பழுதுபட்டு பாழடைந்த
எங்களூர் ரயில்நிலையம் - ஒரு பாரம்பர்யத்தின்
பண்பாட்டுப் பயன்பாடு
கலாசாரக் கல்வெட்டு
உப்புக் காற்றுறிஞ்சி
உருவான ஊரின்
விரிவான வரலாற்றின்
நுழைவாயில்
ஊர்வாசிகள் ஒவ்வொருவரும்
தத்தம்
வீட்டிலிருந்து
பிரித்துக் கட்டிவைத்துகொண்ட வரவேற்பரை
அகநானூறு புறநானூறென
எண்ணூறு நிலை மொழியும்
என்னூர் ரயில் நிலையம்
மருதமும் முல்லையும் சூழ்ந்த
நெய்தல் நிலத்தவர்
பிழைப்பு நாடி
குறிஞ்சிக்கும் பாலைக்கும்
கடல் கடக்குமுன்
தடதடக்கும் இந்த
தடம் கடப்பர்
ஒற்றைப் பெட்டியோடும்
ஓரிரு உடைகளோடும்
ஊர்விடும் உழைப்பாளியை
வழியனுப்பி
வலி சுமக்கும் சமூகத்தின்
வாசற்படி
உற்றாரும் உறவினரும்
நண்பர்களும் நேசங்களும்
குழுமி கலகலக்கும்
நிலையம்...
இருள் கிழித்து ஏற்றிவரும்
ஒற்றை வெளிச்சம் கண்டும்
ஊதல் ஒலி கேட்டும்
சலசலக்கும்
ரயிலில் ஏறுமுன்
சகோதரத் தழுவல்களின்போது
பார்வையோ நழுவி
சகியைத் தேடும்
கம்பி பிடித்து
வாசலில் நின்று
விடைபெறும் 'சபுராளி'
கூட்டத்திற்குக் கையசைத்து...
முக்காடிட்ட விழிகளில்
ஈரமும்
மேடிட்ட வயிற்றில்
பாரமுமாய்
ஓரமாய் நிற்பவளுக்குக்
கண்ணசைக்கும்
சிந்தை முழுதும்
சகியைச்
சேமித்து வைத்திருக்கும்
விந்தைப் பெண்டிரும்
அவர்
வெட்கிச் சிவந்து
முகக் கண்கள் மூடும்
நகக் கண்கள் கண்டே
சொக்கிப்போகும் ஆடவரும்
என
அழகான வாழ்வியல் எனதூரில்
அடை மழை பெய்யும்
அடர் இராப் போதினில்
குடை தேட விடாமல்
இடை நாட வைத்து
'வெயிலில் குளிக்கும்
வெக்கை நாட்களில்
நிழல் கண்ட நாயாய்
நினைக் கண்டு நானும்
நெகிழ்ந்து போகின்றேன்
நித்திரையும் நின் மடியில்'
என புலம்பும் ஆடவர்
எழுதும் கடிதங்கள்:
"கண்ணம்மா நீ
கடந்து சென்ற பாதையெலாம்
சிதறவிட்டுச் சென்ற
புன்னகைப் பூக்களைப்
புதையல் பூதமாய்ப்
பாதுகாத்து வருகிறேன்
இதழ் உதிர்த்தப் பூக்களை
இதழிடமே சேர்க்கும்
கடமை எனக்குண்டு
கண்ணம்மா
ஓரப் பார்வையிலும் -நின்றன்
ஒய்யாரப் பேச்சினிலும்
பேரம் படிந்ததுவே
பேரன்புப் பெட்டகமே, கண்ணம்மா
என்னுயிரின் விலையாக
உன்னிதயம் வாய்த்ததுவே!
ஊரெழும்புமுன் உலகெழுப்பும்
சூரியச் சுடரொழுகும் பொழுதுவரை
கைக்கெட்டும் தூரத்தில் -நின்றன்
மெய்க்கிடத்தும் கண்ணம்மா
நின்னெழிலை நினைந்துகொண்டே
நிலவொளியில் நனைந்துகொண்டே
நான் கடத்தும் இரவுகளை
நீ நடத்தும் நாட்கள் வேண்டும்"
என நீளும்!
சென்ற ரயில் வரும்வரை
வயிற்றில்
வந்த உயிர் வளர்த்து
காத்திருக்கும் கற்பு...
கூடவே
ஆளமர காத்திருக்கும்
ஆலமர நிழலும்
கைகாட்டி மனசு வைக்க
காலை வரும் ரயிலில்
ஏராளப் பொதிகளோடும்
இன்முக வடிவோடும்
இறங்கி வருபவரைக்
கைகாட்டிச் சொல்லும்
கால்முளைத்தப் பிள்ளைக்கு...:
'வாப்பா'!


