் ஏற்பட்ட சுனாமி கடலோரத்தில் இருந்த நாடுகளில் நடந்த அநாச்சாரங்களை ஒட்டு மொத்தமாக துடைத்தெறிந்து விட்டுச் சென்றது. பொருளாதார சுனாமியும் பல படிப்பினைகளை விட்டுச்சென்றுள்ளது. நாம் நடந்து முடிந்த பொருளாதார சுனாமியால் பாடம் படித்தோமா?

இல்லை நாம் பாடம் படிக்கவில்லை. வட்டியின் அடிப்படையில் உள்ள எந்தவொரு வியாபாரமும், கொடுக்கல் வாங்கலும் வல்ல
அல்லாஹ்வின் பார்வையில் தண்டனைக்குரியதே. நாம் இந்த வட்டி என்ற கொடும் நெருப்பில் இருந்து தவிர்ந்து வாழ முயற்சி செய்தோமா? இல்லை. . . இல்லை. . . இல்லை . . . என்றுதான் கூறமுடியும்.

நாம் என்ன செய்கிறோம்:

வீடு கட்டுவதற்கு, கடைகள் கட்டுவதற்கு, வீடு கட்டி வாடகைக்கு விடுவதற்கு என்று   தைரியமாக வங்கியில் கடன் வாங்குகிறோம். நகைகளை கொண்டுபோய் வங்கியில் வைக்கிறோம். கடன் அட்டையில் கடன் வாங்குகிறோம். ஏன் இவ்வாறு மீண்டும் மீண்டும் வங்கியில் வட்டிக்கு பணம் வாங்குகிறீர்கள் என்று கேட்டால், தவிர்ந்து வாழ முடியவில்லை என்ற பதில்தான்  நம்மவர்களிடம் இருந்து வருகிறது.

ஒரு சகோதரர் இன்ஷூரன்ஸில் கடன் வாங்க முயற்சி செய்தார். இவர் ஏழை இல்லை வசதிகள் இருக்கிறது. வாடகைக்கு விடுவதற்கு வீடு கட்ட வேண்டுமாம். என்னிடம் கடன் பத்திரத்தை கொடுத்து சாட்சி கையெழுத்து போடுங்கள் என்றார். நான் அவரிடம் சொன்னது: நான் வாழ்நாள் இன்ஷூரன்ஸ் செய்திருந்தேன், உயிருக்கு அல்லாஹ்தான் பொறுப்பு இன்ஷூரன்ஸ் பொறுப்பாகாது. மேலும் இன்ஷூரன்ஸ் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்குத்தவிர ஹராம் என்று அறிந்த பிறகு அதிலிருந்து விலகி கொண்டேன், அதனால் உங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டு வட்டிக்கு துணை செய்ய முடியாது என்று சொல்லி விட்டேன். அவருக்கு என்மேல் வருத்தம். அவர் என்னிடம் சொன்னது ஆச்சிரியப்பட வைத்தது. என்ன பாய் செய்வது ஷைத்தான் வலையிலிருந்து மீள முடியவில்லை என்று சொன்னார். என்னமோ ஷைத்தான் நீ வட்டிக்கு கடன் வாங்கவில்லை என்றால் உன்னை வாழவிடமாட்டேன் என்று அவரை மிரட்டி விட்டு போனான் என்பது போல் உள்ளது அவர் வார்த்தை.

சகோதர சகோதரிகளே! வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டுவதிலிருந்தும், கடன் அட்டையில் வட்டிக்கு கடன் வாங்குவதிருந்தும், நகைகளை கொண்டு போய் வட்டிக்கு அடகு வைப்பதிலிருந்தும் இன்னும் எத்தனை வகையான காரியங்களுக்கு வட்டிக்கு வாங்க நினைக்கிறோமோ அவை அனைத்திலிருந்தும் விலகி வாழ்வதோடு, உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக வாழ்வதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வாழ்ந்து வல்ல அல்லாஹ்வின் பொருத்தத்தை நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும்.

இன்றைய செல்வந்தர்களின் நிலை:

நம் சமுதாயத்தில் செல்வம் அதிகமாக உள்ளவர்கள், அவர்கள்  தெருவில் உள்ளவர்களின் கஷ்டங்களையும், உறவினர்களின் கஷ்டங்களையும் கண்டு கொள்வதில்லை, முன்பெல்லாம் 10,20 லட்சங்களில் வீடுகள் கட்டினார்கள். செல்வங்கள் அதிகமான இன்றைய நிலையில் 50 லட்சம், 80 லட்சம், கோடி என்ற செலவில் வீடுகள் கட்டப்படுகிறது.

ஏழைகள் நிறைந்த, கல்வி கற்பதற்கு வசதியில்லாத, பெண்களுக்கு திருமண வயது கடந்தும் விலை கொடுத்து மணமகனை விலைக்கு வாங்க பணமில்லாமல் தவிக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் நாமும் ஒரு முஸ்லிம் அல்லவா என்ற சிறு மன உறுத்தல் கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இன்றைய செல்வந்தர்கள்.

தம் முயற்சியால் வந்த செல்வம் தனக்கு மட்டும்தான் என்று ஆடம்பரமாக வீண் விரயம் செய்தும்,  செல்வம் வரும்பொழுது தலைகால் புரியாமல் நடந்து கொள்கிறார்கள். செல்வம் நிலையானது அல்ல நம்மை சுற்றி உள்ள மனிதர்கள்தான் நிரந்தரமானவர்கள். அவர்களுக்கு நம் சக்திக்கு உட்பட்டு உதவிகள் செய்து வாழ்வதுதான் நன்மைகளை பெற்றுத்தரும் சிறந்த வாழ்க்கை. நமக்கு செல்வம் இல்லாதபொழுதும், நம்மை செல்வம் வந்து சேரும்பொழுதும் நம்முடைய நடவடிக்கை ஒரே மாதிரி இருக்க வேண்டும். செல்வம் சுகமானதுதான், நன்மையானதுதான், ஆனால் அதோடு சோதனைகளும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. (வல்ல அல்லாஹ் நமக்கு தாராளமாக செல்வத்தை தரும்பொழுது நமது தேவைகளுக்குப்போக வீண் விரயம் செய்யாமல் நாமும் தாராளமாக கஷ்டப்படும் ஏழைகளுக்கு கடனாக, தருமமாக (ஸதக்கா) கொடுக்க வேண்டும்).

கீழ்க்கண்ட நபிமொழிகள், நமது வாழ்வின் நிலை, செல்வத்தின் நிலை இரண்டையும் தெளிவாக விளக்குகிறது:

''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்குச் சோதனை, செல்வம்(பெருகுவது)தான் என்று நபி(ஸல்)அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். '' (அறிவிப்பவர்: கஹ்பு இப்னு இயாழ்(ரலி). (நூல்: திர்மிதீ)

''இந்த (அவசியத்) தேவைகளைத் தவிர வேறு எதிலும் எந்த உரிமையும் ஆதமின் மகனுக்கு இல்லை. (அவை) அவன் குடியிருக்கும் வீடு, தன் மறைவுப்பகுதிகளை மறைக்கப்பயன்படும் ஆடை, கெட்டியான ரொட்டி(உணவு), மற்றும் தண்ணீர் (இவைதான் உரிமையாகும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஅம்ரு என்ற உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) நூல்: திர்மிதீ).

''நபி(ஸல்) அவர்கள் என் தோள் பட்டையைப் பிடித்துக் கொண்டு,  ''ஒரு பயணியாகவோ அல்லது பாதையைக் கடந்து செல்பவராகவோ நீர் இந்த உலகில் இருந்து கொள்'' என்று கூறினார்கள். ''நீர் மாலை நேரத்தில் இருந்தால் காலை நேரத்தை எதிர் பார்க்காதே! நீ காலை நேரத்தில் இருந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்காதே! உன் நோய் (நிலையை கருத்தில்) கொண்டு, உன் உடல் நிலையையும், நீ இறப்பதை (கருத்தில்) கொண்டு உன் உயிர் வாழும் காலத்தையும் பயன்படுத்திக் கொள்வீராக! என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.'' (அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி) நூல்: (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 471))

''நபி(ஸல்) அவர்கள் ஓர் ஓலைப்பாயின் மீது படுத்து உறங்கினார்கள். அவர்களின் விலாப்புறத்தில் அதன் தடயம் ஏற்பட்டது. 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்காக நாங்கள் ஒரு மெத்தையை ஏற்படுத்தித் தரலாமா?' என்று கேட்டோம். ''எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒரு பயணி ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து, பின்பு ஓய்வெடுத்து, அதை விட்டும் செல்வான் அல்லவா! அது போன்றே தவிர நான் இவ்வுலகில் இல்லை'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி)  நூல்: (திர்மிதீ),(ரியாளுஸ்ஸாலிஹீன்: 486) )

''பணக்காரர்களைவிட  ஐநூறு வருடங்களுக்கு முன் ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 487)

"ஆதமின் மகனே! உன் தேவை போக நீ செலவு செய்வது உனக்கு சிறந்ததாகும். அதை நீ செலவு செய்யாமல் இருப்பது உனக்கு தீங்காகும். தேவையானவற்றை வைத்துக் கொள்வதற்காக நீ பழித்துரைக்கப்பட மாட்டாய். உன் நிர்வாகத்தின் கீழ் இருப்போருக்கு  (நீ உதவி செய்து) செலவைத் துவக்குவாயாக! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) நூல்:(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 510)

இந்த நபிமொழிகளை நன்றாக மனதில் பதிய வைத்து நமது செல்வத்தின் நிலையையும், வாழ்வின் நிலையையும் சரி செய்து மறுமையில் வெற்றி அடைய முயற்சிகள் செய்யவேண்டும். வல்ல அல்லாஹ் நமக்கு எல்லா காரியங்களிலும் நன்மையை தந்து ஹலால், ஹராமை பேணி நடக்கும் நன்மக்களாக நாம் வாழ்வதற்கு நல்லருள் புரியட்டும்.

அலாவுதீன். S.

அதிரைநிருபரில் இதுவரை பதிக்கப்பட்ட ஏராளமான தொடர்களில் ஒன்றான 'கடன் வாங்கலாம் வாங்க' தொடரின் இந்த அத்தியாயம் மிக அதிகமாக வாசிக்கப்பட்டது மட்டுமல்ல பகிரப்பட்டதுமாகும்.

வேலை நேரமும் கல்வியும்..! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2013 | , , , , ,

இன்று முன்னேறிய நாடுகளை கவனித்தால் ஒரு முக்கியமான செய்தி நமக்கு புலப்படும். இந்த நாடுகளில் பள்ளி கூடங்கள் எல்லாம் அதிகாலை 7 மணிக்கு தொடங்கி விடும். அதுபோல் அரசு அலுவலகங்கள் 8 மணிக்கு தொடங்கி விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகூடம் அனுப்பிவிட்டு தாங்கள் வேளைக்கு செல்வதற்கும் வசதியாக இருக்கும் .

குழந்தைகளும் அதிகாலை படிப்பை தொடங்குவதால் படித்தவை அனைத்தும் மனதில் நிற்கும் நன்றாக படிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் வாழ்கையில் நல்ல முன்னேற்றமும் தகுதியும் அடைவதால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல முன்னேற்றம் கிடைகின்றது .

அதை விட முக்கியமான விஷயம் அதிகாலையில் எழவேண்டும் என்பதால் இரவில் சீக்கிரம் தூங்கி விடுவார்கள். மானாட மயிலாட ஆட்டம் போன்ற மட்டமான TV நிகழ்ச்சிகள் பார்த்து மூளை மழுங்கடிக்கபடுவது தவிர்க்கப்படுகின்றன. அதிகாலையில் எழுந்து பள்ளிக்கூடம் செல்வதால் 7 மணிக்கு ஸ்கூல் என்றால் 6:30 க்கு வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் இவர்கள் 5 மணிக்கு எல்லாம் எழுந்து ரெடியாக வேண்டும் 5 மணிக்கு எழுந்தால் இறை வணக்கமான சுபுஹு தொழுகை நிறைவேறிவிடும்.

குழந்தைகளுக்கு படிப்பு படிப்பு என்று படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் படிப்பினுடன் சேர்ந்து வெளிப்பழக்க வழக்கங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். உதரணத்திற்கு சாப்பாட்டு நேரத்தில் திடீர் விருந்தாளி வந்து வந்து விட்டால் மேலும் உடனே சமைக்க நேரமிருக்காது, இருக்கும் உணவை பகிர்ந்து உண்பதற்கு பழகி கொடுக்க வேண்டும் (யார் வந்தால் என்ன, எனக்குள்ள கொள்ளளவு என்னவோ அதை புல் செய்து கொள்வேன் என்ற சிந்தனையை இளைய வயதிலேயே எழாமல் இருக்க நல்ல புத்திமதிகளை புரியும்படி சொல்ல வேண்டும்).

நமது ஊரில் வங்கிகள்: 10 மணிக்கு வங்கிகள் திறக்கப்படுகிறது அங்கு வேலை செய்வோரின் முகத்தை பார்த்தால் தூங்கி வழிந்து கொண்டுதான் இருக்கும். போட்டிருக்கும் சட்டை காலர் அழுக்கு பிடித்தே இருக்கும் அல்லது காலர் பிய்ந்து போயிருக்கும் இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றால் இவர் பேங்க்கில் வேலை செய்பவர் இல்லை என்று அர்த்தம்.

நாம் போய் கவுண்டரில் ஏதாவது விபரம் கேட்டால் அண்ணார்ந்து பார்க்கவே ஐந்து நிமிடம் ஆகும் நாம் கேட்டதற்கு பதில் அந்த நாலாவது சீட்டில் போய் கேளுங்கள், இங்கே வந்து களுத்தை அறுக்குரியலே என்று சிடு சிடுப்பார். அந்த நாலாவது சீட்டுக்கு போன அங்கு ஆளே இருக்க மாட்டார், என்னவென்று கேட்டால் லீவுலே போயிருக்கார் என்பார்கள் சரி மனேஜரை பார்க்கலாமென்று போனால் லாக்கருக்கு போனவர் இன்னும் வரவில்லை என்று நம்மை மதிக்காமல் பியுன் சொல்லிவிட்டு போய்க்கொண்டு இருப்பான். லாக்கருக்குல போனவரு அவருடைய டூட்டி டைம் முடிஞ்சிதான் வெளியோ வருவாரு போல.

இதெல்லாத்தையும்விட கேஷ் கவுண்டரில் உள்ளவர் பணம் தரும்போது என்னவோ அவர் வீட்டு பணத்தை நமக்கு சும்மா எலக்சன் நன்கொடையா தருவது போல் பல அலப்பறை செய்து விட்டுதான் பணத்தை கையில் கொடுப்பார். இவர்களிடம் ஒரு சிரிப்பையோ அல்லது கனிவான வார்த்தையையோ நாம் எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து தான் போகணும். இங்கு கொடுமை என்னவென்றால், இவர்கள் வாங்கும் சம்பளம் நம் பணம் என்பது நமக்கே தெரியாது, அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.

அடுத்து பத்திரப்பதிவு அலுவலகம்: அதே 10 மணி அதே அலுக்கு சட்டை தரையை சீய்க்கும் எட்டுமுழ வேஷ்டி. இவர்களுக்கு சம்பளத்தை விட கிம்பளம் ஜாஸ்தி அதிலும் அதிரைப்பட்டினம் என்றால் சொல்ல வேண்டியது இல்லை ஊரில் மழை பெய்கிறதோ இல்லையோ இங்கு பணமழைதான் தினமும் .

கை நாட்டு எடுத்து விட்டு கை விரல் துடைக்க ஒரு துணி ஒன்று கொடுப்பார்கள் அதில் விரல் துடைத்தால் அந்த விரலை அன்றே அறுத்து எரிந்து விடவேண்டியதுதான், அவ்வளவு துர்நாற்றம் அந்த துணியில்.

பத்திர பதிவு ஆபிசர்: ஓ அந்த இடமா வேலிவ் கூடுதல் ஆச்சே! எக்ஸ்ட்ரா இன்னும் பத்திரம் ஒரு 50 THOUSAND ஆகும் நீங்க ஒன்னு பண்ணுங்க பத்திர எழுதரிடம் 15000 கொடுத்திருங்க பாக்கியா நான் பாத்துக்கொள்கின்றேன் என்பார் நமக்கு இதே எல்லாம் கேட்டு தலைசுத்தும் பணத்தை கொடுத்தமா வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருவோம் . இவ்வளவு பணத்தை வாங்கும் அந்த பத்திர பதிவு ஆபிசர் கை நக அழுக்கை பார்தா முழுசா மூணு நாளைக்கு சோறு சாப்பிட மனசு வராது...

மேலே கண்ட அனைவரும் நன்கு படித்து பட்டம் வாங்கியவர்கள் தான் ஆனால் இவர்கள் நடை முறை கல்வியை பயில மறந்தவர்கள் .

நாம் என்ன செய்ய வேண்டும்
  • நாம் நம் பிள்ளைகளுக்கு ஐவேளை தொழுகையையும், நல்ல படிப்பையும், ஹராம் ஹலாலையும், சுத்தம், நேர்மையும், நல்ல பழக்க வழக்கங்களையும், எல்லோரையும் மதிக்கவும் கற்றுகொடுக்க வேண்டும் .
இங்கு வரும் நாம் சகோதரர்கள் அவரர்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை நம் மாணவ செல்வங்களுக்கு கட்டுரை மற்றும் பின்னுட்டம் மூலம் அறியத்தரவும்.

மற்றும் ஒரு சுவாரஸ்யமான சிந்தனை தூண்டும் பதிவில் சந்திக்கலாம்.

Sஹமீது
இது ஒரு மீள்பதிவு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு