அவர்களின்
காலடியோசை
மெல்லமெல்லக் கரைந்து
விலகிச் சென்றதும்
தனிமை உக்கிரமாகத் தாக்கும்
அடுக்குமாடி கட்டடங்களின்
வசிப்பிடங்களைப் போல
குடியமர்த்தப்பட்டாலும்
ஆளரவமற்ற
அமைதியே நிலவும்
திடீர் மின்வெட்டால்
இருளின் அடர்த்தி கூடிப்போய்
நடமாட முனைந்தால்
தொடையில் தட்டும்
மேசையின் விளிம்பையோ
கால்களை இடறும்
கலைந்து கிடக்கும் பொம்மைகளையோ
அனுமானிக்க முடியாமல் வியாபித்திருந்தாலும்,
விடியலை எதிர்பார்த்துப் பழகி
இருட்டை ஊடுருவும் புலன்கள்கூட
செயலற்றுப்போகுமாறு
சூழும் இருளில்
இரட்டிப்பு இருட்டிருக்கும்
ஆத்திகம் வரையறுக்கும்
நரகம் அடுத்துவிட்டதைப்போல்
வெட்பம் தாக்கினாலும்
மாற்றுடை இல்லாத
சீருடை
நனைந்துவிடாது
தனிமையில் லாவன்டரும்
மனைவியுடன் மல்லிகையும்
பிடிக்குமெனினும்
மனம் லயிக்காதச்
சூடமும் சந்தனமும்
நாசியிலும் நாடி நரம்புகளிலும்
நறுமணம் வீசினாலும்
களிமண் மணமே மீறும்
நீட்டிப்படுத்திருக்க வேண்டும்
என்னும் நிபந்தனையில் சலுகையிருக்காது
முழங்கால் மடக்கவோ
முதுகு சொறியவோ தேவையிருக்காது
புரண்டு படுக்கக்கூட
போதுமான
இடம் இருக்காது
எல்லைமீறிய வேதனைகள்
கைமீறிப் போயிருக்கும்
நல்லவேளை
இவ்வாறாக அடையாளம் காணப்பட்டவை
என்னைச் சூழும்போது
இன்று ஊசலாடும் உயிர்
என் உடலில்
இல்லாமல் இருக்கும்.
சபீர் அபுஷாருக்
36 Responses So Far:
"தனிமையில் லாவன்டரும்
மனைவியுடன் மல்லிகையும்
பிடிக்குமெனினும்
மனம் லயிக்காதச்
சூடமும் சந்தனமும்
நாசியிலும் நாடி நரம்புகளிலும்
நறுமணம் வீசினாலும்
களிமண் மணமே மீறும் "
மாஷா அல்லாஹ் சபீர்
உன் வார்த்தைகளில் எத்தனை
ஆழம், அகலம், நீலம்
அனுபவிக்காத ஒரு செயளை
அனுபவித்து வந்ததுபோல்
எழுதியிருப்பது ரொம்ப அருமையான
வரிகளாக இருந்தாலும்
முன்கர் நக்கீரை பார்க்கச்சென்றவர்களில் நீயும் ஒரு ஆளாக இருக்குமோ என்று ஒரு சிறு சந்தேகம்.
அரங்கேறும் மண்ணறை அற்புத வாக்கில்
தரங்கூறும் ஒத்திகை தான்.
அசத்தல் வரி சபீர் காக்கா..
எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.
ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே.. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.
மறுமை சிந்தனை என்றென்றும் நிலவி அல்லாஹ்விற்கு பயந்து தீயக்காரியங்களில் விட்டு விலகி நற்காரியங்களில் தன்னை முழுவதுமாக வல்லோன் நம் அனைவரையும் ஈடுபட செய்வானாக...ஆமீன்
"அடக்கத்தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" நபிமொழி
சரியான பதில்களைக் கூறி மண்ணறை வாழ்வில் வெற்றி பெறுபவர்களாக நாம் ஆவதற்கு வல்ல அல்லாஹ்வின் பேரருளை வேண்டுவோம்; மண்ணறை வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய முயற்சிகளில் முனைப்புக் காட்டுவோம்; வெற்றியடைவோம், இன்ஷா அல்லாஹ்!
படிப்பினை பெற
படமாய்ச் சொல்லும் கவிதை.
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer Abushahrukh,
Your lines of died human's view of himself is nice imagination and wordings.
A mysterious grave life is exposed
With reverse perceptional view from death
Its an unimaginable being without soul
And mind lost its sensing channels.
Good reminder about death leading to hereafter.
Jazakkallah Khairan
B. Ahamed Ameen from Dubai.
http://www.dubaibuyer.blogspot.com
//நீட்டிப்படுத்திருக்க வேண்டும்
என்னும் நிபந்தனையில் சலுகையிருக்காது
முழங்கால் மடக்கவோ
முதுகு சொறியவோ தேவையிருக்காது//
என்ன சொல்ல? எப்படிப் பாராட்ட என்றே தெரியவில்லை.
தத்துவச் சாறு பிழிந்து தரப் பட்டு இருக்கிறது.
ஒரு சின்ன வட்டத்துக்குள் இருக்கும் தம்பி சபீர் வெளிவட்டத்துக்கு வியாபித்து வரவேண்டுமென்று விரும்புகிறேன் வாழ்த்துகிறேன்.
//அடுக்குமாடி கட்டடங்களின்
வசிப்பிடங்களைப் போல
குடியமர்த்தப்பட்டாலும்
ஆளரவமற்ற
அமைதியே நிலவும்//
வேதனைகள் இல்லாமல் அமைதி நிலவ அல்லாஹ் பாதுகாக்கனும் ஆமீன்
Ebrahim Ansari காக்கா சொன்னது…
//ஒரு சின்ன வட்டத்துக்குள் இருக்கும் தம்பி சபீர் (காக்கா) வெளிவட்டத்துக்கு வியாபித்து வரவேண்டுமென்று விரும்புகிறேன் வாழ்த்துகிறேன்.//
அப்படினா, வைரமுத்து ரேஞ்சிக்கு, கவிதை இருக்குனு அர்த்தம், அதாவது இப்ராஹிம் அன்சாரி காக்கா உங்களை பெறிய அளவுள எழுத சொல்ராங்க.
”மரணக்குழி”யைப்பற்றி அச்சத்தை ஏற்படுத்தும் கவிச்சாட்டை இக்கவிதை.....வார்த்தெடுத்த வார்த்தைகளும் அதன் நிறைந்த கருத்துக்களும் அதனைப்பற்றிய ஒரு விதமான “கிழி”யை ஏற்ப்படுத்துகின்றன..அல்லாஹ் நம் அனைவரையும் நன்மையின்பால் ஈர்த்து இக்குழியின் வேதனையிலிருந்து காப்பானாக!!! ஆமீன்....இதனை தகுந்த நேரத்தில் தனக்கே உரிய ஸ்டையில் கவிதையாக வடித்த கவிக்காக்காவிற்க்கு நன்றிகள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
சபீர் காக்கா,
அந்த நாள் வரும் முன் சுதாரித்துக்கொள்ள அர்த்தமுள்ள கவிதை.
"கிழி"யை "கிலி" என்று மாற்றிபடிக்கவும்
மழை வீடு
கடமை முடிந்து
திரும்பி வரும்போது
மழை பிடித்துக் கொண்டது!
ஒருசில அடிகள்
வேகமாக ஓடி
ஒதுங்குவதற்குள்
உடையெல்லாம்
நனைந்து விட்டது!
இப்போது -
மழையை விட்டு ஒதுங்க
மனமில்லாமல்
நனைந்துகொண்டே
நடக்க ஆரம்பித்தேன்!
மண் வீடு
தாக்குப் பிடிக்குமா?
தண்ணீர் ஒழுகி இருக்குமா?
வீட்டை பற்றிய கவலை
மனதை
ஆக்கிரமித்து
இம்சித்தது!
ஒதுங்கி நின்றவர்கள்
என்னை
ஒதுங்க அழைத்த கூச்சலும்
கிண்டல் சிரிப்பும்
மழை சத்தத்தில்
கரைந்து போயின!
வீடு வந்து சேர்ந்து
மனைவி தந்த
சூடான தேநீரைக்
குடித்த பிறகும்
மனதில் இறங்கிய
குளிரின் நடுக்கம்
குறையவில்லை!
மின்னலைப்போல்
நெஞ்சுக்குள்
பளீரென வெட்டி
சிலிர்க்க வைத்தது
அந்த சிந்தனை!
"மண்ணறைக்குள் அடக்கம்
செய்யப்பட்ட உடல்
இந்நேரம் நனைந்திருக்குமோ "
- அபூ ஹஷிமா
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்ஸாரி காக்கா எல்லாமே
அருமையான வரிகள்
'மண் வீடு
தாக்குப் பிடிக்குமா?'
என்ற தலைப்பு இடாவிட்டாலும்
மண் வீட்டாரின் மழைகால கவலையை
மண்ணரைக்குள் புதைத்திருக்காமல்
தனி பதிவாக பதித்திருக்கலாம்
அதிரைமன்சூர்
ஜித்தா
அலைக்குமுஸ் ஸலாம்.
அன்பின் தம்பி மன்சூர்! கவிஞர் சபீர் அவர்களின் இந்த அற்புதமான கவிதையைப் படித்த போது என்றோ எனது நண்பர் அபூஹஷிமா அவர்கள் எழுதி, நான் படித்த கவிதை நினைவில் வந்தது. ஆகவே அதைத்தேடி பிரதி எடுத்து ஒட்டி அனைவருக்கும் பகிர்ந்தேன்.
வஸ்ஸலாம்.
எந்த தலைப்பை எடுத்தாலும் தரம் குறைந்த கவிதையை சபீர் தந்ததே .இல்லை.
அந்த வரிசையில் இதுவும் என்று .
என்ன ஒரு வித்தியாசம் என்றால்,
மரணம் என்னும் அசுரனை இந்த முறை கையில் எடுத்து நம்மை எல்லாம் கதி கலங்க அடித்திருக்கின்றான்.
கண்டிப்பாக மரண பயத்தை தருகின்ற இதுபோன்ற கவிதைகளை
அடிக்கடி சபீரின் விரல்கள் சொடுக்கவேனும்.
அதைக்கண்டு மறுமையின் பயம் அறியாதவர்களுக்கும்
கொஞ்சமாவது திடுக்கம் வரவேணும்.
வாழ்க உன் " திடுக் " கவிதை.
அபு ஆசிப்.
மன்சூர் / இப்றாகிம் அன்சாரி காக்கா அவர்கள்,
தொடர்புடைய பதிவு கீழே:
உள்ளே வெளியே:
இழுப்பிலும் உமிழ்விலும்
உள்ளே வெளியே
உலாச்சென்ற சுவாசம்
வெளியே சென்றதோடு
மூப்பிலும் பிணியிலும்
உள்ளே வராமல்
நின்றுவிட
அகவை முதிர்ந்த
அப்பா ஒருவர் மவுத்தானார்கள்!
(அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீளுவோம்)
அவர்களின்
அத்தனை அபிமானிகளையும்
வெளியே இறுத்தி
உடலை
உட்கூடத்தின்
உள்ளே கிடத்தி
அவர்தம் அனுமதியின்றி
துணிமனி அகற்றி
உள்ளுடல் பிதுக்கி
வெளியுடல் குளிப்பாட்டி
நறுமண மூட்டி
நல்லுடை அணுவித்து
உள்ளேயோ வெளியோவோ அன்றி
நடுவீட்டில் கிடத்தி...
பின்னர்
அன்னாரைச் சுமந்து
அவருக்காகத் தொழுது
தெருவிற்கு வெளியே உள்ள
மையவாடியின்
உள்ளே சென்றபோது...
மண்ணுக்கு மேலேயும்
மட்டப்பாவிலும்
மகிழ்ந்திருந்த மனிதருக்கு
மண்ணுக்குக் கீழே
சதுர அடிக் கணக்கிட்டு
அறை ஒன்று
தயார் நிலையில் இருக்க...
பச்சைப் பாம்புகளென
காய்கள் தொங்கும்
முருங்கை மரத்திலிருந்து
மூன்றல்லது நான்கடிக்கு உள்ளே
அடை மழைக்கு முன்னே
அடக்கம் செய்த
வாப்பாவின் கபுரைத்
தேடிப் பிடித்துக்
கண்கள் வருடின!
கபுரின் தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
குத்தி யிருந்த
கட்டைகள்
கோணங்கள் பிசகி
சாய்ந்திருக்க
பிரண்டைக் கொடிகள்
சறுகுக ளாகியிருக்க
அவற்றிற்கிடையே
வெளியே மேடிட்டிருந்த
வாப்பாவின் கபுருஸ்தான்
உள்ளே சற்றே அமிழ்ந்தும்...
வசிப்பின் உள்ளே
இருந்தபோது
வசீகரித்த வாப்பா
கபுருக்கு வெளியே
என்னை நிறுத்த...
பனித்தன விழிகள்!
என் காற்றும்
வெளியே நிற்கும் நாளில்
என்னுடலை
உள்ளே கொணரும்போது
வாய்க்கப்போகும் கபுர்
இங்கேயா
அல்லது அங்கேயா வென
கேள்விகளோடு
மையவாடி விட்டு
வெளியே வந்து
இம்மைக்கு உள்ளே புக...
உள்ளே இழுத்தது
ஸ்தம்பித்து
உயிரையும் உணர்வையும் பிசைந்து
பெரிதாக
வெளியே வந்தது!
பெரிய தத்துவத்தை சிறிய வரிகளில் விளக்கிய விதம் அற்புதம்.
'பெரிய மலையையும் சிறிய உளி உடைக்கும் 'என்பதை இந்த வரிகள் உண்மை படுத்திவிட்டது..'
'கடுகை துளைத்து ஏழுகடலை புகுத்தி குறுக தறித்த' வரிகள் 'என்ற பாராட்டுக்கு பொருந்தும் வரிகளும் கருத்தும்.
S.முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்
மனித வாழ்வில் மரணம் ஒரு கட்டாயம். நாம் என்று பிறந்தோமோ அன்றைக்கே என்று சொல்வதைவிட அதற்கு முன்னமேயே எழுதி வைக்கப்பட்ட ஒரு முடிவுதான் மரணம். என்றாவது ஒருநாள் மரணம் நம்மைக் கொண்டு போகும் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ மரணம் நம்மை ஒரு நாள் விரும்பும். நாம் அதன் பின்னால் இறுதி ஊர்வலமாகச் செல்லக்கூடியவர்களே. சிலருக்கு மரணம் சொல்லிக் கொண்டே வரும். பலரை அது சொல்லாமலேயே கொண்டு போய் விடும்
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன. - அல்குர்ஆன்
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அறிவிக்கிறார்கள் :யாருடைய கடைசி வார்த்தையாக லா இலாஹ இல்லல்லாஹ் ,, திருகலிமா ஆகிவிடுகிறதோ, அவர் சுவர்க்கத்தில் நுழைவார். (அபூதாவூது ,ஹாகிம் ) ஹஜ்ரத் அபூ ஸயீதில் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள் : மாநபி (ஸல்) கூறினார்கள் ,உங்களில் மரணம் நெருங்கி விட்டவர்களுக்கு ,, லாஇலாஹ இல்லல்லாஹ் ,, திருக்கலிமாவைச் சொல்லி கொடுங்கள். (முஸ்லிம்)
மரணத்திற்கு முன் சுயபரிசோதனை செய்து கொள்வோம் நம் அமகளை முன்னிறுத்தி.
சென்ற காலங்களை விட அமல்களின் விஷயத்தில் இன்னும் சிறப்பாய் செயல்படுவோம்.
நெருங்கும் மரணத்தை அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்ட அமல்களோடு
வரவேற்ப்போம்.
சுவனத்தின் இன்பத்தை ருசிப்போம்
ஆமீன்.
//என் காற்றும்
வெளியே நிற்கும் நாளில்
என்னுடலை
உள்ளே கொணரும்போது
வாய்க்கப்போகும் கபுர்
இங்கேயா
அல்லது அங்கேயா வென
கேள்விகளோடு
மையவாடி விட்டு
வெளியே வந்து
இம்மைக்கு உள்ளே புக...//
இங்கேயா அல்லது அங்கேயா என்கிற வரிகளைப் படித்த போது உடல் சிலிர்த்துவிட்டது. வியர்த்துவிட்டது. இதயத்தின் ஒரு ஓரம் கையறு நிலையில் கதறுவ்தாக உணர்ந்தேன்.
மரணம்
உலக வாழ்வின் முற்றுப்புள்ளி.
மறுமை வாழ்வின் துவக்கம்.
இறைவன் தந்த வாய்ப்பின் இறுதி நாள்
விசாரணையின் முதல் நாள்
மூச்சுக்காற்றுக்கு உள்ளிழுக்க
அனுமதி மறுக்கப்பட்ட நாள்.
அஸ்ஸலாமுஅலைக்கும். மரணம் பற்றிய உயிர்துடிப்பான இறவா கவிதை!கண்மூடிப்போகும் பொழுதை நினைவுபடுத்தும் விழிப்புனர்வு கவிதை!கவியரசுவின் மற்றொரு மணி மகுடம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மரண சிந்தனையும் மரணத்தை நினைவூட்டுதலும் மதிகெட்,ட வழிகெட்ட மனிதனின் துள்ளலில் ஒரு கடிவாளம் இடும்.
காதர் சொல்வதுபோல் எல்லா கேள்விக்குறிகளும் ஆச்சரியக் குறிகளும் அரைப்புள்ளிகளும் பெரும்புள்ளிகளும் ஆட்டம் ஓய்ந்து முற்றுப்புள்ளியாகும் இம்மை வாழ்வின் மரணம் ஒரு துவக்கமே.
முன்கர் நக்கீரை பார்க்க அல்ல, உணர முயன்றாலே "பிறகு?" என்ன என்கிற சிந்தனை எழுந்துவிடாதா மன்சூர்?
உணர்வுகளை நான் எழுத்துகளாக்க, அதை ஒத்திகை என்றே உயர்த்திச் சொல்லும் கவியன்பன், கவிஞருக்குள் இது போன்ற கருத்துகளை முழுமையாக திணித்துவிடுவது இலகுவானது என்பதை தங்களின் இரண்டு வரிகள் இயம்புகின்றன.
மரணம் நம்மை அடையுமுன் மண்ணறை வாழ்க்கை வாய்க்குமுன் அதன் வேதனைகளிலிருந்துத் தப்பிக்க நன்மக்களாக வாழ்வோம் என்னும் அதிரைத் தென்றல் இர்ஃபானின் கருத்துத்தான் இந்தப் பதிவில் மறைந்துள்ள கருப் பொருள்.
Actually, dear Mr.Ahmed Ameen, it is just not an imagination but assumption. We can avoid all those painful moments IF we would live as Muslims, muslims those who strictly obey Islam.
மேலும்,
எதுவுமே தமக்கு நிகழும்போதே நம்புவதற்குப் பழகிப்போன மனிதனுக்கு இவையும் நிகழப்போகிறதா என்கிற நினைவூட்டலே "பிறகு?". சற்று அடர்த்தியாக எழுதப்பட்டதால் புரியாமல் போய்விடுமோ என்கிற என் அச்சம், இந்தப் பதிவுக்கான கருத்துகளைக் கண்டதும் அகன்றது. புரிந்துகொண்டு, மரண சிந்தனையின் எதார்த்தத்தை மேலும் வலுவாக்குகின்றன கருத்துகள்.
இதைத் தத்துவமாக காணும் இபுறாகீம் அன்சாரி காக்கா அவர்களின் புரிதல் சந்தோஷம் தருகிறது. நிகழவிருக்கும் எதார்த்தத்தை, நிகழ்ந்துவிட்ட/நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் கொண்டு சுட்டுவதே 'தத்துவத்தின்' வரையறை என்பதை நினைவுபடுத்தியிருக்கிறீர்கள்.
தாங்களும் சகோ அப்துல் ராஜிக்கும் என்னைப் பெரிய அளவில் எழுதச் சொல்வதற்காக நன்றியும் கடப்பாடும். என் சலனங்களையும் சங்கடங்களையும் கவனங்களையும் கவலைகளையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்த்த தளம்தான் இது. ஆத்ம திருப்திக்காக எழுதும் எனக்கு அதிக வாசகர்களைத் தேடிச் செல்லும் நாட்டம் இல்லை. இருப்பினும் திண்ணை சத்தியமார்க்கம் தளங்களிலும் அவ்வப்போது எழுதுவதுண்டு. மற்றபடி, என் எழுத்துப் பிடித்தவர்கள் பகிர்வதன் மூலமும் ஓரளவு விட்டம் கூடுகிறது காக்கா.
யாசிருக்கு ஏற்பட்ட கிலிதான் இப்பதிவின் விளைவு, வெற்றி. இது எல்லோருக்கும் ஏற்படவேண்டும் என்பதே விருப்பம். அப்படி ஏற்பட்டுவிட்டால் வாழ்க்கை இலகுவாகவும் இன்பமாகவும் அமைவது உறுதி.
இறப்பைப் பற்றிய எழுத்தை இறவாக் கவிதை என்று வர்ணிக்கும் கிரவுன்தான் என் கவிதைகளை இங்கு இறவாமல் பார்த்துக்கொள்கிறார்.
இன்னும் ஜாகிர், ஹமீது, அபு இபுறாகீம், எம்எஸ்எம், அலாவுதீன் ஆகிய அதிரை நிருபரின் வாடிக்கையான வாசகர்களும், ஃபாருக் மாமாவும் இப்பதிவை வாசித்திருப்பீர்கள் என்று நம்பி தங்கள் அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும்.
நிறைவாக, பின்னூட்டங்களில் என்னை பாதித்தவற்றைப்பற்றி பேசி நிறைவு செய்வோம்.
//"மண்ணறைக்குள் அடக்கம்
செய்யப்பட்ட உடல்
இந்நேரம் நனைந்திருக்குமோ "//
- அபூ ஹஷிமா
ஒரு சாதாரண நேரடி வர்ணனையை கடைசி மூன்று வரிகளில் பொட்டிலத்ததுபோல் முடித்து மொத்த வர்ணனையையும் எந்த இலக்கணங்களுக்குள்ளும் அடைபடாத கவிதையாக மாற்றியிருக்கும் அபு ஹஷிமா அவர்களின் புலமை வியக்க வைக்கிறது.
இதுபோன்ற எதார்த்தமான, முடிவில் இனம்புரியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்துபவையே கவிதைகள்.
சகோ அபு ஹஷிமா அவர்களின் அற்புதமான கவிதைகளை ஏற்கனவே பலமுறை இபுறாகிம் அன்சாரி காக்கா அவர்கள் பின்னூட்டங்களில் வாசிக்கத் தந்திருக்கிறீர்கள். அன்றியும் மூத்த எழுத்தாளர்கள் பலரை எங்களுக்கு வழங்கிவரும் காக்கா அவர்கள், இவர்களையும் இங்கு எழுதச் சொன்னால் என் போன்றோர் நன்றி பாராட்டுவோம்.
காதர்,
உலக வாழ்வின் முற்றுப்புள்ளி.
மறுமை வாழ்வின் துவக்கம்.
இறைவன் தந்த வாய்ப்பின் இறுதி நாள்
விசாரணையின் முதல் நாள்
மூச்சுக்காற்றுக்கு உள்ளிழுக்க
அனுமதி மறுக்கப்பட்ட நாள்.//
சிறப்பான சிந்தனை. தவிப்பான வெளிப்பாடு. உன் அனுமதியோடும் உன் நண்பன் என்னும் உரிமையோடும் இப்படி மாற்றி எழுதியுள்ளேன்.
மரணம்:
வாழ்க்கை வசனங்களின் முற்றுப்புள்ளி எனில்
மறுமையின் அகரம்.
இறைவன் வைத்த பரீட்சையின்
இறுதி விநாடி
விடைத்தாள் திருத்தம் துவங்கும்
முதல் நொடி
மூச்சை
உள்ளிழுக்கத் தடை
அரசாணையல்ல
ஆண்டவனாணை!
இன்னும் யோசி, இனியும் எழுது.
வஸ்ஸலாம்
எம் ஹெச் ஜே,
இன்னும் டீ வரல.
இன்னும் இங்கே வராதவங்களெல்லாம் மரண பயமான்னு கேட்டுடாதிய...
நான் மட்டும் வரவே மாட்டேன்னு சொல்ல முடியாதே இந்த இடத்துக்கு !
எந்த வட்டத்திற்கு வெளியில் இருந்தாலும் இந்த மரண வட்டத்திற்குள் வந்துதான் ஆகனும் ! அதுதானெ நியதி...
//எம் ஹெச் ஜே,
இன்னும் டீ வரல//
ஆமா காக்கா கொஞ்ச செய்த்தாங்குணமாயிருக்கு
(அண்ட உடமாட்டேங்கிது).
இன்சா அல்லாஹ்...
அவர்களின்
காலடியோசை
மெல்லமெல்லக் கரைந்து
விலகிச் சென்றதும்
தனிமை உக்கிரமாகத் தாக்கும்
----------------------------------------
மரணித்த உடலே வேர்க்கும் படி தனிமை சூரியன் உக்கிரமாய் தாக்கும் என்னும் போதே அந்த தனிமையின் கொடுமையின் சுடுகாற்று இப்பொழுதே வீசுவதாக ஒரு உணர்வு!
அடுக்குமாடி கட்டடங்களின்
வசிப்பிடங்களைப் போல
குடியமர்த்தப்பட்டாலும்
ஆளரவமற்ற
அமைதியே நிலவும்
-------------------------------------------------
அந்த அமைதியின் உள்ளேயும் புயலாய் காற்று வீசும் அதில் மூச்சு முட்டும் !
திடீர் மின்வெட்டால்
இருளின் அடர்த்தி கூடிப்போய்
நடமாட முனைந்தால்
தொடையில் தட்டும்
மேசையின் விளிம்பையோ
கால்களை இடறும்
கலைந்து கிடக்கும் பொம்மைகளையோ
அனுமானிக்க முடியாமல் வியாபித்திருந்தாலும்,
விடியலை எதிர்பார்த்துப் பழகி
இருட்டை ஊடுருவும் புலன்கள்கூட
செயலற்றுப்போகுமாறு
சூழும் இருளில்
இரட்டிப்பு இருட்டிருக்கும்
--------------------------------------------
வாயடைத்துப்போகும் அன்னேரம் பற்றி வாயடைத்து ஆச்சரியத்தில் அராயும்படியான எழுத்தின் உச்சம்!இப்படியும் வார்தைக்குள் வார்தையை துருவி,துருவி ஊடுருவி எழுத முடியும் என்பதை நிரூபிக்கும் ஆக்கம்! வார்தை வசப்பட வில்லை வாழ்த்துவதற்கு!இப்படியும் மயானத்தில் அடங்கிய சூழலின் இருட்டை வெளிச்சம் போட்டு காட்டும் கவிதை ஒளி!அதுபோல் அந்த இருட்டை போக்கும் ஒளியாக அல்குரான் ஓதியதின் நன்மையெனும் சேமித ஒளியும் துணை வரும்!
ஆத்திகம் வரையறுக்கும்
நரகம் அடுத்துவிட்டதைப்போல்
வெட்பம் தாக்கினாலும்
மாற்றுடை இல்லாத
சீருடை
நனைந்துவிடாது
தனிமையில் லாவன்டரும்
மனைவியுடன் மல்லிகையும்
பிடிக்குமெனினும்
மனம் லயிக்காதச்
சூடமும் சந்தனமும்
நாசியிலும் நாடி நரம்புகளிலும்
நறுமணம் வீசினாலும்
களிமண் மணமே மீறும்
-------------------------------------------------
சுவாசமற்ற அந்த பொழுதின் வாசம் பற்றி எழுதும் அற்புத கற்பனையென்றாலும் கண்ணில் கான்பது போல் இப்படியும் எழுதமுடியும் ?மரணத்திலும் எழுந்து நிற்கும் உம்முடைய உயிர் எழுத்தும், மெய்யெழுத்தும் அன்று நீர் ஆயுதம் இல்லாமல் நிராயுதபானியாக மரணிக்க மாட்டீர்கள் நன்மைகள் விதைத்த எழுத்து அ(ர)றன் ஆயுதமாய் அமலாய் வந்து சேரும் இன்சாஅல்லாஹ் துன்பம் களையப்படும் இப்படியே சமுதாயத்துக்கு எழுதிவரும் நன்மைகள் என்றும் கைகூடும் . ஆமீன்.
மரணம் அது புவிமேல் முடிவும்!மறுமையின் துவக்கமும்! மரணத்தை விரும்புவோர் இல்லையெனினும் நல்லடியார் நாடும் மறு பிரவேசம் மண்ணறையே!புவி ஈர்ப்பு விசைபோல் புவியின் உள் ஈர்ப்பு ஈமானில் சிறந்தவர்களின் கவனம் சுவனத்தின் வழி அதுவென இருக்கும் ஈர்ப்பு! மரணம் வரணும் என்னும் எண்ணம் வேண்டாம் ஆனால் மரணம் ,மறக்காமல் உயிருடன் இருக்கும் நினைவு!மரணத்தை நினைவுகூறுங்கள் என நபிகளார்(ஸல்) நவின்றுள்ளார்கள்! நம் மேனியை தின்று தீர்க்கும் மாண்ணறை "பய"ணம். நல்லடியாருக்கும் நேரலாம் ஆனாலும் எந்த மன்ணாலும் வேட்டை யாட முடியாத ஈ"மான்" இறவாமல் உயிருடனே இருந்துவரும்!
எக்காலத்துக்கும் நினைவுகளை தட்டி எழுப்பும் இப்படியான கவிதைகளை படைக்க அல்லாஹ் கவிசக்கரவர்திக்கு உடல் ஆரோக்கியமும், ஆயுளையும் நீட்டித்து தர அல்லாஹ் போதுமானவன் ஆமீன்.
//சகோ அபு ஹஷிமா அவர்களின் அற்புதமான கவிதைகளை ஏற்கனவே பலமுறை இபுறாகிம் அன்சாரி காக்கா அவர்கள் பின்னூட்டங்களில் வாசிக்கத் தந்திருக்கிறீர்கள். அன்றியும் மூத்த எழுத்தாளர்கள் பலரை எங்களுக்கு வழங்கிவரும் காக்கா அவர்கள், இவர்களையும் இங்கு எழுதச் சொன்னால் என் போன்றோர் நன்றி பாராட்டுவோம்.//
நண்பர் அபூஹஷிமா அவர்களை மீண்டும் ஒரு ஆக்கம் எழுத கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் இன்னும் முயற்சிக்கிறேன்.
ஏற்கனவே அவர்கள் எழுதிய தொட்டால் தொடரும் என்ற தொடர் நமது உள்ளங்களை கொள்ளை கொண்டது.
மண்ணறை வாழ்வை மையமாக வைத்துத்தீட்டப்பட்ட உன் கவிவரிகள் யாவும் வில்லிலிருந்து புறப்பட்ட வீரிய அம்புகளாக தைத்து விட்டது என் உள் மனதை. வாழ்த்த வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்கிருப்பவனாக .. உனது தோழன்.
மண்ணறை வேதனையிலிருந்து இறைவன் நம்மைப்பாது காப்பானாக.!
படித்தவுடன் ஒரு மரண பயம் வந்து அப்பிக்குது... எல்லோரும் உள்ளே வெச்சிட்டு போய்டுவாங்க, தனிமை, இருட்டு இதெல்லாம் ஒன்னு சேர்ந்து மிரட்டுது... சுபஹானல்லாஹ்... இதெற்கு மேல் சொல்ல வார்த்தையில்லை...
சின்னஞ்சிறு வரிகளை போட்டு பெரிய தத்துவத்தை எளிதில் புரியம்படி விளக்கிய சபீரின் வண்ணம் கண்டு....
திகைத்தேன் வியந்தேன்
கவிதை வண்ணமும் தேன்
கருத்து வண்ணமும் தேன்
சொல் வண்ணமும் தேன்
மாமலையையும் ஒரு சிற்றுளி உடைக்கும் என்பதற்கு இந்த வரிகள் சரியான சான்று ''கபுர் வணக்கம் விடுவோம்; கபுர் நினைவுகளை தொடுவோம்.. சின்ன சின்ன வரிகள் மீண்டும் மீண்டும் தொடர வாழ்த்துகள்.
[ஆசிரியர் கவனத்திற்கு: ''பிறகு?'' தலைப்புக்கு இதற்குமுன் மூன்று முறை comment அனுப்பினேன். பதிப்பில் வரவில்லை [ஒரு முறை மட்டும் திரும்பி வந்தது
S முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்
Post a Comment