Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள் நூல் – பதிப்புரை 0

அதிரைநிருபர் | November 29, 2020 |

 ‘அதிரை நிருபர்’ வலைத்தளம் www.adirainirubar.in அமைதியின் ஆளுமையாகக் கலை, இலக்கியம், வாழ்வியல், அரசியல், சமுதாய நன்னோக்கு, பொருளாதாரம், சுய சரிதைகள், வரலாற்றுக் குறிப்புகள், விழிப்புணர்வு, ஊர்ச் செய்திகள், நிஜத்தை நிமிரவைக்கும் உண்மைகள் எனப் பல்வேறு பகுதிகளாகத் தொடர்ந்து பதிவுகளை வெளியிடுவதில் தனித்துவத்துடன் நிமிர்ந்து நிற்கிறது.

‘அதிரைநிருபர்’ தளத்தில் வெளியாகும் பதிவுகளை எழுதும் பதிவர்களின் எழுத்தோவியங்களில் உயிரோட்டமும், உணர்வுகளோடு உரசும் உரமும் இருப்பதை அதை வாசிக்கும் வாசகர்கள் நன்கறிவர். சகோதரர் ஜாகிர் ஹுசேன் அவர்களால் ஏராளமான பதிவுகள் எழுதப்பட்டு அதிரைநிருபர் தளத்தில் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக வாழ்வியலை வருடும் எழுத்தோவியங்கள், நகைச்சுவை ததும்பும் கருத்துருவாக்கங்கள் கொண்ட பதிவுகள், தான் பிறந்த, வளர்ந்த, வசிக்கும் மண்வாசனையும் அதன் கலாச்சாரமும் சார்ந்த கட்டுரைகள், இன்னும் நிகழ்காலத்தோடு நிமிர்ந்து நடைபோடும் அவரின் எழுத்துக்கள் உறங்கும் உள்ளங்களையெல்லாம் உசுப்பிவிட்டு விழித்தெழச் செய்யும். மேலும் பல்வேறான விழிப்புணர்வு கட்டுரைகள் பலரை வெகுவாகக் கவர்ந்திருப்பது அவருடைய எழுத்திற்கான வெற்றியே!

வாழ்வியலை வருடும் பதிவுகளின் வெற்றியைத் தொடர்ந்து, தான் சார்ந்த சுய அனுபவத்தின் பலனாய் புத்துயிரூட்டும் விதமான தொடரொன்றை ஒவ்வொரு அத்தியாயத்திற்குமெனத் தனியொரு கரு கொண்டு எழுதி அதனை எளிய வடிவில் புரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் நகைச்சுவையோடு தனது சமயோசித சூழல் பேசும் மொழியில் வடித்திருக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயமும் அதிரைநிருபர் வலைத்தளத்தில் வெளியானதும் வாசகர்களின் கருத்தாய்வுகளும் இந்தத் தொடருக்கு மேலும் வலுசேர்த்தது.
மிகச் சிறந்த சிந்தனையாளர், சமகால சக மனிதர்களோடு அவர்களின் வழக்காடு மொழியிலேயே எழுத்தோடு உரையாடக் கூடியவர், சமுதாய மக்களின் ஒற்றுமையை மற்றும் குடும்ப உறவுகளின் ஒற்றுமையை வலியுறுத்தும் ஏராளமான கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர் சகோதரர் ஜாகிர் ஹுசேன் அவர்கள்.

அதிரைநிருபர் வலைத்தளத்தின் மூன்றாவது வெளியீடாக, எங்கள் நட்சத்திர எழுத்தாளரின் தொடர் ஒன்று புத்தகமாக வெளிவருவதில் நாங்கள் பெருமகிழ்வடைகிறோம்!

வாழ்த்துகின்றோம்!

நெறியாளர்
editor@adirainirubar.in
www.adirainirubar.in

அலைபேசி எண் : 8220071216 என்ற வாட்சப் எண்ணுக்குத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் !

நபி(ஸல்) வரலாறு வினா விடைகள் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | November 25, 2020 |

 இறைத் தூதர்களில் இறுதியானவராகவும் இஸ்லாத்தின் வழிகாட்டியாகவும் வந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்வது முஸ்லிம்களின் மீது முக்கிய கடமையாகும். அவர்களின் வரலாறுகள் தொடர்பாக ஏராளமான நூல்கள் வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் ஆதாரமில்லாத கற்பனைச் செய்திகளே நிறைந்துள்ளன.

இந்தக் குறையை நிறைவு செய்யும் வண்ணமும் நமது குழந்தைகளுக்குக் கேள்வி பதில் வடிவத்தில் எளிமையாகக் கற்றுக் கொடுப்பதற்கும் இந்தத் தொடரை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இத்தொடரைப் படிக்கும் சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை முழுமையாக அறிந்த திருப்தி ஓரளவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இத்தொடரை உங்கள் குழந்தைகளைப் படிக்கச் சொல்லுங்கள். அல்லது நீங்கள் படித்து நபிகளாரின் வரலாறை சொல்லிக் கொடுங்கள்.

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது?

பதில்: திங்கள் கிழமை (ஆதாரம்: முஸ்லிம் 1977)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் எந்த வருடத்தில் பிறந்தார்கள்?

பதில்: கி.பி. 570 என்று சிலரும் கி.பி 571 ஏப்ரல் 21 என்று சிலரும் குறிப்பிடுகின்றனர். அரபி மாதப்படி ரபீவுல் அவ்வல் 12 என்று சிலரும் ரபீவுல் அவ்வல் 9 என்று சிலரும் குறிப்பிடுகின்றனர். (நபி (ஸல்) அவர்கள் பிறப்பு தொடர்பாக வலிமையான ஆதாரங்களுடன் உள்ள எந்தச் செய்தியையும் நாம் அறியவில்லை. வரலாற்று நூல்களில் பிரபலமாக எழுதப்பட்டுள்ளதை இங்கே குறிப்பிட்டுள்ளோம்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன?

பதில்: அப்துல்லாஹ் (ஆதாரம்: புகாரீ 2700 )

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?

பதில்: ஆமினா (ஆதாரம்: முஸ்லிம் 3318)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?

பதில்: அப்துல் முத்தலிப் (ஆதாரம்: புகாரீ 2864)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தையுடன் பிறந்தவர்கள் ஆண்கள் எத்தனை பேர்?

பதில்:
1. ஹாரிஸ்
2. ஸுபைர்
3.அபூதாலிப்
4.அப்துல்லாஹ்
5. ஹம்ஸா (ரலி)
6. அபூலஹப்
7.கைதாக்
8. முகவ்விம்
9. ஸிஃபார்
10. அப்பாஸ் (ரலி) ஆகிய பத்து நபர்களாகும். (ஆதாரம்: இப்னு ஹிஷாம்)

கேள்வி: இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?

பதில்: ஹம்ஸா (ரலி), அப்பாஸ் (ரலி) (ஆதாரம்: அல்இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தையுடன் பிறந்த பெண்கள் எத்தனை பேர்?

பதில்:
1. ஸஃபிய்யா (ரலி),
2. ஆத்திகா,
3. அர்வா,
4. உமைய்யா,
5. பர்ரா,
6. உம்மு ஹகீம் ஆகிய ஆறு நபர்கள். (ஆதாரம்: மஸாயிலு இமாம் அஹ்மத்)

கேள்வி: இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?

பதில்: ஸஃபிய்யா (ரலி), மற்றவர்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்?

பதில்: நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார். (ஆதாரம்: இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தாயார் எப்போது இறந்தார்கள்?

பதில்: நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதை அடைந்தபோது இறந்தார். (ஆதாரம்: இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் யார்?

பதில்: அப்துல் முத்தலிப். அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் (ஆதாரம்: அஸ்ஸீரத்துன் நபவிய்யா லி இமாம் தஹபீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களை வளர்த்த பெண்மணி யார்?

பதில்: உம்மு ஐமன் (ரலி) (ஆதாரம்: புகாரீ 3737)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டியவர்கள் யார்? யார்?

பதில்: 1. ஸுவைபா (ஆதாரம்: புகாரீ 5101), 2. ஹலீமா அஸ்ஸஃதிய்யா (ஆதாரம்: இப்னு ஹிப்பான் 6335)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் சிறு வயதில் என்ன வேலை செய்தார்கள்?

பதில்: ஆடு மேய்த்தல் (ஆதாரம்: புகாரீ 3406)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராவதற்கு முன்னர் குறைஷிகள் கஅபத்துல்லாஹ்வை புதுப்பிக்கும்போது நபி (ஸல்) அவர்களின் வயது என்ன?

பதில்: 35 (ஆதாரம்: தப்ரானீ பாகம்: 18, பக்கம்: 342)

கேள்வி: கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பிக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன உதவியைச் செய்தார்கள்?

பதில்: கஅபத்துல்லாஹ் கட்டுவதற்குரிய கற்களை எடுத்துச் செல்லும் வேலை செய்தார்கள். (ஆதாரம்: புகாரீ 1582)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியின் பெயர் என்ன?

பதில்: கதீஜா (ரலி) (ஆதாரம்: புகாரீ 3816)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் தமது எத்தனையாவது வயதில் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்தார்கள்? அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது என்ன?

பதில்: நபி (ஸல்) அவர்களின் வயது 25, கதீஜா (ரலி) அவர்களின் வயது 40 (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுடன் கதீஜா (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

பதில்: 25 ஆண்டுகள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்கள் உலகத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

பதில்: 65 ஆண்டுகள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்தபோது அவர்கள் கன்னிப் பெண்ணா? விதவையா?

பதில்: இரண்டு திருமணங்கள் முடித்தபின்னர் விதவையாக இருந்தார்கள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்களின் முந்தைய கணவர்களின் பெயர்கள் என்ன?

பதில்:
1. அபூ ஹாலா பின் ஸுராரா,

2. அதீக் பின் ஆயித் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்களுக்கு அன்றைய காலத்தில் இருந்த பட்டப் பெயர் என்ன?

பதில்: தாஹிரா – பரிசுத்தமானவள் (ஆதாரம்: தாரிக் திமிக்ஸ், பக்கம் 109)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் அதிகம் நேசித்த மனைவி யார்?

பதில்: கதீஜா (ரலி) (ஆதாரம் புகாரீ 3818)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு யார், யார் மூலம் குழந்தை பிறந்தது?

பதில்: அன்னை கதீஜா (ரலி), மாரியத்துல் கிப்திய்யா (ரலி) (ஆதாரம்: புகாரீ 3818, 1303, தாரகுத்னீ பாகம்: 4, பக்கம்: 132)

கேள்வி: மாரியத்துல் கிப்திய்யா (ரலி) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த குழந்தையின் பெயர் என்ன?

பதில்: இப்ராஹீம் (ஆதாரம்: புகாரீ 1303)

கேள்வி: நபி (ஸல்) அவர்களது குழந்தை எத்தனை வயதில் இறந்தது?

பதில்: 16 மாதம் (ஆதாரம்: அபூதாவூத் 2772)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் அவர்கள் இறந்த போது நடந்த முக்கிய நிகழ்ச்சி என்ன?

பதில்: சூரிய கிரகணம் ஏற்பட்டது (ஆதாரம்: புகாரீ 1043)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெண் குழந்தைகள் பெயர்கள் என்ன?

பதில்: ஜைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்மு குல்ஸþம் (ரலி), ஃபாத்திமா (ரலி) (ஆதாரம் புகாரீ 516, 5842, 357 அஹ்மத் 525)

கேள்வி: ஜைனப் (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?

பதில்: அபுல் ஆஸ் பின் ரபீவு (ஆதாரம்: திர்மிதீ 1062)

கேள்வி: ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?

பதில்: அலீ (ரலி) (ஆதாரம்: புகாரீ 441)

கேள்வி: அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு என்ன உறவு?

பதில்: நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகன் அலீ (ரலி) அவர்கள் (ஆதாரம்: புகாரீ 441)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் குழந்தைகளில் இறுதியாக இறந்தவர் யார்?

பதில்: பாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்கள் இறந்து ஆறு மாதம் கழித்து இறந்தார்கள் (ஆதாரம்: புகாரீ 3093)

அஹ்மது பாகவி
நன்றி: அல்பாக்கவி.காம்

காலணிகளை வெளியே விடவும்! 0

அதிரைநிருபர் | November 24, 2020 |

அம்மா…!
இந்த
இடிபாடுகளுக்கிடையே
என்னை
இறக்கி வைத்துவிட்டு
எங்கே போனாய்

சுயநலக் கோடரியால்
எல்லா
கிளைகளையும் துண்டித்துக்கொண்டு
ஒற்றை மரமென
ஆகிவிட்ட மனிதக் காடுகளில்
நிழலின்றி அவதியுறுகிறேன்

கத்தியையும் கடப்பாறைகளையும்
கலந்தாலோசிக்க விட்டால்
காயங்கள்தானே மிஞ்சும்?

பாவிக்கும் காவிக்கும்
இயல்பாக அமைந்திட்ட
எதுகை மோனையோடு
எடு கையில்
முனை கூரிய வாளென
குத்திச் சாய்க்கிறது
ஒரு கூட்டம்

அரிதாரம் பூசி
அவதாரமாய்
அபிநயிப்போரிடமோ

அலங்காரமாய்ப் பேசி
அரை மயக்கத்தில் ஆழ்த்துவோரிடமோ
சிக்கித் தவிக்கிறது
சமுதாயம்

அப்பாவிகள் அணிவித்த
மகுடத்தின்
மந்திரக்கோலையும் மிஞ்சும்
மகிமையால்
சொத்துக் குவிப்பிலோ
சுகக் களிப்பிலோ
திளைக்கிறது தலைமை

அலாவுதீன் பூதம் கொண்டு
அழிக்க முனைந்தாலும்
அலிபாபாவின் திருடர்களாய்
மிகைக்கிறார்கள்

துறவி வேடதாரிகள்
இல்லறம் சுகிக்க,
நல்லற இலக்கணங்களாம்
அன்பு
பாசம்
அக்கறை
நேசம் என
மனிதப் பண்புகள் அற்றுப்போய்
இல்லறப் போர்வைக்குள்
ஒற்றைப்பட்டுத் தவிக்கிறது மானுடம்

உட்காயங்களால் அழும்
உன்
சேயை விட்டு
எங்கே சென்றாய் அம்மா

கைகளைத் தூளியாக்கி
மெய்யோடு அனைப்பாயே
அந்த
மந்திரத் தொடுகைக்கு
ஏங்கித் தவிக்கவிட்டு
எங்கே போனாய்

கால் நீட்ட இடம் இன்றி
கை விரிக்க வலம் இன்றி
நிமிரவோ திமிறவோ
வழியின்றி
குறுகிக்கிடந்த கருவரையில்
உண்ட சக்தியையும்


Sabeer Ahmed

தேனீ உமர்தம்பி – இணையத்தில் இணைப்பிலே ! 0

அதிரைநிருபர் | November 23, 2020 |

கணினித் தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்க அடிக்கல் நாட்டிய மிக முக்கியமானவர்களில் ஒருவர்தான், அதிரையின் மைந்தன் தேனீ உமர்தம்பி அவர்கள்!

வாழும் நாட்களில் வீசிய வசந்தம் அவரின் இறப்புக்குப் பின்னர்தான் பாரில் பரவி வியாபித்தது.

சிறு வயதிலிருந்தே அதிகமதிகம் அவர்களோடு நெருக்கமாகவும் பிரியமாகவும் பழகியவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் அதற்கான சிரத்தையும் சிலிர்க்க வைக்கும் என்பதே. அதோடு, அதன் பின்னர் கிடைக்கும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதோடு இருக்காமல் எப்படி அதனை எட்டிப் பிடித்தார்கள் என்று விளக்கவும் செய்வார்கள்.

1994ம் வருடம் அமீரகத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் இணையம் பரவ ஆரம்பித்த காலங்களில் தனது வீட்டில் இணணயத் தொடர்பைப் பெற்று அங்கிருந்து கொண்டு அவரது சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் அவரவர்களின் அலுவலக கணினிக்கு ஏற்படும் பிணிகளுக்கு மருத்துவம் செய்வார்கள்.

இன்றைய கால கட்டத்தின் அசுர வளர்ச்சியின் பலனாய் கணினிக்குள் ஊடுருவ எத்தனையோ மென்பொருள்கள் வந்து விட்டன, ஆனால் அப்போது இருந்தச் சூழல் முற்றிலும் வேறுமட்டுல்ல தொழில்நுட்பத்தில் எல்லாமே புதிது.

2002 வருடம் துபாயிலிருந்து விடைபெற்று ஊருக்குச் சென்ற இரண்டொரு மாதங்களிலேயே அதிரையில் இணையத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இங்கிருக்கும் (துபாய், மஸ்கட்) கணினிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் காய்ச்சலை சரிபார்க்கவும் செய்தார்கள் அதோடு அதன் மேம்பாட்டையும் சீரமைத்து தந்தார்கள்.

அதிரைச் சகோதரர்களின் கணினி (தமிழ்) தொழில் நுட்ப வளர்ச்சியில் மட்டுமல்ல இணைய கணினித் தமிழ் வளர்ச்சியில் அவர்களின் பங்கும் போற்றத்தக்கதாக அமைந்திருப்பது சந்தோஷப்படக்கூடிய விஷயம்.

இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நேற்று முன் தினம் பெங்களூருவில் நடந்தது, அப்போது சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது தேனீ உமர்தம்பி அவர்கள் 17 வருடங்களுக்கு முன்னால் இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இங்குச் சார்ஜாவில் நடந்து கொண்டிருக்கும்போது அவர்களின் (துபாய்) வீட்டுக் கணினியில் போட்டுக் காட்டிய புள்ளி விபரங்களும் கிராஃபிக்ஸும் இன்றும் அப்படியே பசுமையாக நினைவுக்கு வந்ததை மறைக்க முடியவில்லை.

இப்போதைய வளர்ச்சியில் இருக்கும் மென்பொருள்களின் உதவியால் அப்படியே மைதானத்தில் பார்க்கும் வீரர்களின் செயல்களைச் செயற்கையாகக் காணொளி போன்று செய்ய முடியும் ஆனால் அன்றே அவர்கள் ஒற்றை வரிக் கோட்டில் (single line draw) வண்ணங்களில் செய்து காட்டினார்கள்.

அதன் தொடர்ச்சியாக அவர்களை நினைவுகூறலாமே என்று மனதுக்குள் எண்ணம் தோன்றியது அதன் விளைவே இந்த ஒலிப்பேழை காணொளிப் பதிவு உங்களனைவரின் பார்வைக்காகவும் நினைவில் நிழலாடவும்.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2010/jun/21/honour-forgotten-father-of-tamil-computing-125174.html#

OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 0

அதிரைநிருபர் | November 07, 2020 |

 

ஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல 4

அதிரைநிருபர் பதிப்பகம் | June 15, 2020 |


இந்த பதிவு எந்த ஒரு தனியார் பள்ளியையோ குறை கூறுவதற்காக அல்ல, எதார்த்த நிலையை எடுத்துரைப்பதற்காக மட்டுமே.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல..

LKG வகுப்பிற்கும் ஆன்லைன் வகுப்பாம்... என்னா கொடுமை?

சில வீடுகளில் ஒரே ஒரு ANDRIOD மொபைல் போன் மட்டுமே இருக்கும், பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் 2 அல்லது 3 பேர்கள் இருக்கலாம். இச்சூழலில், ஒரே நாளில் 2 அல்லது 3 பேருக்கும் ஆன்லைன் வகுப்புகளாம். இருப்பது ஒரு போன் எப்படி 2 அல்லது 3 மாணக்கர்களும் ஆன்லைன் வகுப்பில் பங்கெடுப்பார்கள்? இதெல்லாம் ஆன்லைன் வகுப்புக்கு அழைப்புவிடுக்கும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை..

இது இருக்கட்டும்...

அதிரை போன்ற ஊர்களில் ஏற்கனவே இன்டர்நெட் வேகம் புல்லட் டிரைன் வேகமா?

அதிரையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என்பது தெரியாதா?

அதிரையில் உள்ள பெரும்பாளான வீடுகளில் பிள்ளைகள் படிப்பதற்கு என்ற சுமூகமான சூழல், ஏற்பாடுகள் உள்ளதா? (குறிப்பாக TABLE, CHAIR).

அநேக மாணாக்கர்களின் தந்தையர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். ஆன்லைன் வகுப்புகளை அந்த 2 அல்லது 3 பிள்ளைகள் கவனிக்கிறார்களா, என்பதை படிப்பறிவில்லாத அதிரை தாய்மார்கள் முறையாக கண்கணிப்பார்கள் என்பது கேள்விக்குறியே.

தற்போதைய ஆசாதாரண சூழலில் எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கு, ஏன் தனியார் பள்ளிகள் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்? என்பது புரியவில்லை.

அனுபவரீதியாக சொல்லுகிறேன்..

கொரோனா தொற்றுநொயின் காரணமாக பள்ளிக்கூடகங்கள் உலகமெங்கும் மூடியிருக்கும் தருணத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளி வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதும், அரசாங்கத்தின் அறிவுரைப்படி, அங்குள்ள தொலைதொடர்பு நிறுவனங்கள் (ETISALAT & DU) இலவசமாக இன்டர்நெட் கொடுத்ததோடு அல்லாமல், பள்ளி மாணவர்களின் வீடுகளில் உள்ள இன்டர்நெட் வேகத்தையும் அதிகரித்து கொடுத்துள்ளார்கள். இப்படி இருந்தும், பிள்ளைகள் ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்துகிறார்களா என்ற கண்கானித்த பெற்றோர்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

ஆன்லைன் வகுப்புகள், அரசாங்கம் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவி இல்லாமல் முறையாக நிறைவேற்ற குறிப்பாக தமிழ்நாட்டில் சாத்தியமில்லை.

10ம் வகுப்பு & 12ம் வகுப்புகளுக்கு அன்லைன் வகுப்பு என்பதையாவது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் LKG, UKG, 1,2,3,4,5,6,7,8,9 வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள இயலாதவையே..

மொபைல் போன்களை பிள்ளைகளிடம் கொடுக்காதீர்கள, கொடுக்கவே கொடுக்காதீர்கள் என்று ஒவ்வொரு பெற்றோர் சந்திப்புகளிலும் அடிக்கடி மாணாக்கர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, இப்போது ஓவ்வொரு பிள்ளைகளுக்கும் மொபைல் போனை தயவு செய்து கொடுங்கள் என்று அறிவுருத்துவது, எங்கையோ இடிக்கிறதே..

சாத்தியக்கூறுகள், நடைமுறை சிக்கல் இவைகளை வைத்து முடிவு எடுப்பதே நல்ல முடிவாக இருக்கும். ஒரு சில வசதியுள்ளவர்களின் நிலையை வைத்து பொதுவான நிலைபாட்டுக்கு வர வேண்டாம்.

தற்போது இருக்கும் பொருளாதாரச் சூழலில் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்கக்கூடிய நிலையில் பல குடும்பங்கள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளுமா தனியார் கல்வி நிறுவனங்கள்?

ஆலோசனை: அதிரை FMல் நேரம் குறிப்பிட்டு பள்ளிப்பாடங்கள் நடத்தலாமே..

m.Thajudeen

நடையே கடமையானதே ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 15, 2020 | ,


“நான் வாக்கிங் போகும்போது கச்சலை அவிழ்த்து விட்டு,சலாம் சொல்லிக் கடக்குமளவுக்கு மதிப்பிற்குரிய வாத்தியார்களின் ராஜபாட்டை நடைப் பயிற்சி தொடர்கிறதா?” என்று, உமர் வரலாறு ஆக்கத்துக்குக்   'கமென்ட்’எழுதிய கவிஞர் சபீர் கேட்டிருந்தார். அவரின் நினைவூட்டலுக்குப் பின், ஹாஜா முகைதீன் சாரோடு என் வீட்டில் நடந்த உரையாடலுக்குப் பின்,சில ஐயப்பாடுகளும் தொடர்ந்தன!

நான் பட்டுக்கோட்டையில் ‘பிஸ்மி ஸ்டேஷனரி’ வைத்திருந்தபோது, காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரில் உள்ள ‘ஷப்னம்’ கடைக்குப் பிளாஸ்டிக் ஃபைல்களும் நோட்டுப் புத்தகங்களும் சப்ளை செய்து கொண்டிருந்தேன். கடையை நடத்திக் கொண்டிருந்தவர் மாற்று மதத்தைச் சேர்ந்த, மாற்றுக் குறையாத் தங்கம்! அவர் எனக்குப் பணத்திற்கு பதிலாக அவரின் மென்மையான பேச்சையும் குணத்தையும் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன்! சில நாட்களுக்குப் பிறகு நான் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ‘பாஸ்போர்ட்-விசா’ தேவையில்லாத இடத்திற்கு எங்களைத் தவிக்க விட்டுச் சென்று விட்டார் என்று! எங்கள் கணக்கை முன்னரே முடித்துவிட்ட அவர், தன் கணக்கையுமல்லவா முடித்துக் கொண்டார்!

ஒருமுறை நான் பட்டுக்கோட்டைக்குச் செல்வதற்காக சேர்மன் வாடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது,என் அருகில் காரை நிறுத்தி, “அஸ்ஸலாமு அலைக்கும். ஏறிக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி ஏற்றிச் சென்று என்னைப் பட்டுக்கோட்டையில் விட்டவர்தான், சப்னம் கட்டிடத்தின் சொந்தக்காரர் என்று அறிந்து கொண்டதுடன், அவர் என் மாணவர் என்றும் அறிந்து பெருமை அடைந்தேன். அவர் சற்று சீரியஸ் ஆகக் காணப்பட்டார்! ஆனால் அவர் பெயர் அப்போது எனக்குத் தெரியாது! இப்போது ஹாஜா முகைதீன் சாரோடு நடந்த உரையாடலுக்குப் பிறகு, ஷப்னங்களின் சொந்தக்காரரும் ‘அதிரைநிருபர்’ மூலம் தன் உண்மை சொரூபத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சபீரும் ஒருவர்தானா? என்ற ஐயம், நடைப் பயிற்சி போல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஐயம் கொண்ட என் ஐயத்தைப் போக்க கவிஞர் சபீர் மேற்கண்ட விடையைத் தந்தார் கமெண்ட் மூலம்!

கவிஞர் சபீர் எனக்கு வாக்கிங்கை நினைவூட்டியதால், நேற்று போய் வந்தேன்! “அஸ்ஸலாமு அலைக்கும்! நல்லா இருக்கிறீங்களா?” என்று கேட்டுக் கொண்டே மூன்று பெண்கள் என்னைக் கடந்து சென்றார்கள்! நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் வாக்கிங் வருவது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கிறது போலும்.

பெண்கள் வாக்கிங் போவது மிக நல்ல பழக்கம். அதுவும் ஹஜ் போக இருக்கும் பெண்களுக்கு மிக மிக அவசியம்! ஆனால்,வாக்கிங்கின் போது டாக்கிங் அனாவசியம். (அ)வசியம் தேவைப் பட்டால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்! நடைப் பயிற்சி செய்யும் போது, பேச்சுக்கு நாமே தடை போட்டுக் கொள்ள வேண்டும்! இறைவனை நினைவு கூர்ந்தவர்களாக, தலை குனிந்தவர்களாக, விரைந்து நடந்து செல்ல வேண்டும்! அப்படிச் செய்தால் கண்டிப்பாக உடல் நலமும் மன நலமும் மிக நன்றாக இருக்கும்!


ஹஜ் கடமையைச் செய்கிறவர்களுக்கு, மக்காவை அடைந்ததிலிருந்தே வாக்கிங் துவங்கி விடுகிறது! வேறு எதையும் நோக்காமல், இறைவனின் நினைவுடன், தலை குனிந்தவர்களாக கஅபாவை நோக்கி நடந்து, அருகில் சென்று கஅபத்துல்லாவை நிமிர்ந்து பார்க்கவேண்டும். “இறைவா நான் இப்போது கேட்கும், இதற்குப் பின் கேட்கப் போகும், இதற்கு முன் கேட்டதுமாகிய துஆக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வாயாக”என்று துஆ செய்ய வேண்டும்.இனி நடைதான்! எங்கும் நடை, எதிலும் நடை! கஅபத்துல்லாவை ஏழு முறை நடந்து சுற்ற வேண்டும்! தொழுகைக்குப் பின் சபா - மர்வா மலைகளுக்குச் செல்ல வேண்டும்! சபா - மர்வா நான்கு முறைகளும், மர்வா - சபா மூன்று முறைகளும் நடக்க வேண்டும்! தலை முடி நீக்கியவுடன் அல்லது பெண்களுக்கு சிறிது முடி வெட்டப் பட்டதுடன் உம்ரா நிறைவேறிவிடும்! உற்றார், உறவினர், நண்பர்கள் யாருக்கு வேண்டுமானாலும், இரவு பகல் என்று பாராமல் எப்போது வேண்டுமானாலும் உம்ரா செய்யலாம்! தடையில்லா நடைகள்! இந்நடை தோற்கின் எந்நடை வெல்லும்?

கடமையான முதல் உம்ராவை முடித்த பின், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு நடந்து சென்று அங்கே தங்க வந்துவிட வேண்டும். அங்கிருந்து மினாவுக்குச் செல்கிற வரை ஒவ்வொரு நாளும் ஐந்து முறை கஅபாவுக்கு நடந்து சென்று தொழவேண்டும். பின்னிரவுத் தொழுகைக்காக இரவு 3:30 மணிக்கு பாங்கு சொல்லி விடுவதால், ஒரு நாளின் நடைப் பயிற்சி அப்போதே தொடங்கி விடுகிறது! தங்குமிடம் கஅபாவுக்கு அருகில் இல்லாவிட்டால் தினமும் நடக்கும் தூரம் அதிகமாகிவிடும்!

மினாவிலிருந்து அரஃபாவுக்கும்,அரஃபாவிலிருந்து முஜ்தலிஃபாவுக்கும், முஜ்தலிஃபா விலிருந்து ஜம்ராவுக்கும் டாக்சி, பஸ் பயன்பட்டாலும் அங்கே நடைகளே ஆக்கிரமிக்கின்றன. கஅபத்துல்லாஹ்வை வலம் வருவதிலும், சஃபா மர்வாவிலும் நடைதான்! இதற்குப்பின் குர்பானி கொடுத்து, மீண்டும் தவாஃபு செய்துவிட்டால், ஹஜ்ஜுக் கடமை நிறைவேறிவிடுகிறது! ஹஜ் கடமையைச் செய்யும்போது சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை தாமாகவே குறைந்து விடுகின்றன! அங்கே பெண்களுக்கு மத்தியில் ஷைத்தான் புகுந்து அரசியலை முடுக்கி விட்டு விடுவான். அரசியலில் மூழ்கிவிட்ட நம் மக்களுக்கு இது பொரி அரிசி வாசனையாகப் போய் விடும்! இதிலிருந்து மிகவும் ஒதுங்கி இருக்கவேண்டும்!

அகம் புற வாழ்க்கைக்கும், இகம் பரம சுகத்திற்கும் ஹஜ்ஜின் நடைப்பயிற்சி மிகவும் உறுதுணையாகவும் பெரும் பயனாகவும் இருக்கிறது,

இந்த ஆண்டு ஹஜ்ஜில் கலந்து கொள்ளும் அனைத்து ஹாஜிகளுக்கும், உலகின் பல பாகங்களிலும் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் அதிரைநிருபர் மற்றும் அதிரை பிபிசி  வலைக் குழுமங்களின் சார்பாக உமர்த் தென்றல், நன்னெறி நின்று, நபி வழி பயின்று தன் தியாகப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது!

எவ் வழி நல் வழி.
அவ் வழி நம் வழி!
வாழ்க மனித குலம்!
வாழ்க மனித நேயம்!

வாவன்னா
2011-ம் வருடம் ஏப்ரல் 11ம் தேதி பதிக்கப்பட்டதை மீள்பதிவாக !

சமுதாயத்தின் உண்மையான முகம் எப்படி இருக்க வேண்டும்? 13

அதிரைநிருபர் பதிப்பகம் | June 07, 2020 |


-மீள்பதிவு-

எழுத்துக்களையும், நல்ல எண்ணங்களையும் நேசிக்கும் ஒரு நேசரிடம் கடந்தவாரம் உரையாடிக்கொண்டிருந்தபோது அடுத்து என்ன தலைப்பில் பதிவு தரப்போகிறீர்கள் என்று கேட்டார். இன்னும் முடிவு செய்யவில்லை தோலுரித்துக்காட்டவேண்டியவை அதிகம் இருக்கின்றன - எதைப்பற்றி என்று முடிவு செய்யவில்லை – வேண்டுமானால் என்னை “வம்பில் மாட்டிவிடாத” ஒரு தலைப்பாக நீங்களே தாருங்களேன் என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர் தந்த தலைப்புதான் இந்த தலைப்பு. இந்த தலைப்பை தந்தவரைப்பற்றிய விடுகதைதான் இந்த ஆக்கத்தில் வாசகர்களுக்கான என் கேள்வி. (எனக்கும் கேள்வி கேட்க ஆசை இருக்காதா?)

தலைப்புக்கு சம்பந்தப்பட்ட சங்கதிகளை விவரிக்கும் முன்பு தலைப்பு தந்தவரைப்பற்றிய விடுகதையை கூறிவிடுகிறேன். இவர் ஒரு ரசிகமணி. “ பொடி” வைத்துப்பேசும் அதிரையின் வகையறாவில்  வந்த வல்லவர். கை  சொடுக்கும் நேரத்தில் கவிதை வடிப்பவர். பாராட்டுவதில் பாரிவள்ளல். நாலும் தெரிந்த நல்லவர் என்பதைவிட “பத்து”ம் படித்த பண்பாளர். தொப்பி போடுவதைப்பற்றி விவாதங்கள் நடைபெறும் நாட்டில் தலையில் மகுடம் சூடிக்கொண்டவர். இவருக்கு பிடித்த பானம் பாதாம் “கீர்” என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இதற்குமேல் அடையாளங்கள் சொல்ல விதிகள் தடுக்கின்றன. விடுகதைக்கு பதில் கூறி பரிசை (அவரிடமிருந்தே) பெற்று செல்லலாம். இப்போது தலைப்புக்குப்போவோம்.

சமுதாயத்தின்  உண்மையான முகம் எப்படி இருக்க வேண்டும்.? எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்? நான் குறிப்பிடப்போவது  சில நடப்புகள், உண்மைகள், வரலாற்று சம்பவங்கள், திட்டங்கள் மட்டுமல்ல என்னுடைய ஆசையும் இதில் அடங்கி இருக்கும்.

பொதுவாக எழுதுபவர்கள் தங்களின் ஆசையை தங்களின் எழுத்தில் ஏற்றி எழுதுவது பழக்கமான ஒன்றாகும். அந்த ஆசைகள் பலிக்காத ஆசைகளாகக்கூட இருக்கலாம். ஆனாலும் பொதுநலனுக்கான ஆசைகளே. உதாரணமாக ஒரு கவிஞர்  பேராசையாக எழுதினார் இப்படி ,

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும் 

என்று எழுதினார்

இவைகள் நடக்குமா? நடக்கலாம் நடக்காமல் இருக்கலாம்  என்று எழுதியவர்களுக்குத்தெரியும். ஆனாலும் கவிஞர்களின் ஆசை அப்படி. இவை போல்தான் எழுதுபவர்களின் ஆசைகளும். அந்த அடிப்படையில் நானும் என்னுடைய ஆசைகளையும் சேர்த்தே எழுதுகிறேன். சில ஆசைகள் நடக்காத பேராசைகளாக இருக்கலாம். ஆனால் பல ஆசைகளோ முயன்றால் – இணைந்தால்- ஈடுபட்டால் நடக்கக்கூடிய – நிறைவேறக்கூடிய ஆசைகளே.

மனித சமுதாயம் என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் வரையறைக்குட்பட்ட, ஒரே வகையான அரசியல் சட்ட திட்டங்களுக்குட்பட்டு  வாழும் பலதரப்பட்டவர்கள் ஒன்றிணைந்து கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வாழ்வது என்றெல்லாம் சமூக அறிவியலில்  ( SOCIAL SCIENCES) கூறப்பட்டுள்ள விளக்கங்களை புரிந்துகொள்ளமுடியாமல் முடியைப் பிய்த்துகொள்ளவேண்டியதில்லை. நமக்குப் புரியும்படி சொல்லப்போனால் நம்மைப்பற்றி, நம்மைச்சுற்றி, நம்மைப்போல, நம் காலத்தில், நம் நாட்டில், நம்முடன் வாழ்பவர்களுடன் இணைந்து வாழும்  கூட்டம்தான் நமது சமுதாயம்  என்று சிம்பிளாக புரிந்து கொண்டால் போதும். இது நம் கூட்டம், நம்முடன் வாழும் கூட்டம். நம் கூட்டத்தின் உண்மை முகமும் நிலையும் எப்படி இருக்கவேண்டும்?

ஒரு சமுதாயத்தின் உண்மை முகம் எப்படி இருக்க வேண்டுமென்று கணிக்கும் முன்பு- ஒரு தனி மனிதனுடைய உண்மை முகம் எப்படி இருக்க வேண்டுமென்று நாம் விரும்புவோம்? தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம். ஒரு தனி மனிதனின் ஊண் முகம் ( PHYSICAL FACE)  எப்படி இருக்கவேண்டும்? பல் நீட்டி, மூக்கொழுகி, நாக்குத்தொங்கி, உதடு பிளந்து , காது சிறுத்து, கபாலம் பெருத்து, கண்கள் தள்ளி இப்படி ஏழேகால் லட்சணத்தில் தனி மனிதன் இருந்தால் காண சகிக்குமா? (இறைவனின் படைப்பையும், உடல் ஊனமுற்றவர்களையும் நான் பழிப்பதாக தயவு செய்து யாரும் கருதிவிட வேண்டாம். தலைப்புக்கு ஏற்றபடி சில விளக்கங்களை நான் அளிக்கவேண்டியிருப்பதாலேயே இதைக்குறிப்பிடுகிறேன். ).

தனி மனிதனின் அங்க   அவயங்களில் எப்படி குறைபாடுகள் இல்லாமல் காண விரும்புவோமோ அப்படித்தான் சமுதாயத்தையும் குறைபாடுகள் இல்லாமல் காண விரும்புவோம். தனிமனித குறைபாடுகள் அவனது உடல் உறுப்புகளிலும் , உள்ளத்திலும் என்று கருதுவோமானால் , சமுதாயத்தின் குறைபாடுகளை அப்படிப்பட்ட அவயக்குறைபாடுகளோடு உதாரணமாக ஒப்பிட்டு பல் நீட்டியை வறுமைக்கும், மூக்கொழுகியை  முட்டாள்தனத்துக்கும், உதடு பிளந்தவனை ஊழலுக்கும், கபாலம் பெருத்தவனை வேலையின்மைக்கும், & so on  ஒப்பிட்டுக்கொள்ளலாம். 

தனி மனிதனின் சிரித்த, செழித்த முகம் எப்போது வெளிப்படும்? அகமது மலர்ந்தால்தான் முகமது மலரும். அகம மலரவேண்டுமென்றால் , அடிப்படை அமைப்புகள் மட்டுமல்ல , வயிறும் நிறைந்து இருக்க வேண்டும். சமுதாய மக்களின் மனமும் வயிறும் நிறைந்திருக்க வேண்டுமென்றால் வாழ்க்கை  பயமற்ற, பதட்டமற்ற வறுமை இல்லாததாக இருக்க வேண்டும். ஆகவே ஒரு சமுதாயத்தின் உண்மை முகம் சிரிப்பும், செழிப்புமாக இருக்க வேண்டுமானால் அந்த சமுதாயம் வறுமையில் உழலக்கூடாது. சமுதாயம் வறுமையிலே உழலக்கூடாது என்றால் என்ன செய்யவேண்டும்? சமுதாய மக்களுக்கு தங்களது அவசியங்களை தட்டுப்பாடு இல்லாமல் நிறைவேற்றிக்கொள்ள வருமானம் வரவேண்டும். பொருளீட்ட வேண்டும். வேலை செய்வதன் மூலமும், தொழில் செய்வதன் மூலமும் பொருளீட்டவேண்டும்; அதற்குரிய வாய்ப்புக்களும் - நிர்வாகமும் வேண்டும்.  . உழைப்பு இல்லாமல் வருமானமும் வராது ; வறுமையும்  ஒழியாது.

‘காஞ்சி புரத்திலே போய் காலாட்டிகொண்டிருந்தால் கஞ்சி கிடைக்கும்’ என்று பழமொழி உண்டு. இதன் பொருள் காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டு வெறுமனே உட்கார்ந்திருந்தால்  வேளாவேளைக்கு உணவு நம்மைத்  தேடி திண்ணைக்கு வரும் என்பதல்ல. காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. அங்கு போய் நெசவுத்தறியில் காலை ஆட்டி வேலை செய்தால் உனக்கு கஞ்சி குடிக்க வருமானம் வரும் என்பதே பொருள். ‘ வாழை ஒன்று தென்னை போல வளர ஆசை கொள்ளலாம். ஆழமான வேர்களின்றி அது நடக்ககூடுமா?” – ( கண்ணதாசன்). ஆகவே வறுமை ஒழிய வேண்டுமானால் உழைப்பு பிரதானம். சமுதாயத்தின் முகம் சிரித்தமுகமாக இருக்க வேண்டுமானால் உழைக்கும் வாய்ப்புக்களும், வேலைவாய்ப்புகளும் அவசியம்.

வேலை என்பது சும்மா கிடைத்து விடுமா? அதற்கு கல்வி வேண்டும். ஆகவே சமுதாயத்தின் உண்மை முகம் கல்வி அறிவால் மலர்ந்த முகமாகவும்  இருக்க வேண்டும்.  ஒரு சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சி கல்வியின் வளர்ச்சியின் அடிப்படையிலேதான் அமையும். கல்வியில் வளராத சமுதாயம் செல்வங்களை உற்பத்தி செய்ய இயலாது. செல்வ வளங்களால் மட்டும் சூழப்பட்டு கல்வி வளத்தில்  பின் தங்கிய சமுதாயம் தனது செல்வ வளங்களை பாதுகாத்துக்கொள்ளும் அறிவின்றி – கற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி தனது வளங்களை சூறையாட விட்டு அடிமைப்படும். தென் ஆப்ரிக்காவின் வரலாறும்,   ‘அபார்தீட்’ கொள்கையால் அது அடிமைப்பட்ட அவலமும் இந்த கருத்துக்கு சமீபகாலச் சான்றாகும் .

கல்வி வளரவேண்டுமானால் கல்வியை ஒரு குடுவைக்குள் போட்டு அடைத்து கடலுக்குள் வீசி இயன்றவர்கள் நீந்திப்போய் எடுத்துக்கொள்ளுங்கள் என்றால் வலிமை உடையோர் நீந்தியும், கப்பல், படகு  போன்ற கருவிகள்  படைத்தோர் கடல் தாண்டியும் பெற்றுக்கொள்வார்கள். எல்லோருக்கும் கல்வி இல்லை என்றால் ஒரு குறிப்பிட்ட வலிய சமூகம் மட்டுமே வளரும் . ஒட்டு மொத்த சமுதாயமும் வளராது. அதற்கு கல்வியை பரவலாக்க வேண்டும். இல்லாதோரும் கற்றுக்கொள்ளும் வகையில் முறைகளை எளிதாக்க வேண்டும். அதற்குத்தான் சாதிவாரியாகவும், இனவாரியாகவும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட மக்களும் உயரும் வகையிலும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று இயக்கங்கள் காணுகிறார்கள். ஆகவே கல்வி வளரவேண்டுமானால் சமத்துவமும் வளரவேண்டும். சமுதாயத்தின் உண்மை முகத்தில் சமத்துவத்தின் சாயல் வேண்டும்.

சமத்துவம் எங்கிருந்து வரும்? நம்மை ஆளும் கருத்துக்களாலும், நாம் பின்பற்றும் மார்க்கங்கள் போதிக்கும் நெறிமுறைகளாலும்தான் தான் நம்மிடையே  சமத்துவம் வரும். மக்களில்- சமுதாயத்தில் உயர்வுதாழ்வு கற்பிக்கும் கொள்கைகளைப் பற்றி பிடித்துக்கொண்டிருப்போரை நம்மை ஆளவிட்டால் சமத்துவம் வளருமா? ஆண்டான், அடிமை பேதங்கள் அரசின் கொள்கைகளானால் அனைவரும் எப்படி ஒரு சமுதாயமாக , ஒன்றுபட்டு வாழ முடியும்? வளர முடியும்? சாதிக்கொரு சங்கமும், சாதிக்கொரு கட்சியும் ஒரு சமுதாயத்தில் முள் செடிகளாக வளர்ந்தால் சமத்துவம் எப்படி உண்டாகும்? ஒரு சமூகத்துக்குள்ளேயே ஓராயிரம் பிரிவுகள் இருந்தால் உருப்படுவது எப்படி?

எத்தனை சட்டங்களை சந்தைக்கடை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினாலும் அடிப்படையான மார்க்க சட்டங்களைக்கொண்டு சமுதாய மக்களை ஆளும்வரை சமத்துவம் என்பது இருட்டு அறையில் குருட்டுக் கிழவனால் தேடப்படும் கருப்புப்பூனைதான். அதை விட்டு தனது ஐந்து கடமைகள் என்ற ஐந்து தூண்களிலும் சமத்துவத்தின் சாரத்தைப் பதிவு செய்திருக்கிற இஸ்லாத்தைப் பின்பற்றினால் இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தின் உண்மை முகம் நெற்றியில் தோன்றும் தொழுகைத் தழும்புகளுடன் முழு நிலவாக பிரகாசிக்கும்.

இஸ்லாத்தை ஏற்க, யாராக இருந்தாலும் கலிமா சொல்; ஏழை பணக்காரன் இணைந்து நின்று தொழுது கொள்; இல்லாதவன் பசியை இருப்பவனும் சமமாய் உணர நோன்பிரு; இருப்பவர்கள் தங்களின் செல்வத்தில் இல்லாதோர்க்கு வழங்கிவிட ஜகாத் கொடு ; கரு நிறத்தின் ஹபஷியரும், காதல்மிகு பார்சியரும், பெருஞ்சினத்தின் அரபியரும் தோளோடு தோள் நின்று உலகமக்கள் எல்லாம்  சமத்துவமாய் ஒன்று கூடிநின்று வணங்க ஹஜ் செய் என்று தனது ஐந்து கடமைகளில் சமத்துவத்தை – சகோதரத்துவத்தை அடிப்படையாக வைத்தது இஸ்லாம்.

மனிதருக்கே நீதி தராத மனு நீதி தர்மங்களும், பிறப்பிலேயே பேதம் கற்பிக்கிற ஆரிய , வைசிய, பார்ப்பன, வர்ணாசிரம தர்மங்களும் அரசாலும் கொள்கைகளின் அங்கமாக இருந்தால் சமுதாயத்தின் உண்மை முகம் எப்படி மலர்ச்சியாக இருக்கும்? வறுமை ஒழியவேண்டும், வாய்ப்புக்கள் பெருகவேண்டும், செல்வங்கள் சிறப்புடன் நிர்வகிக்கப்படவேண்டும், கல்வி வளரவேண்டும், பண்புகள் தழைக்க வேண்டும், சமத்துவமும், சகோதரத்துவமும் தழைக்கவேண்டுமானால் ஆளும் நெறிகள் – அரசின் சட்டங்கள் அல்லாஹ் வகுத்ததன் அடிப்படையில்  இருக்க வேண்டும். இஸ்லாத்தின் நெறிமுறைகள் கோலோச்சுமானால்  சமுதாயத்தின் உண்மை முகம் செழித்த முகமாக காணப்படும். இதை நான் கூறவில்லை. ஹஜரத் உமர் உடைய ஆட்சி வரவேண்டுமென்று இந்த இந்திய நாட்டின் தேசத்தந்தை என்று கூறப்படும் காந்தி கூறினார்.

இந்தக் கருத்தை,  காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற மலிவான கருத்தின் அடிப்படையில் சுட்டவில்லை.  இன்றைக்கு உலகம் இந்த உண்மையின்பால் திரும்பிக்கொண்டிருப்பதை நிகழ்கால வரலாறு எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கிறது. உலக நாகரிகம் வளர்ந்தோங்கிய நாடுகளின் ஆண்கள் அதிகமல்ல – படித்த பெண்கள், கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டு இருககிறார்கள்.  (ஆதாரம்: Association of Statisticians of American Religious Bodies (ASARB) . யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் இன்றைய நிதர்சனம். மாஷா அல்லாஹ்!. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. எண்ணற்ற “மோடி” மஸ்தான்கள் “சோ” ம்பேரிகள், பாப்பா  காமதேவ்கள், அதர்மவானிகள், “சிறு” மூர்த்திகள், “காம” கோபாலர்கள்   கை கோர்த்து இஸ்லாத்தை அழிக்க நினைத்தாலும் இறைவனின் அருளால் திட்டங்கள் தவிடு பொடியாகிக்கொண்டு இருக்கின்றன என்பதுதான் இன்றைய வரலாறு.

நாம் விரும்பும் சமுதாயத்தின் உண்மை முகம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பது என் ஆசை. வறுமையற்ற , தனி மனித சுதந்திரம், மதிக்கப்படும் தனி மனிதனுடைய சுய மரியாதை , தனி மனித ஒழுக்கம், அடக்குமுறை இல்லாத அரசியல் அமைப்பு,  இறை நம்பிக்கையுடன் ஒருவரை ஒருவர் நம்பியும் மதித்தும் வாழும் மக்கள்,   மனிதரை துதிபாடாத மக்கள் , அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்பு மற்றும் உறுதி, பரவலான பொருளாதாரம் , சுயநலம் ஒழிந்த ஆட்சியாளர்கள், சுரண்டல் இல்லாத வர்த்தகம், தவறு செய்தால் நாளை மறுமையில் தண்டிக்கப்படுவோம்,  என்ற இறை அச்சம் ஆகிய அனைத்தும் அமைந்ததாக அந்த முகம் இருக்க வேண்டும். இந்த தன்மைகள் அற்ற சமுதாயத்தின் முகம் உண்மை முகமல்ல ; அழகு நிலையம் சென்று அலங்கரிக்கப்பட்ட  பொய்மையின் கூடாரமாகும். கணத்தில்  கலைந்துவிடும். இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று வாழும் சமுதாயத்தின் முகம் தான் உண்மையான முகமாக இருக்க முடியும். அதற்காகவே அழைப்புப்பணியில் அனைத்து சாராரும் இயக்கங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

திருமறை கூறுவதன்படி ,
“காலத்தின்மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்துக்கொண்டும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத்தவிர" ( 103: 1-3)

-இப்ராஹீம் அன்சாரி.

குறிப்பு: கட்டுரை தந்த காரத்தில்  போட்டிக்கான கேள்வியை மறந்துவிடாதீர்கள். 

விரைவில் உணர்ச்சிபூர்வமான, நற்சிந்தனைக்கு முத்தாய்ப்பாக புதிய அலசல் தொடர் துவங்க இருக்கிறது...

காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அரசியலும் ஆளுமையும் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | June 06, 2020 |

இந்திய அரசியல் வரலாற்றை புரட்டிப்பார்க்கிற போது , இந்திய சுதந்திர
போராட்ட காலத்திலும் சரி , சுதந்திரம் பெற்ற பின்பு அரசியல் அமைப்பை கட்டமைத்து இனி வரும் காலங்களில் நாட்டை கொண்டு செலுத்துகிற தேசம் தழுவிய  அரசியலில் கோலோச்சிய தமிழக தலைவர்கள் சிலரது  பட்டியலில் இன்றளவும் பெருந்தலைவர் காமராஜர், முத்துராமலிங்கத்தேவர் போன்ற வெகு சிலரே  நினைவு கூறப்படுகிறார்கள். அப்படி நினைவுகூறத் தக்கோரின் பட்டியலில் நாம் பார்க்க வேண்டிய மற்றுமொரு மாபெரும் மக்கள் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அவர்கள் ஆவார்கள். 

1896 ம் ஆண்டு ஜூன் 5 ம்தேதியில் பிறந்த திருநெல்வேலி பேட்டையில் பிறந்து ஒரு மாணவராக வளர்ந்த  முகம்மது இஸ்மாயில், மகாத்மா காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, காந்தியின் அறைகூவலுக்கு செவி சாய்த்து,  தான் எழுதவேண்டிய B.A இறுதியாண்டு பொதுத்தேர்வை புறக்கணித்து அரசியலில் கால்பதித்தார். 

முகமது அலி ஜின்னா வின் பாகிஸ்தான் பிரிவினைக்கோரிக்கையைத் தொடர்ந்து நாடு விடுதலை பெற்ற பிறகும் இந்த நாட்டில் எஞ்சி இருக்கிற சிறுபான்மை முஸ்லிம்களுக்காகவும் இதர தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களினத்துக்காகவும் குரல் கொடுக்க ,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்ற ஒரு அமைப்பு தேவை என்பதை உணர்ந்த நாடெங்குமிருந்த தலைவர்கள் , அதன்  தேசியத்தலைவராக காயிதே மில்லத் அவர்களைத்  தேர்ந்தெடுக்கிறார்கள். 

முஸ்லிம் லீக் ஒன்றுபட்ட இந்தியாவில் ஒரே கட்சியாக இருந்த போது சேர்க்கப்பட்ட பொது நிதியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு ஒரு பங்கு தருகிறோம் என்று பாகிஸ்தான் தலைவர்கள் கேட்டபோது, எங்கள் நாடே பிரிந்துவிட்டது; உங்கள் பணம் எங்களுக்கு எதற்கு என்று உதறித்தள்ளிய உத்தமர் காயிதே மில்லத். 

 இந்திய அரசியலமைப்பு நிர்ணயக்குழுவில் இடம்பெற்று இன்று நாம் பின்பற்றும் இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைக்க கருத்துக்களை எடுத்து வைத்த  பெருமைக்கும் காயிதே மில்லத் அவர்கள் சொந்தக்காரர்.  இந்த நாட்டுக்கு ஆட்சிமொழியாகும் தகுதி தமிழுக்கே உண்டு என்று அரசியல் நிர்ணய அவையில் அவர் எடுத்து வைத்த முழக்கம் , தமிழ் வாழும் காலமெல்லாம் வாழும். 

இந்திய  பாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும்  அன்றைய மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு அடுத்த எண்ணிக்கை கொண்ட முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு   எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்தார்.

குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள உதவிய அரசியல் சிற்பிகளில் ஒருவராகத்திகழ்ந்தார். 

 தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் , 1962,67, 71  என தொடர்ந்து மூன்று முறை கேரளா மஞ்சேரி தொகுதியில் வெற்றிபெற்று மக்களவை எம்பியாக பணியாற்றினார். அந்த மூன்று முறையும் தனக்காக வாக்குக்கேட்டு அந்தத் தொகுதிக்கே போகாமல் மூன்று முறையும்,  "படுத்துக்கொண்டே ஜெயித்த"  உண்மையான தேசியத்தலைவராக திகழ்ந்தவர் . 

1967 ம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியை பிடிப்பதற்கு முக்கியப்பணி ஆற்றியவர் காயிதே மில்லத் ஆவார்கள். இன்றைக்கு தமிழகத்தில் புற்றீசல் போல இயக்கங்களை வைத்துக்கொண்டு ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் ஆலாய்ப்பறக்கிற காட்சிகளைக்காணும்போது , காயிதேமில்லத் எவ்வளவு பெரிய ஆளுமை மிக்க தலைவராக இருந்தார் என்பதை நாம் உணரமுடிகிறது.

 1967 கூட்டணி உருவாகி தொகுதிப்பங்கீடு தொடங்கிய போது 234 தொகுதிகளுக்கான பட்டியல் அண்ணாவிடமிருந்து காயிதே மில்லத்தின் வீடு இருந்த சென்னை புதுப்பேட்டைக்கு வந்தது. காயிதே மில்லத் அவர்கள் முதலில் தனக்கு வேண்டிய தொகுதிகளை  தேர்ந்தெடுத்த பிறகே மற்ற கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதே அண்ணாவின் திட்டம். காயிதே மில்லத் அவர்களை பனிரெண்டு தொகுதிகளை டிக் செய்யும்படி அண்ணா கேட்டார் . ஆனால் காயிதே மில்லத் அவர்கள் ஏழு தொகுதிகளை மட்டும் டிக் செய்து தேர்ந்தெடுத்த போது , இவை போதுமா என்று கேட்கப்பட்டது. போதும் என்று சொன்ன காயிதே மில்லத் அவர்கள் ஏழு தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி ஏழு தொகுதிகளிலும் முஸ்லிம் லீகை  வெற்றி பெற வைத்தார். முஸ்லிம்களுக்கு முன்னுரிமை  தரப்பட்ட அந்தக் கால நினைவுகள்   நம்மிடையே பெருமூச்சை வரவழைக்கிறதே! 

இன்று நாம் பார்க்கும் இயக்கங்களின் எடுப்பார் கைப்பிள்ளை   அரசியலுக்கு இது ஆச்சரியமான செய்தியாக இருக்கலாம். காயிதே மில்லத் அவர்கள் காலத்தில் எப்படி இருந்த நாம் எப்படி ஆகிவிட்டோம் என்பதை இ்ந்த வரலாறு நமக்கு உணர்த்தினால் சரிதான். 

காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று அர்த்தம். கண்ணியமிகு காயிதேமில்லத் என்ற அடைமொழியை திராவிட இயக்கம் அவருக்கு வழங்கி சிறப்பித்தது. அதற்கான காரணம் நேரு , படேல், லால் பகதூர் சாஸ்திரி , அம்பேத்கர் , பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர் என நாடு தழுவிய எல்லா தலைவர்களோடும் அவருக்கு  செல்வாக்கு மிகுந்த உறவு இருந்தது.  இந்திரா காந்தி அம்மையார் வங்கிகளை தேசியமயமாக்கிய போது காயிதே மில்லத் அவர்களிடமும் ஆலோசனை கேட்டதாக ஒரு செய்திக்குறிப்பு உண்டு. அவர்கள் வாழ்ந்த நாட்களில் அரசியலிலும் தனிப்பட்ட வாழ்விலும் காட்டிய கண்ணியம் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பாடமாக நிற்கிறது. 

1972ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காயிதேமில்லத் அனுமதிக்கப்பட்ட செய்தி கோவையில் சுற்றுப்பயணத்தில் இருந்த முதலமைச்சர் கலைஞருக்கு தெரிந்ததும் தனது பயணத்தை இடையில்  நிறுத்திவிட்டு உடனடியாக சென்னை திரும்புகிறார்.  ஸ்டான்லி மருத்துவமனையில் ,

 “ஐயா! நான் கருணாநிதி வந்திருக்கிறேன்!” என அவர் முன்னால் வணங்கி நின்றபோது கலைஞருடன் காயிதே மில்லத் உரையாடியது தான் அவர் கடைசியாக பேசியது என தென்காசி என்.கே.ரிபாயி தான் எழுதிய கவ்மின் காவலர் என்ற நூலில் குறிப்பிடுகிறார். 

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் இறுதியஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தந்தை பெரியார் வந்து அஞ்சலி செலுத்தினார். பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு காயிதே மில்லத் இறுதி ஊர்வலத்தின் போதும் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கட்தொகையை அன்றைய சென்னை மாநகரம் கண்டது. திருவல்லிக்கேணி வாலாஜா சாலை முழுதும் மனித தலைகளாக காட்சியளித்தது.  சென்னை அண்ணாசாலை அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டினார் கலைஞர். மடிப்பாக்கம் பெண்கள் கல்லூரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. ஒன்றிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும் அவரது பெயரை சூட்டினர் . 

சிறுபான்மை சமூகமாக இருந்தும் பல்வேறு இயக்கங்களாகவும் அமைப்புகளாகவும் பிரிந்துகிடக்கும் தற்போதைய இஸ்லாமிய சமூகத்துக்கு காயிதேமில்லத் போன்ற ஒரு தலைவர் தான் தேவை என்றால் அது மிகையில்லை. வெறுப்பரசியலும் ஆதாய அரசியலும் உச்சம் பெற்றுள்ள தற்போதைய சூழ்நிலையில் கண்ணியமிகு காயிதே மில்லத் போன்ற ஒரு தலைவரின் இழப்பு , இஸ்லாமிய சமூகத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த பொது சமூகத்துக்குமே ஈடுசெய்யமுடியாத இழப்பு தான். 

காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று சரியாக பல தலைவர்கள்  சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.  இது மிகவும் பொருத்தமானதே. 

எமது சக எழுத்தாளர் லிியாக்கத் அலி கலீமுல்லாஹ்  கூறுகிறார். " வழிகாட்டி என்கிற சொல்லுக்கு அரபியில் சாயிக், காயித் என்று இருவேறு பதங்கள் உள்ளன. ஒட்டகத்தின் மீது அமர்ந்துகொண்டு அதை சரியான பாதையில் செலுத்துபவர் சாயிக் எனப்படுவர். 

அந்த ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறைப் பிடித்து மேடு பள்ளங்கள் மற்றும் கரடுமுரடுகளில் அதன் கால்கள் இடறிவிடாமல் பக்குவமாக அழைத்துச் செல்பவர் காயித் எனப்படுவர்.

எவ்வித கரடுமுரடுகளிலும் கால்கள் இடறிவிழாமல் முஸ்லிம் சமுதாயத்தை வழிநடத்திச் சென்றதால் அவரை "காயிதே மில்லத்" என்றழைத்தோம்." 

காயிதேமில்லத் அவர்களுடைய 125 ஆம்  பிறந்த நாளில் நாம் பகிரும்  நமது நினைவலைகளில் சிலவே இவையாகும்.

காயிதே மில்லத் அவர்களின் சிறந்த மறுமைப்பதவிக்கு இறைஞ்சுகிறோம்.

-இபுராஹிம் அன்சாரி M.Com


காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அரசியலும் ஆளுமையும் http://adirainirubar.blogspot.com/2020/06/blog-post_6.html

Posted by Adirainirubar on Friday, June 5, 2020

அதிரை அஹ்மத் - நெஞ்சிருக்கும் வரை நினைவுகளில் ! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2020 |

அதிரை அஹ்மத் !

தமிழ்மாமணி, தமிழறிஞர், அதிரை அறிஞர், நூலாசிரியர், நேர்கொண்ட பார்வையுடைய பண்பாளர் என்றெல்லாம் அறியப்பட்ட அதிரை அஹ்மது அவர்களின் இழப்பு அதிரைக்கு மட்டுமல்ல, இன்னும் அவர்களை நேசிக்கும் அனைவருக்குமான அதிர்ச்சியுடன் கூடிய இழப்பாகும். குறிப்பாக எங்களைப் போன்றோர்க்கு பேரிழப்பே !

அவர்களின் இழப்பென்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான் ‘அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமோ மீள்வோம்’ என்றறிந்த நாமெல்லாம் அதிரை அஹ்மது அவர்களின் மண்ணறை பிரகாசமானதாகவும், அவர்களின் மறுமை வாழ்வு சிறக்கவும் இறைவனிடம் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ் ! 



நெறியாளர்
அதிரைநிருபர்

Adirai AHMAD - “நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் ! https://www.youtube.com/watch?v=nemWxEIeNq0

Posted by Adirainirubar on Friday, June 5, 2020


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு