எனதூர்… என் கனவு…!


கண்ணுக் கெட்டும் தூரம்வரை
கம்பீரமாய்க் கடல்
காலைத் தொட்டு உதிரும்போது
காதலுடன் மணல்

சேற்று வாசம் எனினும்
காற்று வீசும் கடற்கரை
எனதூர் காற்றுக்கு மட்டும்
விரல் முளைத்து உடல் வருடும்

பார்த்துப் பார்த்துப்
பழகிப்போன சூரியன்
பழகிப் பழகிப்
பரிச்சயமான சந்திரன்

தென்னைமரத் தோகை
தென்றல் வீசி அசையும்
தேனிருக்கும் இளநீர்
தானிருக்கும் குலையில்

எழுதிவைக்க மறந்த
நினைவுகளைச் சேமிக்கும்
வாய்க்காலும் வரப்புகளும்
உப்பளமும் ஊருணியும்

பாங்கொலிக்கும் பள்ளிகள் - பொறுப்பாகப்
பங்களிக்கும் பெரும் புள்ளிகள்

தழும்பி நிற்கும் நீர்நிலைகள்
அரும்பி நனைக்கும் படிக்கரைகள்
தும்பி பறக்கும் சிறுகாடு
துளிர்த்து மலரும் பூக்காடு

ரயில் ஓடும் ஊர் ஓரம்
வெயில் காயும் வெட்டவெளி
மயில் வந்து ஆடாவிடினும்
ஒயில் குன்றா எழில் எனதூர்

என்னவாயிற்று?

இன்றோ
கலைந்துபோன கனவைப்போல
குழைந்து கிடக்கிறது எனதூர்

விளையாட்டுத் திடலிலும்
வற்றிப்போன குளத்திலும்
குழுக்கள் குழுக்களாய்
குடியும் கும்மாளமும்

ரயில் நிலையத்தைப் பார்
வெயில் சாய்ந்தால் "பார்"

ஆப்ரிக்க வயிறுகளாய்
காய்ந்து மெலிந்த
வாய்க்காலிலும் கால்வாயிலும்
செழிப்பாய் நிற்கின்றன
நீர் உறிஞ்சும் செடிகொடிகள்

கார்காலத்தில்
பனிப்பொழிவிலாவது
ஈரம் பார்த்துவிட
ஏங்குகிறது ஊர்

வசந்த காலத்திலேயே
உலர்ந்து உதிர்ந்துவிட
இலையுதிர்க் காலத்தில்
உதிர்க்க இலையின்றி
பருவ காலம் ஒன்று
அழிந்து மறைகிறது

கைவிடப்பட்ட சேது சமுத்திர
திட்டத்தின் எச்சமான
அகலச் சாலையில்
ஆக்ரமிப்புகள் ஆரம்பம்

கற்பனை கதாபாத்திரமோவென
கலங்க வைக்கிறது
இணையத்தில் மட்டுமே
எழுச்சி பேசும் எனதூர்

மழை பொய்த்து
பிழை மிகைத்து
பிடிவாதமான பிரிவினைகளால்
உருக்குலைந்து
ஊரழிந்து போகிடுமோ
உறவறுந்து விலகிடுமோ!?

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

33 கருத்துகள்

sheikdawoodmohamedfarook சொன்னது…

விதவையானஅதிரையின்அழகுநெஞ்சுக்குள்விதைப்பதுவேதனை! //ஊர்அழிந்துபோகிடுமோஉறவறுந்துவிலகிடுமோ?//தூங்கப்போகும்போதுதொற்றிஇருந்தஉறவெல்லாம்தூங்கிஎழுந்தபின் தூரப்போகும்ஊராச்சு.இதுஒருவசந்தகாலமல்ல!கசந்தகாலம். தொற்றிஇருக்கஉறவுவேண்டுமென்றால்பெட்டியிலேகட்டி இருக்கவேண்டும்பணம்.காலமென்னும்கொடியவன்கடத்திசென்ற ஊர் வாசம்தேடும்ஒருகவிஞனின்உள்ளக்குமுறல்!

sheikdawoodmohamedfarook சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.தலைப்பிலே இப்போதைய நிலையை சொல்லுவது போல்'கலையும் கனவாகிப்போன என்னதூரின் நிலைசொல்கிறது.எழுத்து பழய அதிரையை போல் செழிப்பாகவே இருப்பது சிறப்பு!

crown சொன்னது…

கண்ணுக் கெட்டும் தூரம்வரை
கம்பீரமாய்க் கடல்
காலைத் தொட்டு உதிரும்போது
காதலுடன் மணல்
-------------------------------------------------------------------------
என் "மண்" என ஏங்க வைக்கும் வரிகள்!கண்ணைவருடிதூங்கவைக்கும் ஈரவரிகள்!

crown சொன்னது…

சேற்று வாசம் எனினும்
காற்று வீசும் கடற்கரை
எனதூர் காற்றுக்கு மட்டும்
விரல் முளைத்து உடல் வருடும்
----------------------------------------------------
படிக்கும்போதே மேனியை சிலிர்க்கவைக்கும் பரவசம்!அதிரை காற்றுக்கு மட்டுமவல்ல கவிஞரின் கவிதைக்கும் விரல் முளைக்கிறது!அதில் தேன் சுரக்கிறது!

crown சொன்னது…

தழும்பி நிற்கும் நீர்நிலைகள்
அரும்பி நனைக்கும் படிக்கரைகள்
தும்பி பறக்கும் சிறுகாடு
துளிர்த்து மலரும் பூக்காடு
------------------------------------------------------
இந்த வளத்திற்குதானே சாக்காடுவந்துவிட்டது? அது சுடும் காடாகவும்!சுடு காடாகவும் மாறியதை நினைத்து மனம் தினம் செத்து பிழைக்கிறது!மனம் வெந்து தனிகிறது! நிழலும் சுடுகிறது!

crown சொன்னது…

விளையாட்டுத் திடலிலும்
வற்றிப்போன குளத்திலும்
குழுக்கள் குழுக்களாய்
குடியும் கும்மாளமும்
----------------------------------------------------
நம் குளங்கள் வறண்டுவிட்டது! நம் குலங்கள் குரல்வளைகளில் நிறம்பிவழியும் மது ஆறு அது குலத்தின் அணையை உடைத்து,குடிகள் மூழ்கிவிட்டன!கசப்பான உண்மை கவிஞரே!

crown சொன்னது…

ரயில் நிலையத்தைப் பார்
வெயில் சாய்ந்தால் "பார்"
-------------------------------------------------------
குடும்பவண்டி'குடைசாய்ந்துவிட்டது!சாயக்காலமா?சாயும் காலமா? என வைரமுத்துவரிகளை நினைவூட்டுகிறது! குடும்பதை கருக்கும் இந்த சிவப்பு நெருப்புக்கு யார் பச்சை கொடி காட்டியது?

crown சொன்னது…

ஆப்ரிக்க வயிறுகளாய்
காய்ந்து மெலிந்த
வாய்க்காலிலும் கால்வாயிலும்
செழிப்பாய் நிற்கின்றன
நீர் உறிஞ்சும் செடிகொடிகள்
-------------------------------------------------------------
வறுமையையும்,கையாலகாத்தனத்தையும் சொல்லும் வரிகள் கூட கொழுத்து போசாக்காய் இருப்பது! கவிஞரின் எழுத்து வளத்தை காட்டுகிறது! அது காட்டு மரம் போல் செழித்து நீண்டுவளர்ந்திருக்கு.அல்ஹம்துலில்லாஹ்!அதே நேரம் சமூக அவலத்தின் நிலையையும் பதியவைக்கிறது!

crown சொன்னது…

கார்காலத்தில்
பனிப்பொழிவிலாவது
ஈரம் பார்த்துவிட
ஏங்குகிறது ஊர்
--------------------------------------------

பிற தேசங்களுக்கு கார் மேகம்! நமதூருக்கோ அது "சோகம்!

crown சொன்னது…


வசந்த காலத்திலேயே
உலர்ந்து உதிர்ந்துவிட
இலையுதிர்க் காலத்தில்
உதிர்க்க இலையின்றி
பருவ காலம் ஒன்று
அழிந்து மறைகிறது
------------------------------------------
வரும் தலைமுறைகள் பிஞ்சிலேயே பழுப்பதை இப்படியும் எழுத முடியும்?முடியும் அவர்களின் இளைமைகாலத்தை எழுத முடியும் ! உம்மால் மட்டுமே முடியும் கவிஞரே!

crown சொன்னது…

கைவிடப்பட்ட சேது சமுத்திர
திட்டத்தின் எச்சமான
அகலச் சாலையில்
ஆக்ரமிப்புகள் ஆரம்பம்
------------------------------------------------
ஆமாம் இது சேது சாலையா? உயிர் சேதச்சாலையா?

crown சொன்னது…

கற்பனை கதாபாத்திரமோவென
கலங்க வைக்கிறது
இணையத்தில் மட்டுமே
எழுச்சி பேசும் எனதூர்
-----------------------------------------------------------
கண்ணீர் எட்டிப்பார்க்கிறது! நிஜ பாத்திரம் உடைந்து நாளாகிவிட்டதோ? நிழல் மட்டுமே நிஜம்போல் நடிக்கிறதா?

crown சொன்னது…

மழை பொய்த்து
பிழை மிகைத்து
பிடிவாதமான பிரிவினைகளால்
உருக்குலைந்து
ஊரழிந்து போகிடுமோ
உறவறுந்து விலகிடுமோ!?
-------------------------------------------------------
இந்த மன வேதனையை வரும் சமுதாயமாவது சரிசெய்யுமா கவிஞரின் வேதனையுடன் என் வேதனையும் .........
வாழ்துக்கள் கவிஞரே! எப்பொழுதும் போல் சிந்திக்கவைக்கும் ஆக்கம் ! அதுவும் மண்மேல் கொண்ட காதல் வாழ்க!

ZAEISA சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,.......இப்பொஊர்லதானே இருக்கிறிய..ஊரைப் பாத்து ரொம்ப நொந்து போய்ட்டியலோ..?நானுந்தான்.இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்

ZAKIR HUSSAIN சொன்னது…

கவிதையில் காட்டியிருக்கும் ஆதங்கம் ரயில்வேஸ்டேசனின் தரையிலும் தெரிகிறது. இலைகள் உதிர்ந்து ஏதோ விதவைக்கோலம் பிரதிபலிக்கிறது.

கிரவுனின் தமிழ் எப்போதும் மகுடம்தான்

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

சபீர் காக்காவின் இக்கவி வரிகள் கண்களை கசக்க வைத்தது. நம்மூரின் தண்ணீரில்லா ஓர் கண்ணீர் கதை.

ஒரு நேரம் நம் வீட்டு கிணற்றில் கையால் குவளை விட்டு தண்ணீர் அள்ளிய நிலை மாறி, கம்பனும் தன் ஏட்டைக்கட்டி புராணத்திற்குள் புதைந்து போக, கடைத்தெருவில் வெறும் அம்பது ரூவாய்க்கு மீனும், காய்கறிகளும் நிரப்பமாய் வாங்கி வந்த நிலை மாறி, வீட்டு சிறுமிகள் விளையாட மறந்த நாட்டு மருந்துக்கடை கலச்சிக்காய் மரமும் தன் காய்ப்பை நிறுத்திக்கொண்டது போலும்.

இனி கடைசி மரமும் வெட்டப்பட்டு, கடைசி மீனும் விற்றுப்போய், கடைசி போரும் வற்றி போய், ஏடிஎம், கிரடிட், வீசா கார்டுகளை கட்டுக்கட்டாக வைத்து சுட்டுத்திங்கவா முடியும்?

sabeer.abushahruk சொன்னது…

வ அலைக்குமுஸ்ஸலாம் கிரவுன்.

"இதோ வந்துவிட்டார். இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார்" என்று அறிவுப்பு செய்யப்பட்ட சிறப்புப் பேச்சாளர் வந்தடைந்த பொதுக்கூட்டத்தைப் போல மனம் லயித்துக்கிடக்கிறது தங்களின் கருத்துகளில் இனிக்கும் தமிழில்.

-கொச்சினிலிருந்து சபீர்.

sabeer.abushahruk சொன்னது…

ஃபாரூக் மாமா,

//இது
ஒரு
வசந்தகாலம் அல்ல
கசந்தகாலம்! //

அழகாகச் சொன்னீர்கள். தஞ்சையில் கசகசவென புழுக்கத்தோடு ரயிலேறிய எனக்கு மறுநாள் காலை எர்ணாகுளத்தின் மழை பெய்த ஈரமும் குளிர்நத சீதோஷ்ணமும் பெரிய ஆறுதலாக இருந்தது.

நம்மூரில் எங்குமே தண்ணீர் இல்லை; ஆனால், எல்லா இட்ச்த்திலும் 'தண்ணி'

மனசு வலிக்கிறது!

Ebrahim Ansari சொன்னது…

காலையில் ஊரைக் கடந்துதான் ஒரு திருமணத்துக்காக பேராவூரணி பயணித்தேன்.
திரும்பி வந்து பார்த்தால் கண்ணீரில் கவியரங்கம். .

என்னால் இந்தக் கவிதையைப் பாராட்ட முடியாது. அலறி அழத்தான் முடியும்.

அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறேன்.

Ebrahim Ansari சொன்னது…

கடந்த வருடம் சி எம் பி வாய்க்காலில் தண்ணீருக்காக சண்டை போட்டோம்.

இதோ இன்று மேட்டூரில் நீர் திறந்து இருக்கிறார்கள். இந்த வருடம் ஊர் இணைந்து அந்த வாய்க்காலின் வரைபடைத்தைவைத்து வகைப்படுத்தி அனைத்துக் குளங்களுக்கும் நீர் வர ஆரம்பத்திலேயே வழி வகுப்பார்களா ?

அல்லது தம்பி அவர்கள் கவிதையில் சொல்லி இருப்பது போல்

//இணையத்தில் மட்டுமே
எழுச்சி பேசும் எனதூர் //

என்பதற்கு இன்னும் இலக்கணம் வகுப்பார்களா?

Ebrahim Ansari சொன்னது…

Ref: MSM Naina

//ஒரு நேரம் நம் வீட்டு கிணற்றில் கையால் குவளை விட்டு தண்ணீர் அள்ளிய நிலை மாறி,//

உண்மை! எனக்கு நினைவு இருக்கிறது. மருமகன் சாவன்னா உடைய மாமியார் வீட்டுக் கொல்லைப் புறம் ஒரு கிணறு இருந்தது. அதில் எட்டிப்பார்த்து கயிறு இல்லாமல் வாளியால் தண்ணீர் மொண்டு சென்ற தெருமக்களை நான் பார்த்த நினவு இருக்கிறது.

Unknown சொன்னது…

Assalamu Alaikkum
Dear Brother Mr. Abu Shahruk,

Your expressions about current reality of our town is absolutely true. I think our land is reflecting our people's intentions and expectations.

May Allah provide our town(the people) with the prosperity.

Thanks and best regards

B. Ahamed Ameeb from Adirai.

sabeer.abushahruk சொன்னது…

// என் "மண்"
என
ஏங்க வைக்கும் வரிகள் - கண் வருடி
தூங்க வைக்கும் ஈரவரிகள்! //

நம்மூர் காய்ந்து போனதால் வேதனையில்
கண்களில் ஈரம்!

//நம் குளங்கள்
வறண்டுவிட்டன!
நம் குலங்களிலோ
குரல்வளைகளில்
நிறம்பிவழியும் மது ஆறு!
அது
குலத்தின் அணையை
உடைத்து,
குடிகள் மூழ்கிவிட்டன! //

சொந்த ஊர்க் கதை இது! சொன்ன விதம் கலங்க வைக்கிறது.

Shameed சொன்னது…

//உண்மை! எனக்கு நினைவு இருக்கிறது. மருமகன் சாவன்னா உடைய மாமியார் வீட்டுக் கொல்லைப் புறம் ஒரு கிணறு இருந்தது. அதில் எட்டிப்பார்த்து கயிறு இல்லாமல் வாளியால் தண்ணீர் மொண்டு சென்ற தெருமக்களை நான் பார்த்த நினவு இருக்கிறது. //

கிணற்றில் நீரை பார்த்தது அந்தக்காலம் இந்தக்காலத்தில் கிணற்றைப்பார்த்தல் கண்களில்தான் நீர் வருகின்றது

sabeer.abushahruk சொன்னது…

//குடும்பதை கருக்கும்
இந்த சிவப்பு நெருப்புக்கு
யார்
பச்சை கொடி காட்டியது? //

ஒரு வெள்ளை அறிக்கை கேட்போமா?

//பிற தேசங்களுக்கு கார் மேகம்! நமதூருக்கோ அது "சோகம்! //

ஏனோ நமதூரை அடைந்ததும் கலைந்து போகிறது மேகம்... வேகம் வேகமாக!

//சேது சாலையா? உயிர்
சேதச்சாலையா? //

கிரவுன்,

தமிழ்நாட்டிலிருந்து தூர இருக்கும் உங்களிடமிருந்து பொங்கி வழியும் மொழியை ரசித்து மகிழும் பாக்கியத்தை அடிக்கடி தாருங்கள்.

நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அது என்ன மாயமோ தெரியலை !

கவிக் காக்காவின் கவிதைக்கு மகுடம் எங்கிருந்தாவது ஏறிவிடுகிறது !

ஏண்டா(ப்பா) கிரவ்னு ! எண்ணெயில் சறுக்கியது போன்று மட மடவென்று சீறிக் கொண்டு வருதே !

நல்லா இருக்கியா ?

கவிக் காக்கா ! கிரவ்ன் வரிகள் (இருவருக்கும் பொருந்தும்) !

sabeer.abushahruk சொன்னது…

ஈனா ஆனா காக்கா,

வரலாறு காணாத வறட்சி என்கிறார்களே அது தற்கால அதிரைக்குப் பொருந்துமோ!

குடிநீர்கூட தொடர்ச்சியாக வருவதில்லை. பவர் கட் தினத்தன்று ஒரே ஒரு வாளி தண்ணீரில் குளித்தேன்.

நாம் என்னதான் திட்டமிட்டாலும் வாய்க்கால்களையும் கால்வாய்களையும் குளம் குட்டை ஏரியையும் தூர்வாறாவிட்டால் (குறைந்த பட்சம் அந்த பார்த்தீனியம்போன்ற செடிகளை களையாவிட்டால்) ஓரிரு மாதத்திற்குள் மீண்டும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும்.

sabeer.abushahruk சொன்னது…

எம் எஸ் எம்,

நீங்கள் நினைவுகூரும் யாவும் விரைவில் மீண்டும் வாய்க்கும்...டிஜிட்டலாக ட்டேபிலோ ஐப்பேடிலோ ஸ்மார்ட் ஃபோனிலோ!

wa alaikkumussalam dear Ahamed Ameen,

Thanks for your comment. pls let me have your contact number in home town so that to meet you in sha Allah!

மேலும் வாசித்த, வாசித்துக் கருத்திட்ட ஹமீது அபு இபு உள்ளிட்ட அனைத்து சகோக்களுக்கும் நன்றி!

அப்துல்மாலிக் சொன்னது…

இதை ரெண்டாகப்பிரித்து முன்னதெல்லாம் இப்போ கனவாகிப்போனதின் மர்மமனென்ன?

பிரிவினை, பிழை, குடிமும்மாளம், பார் இதனால் குளுகுளு அறையில் அமர்ந்துக்கொண்டு இணையத்தில் மட்டுமே எழுச்சிப்பேசி காலம் ஓடுது... ஒவ்வொரு அதிரையரின் உள்ளக்குமுறலின் பிரதிபலிப்பு இந்த வரிகள் காக்கா

Unknown சொன்னது…

//ஆப்ரிக்க வயிறுகளாய்
காய்ந்து மெலிந்த
வாய்க்காலிலும் கால்வாயிலும்//

அப்பப்பா என்ன அற்புதமான வரிகள் காக்கா...

ஊரில் உங்களை சந்திக்க முயற்சித்து தோற்றுப்போனேன் கவிதையின் ஊடாக சந்தித்துக் கொண்டேன்.

அதிரை.மெய்சா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அதிரை.மெய்சா சொன்னது…

எனதூர் என்கனவு
மண்வாசனை நிறைந்த
மகத்தான படைப்பு

பச்சைப் பசேலன
இருந்த நமதூர்
இன்று
பலவர்ணம் பூசிய
பங்களா வீடுகளாய்
உருமாறி விட்டன

சுட்டெரிக்கும் வெயில்
கொடுமை ஒருபக்கம் இருந்தாலும்
சுடாமலே வேகவைக்கும்
மின்னணு சாதனங்கள் பெருத்து
விட்டன

மாசுக்காற்றை பஞ்சமில்லாமல்
சுவைக்க
ஏசிக் காற்றை இன்பமாய் சுவைத்து
இயற்கையை அழித்து விட்டோம்

இனி அழிப்பதற்கு என்ன இருக்கிறது
மீண்டும்
ஆராய்ச்சிதான் செய்ய வேண்டும்.