Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எப்படியும் கம்பன் வருவானா? 15

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2013 | , , , ,


மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் இன்று (26-02-13) மத்திய ரயில்வே பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் (பாராளுமன்ற தாக்குதல் அல்ல) செய்ய இருக்கிறார். ஆனால் அதில் நமதூர் வழி திருவாரூர் காரைக்குடி அகல ரயில்பாதைப்பற்றி ஏதேனும் சொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் ஒன்றும் தெரிவிக்கவில்லை.

இந்த வழித்தடத்தில் காலம் காலம் ஓடிய கம்பன் எக்ஸ்பிரஸ் என்ன ஆனது?

அதில் பல வருடங்கள் பயணித்து அனுபவித்த பகுதி மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த பலன்கள் என்ன?

மத்திய உள்துறை மந்திரியாக இருந்த சமயம் திரு. ப. சிதம்பரத்தை நம் ஊர் பெரியவர்கள் அவர் வீட்டில் நேரில் சந்தித்து அகல ரயில்பாதையை துரிதப்படுத்தி அதில் கம்பனை விரைவில் ஓட்டச்செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டு கொடுக்கப்பட்ட மனுவிற்கும் பிறகு அவர் மத்திய அரசின் லட்டர் பேடிலிருந்து அதை பெற்றுக்கொண்டதற்காகவும் பின்னர் அதை ரயில்வே துறை அமைச்சருக்கு பரிந்துரைக்கப்பட்டதற்காகவும் எழுதி அனுப்பப்பட்ட அந்த நகல் கடிதத்தால் ஏற்பட்ட பலன்கள் என்ன?

நமது தஞ்சை தொகுதி பாராளுமன்ற எம்.பி.யும் மத்திய நிதித்துறை இணையமைச்சருமான திரு. பழநிமாணிக்கத்தை நேரில் பல முறை சந்தித்து நமதூர் பெரியவர்கள் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கும், அகல ரயில் பாதை பணிக்காக அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கும் என்ன பலன் கிடைத்துள்ளது?

திமுகவின் பாராளுமன்ற எம்பிக்கள் குழு தலைவரும், முன்னாள் மத்திய கப்பல் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவரும், மன்னார்குடியை சொந்த ஊராகக்கொண்ட திரு. டி.ஆர்.பாலு அவர்களிடமும் நம்மூர் பெரியவர்கள் நேரில் சென்று மனு கொடுத்துள்ளார்கள். அதன் பலன் என்ன?

திரு. பழநிமாணிக்கம் அவர்களும், திரு. டி.ஆர். பாலு அவர்களும் நம் பகுதி அகல ரயில்பாதை பணிகள் பற்றி மாறி, மாறி பத்திரிக்கைகளில் பேட்டியும், வாக்குறுதியும் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து வந்தனர். அதன் பயன் தான் என்ன?

நமக்கு அருகில் உள்ள முத்துப்பேட்டையை சொந்த ஊராகக்கொண்டு வேலூர் தொகுதியின் தற்பொழுது எம்பியாக இருக்கும் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்களை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டு என்ன ஆனது?

புதிதாக ரயில் வழித்தடம் அமைத்துக்கேட்டால் அதனால் பாதிக்கப்படும் விவசாய நிலங்களின் உரிமையாளர்கள், விவசாயிகளால் பல போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஓடிக்கொண்டிருந்த குறுகிய ரயில்பாதையை அகல ரயில்பாதையாகத்தானே இப்பகுதி மக்கள் ஆக்கிக்கேட்கிறார்கள்? பிறகு ஏன் இந்த சுணக்கமும், தயக்கமும் என்று தெரியவில்லை.

இப்பகுதி உப்பளங்களாலும், கருவாட்டு மண்டிகளாலும் அரசுக்கு வருவாய் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்பகுதி மக்களின் வாக்குகளில் தானே நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராகி அங்கு அலங்கரிக்க முடிகிறது? என்ற குறைந்தளவு நன்றி விசுவாசம் நம் எம்பிக்களுக்கு வர வேண்டாமா?

இவர்களிடம் மனுக்கள் பல கொடுத்து நம் மக்கள் மல்லுக்கட்டி நின்றும், மாறி, மாறி இவர்கள் வாக்குறுதிகளை வாரி வழங்கியும் கடைசியாக நம் மண்ணில் கம்பனை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அதை பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் மிச்சம், மீதி உசுரோடு இருக்கும் எத்தனையோ நம் பெரியவர்களும் போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச்சேர்ந்து விடுவார்கள் போலும். அதற்குள் பல பாராளுமன்ற தேர்தல்களும், சட்ட மன்ற தேர்தல்களும் நம்மை சந்தித்து விட்டுப்போய் விடும் போல் தெரிகிறது.

மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சி +8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக அறிவித்திருந்தாலும் நம்மைப்பொறுத்தவரை இன்னும் நாம் -8 சதவிகிதம் தாழ்ச்சி அடைந்ததாகவே கருதவேண்டியுள்ளது பழைய பல விடயங்களை இன்று ஒப்பிட்டு பார்க்கும் பொழுது......

கணவன் இறந்ததால் ஒரு விதவையாக்கப்பட்ட மனைவிக்கு கழட்டப்படும் வண்ண ஆடை, அணிகலன்கள் போல் சமீபத்தில் நம் ஊர் இரும்பு ரயில் பாதைகள் பெயர்த்தெடுக்கப்பட்டன. அகல ரயில்பாதை பணி மூலம் அவளுக்கு என்று தான் அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு மறுமணம் செய்து வைக்கப்படுமோ? காத்தே இருப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

15 Responses So Far:

Yasir said...

கம்பன் இப்ப கனவில் கூட வரமாட்டேங்குதே....நிஜத்திலும் அம்போதான் என்று நினைக்கின்றேன்....சமுக அக்கறையுள்ள ஆக்கம் மு.செ.மு. நெய்னா முஹம்மது அவர்களிடமிருந்து

Yasir said...

டெல்லி: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 14 புதிய ரயில்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மத்தியி ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் இன்று தாக்கல் செய்தார். அப்போது புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதில் தமிழகத்திற்கு 14 ரயிலக்ளை அவர் அறிவித்தார். அதில் சில முக்கிய ரயில்கள் விவரம்.... சென்னை - பழனி இடையே ஜோலார்பேட்டை வழியாக தினசரி ரயில். சென்னை - காரைக்குடி வாராந்திர ரயில். கோவை - மன்னார்குடி இடையே தஞ்சாவூர், நீடாமங்கலம் வழியாக புது எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை - பிகானீர் வாராந்திர ரயில் சென்னை - வேளாங்கண்ணிக்கு விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக புது ரயில். கோவை - ராமேஸ்வரம் புதிய வாராந்திர ரயில். சென்னை - தஞ்சாவூருக்கு விழுப்புரம் வழியாக தினசரி ரயில் சென்னை ஷீரடிக்கு புது வாராந்திர ரயில் புதிய திட்டங்கள் பெரிதாக இல்லை இதைத் தவிர தமிழகத்திற்குப் புதிய திட்டங்கள், பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் பல்வேறு நீண்ட கால கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/26/india-14-new-trains-tamil-nadu-170477.html

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தக்க சமயத்தில் கட்டுரையை வெளியிட்ட அதிரை நிருபர் குழுமத்திற்கு நன்றிகள். எப்படியும் கம்பன் எக்ஸ்பிரஸை நம்மூர் வழித்தடத்தில் ஓட சிரத்தை எடுத்து முயற்சித்து வருவதால் ஆம்னி பஸ்களை இயக்குபவர்கள் ஏதேனும் கழிப்பு களித்து மந்திரித்து செய்ய வேண்டியதை செய்து விடுவார்கள் என யாரும் பயப்பட வேண்டியதில்லை.

நமது பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. திரு ரங்கராஜன் அவர்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் என்பதால் இந்த பிரச்சினையில் கட்சிகள் சாரா மக்களுடன் சேர்ந்து போராட தயங்காமல் தாராளமாக இலக்கை எட்டும் வரை போராடலாம்.

அடுத்த பிரதமர் அம்மா வந்தால் தான் நம்மூருக்கு இந்த கம்பனும் வருவான் போல் தெரிகிறது? என்று யாரேனும் காங்கிரஸ் காதில் போட்டு வைத்தால் தான் சட்டுபுட்டுண்டு வேலை நடக்கும் போல் தெரிகிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n):

கம்பன நமக்கு வம்பனாகவே போயிட்டானே ! :(

ஒரு புராணம் எழுதினான் - அன்று
மனோராவை தனதாக்கிக் கொண்டான்...
தண்டவாளத்தையே கழட்டிக் கொண்டான்.... :)

Ebrahim Ansari said...

தகுந்த நேரத்தில் வெளியிடப்பட்ட நினைவூட்டல் கட்டுரை.

காரைக்குடி - திருவாரூர் என்பதல்ல பட்டுக்கோட்டை - திருவாரூர் அகலப்பாதையே நமக்குத்தேவை.
பட்டுக்கோட்டை - காரைக்குடி வேலைகள் நடைபெற்று வருகின்றன. முத்துப் பேட்டையில் அகல இரயில்பாதைக்குரிய தண்டவாளங்கள் இறக்கி அடுக்கிவைக்கப்பட்டு கிடக்கின்றன. இந்த பாதைக்கு கடந்த பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி இருப்பதாகச் சொன்னார்கள். இயங்கிக் கொண்டு இருந்த புகைவண்டியையும் நிறுத்திவிட்டார்கள். ஆனால் உண்மை நிலைமை என்ன?

ஏற்கனவே இருந்த மீட்டகேஜ் பாதையில் இடையில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளை மட்டும் ஒதுக்கிவிட்டு அதாவது பேரளம், பூந்தோட்டம், ஏனங்க்குடி , சன்னா நல்லூர், நாச்சி குளம் ,முத்துப்பேட்டை , அதிராமபட்டினம் ஆகிய பகுதிகளை மட்டும் ஒதுக்கிவிட்டு பட்டுக்கோட்டை காரைக்குடி போன்ற காட்டுக்கருவை பகுதிகளை மட்டும் சலுகை கொடுத்து வேலைகளை துரிதப் படுத்துவது பாகுபாட்டின் உச்ச கட்டம்.

மீண்டும் ஒரு Range of agitations தேவை என்று நினைக்கிறேன்.

பந்தி பரிமாறும்போது இடையில் நாலு இலைகளை விட்டுவிட்டுப் பரிமாறும் பண்பாட்டை எங்கிருந்துதான் இவர்கள் கற்றார்கள்?

பழைய கோரிக்கைகளை காற்றில் போகவிட்டு இப்போது பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் என்று புதிய அறிவிப்பு வந்திருக்கிறது. வரவேற்போம். அதே நேரம் முதலில் எங்களுக்குப் போட வேண்டியதைப் போடு என்ற குரல் உரத்து ஒலிக்க வேண்டும்.
பாராட்டுக்கள் தம்பி நெய்னா.

Ebrahim Ansari said...

கடந்த ஒரு வருடத்தில் பல இரயில்வே அமைச்சர்கள் மாறிவிட்டார்கள். ஒரு வேளை முன்னால் இந்தப் பதவியில் இருந்தவர் புதிதாக வந்த அமைச்சரிடம் பட்டுக் கோட்டை - திருவாருர் கணக்கு நோட்டைக் கொடுக்காமல் போய்விட்டாரோ?

sabeer.abushahruk said...

களத்தில் இறங்கி கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்த வேண்டும். உச்சகட்டமாக தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக இப்பவே பூச்சி காட்ட வேண்டும்.

ஏக்கம் தரும் ஆக்கம் எம் எஸ் எம், வாழ்த்துகள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இப்பவே பூச்சி காட்ட வேண்டும்.//

யாங்காக்கா !

நாகூர் தர்கா, வேலாங்கன்னி இப்புடி கவனமா எல்லாம் செய்றாய்ங்க !!

காலிகட்டிலிருந்து ஜொஹராமா கபுருக்கு அண்டர் கிரவுண்ட் தண்டவாளம் ஏதும் போட்டுகிட்டு இருக்காய்ங்களோ ?

Adirai pasanga😎 said...

என்னதான் ஊதின சங்கை ஊதுவோம் என்று இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு வகைகளிலும் முயற்சி செய்தும் இதற்கான பலன் கிட்டாமல் ஏக்கமும் ஆத்திரமும் தான் மிச்சமாகவுள்ளது. எருமை மாட்டின் மேல் மழை பேஞ்ச மாதிரின்னு சொல்வாங்கள்ள, செவிடன் காதில் ஊதின சங்கு மாதிரின்னு சொல்வாங்கள்ள அது மாதிரி இருக்குது மத்திய அரசின் நிலை.

பொது மக்களில் ஒரு சிலர் தவிர பெரும்பாலோர் அரசின் எந்த திட்டமாக இருந்தாலும் உடம்பு வலிக்காமே தானாக கிடைத்தால் மட்டும் அனுபவிக்க ரெடியாக இருக்கிறார்கள். பொது விசயத்திற்க்கு ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டும் போராடும்போது மற்றவர்கள் நமக்கென்ன என்றிருக்கிறார்கள். அட வந்தால் நமக்கும்தானே பலன் என்று ஒருங்கினைந்து போராடுவதில்லை. அதற்க்கு அடுத்தபடியாக தேவைகளை அடைவதர்க்கு முக்கிய ஆயுதம் தேர்தல்தான். காலமெல்லாம் 5 வருடங்கள் ஏமாற்றிவிட்டு தேர்தல் தருணத்தில் வந்து கூழைக்கும்பிடு போட்டு ஏதோ அவனப்பன் வீட்டு காசை தருவதுபோல் ஒருசில நோட்டுக்களை வீசியெறிந்து விட்டு ஓட்டுக்களைப் பொ(ரி)றுக்கி செல்கிறார்கள். இப்படியே எல்லா வகைகளிலும் நம் சமுதாயம் புறக்கனிக்கப்படுகிறது. இத்தருணத்தில் தேவை நமக்கும் நமது சமுதாய தலைவர்(?)களுக்கும் தேவை விழிப்புணர்வு. இல்லையேல் கம்பன் என்ற பேரில் எவனாவது வருவானே தவிர - கம்பனுக்கு பே.. பே..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஊக்கம் தரும் ஆக்கம் நெய்னா! வாழ்த்துக்கள்.

சொன்ன மாதிரி அம்மா பிரதமரா வரனும், அதுபோல நம்ம தொகுதிக்கு அவங்க கட்சி MLA MP வரனும், அப்ப கம்பனும் நிச்சயம் வரும். அதுக்கு முன்னாடி இந்த காங்கிரசும் திமுகவும் வேலையை துவங்காவிட்டால் அடுத்த வருசம் மே யில் இதான் ஏகோபித்த முடிவு.

Ebrahim Ansari said...

முதலாவதாக அதிரை புறக்கணிக்கப்பட்டது சாலை சம்பந்தப் பட்டதில் . சேதுரோடு என்பதை நியாயமாக தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலையில் இருந்து அதிரை ரோட்டுக்குள் திருப்பி இராமேஸ்வரம் வரை செல்ல வேண்டியதை பட்டுக்கொட்டைக்குள் திருப்பிவிட்டு பிறகு அங்கிருந்து சேதுபாவா சத்திரம் வழியாக செல்ல வைத்தார்கள். இந்த துரோகத்தை செய்தவர் காமராஜ் ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து பிறகு இந்தியக் குடியரசுத்தலைவராகவும் பதவி வகித்த இராஜமடம் வெங்கட்ராமன். இந்த துரோகம் நடைபெறாவிட்டால் இராஜமடம் பாலம் என்றோ கட்டப்பட்டு இருக்கும். அதன் பிறகு தி. மு.க ஆட்சி வந்த பிறகுதான் இந்தப் பாலம் கட்டப்பட்டு கலைஞர் திறந்து வைத்தார்.

அதன்பிறகு இப்போது இரயில்வே துறையில் குறிவைத்து அதிரைப் பகுதி புறக்கணிக்கப் பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை - மன்னார்குடி -வேளாங்கண்ணி- என்றெல்லாம் புதிய புதிய திட்டங்கள்- வழித்தடங்கள் சேர்க்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் செல்ல அறிவுப்புகள் வரும்போது ஏற்கனவேயுள்ள வழித்தடத்தை அப்படியே போட்டு வைப்பது ஊர்ரர் வீட்டுக் கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஒதுவதுபோல் இருக்கிறது.

அப்துல்மாலிக் said...

அகல ரயில் பாதைக்குண்டான வேலைகள்தான் நடந்துக்கிட்டிருக்கே.. any changes?

Anonymous said...

சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது அவர்களின் தங்கமான ஆதங்கம் உணரமுடிகின்றது. ஆனால் உணரக்கூடியவர்கள் தான் உணர்ச்சி யற்றவர்களாக இருக்கின்றார்கள். இதனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு கழுதை ஏதாவது ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும் மறவாமல் நாம் ஒட்டைப்போட்டு விடுவோம். அது வழக்கமாக தன் உதை படலத்தை உங்களுக்கு காட்டி தன் குண நலனை உங்களுக்கு காட்டும்..

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சாலே, ஒரு பஞ்சரான பாசென்ஞர் எக்ஸ்பிரஸ் மாதிரி தான் இந்த பட்(ஜெட்டை ) தாக்கல் செய்துள்ளார்.

//பின் கம்பன் வருவானா...? //

என்று வரலாறு பூர்வமான ஒரு கேள்விக்கு, எப்படி கம்பன் வருவான்....? கம்பன் செத்துதான் பல வருடங்கள் ஆகிவிட்டனவே...! எனவே கம்பன் மட்டுமல்ல, அவனின் பெயரில் ஓடிய ரயிலும் திரும்ப வரப்போவது இல்லை..!

//இந்த வழித்தடத்தில் காலம் காலம் ஓடிய கம்பன் எக்ஸ்பிரஸ் என்ன ஆனது?//

வடிவேலு கிணற்றைக் காணோம் என்று ஒரு கம்ப்ளெயின்ட் குடுத்தமாதிரி, வேணும் என்றால் நாமும் நம்ம ஊருக்கு வந்த கம்பன் எக்ஸ்பிர(ச்சனை)ஸ்சை கானவில்லை என்று ஒரு கம்ப்ளெயின்ட்டை கொடுப்போம்..! அப்பவாவது நம்மூர் போலிஸ் நடவடிக்கை எடுக்குமுல்லே..!

//பகுதி மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த பலன்கள் என்ன?//
பதில் வெரி சிம்பிள்..! அதான் ஆப்பு....!!

//மத்திய உள்துறை மந்திரியாக இருந்த திரு. ப. சிதம்பரத்தை நம் ஊர் பெரியவர்கள் அவர் வீட்டில் நேரில் சந்தித்து....அந்த நகல் கடிதத்தால் ஏற்பட்ட பலன்கள் என்ன?//

அதான் அவரு நிதி அமைச்சராக இருந்து பின் உள்துறை மந்திரியாகி, பின்னே நிதி அமைச்சராக ஆகிட்டாருல்லே..! பின்ன என்ன கேள்வி வேண்டி கிடக்கு...! அவர் அவர் வேளையில் கண்ணும் கருத்துமாக இருக்குறாரு...! அவரைப்போய் வம்புக்கு இழுத்துகிட்டு...!

பின்னே, நீங்க குடுத்த மனுவை அவர் தன் தொகுதின்னு தப்ப நினைத்து கம்பன் எக்ச்பிரசஸ்சை அவர் ஊர் வரை இழுத்துட்டார்ள்ளே..! பலே, பலே, ப.சி...! இதமாதிரி இன்னும் பல சாதனைகளை செய்ய வாழ்த்துக்கள்...!

//தஞ்சை தொகுதி பாராளுமன்ற எம்.பி.யும் மத்திய நிதித்துறை இணையமைச்சருமான திரு. பழநிமாணிக்கத்தை நேரில் பல முறை சந்தித்து நமதூர் பெரியவர்கள் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கும், அகல ரயில் பாதை பணிக்காக அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கும் என்ன பலன் கிடைத்துள்ளது?//

அவர்தான் தன் குரு, ஆசான், தன் துறை மூத்த மந்திரி ப.சி தன் தொகுதிக்கு இந்த ரயிலை காரைக்குடிக்கு கொண்டு போகும் போது ஏதாவது பண்ண முடியுங்களா..?. நம்ம எம்.பி ஏற்கனவே டி.ஆர் பாலுக்கிட்ட மல்லுகட்டி நிற்குராறு..! இதுகூட இப்போ ப.சி யையும் கூட சேர்க்க முடியாதுல்ல...!

அவர்தான் உங்களுக்கு ரயிலுக்கு பதில், அதிரைக்கு பஸ் வந்து ஒரு ரவுண் அடித்து செல்லும் அளவிற்கு ஒரு பஸ் ஸ்டான்ட் கட்ட நிதி ஒதுக்கிட்டாராமே..!. இனி அதிரை மக்கள் எல்லாம் பஸ்ஸையே ரயிலாக நினைத்து பயணம் செய்யுங்கப்பா...!. ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்ற ஒரு பழமொழியை நினைவில் கொண்டால் உங்களுக்கு மனதுக்கு ஆறுதல் தரும்..!

Continue.. 1/2

Anonymous said...

Continue.. 2/2

//திமுகவின் பாராளுமன்ற எம்பிக்கள் குழு தலைவரும், முன்னாள் மத்திய கப்பல் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவரும், மன்னார்குடியை சொந்த ஊராகக்கொண்ட திரு. டி.ஆர்.பாலு அவர்களிடமும் நம்மூர் பெரியவர்கள் நேரில் சென்று மனு கொடுத்துள்ளார்கள். அதன் பலன் என்ன?//

சும்மா சின்னப்புள்ளை தனமா கேள்வி கேட்டக்கூடது..! அவர்தான் பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு ரயிலுக்கு ஏற்பாடு பண்ணிட்டாருல்ல...! தன் ஊரில் இருக்கும் அவரின் ஆலைக்கு வசதி ஏற்படுத்துவாரா இல்லை உங்களுக்கு ரயில் விடுவாரா...?

//நமக்கு அருகில் உள்ள முத்துப்பேட்டையை சொந்த ஊராகக்கொண்டு வேலூர் தொகுதியின் தற்பொழுது எம்பியாக இருக்கும் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்களை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டு என்ன ஆனது?//

நம்ம ரஹ்மான் காக்காதான் உங்களுக்கு தன்னிலை விளக்கம் மேடையிலும் அதிரை இணையத்திலும் பதில் கொடுத்து விட்டாரே..! பின்னே இப்போ காக்கா கொஞ்சம் வளைகுடா பக்கம் பிசி. அதனால் நீங்கள் ப.சி யையே மீண்டும் அழுத்தம் கொடுத்து பாருங்கள்..!

//புதிதாக ரயில் வழித்தடம் அமைத்துக்கேட்டால் அதனால் பாதிக்கப்படும் விவசாய நிலங்களின் உரிமையாளர்கள், விவசாயிகளால் பல போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஓடிக்கொண்டிருந்த குறுகிய ரயில்பாதையை அகல ரயில்பாதையாகத்தானே இப்பகுதி மக்கள் ஆக்கிக்கேட்கிறார்கள்? பிறகு ஏன் இந்த சுணக்கமும், தயக்கமும் என்று தெரியவில்லை.//

சும்மா காமெடி கீமடி எல்லாம் பண்ணக்கூடாது..! என்னது ....? ஓடி கொண்டிருக்கும் ரயிலாம்...!. ரயில் நம் ஊரை விட்டு ஒரேடியாக ஓடி பல வருஷமாச்சு..! இன்னுமா இந்த கேள்வி..?

//கணவன் இறந்ததால் ஒரு விதவையாக்கப்பட்ட மனைவிக்கு கழட்டப்படும் வண்ண ஆடை, அணிகலன்கள் போல் சமீபத்தில் நம் ஊர் இரும்பு ரயில் பாதைகள் பெயர்த்தெடுக்கப்பட்டன. அகல ரயில்பாதை பணி மூலம் அவளுக்கு என்று தான் அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு மறுமணம் செய்து வைக்கப்படுமோ? காத்தே இருப்போம்.//

ஓடியது காதர் ரயிலாக இருந்தால் மறுமணம் பற்றி யோசிக்கலாம்...! ஆனால் கம்பன் ரலிலுல்லே இது..!. அதனால் மறுமணத்திற்கு ச்சான்ஸே இல்லே..!!

அதான் இனி காரைக்குடி-பட்டுகோட்டை-மன்னார்குடி-சென்னை என்று சொர்க்கத்தில் திருமணம் நிச்சயமாகி விட்டதைப்போல முடிவாகி விட்டது. அதனால் பட்டுக்கோட்டைக்கு வந்து சென்னைக்கு செல்ல பந்தி வைக்கலாம்..!
கம்பன் வீட்டு தரியும் கவிபாடுமாம்..! இனி கம்பன் ரயிலும் அதிரையைவிட்டு தறிகெட்டு ஓடுமாம்....!

என்னடா இப்புடி எதிர்மறையாகவே எழுதி இருக்குறானே என்று நினைக்க தோன்றும்...! துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்ற வரியை நினைவில் கொண்டாள் வாழ்வில் இந்த நாள் மட்டும் அல்ல எந்த நாளும் நல்ல நாளே..!

இறுதியாக இனி அதிரைக்கு பூங்கா ரயில் கூட வராது..! அதையும் மீறி வந்தால், ரயில் வரும்...! ஆனால் வராது.....!!.

அதிரை முஜீப்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

நெய்னா காக்காவின் ஆக்கம் பொறுமையின் ஆத்துமீறல் அமைதியின் எழுச்சி கம்பனுக்காக காத்திருந்தது போதும் என்றொரு கோபம் அருமையான ஆக்கம் ஜசக்கல்லாஹ் ஹைர்

அதிரை முஜீப் அவகளின் கருத்து ஒரு தனி ஆக்கமாக அமைந்தது மேலும் நகையும் அதனுள் சிந்திக்க கூடிய பல "நச்" கொட்டியிள்ளார் வாழ்த்துக்கள் கம்பன் வரட்டும் வந்தால் அதில் முதல் டிக்கெட் உங்களுக்கு தான் (கம்பனும் வரபோரதில்லை என்றொரு நம்பிக்கையில்)

\\இறுதியாக இனி அதிரைக்கு பூங்கா ரயில் கூட வராது..! அதையும் மீறி வந்தால், ரயில் வரும்...! ஆனால் வராது.....!!.//

இறுதியில் கொட்டிய கொட்டு தான் வலிக்கிறது வலியில் சிரிப்பு வேற இதுவொன்றும் ஆனந்த கண்ணீரல்ல வேதனை கண்ணீர் ஆக சிந்திக்க மட்டும்தான் முடியும் நம்மனாலே...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு