சில நாட்கள் முன்பு மதுரையில் உள்ள இந்த ‘அரவிந்த்’ மருத்துவ மனைக்கு Routine Check-up காகச் சென்றேன். வரவேற்புக் கவுண்டரில் ரூபாய் ஐம்பது மட்டும் செலுத்தி, கோப்பு திறக்க ஏற்பாடு செய்தாகிவிட்டது. அரை மணி நேரம் காத்திருந்த பின், நர்ஸ் ஒருவர் சற்று உயரமான பலகைக் கட்டை மீது ஏறி நின்று, “நான் பெயர் வாசிக்கும் எல்லாரும் எனக்கருகில் வந்து கூடலாம்” என்று மைக்கில் அறிவித்து, ஒவ்வொருவராகப் பெயர்களை வாசித்தார்.
“அகமது வாங்கோ. அந்தோணி வாங்கோ. புஷ்பம் வாங்கோ.....” என்று பட்டியலை வாசிக்கத் தொடங்கி, சுமார் பத்துப் பேர்களைத் தன்னருகில் கூடச் செய்தார். அதனைத் தொடர்ந்து, வெள்ளுடைச் செவிலி ஒருவரைக் காட்டி, “இவரோடு போங்கோ” என்றார்.
சிறிது தூரம் அந்தச் செவிலியைத் தொடர்ந்த பின்னர், அவர், “இந்தக் கவுன்டருக்கு முன்னால், வரிசையாக நில்லுங்கோ” என்றார். நின்றோம். இங்குதான் file opening செய்யப்பட்டது.
BP உண்டா? sugar உண்டா? என்பது போன்ற விசாரணை செய்த பின்னர், நமது பெயரில் ஒரு கோப்பு (file) உருவாக்கப்பட்டது. அதைக் கையில் வாங்கியவுடன், மறுமையில் நமது செயலேடு நம் கையில் தரப்பட்டது.,
إقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا (நீயே உன் புத்தகத்தைப் படித்துப் பார், மனிதா! இன்று உனக்கு எதிராகக் கணக்குப் பார்க்க நீயே போதும்.) (17:14) என்ற மறை வசனம்தான் என் இதயத்தில் இடி இடிக்கத் தொடங்கிற்று! இதற்குள்,
“அகமத் வாங்கோ, சக்கீனா வாங்கோ! நீங்க இந்தச் சேர்ல உக்காருங்கோ. அவரை முடித்துவிட்டு, உங்களைக் கூப்பிடுவார் டாக்டர்”. என் இல்லாளை என்னை விட்டுக் கழற்றிவிட இவளுக்கு என்ன ஒரு தெனாவெட்டு! ராக்கெட் தனது வான்வெளிப் பாதையில் முன்னேறிச் செல்லும்போது, அதன் கீழ்ப்பகுதி கழன்று விழுந்து, அதன் முன் பகுதி முன்னேறிச் செல்வது போன்று, முதல் மூன்று இடங்களில் பார்வைப் பரிசோதனைகள்.
ஐந்தாவது பிரிவில் eye pressure சோதனை. ‘கண்ணுக்குமா ப்ரஷ்ஷர் இருக்கும்?’ “ஆமாம்” என்கிறது கண் மருத்துவ நிலையத்தின். இந்தப் பிரஷ்ஷர் பிரிவு. இதற்காக ஐம்பது ரூபாய் செலுத்தி பில் வாங்கிக் கொண்டபின், ஆறாவது பிரிவில் காத்திருப்பு. அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால், நேரம் சற்று அதிகமாயிற்று. எனது பெயர் கூப்பிடப்பட்டபோது, எழுந்தேன். நர்ஸ் காட்டிய அறைக்குள் சென்றபோது, டாக்டர் எனக்கு வழக்கமான BP பார்க்கும் முறைப்படி இரத்த அழுத்தப் பரிசோதனை செய்தார்.
ஏழாவது பிரிவில் டாக்டர் என் இரு கண்களிலும் சொட்டு மருந்தை ஊற்றினார். தாடையையும் நெற்றியையும் வைத்து, மருத்துவரின் ஆய்வுக்கு உள்ளானதன் பின்னர், அவர் ‘glovcoma’ என்று என் கோப்பில் எழுதினார். இது cateract என்ற கண் புரை நீக்க அறுவை சிகிச்சைக்கு முந்திய நோய்.
மூன்றாவது மாடியின் gloucoma பிரிவின் 304 ஆவது காத்திருப்புப் பகுதி. இங்கு இருந்த டாக்டர் வடநாட்டுக்காரர் போல் தெரிந்தது. “க்யா பாத் ஹே?” என்றார். நான், “டீக்” சொல்லிவைத்தேன்; Just for formality. அவர் ஒரு நிமிடம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு, முந்திய டாக்டர் எழுதிய ரிப்போர்ட்டை ‘கண்’ணும் கருத்துமாகாகப் பார்த்தார். ‘படித்தார்’ என்றுதான் சொல்லவேண்டும்.
Gloucoma பிரிவு முதல் மாடியின் பதினொன்றாம் ஹாலில்தான் இருக்கிறது. அங்கு ஒற்றைக் கண் மறைத்த இஸ்ரேல் பிரதமர் ‘மொஷே தயான்’ போல், நான்கைந்து பேர் எனக்கு முன் அங்கே இருந்து, வானம் பார்த்து இருந்தனர்.
“உங்க பேர்தானே அகமது?” என்று என்னிடத்தில் வந்து கேட்ட நர்சுடன் போய், டாக்டர் ஒருவரின் அறைக்குள் நுழைந்து, “Good adfternoon Doc” சொன்னபோது, என்னை ஏற இறங்கப் பார்த்தார் அந்த லேடி டாக்டர். “என்னடா இது? கைலி உடுத்தி, தலையில் தொப்பி வைத்து, நீண்ட தாடியும் வைத்து, நமக்கு ‘wish’ பண்ணுறார் இந்த பாய்!?”
‘அதுக்கென்னம்மா? நீ உன் கடமையைச் செய்’ என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. அனைத்து ஆவணங்களையும் பார்த்துவிட்டு, “இப்போ கண்ணாடிக்கு எழுதித் தாரேன். அப்றம், ஆறு மாசம் கழித்து வாங்கோ. glaucoma ஆபரேஷன் செஞ்சுக்குவோம். வெறி சிம்பிள்”’ என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார்.
அதன் பின்னர், நேற்றுத்தான் மறுபடியும் போக முடிந்தது. இம்முறை பழைய ‘கேஸ்’ ஆனதால், ரிசப்ஷனில் காசு வாங்கவில்லை. அதே ரோட்டீன் செக்கப் முறைகள்தான். ஆனால், அடுத்த நான்கு மாதங்களின்பின் கண்டிப்பாகப் போய், கண் புரை நீக்க வைத்தியம் செய்யத்தான் வேண்டும்
இதைப் படிக்கும் எல்லாரும் துஆச் செய்யுங்கம்மா! செய்வீங்கதானே....?
அதிரை அஹ்மத்



