Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

சுட்டும் விரலே சுட்டிக் காட்டிடு - வாக்கு அளிக்க வழிமுறைகள் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 11, 2016 | , ,

வாக்கு அளிப்பது இந்திய இறையான்மையில் ஜனநாயக உரிமை, இந்தத் தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். அதற்கான இலகுவான வழிமுறைகள்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். ஆனாலும், உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாக ஓட்டுப் போடச் செல்வதே சிறந்த வழி.

உங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் வாக்குச் சவடிக்குச் செல்லுங்கள், மற்றவர்கள் அழைத்தார்கள் என்று வேறு வாக்குச் சாவடிக்கு வேடிக்கைப் பார்க்கச் செல்லாதீர்கள்.

வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத் திறனாளிகள், முதியோர்என்று தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்கு என்று உள்ள வரிசையில் நின்று பொறுமை காத்திருங்கள். பெண்களுக்கும், முடியாதவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்.

எவ்விதப் பதற்றம் இல்லாமல் நிதமான வாக்கு பதியுங்கள், ஒவ்வொரு வாக்காளராகவே உள்ளே அனுமதிப்பார்கள்.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவுடன் முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா, அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள்தானா என்பதைப் பரிசோதிப்பார். வாக்காளர் அடையாள அட்டையையும் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாளச் சீட்டையும் அவரிடம் காண்பிக்க வேண்டும். அதன் பிறகு, அவர் உங்கள் பெயரையும் வரிசை எண்ணையும் குறிப்பிடுவார். இதன் மூலம், தேர்தல் (கட்சி வேட்பளர்களின்) முகவர்கள் உங்களின் இருப்பை அறிந்து கொள்வார்கள். அடுத்து, நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.

இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, அவர் உங்களின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் அழிக்க முடியாத மையைத் தடவுவார். அதன் பிறகு, வாக்காளர் பதிவேட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண்ணைப் பதிவு செய்வார். அதன் பிறகு, அந்தப் பதிவேட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் அல்லது இடது கைப் பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். அவர் கையெழுத்திடப்பட்ட அடையாளச் சீட்டை உங்களுக்குத் தருவார். அடுத்து, நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.

மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத்தின் பொத்தானை இயக்குவார். இப்போது நீங்கள் வாக்களிப்பதற்கான அனுமதியைப் பெற்று விட்டீர்கள்.


ஓட்டுப் போடும் இயந்திரம் இருக்கும் மறைவான வைத்திருக்கும் இடத்துக்கு சென்றதும், ஏற்கனவே முடிவு எடுத்திருந்தாலும் அல்லது அதுவரை முடிவுக்குள் வரவில்லை என்றால் ஒரு கணம் ஆழ்ந்து யோசியுங்கள். தகுதி உடைய சரியான நபரை மனதில் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக, உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நீங்கள் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். வேட்பாளருக்கு உரிய பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக இருக்கும் நீலப் பொத்தானை அழுத்துங்கள். 'பீப்’ ஒலி கேட்கும். அதேசமயம், நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக சிவப்பு ஒளி ஒளிரும். ஒரு முறை பொத்தானை அழுத்தினால் போதும். இப்போது உங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது.

நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமான ரகசியம். வாக்குச்சாவடிக்குள் நின்றுகொண்டு நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதைத் தெரிவித்தால், உங்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள். யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதைத் தெரிவித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல, வாக்களிப்பதைப் படம் எடுப்பதும் கூடாது அங்கே மொபைல் ஃபோன் எடுத்துச் செல்லாதீர்கள்!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், கவலை வேண்டாம். தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டு உங்களிடம் இருந்தால்போதும். தாராளமாக ஓட்டுப் போடலாம். அதுவும் இல்லையென்றால், நீங்கள் ஓட்டுப் போட முடியாது.

சிலருக்கு இப்படியான பிரச்னைகள் வரலாம். அதாவது, பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும். ஆனால், உங்கள் படம் இருக் காது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டும் இல்லை என்றால் என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இவற்றில் எதையாவது ஒன்றைச் சான்றாகக் காட்டி ஓட்டுப் போடலாம். குடும்ப அட்டைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. ஆனால், அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள் இல்லை என்று வாக்குச் சாவடியில் உள்ள யாராவது சந்தேகம் எழுப்பினால், என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்... இப்படிச் சில ஆவணங்கள் மூலம் உங்கள் அடையாளத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போலியானவர் என நிரூபிக்கப்பட்டால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா எனப் பரிசோதிப்பார். உங்கள் பெயரில் வேறு யாரேனும் ஓட்டுப் போட்டு இருந்தால், அதை உடனே வாக்குச்சாவடித் தலைமை அலுவலரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய ஓட்டுச் சீட்டு (டென்டர்ட் பேலட் பேப்பர்) அளிக்கப்படும். அதைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் கையெழுத்திட வேண்டும். நீங்கள் வாக்களித்ததும், அதை ஓர் உறையில் இட்டு தனியே வைத்துக்கொள்வார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் மின்னணு ஓட்டு இயந்திரத்தின் மூலம் வாக்களிக்க முடியாது. ஏதாவது விசேஷக் காரணங்கள் இருந்தால் தவிர, உங்கள் ஓட்டு கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படாது!

வாக்கு அளித்து விட்டு அங்கேயே காத்திருக்காதீர்கள், உடணடியாக உங்களின் வீடுகளுக்கு திரும்பிடுங்கள், வாக்கு நடைபெறும் நாளில் வெளியில் கூட்டமாக இருந்திடாதீர்கள்.

பெண்கள் அணிகலங்களை அணிந்து கொண்டு வாக்கு அளிக்கச் செல்லாதீர்கள், உங்களின் விரலில் பெண் அதிகாரி மை வைக்குமிடத்தில் இல்லாவிடின் அவர்கள் சொல்லும் இடத்தில் உங்கள் விரலை மேஜைமேல் வையுங்கள், விரல் நீட்டிக் கொண்டிருகாதீர்கள்.

பெண்களே வீட்டில் இவர்கள் இல்லையே அவர்கள் இல்லையெ என்று அடுத்தவர்கள் வாக்குகளை செலுத்த கட்சிகளின் உறவுகளோ அழைத்தால் உங்கள் வாக்கைத் தவிர வேறு வாக்குகள் அளிக்க முன்வராதீர்கள் மறுத்தி விடுங்கள், இன்றையச் சூழலில் சட்டம் கடுமையாக இருக்கிறது அதோடு மீடியாக்களின் பிரச்சாரம் விபரீதத்தை உண்டாக்கிடும்.

இந்தத் தேர்தலின் கதாநாயகன் / கதாநாயகி 'எது’வாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அன்றைய கதாநாயகன் / கதாநாயகி நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.

வாழ்த்துகள் மனசுல வைத்திருப்பவர்கள் வென்றிட !

அபுஇபுறாஹிம்

ஓட்டுக்கு பணம் - லஞ்சம் ஹராம் 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2016 | , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்....!

தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது வரும் ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் நாள். மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்று அநேகம் முடிவு செய்திருப்பார்கள். இச்சூழலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் போக்கு தமிழக அளவில் அதிகரித்துள்ளது. இதை யார் செய்கிறார்கள் என்பது நாடறிந்த விசயமாகி விட்டது. தன் அணிக்கு ஒட்டுப் பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்வதில் அதிரைவாசிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓட்டுரிமை ஒரு ஜனநாயக கடமை, காசுக்காக ஓட்டு போடுவதும் ஓட்டுப்போட வைப்பதும் நம் நாட்டில் சட்டப்படி குற்றம். சட்டத்தை இயற்றும் அவைக்கு செல்பவனே சட்டங்களை மதிப்பதில்லை இந்நாட்டில் எவர்தான் சட்டத்தை எல்லாம் மதிக்கிறார்கள், மக்களுக்கு உழைப்பின்றி காசு கிடைக்குது இதுக்கெல்லாமா ஒரு கட்டுரை? என்ற எண்ணம் இதை படிக்கும் சிலருக்கு தேன்றும். உண்மை தான். ஜனநாயகத்தை மதிக்கும் இந்தியனாக அணுகுவதற்கு முன்பு இதை ஒர் இஸ்லாமிய பார்வையில் அணுகுவதே ஒவ்வொரு முஸ்லீகளின் கடமை. சிந்திப்பீர்...!

ஓட்டுக்காக (தீர்ப்புக்காக) பணம் வாங்குவது லஞ்சம் இது ஹராம் என்பதை பின் வரும் இறைவசனங்களும், நபி மொழிகளும் நமக்கு நன்கு உணர்த்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.  (அல்-குர்ஆன் 4:29)

மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னுமாஜா)

அல்லாஹ்வின் இறை வசனமும், நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் மாறிமாறி இருந்து வரும் இருபெரும் கட்சியும் இன்னும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும், ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் கட்சிகளும் கடந்த பல தேர்தல்களில் பணம் பட்டுவாடா செய்து ஓட்டுக்கள் பெற்றார்கள் என்பதை ஊரில் உள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் அறிவார்கள். மார்க்கத்தை விளங்காத காலத்தில் சில தெருக்களில் பிரபலமான நம்மூர் பெண்கள் (பெருசுகள்) இரவோடு இரவாக வீடுவீடாக சென்று பணம் கொடுத்து ஓட்டுக்கள் பெரும் முயற்சியில் ஈடுப்பாட்டார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்தில் கண்டிருப்பார்கள். பாவம் அந்த பெருசுகளுக்கு இது போன்ற ஹதீஸ்கள், குர்ஆன் ஆயத்துக்கள் எத்தி வைக்கப் படாமிலிருந்திருக்கலாம். யா அல்லாஹ்! ஓட்டுக்காக பணம் லஞ்சம் பட்டுவாடா செய்த அந்த பெண்மணிகளை மன்னித்து விடுவாயாக. ஆனால் இன்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவலம் தொடர்கிறது என்பது தான் வேதனை. தேர்தல் அல்லாத நேரத்தில் மார்க்கத்தை பேசும் சிலரும் இது போன்ற ஹராமான செயல்களை நம் சமூகத்தவர்கள் செய்கிறார்கள் என்று அறிந்தும் அதை தடுக்க மறுக்கிறார்கள், என்ற செய்திகளை கேள்விப் படும்போது போது மிக வேதனையாக உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஓட்டுக்காக பணம் விநியோகம் மறைத்து வைத்தும் ரகசியமாகவும் பட்டுவாட நடந்து வருவதை பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும பிடிபடுவதை காண முடிகிறது. சில வீடுகளில் இருக்கும் நபர்களின் ஓட்டு எண்ணிக்கையை வைத்து தொகையை முடிவு செய்து கொடுக்கப்படுகிறதையும் அறிய முடிகிறது. தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர் 5000-ருபாய்க்கு 500-ருபாயும், 1000-ரூபாய் 100-ரூபாயும் பட்டு வாடா செய்பவர் கமிஷன் என்று சொல்லி எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் தகவல்கள் கசிந்து கொண்டு இருக்கிறது. என்ன கேவலமோ...! இது உண்மையா? அல்லது பொய்யா? என்பதை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான்.

இது நம் பணம் தான் என்று சாக்கு சொல்லும் பிரபலங்கள் சொல்லுகிறார்கள், ஏன் நாம் இதை வாங்கிக் கொள்ளக்கூடாது? என்று ஒரு சில அறிவாளிகள் வாதாடுகிறார்கள். இவர்கள் இப்படிச் சொல்லுவதால் அது நம் பணமாகி விடுமா? அடுத்த தேர்தல் தேதிக்குள் எனக்குள்ள பங்கு பணம் தரவேண்டும் என்று இந்த அரசியல் கொள்ளைகார கூட்டத்துடன் நம் மக்கள் அக்ரிமண்ட் போட்டுத்தான் சென்ற தேர்தலில்  தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா?  ஓசியில் பணம் எவன் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வெட்கமில்லையா நம் மக்களுக்கு?

அன்பானவர்களே ஓட்டுக்காக பணம் வாங்குவதும் லஞ்சமே, அது தடுக்கப்பட்டது என்பதை மேல் சொல்லப்பட்ட இறைவசனங்களும், நபிமொழியும்  நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இதை அதிரையில் உறவுகளிடம் எடுத்துச் சொல்லுங்கள், பணம் வாங்கியிருந்தால் தந்தவரிடமே அதை திருப்பி கொடுத்துவிட சொல்லுங்கள். ஊருக்கும் நம் சமுதாயத்திற்கும் நல்லது செய்பவர் யார் என்பதை முடிவு செய்து ஓட்டுப்போட சொல்லுங்கள்.

ஏகத்துவத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி, இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்வின் திருப்தியை அடைவதை மட்டுமே லட்சியம் என்பதை மறந்து, கட்சிகளுக்கு நம் பலம் காட்ட வேண்டும் என்று கச்சைகட்டி உண்மைகளை மறைத்து பொய்களை மெய்படுத்தி மேடை மேடையாக இந்த தேர்தல் பிரச்சாரங்களில் பேசிவரும் நம் சமுதாய சகோதரர்களுக்கு கிழ் வரும் இறைவசனத்தை கேள்வியாக வைத்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)

அல்லாஹ் போதுமானவன்.

தயவு செய்து உங்கள் பொன்னான வாக்குகளை தகுதியானவருக்கும் இன்றைய சூழலில் யார் ஆட்சிக்கு வந்தால் நம் சமுதாயம் அமைதியுடன் நிம்மதியாகவும் இருக்கும் என்ற திடமான தீர்மானத்தில் ஓட்டு போடுங்கள் இன்ஷா அல்லாஹ் !

அதிரை நிருபர் பதிப்பகம்

ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம்... 19

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2016 | , ,

தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி ஒரே நாளில் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவுற்றது. வாக்குப்பதிவு நடப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே வழக்கம் போல அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்புப் பணிகளை முடுக்கிவிட்டன. தெருவெங்கும் கட்சிக் கொடிகள், தெருமுனைகள் எங்கும் கூட்டங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் எல்லாம் சாக்ரடீஸ் மற்றும் அரிஸ்டாட்டில் போல பேசிய பேச்சுக்கள், கூடவே ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களின் அனல் பறக்கும் பரப்புரைகள். பேசத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வானூர்தியில் பறந்து , எழுதிவைத்தாவது படித்த தமிழக ஆளும் கட்சித்தலைவி ஒரு புறம்; மற்றொரு புறமோ தள்ளாத வயதில் தள்ளு நாற்காலியில் அமர்ந்தாவது தனது கட்சிக்காகப் பரப்புரை செய்த தமிழக முக்கிய எதிர்க் கட்சியின் தலைவர். அவருக்குத்துணையாக தமிழகமெங்கும் சுற்றி கவர்ச்சிகரமான – காட்டமான பிரச்சாரம் செய்து மக்களைக் கவர்ந்த திமுக வின் பொருளாளர் ஸ்டாலின், தேர்தலில் போட்டியிடாமல் நாடெங்கும் சென்று பிரச்சாரம் செய்த திரு. ஜி.கே. வாசன் போன்ற முக்கியத் தலைவர்களின் பரப்புரைகள் என்று ஜனநாயகத் திருவிழா பலவாறும் களைகட்டியது. கூடவே சோனியா, அத்வானி, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் பங்கேற்ற நிகழ்வுகளும் நிகழ்ந்தன. 

இவர்களுடன் கூடவே கட்சிகளின் பல்வேறுதரப்பட்ட பேச்சாளர்களின் பொதுக் கூட்டங்கள் , தொண்டர்களின் கோஷங்கள், மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் அணி வகுப்புகள், வீதியெங்கும் வீட்டு சுவர்களில் உடமையாளரின் அனுமதி பெற்றும் பெறாமலும் வரையப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் என தமிழகமே அல்லோகலப் பட்டது. 

வெற்றி வாய்ப்புக்களுக்கான கருத்தாக்கங்கள் என்ன? கருத்துக் கணிப்புகள் என்ன? தொலைக் கட்சி விவாதங்கள் என்ன? முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் நிகழ்ந்த வம்புகள், வசவுகள் என்ன? பஜார் முதல் படித்துறை வரை பகிர்ந்து கொண்ட அரசியல் கருத்துக்கள் யாவை? ஆரூடங்கள் யாவை? அடிதடிகள் எத்தனை? 

தமிழகமே சுறுசுறுப்பாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஜனநாயகத் திருவிழாவின் காவடி எடுக்கும் அனைத்துக் கட்சிகளுமே தங்களின் ஜனநாயகக் கடமையைச் செய்தன. இத்தகைய பல்வேறு தரப்பட்ட பரப்புரைகளின் தன்மைகளையும் பரிமாறப்பட்ட கருத்துக்களையும் எடுத்து வைக்கப்பட்ட விவாதங்களையும் உண்மைகளையும் மக்கள் அலசி ஆய்ந்து தங்கள் மனதில் ஒரு முடிவெடுத்து வாக்களிக்கும் தினத்தில் தாங்கள் முடிவு செய்த கட்சிக்கு வாக்களித்து ஆதரிப்பதே நடந்த அத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் பணிகளுக்கும் ஒரு முடிவாக இருந்து இருக்க முடியும். ஆனால் இந்த அனைத்து வகை ஜனநாயக் செயல் பாடுகளையுமே செல்லாக்காசாக்கி, இறுதி இரண்டு நாட்களில் இடுப்பை ஒடித்துப் போட்டது ஆளும் கட்சியினரால் அனைத்துத் தொகுதிகளிலும் வழங்கப் பட்ட காசு, பணம், மண்ணி! மண்ணி!. சட்ட ரீதியாக ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படையாக இதை மறுக்க முற்படலாம். ஆனால் அவரவர் மனசாட்சியின்படி மறுக்கவோ மறைக்கவோ இயலாது. இது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல; ஊர் அறிந்த ரகசியம். 

இவ்விதம் பணம் கொடுத்து வாக்குகளை திசை மாற்றுவது சரியான ஜனநாயக நடவடிக்கையா? மக்கள் சேவையே எங்களின் இலட்சியம் என்று மேடையில் வாய் கிழிய முழங்கி விட்டு திரைமறைவில் பணத்தை முதலீடாக்கி வெற்றி பெற நினைப்பது அரசியல் நாகரீகமா? அரசியல் நன்னடத்தையா? இதுதான் ஒரு பெரிய அரசியல் கட்சியின் அரசியல் பண்பாடா? அண்ணாவின் பெயரில் கட்சியை நடத்திக் கொண்டு எம்ஜியார் பெயரை என்றும் முழங்கிக் கொண்டு வலம் வரும் கட்சிக்கு இது மரியாதை தருமா? அப்படி என்றால் ஒன்றரை மாதங்கள் நடந்த ஜனநாயகப் பணிகளுக்கு அர்த்தம்தான் என்ன? பணக்கட்டுகள் இருந்தால் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்று விடலாம் என்றால் தேர்தல் ஏன்? கோஷம் ஏன்? கொள்கைகள் ஏன்? தேர்தல் அறிக்கைகள் ஏன்? மக்களுடைய அரசியல் அறிவு அப்படி மழுங்கிவிட்டது என்று எடை போடுவது நியாயமா? இருநூறு ரூபாய் காசுக்காக இந்த மக்களை விலைக்கு வாங்கிவிட முடியும் என்று ஆளும் பொறுப்பில் இருந்த கட்சி நினைத்தது – அதற்காக பெரும் தொகையை ஒதுக்கி அதை விநியோகித்தது இந்திய அரசியல் வரலாற்றில் கழுவ முடியாத களங்கம். 

இந்த பணப்பட்டுவாடா மக்களின் மனதில் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுகளின் பிரகாரம் வாக்களிக்கவிடாமல், வாக்குகளை திசை திருப்பியதா? இப்படிப்பட்ட அசாதாரணமான அரசியல் சூழ்நிலை ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிவகுக்குமா? இப்படிப்பட்ட இழிவான செயலுக்கு பரிகாரங்கள் என்ன? இவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? ஏற்றுக் கொள்வார்களா? ஆகிய கேள்விகளை இங்கு விவாதிக்கலாம். 

இந்த முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத முறையாக தேர்தல் பிரச்சாரம் முடிவு பெற்ற நாளின் மாலை முதல் தேர்தல் ஆணையம், தமிழகமெங்கும் 144 தடை உத்தரவை – அமுல் படுத்தியது. தேர்தல் பரப்புரைகள் நடைபெற்ற காலங்களில் சட்டம் ஒழுங்குக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும் அமைதியாக அனைத்தும் நடந்தன என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த தேத்தல் ஆணையமும் அரசும் 144 தடை உத்தரவை அமுல் படுத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்று நடுநிலையாளர்கள் முதல் ஆளும் கட்சியல்லாத அனைத்து எதிர்க் கட்சிகளுக்கும் ஆரம்பத்தில் புரியவில்லை. ஆனால் நடு இரவுகளில், வீடுகளைத் தேடி சில்லரையாக இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் முதல் ஐநூறு ரூபாய்வரை அனைத்து பெரிய சிறிய ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப் பட்ட மக்கள் வாழ்ந்துவரும் சேரிகளுக்கும் ரொக்கங்களாக வந்த பிறகுதான் இந்தத்தடையின் உண்மை நோக்கம் பற்றி ஒரு சந்தேகம் மக்கள் மனதில் தோன்றியது; ஓரளவுக்குப் புரிய ஆரம்பித்தது. இவ்விதம் வழங்கப் பட்ட தொகையின் மொத்த மதிப்பு சுமார் பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஆக இருக்கலாமென்று பொருளியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்த பிறகு வணிகர்களும் சாதாரண பொதுமக்களும் பணப்பரிவர்த்தனை விஷயத்தில் பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல . ஒரு திருமணக் குடும்பம் , நகைகள் வாங்கக் கொண்டு சென்ற ரொக்கங்களைக் கூட பறிமுதல் செய்து தங்களது பலத்தைக் காட்டியது தேர்தல் ஆணையம். இன்றைய விலைவாசி உயர்வில் , ஒரு சாதாரண நடுத்தர வியாபாரி டாடா ஆஸ் அளவுள்ள வாகனத்தில் சரக்கு வாங்க நினைத்தால் கூட அந்த சரக்கின் மதிப்பு ஐம்பதினாயிரத்துக்கு மேலேதான் இருக்கும் . ஆனால் இத்தகைய சிறிய வணிக நடமாட்டங்களின் கூட பணப்பரிமாற்றத்துக்கு தடை செய்து பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை. ஆனால் தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக கட்டுக் கட்டாக ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் பணம் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டதே அது எவ்வாறு சாத்தியப்பட்டது என்று சொல்ல தேர்தல் ஆணையம்தான் தார்மீகமாக கடமைப்பட்டு இருக்கிறது. 

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் ஒரு வானளாவிய அதிகாரம் என்று வரையறுக்கபப்ட்டு இருந்தாலும் உண்மையிலேயே கிட்டத்தட்ட ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்நாள் அதிகாரம்தான் என்று நாம் மனதில் வைக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்களிப்பும் வாக்கெண்ணிக்கையும் முடிவடைந்ததும் ஒரு மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக அதிகாரமும் முடிவுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும் காலம் வரைதான் ஒரு மாநிலத்தின் அனைத்து அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகள் உட்பட தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப் பட்டவர்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததும் அந்த அதிகாரிகள் அனைவரும் மீண்டும் மாநில ஆட்சியாளர்களுக்கு சலாம் அடித்தே ஆகவேண்டுமேன்பதே துரதிஷ்டவசமான ஆட்சிமுறை அமைப்பு. ஆகவே , தற்காலிகமாக தேர்தல் ஆணையத்துக்கு தலையாட்டும் அதிகாரிகள் கூட மனப்பூர்வமாக மனசாட்சிப் படி நியாயமாக நடக்க மாட்டார்கள். அப்படி நடந்தால், தமிழ்நாட்டில் என்ன தண்ணீர் இல்லாத காடுகளுக்குப் பஞ்சமா? இந்த அச்ச உணர்வு இருக்கும் மாநிலத்தின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவர்களுக்குக் கீழே உள்ளவர்கள் அனைவரும் தங்களின் கடமைகளை நியாயமாக நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதே நிலைதான் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம். 

வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச் சாவடிக்குள்ளேயும் வெளியேயும் ஆளும் கட்சியின் அல்லரைகளின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருப்பதே அதிகாரிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு எழுதப் படாத உத்தரவு. இந்த நிலை இருக்கும்போது வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துப் பணம் கொடுப்பதையும், வாக்களித்த பிறகு வாக்களித்த சின்னத்தைக் கேட்டு உருட்டி மிரட்டி பயமுறுத்தி உறுதி செய்துகொள்வதையும் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்துக்குக் கூட வழியே இல்லை. தேர்தல் ஆணையத்துக்கென்று தனியாக காவல்படை இருந்தால் அல்லது வேறு மாநிலத்தில் இருந்து இராணுவம் அல்லது துணைப்படை வந்தால்தான் இந்தக் குறையை ஓரளவு நீக்க முடியும். அதைவிட்டுவிட்டு, மாநிலக் காவல்துறையை நம்பி தேர்தல் நடத்துவது பாலுக்குப் பூனையைக் காவலுக்கு வைத்தது போலத்தான் அமையும். 

தேர்தல் ஆணையத்திடம் சென்று எதிர்க் கட்சிகள் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை அளிக்கச் சென்றால் தேர்தல் ஆணையம் ஒற்றை வரியில் பதில் சொல்கிறது. தேர்தல் ஆணையம் சொல்லும் அல்லது கேட்கும் கேள்வி ஆதாரம் இருக்கிறதா என்பதுதான். கள்ளத்தனமாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப் போவது என்பது திருமண நிகழ்ச்சியோ அல்லது நிச்சயதார்த்தமோ அல்லது பூநீராட்டுவிழாவோ அல்ல என்பதை தேர்தல் ஆணையம் உணராமல் பணம் கொடுத்த புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா? வீடியோ அல்லது புகைப்பட ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். இத்தனை மணிக்கு சுபயோக முகூர்த்தத்தில்தான் ஓட்டுக்குப் பணம் தரும் திருட்டு ஜனநாயக வியாபார்கள் வருவார்களென்று முன் கூட்டியே அய்யரை வைத்து நேரம் குறித்து இருந்தால் மட்டுமே ஆதாரம் தர இயலும். நாட்டில் பரவலாக நடக்கும் அத்துமீறலை அறியாமல் கூட ஒரு ஆணையம் இருக்குமென்றால் அது தேர்தல் ஆணையமே. கைப்புண்ணைப் பார்க்க கண்ணாடி கேட்கும் கேட்கும் ஆணையமும் அதுவாகவே இருக்க முடியும். 

படித்தவர்கள்- விழ்ப்புணர்வு பெற்றவர்கள் கூட உள்ளூர் ஆளும்கட்சியின் பிரமுகர்களுக்கு அஞ்சி புகார் தரவோ பிடித்துக் கொடுக்கவோ முன்வருவதில்லை என்பதுதான் இந்தப் பிரச்னையின் நிதர்சனம். எளிய மக்கள் யாராவது வீட்டுக்கு வந்து பணம் தருவதை மறுக்காமல் , வாங்கிக் கொள்ளவே நினைப்பார்களே தவிர தைரியமாக புகார் தர முன் வருவார்களா? இப்படிப் பட்ட பலவீனங்கள்தான் ஜனநாயகத்தை விலை பேசும் வியாபாரிகளுக்கு அத்துமீறும் துணிச்சலைத் தருகிறது. ஒருவேளை எதிர்க் கட்சிக்காரர்கள் புகார் அளித்துப் பிடித்துக் கொடுக்க முயன்றாலும் எளிய மக்களின் மனநிலை, பணம் தராத எதிர்க் கட்சிகளுக்கு எதிராகத் திரும்பும் சாத்தியமும் உண்டு. காரணம் இவர்களும் தராமல், தருபவர்களையும் தடுக்கிறார்கள் என்கிற ஏழைகளின் இயற்கையான மனோபாவம்தான். சமுதாயத்தில் இந்த நிலையில் இருப்பவர்களின் இந்த மனோநிலை வாக்குகளை எதிர்க் கட்சிகளுக்கு எதிராகத் திருப்பும் சக்தி படைத்தது. 

பொதுவாகப் பார்க்கப் போனால் பணம் கொடுத்தால் மக்களின் மனதை மாற்றிவிட முடியும் என்ற எண்ணம் ஆளும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஏற்படுவது இது முதல் முறையல்ல. இந்த முறை மிகவும் விரிவாக நடைபெற்றது என்பதுதான். இப்படிப்பட்ட தீய செயலுக்கான விதை, திருமங்கலத்தில் விதைக்கப்பட்டு - ஏற்காட்டில் வளர்க்கப் பட்டது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

இப்படிப் பணம் கொடுத்த காரணத்தால் மக்கள் மனம் மாறி வாக்களித்துவிடுவார்களா? என்ற கேள்விக்கு விட தேடினால் இதனால் ஏற்படும் விளைவை ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. காரணம் பணப்பட்டுவாடா ஒவ்வொரு பகுதிகளின் செயலாளர்களின் பொறுப்பிலேயே நடத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பானமையான கட்சிகளின் பகுதிச் செயலாளர்கள் இயல்பில் எவ்வளவு நல்லவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மூலம் பணம் கொடுக்கப்பட்டபோது, ஒருவித அச்ச உணர்வு அப்பாவிகளின் மனதில் விதைக்கப்பட்டதை மறுக்க முடியாது. அதே நேரம் இவ்வளவு பணம் கொடுத்த பிறகும் அதன் பலன் கொடுத்தவர்களுக்குப் போய்ச் சேராவிட்டால் தேர்தல் முடிந்த பிறகு, அதன் பாதிப்புகள் அந்தந்தப் பகுதிகளில் அராஜகமாக உருமாற வாய்ப்புண்டு. இதை எளிய மக்கள் வாழும் பகுதியினர் உணர்ந்தே நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கலாம். பல இடங்களில் சமுதாயமாக வாழும் மக்களைக் கூட்டி விலை பேசியும் பட்டுவாடா நடந்து இருப்பதால் குறிப்பிட்ட சமுதாயம் வாழும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை வைத்து எவ்வளவு வாக்குகள் எங்கிருந்து விழுந்தன என்று கண்டறியும் வசதியும் இருப்பதால் பணம் பெற்றவர்கள் பணத்துக்காக, மனசாட்சிக்கு எதிராக வாக்களிக்கும் வாய்ப்புண்டு. இந்த நிலை அப்பட்டமான ஜனநாயகத்தின் தற்கொலைக்கு சமம். இந்த தற்கொலைக்குத் தூண்டியவர்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்த குற்றத்துக்கு ஆளாவார்கள்.

அதே நேரம் ஏற்கனவே மக்களின் கோபத்துக்கு ஆளான கட்சிக்கு எதிராக அவர்கள் பணம் தந்தாலும் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு எதிராகவே வாக்களிக்கவேண்டுமென்று ஏற்கனவே ‘மைன்ட் செட்” செய்தவர்கள் – கட்சியின் தீவிர உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களை இந்தப் பணம் மாற்றிவிட இயலாது. ஒரு இரு நூறு ரூபாய்க்கு மக்களின் மனதில் இவ்வளவு நாட்களாக இருக்கும் கோபம் மற்றும் ஆத்திரத்தை துடைத்துப் போட்டுவிடும் சக்தி இருக்கிறதா? என்கிற சிந்தனையும், இவ்வளவும் செய்து மக்களை துன்பத்தில் மிதக்கவிட்டு விட்டு கடைசி நேரத்தில் இரு நூறு ரூபாய் கொடுத்தால் எல்லாவற்றையும் மறந்து இவர்களுக்கு வாக்களித்து விடுவோமா என்று மக்கள் மனதில் கோபத்தைத் தூண்டி சொந்தக் காசிலே சூனியம் வைத்துக் கொள்ளும் போக்கும் இந்தப் பணத்துக்கு உண்டு. இப்படி பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று நினைத்து இருந்தவர்களும் மாறி வாக்களித்திருக்கவும் வாய்ப்புண்டு. அத்துடன் ஒரே தெருவில் வேண்டியவர்களுக்குக் கூடுதலாகவும் வேண்டாதவர்களுக்கு சில இடங்களில் குறைவாகவும் கொடுத்த நிகழ்வுகளும் நிகழ்ந்திருப்பதால் அவனுக்கு நான் என்ன மட்டமா என்கிற மனோபாவத்திலும் வாக்குகளை மாற்றிப் போட வாய்ப்புண்டு என்பதையும் மறுக்க இயலாது. 

நல்லதோ கெட்டதோ கை நீட்டிக் காசு வாங்கிவிட்டோம் ஆகவே போட்டுத்தான் ஆகவேண்டுமென்று நினைத்து வாக்களித்தவர்களும் கணிசமாக இருந்து இருப்பார்கள். பாமர மக்களின் இந்த நாடித்துடிப்பு, இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை விலைபேசி வாங்க நினைக்கும் பெருச்சாளிகள் அறியாதது அல்ல. ஆளும் வர்க்கத்துக்குத்தான் அதிகார போதை, கண்ணை மறைத்து நீதி நியாயங்களை காண முடியாமல் செய்துவிடும். ஆனால் அடித்தட்டு மக்கள், கடவுள் ! சாமி! பாவம்! பழி! என்கிற தர்மநியாங்களுக்குக் கட்டுப் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதால் வாக்களித்தபடி வாக்களிக்க வாய்ப்புண்டு. பல நேரங்களில் சாமி படங்களின் மீது சத்தியம் வாங்கிக் கொண்டும் பணம் தரப்படுவதுண்டு. 

இவ்வளவு விரிவான முறையில் பணபட்டுவாடா ஒரு பெரிய நெட் ஒர்க் ஆக நடைபெற்றது இதுவே முதல் முறை. இதன் வெற்றி தோல்வி இனி வரும் தேர்தல்களிலும் பயன்படுத்தப் படும் . ஜன நாயகம் என்கிற உயர்ந்த தத்துவம் என்கிற பூமாலை அதிகார போதை கொண்ட குரங்குகளின் கைகளில் சிக்கிச் சீரழிவதை நடுநிலையாளர்களால் பார்த்து ஆதங்கப்பட மட்டுமே முடியும். 

இப்படிப் பட்ட ஜனநாயகக் கொடுமையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று சிந்தித்தால் சில எண்ணங்கள் அல்லது ஆசைகள் நமது மனங்களில் அரும்பு விடலாம். 

முதலாவது தேர்தல் ஆணையம் என்கிற வண்ணாத்தி பூச்சியின் வாழ்வு காலம் ஒரு தேர்தல் முதல் அடுத்த தேர்தல் வரை என்கிற சட்ட திருத்தம் வேண்டும். 

முக்கியமாக சட்ட ஒழுங்குப் பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையம் மாநில காவல்துறையை நம்பி இருக்கும் நிலை மாற்றப் பட வேண்டும் .

அதே ரீதியில், தேர்தல் விதிகளின் நடைமுறைக் காலத்தில் மாநில அரசுக்கு உட்பட்ட நிர்வாகிகளைப் பயன்படுத்தும் முறைகள் மாற்றப்பட வேண்டும். உதாரணமாக, வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவோர் அதே மாநில அரசின் ஊழியர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். வெளி மாநிலங்களில் இருந்து ஊழியர்களைக் கொண்டுவரலாம். 

தேர்தல் என்றால் எப்படியாவது அந்தத் தேர்தலை நடத்தி முடித்துவிட்டால் போதும் என்கிற மனோநிலையில்தான் தேர்தல் ஆணையம் இருக்கிறது. காரணம் ஒரே தலைமை தேர்தல் ஆணையர் எல்லாவகையானப பணிகளையும் கவனிக்க இயலவில்லை. மத்தியில் இருப்பது போல் மாநிலங்களிலும் இரண்டு மூன்று தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் படலாம். ஒரே தலைமை தேர்தல் ஆணையரால் தனது சொந்த விருப்பங்களை மீறி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை -எடுக்கவில்லை என்பதே கடந்தகாலம் கற்றுத்தந்த வருத்தமான குறைபாடு. ஒரு சார்பாக தேர்தல் ஆணையம் நடக்கிறது என்கிற குறைபாட்டை இதன் மூலம் களைந்து தேர்தல் ஆணையம் தனது பத்தினித் தனத்தை நிருபிக்க முடியும். 

தேர்தல் பரப்புரைக்கான காலத்தை ஒன்றரை மாதங்களுக்கு முன்பே தொடங்குவதை தடை செய்து வாக்குப் பதிவு நடைபெற ஒரு வார காலம் முன்புதான் அரசியல் கட்சிகள் பரப்புரையைத் தொடங்க வேண்டுமென்ற விதியை அமுல் படுத்த வேண்டுமென்றும் இதனால் அரசியல் கட்சிகள் செய்யும் செலவையும் அத்துமீறல்களின் அளவையும் கட்டுப்படுத்த உதவுமென்று சில சமூக நலவிரும்பிகள் ஆலோசனை தருகிறார்கள். 

மேலும், இன்னொரு ஆலோசனையும் சமூக அரசியல்வாதிகளால் எடுத்து வைக்கப்படுகிறது. பரப்புரை செலவுகளை அரசே ஏற்று ஒரே மாதிரியாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்காகவும் செலவு செய்ய வேண்டுமென்றும் இதனால் கூடுதல் குறைவான சமத்துவமற்ற பிரச்சார செலவுகள் குறையுமென்றும் ஒரு கருத்து வைக்கப்படுகிறது. தேர்தல்களில் பணம் பெருமளவு விளையாடுவதையும் – கறுப்புப் பணம் பெருமளவு அங்கம் வகிப்பதையும் இந்த முறை கட்டுப் படுத்துமென்று அந்தக் கருத்து வலியுறுத்துகிறது. 

தேர்தலில் பணம் கொடுப்பவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டால் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சட்டபூர்வமான சகல பாதுகாப்பும் வழங்குவதற்கும் பணம் கொடுத்த அல்லது பணம் கொடுக்க முயற்சித்த வேட்பாளரை போட்டியிலிருந்து உடனடி தகுதி நீக்கம் செய்யப்படுமென்றும் தேர்தல் ஆணையம் தனது விதிமுறைகளை வகுத்துக் கொள்ளவேண்டும் . இப்படி ஒன்றிரண்டு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யபட்டால் அதன் மூலம் மற்றவர்களுக்கு அச்சமுண்டாக வாய்ப்புண்டு. அதை விட்டுவிட்டு தேர்தல் ஒழுங்காக நடைபெற்றது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு விடுகிறது. ஆனால் இன்னொரு புறமோ தேர்தல் நடந்த ஒரே நாளில் 248 முறைகேடுகள் நடந்ததாக புகார் வந்துள்ளதாகவும் அதே தேர்தல் ஆணையம்தான் சொல்கிறது. மொத்தத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது ஆனால் இத்தனை புகார்கள் வந்தன என்று சொல்வது உடல் முழுதும் அடி ஆனால் உயிர் போகவில்லை என்று சொல்வது போலத்தான் தெரிகிறது. 

இப்போதுள்ள நடை முறையில் , தேர்தல்களின் ரிடர்நிங்க் ஆபீசர் என்கிற மாவட்ட தேர்தல் அதிகாரியின் தலைமைப் பொறுப்பு , அந்தந்த மாவட்ட ஆட்சித்த் தலைவர்கள் இடம் வழங்கப் பட்டு இருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனைவரும் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர்களே . அதே போல் மாவட்ட காவல்துறைத் தலைவர்களும் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள் மட்டுமல ஆட்சியாளரின் கடைக்கண் பார்வைக்கு காத்து இருப்பவர்களே. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப் பாட்டில் இவர்கள் எல்லாம் பணியாற்றுவது போல் தோன்றினாலும் உள்ளுக்குள் ஆட்சியில் இருக்கும் கட்சியின் ஆணைகளுக்கே உண்மையில் கட்டுப் பட்டவர்கள் ஆவார்கள். ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் காலால் இடும் கட்டளைகளை தலையால் செய்யும் தன்மை கொண்டவர்களே. இதை மறுக்கவே இயலாது. தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியை எதிர்த்துக் கொண்டு கடமை நேர்மை என்று வசனம் பேசினால் பிறகு அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவதிகளுக்குள்ளாக நேரிடும் என்பது ஐ ஏ எஸ், ஐ பி எஸ் படித்திருக்கும் அதிகாரிகளுக்குத் தெரியும். ஆகவே , தேர்தல் நேரத் தில்லுமுல்லுகளை உண்மையிலேயே ஒழிக்கவேண்டுமென்று தேர்தல் ஆணையம் நினைத்தால் ரிடர்நிங்க் ஆபீசர் மற்றும் சட்ட ஒழுங்கு போன்ற பொறுப்புக்களுக்கான அதிகாரிகளை இனி வரும் காலங்களில் தேர்தல் ஆணையமே தனது சொந்த அதிகாரிகளாக நியமித்துக் கொள்ள வேண்டும். மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருக்கும் அதிகாரிகளை இப்பொறுப்புக்களில் ஈடுபடுத்துவது நண்டைச் சுட்டு நரிக்கு வைப்பதற்கு ஒப்பானது. இதற்காக தேர்தல் ஆணையம் தனது மனித வளத்தின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும். 

ஆக, பெருமளவில் ஒரு பெரிய தேர்தலில் ஜனநாயக செயல்பாடுகளை அர்த்தமற்றதாக ஆக்க ஒரு முயற்சி நடந்து இருக்கிறது. மக்கள் இதை எப்படி அணுகி இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகளே சொல்லும்.

ஆபிரகாம் லிங்கன் ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கு உலகப் புகழ் பெற்ற விளக்கம் ஒன்றைச் சொன்னார் என்பது நமக்குத் தெரியும் 

“Democracy is of the people, for the people and by the people “ என்பதே லிங்கனின் வாக்கு. அதாவது ஜனநாயகம் என்பது மக்களுடைய ஆட்சி , மக்களால் , மக்களுக்காக என்பதாகும். ஆனால் இன்றோ அது !

“Democracy off the people far the people and to buy the people “ என்று நாம் மாற்றிப் படித்துக் கொள்ள வேண்டிய நிலைமைகள்தான் உருவாகி ஜனநாயகம் என்கிற ஒரு உயர்ந்த இலட்சியம் உலகத்தின் பெரிய ஜனநாயக நாட்டில் கேலிக் கூத்தாக மாறிக் கொண்டு இருக்கிறது. 

அதிரைநிருபர் பதிப்பகம்

தேர்தல் ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | March 13, 2016 | , ,


ஒவ்வொரு தேர்தலிலும்
வெவ்வேறு கூட்டணிகள்
ஒவ்வாதோர் ஒன்றிணைந்து
உருவாக்கும் நாடகங்கள்

திரும்பும் திசைகளெங்கும்
தேர்தல் பிரச்சார சப்தம்
திகட்டுமளவு அனுதினமும்
வாக்குறுதிகள் நித்தம்

களப்பணியில் மூழ்கிடும்
தொண்டர்கள் கூட்டம்
காய்ந்த வயிற்ருடன் கிடக்கும்
அத் தொண்டனின் குடும்பம்

ஆணவங்கள் கொண்டவரும்
அடங்கி வந்து பிரச்சாரம் செய்வர்
ஆசைகளை உள்ளடக்கி
ஆட்சியமைக்க காத்திருப்பர்

மானங்கள் போனபோதும்
மாற்றுக்கட்சி நகைத்தபோதும்
தானங்கள் பலவழங்கி
தன்னிலையை உயர்த்திக்கொள்வர்

மக்களாட்சி மலருமென
மனமுறுக வாக்குரைப்பர்
வந்தமர்ந்த மறுகணமே
சிந்தையைவிட்டு மறந்துபோவர்

எக்கட்சி எதிர்த்து நின்றும்
ஏகமாய் நம்பியிருப்பார்
இறுதியில் முடிவுகேட்டு
ஏமாறுவர் பாமர மக்கள்

இனியதனை வீழ்த்திடவே
இதிகாசம் படைத்திடவே

நலிந்தோரின் துயர்துடைக்க
நாட்டில் ஒழுங்கை சீர்படுத்த
நல்லாட்சி அமைந்துடவே
நாட்டுமக்கள் ஒன்றிணைந்து

தேர்தலெனும் சந்தையிலே
தேர்ந்து விலைபோய்விடாமல்
சிந்தையிலே உதிக்கும் நல்ல
சிறந்தோர்க்கு வாக்களிப்போம்

அதிரை மெய்சா 

முஸ்லிம்களின் “ நமக்குநாமே எதிரி ” திட்டம்!. ***2011 லிருந்து 2016*** 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 17, 2015 | , , , ,

தமிழக தேர்தலும் கழகங்களும் ஜமாத்களும் ஓர் பார்வை!.



இந்தப்படை போதுமா?. இன்னும்கொஞ்சம் வேணுமா?.

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதினால் தேர்தல் வேலைகளும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் வேலைகளும் மும்முரமாக உள்ளன. கட்சிகள் சீட்டிற்காக அணிமாறும் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்து விட்டன. இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் களத்தின் வேலைகளையும் தொடங்க ஆரம்பித்து விட்டனர்..


முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒன்றோ அல்லது இரண்டோ சீட்டுகளை மட்டும் பெற்றுக் கொண்டு சார்ந்திருக்கும் கட்சியின் சின்னத்தில் நிற்கலாம்!. அல்லது தங்களின் சின்னத்தில் போட்டியிடலாம்!. இது இக்கட்சிக்கு ஆரோக்கியமான வளர்ச்சியல்ல!. முழுகட்சியையும் அது திராவிட கட்சிகளிடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன!.


இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்பது அல்லது பத்து என்று சீட்டுகளை பேரம்பேசி வாங்குவதும், பா.ம.க போன்ற கட்சிகள் எல்லாம் முப்பது சீட்டுக்களை பேரம்பேசி (டிமான்ட்வைத்து) வாங்கும் அளவிற்கு குறுகிய காலங்களில் அசூர வளர்ச்சியடைந்து விட்டார்கள்!. ஆனால் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இருந்து வரும் முஸ்லிம்லீக் கட்சி, தன் பிறை சின்னத்தின் மறுபக்கமான “தேய்பிறையாகவே” இருந்து வருகின்றது!. முன்பு தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியாக இருந்த ஒரு மாபெரும் கட்சி இன்று, பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு அதிலும் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தன்மானத்தை இழந்து நிற்கின்றது. சமீபத்தில் கூட நடைபெற்ற முஸ்லிம்லீக் கட்சி நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தினை கண்டால், நமக்கே பிரமிப்பாக இருக்கின்றது.! இவ்வளவு செல்வாக்கை வைத்துகொண்டு இக்கட்சி ஏன் மேலும் மேலும் வளர்ச்சிபெற முடியாமல் திணறுகின்றது என்று நம்மால் கணிக்க முடியவில்லை!.


மேலும் மனிதநேய மக்கள் கட்சி சுமார் பதினேழு தொகுதிகளில் தங்களுக்கு வெற்றிபெறும் அளவிற்கு செல்வாக்கு உள்ளதாக கண்டறிந்து பொதுக்குழுவில் அந்த தொகுதியையும் அறிவித்தனர். இருந்தும் இவர்கள் மூன்று முதல் ஐந்து சீட்டுகளை மட்டுமே பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எத்தனை எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் வந்தாலும் இன்னும் ஒன்றிற்கும் இரண்டிற்கும் அல்லது ஏதோவொரு குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றினாலே, “சமுதாய ஓட்டு அத்துனையும் உங்களுக்கே” என்று பேரம் பேசி, சமுதாயத்தினை அடகுவைக்கும் அவலநிலை மாறவேண்டும்!. நம்மின் பலத்தினை நாமே கேவலமாக எடைபோடுவதும் சரியல்ல!.

இந்திய தவ்ஹீது ஜமாத்தும் போட்டியிடப் போவதாக தெரியவில்லை!. ஆனால் ஆதரவை, அல்லது பிரச்சாரத்தினை மட்டும் இவர்கள் செய்வார்கள் என்றே தோன்றுகின்றது. நிச்சயமாக த.த.ஜ அணிக்கு மாற்றமான அணியில் இவர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!. இப்படியே நாம் இக்கரைக்கு அக்கறை என்று முடிவெடுப்பதிலேயே அணைத்து இயக்கங்களும் தங்களை முன்னிலைப் படுத்துகின்றன.


மேலும் மானம் காக்குமா ம.ம.க?. என்று ஒருபுறம் இக்கட்சியை 18 சீட்டுகள் பெறவேண்டும் என்று தூண்டுவதும், பின் சேலத்தில் நடைபெற்ற த.த.ஜ பொதுக்குழுவில் ம.ம.க எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் என்று சீண்டுவதும், மாறுவேடம் போடுவதும் சமுதாய இயக்கமான த.த.ஜ விற்கு அழகல்ல!. ஒன்று இவர்கள் போட்டியிடவேண்டும்!. இல்லையென்றால் களத்தில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அமைதியாக இருந்துவிட்டு செல்லவேண்டும். த.த.ஜ - தமுமுக விற்க்கு இடையே உள்ள ஈகோ மற்றும் பொறாமை காரணமாக சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்வதற்க்கு ஆயிரமாயிரம் காரணம் கூறினாலும், இன்று நமக்கு உள்ள அரசியல் அதிகார தேவைக்கு அது உதவாது!. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கவே செய்யும்!.


முஸ்லிம் லீக் நின்றாலும் பிடிக்காது. ம.ம.க நின்றாலும் பிடிக்காது. ஆனால் நாங்களும் நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது எந்தவகையில் நியாயம் என்று சமுதாய நலனை முன்னிலைப் படுத்தும் த.த.ஜ சிந்திக்கவேண்டும். உங்களுக்கிடையே உள்ள ஈகோவை எல்லாம் தேர்தலில் காண்பித்து நம் சமுதாயத்தின் பிரதி நிதித்துவத்தினை அடைய விடாமல் தடுப்பதை சிந்திக்கவேண்டும். அல்லது தேர்தலில் நாங்கள் நிற்கமாட்டோம் என்ற நிலைபாட்டில் இருந்து மாறி, தேர்தல் களம் கண்டு, முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டமன்றம் சென்று, நம் சமுதாய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதுதான் ஒரு சிறந்த இயக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும். அரசியல் வேண்டாம் என்றால் தேர்தலில் பிரச்சாரமும் செயக்கூடாது!. எந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளையும் சந்திக்கக்கூடாது!.


மேலும் ஜமாத், இயக்கம் போன்ற அடைமொழிகளுடன் சிறிய சிறிய பத்துக்கும் மேற்பட்ட இன்னபிற இஸ்லாமிய இயக்கங்களும் அவர்கள் மனதிற்கு என்ன தோன்றியதோ, அதையே ஆதாரமாக வைத்து பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தல் வேலைகள் செய்வதும் ஆரோக்கிய மானதல்ல!.


இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றினைந்தாலே திமுக. அதிமுக காங்கிரஸ் என்று ஏதாவதொரு பெரிய அரசியல் கட்சியுடன் நாமும் முப்பது அல்லது நாற்பது தொகுதிகள் என்று பேரம்பேசி அதை இஸ்லாமிய இயக்கங்களுக்குள் பகிர்ந்துகொள்ளலாம். இது சாத்தியமா என்றால் ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட நம்மால் சாத்தியமே!. இதுபோன்ற ஒரு முடிவை நாம் எட்டாதவரை இன்னும் பத்து தேர்தல்கள் வந்தாலும், இரண்டு மூன்று என்று மட்டுமே முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சட்டமன்றத்தில் காணலாம். மேலும் தேர்தல் முடிந்தபிறகு ஆஹா பார்த்தீர்களா?. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம்!. ஒரு அமைச்சர் கூட இல்லை!. இஸ்லாமியர்களின் நிலையை முன்னேற்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என்று போராட்டம் செய்து என்ன பயன்?.


தேசிய அளவிலும் நம்மை வழிநடத்த ஒரு வலிமையான இஸ்லாமிய இயக்கமோ அரசியல் கட்சியோ இல்லை!. அதற்கு முதலில் மாநிலம் தழுவிய அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் முதலில் மாநில அளவில் ஒன்றினைய வேண்டும்!. பின் ஒன்றிணைந்த இக்கட்சிகள் தேசிய அளவில் பாராளுமன்ற தேர்தலில் ஒரணியில் நின்றால், எம்பி தொகுதியையும் நம் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பெறமுடியும். ஆனால் செய்வார்களா?. இதுவே நம் அரசியல் உரிமையை பெற சரியான வழிமுறையாக இருக்க முடியும். முஸ்லிம்களின் ஓரணி என்ற கோட்பாடே நம் அரசியல் தீர்வுக்கு வழிவகையாகும். பின் நமக்கு சச்சார் கமிட்டியும் தேவை இல்லை!. சாச்சா கமிட்டியும் தேவை இல்லை!. நம்மை நாமே மாற்றிக்கொள்ளாத வரை நமக்கு எந்த அரசியல் கட்சியும் உரிமையை வழங்க முன்வராது!.


கடந்த தேர்தலில் கூட அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் சென்னையில் ஒன்று கூடி ஒரே கூட்டணியில் நிற்பது என்று முடிவெடுத்து கடைசியில் ஆளுக்கொரு திசையில் வழக்கம்போலவே சென்றுவிட்டனர். ஆக அரசியியலில் நமக்கு எதிரிகள் வேறு யாரும் அல்ல! நமக்கு நாமே எதிரிகள்!!.


முஸ்லிம் சமுதாயத்தின் ஜமாத்/லீக்/கழகம்/பேரவை மற்றும் இத்யாதிகள்:


1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2. இந்திய தேசியலீக்
3. தேசியலீக் கட்சி
4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்)
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக்(ஷேக் தாவூத்)
6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான்
7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன்)
8. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்
11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்
12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம்
13. மனிதநேய மக்கள் கட்சி
14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (பாலை ரபீக்)
15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)
16. ஜனநாயக மக்கள் கட்சி
17. இந்திய தேசிய மக்கள் கட்சி
18. இந்திய தேசிய மக்கள் கட்சி (குத்புதீன் ஐபக்)
19. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்
20. இந்திய தவ்ஹீது ஜமாத்
21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் (இணையதளம்)
23. ஜமாத் இ இஸ்லாமி
24. ஜமாத்துல் உலமா
25. ஷரியத் பாதுகாப்பு பேரவை
26. இஸ்லாமிய இலக்கிய பேரவை
27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி (சித்தீக்)
30. மில்லி கவுன்ஸில்
31. மஜ்லிஸே முஷாவரத்
32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்
33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்
34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்
35. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி)
36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்
37. சிறுபான்மை புரட்சி இயக்கம் (லியாகத்அலிக்கான்)
38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை
(ஷேஹூ அப்துல்லாஹ் ஜமாலி)




ஏம்பா, இனி நாம ரெண்டுபெரும்தான் மிச்சம்!. நாமளும் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு “பக்கீர்ஷா பேரவை ஜமாத் கழகம்” என்று ஆரம்பிச்சா என்ன?.

இயக்கத்திற்கு மட்டும் குறையில்லை!. மற்றும் இங்கு குறிப்பிட மறந்து விட்டது பத்திற்கு மேல் இருக்கும்!. இந்தியா முழுமைக்கும் உள்ள நம் எதிரி இயக்கங்களின் எண்ணிக்கை இதில் பாதி கூட இல்லை!. ஆனால் தமிழ்நாட்டளவில் மட்டும் நாம் கண்ட அமைப்புகளின் என்னிக்கையை கண்டீர்களா?.


இந்திய மக்கள் தொகையைப்போல் எண்ணிக்கையில் அதிகமாகவே உள்ளது நம் இயக்கங்கள்!. ஆனால் ஊட்டச்சத்து இல்லாமல்தான் சவளைப் பிள்ளையாக நாம் இருக்கின்றோம். முதலில் இந்த சமுதாய இயக்கத்திற்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் நிலைதான் தற்போது உள்ளது. எனவே சிந்திப்பார்களா!. இவர்கள் ஒன்றினைந்து என்கட்டுரையை பொய்ப்பிப்பார்களா?.

அதிரை முஜீப்
2011ம் வருடம் பொதுத் தேர்தலை மையப்படுத்தி எழுதிய கட்டுரை இன்றளவுக்கும் எவ்வித பெரிய மாற்ரங்கள் இன்றி பொருத்தமாக இருக்கிறது.;

Thanks:http://adiraimujeeb.blogspot.com/2011/02/blog-post_06.html

நேற்று ! இன்று ! நாளை ! - அனைத்து ஊடகங்களில் விவாதமாகிருப்பது.... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | February 03, 2015 | , , , , , ,

தொடர் - 17லிருந்து...
வேறு வழியின்றி, இந்த அத்தியாயத்தை முக்கியத்துவம் கருதி, ஒரு பெரிய பீடிகையுடன் தொடங்க வேண்டி இருக்கிறது. 

உலகில் மனிதன் தோன்றிய போது அவன் கூட்டம் கூட்டமாக சேர்ந்து வாழ ஆரம்பித்தான். பின்னர் இந்தக் கூட்டத்துக்கு ஒரு தலைவன் தேவைப்பட்டான். அந்தத் தலைவன் பின்னர் அதிகாரங்களை குவித்துக் கொண்டு தன்னை மன்னராக மாற்றிக் கொண்டான். இதன் பரிணாம வளர்ச்சியாக அரசுகள் தோன்றின. அவ்வரசுகள் அன்போடும் நடத்தப் பட்டன சர்வாதிகார முறையிலும் கொடுங்கோல் முறையிலும்  நடத்தப் பட்டன. நாகரிகம் வளர்ந்து வளர்ந்து மெல்ல மெல்ல ஜனநாயக முறைகள் உருவாயின. மக்களை ஆள்வோரை மக்களே தேர்ந்தெடுத்து தங்களை ஆள வைத்தனர். 

உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் முதன்மையான நாடாகக் கருதப் படுவது இந்திய ஜனநாயகம் ஆகும். வெள்ளையர்கள் வெளியேறிய பின் மக்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளத் தலைப்பட்டனர். இதற்காக தேர்தல் முறை வந்தது.  இந்த தேர்தல் நடை முறை பல பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று – அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் வழங்கப் பட்ட சின்னங்கள் பொறித்த பெட்டிகளில் மக்கள் வாக்களிப்பதில் தொடங்கி தற்போதுள்ள மின்னணு முறை வரை வந்துவிட்டது. 

பிரிக்கப் படாத மொழிவாரி மாநிலங்கள் ஒன்றாக இருந்த பொது, அரசுக்கு வரிகட்டிய இரசீது வைத்து இருந்தவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்ததாம். பின்னர்,  பதவிக்கு வர ஆசைப் படும் வேட்பாளரிடம்  அரிசி,  பருப்பு,  பணம் முதலியவற்றை வாங்கிக் கொண்டு வாக்குச் சீட்டுகளில் அவர்களின் சின்னத்தில்  முத்திரையிட்டு மொத்தமாக அவர்களிடமே கொடுத்த பின்னர் வேட்பாளர்கள் தங்களின் பெட்டியில் தாங்களே போட்டுக் கொண்ட காலமும் இருந்ததாம்.   எல்லாக்காலத்திலும்  வாக்குரிமையை விற்றவர்கள் இருந்தே இருக்கின்றனர். இன்றோ நாம் சொல்லவே வேண்டாம். 

சிறுகச் சிறுக பெருகிக் கொண்டே வந்த அரசியல் கட்சிகள் இன்று பழத்தட்டில் மொய்க்கும் ஈக்களின் கூட்டம் போல பெருகிவிட்டன. நினைத்தவர்கள் ஒரு கட்சியை ஆரம்பித்து விடலாம். தேவை ஒரு லெட்டர் பேடு மட்டுமே. நெல்லிக் காய் மூட்டையை அவிழ்த்து விட்டால் கூட அவற்றை எண்ணி விடலாம் ஆனால் இந்தியாவில் இன்று இருக்கும் அரசியல் கட்சிகளை மட்டும் எண்ணி விட முடியாது.  ஒவ்வொரு சாதிகளும் அந்த சாதிகளின் உட்பிரிவுகளும் கூட தங்களுக்கென்று அரசியல் கட்சிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. தேர்தல்களிலும் நின்று பதினேழு வாக்குகள் வாங்குகின்றன. 

நீண்ட நாட்களாக பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல்  தான் ஒருவன் மட்டுமே இருந்து நடத்திக் கொண்டிருந்த சுப்ரமணியம் சுவாமி, கட்சியைக் கலைத்து விட்டு பாரதீய ஜனதாக் கட்சியில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார். பாரி வேந்தர் என்று ஒருவர் ஓர் கட்சியை வைத்துள்ளார். கொங்கு வேளாளர் என்று ஒரு கட்சி; சங்கு பொறுக்குபவர்களுக்கு என்று ஒரு கட்சி; பனைமரம் ஏறுவோருக்கும் ஒரு கட்சி; பங்கு வர்த்தகம் செய்வோருக்கும் ஒரு கட்சி.  சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மட்டுமே இருபதுக்கும் மேலான கட்சிகளை வைத்து இருக்கிறார்கள். இவர்களில்  ஒரே கட்சியில் இருக்கும் இருவர் வெளியூருக்கு ஒன்று சேர்ந்து பஸ் பயணம் பண்ண நேர்ந்தால் தனக்கு ஜன்னல் ஓரம் அமரும் சீட் தரவில்லை என்று அடுத்தவர் மீது கோபித்துக் கொண்டு மற்றவர் இன்னொரு  கட்சியை ஆரம்பித்து விடுகிறார்.  

அது மட்டுமல்லாமல் ஜனநாயகம் என்கிற பெயரில் சட்டமன்ற பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு தகுதி இல்லாதவர்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்று விடுகிறார்கள். திரைப்பட நடிகைகளான வைஜெயந்தி மாலா, ஜெயப்பிரதா, விஜயசாந்தி ஆகியோரும் எஸ் எஸ் சந்திரன், ஐசரி வேலன்  போன்ற காமெடியன்களும் இரா செழியன் , ஜார்ஜ் பெர்னாண்டஸ், குருதாஸ் குப்தா, சோமநாத் சட்டர்ஜி போன்ற அரசியல் மேதைகளுடன் ஒரே நிலையில் பாராளுமன்றத்தில் , சமமாக அதே அந்தஸ்துடன் அமர வைத்தது ஜனநாயகம். எஸ். வி.  சேகர் என்கிற காமெடி நடிகர் தற்போது ஏழாவது முறையாக கட்சி மாறியதை ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. யார் சொல்ல முடியும்? இடையைக் காட்டி இடைத் தேர்தலில் கவர்ச்சி நடிகைகள் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சொல்வேந்தர் சுகிசிவம்  நின்றிருந்தாலும் அவருக்கு ஜாமீன் தொகை கிடைக்காது. “கவர்”ச்சீ என்றா சொல்லப் போகிறார்கள்? அந்த நடிகையும் சட்டமன்றத்தில் அமர்வார். அவருக்கு முன்வரிசையில்  இருக்கை ஒதுக்கப்படலாம். இதுதான் ஜனநாயகம். 

ஊரிலேயே பெரிய அடியாள் , தாதா , பத்து கொலைகள் செய்தவர், முகத்திலே நாலு அரிவாள் வெட்டுத் தழும்பு உடையவர்  பல கிரிமினல்  வழக்குகளை தனக்குப் பின்னால் வைத்திருப்பவர் ஆகியோரால்  ,  தங்களின் பெயருக்குப் பின்னால்  பல்கலைக் கழகங்களில் பெற்ற  பட்டங்களை போட்டு வைத்திருப்பவர்கள் மண்ணைக்  கவ்வுகின்றனர்.  மக்கள் தொண்டர் காமராசர் ஒரு மாணவரால் தோற்கடிக்கப் பட்டார். பேரறிஞர் அண்ணா ஒரு பேருந்து முதலாளியால் தோற்கடிக்கப் பட்டார்.    பணநாயகத்தின் முன் ஜனநாயகம் படுத்து விடுகிறது. 

அது போகட்டும். தேர்ந்தெடுக்கப் பட்டு சட்ட மன்ற பாராளுமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப் படுகிற எம்பிக்களும் எம் எல் ஏக்களும் தங்களுடைய கடமையை ஒழுங்காக செய்கிறார்களா? குறைந்த பட்சம் கூச்சல் போடாமல் இருக்கிறார்களா? அவை நடவடிக்கைகளின்போது  முஷ்டியை மடக்காமல் இருக்கிறார்களா? உதட்டைத் துருத்தாமல் இருக்கிறார்களா? பெண்களே தங்களின் தொடையைத்தட்டி சவால் விடுகிறார்கள். இந்தியப் பண்பாடு என்று நாம் பெருமைப் பட்டுக்கொள்ளும் முன்பு நமது பாராளுமன்றக் கூட்டத்தின் ஒரு பகுதியைப் பார்த்தால் இந்தியப் பண்பாடு தற்கொலை செய்து கொள்ளும். அடிக்கடி முடக்கிப் போடப்படும் இடம் பாராளுமன்றம் , அடிக்கடி எதிர்க் கட்சிகளை குண்டு கட்டாக கட்டி வெளியேற்றும்  இடம் சட்ட மன்றம் என்பதும்  அரசியலில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட  பலர் இந்த அவைகளுக்கு வரவே அஞ்சுகிறார்கள். தனிநபர் தாக்குதலுக்கு அஞ்சி ,  தாழ்வாரம் வரை வந்து  கைஎழுத்துப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் தள்ளு வண்டியைத் தள்ளச் சொல்லி ஓடும் தானைத் தலைவர்கள் ஏராளம். கடந்த காலத்தில் புரட்சித்தலைவர் என்றும் புரட்சித் தலைவி என்றும்  புகழப் பட்டவர்களே  இப்படித் தான் செய்தார்கள். இன்றைய எதிர்க் கட்சித்தலைவர் அவைக்கு வந்து அநேக நாட்கள் ஆகிவிட்டன. 

இந்த அவைகள் கூட்டப் படுவதற்கு எவ்வளவு செலவுகள், எவ்வளவு சம்பளங்கள், செலவுகள் அலவன்சுகள்? எல்லாம் நாட்டு மக்களின் தலையில்.

பல நேரங்களில் தேர்தலின் போது, சாதி மத இனக் கலவரங்கள் தூண்டிவிடப் பட்டு பல அப்பாவிகளின் உயிர்கள் பலிகொள்ளப் படுகின்றன. இவற்றிற்குக் காரணமான அரசியல்வாதிகள் தங்களின் குடும்பத்துடன் மகிழ்வாக பத்திரமாக பாதுகாப்பாக வாழ்வார்களாம். ஆனால் தெருக்  கோடிகளிலே , சாக்கடை வாசத்திலே, அதில் மொய்க்கும் ஈக்களின் கூட்டத்திலே, உழைக்கும் வர்க்கம் உழன்று  வாழ்வார்களாம்; உயிரையும் விடுவார்களாம். தேர்தலுக்காக நடைபெறும் கலவரங்களில் தங்களின் கணவன்மார்களை இழந்த கைம்பெண்கள் ஒருபுறம்; அதற்குக் காரணமானவர்களோ  பஞ்சணை மெத்தையில் மறுபுறம். சமுதாயத்தில் கூட  ஒரே ஊரில் பிரிவினைகள், கசப்புணர்வுகள் தோன்றி விருட்சமாக வளர்கின்றன. இப்படிப் பல அவலங்களுக்கு வித்திடுகின்ற இன்றைய ஜனநாயக தேர்தல் அமைப்பில் ஒரு மாற்றம் வரவேண்டுமென்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜனநாயகம் என்கிற கட கட லொட  லொட என்றும் கப் கப்  குப்   குப் என்றும் புகைவிடும் வண்டியை மாற்றிவிட்டு புதிய ஒரு குளிர்சாதன வசதியுடன்  மெட்ரோ ரயில் ஓட வேண்டுமென்று ஒரு முறையை முன்னெடுக்கிறார்கள். அதுவே விகிதாச்சார முறை.

இந்த முறையின் முதலாவதும் அடிப்படையுமான வாதம் என்ன வென்றால் ஒரு தொகுதி மற்றும் ஊரின்  நலனை கவனிக்க பல்வேறு பெயர்களில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். நகராட்சியின் வார்டு உறுப்பினர் தொடங்கி, ஒன்றியத்தலைவர் , நகராட்சித் தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்துத் தலைவர், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சித் தலைவர் எம் . எல். ஏ, எம். பி ஆகிய பலர் இப்போதுள்ள அமைப்பு முறையில் இருக்கிறார்கள். இவ்வளவு பேருக்கும் அரசின் பணம்  கோடிக்கணக்கில் செலவாகிறது. ஒரு குறிப்பிட்ட தொகுதி அல்லது ஊரின் நலனை கவனிக்க இவ்வளவு ஆட்களும் பதவிகளும் தேவை இல்லை என்பது அடிப்படை. மேலும்  ஒரு பதவிக்காக போட்டி இடுவோரின் எண்ணிக்கையும் அவர்கள் செய்யும் செலவையும் கணக்கிட்டால் தலை சுற்றும். இதற்காக செலவிடும் பணம்தான் ஊழலின் ஊற்றுக் கண்ணைத் திறக்கிறது. 

எம் எல் ஏ  மற்றும் எம் பி ஆகியோரை இந்த உள்ளூர் நலப் பணிகளின் பொறுப்பில் இருந்து விடுபட வைக்கலாம். அந்தப் பணியை உள்ளூராட்சி மன்றங்கள் கவனிக்கச் செய்யலாம். காரணம் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கியப் பணியே  சட்டங்களை உருவாக்குவது, நிறைவேற்றுவது, திருத்துவது, மாற்றுவது ஆகியவைதான். இந்தப் பணி நாடு முழுதுக்குமாக தேவைப்படுவதால் ஒரு குறிப்பிட்ட தொகுதியின் உறுப்பினராக இருந்துகொண்டு இதைச் செய்ய வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்லப் போனால் இந்த சட்ட மன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென்று இந்த விகிதாச்சார முறையில்  எந்த தொகுதியும் சொந்தம்  இல்லை. அவர்கள் ஒரு ஒட்டுமொத்த பாராளுமன்ற அல்லது சட்ட மன்ற உறுப்பினர்கள் அவ்வளவே.

இந்த முறையின் இதர அம்சங்கள்:-
  • வாக்களித்த எல்லோருடைய ஓட்டுக்கும் மதிப்பு உண்டாகும் .
  • குறைவாக வாக்குப் பெற்றவர் ஆட்சி செய்யும் முறை ஒழியும் .
  • வாக்களர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் முறை ஒழியும்.
  • அரசியல் பிழைத்தோர்கள் அகற்றப் படுவார்கள் .
  • கட்சி மாறும் தன்மை அகற்றப் படும் ; ஒழிக்கப் படும் .
  • சபையில் முறை தவறும் உறுப்பினர் மற்றும் அவரது கட்சித்தலைமை கண்டிக்கப் படும் ; தண்டிக்கப் படும் .
  • தகுதியற்றவர்கள் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்வது தடுக்கப் படும் 
  • தவறு செய்யும் உறுப்பினர்கள் திரும்பப் பெறப படுவார்கள் .
  • வருடக் கணக்கில் நடக்கும் தேர்தல் வழக்குகளுக்குத் தேவை இருக்காது.
மேற்கண்ட பட்டியலில் உள்ளவை எல்லாம் அரசியல் வாதிகளின் தேர்தல் கால வாக்குறுதிகள் போலத் தோன்றுகிறதா? இன்னும் தெளிவு பெற நாம் விவாதிக்கலாமே!

உதாரணமாக, ஒரு தொகுதியில்  A, B, C, D ஆகிய நால்வர் போட்டி இடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் அனைவருக்கும் பதிவான  மொத்த வாக்குகள் 70000 என்றும் வைத்துக் கொள்வோம். இப்படி பதிவான 70,000 வாக்குகளில் 

A  18000
B 16000
C 19000
D 17000

என்கிற அளவில் வாக்களிக்கப் பட்டால் இவர்களில் அதிகம் வாக்குகள் வாங்கிய C தேர்ந்தெடுக்கப் பட்டவராக அறிவிக்கப் படுகிறார்.  தேர்ந்தெடுக்கப் பட்ட C  அவர்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 51000  ஆகும். மைனாரிட்டியாக வாக்கு வாங்கியவர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். அத்துடன் மற்ற மூன்று வேட்பாளர்களுக்கு அளிக்கப் பட்ட வாக்குகள் பயனற்றவையாக ஆகிவிடுகின்றன. 

நாடு முழுதும் மொத்த தொகுதிகள் 200 என்று வைத்துக் கொண்டால் இந்த 200 தொகுதிகளிலும் இதே நிலைமை இருந்தால் மக்கள் வேண்டாமென்று ஒதுக்கிய கட்சி நாடாளும் . இந்த முறையை மாற்றி , நான்கு கட்சிகளும் நாடு முழுதும் பெரும் வாக்குகளின் எண்ணிககையின் அடிப்படையில் கட்சிக்கு இத்தனை உறுப்பினர்கள் என்று விகிதாசார அடிப்படையில்  பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் மைனாரிட்டியாக வாக்கு வாங்கிய கட்சி நாட்டை ஆள முடியாது. 

இதை எப்படி நடைமுறைப் படுத்துவது?

தேர்தல்  ஆணையம் குறிப்பிட்ட ஒரு  தேதியில் நாடு முழுமைக்குமான தேர்தலை அறிவித்துவிட வேண்டும். தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் நடைபெறாது. கட்சிகளின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். மக்களிடம் தரப்படும் வாக்குச்சீட்டில் அல்லது மின்னணு இயந்திரத்தில் கட்சிகளின் பெயரும் சின்னமுமே இருக்கும். மக்கள் தங்களுக்குப் பிடித்த கட்சிக்கு வாக்கு அளிக்கலாம். மொத்த வாக்குகளில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு என்று கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்றபடி அந்தந்தக் கட்சிகளுக்கு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற  சீட்டுகள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப் படும். ஒரு கட்சிக்கு மொத்தம் பதிவான வாக்குகளில் பத்து சதவீதம் கிடைத்து இருந்தால் மொத்த பாராளுமன்ற இருக்கைகள் இருநூறு என்று வைத்துக் கொண்டால் அதில் பத்து சதவீதமான இருபது இடங்களை அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கும். 

இதே முறையில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அவைபெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப் படும். அதிக விகிதாச்சார வாக்குக்கள் வாங்கும் கட்சி ஆட்சி அமைக்கும். தேர்தலில் போட்டி இட்டு விகிதாச்சார அடிப்படையில் தாங்கள் கட்சிக்கு கிடைத்த இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அரசியல் கட்சிகள் தாங்கள் கட்சிகளின் உறுப்பினர்களாகப் பணியாற்ற வேண்டியவர்களின் பெயர்களை அறிவிக்கும். இப்படி பெயர்கள் அறிவிக்கப்பட குறைந்த பட்ச கல்வித்தகுதி நன்னடத்தைத் தகுதி ஆகியவற்றையும் கட்சிகள் சேர்த்துக் கொள்ளலாம் என்கிற கட்டுப் பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதிக்கலாம். பதவிக் காலத்தில், ஒழுக்கம் மீறும் உறுப்பினரை கட்சிகள் திரும்பப் பெற்றுக் கொண்டு பதிலாக வேறு உறுப்பினரை நியமிக்கலாம். ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கே பத்தாம் வகுப்பு தேர்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள ஜனநாயகத்தில் காதர் பாட்சா என்பவர் கதர் பட்சா என்று கையெழுத்துப் போடத் தெரிந்து இருந்தாலும் பரவா இல்லை. அவர் அமைச்சராகவும் வர இயலும். 

இந்த முறையைப் பின்பற்றும்போது இட ஒதுக்கீடு முறையில் ரிசர்வ் தொகுதி என்று அழைக்கப்படுகிற தலித்களுக்கோ பெண்களுக்கோ என்று தனித் தொகுதிகளை ஒதுக்கத்தேவை இல்லை. தேர்தலில் பங்கேற்று விகிதாச்சார அடிப்படையில் இடங்களைப் பெறும் தனிப்பட்ட கட்சிகள் தாங்களே தலித்துகளுக்கும் பெண்களுக்கும் இடங்களை ஒதுக்கிக் கொடுத்துக் கொள்ள வேண்டும். 

உலகநாடுகள் பல இந்த முறையைப் பின்பற்றுகின்றன. பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, இஸ்ரேல், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இத்தகைய விகிதாச்சார முறைதான் பின்பற்றப்படுகிறது. 

இந்த விகிதாச்சார முறைக்கு இன்னும் ஆதரவாக எடுத்துவைக்கப் படும் கருத்துக்கள். 

1. தனிப்பட்ட அரசியல் கட்சிகளுக்காக மக்களால் போடப்படும் ஓட்டுக்கும் அவர்களுக்கு கிடைக்கும் இடங்களுக்கும் தொடர்பு இல்லை என்கிற தன்மை நீக்கப் படும். உதாரணமாக  1996 தேர்தலில் அ.தி. மு.க வுக்குக் கிடைத்த மொத்த ஓட்டுகளின் சதவீதம்  21.50  ஆகும். ஆனால் இடங்களோ வெறும் நான்குதான்.  இதே கட்சிக்கு 2001 –ல் கிடைத்த வாக்குகளின் சதவீதம்  29.92 ஆனால் இந்த முறை  132 இடங்கள். வெறும் எட்டு சதவீத வாக்குகள் எவ்வளவு வித்தியாசமான எண்ணிக்கை உடைய இடங்களை கொடுத்துள்ளது என்பதை இதை வைத்துப் புரிந்துகொள்ளலாம். அதைவிட ஒரு புள்ளிவிபரம் நம்மை ஆச்சரியப் படுத்தும்.  1967 தேர்தல் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்த தேர்தலில்  41.38 சதவீதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி  50 இடங்கள் மட்டுமே பெற்று ஆட்சியை இழந்தது.  அதைவிடக் குறைவான 40.77 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம்  138 இடங்களைப் பெற்று  ஆட்சியைப்             பிடித்தது. 

2. இப்போதுள்ள தேர்தல் முறையில் ஒருவருக்கு 49 வாக்குகள் கிடக்கிறது என்று வைத்துக் கொண்டால் அவரை எதிர்த்து நின்றவர்  51 வாக்குகள் பெற்றால் பின்னவர் வெற்றி பெறுவார். அப்படியானால் 49 வாக்குகளை அளித்தவர்களுக்கு பிரதிநிதித்துவமே கிடையாது. அவர்களில் பலர் அதிருப்தி அடைந்து எதிர்காலத்தில் வரும் தேர்தலில் விரக்தியுடன் வாக்களிக்காமல் போகலாம். இதனால் ஜனநாயகத்தின் ஆணிவேர் ஆட்டப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும்  இந்தியாவில் சராசரியாக 55 சதவீதம் வாக்குகளே பதிவாகின்றன. நாம் சொல்லும் விகிதாச்சார முறையில் தங்களின் வாக்குரிமைய செலுத்திய ஒவ்வொருவரின் வாக்குக்கும் மதிப்பும் பயனும் இருப்பதால் இன்னும் அதிக வாக்காளர்கள் வாக்களிக்க வரக்கூடும் . இதனால் ஜனநாயகம் வலுவடையும்.

3. தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கப் பிடிக்காவிட்டால் 49 ‘O பிரிவின் கீழ் அதைப் பதிவு செய்ய இன்றைய தேதல் சட்டத்தில் இடம் ஏற்படுத்தப் பட்டு இருக்கிறது. இதற்காக ‘பிரிண்ட் அவுட்’ கூட பெற்றுக் கொள்ளும் வசதியை இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. விகிதாச்சார முறையுடன் ஓட்டளிக்க விரும்பாத விரும்பாதவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தால் மக்கல் மீதான ஜனநாயகம்  மற்றும் அரசியல் கட்சிகளின் உண்மை தாக்கம் வெட்ட வெளிச்சமாகும். உண்மையான பிரதிபலிப்பை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  

4. விகிதாச்சார முறையில் ஒவ்வொரு கட்சியின் உண்மைச் செல்வாக்கும் தெரிந்து போய்விடுமென்பதால் கூட்டணிகள் அமைப்பதும், பதவி பேரங்களும் நியாயமான முறையில் நடத்த முடியும்.

5. இந்த முறையில் பெறும் வாக்கின் அளவுக்கு பிரதிநிதிகள் அமைவதால் மாநிலங்கள் அவைகளைக் கூட தேவை இல்லை என்று விட்டுவிடலாம். இதனால் பெருமளவில் செலவுகள் குறைய வாய்ப்புண்டு. குறைந்த பட்சம் கூச்சல் குழப்பங்களின் இரண்டாம் எபிசோட் குறையும்.

6. இந்த முறையில் மக்கள் உடைய ஆதரவோ செல்வாக்கோ இல்லாமல் தனி நபர்களால் நடத்தப் படும் அரசியல் கட்சிகள் என்கிற அடையாளங்கள் ஒழிக்கப் பட வழியை ஏற்படுத்தலாம் தேர்தலில் போட்டி இட வேண்டுமானால் பத்து இருபது கோடி ரூபாய் ஜாமீன் தொகையாக கட்ட வேண்டுமென்றும் , தேர்தல் நடந்து முடிந்த த பிறகு இரண்டு மூன்று சதவீதம் வாக்குகள் கூட பெற முடியாத கட்சிகளின் ஜாமீன் தொகை பறிமுதல் செய்யப் படுமென்றும் ஒழுங்குபடுத்தினால்  சரத்குமார் கட்சி போன்ற பெட்டிக்கடை கட்சிகள்  துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அரசியலில் இருந்து காணாமல் போய்விடும்.     

இவைகள் நமது சிந்தனைக்கே. இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்! சிந்திப்போம்! தொடரும்....

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc.,
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

பதினாறாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை. 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 17, 2014 | , , , , , ,

கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த பாராளுமன்றத் தேர்தல் திருவிழாக் காட்சிகள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடகங்களிலும் பிஜேபி அணியே வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லி இருந்தாலும் அது பற்றி பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆயினும் பரவலாக எதிர் பார்க்கப்பட்ட அல்லது அரசியல் வல்லுனர்களால் சொல்லப்பட்டது என்னவென்றால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை அமையாது ; இழுபறியாக இருக்கும்; மாநிலக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்; பிஜேபி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் ; மூன்றாவது அணி அமையும்; என்றெல்லாம் பல்வேறுவகையான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன; வெளியாயின.


ஆனால் அனைவரின் கணிப்பையும் தோல்வி அடையச் செய்து பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 330 க்கு மேலும் பிஜேபி மட்டும் தனித்து அறுதிப் பெரும்பான்மை எண்ணாகிய 272 இடங்களையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பத்தாண்டு காலமாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு பதவி விலகி பிஜேபி அரசு அமைய இருக்கிறது. முதலாவதாக வெற்றி பெற்ற கட்சிகளுக்கு நமது நல வாழ்த்துக்களையும் நல்ல எண்ணங்களையும் சிறந்த ஆட்சிக்கான எதிர்பார்ப்புக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தத் தேர்தல் முடிவுகள் இவ்விதம் அமைந்ததைப் பற்றி நாம் ஒரு கருத்து சொல்லப் போனால் 2014 தேர்தல் முடிவுகள்! இருபது ஆண்டுகால காங்கிரசின் கையாலாகாத்தனம்! சங் பரிவாரங்களின் நூறாண்டுகால சாதுரியம் ! என்றே சொல்வோம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே இப்படி ஒரு பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட வேண்டு மென்றும் தனது சித்தாந்தங்களை செயல் படுத்திட வேண்டுமென்றும் ஆர் எஸ் எஸ் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள் செய்த பகீரத பிரயத்தனம் இன்று ஊடகங்களின் ஒட்டு மொத்த உதவியால் - காங்கிரஸ் கட்சியின் மோசமான தேர்தல் நிலைப் பாடுகளால் இன்று பிஜேபியால் வென்று எடுக்கபப்ட்டு இருக்கிறது. 

வெளிப்படையாகப் பார்க்கும் போது பாரதீய ஜனதா கட்சி முன்னிறுத்திய மதவெறிக் கொள்கைகள் வென்றது போலத் தோன்றினாலும், பத்தாண்டுகள் ஆண்டுவிட்ட ஒரு கட்சியை மாற்றிப் பார்க்க மக்களின் மனம் இயல்பாகவே விரும்பி இருப்பதும் ஒரு காரணம் என்பதை தள்ளிவிட முடியாது. ஒரு வகையில் பிஜேபியின் வெற்றிக்கு காங்கிரசின் மோசமான ஆட்சியையும் முழுமையான காரணம் என்பதை நடுநிலையாளர்கள் ஏற்கவே செய்வார்கள். காங்கிரஸ் செய்த தவறுகளின் விளைச்சலையே அரசியல் ரீதியில் பிஜேபி அறுவடை செய்து இருக்கிறது. “ In fact, the election results are the expression of anger of people against Congress and their disastrous policies “ என்றார் இடதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா. 

தேர்தல் பரப்புரை காலங்களில் இன்று பிஜேபியால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி மீது பல புகார்கள் கூறப்பட்டன. பல எச்சரிக்கைகள் விடப்பட்டன. ஐயோ! இவரா! வேண்டாம் என்று பலரும் மக்களை நோக்கி வேண்டுகோள்கள் விடுத்தனர். ஆனால் அவை அனைத்தையும் மீறி இன்று நரேந்திர மோடியின் தலைமையில் புதிய அரசு அமைய இருக்கிறது. ஆனால் இப்படி நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தாலேயே அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் ஆண்ட குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அடக்குமுறைகள், படுகொலைகள், சொத்துச் சூறையாடல்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் மறைந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. அந்தக் குற்றச்சாட்டுகள் அப்படியேதான் இருக்கின்றன. ஒருவேளை இப்போது நரேந்திர மோடி இப்போது ஏற்க இருக்கும் புதிய பிரதமர் பொறுப்பின் மூலம் அந்தக் கலங்கங்களைக் களையும் விதத்தில் செயலாற்றினால் அவர் மீது நம்பிக்கை ஏற்பட ஒரு வாய்ப்புள்ளது. தரப்பட்டுள்ள பொறுப்பான பதவிக்கு ஏற்ப அவர் நடந்து கொள்ளவேண்டுமென்று விரும்புவோம். 

இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் இன்னொரு விஷயம் என்னவென்றால் 1984 தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஆட்சியமைத்த கட்சிகள் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. பல மாநில உதிரிக் கட்சிகளின் ஆதரவிலும் அமைச்சரவையின் உள்ளிருந்தும் வெளியிலில் இருந்தும் ஆதரவு பெற்றே தந்து ஆட்சியை நடத்தி வந்தது. இதன் மூலம் ஆளும் கட்சி , தான் நினைப்பதை செயல்படுத்த இயலாத நிலைகள் பலமுறை ஏற்பட்டன. அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் மிரட்டல்களுக்கும் ஆளாகி, அமைச்சரவையில் அவர்கள் கேட்கும் துறைகளையும் கொடுத்தே தீர வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டன. அது மட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்த கட்சிகள் ஊழல் முதலிய தவறுகளைச் செய்யும் பொது அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடியாமலும் கூட்டணி தர்மங்கள் அரசின் கைகளைக் கட்டிப் போட்டன. 

ஆனால், இந்த முறை பிஜேபிக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வலுவைக் கொடுத்து இருக்கிறார்கள். தங்களது கூட்டணியில் இருக்கும் எவரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டுதான் ஆளவேண்டுமென்ற அவசியமில்லாமல் சுதந்திரமான அரசை அமைக்க மக்கள் பிஜேபிக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள் என்பது ஒரு ஆரோக்கியமான நிலை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எந்த நல்ல காரியத்தையும் செய்ய விடாமல் கூட்டணிக் கட்சிகள் முட்டுக் கட்டை போட்டன என்று பிஜேபியும் காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. 

இந்த முறையும் ஆட்சியமைக்கப் பற்றாக்குறையான பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பிஜெபிக்குக் கிடைக்குமென்றும் , அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பலவித பேரங்களை பேசி சொந்த நலனுக்காகவும் தங்கள் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வகை ஏற்படுத்திக் கொள்ள தமிழகம் உட்பட்ட பல மாநிலங்களில் இருந்தும் அரசியல் வாதிகள் நினைத்து இருந்தனர். ஆனால் யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் பிஜேபி மெஜாரிட்டி பெற்று இருக்கிறது. இவ்விதம் ஒரு பெரும்பான்மையை பிஜேபி பெறாவிட்டால் செல்வி ஜெயலலிதா போன்றோரின் பேரங்களுக்குப் பணிய வேண்டி இருக்கும்; டாக்டர் அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டி இருக்கும். இப்போது இந்த நிர்ப்பந்தங்கள்- நெருக்கடிகள் - மிரட்டல்கள் எதுவும் தேவை இல்லை என்பது பிஜேபிக்கு ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சாகும் இல்லாவிட்டால் வாஜ்பாய் காலம் போல அவதிப் பட்டு இருக்க நேரிட்டு இருக்கும். இப்படிப்பட்ட நிலைமைகளிலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

தேர்தல் கணிப்புகளைச் செய்த பல்வேறு வகையினர் கர்நாடகாவில் பிஜேபிக்கு பெரும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது என்று வாதிட்டனர். காரணம் அண்மையில்தான் அங்கு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆகவே இப்போதும் காங்கிரசே அதிகம் வெல்லும் என்று ஆரூடம் கணிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆரூடம் பொய்யானது. அங்கு பிஜேபி பதினேழு இடங்களில் வென்றது பிஜேபிக்கு இன்ப அதிர்ச்சியாகும். 

அதே போல் பிஜேபி உடைய பெரும்பான்மை பலத்தை உ. பி மற்றும் பீகாரில் அது பெறப்போகும் இடங்களின் எண்ணிக்கைகளின் அளவு உருவாக்கும் என்ற கணிப்பின்படி இவ்விரு மாநிலங்களிலும் மிகப்பெரும் வெற்றியை பிஜேபி வென்றெடுத்துள்ளது. பீகாரைப் பொறுத்தவரை ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாக் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டே இடங்களைத்தவிர பாக்கியை பாரதீய ஜனதா அள்ளிச் சென்றது. இந்த இரு மாநிலங்களில் மட்டுமே பிஜேபிக்கு கிட்டத்தட்ட நூறு இடங்கள் கிடைத்துள்ளன. 

அதே போல் உ பி போன்ற பெரிய மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடியும் தனது இடங்களை பிஜேபியிடம் இழந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. உ பி யில் எண்பது இடங்களில் காங்கிரஸ் பெற்றது இரண்டே இடங்கள் மட்டுமே . அவையும் சோனியாவும் ராகுல் காந்தியும் பெற்ற இடங்கள் மட்டுமே. 

தலை நகர் டில்லியில் அண்மையில் ஒரு பெரும் எழுச்சி நடத்தியதாக அறியப்பட்டு நாற்பத்தி ஐந்து நாட்கள் மாநிலத்தை ஆட்சியையும் செய்த ஆம் ஆத்மிக் கட்சி , நாடெங்கும் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. டில்லியில் சட்டமன்றத்தில் வென்ற ஆம் ஆத்மிக் கட்சியால் ஒரு பாராளுமன்ற இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவில் இவர்கள் முன்னணி வகிப்பது நான்கே இடங்கள்தான்.

நாடெங்கும் இப்படி பிஜேபி அலையோ அல்லது மோடி அலையோ வீசி இருந்தாலும் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிஜேபி குறிப்பிட்ட வெற்றியை ஈட்ட இயலவில்லை. அங்கெல்லாம் அலைகளின் ஒலி கேட்கவில்லை. அந்த அலை எங்கே போனது என்றும் தெரியவில்லை. 

அதேபோல் இடதுசாரிகளும் தங்களின் வழக்கமான தளம் உள்ள மாநிலங்களில் போதுமான அளவு வெற்றி பெற இயலவில்லை. இதற்குக் காரணம் , இடது சாரிகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையுமே எதிர்த்தார்கள். இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்க்கும் அளவுக்கு இடதுசாரிகளுக்கு பலம் இருக்கிறதா என்றால் இல்லை. இதை உணராமல் இரண்டு மலைகளுடன் மோதி தங்களின் வாக்குகளைப் பிரித்து, பிஜேபி வெற்றி பெற உதவினார்கள் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் இந்த தேர்தலில் மக்கள் எந்த சித்தாந்தங்களையும் விவாதித்து முன்னிலைபடுத்தி வாகளைக்கவில்லை. இதுவும் ஊடகங்கள் ஏற்படுத்திய ஆட்டைக் கழுதையாக்கிய விந்தை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்பு சட்டமன்றத் தேர்தலில் செய்த அதே தவறை திமுக மீண்டும் செய்து ஒரு இடம் கூட வெற்றி பெற இயலாத நிலைக்குத் தன்னைத்தானே தள்ளிக் கொண்டது. கடைசி நேரத்தில் காங்கிரசை கழற்றி விட்டதற்கான விலையை திமுக கொடுத்து இருக்கிறது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் கூட்டணியில் இருந்தாலும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு மனப்பூர்வமாக திமுகவினர் வேலை செய்யவில்லை ; வாக்களிக்கவில்லை என்கிற செய்திகளையும் கேட்கிறபோது அவர்களுக்கு இந்த தண்டனை தேவையானதே என்றே கருத வேண்டி இருக்கிறது. 

அதே நேரம் திமுகவின் இந்த தோல்வி, அதன் சூரியனின் அஸ்தமனமல்ல. இது போல பல வெற்றி தோல்விகளை சந்தித்தக் கட்சி; பெரும் தொண்டர் பலம் உள்ள கட்சி; மீண்டும் எழுந்து நின்று உதிக்கும் வல்லமையும் வாய்ப்பும் உள்ள கட்சி. சரியாக நடந்து கொண்டால் வரும் சட்டமன்றத்தில் பிரகாசிக்கும் வாய்ப்புள்ள கட்சிதான் திமுக. 

நன்கு ஆய்ந்து பார்த்தோமானால் அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே உதவி இருக்கிறது. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் பலவாறு சிதறி அதிமுகவை வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற வழிவகுத்து இருக்கிறது. அத்துடன் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தால் போடப்பட்ட 144 தடை உத்தரவும் அதைப் பயன்படுத்தி, பெருமளவில் பணப்பட்டுவாடா நடந்ததையும் வெட்கமின்றி தலைமை தேர்தல் ஆணையரே ஒப்புக் கொண்டார். நாமும் கண்ணால் பார்த்தோம். இந்த வெற்றியின் பின்னால் பணபலம் இருந்ததை மனசாட்சியுள்ளோரால் மறுக்க இயலாது. 

அத்துடன் பிஜேபி தலைமையில் தேமுதிக போன்ற அதிமுக எதிர்ப்புக் கட்சிகள் தமிழருவி மணியன் போன்ற அரசியல் முகவர்கள் மூலம் பேரம் பேசப்பட்டு தனி அணியாக உருவாக்கப்பட்டு, அதில் அடிப்படையில் வெட்டுப் பழி குத்துப்பழியாக அதுவரை அரசியல் நடத்திக் கொண்டிருந்த பாமகவும் இணைக்கப்பட்டது. இவர்களுடன் வைகோவுடைய மதிமுகவும் இணைந்து நின்றது. இந்த அணி அமைக்கப்பட்டதன் நோக்கமே அதிமுக மற்றும் பிஜேபியின் இரகசிய உடன்பாட்டின் ஒரு அங்கம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. இப்படி ஒரு அணியை அணையாக அமைத்து அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் திமுகவுக்கு விழாமல் தடுப்பதற்காகவே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதை நம்பவும் இடமிருக்கிறது.

இருந்தாலும், தமிழக அரசியலில் சில தேவையற்ற தொங்கு சதைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு இருக்கின்றன. அடிப்படை எதுவுமில்லாமல் அரசியல் கட்சி தொடங்கி, குறிக்கோளே இல்லாமல் கட்சி நடத்தி, கூத்து அடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்தின் கட்சி, வேரடி மண்ணோடு வீழ்த்தப் பட்டு இருப்பது தமிழக அரசியலில் ஒரு மகிழத் தக்க விஷயம். அதே போல் ஒரு திராவிடக்கட்சியாக பரிணமித்து ஒரு இந்துத்வா கட்சியுடன் கூட்டணிவைத்த மதிமுகவும் அடையாளம் தெரியாமல் வீழ்த்தப்பட்டு இருப்பதும் ஒரு நல்ல விஷயமாகவே தோன்றுகிறது. இப்படிப் பட்டியலில் உள்ள தேவையற்ற அரசியல் கட்சிகளை அடையாளம் இல்லாமல் ஆக்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் இருக்கும் சிலரையும் வரும் தேர்தல்களில் புறக்கணித்து புறமுதுகிட்டு ஓட வைக்க வேண்டும்.

எப்படியானாலும் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்றவர்களின் வெர்றியை அங்கீகரிக்கும் மரபுக்கு ஏற்ப நாமும் அவற்றை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மக்கள் பெரும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்ற ஆவலில் ஒரு மாற்றத்தை வேண்டி இவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். வெறும் மத நம்பிக்கைகளை மட்டும் வைத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்கும் முயற்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் புதிய அரசு ஈடுபடவேண்டும். அதற்கு மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள அதிமுக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற இருவரும் ஒத்துழைத்து இந்த மாநிலத்துக்கான மின்சாரம், நீர்-ஆதாரம், மீனவர்கள் பிரச்னைகள், இலங்கை தமிழர், கச்சதீவு உட்பட்ட பிரச்னைகளில் ஒன்றுபட்டு மக்கள் நலமுடன் வாழ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். 

வளர்ச்சியின் நாயகன் என்று வடிவமைக்கப்பட்டுத்தான் பா.ஜ.க.பிரதம வேட்பாளரை முன்னிறுத்தினார்கள். இந்த வளர்ச்சியின் நாயகனின் முன் அவரது புதிய அரசுக்கு பல சவால்கள் காத்து இருக்கின்றன. புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் யாவை என்று தனிப்பதிவாக எழுதுவோம். இப்போது இந்திய தேர்தல் நடைமுறை அங்கீகரித்த வெற்றியை நாமும் ஏற்போம். அன்பும் அமைதியும் நிலவும் இந்த நாட்டில் தொடர்ந்து அமைதியும் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் வேற்றுமையில் ஒற்றுமையும் நிலவச் செய்ய இறைவனை வேண்டுகிறோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்

இட ஒதுக்கீடு! – இன்னும் ஒரு ஆய்வா !? - பகுதி இரண்டு ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | April 17, 2014 | , , , , ,

பட்டு வேட்டியைப் பற்றி கனாக்கண்டிருந்த போது
நாங்கள் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.” 

என்று வைரமுத்து ஒரு கவிதையில் கூறியிருப்பார். 

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கில ஆட்சியில் வழங்கப் பட்டிருந்த இட ஒதுக்கீடு கூட சுதந்திர இந்தியாவால் சுரண்டப்பட்டது என்பது வேதனையான வரலாறு.

நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா அவர்களின் விசாரணைக் கமிஷன் தந்த அறிக்கையை கடந்த வாரம் பார்த்த நாம் இப்போது இன்னொரு நீதிபதி இராஜேந்திர சச்சார் அவர்களின் தலைமையில் இந்திய முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர மற்றொரு கமிஷனையும் அமைத்தது பற்றியும் அந்த அறிக்கையின் சாராம்சங்களையும் காணலாம். 

இந்த விசாரணைக் குழுவில் மொத்தம் ஏழு பேர்கள் இருந்தனர். இந்தக் குழு நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்தது. பலரை சந்தித்தது. களப்பணியாற்றி பல உண்மைகளைக் கண்டறிந்தது. ஆனாலும் சில அரசுத்துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்கள், முக்கியமாக இராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை ஆகியவை இந்தக் குழுவுக்கு கேட்ட தகவல்களை முறையாகத் தர மறுத்துவிட்டன என்பதையும் நாம் பதிவு செய்தாக வேண்டும். 

நீதிபதி சச்சார் கமிஷன் தனது அறிக்கையை நவம்பர் 2006ல் மத்திய‌ அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் இந்தியாவில் அவர்களின் மக்கள்தொகையின் ஒப்பீட்டு விகிதாச்சாரத்தைக் காட்டிலும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியது. இன்னும் ஒரு படி மேலே சொல்லப்போனால் தலித்துகள், மலைவாழ் மக்களை விடவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை படம் பிடித்துக்காட்டியது. இந்த அறிக்கை, இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் எதோ ராஜபோக வாழ்க்கை வாழ்வதாக எண்ணிக கொண்டு அவர்களைப் பற்றி எண்ணிப் பார்க்காமலும் ஏறெடுத்துப் பார்க்கமலும் இருந்தவர்களுக்கு ஒரு இடி போல் இறங்கியது. அரசுகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கே தங்களுடைய உண்மை நிலை என்ன என்றும் உணர்த்தியது. 

சச்சார் கமிட்டி கண்டறிவித்த உணமைகளில் நாம் அறிந்துகொண்ட அதிர்ச்சி தரும் நிலைகள் சில:
  • 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.4% முஸ்லிம்கள் இருக்கின்றனர். 
  • ஆனால் ஐ.ஏ.எஸ் பணியில் முஸ்லிம்கள் 3%, மட்டும் 
  • பட்டப்படிப்பு படித்தவர்கள் 3%, மட்டுமே 
  • இரயில்வே துறையில் 4.5% மட்டுமே (அதில் 98.7% பேர் கடை நிலை ஊழியர்கள்) இருந்து வருகின்றனர். 
  • 25.2% முஸ்லிம்கள் வாழக்கூடிய மேற்கு வங்கத்தில் முஸ்லிம் அரசு ஊழியர்கள் 4.7% மட்டுமே ஆவார்கள்.
  • 18.5% முஸ்லிம்கள் வாழும் உத்திர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் 7.5% மட்டுமே ஆவார்கள் என்று முஸ்லிம்களின் அவல நிலையை பட்டியலிட்டது சச்சார் கமிஷன்.
  • நாடு முழுவதும் முஸ்லிம்களே மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர். முஸ்லிம்களில் 94.8% பேர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். ரேஷன் கார்டு வைத்திருக்கும் 32% தலித் மக்களோடு ஒப்பிடுகையில் 22% முஸ்லிம்களிடமே ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. விவசாயம் செய்துவரும் முஸ்லிம்களில் 2.1% விவசாயிகளே டிராக்டர் முதலிய விவசாய உபகரணங்களை வைத்து இருக்கிறார்கள். நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் பம்ப்செட் வைத்திருப்பவர்கள் 1% பேர்களே. பாராளுமன்றத்தின் 543 உறுப்பினர்களில் 33 பேர்களே முஸ்லிம்கள். இவர்களில் முஸ்லிம்களுக்கு உண்மையாக உழைப்பவர்கள் இன்னும் சொற்பம். உயர்கல்வி பயில்வதற்கு கல்விக்கடன் பெற்றுள்ள மொத்த மாணவர்களில் 3-2% மட்டுமே முஸ்லிம்கள் . 
  • நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே. தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. மின்சாரமே இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். இவை எல்லாம் நீதிபதி சச்சார் கமிட்டி கண்டறிந்து அறிவித்தவை. 
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் இந்தியாவில் ஓரளவு நல்ல நிலையை அடைந்துள்ளதற்கு காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுதான் என்று இடஒதுக்கீட்டின் அவசியத்தை நீதிபதி சச்சார் குறிப்பிட்டு மட்டுமிருந்தார். இந்த அறிக்கையில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் முஸ்லிம்கள் தங்களின் கஷ்டத்தின் காரணமாக தங்களின் இனப் பெருக்கத்தை கருத்தடை முறைகளைப் பின்பற்றி தன்னிச்சையாகக் குறைத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிபதி இராஜேந்திர சச்சார் அளித்த இந்த அறிக்கையில் முஸ்லிம்கள் இவ்வளவு கீழான நிலையில் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் என தீர்க்கமாக அறிக்கை தந்து அறிவித்தது.

“பேசும்போது நல்லா பேசு ! ஆனா பாட்டெழுதும்போது பாட்டை விட்டுடு” என்று ஒரு புகழ்பெற்ற வசனம் தமிழ்நாட்டில் உலவி வந்ததுண்டு. அதே போல் முஸ்லிம்களின் அவலநிலையை பட்டியலிட்ட சச்சார் கமிஷன் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களின் துயர்களைக் களைய வழிமுறைகளை அல்லது இடஒதுக்கீடு போன்றவற்றிற்கான அளவீடு அல்லது இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டுமென்ற பரிகாரம் எதையும் பரிந்துரை செய்யவில்லை. 

இதற்கு மாறாக, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது, இந்நிலை மாற முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரையை பதிவு செய்து இருந்தது.

ஆயினும் ஒன்றைச் சொல்லலாம். நீதிபதி சச்சார் கமிஷன், இந்திய சமூக இனங்களுக்கிடையே நிலவி வரும் ஏற்றத்தாழ்வு எனும் நோயை ஆராய்ந்து கண்டறிந்து அறிவித்தது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனோ இப்படிப்பட்ட ஏற்ற தாழ்வை நீக்கும் நிவாரணம் இடஒதுக்கீடுதான் என்றது. 

ஆனால் இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் முஸ்லிம்களின் மறுவாழ்வு மற்றும் நலத்திட்டங்களுக்காக பரிந்துரை செய்திருந்தாலும் அந்த கருத்துக்கள் அடங்கிய அறிக்கைகளை பலகாலம் தொட்டிலில் போட்டு தாலாட்டி தூங்கவைத்து விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்று தேர்தல் அறிக்கைகளில் மத்திய அரசை ஆண்ட காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிற வாழைப் பழக் கதையை வழக்கமாக வைத்திருக்கிறது. அதே போல் அரசு , இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நினைக்கும் போது அதை எதிர்த்து கருத்து தெரிவித்த கட்சிகள் கூட சமூக நீதி, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு என்றெலாம் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடுவது நகைச்சுவை இல்லாமல் வேறென்ன?

இந்த வாழைப்பழக் கதை மாதிரியே “திரும்ப முதல்லேருந்து வா” என்று இன்னொரு நகைச்சுவைக் கதையும் உண்டு. அதே போல்தான் இடஒதுக்கீடு என்ற உன்னத சமூக நீதிக் கொள்கைகள் மத்திய மாநில அரசுகளால் பந்தாடப்படுகின்றன. சுதந்திரம் பெற்று அறுபதுஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நாட்டில் நலிவடைந்த பிரிவோரின் நிலைகள் என்ன என்று அரசு அறிந்து கொள்வதற்கு விசாரணைக் குழுக்கள் வேண்டுமென்று ஒன்றுக்கு இரண்டு குழுக்கள் போடப்பட்டு அறிக்கைகளும் நீதியின் வழியில் நீதிபதிகளால் சாதகமாகவே தரப் பட்டுவிட்டன. அவற்றை நிறைவேற்றுவதற்கு அதிகாரம் படைத்த அரசுகள் வாயளவில் முஸ்லிம்களுக்கு வெண்ணை தடவுகின்றனவே தவிர முழு அளவில் அந்த அறிக்கைகள் பரிந்துரைத்தவைகளை நடைமுறைப் படுத்த மனம் வரவில்லை என்றால் – இயலவில்லை என்றால்- சட்ட வடிவம் தந்து எழுந்து நடக்க வைக்காமல் சவளைப் பிள்ளையாகவே காலத்துக்கும் வைத்திருக்கிறது.

இன்னொரு வரலாற்று செய்தியையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். இவ்வாறு நீதியரசர்கள் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா போன்ற விசாரணை குழுக்கள் அமைக்கபப்ட்டது வரலாற்றில் முதல் முறையல்ல. இவ்வாறு இஸ்லாமிய சமுதாயம் குறித்து எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுவதும் முதன் முறை அல்ல. 1953ல் காகா கலேல்கர் கமிஷன், 1983 கோபல் சிங் கமிஷன், 1989 மண்டல் கமிஷன் என்று பல கமிஷன்கள் அமைக்கபப்ட்டே இருந்தன. 

இப்படியே இந்த சமுதாயம் ஆசைகாட்டி மோசம செய்யபடுவது ஒரு வழக்கமான அரசியல் விளையாட்டு என்றால் அதன் அரசியல் பின்னணி என்ன?

அதன் பின்னணி ஒன்றுமில்லை. இந்திய தேசிய ரத்தத்தில் கலந்துவிட்ட வகுப்பு துவேஷம் என்கிற விஷம்தான் காரணம். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேலே குறிப்பிட்ட முஸ்லிம்களுக்கு சாதகமான இரண்டு நீதிபதிகளின் பரிந்துரைகளை சட்டமாக்கினால் அதை பிஜேபி போன்ற இன மத துவேஷ எதிர்க் கட்சி எதிர்க்கும் என்பதுதான் முதன்மைக் காரணம். இதே பிஜேபி எதிர்த்தாலும் அணு உலை அமைப்பு போன்ற ஏனைய எல்லா சட்டங்களையும் அவசரச் சட்டம் போட்டாவது நிறைவேற்றத் துணிகிற மத்திய அரசு, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு விஷயத்தில் மட்டும் பாராளுமன்றத்தின் மேற்கூரையை பார்த்துக்கொண்டே பத்தாண்டுகளை ஓட்டியது ஏன்? எதிர்க் கட்சியான பிஜேபி மட்டுமல்ல, காங்கிரசுக்குள்ளேயும் காங்கிரசின் கூட்டணி என்ற பெயரில் அந்த அரசைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கட்சிகளுக்குள்ளேயும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தங்களை மறைமுகமாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அடிவருடிகள், கதராடை அணிந்து காந்தி பெயர்ச் சொல்லி கட்சிகளுக்குள் ஊடுருவி இருப்பதும்தான் காரணம்.

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்று அதன் அரசியல் சட்டத்தில் எழுதிவைக்கபப்ட்டு இருக்கிறது. உண்மைதான். மத சார்பற்ற அணி என்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் ஒரு பகுதி தங்களை அடையாள படுத்திக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நாம் கேட்க விரும்புவது என்னவென்றால் மத சார்பற்ற அணி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அரசியல் கட்சிகள் உண்மையிலேயே சிறுபான்மையினருக்காகவும் தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்காகவும் ஆக்கபூர்வமாக செய்தது என்ன? மத சார்பற்ற என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் முதலிய சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து வாய்ஜாலம் பேசுவதுதான் இந்தக் கட்சிகளின் குறிக்கோளாக இருக்கிறதே தவிர, உண்மையில் சிறுபான்மையினருக்காக காலம் காலமாக எந்த உண்மையான நன்மைகளை நடைப் படுத்தி இருக்கிறார்கள் என்பது நாம் சிந்திக்க வேண்டிய செய்தியாகும்.

அப்படி ஆக்கபூர்வமான காரியங்கள் நடந்திருந்தால் 
  • முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பத்து சதவீதம் தரவேண்டுமென்ற நீதிபதிகளின் அறிக்கை ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடந்தது ஆக்சிஜனுக்காக போராட வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது?
  • சிறைச்சாலைகளில் பல சிறுபான்மையினரை பல வருடங்கள் வழக்கு ஏதுமின்றி விசாரணைக் கைதிகளாகவே வைத்திருக்கவேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டு இருக்கிறது? 
  • எல்லா இயக்கங்களும் மாறி மாறி போராட்டங்களை அறிவித்தும் நடத்தியும் கூட மத்திய மாநில அரசுகள் இந்த கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? 
ஏனென்றால் சிறுபான்மையினரின் பிரச்னைகள் தீர்க்கப் படாமலேயே இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்களை இங்கும் அங்குமாக உதைத்து மற்ற பெரிய கட்சிகள் பந்தாட இயலும் என்கிற கீழ்த்தரமான நோக்கம்தான். இதில் வேதனையாகக் குறிப்பிட வேண்டிய செய்தி என்னவென்றால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இயக்கங்கள் பெரிய அரசியல் கட்சிகளின் கால்களில் உதைபடும் கால்பந்தாக நாங்கள் வருகிறோம் என்று போட்டி போட்டுக் கொண்டு தாங்களே உருண்டு ஓடிப்போய் மைதானத்தின் நடுவில் உட்கார்ந்து கொள்வதுதான். 

இந்த நிலைமைகள் தான் மனசாட்சி உள்ள – எந்த இயக்கத்தைச் சேர்ந்த யாரும் உண்மை நிலைமைகள் என்று உணர்ந்து இருந்தாலும் கூட மதசார்பற்ற அணி என்று அறிவித்துக் கொள்ளும் அணியோடுதான் நம்மை ஏதாவது காரணம் சொல்லி இணைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். காரணம், ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்கிற நிலைமைதான் சிறுபான்மையினரின் நிலைமை. 

ஒருபுறம் மத வெறியர்கள் வெளிப்படையாக விளம்பரப் பலகை வைத்து இந்தப் பக்கம் வராதே! என்று நம்மை பயமுறுத்துகிறார்கள். மற்றொரு புறம் பிற அரசியல் கட்சிகள், நமது ஓட்டுப் பால் சுரக்கும் மடிகளில் ஆறுதல் விளக்கெண்ணையை தடவி செம்பு நிறைய பால் கறக்கிறார்கள். நாமோ பலவாறு பிரிந்து கிடப்பதால் அவர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு போயஸ் தோட்டத்துக்கும் கோபாலபுரத்துக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு அவர்கள் போடும் ஒன்று இரண்டு இடங்களுக்காக தயவை எதிர்பார்த்து நிற்கிறோம். இதற்காக நமது சொந்த சகோதரர்களை துர்வார்த்தைகளால் அர்ச்சிப்பதற்கும் நாம் தயங்குவதில்லை. இதே இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் அவர்களின் கரங்களில் இருக்கும் கத்திகளுக்கு நாமே கழுத்தைக் கொடுத்து பலியாகிறோம். பிரித்தாளும் கொள்கையில் பெயர் பெற்றவன் பிரிட்டிஷ்காரன் என்று அன்று சொல்வார்கள். இன்றோ அரசியலில் வித்தகம் என்பது சிறுபான்மையினரையும் தலித்துக்களையும் கூறு போட்டுப் பிரித்து திக்காலுக்கு திக்கால் விட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு முட்டி மோதவிடுவதுதான் என்பதாக ஆகிவிட்டது.

மிகுந்த வேதனையுடன் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இந்து சகோதரர்கள் இடையே எவ்வாறு சாதிரீதியான கட்டமைப்பு உருவாகி இவர் செட்டியார், இவர் முதலியார், இவர் பிள்ளைமார் , இவர் வன்னியர் , இவர் கவுண்டர் என்று பாகுபாடுகள் ஊடுருவி உருவாகி இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையாமல் அதே அளவு வீரியத்துடன் முஸ்லிம்களிடையே இயக்கப் பாகுபாடுகளும் இயக்க வெறியும் நிலவி வருகிற உணமையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். சாலையில் போகிற ஓர் இந்து சகோதரனை அடுத்த இந்து சகோதரன் இந்த ஆள் என்ன சாதி என்று கேட்பது போல் ஒரு முஸ்லிம் சகோதரனை மற்றொரு முஸ்லிம் சகோதரன் இவன் எந்த இயக்கத்தில் இருக்கிறான் என்று எடை போடுவது , ஆராய்வது இன்றைய சமுதாயத்தின் நடுவே வேதனையான விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டது. இந்து சகோதரர்கள் தங்களுடைய சாதித் தகராறுகளை தர்மபுரியிலும் பரமக்குடியிலும் மரக்காணத்திலும் முதுகுளத்தூரிலும் கீழ வளவு மற்றும் மேல வளவிலும் காட்டிக் கொள்கிறார்கள் என்றால் முஸ்லிம்கள் திருவிடச்சேரியிலும் அதிராம்பட்டினத்திலும் மதுக்கூரிலும் கிளியநூரிலும் காட்டிக் கொள்கிறார்கள் அல்ல காட்டிக் “கொல்கிறார்கள்” . இதையா இஸ்லாம் போதித்தது? இந்த ஒற்றுமையின்மை சால்வையை போர்த்திக் கொண்டு இட ஒதுக்கீடு கேட்டு இயக்கத்துக்கு ஒரு மாதிரி போராட்டங்கள் நடத்தினால் நமக்கு இஞ்சி போட்ட டீ கூட கிடைக்காது . இடஒதுக்கீடா கிடைத்துவிடும்? 

பல்வேறு இயக்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் 3.5% கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது. கிடைத்த இந்த இட ஒதுக்கீட்டிற்கு உரிமை கொண்டாடி ஒவ்வொரு இயக்கமும் தங்களது கொடிகளையும், பெயர்களையும் முன்னிறுத்திக் கொண்டன. விளைவு ஒரு இயக்கத்தார் மற்றொரு இயக்கத்தாரை பழிப்பதும், இழிப்பதும் காட்சியானது. இந்தக் கட்டுரை வெளியாகும் தினம் அன்றுவரை இந்தப் பகையுணர்வு நீங்கவில்லை. இந்த 3.5% இட ஒதுக்கீட்டைத் தந்த கட்சியும் அதன் தலைவரான கலைஞர் கருணாநிதியும் நமது கோரிக்கையான ஏழு சதவீதத்தை நமக்காக ஒரே நேரத்தில் தந்திருக்க இயலாதா? தரவில்லை. காரணம் அடுத்த தேர்தலுக்காக முஸ்லிம்களுடன் பேரம் நடத்த ஒரு கைப்பொருள் கையில் வேண்டும் என்பதுதான் காரணம். அதேபோல் அதை நாங்கள் அதிகரித்துத் தருகிறோம் என்று அடுத்தகட்சியும் இந்த இட ஒதுக்கீட்டை வைத்து நம்மிடம் அரசியல் பேரம் நடத்துவதற்கும் இவைகள் காரணமாக இருக்கின்றனவே தவிர இந்தக் காரணங்களும் பிரச்னையும் கோரிக்கையும் காலத்துக்கும் இருந்து கொண்டு இருந்தால்தான் நம்மைவைத்து இவர்கள் அனைவரும் நடத்தும் அரசியலும் இருக்கும். பிரச்னை தீர்ந்துவிட இவர்கள் விடமாட்டார்கள். அப்படிப் பிரச்னை தீர்ந்துவிட்டால் இவர்கள் நம்மோடு நடத்தும் அரசியலும் தீர்ந்துவிடும்.

இடஒதுக்கீடு பெறுவதற்கும் நம்மை கல்வி, வேலைவாய்ப்பு , சமூக நிலை ஆகியவற்றில் உயர்த்திக் கொள்ளவும் என்னவெல்லாம் வழியாக இருக்கலாம்?

முதலாவதாக நமக்குள் இருக்கும் இயக்க மயக்கங்கள் தீரவேண்டும். ஒற்றுமை ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒற்றுமைக்கு குறுக்கே வரும் எவரையும், “ அண்ணன் என்னடா ! தம்பி என்னடா ! அவசரமான உலகத்திலே” என்று ஒதுக்கிவிட வேண்டும். 

அடுத்து நமது கல்வித்தகுதிகளை உயர்த்திக் கொள்ள வேண்டும். 

மூன்றாவதாக கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வதுடன் நாம் கற்ற கல்விக்குத் தகுந்த அரசுப் பணிகளைத் தேடித்தரும் போட்டித் தேர்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும். அதே போல் பல உயர் கல்வி நுழைவுதேர்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டும். 

நான்காவதாக நமது அரசியல் வலிமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் வலிமைய வலுப்படுத்தே வேண்டுமென்றால் இங்கே இருக்கும் பெரிய ஆலமரக் கட்சிகளின் நிழலில் வளர்ந்துவிட முடியுமென்ற நினைப்பை அகற்ற வேண்டும். நமக்கென்ற ஒரே ஒரு அரசியல் அமைப்பில் நாம் மட்டுமல்ல நம்முடன் கை கோர்க்க நம்மை போல் ஒடுக்கப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுடன் நமது தலைமையில் நமது கூட்டணி அமைந்தால் அரசியலில் – நிர்வாகத்தில் நாம் இந்தியாவுக்கே தலைமை தாங்க நம்மால் முடியும்.

காலமெல்லாம் உயர் சாதியினராலும் பெரும் கட்சிகளாலும் வார்த்தை அலங்காரங்களால் வஞ்சிக்கப் பட்டவர்களின் வரிசையில் வருபவர்கள் யார் என்று எண்ணிப் பார்த்தால் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களோடு முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ மக்களே வருவார்கள். இந்திய சமுதாயத்தில் இந்தப் பிரிவினரின் மக்கள் தொகை அளவுதான் அதிகம் . ஆனால் இவர்கள் ஆளப்படுவது இவர்களைவிடக் குறைந்த அளவுள்ள உயர் பிரிவு வகுப்பினரால் மட்டுமே. தங்களின் வாழ்வாதாரங்களுக்ககவும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களுக்காகவும் மற்றவர்களிடம் இவர்கள் துண்டேந்தி நிற்கும் நிலை ஒரு வித்தியாசமான வேடிக்கை. ஆகவே ஆண்டாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்டு வரும் சமூகத்தின் இப்பிரிவினர் தங்களின் கரங்களை வலுவாக கோர்த்து ஒரு மாற்று அரசியல் அணி உருவாகி நாட்டை ஆளும் நிலை வரும்போதுதான் உண்மையான சமூக நீதி இந்தியாவில் உருவாக வாய்ப்புண்டு. இந்த நிலை ஏற்படாதவரை வாழைப் பழக்கதைகளும் மறுபடியும் முதல்லே இருந்து வா போன்ற நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். 

உத்தரவுகளை இடும் நிலையில் உட்கார வேண்டிய சமூகங்கள் , தங்களின் உண்மை நிலைகளை உணராத வரையில் உத்தரவுகளை எதிர்பார்த்து ஆண்ட வர்க்கங்களின் வாசலில் வரிசையாக நின்று கொண்டு போட்டதைப் பொறுக்கிக் கொண்டு போகும் நிலைதான் தொடரும். 

இனி இதைப் பற்றி சற்று சிந்திக்கத் தொடங்கலாமா? இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு