Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? - 2 32

அதிரைநிருபர் பதிப்பகம் | April 16, 2012 | , , , ,

உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (2)

உலகின் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் பேசிய முதல் வார்த்தை என்ன? சுவனத்தில் ஆதம் (அலை) பேசிய மொழி எது? அவர்கள் பூமியில் இறக்கப் பெற்ற பின்னர் எந்த மொழி பேசியிருப்பார்கள்? அவர்கள் பூமியில் எந்த இடத்தில் இறக்கப் பெற்றார்கள்?

இன்னும், இதுபோன்ற பல கேள்விகளை, மனிதனின் தோற்றத்தையும், அவனது சிறப்பையும் அறியும் நோக்கின் அடிப்படையில் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் ஆராய்ந்து உள்ளனர்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் பேசிய முதல் வார்த்தை என்ன?

ஆதம் (அலை) அவர்களின் உடலில் அல்லாஹ் ரூஹை ஊதும்பொழுது,

فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِين  (15:25)

“நான் அவரை முழுமைப் படுத்தி, அவரில் என் உயிரிலிருந்து ஊதியதும், ‘நீங்கள் அவருக்கு ஸஜ்தா செய்யுங்கள்” என்று வானவர்களிடம் கூறினான். (அல்குர்ஆன் 15:29)

“அல்லாஹ் ரூஹை ஊதியபொழுது, ஆதம் (அலை) அவர்களின் மூக்கில் ரூஹ் வந்தவுடன் அவர்கள் தும்மினார்கள். வானவர்கள் ஆதம் (அலை) அவர்களைப் பார்த்து, ‘அல்ஹம்து லில்லாஹ்’ அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறும், என்றனர். அவரும் கூறினார். அதற்கு அல்லாஹ், ‘யர்ஹமுகல்லாஹ்’ அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக, என்று பதிலளித்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

எனவே, முதல் மனிதர் ஆதம் (அலை) பேசிய முதல் வார்த்தை ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்பதுதான் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். இதன் அடிப்படையில், மனிதன் குரங்கைப் போன்றோ, எலியைப் போன்றோ கத்திக் கொண்டிருந்திருக்க மாட்டான் என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

நம் ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் பேசிய முதல் வார்த்தையான அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் என்ற வார்த்தையைக் கொண்டே, அல்லாஹ் நமக்கருளிய இறுதி வேதமான அல்குர்ஆனின் முதல் அத்தியாயம் ஆகிய சூரத்துல் ஃபாத்திஹாவும் தொடங்குகின்றது. தந்தை சொன்ன புகழ்ச் சொல்லையே தனயர்களாகிய நமக்கும் அளித்து, அனுதினமும் தொழுகையில் அப்புகழ் மொழியைக் கொண்டு அவனைப் புகழ நமக்கருள் புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ(2:35)

பின்னர், ஆதமே, நீரும் உம் மனைவியும் இச்சுவனத்தில் தங்கியிருங்கள். அதில் நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலிருந்து புசியுங்கள். ஆனால், இந்த மரத்தை நெருங்கிவிட வேண்டாம். அப்படி (நெருங்கினீர்கள்) எனில், நீங்கள் இருவரும் அநியாயக்காரர்களுள் ஆகிவிடுவீர்கள்” என்று கூறினோம். - அல்பகரா (2:35)

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்த பின், அவர்களைச் சுவனத்தில் தங்க வைத்தான். அவர்கள் சுவனத்தில் தங்கியிருந்த நேரம் ஒரு மணி நேரம்தான். அந்த ஒரு மணி நேரம் இந்தப் பூமியின் 360 ஆண்டுகளுக்குச் சமம் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

ஆதம் (அலை) அவர்கள் சுவனத்தில் இருந்தபொழுது பேசிய மொழி எது?

حدثنا محمد بن عبد الله الحضرمي؛ قال: حدثنا العلاء بن عمرو الحنفي؛ قال: حدثنا يحيى بن بريد الأشعري، عن ابن جريج، عن عطاء، عن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "أحبوا العرب لثلاث: لأني عربي، والقرآن عربي، ولسان أهل الجنة عربي". (طبراني، مستدرك)

மூன்று விஷயங்களுக்காக அரபிகளை நேசியுங்கள். ஏனெனில், நானும் அரபியாக இருக்கிறேன், அல்குர்ஆனும் அரபியாகும். சுவனவாசிகளின் மொழியும் அரபியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (தபரானி - முஸ்தத்ரக்)

மேற்கண்ட ஹதீதின் அடிப்படையில், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுடன் அரபி மொழியில் உரையாடி இருப்பான் என்று  அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். அதுபோன்றே, சுவனத்தில் இருந்த பொழுது, ஆதம் (அலை) அவர்கள் வானவர்களுடனும், தமது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுடனும் அரபி மொழியில் பேசியிருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.

ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறக்கப் பெற்ற பின்னர் பேசிய மொழி எது?

ஆதம் (அலை) அவர்கள் சுவனத்தில் இருந்தவரை அரபி மொழியில் பேசினார்கள். தடுக்கப் பெற்ற மரத்தின் கனியை உண்ட பின்னர் அவர்களுக்கு அரபி மொழி மறக்கடிக்கப் பட்டு, சுர்யானி மொழியில் பேசினார்கள். பின்னர், அவர்கள் தவ்பா செய்த பின்னர், மீண்டும் அல்லாஹ் அவர்களுக்கு அரபி மொழியை ஞாபகப் படுத்தினான் என்று அறிஞர்கள் சிலர்  கூறுகின்றனர்.

ஆதம் (அலை) அவர்கள் அரபியில் பேசினார்கள் என்ற ஒரு கருத்தும், அரபி அல்லாத வேறு ஏதேனும் ஒரு மொழியிலும் அவர்கள் பேசியிருக்கக்கூடும் என்ற கருத்தும் அறிஞர்களிடத்தில் இருக்கின்றது.

ஆதம் (அலை) அவர்கள் இப்பூமிக்கு வந்த பின்னர் எந்த மொழியில் பேசியிருப்பார்கள் என்ற ஒரு முடிவுக்கு வரும் முன்னர், அவர்கள் பூமியில் எந்த இடத்தில் இறக்கப் பெற்றார்கள் என்று தெரிந்துகொண்டால், அதன் அடிப்படையில் இக்கேள்விக்கு ஒரு விடை காண இயலும்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப் பெற்றார்கள்?

சுவனத்தில் தங்கியிருந்த ஆதம், ஹவ்வா (அலை) இருவரையும் ஷைத்தான் தடுக்கப்பட்ட மரத்தின் கனியினை ஏமாற்றிப் புசிக்க வைத்த பின்னர், அவர்களையும் ஷைத்தானையும், ஷைத்தான் சுவனத்திற்குள் நுழையத் துணை புரிந்த பாம்பையும் அல்லாஹ் சுவனத்தில் இருந்து வெளியேறி பூமிக்குச் சென்றுவிடுமாறு கட்டளையிட்டான்.

فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ  وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ  ‏ ( 2:36 )

பின்னர், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து பிறழ வைத்து, அவர்கள் இருவரும் எதிலிருந்தார்களோ அதிலிருந்து அவர்களை வெளியேற்றினான். மேலும், “நீங்கள் அனைவரும் இறங்கிச் செல்லுங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவராகவே இருப்பீர்கள். இன்னும், அப்பூமியில் உங்களுக்குச் சிறிது காலம் தங்குமிடமும் இன்பமும் உண்டு” என்று கூறினோம்.                                             (2:36).

وقال السدي : قال الله تعالى : اهبطوا منها جميعا  فهبطوا فنزل آدم بالهند ، ونزل معه الحجر الأسود ، وقبضة من ورق الجنة فبثه بالهند ، فنبتت شجرة الطيب ، فإنما أصل ما يجاء به من الهند من الطيب من قبضة الورق التي هبط بها آدم ، وإنما قبضها آدم أسفا على الجنة حين أخرج منها .

மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது இமாம் ஸுத்தீ (ரஹ்) அவர்கள், நீங்கள் அனைவரும் அதிலிருந்து இறங்கிச் சென்றுவிடுங்கள் என்று இறைவன் கூறினான். அப்போது, ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜ்ருல் அஸ்வத் கல்லும் சுவனத்து இலைகளில் ஒரு பிடியும் இறங்கின. அந்த இலைகளை அவர்கள் பூமியில் எறிந்தார்கள். அதில் இருந்து வாசனைப் பொருட்களைத் தரும் மரங்கள் முளைத்தன. இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் வாசனைப் பொருட்களின் மூலமானது, ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறங்கிய போது கொண்டுவந்த சுவனத்தின் இலைகள்தாம்.  சுவனத்தில் இருந்து அவர்கள் வெளியேறிய பொழுது, சுவனத்திலிருந்து வெளியே செல்கின்றோமே என்று வருத்தமுற்று, அவர்கள் அவற்றை (நினைவுக்காக)க் கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார்கள்.

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ ، قَالَ : حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ ، قَالَ : أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : إِنَّ أَوَّلَ مَا أَهْبَطَ اللَّهُ تَعَالَى آدَمَ أَهْبَطَهُ بِدهنَاءِ أَرْضِ الْهِنْدِ

ஆதம் (அலை) அவர்கள் இந்தியப் பூமியில் ‘தஹ்னா’ எனும் இடத்தில் இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று ஸஈது இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

وعن الحسن البصري قال : أهبط آدم بالهند ، وحواء بجدة ، وإبليس بدستميسان من البصرة على أميال ، وأهبطت الحية بأصبهان . رواه ابن أبي حاتم .

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவிலும், ஹவ்வா (அலை) அவர்கள் ஜித்தாவிலும், இப்லீஸ் பஸராவிற்குச் சில மைல்கள் அருகில் உள்ள ‘தஸ்தமீஸான்’ என்ற இடத்திலும் இறக்கப்பட்டார்கள். பாம்பு இஸ்பஹான் என்ற ஊரில் இறக்கப்பட்டது என்று கூறுகிறார்கள் (அறிவிப்பவர் இப்னு அபீ ஹாத்திம்)

إن الله عز وجل أهبط آدم قبل غروب الشمس من اليوم الذي خلقه فيه , وذلك يوم الجمعة ، من السماء مع زوجته ، وأنزل آدم فيما قال علماء سلف أمة نبينا صلى الله عليه وسلم بالهند .

ஆதம் (அலை) அவர்கள் எந்த நாளில் படைக்கப்பெற்றார்களோ, அதே நாளில் சூரியன் மறையும் முன்னர் அவர்களை அல்லாஹ் அவர்களின் மனைவியுடன் வானில் இருந்து இறக்கினான். அந்நாள் வெள்ளிக் கிழமையாகும். இன்னும், நம்முடைய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய உம்மத்தினருள் ‘உலமாஉஸ் ஸலஃப்’  என்றழைக்கப்படும் முந்தைய அறிஞர்களின் கூற்றுப்படி, ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப் பெற்றார்கள். -(நூல்: தபரீ)
- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..
- அஃப்ளலுல் உலமா
- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600092.

32 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

முதல் பெற்றோர்களாகிய ஆதம்,ஹவ்வா ( அலைஹி வஸ்ஸலாம் ) அவர்களை பற்றிய நல்லதோர் ஆய்வு. வாழ்த்துக்கள்

// சுவனத்தில் இருந்து அவர்கள் வெளியேறிய பொழுது, சுவனத்திலிருந்து வெளியே செல்கின்றோமே என்று வருத்தமுற்று, அவர்கள் அவற்றை (நினைவுக்காக)க் கொண்டு வந்தார்கள்” என்று கூறுகிறார்கள்.//

சொர்க்கத்தில் குறிப்பிட்ட கனியை சாப்பிட்டதும்.மர்மஸ்தானம் வெளிக்கொணரப்பட்டதால் அதை மறைப்பதற்காக இலையை பறித்து முன்னும் பின்னும் மறைத்து அதே நிலையில் இறக்கப்பட்டார்களா ?
அல்லது இலையை நினைவுக்காக கொண்டு வந்தார்களா ?

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
அருமையான வரவேற்கதக்க ஆய்வு

இங்கு என் கருத்தையும்(ஆதம் நபியவர்கள் தமிழக கடற்கரையோரங்களில் வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள் பேசியது தமிழ்தான் என்பதும் என் கருத்து) கிடைத்த கருத்தையும் பதிகிறேன்:

கொழும்பு நகருக்கு 45 மைல்
கிழக்காக அமைந்திருக்கும் மலைத்தொடரின் சிகரம் ஒன்று
ஆதம்சிகரம் எனப்படுகின்றது. இதன் உயரம் 7352 அடியாகும்.
இதன் உச்சியிலுள்ள பீடபூமியில் மனிதக் காலடிச்சுவடு ஒன்று
பதிந்துள்ளது. இப்பாதச்சுவடு இஸ்லாமிய - கிறித்தவ
சமயத்தவர்களால் ஆதம் நபியினுடையதென்றும் பௌத்தர்கள்
புத்த பிரானுடையதென்றும், இந்துக்கள் சிவபிரானுடையதென்றும்’
சொல்லப்படுகிறது. இலங்கையின் பழைய வரலாறு கூறும்
மகாவம்சம் சுமணகூடம் என்கிறது. மார்க்கோபோலோ ஆதம்
சிகரத்தின் உச்சியில் ஆதிமனிதன் ஆதமின் சமாதி இருப்பதாகக்
குறிப்பிடுவது ஆய்வுக்குரியது.

மனித இனத்தோற்ற வரலாற்றை ஆய்வுசெய்த அறிஞர்கள்
பலரும் மனித குலத்தோற்றம் குமரிப் பெருநாட்டிலிருந்து (உலகம் தோன்றியபோது, இன்றைய குமரிமுனைக்குத்
தென்பகுதி ஒருபுறம் தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர் தீவு
முதலியவற்றோடும், மறுபுறம் ஆஸ்திரேலியா, ஜாவா, சுமத்திரா,
மலேயா முதலியவற்றோடும் இணைந்து பூமத்திய ரேகை வரை
பரவி இருந்தது. விந்திய மலைக்கு அப்பால் சிந்து கங்கைச்
சமவெளியும், இமயமலை உள்ளிட்ட பகுதிகளும் கடலுக்குள்
அமிழ்ந்திருந்தன. இத்தகைய பெருநிலப்பரப்பு குமரிக்கண்டம்
எனப்பட்டது. நிலநூல் வல்லார் இதனைக் கோண்டுவானா
(Gonduvana) என்றும், உயிரியலார் லெமூரியா (Lemuria) என்றும்
கூறுவர்.)
தொடங்குவதாகக் கூறுகின்றனர். உலகம் தோன்றிய காலத்தில்
குழம்பாக இருந்த மண் முதலில் குளிர்ச்சி அடைந்து
அமைந்த நிலப்பரப்பு குமரி நாடு என்றும் இங்குதான்
மனிதன் தோன்றி இருக்கக்கூடும் என்றும் ஸ்காட் எலியட்
கருதுகின்றார். அவரது கருத்தை ஹெக்கல், தமிழறிஞர்
இலக்குவனார் போன்றோர் வழிமொழிவதால் முதல்
மனிதராகிய ஆதம் நபியின் தோற்றம் தென்தமிழ்நாடாகிய
குமரிநாடு எனத் தெளியலாம்.

குமரிப் பெருநாட்டில் வாழ்ந்த ஆதம்-ஹவ்வா தம்பதியர்க்கு
ஆபில், காபில், சேத்(ஷீத்,சேது) என்னும் மூன்று ஆண்மக்கள் பிறந்தனர்.
ஆதம்நபி இழந்துவிட்ட வானுலக வாழ்வை எண்ணி எண்ணி
வருந்தினார். வானுலகிலிருந்து எடுத்துவந்த ஹஜ்ருல்-அஸ்வத் கல்
அவருடைய இழந்துவிட்ட வாழ்வுக்குச் சான்றாக இருந்தது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லாமே எனக்கு புதுசு(ங்க) இங்கே !

அதனால அமைதியா உட்கார்ந்து கவனமா வாசித்து கொண்டு இருக்கிறேன்...

ஆய்வுகளை நேசிக்க கத்து கிட்டேன் இப்போவெல்லாம்..

Shameed said...

அறியாத தகவல்கள் அருமையாக தந்துள்ளீர்கள் தொடருங்கள் ...

Anonymous said...

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

நல்ல சிந்திக்க வய்ககூடிய கட்டுரை குர்ஹான் ஹதிஸ்சுடன் எழுதியமைக்கு நன்றி.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அருமையான ஆக்கம் முதல் மனிதர்களாகிய ஆதம்,ஹவ்வா (அலை) அவர்களை பற்றிய தகவல்களை ஆராய்ந்துள்ளீர் வாழ்த்துக்கள்...தொடரட்டும் ஆய்வுப்பணி

இந்த மாதிரியான நல்ல விடய(ஆக்க)ங்களை யாம்மரிந்தால் போதுமா? வீட்டிலுள்ள பெண்களும் மற்றும் மாற்று மதத்தினர் அறிய வேண்டாமா?

இதனை நகலெடுத்து ஜும்மாவில் விநியோகிப்பது நல்லதென்பது என்னுடைய கருத்து

அப்துல்மாலிக் said...

தெளிவான விளக்கம், மேலும் அந்நாழ்வரும் இறக்கப்ட்ட இடம் எது (இப்போ உள்ள நகரத்தின் பெயர்) என்று சொன்னால் இன்னும் விளக்கம் பெறலாம்...

Noor Mohamed said...

அறியாத பல செய்திகளை இந்த ஆக்கங்கள் மூலம் அறிகிறோம். அத்தோடு இதனோடு தொடர்புடைய செய்திகளை //அதிரைpost சொன்னது…// அறிவுக்கு விருந்தாக அமைகிறது.

சகோ. அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில். அவர்களுக்கு மிக்க நன்றி.

அப்துல்மாலிக் said...

அதிரைpost சொன்னது…//ஆபில், காபில், சேத்(ஷீத்,சேது) என்னும் மூன்று ஆண்மக்கள் பிறந்தனர்.//

ஒரு வேளை இந்த பெயருக்காகதான் சேது சமுத்திர கால்வாய் என்று பெயர் வந்த்தோ, சேது என்ற மன்னன் ஆண்டான் என்ற வலராறு தாண்டி இதை சிந்திக்கவேண்டியிருக்கு, மேலும் சேது ரோடு அதிரை வழியாகவும் செல்கிறது. வரலாறு முக்கியம் அமைச்சரே...!

அன்புடன் புகாரி said...

சுவாரசியமான தொடர். பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. எழும் கேள்விகளுக்கு பதிலாக இனி வரும் தொடர் அமையக்கூடும் என்ற நம்பிகையில் அவற்றை எனக்குள்ளேயே பூட்டிவைத்துக்கொள்கிறேன்.

அன்புடன் புகாரி

அலாவுதீன்.S. said...

எல்லாம் எனக்கும் புதுசா இருக்கிறது. ஆதம் நபியைப் பற்றிய இந்தப் பதிவில் கற்பனை கதைகள்தான் அதிகம் உள்ளது.

////m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது… எல்லாமே எனக்கு புதுசு(ங்க) இங்கே !

அதனால அமைதியா உட்கார்ந்து கவனமா வாசித்து கொண்டு இருக்கிறேன்...

ஆய்வுகளை நேசிக்க கத்து கிட்டேன் இப்போவெல்லாம்.. /////


உண்மையில்லாத ஆய்வுகளை எப்படி நேசிப்பது.

இந்தப் பதிவு மீண்டும் ஆய்வு செய்ப்பட வேண்டும். உண்மை வரலாறு பதியப்பட வேண்டும்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
"அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் (நூல்: அஹ்மத் 22391)"

/////மூன்று விஷயங்களுக்காக அரபிகளை நேசியுங்கள். ஏனெனில், நானும் அரபியாக இருக்கிறேன், அல்குர்ஆனும் அரபியாகும். சுவனவாசிகளின் மொழியும் அரபியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (தபரானி - முஸ்தத்ரக்) ////

'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' (அல்குர்ஆன் : 30:22)

மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.

மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

ஆதம் நபி(அலை) அவர்கள் சம்பந்தமாக நிறைய கட்டுக்கதைகள் உள்ளன. உண்மையான வரலாறைத் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் புகாரி said...

இதையும் கொஞ்சம் பார்த்துவிட்டால் நலம் என்று தோன்றுகிறது

http://www.bradshawfoundation.com/journey/

அன்புடன் புகாரி

Canada. Maan. A. Shaikh said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அறியாத தகவல்கள் அருமையாக தந்துள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் பனி

இப்னு அப்துல் ரஜாக் said...

//சுவனத்தில் தங்கியிருந்த ஆதம், ஹவ்வா (அலை) இருவரையும் ஷைத்தான் தடுக்கப்பட்ட மரத்தின் கனியினை ஏமாற்றிப் புசிக்க வைத்த பின்னர், அவர்களையும் ஷைத்தானையும், ஷைத்தான் சுவனத்திற்குள் நுழையத் துணை புரிந்த பாம்பையும் அல்லாஹ் சுவனத்தில் இருந்து வெளியேறி பூமிக்குச் சென்றுவிடுமாறு கட்டளையிட்டான்.//
இதில் பாம்பு பற்றி சொல்லும் குரான் வசனம்,அல்லது ஹதீஸ் எண் தர முடியுமா?பாம்பு பற்றி - நூறு ஆயிரம் தடவைகள் மாற்றி,மாற்றி எழுதப்பட்ட,திருத்தப்பட்ட பைபிள் கூறும் கட்டுக்கதை அல்லவா அது?நாங்கள் நூறு மசாலாவும்,சாக்கடை பைபிளும் பற்றி கதை கேட்க தயாரில்லை.நீங்கள் அல்லாஹ்வின் ஒரு தூதரைப் பற்றி எழுதுகிறீர்கள்.ஆதாரம் கொடுங்கள்,குரான் மற்றும் ஹதீஸ் மூலம்.இல்லையெனில் இந்த ஹதீசுக்கு அஞ்சிக் கொள்வோம்.நான் சொல்லாத ஒன்றை யாரும் சொன்னால் அவர் நரகம் செல்வார்.ஹதீசுக்கு இப்படி என்றால்,குரானுக்கு???வேண்டாம் சகோதரா,இந்த விபரீத விளையாட்டு.எனக்கு முதலிலும்,பிறகு உங்களுக்கு நான் சொல்வது,அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வோம்.
இன்னும் நிறைய அபத்தங்கள் உள்ளன.பிறகு பார்ப்போம்,இன்ஷா அல்லாஹ்

Unknown said...

அப்துல்மாலிக் சொன்னது…
//அதிரைpost சொன்னது…//ஆபில், காபில், சேத்(ஷீத்,சேது) என்னும் மூன்று ஆண்மக்கள் பிறந்தனர்.//

ஒரு வேளை இந்த பெயருக்காகதான் சேது சமுத்திர கால்வாய் என்று பெயர் வந்த்தோ, சேது என்ற மன்னன் ஆண்டான் என்ற வலராறு தாண்டி இதை சிந்திக்கவேண்டியிருக்கு, மேலும் சேது ரோடு அதிரை வழியாகவும் செல்கிறது. வரலாறு முக்கியம் அமைச்சரே...!//

சேது என்ற மன்னன் ஆண்டான் என்ற வலராறு தாண்டி இதை சிந்திக்கவேண்டியிருக்கு...
சரிதான் காக்கா,ஷீத்துதான் சேத் என்றும் சேது என்று தமிழிலும் அழைக்கப்படுகிறது. ஆக சேது பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் தங்களை சேதுபதி;சேதுவுக்கு அதிபதி என்றழைத்துக்கொண்டனர்( உ.த: கிழவன் சேதுபதி)
சேதுபதி என்பது இயற்பெயரல்ல இட்டப்பெயரே...அதற்கு ஒரு சான்று...

ராமநாதபுரம் என்னும் சிறிய ராஜ்யத்தை நாயக்கர்கள்தான் தோற்றுவித்தனர். அது கள்ளர், மறவர் நாடாக இருந்ததால் அமரநாயக்கர் அல்லது பாளையக்காரர்கள் அந்தப் பிரதேசத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே மறவர்களில் முக்கியமான தலமைக்குடியினரில் ஒருகுடியினரை அங்கு தேசக்காவலராக நியமித்தார்கள். சேது நாட்டைக் காப்பவர்கள்; தலைமை பூண்டவர்கள் என்பதால் "சேதுபதி" என்ற பட்டத்தை அவர்கள் ஏற்றனர். அவர்கள் நாயக்கர்களுக்கு அடங்கியவர்களாகத்தான் ஆரம்பத்தில் இருந்தார்கள். பின்னால் திருமலை காத்த தேவரின் காலத்தில் சில சிறப்புகளும்ஏறக்குறைய தனியாட்சியும் கிடைத்தது. பின்னர் கிழவன் சேதுபதி, சேது நாட்டை மிகவும் விரிவாக்கிக்கொண்டு தனியாட்சி அரசராக விளங்கினார்.

ரிக் வேதம், யஜூர் வேதத்தில் சேதுவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன என்ற தகவல்கள் என்பதிலிருந்து அதன் பழமையை நாம் உணரமுடியும்.

அன்புடன் புகாரி said...

இதுவரை வாசித்ததில் கிட்டிய தகவல்களின் தொகுப்பு:

1. மனிதன் தோன்றும் முன்னரே தோன்றிய மொழி அராபிக்

2. மனிதன் படைக்கப்படும்போது இலக்கிய இலக்கண சுத்தமாக ஒரு மொழி இருந்தது. அதுதான் அராபிக்.

3. அராபிக் முதல் மனிதனுக்கு இறைவனால் கற்றுத் தரப்பட்ட மொழி. அதாவது இறைவனின் மொழி.

எக்கச்சக்கமா இடிக்குது :)

அன்புடன் புகாரி

sabeer.abushahruk said...

//மூன்று விஷயங்களுக்காக அரபிகளை நேசியுங்கள். ஏனெனில், நானும் அரபியாக இருக்கிறேன், அல்குர்ஆனும் அரபியாகும். சுவனவாசிகளின் மொழியும் அரபியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (தபரானி - முஸ்தத்ரக்//

ஒரு மனிதனை நேசிக்கவும் வெறுக்கவும் அவனின் மொழி ஒரு காரணியாக இருக்கும் என்பது ஏற்படையதல்ல. இஸ்லாத்தில் இப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை.

╬அதி. அழகு╬ said...

Sethu/Sheedu, snack, Love Arabic etc... are very old jokes.
Best of luck.
- Jameel

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? -2
கருத்துரைகளுக்குப் பதில்

==============================
சகோதரர் அர அலவுக்கு
==============================
“ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவிலும், ஹவ்வா (அலை) அவர்கள் ஜித்தாவிலும், இப்லீஸ் பஸராவிற்கு சில மைல்கள் அருகில் உள்ள தஸ்தமீஸான் என்ற இடத்திலும் இறக்கப் பட்டார்கள், பாம்பு இஸ்பஹான் என்ற ஊரில் இறக்கப்பட்டது” என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு அபீ ஹாத்திம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அவர்களது தஃப்ஸீர் விரிவுரைத் தொகுப்பின் ஹதீது எண் 395.

(இக்கட்டுரையில் உள்ள முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப் பெற்றார்கள்? என்ற தலைப்பின் கீழ் உள்ள தகவல்கள் தஃப்ஸீர் இப்னு கஃதீர் (1980ம் வருட அரபி மொழிப் பதிப்பு) முதல் பாகம் பக்கம் 80இல் வருகின்றன).

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களையும், ஹவ்வா (அலை) அவர்களையும், ஷைத்தானையும் சுவனத்தில் இருந்து இறங்கிச் செல்லுங்கள் என்று கூறும் வசனம் அவர்கள் ஆதம், ஹவ்வா (அலை), மற்றும் இப்லீஸ் ஆகிய மூன்று பேரை மட்டுமே குறிக்கும் எனப் பொருள் கொள்ள இயலாது. اهبطوا ‘இறங்கிச் செல்லுங்கள்’ என்ற வார்த்தை பன்மையில் கூறப்பட்டிருப்பதால் அச்சொல் மூன்றுக்கு அதிகமானவற்றையும் குறிக்கும் சொல்லாகும். எனவே, இவர்கள் மூன்று பேர் மட்டும் தான் இறங்கினார்கள். அவர்களுடன் வேறு எதுவும் இறங்கவில்லை என்று நம்மால் சொல்ல இயலாது.

உதாரணத்திற்கு, ஓர் ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதர் வேறு ஓர் ஊருக்கு (உதாரணத்திற்கு, இந்தியாவிலிருந்து சஊதிக்கு அல்லது அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு) குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றலாகிச் செல்லும் நேரம் தன்னுடன் எதை எதையெல்லாம் கொண்டு செல்வார் என்று சிறிது யோசித்துப் பாருங்கள். (நூற்றுக்கு 75 சதவீதம் வெளிநாட்டில் வாழும் அதிரைக்காரர்களுக்கு அதுவும், பேஃமிலி விசாவுடன் குடும்பத்துடன் இருப்பவர்களுக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன்... ) விசா, டிக்கெட், பெட்டி, படுக்கை, சோப்பு, சீப்பு, கண்ணாடி, எண்ணெய், உடை, பாத்திரங்கள், உணவுப் பொருட்கள்...விமானம் அனுமதிக்கும் அளவு லக்கேஜ், ஹேண்ட லக்கேஜ், அதுமட்டுமின்றி கார்கோ.... இந்தப் பட்டியலைச் சீக்கிரம் முடிக்க இயலாது... ஏன் 40 நாட்கள் ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பி வரும் மக்களைப் பாருங்கள். எத்தனை எத்தனைப் பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள்? எத்தனைப் பொருட்களைக் கொண்டு வருகின்றார்கள்...?

நமக்கே இத்தனைப் பொருட்கள் ஊர் விட்டு ஊர் மாற்றலாகும் நேரம் தேவைப்படுகின்றது. நம்மைப் போன்ற சாதாரணமானவர்களை விட்டு விடுங்கள்... ஓரு நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி இன்னொரு நாட்டிற்கு வருகின்றார் எனில்... அவருடன் என்னென்ன பொருட்களெல்லாம் வருகின்றன?

அல்லாஹ்வின் எல்லையில்லா அருள்கள் நிறைந்த சுவனத்தில் இருந்து ஆதம் (அலை) அவர்கள், வல்ல இறையோனின் பிரதிநிதியாகத் தமது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுடன்.. அவர்கள் இருவர் மட்டுமல்ல... இனி வரப் போகும் அவர்களது சந்ததியினர் அல்லாஹ் நாடிய காலம் மட்டும் வாழப் போகும் இப்புவிக்கு சுவனத்திலிருந்து மாற்றலாகி வரும் நேரம் என்னென்ன பொருட்கள் அவர்களுடன் வந்திருக்கும்?

இதையெல்லாம் குர்ஆனில் சொல்லும் அளவுக்கு அவற்றுக்கு முக்கியத்துவம் இல்லையென்றாலும், அவர்களுடன் என்னென்ன பொருட்கள் வந்தன என்று குர்ஆன் விரிவுரையாளர்கள், அறிஞர்கள் அறிவித்துள்ளனர். அவை ஒவ்வொன்றுக்கும் அது இறக்கப்பட்டதற்கான வரலாறையும் பதிந்து வைத்துள்ளனர். அவை முழுவதையும் இங்கு பதிய இயலாது..

(பாம்புக்கே அரண்டு போய் விட்டீர்கள்.. இதிலிருந்து பாம்பைக் கண்டால் அல்ல “பாம்பு…....” என்று சொன்னால் கூடப் படையும் நடுங்கும் என்று கூறும் “பாம்பென்றால் படையும் நடுங்கும்” என்ற பழமொழி உண்மைதான் என்று தெரிகிறது. :)

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

பாம்பு ஆதம் (அலை) அவர்களுடன் இறக்கப் பட்டது என்ற ஹதீது பைபிள் கட்டுக்கதை என்று கூறுகிறீர்கள். ஆனால், நான் பைபிளை இதுவரை படித்ததில்லை. எனவே, அதில் என்ன உள்ளது என்று எனக்குத் தெரியாது.

என்னிடம் இருக்கும் குர்ஆன் விரிவுரைகள், ஹதீதுத் தொகுப்புகளில் இருந்து மொழிபெயர்த்துத் தான் இக்கட்டுரைத் தொடரினை எழுதுகின்றேன்...

அல்பகரா – 36 ஆம் வசனம் “மேலும், நீங்கள் அனைவரும் இறங்கிச்செல்லுங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவராகவே இருப்பீர்கள்” என்று கூறுகின்றது.

மனிதனுக்கும் பாம்புக்கும் ஆகாது என்பது நமக்குத் தெரியும். அது ஏன்? இன்னும் மனிதர்களுக்கும் பல விலங்குகளுக்கும் ஆகாது.. அது ஏன்? சில விலங்குகள் மனிதனுடன் நெருக்கமாகப் பழகுகின்றன... அது ஏன்...? இவற்றுக்கும் குர்ஆன் விரிவுரைகளிலும், ஹதீதிலும் பதில்கள் காணப்படுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் பற்றியும், அவனது படைப்புகள் பற்றியும், இம்மை, மறுமை, சுவனம், நரகம், இறுதி நாள், இன்னும் எண்ணற்ற விஷயங்களைத் தங்களது தோழர்களாகிய ஸஹாபாப் பெருமக்களுக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ் தனது வேதமாகிய குர்ஆனில் நபி (ஸல்) அவர்களுக்கு முந்திய நபிமார்களில் சிலரைப் பற்றி மட்டுமே கூறியுள்ளான்.. பலரைப் பற்றிக் கூறவில்லை. ஆனால், அஹ்லுல் கிதாப் எனும் நமக்கு முன்னர் வேதம் கொடுக்கப் பெற்ற பனீ இஸ்ராயீல்கள் முந்திய நபிமார்களைப் பற்றியும், அவர்களது வரலாறுகள் பற்றியும் பல செய்திகளைத் தெரிந்து வைத்திருந்தனர். முந்தைய நபிமார்களைப் பற்றி வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அல்குர்ஆன் கூறுகின்றது

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
ஃபஸ்அலூ அஹ்லத் திக்ரி இன் குந்தும் லா தஃலமூன்...
நீங்கள் (இது பற்றி) அறியாதிருந்தால், இதுபற்றிக் கூறப்பட்டுள்ளவர்களிடம் நீங்கள் கேட்டு (அறிந்து) கொள்ளுங்கள். (அல்குர்ஆன் - 16:43 , 21:7)

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

நபி (ஸல்) அவர்களும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةٌ ، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلا حَرَجَ
“பல்லிஃகூ அன்னீ வலவ் ஆயஹ் வஹத்திஸூ அன் பனீ இஸ்ராயீல்..” “என்னிலிருந்து அது ஓரு வாக்கியமாக இருந்தாலும் அதனைப் பிறருக்கு எத்தி வைத்து விடுங்கள். இன்னும், பனீ இஸ்ராயீல்கள் பற்றியும் நீங்கள் சொல்லுங்கள், அது ஒன்றும் தவறல்ல” என்று அனுமதி வழங்கி உள்ளார்கள்.

எனவே, பனீ இஸ்ராயீல்கள் மூலம் கிடைக்கும் செய்திகளை நமக்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள், அவர்களுக்கு அனுப்பப் பெற்ற நபிமார்கள், இன்னும் அவர்களின் வரலாறுகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் நோக்குடனும், அவற்றின் மூலம் கிடைக்கும் செய்திகளிலிருந்து படிப்பினை பெறும் நோக்குடனும் தெரிந்து கொள்ளலாம் என்பது மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.

இது போன்ற செய்திகளை ஸஹாபாக்களிலும், தாபிஈன்களிலும், தபஉத் தாபிஈன்களிலும் பலர் யூத, கிறித்தவ அறிஞர்களிடம் கேட்டுத் தொகுத்து வைத்திருந்தார்கள். நமக்கு முன்னர் வேதம் கொடுக்கப் பெற்றவர்களுக்கு நபி (ஸல்) அவர்களது வருகை பற்றி முன்னரே அவர்களது வேதங்களில் அறிவிக்கப் பட்டு இருந்தது. அதை அறிந்திருந்த பல யூத, கிறித்தவ, அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு நபிக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய செய்திகளை நபி (ஸல்) அவர்கள் தான் இறுதியான நபி என்று உறுதி செய்து கொள்ளும் நோக்குடன் கேட்டு அவற்றுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறியதும் அவர்களிடம் தங்களது இஸ்லாத்தைப் புதுப்பித்துக் கொண்டனர். அவ்வாறு நபி (ஸல்) அவர்களிடமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பனீ இஸ்ராயீல்களைச் சேர்ந்தோர் பலர் ஸஹாபாக்களாகவும், தாபிஈன்களாகவும், தபஉத் தாபிஈன்களாகவும் இருக்கின்றனர். அவர்களில் முக்கியமானோர், கஅபுல் அஹ்பார் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) இன்னும் அநேகர். இன்னும், பல கிறித்தவ, யூத அறிஞர்கள் அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தான் இறுதி நபி எனத் தெரிந்திருந்தும் அதனை ஏற்காமலும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களே ஒரு சில யூத, கிறித்தவ அறிஞர்களிடம் தம்மைப் பற்றி அவர்களது வேதங்களில் எப்படிக் கூறப் பெற்றுள்ளது என்று கூறுமாறு கேட்டிருக்கிறார்கள். இன்னும், நபி (ஸல்) அவர்களைப் பற்றி மட்டுமல்ல, அவர்களது முக்கியமான தோழர்க்ளைப் பற்றிய அறிவிப்புகளையும், அடையாளங்களையும் வேதம் கொடுக்கப் பட்ட மக்கள் அறிந்திருந்தார்கள்.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

இத்தகைய செய்திகளைக் குர்ஆன் விரிவுரையாளர்களும், ஹதீதுத் தொகுப்பாளர்களும் பதிந்து வைத்துள்ளார்கள். அவை எல்லாம் லத்தீனில் இருந்தோ, ஆங்கிலத்திலிருந்ததோ, அல்லது வேறு மொழிகளில் இருந்தோ மொழிபெயர்க்கப்பட்ட பைபிளில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல. மாறாக ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள் தொகுத்து வைத்தவை. அவற்றை மேற்கோள் காட்ட மேற்கண்ட இறைவசனமும், நபி (ஸல்) அவர்களது நபிமொழி அனுமதிக்கின்றன.

இதன் அடிப்படையில் இத்தகவலையும் தர விரும்புகிறேன். நபி (ஸல்) அவர்கள் பாம்பைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். அதனைக் கொல்வதற்கான மூல காரணத்தையும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மனிதனுக்கும் பாம்புக்கும் ஏன் பகை உண்டானது?
سنن ابي داؤد - أبواب النوم- باب في قتل الحيات:
5248 حدثنا إسحق بن إسمعيل حدثنا سفيان عن ابن عجلان عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما سالمناهن منذ حاربناهن ومن ترك شيئا منهن خيفة فليس منا
அபூதாவூது என்ற நபி மொழித் தொகுப்பில் தூக்கத்தின் ஒழுக்கங்கள் பற்றிய பிரிவில், பாம்புகளைக் கொல்லுதல் பற்றிய தலைப்பில் கீழ்க்கண்ட நபிமொழி வந்துள்ளது.

“அவற்றுடன் நாம் பகைமை கொண்டதில் இருந்து இதுவரை நாம் சமாதானம் செய்து கொள்ள வில்லை. எனவே, பயத்தினால் அவற்றை (அடிக்காமல்) விட்டு விடுபவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்- அபூதாவூத் ஹதீஸ் எண் / 5248)

இந்த நபிமொழிக்கு கீழ்க்கண்டவாறு அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
فإن المحاربة والمعاداة بين الحية والإنسان جبلية لأن كلا منهما مجبول على طلب قتل الآخر وقيل أراد العداوة التي بينها وبين آدم عليه السلام على ما يقال إن إبليس قصد دخول الجنة فمنعه الخزنة فأدخلته الحية في فيها فوسوس لآدم وحواء حتى أكلا من الشجرة المنهية فأخرجا عنها قاله القاري

பாம்புக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள இந்தப் பகை ஒருவரை ஒருவர் கொல்லும் அளவுக்கு இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களுக்கும், பாம்புக்கும் இடையில் உண்டான பகையைக் குறித்துத்தான் கூறியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. அதாவது, சுவனத்திற்குள் இப்லீஸ் நுழைய நாடிய போது, சுவனத்தின் காவலர்கள் அவனைத் தடுத்தனர். பாம்பு அவனைத் தன் வாய்க்குள் நுழைத்துக் கொண்டது.பிறகு அவன் ஆதமையும், ஹவ்வா இருவரையும் தடுக்கப் பட்ட மரத்திலிருந்து உண்ணவைத்து, சுவனத்திலிருந்து வெளியேற்றி விட்டான். இதனை அல்காரீ என்ற அறிஞர் கூறுகிறார். (நூல், அவ்னுல் மஃபூத் ஷரஹ் அபீதாவூது)

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

மேற்கண்ட விளக்கத்திற்கு ஆதாரமாக, தஃப்ஸீர் குர்துபியிலும் கீழ் வரும் செய்தி ஒன்று காணக்கிடைக்கின்றது.
وذكره عبد الرزاق عن وهب بن منبه : دخل الجنة في فم الحية وهي [ ص: 295 ] ذات أربع كالبختية من أحسن دابة خلقها الله تعالى بعد أن عرض نفسه على كثير من الحيوان فلم يدخله إلا الحية ، فلما دخلت به الجنة خرج من جوفها إبليس فأخذ من الشجرة التي نهى الله آدم وزوجه عنها فجاء بها إلى حواء فقال : انظري إلى هذه الشجرة ، ما أطيب ريحها وأطيب طعمها وأحسن لونها فلم يزل يغويها حتى أخذتها حواء فأكلتها . ثم أغوى آدم ، وقالت له حواء : كل فإني قد أكلت فلم يضرني ، فأكل منها فبدت لهما سوءاتهما وحصلا في حكم الذنب ، فدخل آدم في جوف الشجرة ، فناداه ربه : أين أنت ؟ فقال : أنا هذا يا رب ، قال : ألا تخرج ؟ قال : أستحي منك يا رب ، قال : اهبط إلى الأرض التي خلقت منها . ولعنت الحية وردت قوائمها في جوفها وجعلت العداوة بينها وبين بني آدم ، ولذلك أمرنا بقتلها ، على ما يأتي بيانه . وقيل لحواء : كما أدميت الشجرة فكذلك يصيبك الدم كل شهر وتحملين وتضعين كرها تشرفين به على الموت مرارا . زاد الطبري والنقاش : وتكوني سفيهة وقد كنت حليمة
வஹ்ப் இப்னு முனப்பஹ் (ரஹ்) (இவர்கள் பிரபலமான தாபிஈன்களில் ஒருவர். வேதம் கொடுக்கப்பட்டவர்களாகிய பனீ இஸ்ராயீல்கள் வழியில் வருபவர். இவரது தந்தை முனப்பஹ் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸஹாபி ஆவார்.) அவர்கள் கூறியதாகக் கூறப்படுகின்றது:

இப்லீஸ் பாம்பின் வாயினுட் புகுந்து கொண்டு அதன் மூலம் சுவனத்தில் நுழைந்து விட்டான். பாம்பு பெண் ஒட்டகத்தைப் போன்று நான்கு கால்களுடன் அல்லாஹ் படைத்த அழகிய மிருகமாகத்தான் இருந்தது. ஷைத்தான் பல மிருகங்களிடம் அவன் தன்னைச் சுவனத்திற்குள் கொண்டு செல்லுமாறு வேண்டிய பொழுது பாம்பைத் தவிர அங்கிருந்த எந்த மிருகமும் அவனைக் கொண்டு செல்லவில்லை. பாம்பு இப்லீஸைச் சுவனத்திற்குள் கொண்டு சென்றதும், அவன் அதன் வயிற்றிலிருந்து வெளிவந்து, அல்லாஹ் ஆதமையும், ஹவ்வாவையும் தடுத்திருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். ஹவ்வா (அலை) அவ்விடம் வந்த பொழுது, “இந்த மரத்தைப் பார். இதன் வாசம் எப்படி இருக்கின்றது? இதன் சுவை எப்படிப் பட்டது? இதன் நிறம் எப்படி இருக்கிறது?” என்றெல்லாம் பார்க்குமாறு ஹவ்வா (அலை) அவர்களை வழிகெடுத்துக் கொண்டே இருந்தான். இறுதியில், அவர்கள், அதனை எடுத்துச் சாப்பிட்டு விட்டார்கள். பின்னர், ஆதம் (அலை) அவர்களையும் அவன் வழி கெடுத்தான். ஹவ்வா (அலை) அவர்கள், “நீங்களும் உண்ணுங்கள். நானும் தான் உண்டேன். அது எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை”, என்றார்கள். எனவே, ஆதம் (அலை) அவர்களும் அந்த மரத்திலிருந்து தின்றார்கள். அப்போது, அவர்களின் மறைவுறுப்புகள் அவர்களுக்கு வெளிப்பட்டன. அவர்கள் இருவரும் பாவம் புரிந்தவர்களாகி விட்டார்கள். ஆதம் (அலை) அவர்கள் அந்த மரத்துக்குள் சென்று கொண்டார்கள். அப்போது, ரப்பாகிய இறைவன், “ஆதமே, நீர் எங்கிருக்கிறீர்?” என்று கேட்டான். அதற்கவர்கள், “ரப்பே, நான் இங்குதான் இருக்கிறேன்”, என்றார்கள். அதற்கு இறைவன், “நீர் வெளியே வரமாட்டீரா?” என்றான். ஆதம் (அலை) அவர்கள், “என் இரட்சகனே, நான் உன்னிடம் இருந்து வெட்கப்டுகின்றேன்” என்றார்கள். இறைவன் கூறினான், “நீர் இங்கிருந்து உம்மை எந்தப் பூமியில் இருந்து படைத்தேனோ அப்பூமிக்கு இறங்கிச் செல்லும்.” பாம்பும் சபிக்கப்பட்டு அதன் கால்கள் வயிற்றுக்குள் சென்று விட்டன. அதற்கும், மனிதனுக்கும் இடையில் பகை உண்டாக்கப் பட்டது. -அதனாலேயே, அதைக் கொல்லுமாறு நாம் பணிக்கப்பட்டு உள்ளோம்- ஹவ்வா (அலை) அவர்களிடம், “நீ அம்மரத்தை இரத்தம் கசிய வைத்தது போல், உனக்கும் ஒவ்வொரு மாதமும் உண்டாகும். இன்னும், நீ (உன் சந்ததியை) சிரமத்துடனே சுமந்து, இவ்வாறு சிரமப்படுவதை விட இறந்துவிடலாமே என்று விரும்பும் அளவு சிரமத்துடனே பெற்றெடுப்பாய், என்று கூறப்பட்டது. இன்னும், அறிவில் குறைந்தவளாகவும் நீ இருப்பாய்” என்றும் கூறப்பட்டது. (தஃப்ஸீர் குர்துபி – பக்கம் 295)

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

يذكر أن الحية كانت خادم آدم عليه السلام في الجنة فخانته بأن مكنت عدو الله من نفسها وأظهرت العداوة له هناك ، فلما أهبطوا تأكدت العداوة وجعل رزقها التراب ، وقيل لها : أنت عدو بني آدم وهم أعداؤك وحيث لقيك منهم أحد شدخ رأسك . روى ابن عمر عن رسول الله صلى الله عليه وسلم قال : خمس يقتلهن المحرم فذكر الحية فيهن .
இன்னும் கூறப்படுகின்றது, பாம்பு ஆதம் (அலை) அவர்களுக்குச் சேவகனாகச் சுவனத்தில் இருந்தது. ஆனால், அல்லாஹ்வின் பகைவனுக்கு உதவியதன் மூலம் அது மோசடி செய்து விட்டது. அதனால், அங்கிருந்தே, மனிதனுடன் அதன் பகை தொடங்கி விட்டது. பூமிக்கு இறக்கப்பட்ட பின் அப்பகை இன்னும் உறுதியாகி விட்டது. இன்னும், அதன் உணவு மண்ணாக ஆக்கப்பட்டது. இன்னும், நீ ஆதமின் மக்களின் பகைவன், அவர்கள் உனக்குப் பகைவர்கள். உன்னை எங்கு கண்டாலும், உனது தலையை நசுக்குவார்கள் என்றும் கூறப்பட்டது. இன்னும், நபி (ஸல்) ஐந்து விலங்குகளை இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என்று கூறிய பொழுது அவற்றில் பாம்பையும் குறிப்பிட்டார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. (தஃப்ஸீர் குர்துபி – பக்கம் 296)

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

===========================
சகோதரர் புஹாரிக்கு
===========================
“சுவனவாசிகளின் மொழி அரபியாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள நபிமொழியைச் சில அறிஞர்கள், “ஆதம் (ஸல்) அவர்களை அல்லாஹ் சுவனத்திலே குடியமர்த்தியதால் அவர்களும் சுவனவாசிகளில் ஒருவராக ஆகிவிடுகிறார்கள். எனவே, அதன் அடிப்படையில் அவர்கள் சுவனத்தில் இருக்கும் போது அரபி மொழி பேசியிருக்கலாம்” என்பதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்கிறார்கள். இது கட்டுரையின் தலைப்புக்கு பொருந்தி வந்ததால் இக்கருத்தை மேற்கோள் காட்ட எடுத்துக்கொண்டேன்.

மேலும், மேற்கண்ட நபிமொழியில், “சுவனவாசிகளின் மொழி அரபி” ஆகும் என்று வந்துள்ளதே அன்றி அல்லாஹ்வின் மொழி அரபி என்று குறிப்பிடப் படவில்லை. இன்னும், கட்டுரை முதல் மனிதர் பேசிய மொழி எதுவாக இருக்கும் என்பது பற்றியது தானே அன்றி, அல்லாஹ்வின் மொழி எது என்பது அல்ல. மொழிகளும் அல்லாஹ்வின் படைப்புகள்தான். அல்லாஹ்வுக்கென்று ஒரு மொழியைக் கூறுவது அவனைக் கட்டுப்படுத்துவதாகி விடும். அல்லாஹ் எதற்கும் கட்டுப்பட்டவன் அல்ல.
الله الصمد112:2.
அல்லாஹுஸ் ஸமத் / அல்லாஹ் எதன் அளவிலும் தேவையற்றவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 112:2)

படைப்புகளைப் படைக்கும் முன்னரே அவற்றுக்குரிய விதியை அல்லாஹ் தீர்மானித்து விட்டான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. மொழிகளும் அல்லாஹ்வின் படைப்புகள் தான். அப்படி எனில், அரபி மொழி மட்டுமல்ல, எந்த மொழிக்குரிய இலக்கணத்தையும், அது எங்கு, எப்போது, எப்படித் தோன்ற வேண்டும், இன்னும் அத்துடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும், அல்லாஹ் அதனை மக்களிடம் வெளிப்படுத்தும் முன்னரே படைத்திருப்பான். இன்னும், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்து அறிவுகளையும் கற்றுக் கொடுத்துத் தான் இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தான். மனித சமுகத்தின் தேவைக்கேற்ப அவற்றை அவர்களுக்கு வெளியாக்குகின்றான்.
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا (البقرة:31)
இன்னும் அவன் ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 2-31)
(உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? -1 என்ற இதற்கு முந்திய தொடரைப் பார்க்கவும். அல்லாஹ் படைப்புகளுடன் எப்படிப் பேசுகின்றான் என்பது பற்றியும் அறிஞர்கள் தனியொரு ஆராய்ச்சி செய்துள்ளனர். அது வேறு தலைப்பு).

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

===========================
சகோதரர்கள் சபீர் காக்கா, அலாவுதீன் ஆகியோருக்கு
===========================
“அரபிகளை நேசியுங்கள்” என்ற தொடர் “சுவனவாசிகளின் மொழி அரபியாகும்” என்ற நபிமொழியின் தொடக்கமாக இருந்ததால் அதனையும் சேர்த்துப் பதிந்தேன். அரபிகளை நேசிப்பது போன்று இப்படியெல்லாம் இஸ்லாத்தில் இருக்க இயலாது என்று நமக்குத் தோன்றுகின்றது. ஹதீதின் வாசககத்தைச் சிறிது ஆழ்ந்து கவனிப்பின் ஒன்று விளங்கும். “அரபிகளை நேசியுங்கள்” என்று அரபிகளிடமே கூறுவது சாத்தியமில்லை. அரபிகள் அல்லாதவர்களுக்குக் கூறியிருக்கப் பட வேண்டும். இக்கருத்தை வலியுறுத்துவது போன்று, இன்னொரு நபிமொழியும் வந்துள்ளது. “அரபிகளை, இன்னும் அவர்கள் இஸ்லாத்தில் நிலைத்திருப்பதையும், சீர்பெற்றிருப்பதையும் நேசியுங்கள். ஏனெனில், அவர்கள் இஸ்லாத்தில் சீர்பெற்றிருப்பது இஸ்லாத்தில் ஒளியாகும். அவர்கள், சீர்கெட்டு விடுவது, இஸ்லாத்தில் இருளாகும்”, என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல் தபகாத்துல் முஹத்திஸீன் / அபுநஈம்)

இஸ்லாம் பரவ ஆரம்பித்த காலத்தில் அரபு இனத்தாருக்கு அப்பாற்பட்ட பல்வேறு இனத்தவர்களும் இஸ்லாத்தைப் புரிந்து ஏற்றுக் கொள்ளத் தொடங்கிய காலகட்டத்தில், அரபுகளுக்கும், மற்ற இனத்தாருக்கும் இணக்கத்தை உண்டாக்கும் நோக்கில் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கலாம் என்று தோன்றுகின்றது. நபி (ஸல்) அவர்களை உலகத் தலைவர்களிலேயே மிகத் தலைசிறந்த இராஜதந்திரி என்று நாம் ஒப்புக் கொள்கிறோம். உலகில் ஏகத்துவத்தைப் பரப்ப இருக்கும் மக்களுக்கு மத்தியில் இறைநம்பிக்கையின் அடிப்படையில் ஒரினத்தார் பிற இனத்தாரையும் நேசிக்க வேண்டும் என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கலாம்.

எனவே, இறைநம்பிக்கையின் அடிப்படையில், இறைவேதத்தின் அடிப்படையில், இறுதி நபித்துவத்தை நேசிக்கும் அடிப்படையில் இறுதி நபி வெளியாக்கப் பெற்ற சமுகம், இறுதி வேதமான குர்ஆன் இறக்கப்பெற்ற மொழி, இறுதி நபி பேசிய மொழி என்ற அடிப்படையில் உள்ள இந்த நேசம் இயற்கை நேசமாகும்.

குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, குறைஷியர்களும், அரபியர்களும், இறைநிராகரிப்பின் அடிப்படையிலும், இணைவைப்பின் அடிப்படையிலும் தங்களுக்கிடையே ஆண்டாண்டு காலமாக ஒருவருக்கொருவரிடையே பகைமை பாராட்டிக் கொள்ளக் காரணமாக இருந்த செயற்கைப் பெருமையாகும்.

இரண்டுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

=============
To Jameel Kaaka
=============
Viewing a subject as a joke or a serious matter is according the viewer’s point. But, Jameel Kaka, you have cracked a new joke.. I never mentioned about “SNACK” that was descended with Adam & Hawwa (Alaihimassalaam). I only mentioned about the “SNAKE”. I know it’s a typo… However, I have another resource on “SNACKS” and FRUITS that Adam (Alaihissalaam) brought to this earth when he came down from the Heaven. I will write about them in the future episodes…. Thanks for the valuable tip!

=========================
இது நம் அனைவருக்கும்...
=========================

الم - ذَ‌ٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ - الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ -وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ - أُولَـٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ (البقرة 1-5)
அலிஃப் லாம் மீம். இது வேதம் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இறையச்சமுள்ளோருக்கு இது நேர்வழிகாட்டியாகும். அவர்கள் எத்தகையோரென்றால், மறைவானவற்றை நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (பிறருக்கு) அளிப்பார்கள். இன்னும், அவர்கள் உம்மீது இறக்கப் பெற்றதையும், உமக்கு முன்னால் இறக்கப் பெற்றதையும் நம்புவார்கள். இன்னும், மறுமையைப் பற்றி உறுதியாக நம்புவார்கள். அவர்கள், அவர்களது இரட்சகனிடமிருந்து வந்துள்ள நேர்வழியின் மீதிருக்கின்றார்கள். இன்னும், அவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 2:1-5)

அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள்...

Unknown said...

உலகின் முதல் மொழி எது
உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கே என நிரூபிப்பதற்காக நண்பர் ஒருவர் கடுமையான ஆராய்ச்சியில் மூழ்கியிருக்கிறார். என்னோடு பணியாற்றுகிறார் அவர். வயதிலும் பெரியவர்.

“உங்க ஆராய்ச்சியோட நோக்கம் என்ன?” என்றேன்.

அதற்கு அவர் சொன்ன பதிலைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

”ஆதி காலத்தில் திராவிடர்கள், அதாவது தமிழர்கள், சுமேரியாவுக்கு, பாபிலோனாவிற்கு, எகிப்திற்கு மற்ற பிற தேசங்களுக்கும் பரவினார்கள். அதன் பிறகு ஆரியர் வருகை. என்னைப் பொருத்த வரைக்கும் ஆரியர்களும், திராவிடர்களும் ஒன்று தான். ஆகவே நாம் அனைவரும் ஒருவரே. அதாவது திராவிடர்கள் இங்கேயே ஆஃப்ஷோரிலேயே வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்கள் மாதிரி. ஆரியர்கள் ஆன்சைட் அசைன்மெண்ட் போயிட்டு ரிட்டர்ன் ஆகிறவங்க மாதிரி. என்ன ஆயிரக்கணக்கான வருஷம் முன்னாடியே ஆன்சைட் போனதால கொஞ்சம் ஒஸ்தியா தெரியறாங்க. மத்தபடி ஆர்யா உதடு, டிராவிட் உதடு, டிம்பிள் கபாடியா உதடு எல்லாமே ஒன்னு தான்.

ஹரப்பா, மொகஞ்சதாரோ எல்லா எடத்திலும் இருந்தது நாமதான். நாமன்னா எல்லோருந்தான். அலெக்சாண்டர் போரஸ் கிட்ட என்ன பாடுபட்டான் தெரியும்ல? இப்ப என்ன ஆச்சு? ஏன் நம்மால எதையும் சாதிக்க முடியல? கடந்த 200 வருசத்துல எந்தக் கண்டுபிடிப்பையுமே நாம செய்யல. ஏன்? எதனால? ஏன்னா நாம சாதியால பிளவுண்டிருக்கிறோம். வெளி சக்திகளோட சண்டை போடறதுக்குப் பதிலா நமக்குள்ளையே சண்டை போட்டுக்கறோம். அலெக்சாண்டரை எதுத்து நின்ன நாம ஏன் மொகல்ஸ் கிட்ட, பிரிட்டிஷ்காரன் கிட்ட எல்லார் கிட்டையும் தோத்தோம்? நம்ம வீரம் எல்லாம் எங்கே போச்சு?”

”ஸார் நான் ஏழம் அறிவு பாத்துட்டேன்.” சொல்லும் போது சிரிக்காமலிருக்க இயலவில்லை.

அவருக்கும் சிரிப்பு வந்தது. ஆனாலும் தொடர்ந்தார்.

”இந்த உண்மையை எல்லோருக்கும் விளக்கணும்.”

“விளக்கி?”

“நாம எல்லாம் ஒன்னு தான். நமக்குள்ள வேறுபாடு இல்லை அப்படீன்னு சொல்லி ஜாதியை ஒழிக்கணும். அதை மட்டும் செஞ்சுட்டா இந்தியாவை மேலே தூக்கிறலாம்.”

”ஜாதிய ஒழிக்கப் போறீங்களா? சான்ஸே இல்லை.”

“ஏன் முடியாதுன்னு சொல்லுங்க”

”நம்ம ஊர்ல ஒருத்தன் மதம் கூட மாறிடலாம். ஆனா ஜாதியை மாத்த முடியாது தெரியும்ல? மதம் சட்டை மாதிரி பாஸ். எப்ப வேணா கழட்டிக்கலாம். ஆனா ஜாதி தோல் மாதிரி. உரிச்சுத்தான் எடுக்கணும்”

மனிதர் ஒத்துக்கொள்வதாக இல்லை. கிறிஸ்துவர்களில் ஜாதி இருப்பது தெரியும். முஸ்லிம்களில் ஜாதி இல்லையென்றார்.

“அப்ப நாமெல்லாம் முஸ்லிமா மாறிடலாமா?” கேட்டேன்.

“நான் சொல்றது உங்களுக்குப் புரியல. இப்ப வேற மதத்துல இருந்து இந்து மதத்துக்கு கன்வெர்ட் ஆக முடியாது தெரியும்ல உங்களுக்கு. அப்படி கன்வெர்ட் ஆனா அவனுக்கு என்ன ஜாதி கொடுப்பீங்க? அதனால தான்.”

”புரியுது. That’s why you want to eradicate caste system?”

வேகமாக மண்டையை ஆட்டினார்.

“சரி உங்க ஆராய்ச்சியில எதை அடிப்படையா வெச்சு முடிவு செஞ்சிருக்கீங்க? Some hypothesis, inference or evidence?”

“Inference”

உலகின் முதல் மொழி தமிழ்.. முதல் மனிதன் தமிழன். முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என தர்க்க ரீதியில் நிறுவ முயன்று கொண்டிருக்கிறார் இவர்.

மேற்சொன்ன உரையாடலை நான் சும்மா அடிச்சு விடுவதாக நீங்கள் நினைத்தால் இந்த லிங்கை ஒரு நிமிடம் பார்த்து விடுங்கள்.

இப்போது உங்களுக்கு விஸாகனைப் பற்றியும் ஓரிரு வரிகள் சொல்ல வேண்டும். பல வருடங்களுக்கு முன் யாழ்ப்பாண பலகலைக் கழகத்தில் லெக்சரர் வேலை பார்த்து வந்தாராம். போரின் உக்கிரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார். அங்கே National Archives அமைப்பில் பணியாற்றி ஓய்வும் பெற்று விட்டார்.

அவருக்கும் இந்த மாதிரி வினோதமான ஒரு ஆசை. வாழ்நாள் ஆசை. என்னவோ DNA குறித்தெல்லாம் எழுதி தமிழரும், சிங்களரும் ஒன்றே என்ற முடிவைச் சொல்லி அவரே காசு செலவழித்து சுமார் 80 பக்க சைஸில் ஒரு புத்தகம் போட்டார். தான் இந்த பூமியில் வாழ்ந்து விட்டுப் போனதன் நினைவாக, நம்ம எலந்தக் காட்டு அய்யன் மயில் கெண்டையின் வரலாற்றை எழுதிட உயிரைக் கையில் பிடித்திருந்தது போல தன்னளவில் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்க முனைந்திருக்கிறார். இதை நீங்க சிங்களவர்களுக்குத் தானே பரப்பணும் என நினைத்துக்கொண்டு ”பொறவு எதுக்கு சண்டை?” என்று திருப்பிக் கேட்டால் எனக்கு சரியாக விளங்கிக் கொள்ள ஏலலை என்பார்.

Inference மூலம் உலகின் முதல் மொழி என நிறுவ முயலும் நண்பரும் விரிவாக எழுதி வருகிறாராம். புத்தகமாக வெளியிட வேண்டுமென்றார். எது சுலபமான வழியெனக் கேட்டார்.

”பதிப்பகம் ஆரம்பிச்சுருங்க.”

சத்தியமாக இதைச் சொல்லும் போது நான் சிரிக்கவில்லை.

Mohamed Nabees said...

நான் அவரை முழுமைப் படுத்தி, அவரில் என் உயிரிலிருந்து ஊதியதும், ‘நீங்கள் அவருக்கு ஸஜ்தா செய்யுங்கள்” என்று வானவர்களிடம் கூறினான். (அல்குர்ஆன் 15:29)

“அல்லாஹ் ரூஹை ஊதியபொழுது, ஆதம் (அலை) அவர்களின் மூக்கில் ரூஹ் வந்தவுடன் அவர்கள் தும்மினார்கள். வானவர்கள் ஆதம் (அலை) அவர்களைப் பார்த்து, ‘அல்ஹம்து லில்லாஹ்’ – அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறும், என்றனர். அவரும் கூறினார். அதற்கு அல்லாஹ், ‘யர்ஹமுகல்லாஹ்’ – அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக, என்று பதிலளித்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்) ///

அருனையான பதிப்பு ஆய்வு

இதில் முரண்படுவது என்ன என்றால் அல்லாஹ் வானவர்களை சஜ்தா செய்யுங்கள் என கூறியதாக குர் ஆன் கூறுகிறது ஆனால் நீங்க சொல்லும் விளக்கம் வானவர்கள் ஆதமிடம் அல்லாஹ்வை துதியுங்கள் என சொன்னதாக கூறுகிறீர்.

Mohamed Nabees said...

நான் அவரை முழுமைப் படுத்தி, அவரில் என் உயிரிலிருந்து ஊதியதும், ‘நீங்கள் அவருக்கு ஸஜ்தா செய்யுங்கள்” என்று வானவர்களிடம் கூறினான். (அல்குர்ஆன் 15:29)

“அல்லாஹ் ரூஹை ஊதியபொழுது, ஆதம் (அலை) அவர்களின் மூக்கில் ரூஹ் வந்தவுடன் அவர்கள் தும்மினார்கள். வானவர்கள் ஆதம் (அலை) அவர்களைப் பார்த்து, ‘அல்ஹம்து லில்லாஹ்’ – அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறும், என்றனர். அவரும் கூறினார். அதற்கு அல்லாஹ், ‘யர்ஹமுகல்லாஹ்’ – அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக, என்று பதிலளித்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்) ///

அருனையான பதிப்பு ஆய்வு

இதில் முரண்படுவது என்ன என்றால் அல்லாஹ் வானவர்களை சஜ்தா செய்யுங்கள் என கூறியதாக குர் ஆன் கூறுகிறது ஆனால் நீங்க சொல்லும் விளக்கம் வானவர்கள் ஆதமிடம் அல்லாஹ்வை துதியுங்கள் என சொன்னதாக கூறுகிறீர்.

Good News said...

இது என்னுடைய ஆய்வு
https://sites.google.com/view/sethuseemai/home

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு