அடைப்புக் குறிகளுக்குள்அடங்கிப்போக
உபரித் தகவலா நீ?
கடைசிப் பக்கம் வரை
புதிரோடு தொடர
மர்ம நாவலா நீ?
மொத்தக் கருத்தையும்
சுருக்கி அடக்கிய
தலைப்பு அல்லவா நீ!
ஒவ்வொரு பக்கமும்
அர்த்தங்களாம் கவி
தொகுப்பு அல்லவா நீ!
-00-
பிரயோகித்தப் பின்னர்
உரித்து வீச
பாம்புச் சட்டையா நீ?
பாதங்களின் அடியில்
உழைத்துத் தேய
மிதியடிக் கட்டையா நீ?
பாருக்குத் துணியாக்க
பஞ்சை நூலாக்கும்
ராட்டை யல்லவா நீ!
சண்டாளர் சதிமுறித்து
சரியாக்கச் சொடுக்கும்
சாட்டை யல்லவா நீ!
-00-
பின்னொரு சமயம்
பார்க்கலாம் என்று
பேழைக்குள் பதுங்கும்
கோழையா நீ?
இன்னொரு உபயம்
ஈவோரிடம் எதிர்நோக்கும்
இழிந்த பிறவியா நீ?
சூடாறும் முன்பே
சுழட்டி அடிக்கும்
சுத்தியல் அல்லவா
உன் புத்தி!
ஈடேறும் வரை
எண்ணங்களைச் சுமக்கும்
உக்தி யன்றோ
மெய் சக்தி!
-00-
நொடிக்கொரு தரம்
அழிக்கவும் எழுதவும்
சுண்ண எழுத்தா
உன் தலையெழுத்து?
கண்மூடிய பின்னரும்
கம்பீரமாக நிலைக்கும்
கல்வெட்டு அல்லவா
உன்னெழுத்து!
வெம்மையாய் திலங்கும்
சூரியனுக்குள்
வானவில்லொன்று
ஒளிந்திருக்கிறது
உண்மையாய்த் துவங்கும்
காரியங்களுக்குள்
வாழ்க்கையின் வெற்றி
பொதிந்திருக்கிறது
சபீர் அபுசாருக்


