நந்நாளில்தான்
அவன் ஆளுமைக்கு
அவள் வாழ்க்கையைத் தந்தாள்
அழகால் அவனை
அடிமையாக்கினாள்
அன்பால் அவனை
அரசனாக்கினாள்
தொன்றுதொட்ட இல்லறம்
அன்று தொட்டான்
துவங்கியது துலங்கியது
அந்தரங்கம் அந்நியோன்யம்
போன்ற அகச்சொற்கள்களின்
அர்த்தம் பயின்றான்
ஆகாயம் அலைகடல்
செவ்வானம் சீமைதேசம்
போன்ற புறவாழ்வில்
சந்தோஷமாய்ச் சிறகடித்தான்
கண்டுவந்த கனா
கைகூடியதால்
புதுபுதுக் கனவுகளாகப்
பிரசவித்துத் தந்தாள்
பெற்றுத்தந்த கனவுகளையெல்லாம்
வளர்த்தெடுத்தான்
பற்றுக்கொண்டு பாசம்கொண்டு
ரசித்திருக்கிறான்
அன்னையானது முதல்
அவனையும் ஆள்கிறாள்
அவனைவிட்டு
அவன்
நிழல் போன தருணங்களில்கூட
அவள் போனதில்லை
நிலம் அசைந்தால்
உடைந்துதிரும்
கட்டடங்களைப் போல
அவள்
ஒவ்வோர் அசைவுக்கும்
இசைவாகவே அவன்
இயக்கம் இருக்கிறது
அவள்
புன்னகைகள்
அவனைப் புதுப்பிப்பது போலவே
அவள்
சுகக்கேடுகள்
அவனைச் சுட்டெறிக்கின்றன
விண்ணில் நீந்தும்
முகிழ்களாய்
அவளுள் அவன்
உலாவிக்கொண்டே இருக்கிறான்
அவள்
மெய்யென்றால்
மழையாய்ப் பெய்வான்
பொய்யென்றால்
மனதால்ச் சாவான்
புள்ளிகளைப் பூதமென்றும்
கீறல்களை வெட்டுகளென்றும்
மயங்கி
மருளும்
அவள்
மனநிலையை மாற்ற
என்னென்னவோ செய்கிறான்
எண்ணிப்பார்ப்பாளா
வயதாகிப் போவதுவும்
வியாதி வந்தேறுவதும்
வேகத்தடைகளாய்
ஆங்காங்கே
அவர்கள் தம்
வாழ்க்கை வாகனத்தை
அசைத்துப் பார்த்தாலும்...
அடிப்படை அன்பெனும்
அச்சு உறுதியானது -அவள்
மடிதனில் முடிவெனும் -அவன்
ஆசை இறுதியானது!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்