கணிக்கவியலாத காலகட்டங்களுக்கு முன் கைகளில் வாய்த்த முதற் கணினிக்குத் தெரியாது, எனக்கு கணினியை இயக்குதல் தெரியாது என்று. அதற்காக,பத்தாம்பசலியைப் பார்ப்பதைப்போன்றதொரு,இயல்புக்கு மாற்றமான பார்வையோடு இதை வாசித்தால் அது எனக்கெதிரான போர்குற்றமாகும், அநீதியாகும். அஞ்சிக்கொள்ளுங்கள்.
நாங்களும் காலாகாலத்தில் கல்லூரியும் சாயங்காலத்தில் பகுதி நேரமாக சென்னை அண்ணா சாலையில் BDPS எனும் instituteல கணினி குறியீட்டு மொழிகளும் (computer programming) கற்றவர்கள்தாம். நாங்களும்? வேறு யார், நான் என்றால் எப்போதும் ‘அவன்’ நான் மட்டும்தான் (‘அது’ நான் மட்டும்தான் என்றுதான் முதலில் எழுதினேன். அஹ்மது காக்கா கையில் குச்சியோடு அஃறிணையைப் பார்த்து முறைப்பதைப்போல மனக்கண்ணில் கண்டு ‘அவன்’ என்றாக்கினேன்); ‘நாங்கள்’ என்றாலோ ‘அவர்கள்’ எப்போதும் நானும் அவனும்தான். அவ்வவன் வேறு யாருமல்லன், நம்ம அசத்தல் மன்னன் ஜாகிர்தான். இவன் யார்கூட இருந்தாலும் இவனைப்பற்றி எழுதி வைக்குமளவுக்கு நிறைய பாதிப்புகளை உண்டு பண்ணிவிடுவான். இப்படித்தான் நண்பன் இக்பாலுக்கு இவன் என்னவோ பண்ணிவிட அவனும் “ஜாயிர்ஸேன்” என்று ஒரு தொடர் எழுத ஆரம்பிச்சான். அந்தத் தொடர்ல…வெயிட் எ மினிட்.. நம்ம ட்ராக் மாறி போறோம்னு நினைக்கிறேன். ஒரு யு ட்ட(ர்)ன் அடிச்சு வாங்க பழைய மேட்டருக்கேப் போயிடுவோம்.
அப்படித்தான் நாங்களும், (இப்ப ‘நானை’த்தான் கெத்தா இருக்கட்டுமேன்னு ‘நாங்களும்’ என்கிறேன்), அந்தக் காலத்தில் “ட்டாக் ஆஃ தி ட்டவுன்”(talk of the town) ஆக இருந்த கோபால் (COBOL) ப்ரொக்ராமிஙைக் கற்றுக்கொண்டு முதல் வகுப்பில் பாஸாகினோம். என் போறாத காலம், மற்ற விஞ்ஞானங்களைப் போலவோ வரலாறு-புவியியல் போலவோ மெதுவாக மாற்றம் காணாத கணினி உலகம் சட்டு புட்டுனு ஃபோர்ட்ரான் (FORTRAN), ஜாவா (JAVA), அது இதுன்னு மாறி நாளொரு மொழியும் பொழுதொரு குறியீடுகளுமாக அசுர வளர்ச்சி அடைந்துபோய் விட்டது.
நான் படித்த கோபால் ப்ரொக்ராமை பழைய பேப்பர் கடையில் கூட போட முடியவில்லை. ஹார்ட் காப்பிக்குத்தான் (hard copy) எடைக்கு எடையாம். பிறகென்ன? காசு கொடுத்துதான் நிலக்கடலை வாங்கினேன். இவ்வாறாக என் கணினி அறிவு கால ஓட்டத்தோடு ஒன்றாமல் போனதற்கு என் தொழிலும் ஒரு காரணம்.
நீங்கள் எந்தக் காரைக் கொடுத்தாலும் கொஞ்ச நேரம் அதோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு என்ன பிரச்னைனு சொல்லிடுவேன். நாடிகூட பிடித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், எல்லாம் வாய்ச்சவடால்தானே தவிர ஒரு போல்ட்டைக்கூட கழட்ட தெரியாது. என் மவ கூட வேக்யூம் மெஷினிலிருந்து ட்டிவி ரிமோட் வரை எல்லாத்தையும் பிரிச்சு சரி பார்த்துடுவா. எனக்கோ எந்த உபகரணத்தைப் பிரித்து மாட்டினாலும் நாலைந்து ஸ்க்ரூவோ போல்ட்டோ (ஸ்க்ரூகளோ போல்ட்களோ என்று திருத்தி வாசிக்கவும்) மிஞ்சிவிடுகின்றன. ஆனால், பார்ப்பதற்கு எல்லா இடத்திலும் ஸ்க்ரூ & போல்ட் சரியாக இருக்கும்; மிஞ்சியவை எங்கே இருந்தன என்பது 10 மார்க் கேள்விபோல குழப்பமாகவே இருக்கும். (யாராவது என்னை அதட்டுங்களேன். அப்பதான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லி முடிப்பேன். இல்லேன்னா இப்படித்தான் எதாவது ஓரு சம்பவ அலை வந்து அப்படியே அடிச்சிக்கிட்டுப் போய்விடும். செய்தி மறந்து போய்விடும்)
ஆச்சா? எங்கே விட்டேன். ஆங்! இப்பவும் புல்டோஸரிலிருந்து அத்தனை கனரக எந்திரங்களையும் பழுது பார்க்கும் எனக்கு கோபாலை வைத்து, ஐ மீன், கோபால் ப்ரொக்ராமிஙை வைத்துத் தற்கால கணினி காரியங்களில் குப்பை கொட்ட முடியாததால் நேரம் வாய்க்கும்போதெல்லாம் ஒன்றிரண்டு பொத்தான்களை அழுத்தி என்ன நடக்கிறது என்று அவதானித்து கொஞ்சம் கொஞ்சமாக (சீரியஸான கொஞ்சமாக) கற்றுக்கொண்டு வந்தேன். இடைக்கிடையே இவன் வேறு பய்முறுத்துவான். இவன்னா? அவன்தான்!
“ஏன்டா, மெயில் அனுப்பினேனே பதிலையேக் காணோம்?” என்று கேட்டால்
“மறக்காம ஸ்டாம்ப் ஒட்டினியா?” என்று சீரியஸா கலாய்ப்பான்
“என்னடா, ஈ மெயிலுக்கு ஸ்டாம்ப் ஏன் ஒட்டனும்?” என்று ‘அப்பாவி’னால்
“சரி சரி விடு. நான் இங்கு கோலாலம்ப்பூர் ப்போஸ்ட் ஆஃபிஸில் விசாரிச்சுக்கிறேன். வந்திருந்தா வாங்கிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு,
“அதிருக்கட்டும், நான் அனுப்பின ஃபோட்டோ வந்ததா?” என்று கேள்வி எழுப்புவான்.
“போஸ்ட்லயா?” என்ற வினாவுக்கு
“ஈ மெயில்லதான்டா!” என்று விடையளிப்பான்
“வரலயடா” என்றால்
“சரியாப் பாருடா. நீ கவனிக்காத நேரத்தில வந்து ட்டேபிள் கீழே விழுந்து கிழுந்து கிடக்கப் போவுது” என்று பீதியைக் கிளப்பினால் நான் என்ன செய்வது
“ஙே” என்று விழிப்பதைத் தவிர?
கம்ப்யூட்டர் அறிவு குறைவா இருக்கிறத வச்சி சின்ன கோளாறுக்கு நிவர்த்தி கேட்டாலும் “வைரஸ் அட்டாக் ஆகியிருக்கும். எதுக்கும் கம்பளியைபோட்டு போர்த்தி ஆவி பிடிச்சிப் பாரு”ன்னு வழிசொல்ற நண்பர்களை வைத்துக்கொண்டு நானும் 25 வருஷங்களைக் கடந்து வந்துட்டேன். இப்பத்தான் நீங்கள்லாம் கணினி பிரயோகிக்கிறீர்கள், அப்பல்லாம் நாங்கள் கம்ப்யூட்டர்தன் யூஸ் பண்ணுவோம், கணினியெல்லாம் கிடையாது. எல்லாம் செம்மொழியான பிறகுதான் தீவிரமா கணினியாகிப்போனது. சர்தான்.
இப்படி கொஞ்சநஞ்சம் கணினித் தெரிஞ்சவன்லாம் ‘ஓட்டுற’ அளவுக்குத்தான் என் கணினி அறிவு. இப்ப சமீத்திலே அபு இபுறாகிம் என்னிடம் மாட்டிக்கிட்டாரு. அவர் மகனுக்கு ஆன் லைன்ல சொல்லிக்கொடுக்கிறதுகூட ஈஸியாம் எனக்கு, “முடியல..வாணாம்... வாணாம். இதோடு நிறுத்திக்குவோம்” நு கதறுகிற அளவில்தான் இருக்கு என் கணினி அறிவு.
இதையெல்லாம் ஏஞ்சொல்றேன்னா. இப்ப சமீப காலமா எந்தப் பொத்தானை அழுத்தினாலும் எலியை அசைத்தாலும் புதுசா கல்யாணம் பண்ணின காலத்திலே தம்பதிகளின் அறைக்கதவுக்கு மாட்டுவாங்களே மெல்லிசா ஒரு மறப்பு, அதைப்போல கணினித் திரையில் தோன்றி, “மீண்டும் துவக்கு” என்று ஆங்கிலத்தில் வட்டம் வட்டமாகச் சுற்றுவது வழக்கமாகிப் போனது. நானும் மறு பேச்சு பேசாமல் சொன்னபடி செய்து வந்தேன் என்றாலும் இப்பவெல்லாம் அடிக்கடி இப்படி ‘படுத்த’ ஆரம்பித்துவிட்டது. சம்பவம் நடந்த அன்னிக்கு, சரியாக இரவு 12 மணிபோல, தூக்கக்கலக்கத்தில இருக்கும்போது திடீர்னு ஒரு பொத்தான் மாதிரி தோன்றி “உன் பிரச்னைக்கெல்லாம் ஒரே தீர்வு வேண்டுமா?. இதை அழுத்து” என்றது. தட்சனை ஏதும் கேட்காததால் அது கம்ப்யூட்டர் ஜோஸியம் அல்ல என்று உறுதி செய்து கொண்டேன். ரெக்கவ்ரி என்ற சொல்லுக்கு அகராதிப்படி அர்த்தம் கொண்ட நான் அதை அழுத்த... ரொம்ப நேரம் பைப்புக்குள்ளே தண்ணி ஓடுவதும் முடிந்து மீண்டும் ஓடுவதும், 100% முடிந்துவிட்டதாகச் சொல்லி வேறு ஏதாவாது காரணம் சொல்லி மீண்டும் மீண்டும் ஓடுவதுமாக ஏதோ செய்துகொண்டிருந்ததால் காத்திருக்கும்போதே நான் அசதியில் தூங்கிப்போய் விட்டேன்..
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது இன்னும் ஈரமாக இருப்பதுபோல ஒரு பிரம்மையைத் தந்த என் கணினி, என்னோட பழைய பாடல்கள் சேமிப்பைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு அன்றலர்ந்த மலர்போல, இப்பதான் பிறந்த குழந்தைபோல ரொம்ப ஃப்ரெஷ்ஷாக என்னையப் பார்த்து ‘பெப்பே’ என்றது. அபு இபுறாஹிமிடம் பரிகாரம் கேட்டதற்கு அவர், “*&^%$)(*&@#” என்றார். இவ்வளவு விஷயம் புரிந்திருந்தால் இவரிடம் நான் கேட்பேனாக்கும்?
வந்து சரி செய்து தருவதாகச் சொல்லி யிருக்காரு. யாராவது அவருக்கு அஜ்மானுக்கு வழி சொன்னால் ஷேமமாயிருப்பிய.
-Sabeer abuShahruk





