Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நடையே கடமையானதே ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 15, 2020 | ,


“நான் வாக்கிங் போகும்போது கச்சலை அவிழ்த்து விட்டு,சலாம் சொல்லிக் கடக்குமளவுக்கு மதிப்பிற்குரிய வாத்தியார்களின் ராஜபாட்டை நடைப் பயிற்சி தொடர்கிறதா?” என்று, உமர் வரலாறு ஆக்கத்துக்குக்   'கமென்ட்’எழுதிய கவிஞர் சபீர் கேட்டிருந்தார். அவரின் நினைவூட்டலுக்குப் பின், ஹாஜா முகைதீன் சாரோடு என் வீட்டில் நடந்த உரையாடலுக்குப் பின்,சில ஐயப்பாடுகளும் தொடர்ந்தன!

நான் பட்டுக்கோட்டையில் ‘பிஸ்மி ஸ்டேஷனரி’ வைத்திருந்தபோது, காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரில் உள்ள ‘ஷப்னம்’ கடைக்குப் பிளாஸ்டிக் ஃபைல்களும் நோட்டுப் புத்தகங்களும் சப்ளை செய்து கொண்டிருந்தேன். கடையை நடத்திக் கொண்டிருந்தவர் மாற்று மதத்தைச் சேர்ந்த, மாற்றுக் குறையாத் தங்கம்! அவர் எனக்குப் பணத்திற்கு பதிலாக அவரின் மென்மையான பேச்சையும் குணத்தையும் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன்! சில நாட்களுக்குப் பிறகு நான் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ‘பாஸ்போர்ட்-விசா’ தேவையில்லாத இடத்திற்கு எங்களைத் தவிக்க விட்டுச் சென்று விட்டார் என்று! எங்கள் கணக்கை முன்னரே முடித்துவிட்ட அவர், தன் கணக்கையுமல்லவா முடித்துக் கொண்டார்!

ஒருமுறை நான் பட்டுக்கோட்டைக்குச் செல்வதற்காக சேர்மன் வாடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது,என் அருகில் காரை நிறுத்தி, “அஸ்ஸலாமு அலைக்கும். ஏறிக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி ஏற்றிச் சென்று என்னைப் பட்டுக்கோட்டையில் விட்டவர்தான், சப்னம் கட்டிடத்தின் சொந்தக்காரர் என்று அறிந்து கொண்டதுடன், அவர் என் மாணவர் என்றும் அறிந்து பெருமை அடைந்தேன். அவர் சற்று சீரியஸ் ஆகக் காணப்பட்டார்! ஆனால் அவர் பெயர் அப்போது எனக்குத் தெரியாது! இப்போது ஹாஜா முகைதீன் சாரோடு நடந்த உரையாடலுக்குப் பிறகு, ஷப்னங்களின் சொந்தக்காரரும் ‘அதிரைநிருபர்’ மூலம் தன் உண்மை சொரூபத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சபீரும் ஒருவர்தானா? என்ற ஐயம், நடைப் பயிற்சி போல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஐயம் கொண்ட என் ஐயத்தைப் போக்க கவிஞர் சபீர் மேற்கண்ட விடையைத் தந்தார் கமெண்ட் மூலம்!

கவிஞர் சபீர் எனக்கு வாக்கிங்கை நினைவூட்டியதால், நேற்று போய் வந்தேன்! “அஸ்ஸலாமு அலைக்கும்! நல்லா இருக்கிறீங்களா?” என்று கேட்டுக் கொண்டே மூன்று பெண்கள் என்னைக் கடந்து சென்றார்கள்! நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் வாக்கிங் வருவது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கிறது போலும்.

பெண்கள் வாக்கிங் போவது மிக நல்ல பழக்கம். அதுவும் ஹஜ் போக இருக்கும் பெண்களுக்கு மிக மிக அவசியம்! ஆனால்,வாக்கிங்கின் போது டாக்கிங் அனாவசியம். (அ)வசியம் தேவைப் பட்டால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்! நடைப் பயிற்சி செய்யும் போது, பேச்சுக்கு நாமே தடை போட்டுக் கொள்ள வேண்டும்! இறைவனை நினைவு கூர்ந்தவர்களாக, தலை குனிந்தவர்களாக, விரைந்து நடந்து செல்ல வேண்டும்! அப்படிச் செய்தால் கண்டிப்பாக உடல் நலமும் மன நலமும் மிக நன்றாக இருக்கும்!


ஹஜ் கடமையைச் செய்கிறவர்களுக்கு, மக்காவை அடைந்ததிலிருந்தே வாக்கிங் துவங்கி விடுகிறது! வேறு எதையும் நோக்காமல், இறைவனின் நினைவுடன், தலை குனிந்தவர்களாக கஅபாவை நோக்கி நடந்து, அருகில் சென்று கஅபத்துல்லாவை நிமிர்ந்து பார்க்கவேண்டும். “இறைவா நான் இப்போது கேட்கும், இதற்குப் பின் கேட்கப் போகும், இதற்கு முன் கேட்டதுமாகிய துஆக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வாயாக”என்று துஆ செய்ய வேண்டும்.இனி நடைதான்! எங்கும் நடை, எதிலும் நடை! கஅபத்துல்லாவை ஏழு முறை நடந்து சுற்ற வேண்டும்! தொழுகைக்குப் பின் சபா - மர்வா மலைகளுக்குச் செல்ல வேண்டும்! சபா - மர்வா நான்கு முறைகளும், மர்வா - சபா மூன்று முறைகளும் நடக்க வேண்டும்! தலை முடி நீக்கியவுடன் அல்லது பெண்களுக்கு சிறிது முடி வெட்டப் பட்டதுடன் உம்ரா நிறைவேறிவிடும்! உற்றார், உறவினர், நண்பர்கள் யாருக்கு வேண்டுமானாலும், இரவு பகல் என்று பாராமல் எப்போது வேண்டுமானாலும் உம்ரா செய்யலாம்! தடையில்லா நடைகள்! இந்நடை தோற்கின் எந்நடை வெல்லும்?

கடமையான முதல் உம்ராவை முடித்த பின், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு நடந்து சென்று அங்கே தங்க வந்துவிட வேண்டும். அங்கிருந்து மினாவுக்குச் செல்கிற வரை ஒவ்வொரு நாளும் ஐந்து முறை கஅபாவுக்கு நடந்து சென்று தொழவேண்டும். பின்னிரவுத் தொழுகைக்காக இரவு 3:30 மணிக்கு பாங்கு சொல்லி விடுவதால், ஒரு நாளின் நடைப் பயிற்சி அப்போதே தொடங்கி விடுகிறது! தங்குமிடம் கஅபாவுக்கு அருகில் இல்லாவிட்டால் தினமும் நடக்கும் தூரம் அதிகமாகிவிடும்!

மினாவிலிருந்து அரஃபாவுக்கும்,அரஃபாவிலிருந்து முஜ்தலிஃபாவுக்கும், முஜ்தலிஃபா விலிருந்து ஜம்ராவுக்கும் டாக்சி, பஸ் பயன்பட்டாலும் அங்கே நடைகளே ஆக்கிரமிக்கின்றன. கஅபத்துல்லாஹ்வை வலம் வருவதிலும், சஃபா மர்வாவிலும் நடைதான்! இதற்குப்பின் குர்பானி கொடுத்து, மீண்டும் தவாஃபு செய்துவிட்டால், ஹஜ்ஜுக் கடமை நிறைவேறிவிடுகிறது! ஹஜ் கடமையைச் செய்யும்போது சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை தாமாகவே குறைந்து விடுகின்றன! அங்கே பெண்களுக்கு மத்தியில் ஷைத்தான் புகுந்து அரசியலை முடுக்கி விட்டு விடுவான். அரசியலில் மூழ்கிவிட்ட நம் மக்களுக்கு இது பொரி அரிசி வாசனையாகப் போய் விடும்! இதிலிருந்து மிகவும் ஒதுங்கி இருக்கவேண்டும்!

அகம் புற வாழ்க்கைக்கும், இகம் பரம சுகத்திற்கும் ஹஜ்ஜின் நடைப்பயிற்சி மிகவும் உறுதுணையாகவும் பெரும் பயனாகவும் இருக்கிறது,

இந்த ஆண்டு ஹஜ்ஜில் கலந்து கொள்ளும் அனைத்து ஹாஜிகளுக்கும், உலகின் பல பாகங்களிலும் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் அதிரைநிருபர் மற்றும் அதிரை பிபிசி  வலைக் குழுமங்களின் சார்பாக உமர்த் தென்றல், நன்னெறி நின்று, நபி வழி பயின்று தன் தியாகப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது!

எவ் வழி நல் வழி.
அவ் வழி நம் வழி!
வாழ்க மனித குலம்!
வாழ்க மனித நேயம்!

வாவன்னா
2011-ம் வருடம் ஏப்ரல் 11ம் தேதி பதிக்கப்பட்டதை மீள்பதிவாக !

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு