Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவன் - அவள் ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 23, 2015 | , , , ,

இந்நாளைப் போன்றதொரு
நந்நாளில்தான்
அவன் ஆளுமைக்கு
அவள் வாழ்க்கையைத் தந்தாள்

அழகால் அவனை
அடிமையாக்கினாள்
அன்பால் அவனை
அரசனாக்கினாள்

தொன்றுதொட்ட இல்லறம்
அன்று தொட்டான்
துவங்கியது துலங்கியது

அந்தரங்கம் அந்நியோன்யம்
போன்ற அகச்சொற்கள்களின்
அர்த்தம் பயின்றான்

ஆகாயம் அலைகடல்
செவ்வானம் சீமைதேசம்
போன்ற புறவாழ்வில்
சந்தோஷமாய்ச் சிறகடித்தான்

கண்டுவந்த கனா
கைகூடியதால்
புதுபுதுக் கனவுகளாகப்
பிரசவித்துத் தந்தாள்

பெற்றுத்தந்த கனவுகளையெல்லாம்
வளர்த்தெடுத்தான்
பற்றுக்கொண்டு பாசம்கொண்டு
ரசித்திருக்கிறான்

அன்னையானது முதல்
அவனையும் ஆள்கிறாள்

அவனைவிட்டு
அவன்
நிழல் போன தருணங்களில்கூட
அவள் போனதில்லை

நிலம் அசைந்தால்
உடைந்துதிரும்
கட்டடங்களைப் போல
அவள்
ஒவ்வோர் அசைவுக்கும்
இசைவாகவே அவன்
இயக்கம் இருக்கிறது

அவள்
புன்னகைகள்
அவனைப் புதுப்பிப்பது போலவே
அவள்
சுகக்கேடுகள்
அவனைச் சுட்டெறிக்கின்றன

விண்ணில் நீந்தும்
முகிழ்களாய்
அவளுள் அவன்
உலாவிக்கொண்டே இருக்கிறான்
அவள்
மெய்யென்றால்
மழையாய்ப் பெய்வான்
பொய்யென்றால்
மனதால்ச் சாவான்

புள்ளிகளைப் பூதமென்றும்
கீறல்களை வெட்டுகளென்றும்
மயங்கி
மருளும்
அவள்
மனநிலையை மாற்ற
என்னென்னவோ செய்கிறான்
எண்ணிப்பார்ப்பாளா

வயதாகிப் போவதுவும்
வியாதி வந்தேறுவதும்
வேகத்தடைகளாய்
ஆங்காங்கே
அவர்கள் தம்
வாழ்க்கை வாகனத்தை
அசைத்துப் பார்த்தாலும்...

அடிப்படை அன்பெனும்
அச்சு உறுதியானது -அவள்
மடிதனில் முடிவெனும் -அவன்
ஆசை இறுதியானது!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

24 Responses So Far:

crown said...

இந்நாளைப் போன்றதொரு
நந்நாளில்தான்
அவன் ஆளுமைக்கு
அவள் வாழ்க்கையைத் தந்தாள்
--------------------------------------------------------
அஸ்ஸலமுஅலைகும்.வாழ்கையை உயிர்ப்பு உள்ளதாக ஆக்க அன்று அவன் தோட்டத்தில் அவனிடம் மாலை வாங்கிய உயிர் பூ அவள்!சிலருக்கு மட்டும் உதிரும் பூ! பெரும்பாலோனோருக்கும் உதிரத்தினுள் பூத்த பூ!

crown said...

அரசியை முடித்ததால் அரசன் எனும் புருசன்!இங்கே முடி சூடியதால் அல்ல!அவளை முடித்ததால்!.

crown said...

அவனைவிட்டு
அவன்
நிழல் போன தருணங்களில்கூட
அவள் போனதில்லை
---------------------------------------------------
அடடா!அந்த தருணம் எல்லாரின் வாழ்வில் வரனும்!ஆனால் இங்கே வரனும்(திருமணம்)வரணும் என்றாலே சில சவரன்( நகை) கூட வரனும் எனும் போதில் அதில் முடியும் திருமணத்தில் அவள் நிழலாக அல்ல நெருப்பு கனலாகவே இருப்பாள்!

crown said...

நிலம் அசைந்தால்
உடைந்துதிரும்
கட்டடங்களைப் போல
அவள்
ஒவ்வோர் அசைவுக்கும்
இசைவாகவே அவன்
இயக்கம் இருக்கிறது
-------------------------------------------------
அவள் வாழ்வின் ஓர் அங்கம் என்றால் வாழ்கை ஆளும்கோல் பூ"கம்பம்.அவள் உள்ளே அழுது அங்கம் அதிர அசைந்தால் அதுவே பூகம்பம்!.

crown said...

விண்ணில் நீந்தும்
முகிழ்களாய்
அவளுள் அவன்
உலாவிக்கொண்டே இருக்கிறான்
அவள்
மெய்யென்றால்
மழையாய்ப் பெய்வான்
பொய்யென்றால்
மனதால்ச் சாவான்
---------------------------------------------------
அவன் முழு மனிதனா ஆவதும் பெண்ணாளே! அவன் வாழ்கை அழிவதும் பெண்ணாளே!

crown said...

புள்ளிகளைப் பூதமென்றும்
கீறல்களை வெட்டுகளென்றும்
மயங்கி
மருளும்
அவள்
மனநிலையை மாற்ற
என்னென்னவோ செய்கிறான்
எண்ணிப்பார்ப்பாளா
-----------------------------------------------------------
பெண்ணின் மன நிலையை இதைவிட படம் பிடித்து காட்டமுடியாது!

crown said...

வயதாகிப் போவதுவும்
வியாதி வந்தேறுவதும்
வேகத்தடைகளாய்
ஆங்காங்கே
அவர்கள் தம்
வாழ்க்கை வாகனத்தை
அசைத்துப் பார்த்தாலும்...

அடிப்படை அன்பெனும்
அச்சு உறுதியானது -அவள்
மடிதனில் முடிவெனும் -அவன்
ஆசை இறுதியானது!
----------------------------------------------------------------
எல்லா நல்ல ஆண் மகனின் மனதை வெளிப்பாடாய் பதிந்த வாக்கு மூலம்!கவிதையாய் வெளிப்பட்டிருக்கு! இந்த எதிர் பார்ப்பு!ஏக்கம் தீர எதிர் பால் நம்பால் அன்பை காலமெல்லாம் புதிப்பார்களா?இல்லை பால் திரிந்து பாழாய் போகட்டும் என அவர்தம் ஏற்றபாத்திரத்தில் அழுக்கு சேர்ப்பாளா? அரவனைப்பும் அனுசரனையும் குறைந்து வரும் தருணத்தில் வந்த அற்புத நினைவூட்டல்!

அதிரை.மெய்சா said...

அவன் அவள்

அவனுள் அவள்
அவளுள் அவன்

பின்னிக்கோர்த்த
பிரியா உறவு
எண்ணி வியக்கும்
ஏழேழு ஜென்ம உறவு

அவனில்லையேல்
அவளேது?

ஆசையாய் அனைத்தையும்
அரவணைத்துச் செல்லும்
கரங்களல்லவா ?

அடிப்படை அன்பெனும்
அச்சு உறுதியானது அவள்
மடிதனில் முடிவெனும் அவன்
ஆசை இறுதியானது

ஆகா., அருமையான வரிகள்
இப்படியெல்லாம் சிந்திப்பது
உன்னால் மட்டுமே முடியும் நண்பா
வாழ்த்துக்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிஞர்கள் கடை விரித்து இருக்கிறார்கள்...

கடைக்குட்டி கைகட்டி வாசித்து விட்டு சிலாகிக்கிறேன்...

அவன் - அவள் !

நட்புடன் ஜமால் said...

.இரண்டாம் பேராவில் வரும் அடிமை மட்டும் ஏற்பில்லை
.
மற்றபடி சபீர் காக்கா
.
எழுத்து கள் அணிவகுத்து அணிகலன் ஆவதை இரசிக்கும் இரசிகன் நான் என்றென்றும்

நட்புடன் ஜமால் said...

அன்பே
அழகே
ஆரமுதே
என கொஞ்சு(ம்) மொழி
பேசி
.
கெஞ்சியும் கொஞ்சியும்
குளாவியும் செல்லும்
வாழ்வின் இறுதியாக
.
எல்லோரும் இசையும்
ஒன்று
மடிதனில் மரணம்

sheikdawoodmohamedfarook said...

//வயதாகிபோவதுவும்வியாதிவந்தேறுவதும்............//[ரசிப்பதற்குபதிலாக] நான்புசித்தவரிகள்.உண்மையாகசொல்கிறேன்இந்தவயதில்காட்டில்-மலைக்குகையில்தவமிருந்துபெறவேண்டியஞானம்எப்படிவந்ததுஎன்பதே என்வியப்பு!?

Ebrahim Ansari said...

//புள்ளிகளைப் பூதமென்றும்
கீறல்களை வெட்டுகளென்றும்
மயங்கி
மருளும்
அவள்
மனநிலையை மாற்ற
என்னென்னவோ செய்கிறான்
எண்ணிப்பார்ப்பாளா//

என்னுள் பதிந்த வரிகள்.

இங்கே கவிஞர்கள் பலர் வந்து கவிதையால் கருத்திட்டு இருக்கிறார்கள்.

நான் கவிஞன் இல்லை ; நல்ல ரசிகன் என நானே நம்பும் ரசிகன்.

இந்தக் கவிதையையும் தொடர்ந்த பின்னூட்டங்களையும் உளமார ரசிக்கிறேன். கவிதையின் ரசிகன் என்ற தகுதியில் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இந்தக் கவிதையை வாசிக்கும்போது இந்த வைரமுத்துவின் வரிகளும் நினைவுக்கு வருகின்றன.

சேலையில் எனது முகம் துடைப்பாள் - நான்
சிணுங்கினாள் செல்ல அடி கொடுப்பாள்
விரல்களுக்கெல்லாம் சுளுக்கெடுப்பாள்- என்
நகக்கண்ணில் கூட அழுக்கெடுப்பாள்.

Ebrahim Ansari said...

அண்மையில் படித்த கவிதை பகிர நினைக்கிறேன். எழுதியவர் ஷாகுல் ஹமீத்
================================================================

நீ வேண்டும் எனக்கு என் கணவா
வேண்டும் நீ எனக்கு

ஆயிரம் சொந்தங்களிருந்தும்
எனக்கென வேண்டும் நீ எனக்கு

கண்ணீர் துளிகளை உன் உதடுகளால்
துடைத்திட வேண்டும் நீ எனக்கு

உன் கோவ கதிர்கள் என் மீது பட்டு நான்
தொட்டாற்சிணிங்கியாய் சுருங்கும் போது
உன் கரங்களினால் தென்றலாய் என்னை
தழுவிட வேண்டும் நீ எனக்கு

இரவுகளின் தனிமைகளை
போக்கிட வேண்டும் நீ எனக்கு
அது எனக்கு மட்டும் மகிழ்வை தர
வேண்டுமென்பதற்கில்லை

இரவின் ஒவ்வொரு நொடியினையும்
இருவரும் சேர்ந்தே ரசித்திட
வேண்டுமென்பதற்கே.

கைகளிரெண்டிலும் வளையல்கள்
மாட்டிட வேண்டும் நீ எனக்கு
அது கைகளை அழகூட்ட
வேண்டுமென்பதற்கில்லை

ஊடலிலும் கூடலிலும் அவை
உன் நெஞ்சோடு மோதி இசைக்கின்ற
இசையை கேட்டிட வேண்டுமென்பதற்கே.

விரல்களில் மருதாணி
பூசிட வேண்டும் நீ எனக்கு
அது சிவப்பதை பார்க்க
வேண்டுமென்பதற்கில்லை

உறக்கத்தில் என் விரல்களால்
உன் மீது நான் வரைந்திட்ட
கிறுக்கல்களை கண்டிட வேண்டுமென்பதற்கே.

என் கண் இமைகளில்
மையிட வேண்டும் நீ எனக்கு
அது உனக்கு அழகாய் தொ¢ய
வேண்டுமென்பதற்கில்லை

மையிடும் வேளையிலே
உன் கண்களில் என்னழகை
பார்த்திட வேண்டுமென்பதற்கே.

பிரசவ நேரத்தில் என்னருகே
இருந்திட வேண்டும் நீ எனக்கு
அது எனக்கு ஆறுதல் அளிக்க
வேண்டுமென்பதற்கில்லை

என் விரலோடு விரல் கோர்த்து
உன் விழிகளினால் என் வலியினை நீ
வாங்கி கொள்ள வேண்டுமென்பதற்கே.

நம் உறவிற்கு நீ கொடுத்திட்ட
பரிசை உன் கரங்களில் ஏந்தி
காட்டிட வேண்டும் நீ எனக்கு
அது உன் உரி¡¢மையை காட்டிட
வேண்டுமென்பதற்கில்லை

அத்தருணத்தில் என் முதல்
குழந்தைக்கு என் கண்களினால்
நன்றி சொல்லிட வேண்டுமென்பதற்கே.

முப்பெய்து தோள் சுருங்கி முதுமை
அடைந்தாலும் வேண்டும் நீ எனக்கு
அது ஒருவருகொருவர் துணை நிற்க
வேண்டுமென்பதற்கில்லை

இருவரும் சேர்ந்து குழ்ந்தைகளாய் மாறி
நாம் தொலைத்திட்ட இளைமையை
தேடிட வேண்டுமென்பதற்கே.

மொத்ததில் நான் வாழ்ந்திடும்
நாட்கள் அனைத்திலும் எனக்கே
உரியவனாய் வேண்டும் நீ எனக்கு

வருவாயா என் அன்பு கணவா ????????


sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

அன்பிற்குரிய க்ரவ்ன்,

//சிலருக்கு மட்டும் உதிரும் பூ! பெரும்பாலோனோருக்கும் உதிரத்தினுள் பூத்த பூ!//

என்று பூமழை பொழியும் தங்கள் கருத்துகளை கோத்தெடுத்தால் மற்றுமொரு கவிதை வாய்க்கும்.

//அவள் உள்ளே அழுது
அங்கம் அதிர அசைந்தால்
அதுவே பூகம்பம்!.//

ரிக்டர் அளவுக்குள் கணக்கிட்டுவிட முடியாத அதிர்வுகள் அவை. தமிழ்ச் சொற்களுக்குள் அளந்துவிடும் லாவகம் உங்களுக்கே உரித்தான கலை.

கவிதைப் பதிவுகளுக்கு தங்கள் கருத்துகள் தங்க முலாம் பூசுகின்றன.

(காதைக் கொடுங்கள், ஒரு கிசுகிசு: இது இவன் இவளுக்காக எழுதி திருமண நாளில் கொடுத்தது; அவன் அவள் என்று பொதுவாக்கிப் பதிந்தேன்)

sabeer.abushahruk said...

அன்பு மெய்சா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஊன்றி வாசித்து உள்ளம் நிறைய வாழ்த்தும்பும் என் நட்பிற்கு நன்றி.

//பின்னிக்கோர்த்த
பிரியா உறவு//

என்று அழகாய் வர்ணிக்கும் வார்த்தைகள் கவிஞர்களுக்கு இலகுவாக வந்துவிடுகிறது. உனக்குச் சொல்லவா வேண்டும்!

இருப்பினும்,

//எண்ணி வியக்கும்
ஏழேழு ஜென்ம உறவு//

ஜென்மங்கள் புனைவு என்பது என்/நம் மார்க்க நம்பிக்கை. தவிர்த்துக் கொள்.

நன்றி-டா!

sabeer.abushahruk said...

அபு இபு,

கடைக் குட்டியா!!!!!

துள்ளிக் குதிக்க என்ன தடை?

வேலை பளு என்னும் விலங்கை உடையும்

பூ வாடை வீசும் தமிழ் கவிதை படையும்!!!

sabeer.abushahruk said...

தம்பி நட்புடன் ஜமால்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அடிமை என்ற தமிழ்ச்சொல்லுக்கு தொண்டன் என்கிற அர்த்தம் உண்டே தவிர,,, வழி படுபவன் என்றோ மண்டியிடுபவன் வணங்குபவன் என்றோ எவ்வித ஆன்மீக அர்த்தமும் எனக்குத் தெரிந்து இல்லை.

அப்துல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் அடிமை என்று தமிழ்ப்படுத்தியிருப்பதால் அடிமை என்கிற வார்த்தையை ஆன்மீகப்படுத்திவிட்டோம் என்பது என் கருத்து.

நாம் எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகள்தாம் என்பது ஒரு பொது நிலை. சாஸ்வதம், சத்தியம்!

அதன்பிறகு அடிமை என்ற வார்த்தை 'கட்டுப்பட்டவன்' என்னும் பொருள்பட கையாலளாம் என்று நினைக்கிறேன்.

தவிர, அழகால் அடிமைப்படுத்தியவள் அடுத்த வரியிலேயே அன்பால் அரசனாக்கிவிட்டாள் என்னும்போது அவன் அடிமையா அரசனா?

வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

மேலும் :

//கெஞ்சியும் கொஞ்சியும்
குளாவியும் செல்லும்
வாழ்வின் இறுதியாக
.
எல்லோரும் இசையும்
ஒன்று
மடிதனில் மரணம்//

என்று உங்களுக்குள் திமிறும் கவிஞனை வெளிக்கொணரவும்.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,

அஸ்ஸலாமு அலைக்கும்

நீங்கள் புசித்த வரிகள்தாம் நாம் வசிக்கும் வழிகள்.

நன்றி.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஈனா ஆனா காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்களின் அன்பிற்கும் வாசிப்பிற்கும் வாழ்த்திற்கும் அருமையான ஒரு கவிதைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு, வ அலைக்குமுஸ் சலாம்.

நட்புடன் ஜமால்
//மடிதனில் மரணம்//
இரு சொற்களில் ஈராயிரம் உணர்வுகள். பாராட்டுவோம் இன்னும் பல எதிர்பார்ப்போம்.

// உங்களுக்குள் திமிறும் கவிஞனை வெளிக்கொணரவும்// வழி மொழிகிறேன்.

நட்புடன் ஜமால் said...

வ அலைக்கும் ஸலாம் சபீர் காக்கா
.
விளக்கம் அறிந்தேன்
.
வினாவை இழந்தேன் ...

Yasir said...

மாஷா அல்லாஹ்...இக் கவிதையில் உள்ள ஒவ்வொரு வரிகளையும்,வார்த்தைகளையும்,அதன் அர்த்தங்களையும் உள்வாங்கி படிக்கும் போது ஏற்ப்படும் பரவசமும்,சுகமும் சொல்லி மாயாது...இவ்வளவு பிஸியான வேலைக்கு மத்தியிலும் இப்படிப்பட்ட உயர்தர கவிதை எப்படி காக்கா உங்களால் தர முடிகின்றது.
வாழ்த்துக்களும் , துவாக்களும்

ரசிக்க வைத்து / கிறுக்கு பிடிக்க வைக்கும் வரிகள்

//அழகால் அவனை
அடிமையாக்கினாள்
அன்பால் அவனை
அரசனாக்கினாள்//

//அன்னையானது முதல்
அவனையும் ஆள்கிறாள்

அவனைவிட்டு
அவன்
நிழல் போன தருணங்களில்கூட
அவள் போனதில்லை//

உண்மை காக்கா

//அடிப்படை அன்பெனும்
அச்சு உறுதியானது -அவள்
மடிதனில் முடிவெனும் -அவன்
ஆசை இறுதியானது!//

வாவ்

sabeer.abushahruk said...

யாசிர்,

இந்தக் கவிதைக்கு உங்களை ஆவலோடு எதிர்பார்த்தேன். ஏனெனில், அவன் -அவள் சொந்தக் கதையை ஒத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பிருந்தது.

அட்லாஸ்ட் - வந்துட்டீங்க!

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு