Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label சுப்ஹு. Show all posts
Showing posts with label சுப்ஹு. Show all posts

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 057 10

அதிரைநிருபர் பதிப்பகம் | October 07, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

தொழுகையின்  சிறப்பு

அல்லாஹ் கூறுகிறான் :

நிச்சயமாக தொழுகை, வெறுக்கத்தக்க செயல்கள், மற்றும் தவறான செயல்களை விட்டும் தடுத்து விடும்.
(அல்குர்ஆன் : 29: 45)

''உங்கள் ஒருவரின் (வீட்டு) வாசலில் ஆறு இருந்து, அதில் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை அவர் குளித்தால், அவர் (உடலில்)  அழுக்கு சிறிதேனும் இருக்குமா? எனக் கூறுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''அவரிடம் அழுக்கு எதுவும் இருக்காது'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். ''இதுதான் ஐந்து நேரத் தொழுகைக்குரிய உதாரணமாகும். அதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அழித்துவிடுகிறான்''  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1042)
     
''ஐந்து நேரத் தொழுகைகளின் உதாரணம், உங்கள் ஒருவரின் வீட்டு வாசலில் நிரம்பி ஓடும் ஆற்றில் ஒவ்வொரு நாளும் ஐந்து தடவை  குளிப்பது போலாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். 

(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1043)

''ஐந்து நேரத் தொழுகைகள், மற்றும் ஒரு ஜும்ஆத் தொழுகையிலிருந்து மறு ஜும்ஆத் தொழுகை வரை, ஒருவர் அவைகளுக்கிடையே, பெரும் பாவங்களை செய்யாத வரை சிறுபாவங்களுக்கு அவையே பரிகாரம் ஆகும்'' என்று நபி (ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1045)

''ஒரு முஸ்லிமிடம் கடமையான தொழுகை நேரம் வந்து, அவர் தன் உளுவை அழகாகச் செய்து, அதில் பயபக்தியுடன், அதன் ருகூவையும் அழகாகச் செய்தால், பெரும் பாவம் செய்யப்படாத வரை அதற்கு முன் ஏற்பட்ட அனைத்து பாவங்களுக்கும் பரிகாரமாகும். அவரின் அந்த தொழுகை பெரும் பாவம் செய்யப்படாத காலம் முழுதும் நடப்பதாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1046)

சுப்ஹு மற்றும் அஸர் தொழுகையின் சிறப்பு

''இரண்டு குளிர்ந்த நேரத் தொழுகைகளை ஒருவர் தொழுதால், அவர் சொர்க்கத்தில் நுழைவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம் - இரண்டு குளிர்ந்த நேரத் தொழுகைகள் என்பது, சுப்ஹும், அஸருமாகும்) (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1047)

''சூரியன் உதயமாகும் முன் உள்ளதையும், அது மறையும் முன் உள்ளதையும் தொழும் ஒருவர், நரகத்தில் நுழையமாட்டார். (அவ்விரண்டும் சுப்ஹு,அஸ்ர் தொழுகைகளாகும்)  என்று நபி(ஸல்)கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூசுஹைர் என்ற உமாரா இப்னு ருஅய்பா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1048)

''சுப்ஹுத் தொழுகையை ஒருவர் தொழுதால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார். ஆதமின் மகனே! கவனம் கொள்வாயாக! அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளவனுக்கு ஏதேனும் (நீ இடையூறு) செய்து, இதனால் உன்னை அல்லாஹ் தண்டித்து விட வேண்டாம்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் இப்னு சுஃப்யான்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1049)

''இரவிற்குரிய வானவர்களும், பகலுக்குரிய வானவர்களும் என உங்களிடையே (வானவர்கள்) பொறுப்பேற்கிறார்கள். சுப்ஹுத் தொழுகையிலும், அஸர்த் தொழுகையிலும் (அவர்கள் அனைவரும்) ஒன்று சேர்கிறார்கள். பின்பு உங்களோடு இரவு தங்கி இருந்தவர்கள் (வானிற்கு) உயர்கிறார்கள். மக்கள் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அவர்களிடம் ''என் அடியார்களை  எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?'' என்று கேட்பான். அப்போது ''அவர்கள் தொழும் நிலையில் அவர்களை விட்டு வந்தோம். மேலும் அவர்கள் தொழும் நிலையில் அவர்களிடம் சென்றோம்'' என்று கூறுவார்கள். இதை  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1050)

''நபி(ஸல்) அவர்களிடம் இருந்தோம். பவுர்ணமி அன்று நிலவை அவர்கள் பார்த்தார்கள். ''நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனை இந்த சந்திரனைப் பார்ப்பது போல் பார்ப்பீர்கள்'' அவனை பார்க்கும் விஷயத்தில் இடையூறு செய்யப்படமாட்டீர்கள். சூரியன் உதயமாகும் முன் உள்ள சுப்ஹு தொழுகையையும், அது மறையும் முன் உள்ள (அஸர்) தொழுகையையும் நீங்கள் கவனக்குறைவாக இல்லாமல் இருக்க இயலுமானால், அதைச் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அல்பஜலீ(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1051)

''அஸர் தொழுகையை ஒருவர் விட்டு விட்டால், அவரின்(மற்ற) செயல்கள் வீணாகி விடும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: புரைதா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1052)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

(முஹம்மதே) இந்நகரில் (மக்காவில்) நீர் வசிக்கும் நிலையில் இந்த நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.(அல்குர்ஆன்: 90:1,2)

பெற்றவன் மீதும், அவன் பெற்றெடுத்தவன் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன்: 90:3)

மனிதனைக் கஷ்டப்படுவனாகவே படைத்துள்ளோம். (அல்குர்ஆன்: 90:4)

தன் மீது யாரும் சக்தி பெற மாட்டார்கள் என்று எண்ணுகிறானா? (அல்குர்ஆன்: 90:5)

‘’ஏராளமான செல்வத்தை கொடுத்து அழித்து விட்டேன்’’ எனக் கூறுகிறான். (அல்குர்ஆன்: 90:6)

அவனை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா? (அல்குர்ஆன்: 90:7)

அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா? (அல்குர்ஆன்: 90:8,9)

(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா? (அல்குர்ஆன்: 90:10)

அவன் கணவாயைக் கடக்கவில்லை (அல்குர்ஆன்: 90:11)

கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்? (அல்குர்ஆன்: 90:12)

அடிமையை விடுதலை செய்தல், நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையின் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்). (அல்குர்ஆன்: 90:13 - 17)

அவர்களே வலப்புறத்தார். (அல்குர்ஆன்: 90:18)

யார் நமது வசனங்களை மறுக்கிறார்களோ அவர்களே இடப்புறத்தார். (அல்குர்ஆன்: 90:19)

அவர்கள் மீது மூட்டப்பட்ட நெருப்பு இருக்கும். (அல்குர்ஆன்: 90:20) (அல்குர்ஆன்: 90:1-20 - அல்பலது அந்த நகரம்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு