Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – பகுதி - 1 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 07, 2015 | , ,

அண்மைக்காலமாக,  மதமாற்றம் பற்றி பல்வேறு திசைகளில் இருந்தும் எதிர்க்குரல் சற்று உரத்து சத்தமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.. இதற்குக் காரணம் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய மக்கள் தொகை தொடர்பான மதவாரியான  புள்ளிவிபரங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், கிருத்தவ மக்களின் எண்ணிக்கை வளராமல் இருப்பதாகவும்  இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் ஒரு விவாதம்   எழுப்பப்பட்டது. இந்த அளவீடுகளை ஆய்ந்தால் அவை எதிர்மறையான  முடிவுகளைத் தருவதே  உண்மை . ஆனாலும் ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கும் சில  அரசியல் கட்சிகள் ,   சகோதரர்களாகப் பழகும் சகிப்புத்தன்மை மிக்க சாதாரண மக்களிடையே முஸ்லிம்களும் கிருத்தவர்களும் மதமாற்றம் செய்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்து பிளவு படுத்தி, அவர்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைத்தன. தேர்தல் ஆதாயம் தேடும் சக்திகள், பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கிகளை தங்களுக்கு ஆதரவாகத் திருப்பும் முயற்சிகளின் முனைப்பாக இந்தக் கருத்தைப் பரப்புவதில்  ஈடுபட்டு இருக்கிறார்கள். 

அத்தகையோர்க்கு சிறு விளக்கம் தரவேண்டுமென்பதற்காகவே ஒரு அழைப்பாளன் என்ற முறையில் இந்தப் பதிவைத் தரவேண்டியது இதை எழுதுபவரின் சமுதாயக் கடமையாக உணரப் பட்டு இங்கு பதியப்ப\டுகிறது. 

அழைப்புப் பணி என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பிறவிக் கடமையாகும். ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’  என்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சில தலைவர்கள் முழங்கியதாக சொல்கிறோமே அதே போல் ஒரு முஸ்லிமுக்கு விதிக்கப்பட்ட  கடமைகளில் அழைப்புப் பணியும் ஒரு கடமையாகும். 

காரணம் ,  பெருமானார் (ஸல் ) அவர்களின் இந்த சமுதாயத்தை படைத்த இறைவனே  நற்சான்றிதழ் கொடுத்து இது ஒரு நல்ல சமுதாயம் என்று சொல்கிறான். உலகில் உலவும் எந்த ஒன்றையும் சுட்டிக் காட்டி அதை நல்லது என்றும் சிறப்புக்குரியது என்றும் சான்றிதழ் வழங்க வேண்டுமானால் அவ்வாறு சுட்டபப்டும்  பொருள் அல்லது சமுதாயம் தன்னகத்தே சிறப்பாக ஏதாவது  ஒரு தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது உலக நியதி. அந்த வகையில் சந்தையில் உலவும் சில வணிகப் பொருள்களை சிறந்தது என்று நாம் ஏன் தரம் பிரிக்கிறோமென்றால் சில சிறப்புக்குரிய தன்மைகள் அப்பொருளோடு இருந்தே ஆகும். 

உதாரணமாக,  மக்கள் பயன்படுத்தும் சில நுகர்பொருள்கள் தரத்தில் சிறந்தவைகளாக மக்களால் பெயர் குறிப்பிடப்பட்டு வாங்கப்படுகின்றன. பல நுகர்பொருள்களை அவற்றின் உள்ளடக்கத்  தரத்துக்காக வாங்குகிறோமே அதேபோல் படைக்கப்பட்ட மனித சமுதாயத்திலேயே இதுதான் சிறந்த சமுதாயம் என்று         படைத்தவனே குறிப்பிடுகிறான் என்றால் இந்த சமுதாயம் தனது உள்ளடக்கமாக வைத்திருக்கும் தரம் என்ன? 

அது வேறொன்றுமல்ல .  நன்மையை ஏவி தீமையை தடுக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டிருக்கும் சமுதாயம் இது  என்பதுதான். அதுமட்டுமல்லாமல்  பாவங்களில் ஈடுபடுவோரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் இந்த சமுதாயத்தின் தன்மைதான்.  எல்லாம் வல்ல இறைவன் தனது திருத் தூதர்களுக்கு வழங்கிய பணியும் இவைதான்.  இந்தத் தன்மைகள்  இறைநம்பிக்கை கொண்ட மனித சமுதாயத்தின் உள்ளீடாக ஓடும் ரத்தத்திலும் இயங்கும் உறுப்புகளிலும் நாடி நரம்புகளிலும் நடை பயின்று கொண்டே இருக்க வேண்டுமென்பதே படைத்தவனின் எதிர்பார்ப்பு. 

நமது தலைவரான பெருமானார் (ஸல்) அவர்களின் முழு வாழ்வே அழைப்புப் பணியால் அலங்கரிக்கபட்டதுதான். முதன் முதலாக, ஹீராக் குகையில் தனது தூதருக்கு வஹீ என்கிற இறைத்தூதை அனுப்பிய இறைவன் தனது தூதருக்கு விதித்த கட்டளையின் அடிநாதமே அழைப்புப் பணிதான். 

நபியே! நீங்கள் எழுந்து நின்று மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்!” (74: 1-7) என்பதே அல்லாஹ்வின் அருட் தூதருக்கு வழங்கப்பட்ட  கட்டளை. தான் ஏற்றுக் கொண்ட நல் வழியை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி , அவர்களையும் நல்ல வழியின் பக்கம் திருப்பிவிட  முயற்சி எடுப்பதே அழைப்புப் பணியாகும். 

இந்த வகையில்தான் தனக்கு விதிக்கப்பட்ட  முதல் கட்டளையை எடுத்துக் கொண்டு ஒரு நிமிடத்தைக் கூட   வீணாக்காமல்  நேராக தனது மனைவி ஹதிஜா (ரலி) அவர்களை நோக்கி விரைந்த   பெருமானார் (ஸல்) தனது மனைவியிடம் நடந்ததைக் கூற,   அவர் அங்கேயே அப்பொழுதே இஸ்லாத்தை ஏற்கிறார். அதைத்தொடர்ந்து அபூபக்கர் ( ரலி ) அவர்களுக்கும் , அலி (ரலி) அவர்களுக்கும் வளர்ப்பு மகன் ஜைது ( ரலி) அவர்களுக்கு இஸ்லாத்தை ஏத்தி வைத்தார்கள். தொடர்ந்து இரகசியமாகவும் அதன்பின் தங்களின் சொந்தங்களையும் அதையும் தொடர்ந்து  அல்லாஹ்வின் கட்டளைப் படி அழைப்பை பகிரங்கப்படுத்தியும் தனது தூதுத்துவப் பயணத்தைத் தொடர்கிறார்கள். 

மக்காவில் எதிரிகளின் இடையூறுகளுக்கிடையே தொடர்ந்த அண்ணலாரின் அழைப்புப் பணி மக்காவில் எல்லை தாண்டி முதலில் தாயிப்  நகர் வரை விரிகிறது. அங்கு இருந்த பெரும் செல்வாக்குப் பெற்றவர்களிடம் அச்சமில்லாமல் அழைப்புப் பணி செய்து அவர்களால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இரத்தம் சொட்டிய நிலையில் ஒரு திராட்சைத் தோட்டத்தில் சோர்ந்து போய் சுருண்டு கிடந்த நேரத்திலும் ஒரு அடிமைக்கு இஸ்லாத்தை எத்திவைத்து இன்புறுகிறார்கள். அதையும் தொடர்ந்து மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்காக வரும் பயணிகளிடம் அழைப்புப் பணி செய்து அவர்களுடன் அகபாவில் ஒப்பந்தம் செய்து அந்தப்  பணிக்காகவே முஸ் அப் இப்னு உமைர் ( ரலி) அவர்களை மதீனாவுக்கு அனுப்பி , அழைப்புப் பணியை பரவலாகச் செய்த பின்னர், அதன்பின் தானே மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரா செய்யும்போது போகும் வழியிலேயே அஸ்லம் குலத்தைச் சேர்ந்த எண்பது பேருக்கு இஸ்லாத்தை எத்தி வைத்து  மதினாவை  அடைந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைக்கிறார்கள்.                  

மதினாவில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைத்ததும் உலகெங்கிலும் இருந்த  அபிசீனிய, எகிப்திய, பாரசீக, ரோமானிய, பஹ்ரைன், யமாமா, சிரியா, ஓமன் முதலிய நாடுகளின்   அரசர்களுக்கும் இஸ்லாத்தை அறிமுகம் செய்து அழைப்புக் கடிதங்களை அனுப்பினார்கள். பலர் உடனே அழைப்பை அங்கீகரித்தார்கள்.  சிலர் சற்று காலம் கடந்து ஏற்றுக் கொள்கிறார்கள். மக்காவில் ஒரு குஹையில் பிறந்த  இஸ்லாம் உலகப் பேரரசர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றால் அதற்கு பெருமானார்       ( ஸல் ) அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வுமே இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டதே காரணம் என்பதைத்தான் இந்த வரலாற்று  வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன.  

பெருமானார் ( ஸல்) அவர்களுடைய மறைவுக்குப் பிறகு, நபித் தோழர்கள் பெருமானார் ( ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி உலகமெங்கும் பரவிச்சென்று சத்தியமார்க்கத்தை எடுத்துரைத்தார்கள். உலகின் பல பாகங்களில்,  ஆங்காங்கே  இருந்த சமுதாய சூழ்நிலைகளில்-  சமத்துவமின்மை இல்லாத  ஏற்ற தாழ்வுகளில் - ஆண்டான் அடிமை என்கிற பேதம் நிலவிய நாடுகளில்  எல்லாம் சகோதரத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் ஒரு மாமருந்தாக இஸ்லாம் திகழ்கிறது என்பதை உணர்ந்த பல மக்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர். அந்த நிலை இன்றும்  தொடருகிறது.  

கல்வியிலும் அறிவியல் வளர்ச்சியிலும் ஏற்றம் கொண்ட நாடுகள் என்று போற்றிப் புகழப்படும் நாடுகளிலெல்லாம் இஸ்லாமிய வெளிச்சம் விரைவாகப் பரவத் தொடங்கி இருக்கிறது. பல்துறை அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை உணர்ந்து தங்களின் வாழ்வின் தித்திப்பான திருப்புமுனையாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இன்று உலகில் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரட்சி இதுதான். 

பள்ளிவாசல்கள் பற்றாக்குறை என்ற செய்தி பிரான்சு நாட்டிலிருந்து வந்த போது, புதிய பள்ளிவாசல்கள் அங்கு பரவலாகக்  கட்டப்பட்டன.  ஏற்கனவே ஒளிவெள்ளமாக இருந்து பின்னர்  பூட்டுப் போட்டு இழுத்து மூடப்பட்ட பள்ளிவாசல்களின் , கதவுகளில் தொங்கிய பூட்டுக்கள்  ஆட்சியாளர்களால் நொறுக்கப்பட்டு திறக்கபட்டு ஐந்துவேளை  வழிபாட்டுக்குத் திறந்துவிடப்பட்ட  நிகழ்வுகள் போராட்டமின்றி மனமாற்றத்தால் ஆப்ரிக்காவின் அங்கோலாவில் அரங்கேறியது. மேலும் அங்கு புதிய பள்ளிவாசல்களும்  கட்டப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் திருச்சபைக்குச் சொந்தமான கட்டிடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டும் சொந்தமாக வாங்கப்பட்டும் பள்ளிவாசல்களாக மாறப்பட்டு  அங்கெல்லாம் “ அல்லாஹு அக்பர் “  என்ற முழக்கம் ஒலிக்கிறது. இந்த மறுமலர்ச்சிக்கெல்லாம் காரணம் பெருமானார் (ஸல்) அவர்களின் வழி ஒற்றிய அழைப்புப் பணிதான். 

“ யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ! ”  என்றான்  பெருந்தன்மை மிக்க  ஒரு தமிழ்ப் புலவன். அந்த வகையில் இஸ்லாம் என்ற இனிய மார்கத்தை நான் மட்டும் நுகர்ந்தால் போதாது; அந்தப் பூஞ்சோலையில் நான் மட்டும் நுழைந்தால் போதாது என்று அடுத்தவருக்கும் அதன் சிறப்பியல்புகளை எடுத்துரைப்பது முஸ்லிமாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் இறைவனுக்கு இதற்கும் சேர்த்து பதில் சொல்ல வேண்டி வருமென்று அறிஞர்களின் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடப்படுகிறது. 

அறிஞர் இப்னுல் கைய்யிம் ( ரஹ்) அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். மனித சமுதாயத்தின் வெற்றியின் நிலைத் தரங்கள் நான்கு. 

1.. மனிதனுக்கு இம்மையிலும்  மறுமையிலும்   வெற்றியைத் தரும் சத்திய மார்க்கத்தையும் அது தொடர்பான கல்வியையும் கற்பது 

2.. தான் கற்றதை அமல் என்கிற செயல்பாட்டில் தங்களின் சொந்த வாழ்வில் நிறைவேற்றிக் காட்டுவது , 

3. தான் கற்றதையும் செயல்படுத்தியதையும் அதன் இன்பங்களையும் அடுத்தவருக்கும் எத்திவைப்பது,  கற்றுக் கொடுப்பது, அழைப்பது. 

4. அவ்வாறு அழைப்பதனால் ஏற்படும் துன்ப துயரங்களைத் தாங்கிக் கொள்ளும் நெஞ்சுரம் பெறுவது.; பொறுமையை மேற்கொள்வது    
  
அழைப்புப் பணி என்றாலே அது ஏதோ மதமாற்றம் என்று சிலர் விவாதத்தை எடுத்து வைக்கிறார்கள். மதமாற்றம் என்பது ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தானும் தனது சமுதாயமும் அனுபவிக்கிற கொடுமைகளைக் களைய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தார் எடுக்கிற முடிவாகும். ஆனால் அது அறிவின் அடிப்படையில் ஏற்படுவதாகும். 

இவைகளுக்கு  உதாரணம் சொல்ல வேண்டுமானால் பெருமானார் ( ஸல்) அவர்களின் சிறிய தந்தையார்  ஹம்ஜா ( ரலி ) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சியையும் உமர் (ரலி ) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சியையும்  குறிப்பிடலாம். 

தனது அண்ணன் மகனான முகமது (ஸல்) அவர்களை ஒருவன் கல்லால் அடித்துத் தலையில் காயம் ஏற்படுத்திவிட்டான் என்ற உடனே நானும் இஸ்லாத்தை ஏற்கிறேன் என்னை நீங்கள் என்ன செய்ய இயலும் என்று உணர்வுபூர்வமான முடிவெடுத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் ஹம்சா  ( ரலி ) அவர்கள். 

இதற்கு மாறாக, பெருமானார் (ஸல்) அவர்களைக் கொலை செய்து அவர்களுடைய தலையை கொண்டுவந்து கொடுத்து  நூறு ஒட்டகங்களை பரிசாகப் பெறுவேன் என்று சபதமிட்டு வாளோடு கிளம்பிய உமர் (ரலி ) அவர்கள் தாஹா  என்கிற திருமறையின் அத்தியாயம் ஓதப்பட்டதை காதால் கேட்டு அதன் அறிவுபூர்வமான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு வாளை தூக்கி வீசிவிட்டு இஸ்லாத்துக்கு தோள் கொடுக்க துணிந்து வந்தார். இது அறிவின் அடிப்படையிலான முடிவு. 

இவ்வாறு அறிவுபூர்வமான மன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் மற்ற சமுதாய  மக்கள் வாழும் நாட்டில் அவர்களுடன் ஒன்றிணைந்து வசிக்கும்  முஸ்லிம்கள்,  ஒரு முன்னுதாரண வாழ்வை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் வாழும் வாழ்க்கை முறைகளைப் பார்த்தது மற்றவர்கள் பாடம் கற்றுக் கொள்ளத் தக்க வகையில் அவர்களது வாழ்க்கை இருக்க வேண்டும்.  நம்பிக்கை, நாணயம், வணிகத்தில் நேர்மை, வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல் போன்ற நல்ல தன்மைகளை பொதுவாழ்வில் வெளிச்சம் போட்டுக் காட்டும் முஸ்லிம்களால் அவர்கள் மேற்கொண்டுள்ள வாழ்வியல்  முறையான இஸ்லாத்துக்கு அவை பெருமை தேடித்தரும். இத்தகைய இஸ்லாம் போதித்த  வாழ்வுமுறைகளை முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டும்போது அது ஒரு மறைமுக அழைப்புப் பணியாக கருதப்படும்.  அறிவுபூர்வமான மனமாற்றங்கள் ஏற்பட     பொதுவாழ்வில் நமது நற்குணங்களும் நற்பணிகளும்       வழிவகுக்கும். 

அழைப்புப் பணி என்பது ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு கைகளில் குர் ஆனையும் பிற நூல்களையும் எடுத்துக் கொண்டு மற்றவர்களை அணுகிப் பேசி, விவரித்து, விவாதித்துத்தான் செய்ய வேண்டுமென்பது இல்லை. நமது அன்றாட வாழ்வின் அணுகுமுறைகள் ஒவ்வொன்றுமே அழைப்புப் பணிதான். இதோ இந்த  சிறிய சம்பவம் எவ்வாறு ஒரு பெரிய அறிஞரை இஸ்லாத்தில் கொண்டு வந்து சேர்த்தது என்று பார்க்கலாம். 

பிக்தால் என்ற பெயரை நம்மில் பலர் அறிந்து இருக்கலாம் ; அறியாதவர்களும் இருக்கலாம். திருமறையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் ஒருவர்தான் பிக்தால். இதற்கு முன் பலர்  மொழி பெயர்த்து இருந்தாலும் அவர்கள் எல்லாம் இஸ்லாத்தில் இணைந்த பின்  மொழி பெயர்த்தவர்கள் அல்ல. ஒரு முஸ்லிமாக மாறி அதன்பின் , திருக் குரானை மொழிபெயர்த்தவர் என்ற வரிசையில் பிக்தால் முதலாமவர் ஆவார்.  

லண்டன் கேம்பிரிட்ஜில் ஒரு கிருத்தவராகப் பிறந்த பிக்தால் (Muhammad Marmaduke Pickthall (born Marmaduke William Pickthall, 7 April 1875 – 19 May 1936) அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டது எப்படி ? 

மத்திய கிழக்கு நாடுகளில் தனது பிரிட்டிஷ் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்த பிக்தால் , தான் குடியிருந்த வீட்டின் மேல்தளத்திலிருந்து  ஒரு காட்சியைக் கண்டார்.  

ஒரு பெரியவர்,   ஆடுமேய்க்கும் இளைஞன் ஒருவனை வாய்க்கு வந்தபடி பேசி கை நீட்டி அடிக்கிறார். அவனோ எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் பேச்சையும் அடியையும் வாங்கிக் கொண்டு பொறுமையாக கை கட்டி நிற்கிறான்; ஆனால் கண்ணீர் மட்டும் வழிகிறது. இப்படி ஒரு ஜடம்போல நிற்கும் அந்த இளைஞனை நோக்கி பிக்தால் படி இறங்கி  வந்தார். உங்களுக்குள் என்ன பிரச்னை? ஏன் அவர் உன்னை அடித்தார்? என்று அவனிடம் கேட்டார். 

“நான் அந்தப் பெரியவரிடம் கடன் வாங்கி இருந்தேன். அதை என்னால் குறிப்பிட்ட நேரத்தில் திருப்பித் தர இயலவில்லை அதனால் அவர் ஏசுகிறார்; அடிக்கிறார் “ என்றான் இளைஞன். 

“பணம் தரக்கூடாது என்று நான் நினைக்கவில்லை தந்துவிடுவேன் என்று சொல்லி இன்னும் சில நாட்கள் தவணை வாங்கி இருக்கலாமே!” என்றார்  பிக்தால். 

“இல்லை சார்! யாராவது கடனை வாங்கினால் உரிய நேரத்தில் திருப்பித் தரவேண்டியது உங்களின் கடமையாகும் என்று எங்கள் நபிகள் ( ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். நாம் சொன்ன கெடு முடிந்துவிட்டால் கடனைக் கேட்க கொடுத்தவருக்கு முழு உரிமை இருக்கிறது. கெடுவுக்குள் கொடுக்க இயலாத குற்றத்துக்கு நான் ஆளாகி கூனி நிற்கிறேன் . ஏற்கனவே அந்தக் குற்றத்துக்கு ஆளான நான்,  அந்த மனிதரை எதிர்த்துப் பேசியும் திருப்பி அடித்தும் இன்னொரு குற்றத்தையும்  செய்ய    விரும்பவில்லை . எனது இறைவனுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் “ என்று இளைஞன் கூறினான். 

பிக்தால் சிந்திக்க ஆரம்பித்தார். எத்தனையோ நூற்றண்டுகளுக்கு முன் வாழ்ந்து ,  உபதேசித்து மறைந்த ஒருவர் மீதும் அவரது போதனைகள் மீதும் இவ்வளவு பற்றுள்ளவனாக ஒரு பாமரன் இருக்கிறானே அப்படியானால் அவர்  இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருப்பார்? அவரை  அப்படி சொல்ல வைத்த சக்திதான் எது என்று தேட ஆரம்பித்தார். அவரது தேடலின் விளைவு வில்லியம் பிக்தாலை முகம்மது பிக்தாலாக மாற்றியது.  

மாஷா அல்லாஹ்! 

நான் மீண்டும் குறிப்பிடுகிறேன். 

இஸ்லாம் போதித்த  வாழ்வுமுறைகளை முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டும்போது அதுவே  ஒரு மறைமுக அழைப்புப் பணியாக கருதப்படும்.  அறிவுபூர்வமான மனமாற்றங்கள் ஏற்பட     பொதுவாழ்வில் நமது நற்குணங்களும் நற்பணிகளுமே       வழிவகுக்கும். 

அன்பான அணுகுமுறை, வெல்ல இயலாத மனங்களை வென்று விடும். அப்போது அழைப்புப் பணி,  மதமாற்றமாகத் தோன்றாது; மனமாற்றமமாகவே தோன்றும்.

இப்ராஹிம் அன்சாரி

16 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

அழைப்புபணியை ஏற்று இஸ்லாத்திற்க்குவந்த 'புதிய' இஸ்லாமியனுக்கு 'பழைய' இஸ்லாமியன் மாப்பிளை-பெண் சம்பந்தம் செய்துகொடுத்து ஒட்டுறவோடுவாழ்வார்களா?

Ebrahim Ansari said...

அன்புள்ள மச்சான் !

அஸ்ஸலாமு அலைக்கும்.

சில ஊர்களில் நிலவும் மக்களின் மனப்பான்மையை வைத்து இந்தக் கேள்வியை எழுப்பி இருக்கிறீர்கள்.

ஆனால் பல ஊர்களில் / நாடுகளில் "புதிய " "பழைய "என்பது ஒரு பொருட்டாகவே இல்லை. இதற்கான பல உயிருள்ள நிகழ்கால உதாரணங்களை இந்தத் தொடரில் நான் இன்ஷா அல்லாஹ் சுட்டிக் காட்டுவேன்.

அதே நேரம் மக்காவில் இருந்து புலம் பெயர்ந்த முஸ்லிம்களை மதினாவின் முஸ்லிம்கள் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டு தங்களின் சொத்து சுகங்களைக் கூட பங்கு வைத்துக் கொடுத்த பண்பாளர்களாக இருந்தார்கள். பலர் தங்களிடம் கூடுதலாக இருந்த மனைவிகளைக் கூட தலாக் செய்து வந்தவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள் என்பதே நமது வாழ்த்தப் படவேண்டிய வரலாறு. .

இதைப் பற்றி எல்லாம் இந்தத் தொடரில் நிறையப் பேசலாம்.

பலரின் உண்மை வரலாறுகளை இதில் எழுத விழைகிறேன்

மனு நீதித் தொடரைப் போல பல ஆண்டுகளாக மனதில் ஓடிய எண்ணங்கள் இந்தத் தொடரில் பிரதிபலிக்கும்.

அலசவேண்டிய பல செய்திகள் இந்தத் தலைப்பில் இருக்கின்றன.

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ளமைத்துனர்.அஸ்ஸலாமுஅலைக்கும் //சிலஊர்களில்நிலவும்மக்களின்மனப்பாண்மையைவைத்துஇந்தக்கேள்வியே எழுப்பிஇருக்கிறீர்கள்// உண்மைதான்.பாலை,சோலைபனிபட ர்ந்த நாடுகளுக்கு ஏற்ப இஸ்லாம் தன் கொள்கைகளில் விட்டுகொடுத்து அட்ஜஸ்ட்மெண்ட்செய்துகொள்வதில்லை.சிலஊர்களுக்குமட்டும்அதன் மனபான்மைக்குஏற்பமாற்றங்கள்உண்டாக்கப்பட்டதுஎப்படிஎன்பதைபற்றி எல்லாம்விபரமாக அறியவிரும்புகிறேன்.

Unknown said...

எழுதுங்க, எழுதுங்க, எழுதுங்கோ....!
அண்மைக் காலத்தில் (in the recent past) உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பின் காரணமாக, நிறையப் படித்திருப்பீர்கள். Good luck!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

ஆம்! அழைப்புப்பணி நம் அனைவர்மீதும் விதிக்கப்பட்டதாகும்.

வாழும் முறையில் பழக்கவழக்கங்களில் தூய இஸ்லாமியனாக வாழ்ந்து காட்டுவது அழைப்புப்பணியின் குறைந்தபட்ச அளவீடுதான். சொல்லாலும் பேச்சாலும் எழுத்தாலும் ஊடகங்கள் வாயிலாகவும் எத்தி வைத்து அழைப்பதுவும் நம் கடமைதான்.

அவ்வகையில் தங்களின் இந்தப் பதிவு தங்களுக்கு நிறைய நண்மைகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Ebrahim Ansari said...

அன்புக்குரிய அஹமது காக்கா !

ஆம் காக்கா. தங்களின் கீழ் பணியாற்றிய அனுபவங்களும் அதில் கற்றுக் கொண்ட பாடங்களும் இந்தத் தலைப்பில் எழுதியே தீர வேண்டுமென்ற உத்வேகத்தை அளித்தது.

இதனால் எனக்கு ஏதாவது நன்மைகள் எழுதப் பட்டால் அதன் தூண்டு கோலான உங்களுக்கு உரிய பங்கும் இன்ஷா அல்லாஹ் இருக்கும் காக்கா.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி சபீர்!

தங்களின் தொடர்ந்த ஆதரவும் து ஆவும் என்றும் வேண்டுகிறேன்.

Unknown said...

Assalamu Alaikkum

Respected brother Mr. Ebrahim Ansari,

Very good topic for the people of current world.

Yes. Islam should be conveyed by inspiration of practicing muslims. Its one of the most effective ways to convey the message of Allah to non-muslim brothers and sisters.

"முஸ்லிம்கள், ஒரு முன்னுதாரண வாழ்வை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் வாழும் வாழ்க்கை முறைகளைப் பார்த்தது மற்றவர்கள் பாடம் கற்றுக் கொள்ளத் தக்க வகையில் அவர்களது வாழ்க்கை இருக்க வேண்டும். நம்பிக்கை, நாணயம், வணிகத்தில் நேர்மை, வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல் போன்ற நல்ல தன்மைகளை பொதுவாழ்வில் வெளிச்சம் போட்டுக் காட்டும் முஸ்லிம்களால் அவர்கள் மேற்கொண்டுள்ள வாழ்வியல் முறையான இஸ்லாத்துக்கு அவை பெருமை தேடித்தரும். இத்தகைய இஸ்லாம் போதித்த வாழ்வுமுறைகளை முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டும்போது அது ஒரு மறைமுக அழைப்புப் பணியாக கருதப்படும். அறிவுபூர்வமான மனமாற்றங்கள் ஏற்பட பொதுவாழ்வில் நமது நற்குணங்களும் நற்பணிகளும் வழிவகுக்கும்."
Its absolutely right.

Jazakkallah khair.

B. Ahamed Ameen from Dubai.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.எழுதுங்க, எழுதுங்க, எழுதுங்கோ....!
அண்மைக் காலத்தில் (in the recent past) உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பின் காரணமாக, நிறையப் படித்திருப்பீர்கள். Good luck! இப்ப ஏற்று நடத்தும் பணி! மகத்தான பணி!

Ebrahim Ansari said...

அன்பான தம்பிகள் அமீன் , கிரவுன் தஸ்தகீர்.

தங்களின் கருத்துக்கள் இந்தப் பதிவுக்கு உரமேற்றுபவை. ஜசாகல்லாஹ் ஹைரன்.

Ebrahim Ansari said...

அன்பான தம்பிகள் அமீன் , கிரவுன் தஸ்தகீர்.

வ அலைக்குமுஸ் சலாம்.

sabeer.abushahruk said...

மதமாற்றம் வன்முறை. நேர்வழிக்கு அழைப்பது மிதவாதம். மதமாற்றம் திணிப்பு. எத்திவைப்பதும் அழைப்பதும் உபசரிப்பு. தலைவர்கள் என்னும் போர்வையில் தறுதலைகள் ஆளும் தேசத்தில் பெரும்பான்மையினரிடம் மத துவேஷத்தை விதைத்து குளிர்காய்கிறதொரு கூட்டம். பதருப்போர் நினைவுக்கு வருகிறது. கூடிய எண்ணிக்கையை நம்பியோரை அல்லாஹ் வீழ்த்தியது வரலாறு.

அதிரை.மெய்சா said...

அழைப்புப்பணி ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமை என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியாதவர்களுக்கெல்லாம் அறியத்தந்துள்ளீர்கள். அருமை.

தாங்களின் எழுத்துக்கள் எப்பொழுதும் புவி ஈர்ப்பு சக்தி போல ஈர்ப்புடையதாக இருக்கும். அந்த வகையில் பல சம்பவங்களை சுட்டிக்காட்டி இக்கட்டுரைக்கும் ஈர்ப்பு சக்தியை எழுத்து வடிவில் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Ebrahim Ansari said...

கட்டுரையை வரவேற்ற தம்பி மெய்ஷா அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டு இருக்கிறோம்.

N. Fath huddeen said...

அடிக்கடி Dr. KVS சொல்லுவார்: குர்ஆனில் Convey தான் இருக்கே தவிர Convert இல்லை என்று!

அதுதான் நமது பணி.

நபி (ஸல்) அவர்களும் கூட ஹஜ்ஜதுல் விதாவில் சொன்னது: இங்கே வந்திருப்பவர்கள் இங்கே வராதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் உங்களைவிட நல்ல முறையில் விளங்கிக்கொள்ளக் கூடும் என்று.

அதுதான் இப்ப எல்லா நாடுகளிலும் நடக்கிறது.

Ebrahim Ansari said...

Dr. KVS அவர்கள் குறிப்பிடும் சாராம்சத்தை நினைவூட்டிய தம்பி N. Fath huddeen அவர்களுக்கு நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு