Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

காட்டுக் கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம் !! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | March 13, 2013 | , , ,


அண்மையில் இராமநாதபுரம் சென்று வந்தோம். அங்குள்ள ஒரு கல்லூரியில் எனது  தோழர் முதல்வராகப் பணியாற்றுகிறார். அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது அவருடைய மேசையின் மேல் கையால் எழுதப் பட்ட கவிதை ஒன்று  கிடந்தது. கவிதை வடிவம் என்றாலே அது  நமது கண்களைக் கவர்ந்துவிடுமே! அனுமதி பெற்று  எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். 

அது ஒரு கவிதை மட்டுமல்ல. ஒரு மாவட்டத்தின் கதறல். அந்தக் கதறலில் நாமும் தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் இருந்தன. அத்துடன் நாமும் இப்படி இவருடன் சேர்ந்து  கதற வேண்டிய  நிலையில்தான் இருக்கிறோம். இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கிவைக்கப் பட்டு இன்று தமிழகமெங்கும் தழைத்தோங்கி வளர்ந்திருக்கும் காட்டுக் கருவை பற்றிய செய்திகள் நிறைந்த கவிதை . நான் படித்துப் பார்த்த  இந்தக் கவிதை பல உண்மைகளைத் தோண்ட என்னைத் தூண்டி விட்டது. 

இன்றைய தண்ணீர் பற்றாக்குறைக்கும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போய்க் கொண்டே வருவதற்கும்   காலாகாலத்தில் மழை பெய்யாத நிலைமைகளுக்கும் காட்டுக் கருவைச் செடிகளின் வளர்ப்பும் வளமும் காரணமாக இருப்பதை அறிவியல் ரீதியாகப் புரிந்து கொண்டேன் ; தெரிந்து கொண்டேன். அவற்றைப்  பகிர்ந்து கொள்வோம். 

அதற்கு முன் ஒரு அறிமுகத் தகவல் இந்தக் காட்டுக் கருவைச் செடிகள் அறிமுகப் படுத்தப் பட்டது கல்விக் கண் திறந்த காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் என்பதாகும்.   இராமநாதபுர மாவட்டத்து மக்களின் வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த விஷச்செடியின் விதைகள் விளைந்து காடாகி பல விபரீதமான பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் கவிதையைப் படிக்கலாம்.

மாறும் தொன்மம்

தெற்கத்திச் சீமையை தெம்பாக்க 
மரம்  வளர்ப்புத் திட்டம் தந்த 
மகராசரே !
“கல்விக்கண் திறந்தவரு 
கண்மாய்குலம் கண்டவரு” னு 
கட்சிக்காரங்க பாடுற பாட்டைக் 
காதுகொடுத்துக் கேட்டிருக்கேன் 
காமராசரே!
நீ தந்த திட்டத்தால் 
நாங்க படும் பாட்டையும் 
கோவிச்சுக்காம கொஞ்சம் கேளு!

வருணபகவானுக்கு வழிதெரியாத 
எங்கஊருக் காடு கழனியில் 
வேலை  எதுவும் இல்லாம 
வெட்டியா இருந்த எஞ்சனங்களுக்கு
வெட்டிவேலை தந்த 
கெட்டிக்காரரே!
ஆமா.....
நீ தந்த கருவேலவிதைகள் 
உன்புகழச் சொல்லிச்சொல்லி
உன்புகழச் சொல்லிச்சொல்லி
‘ஒய்யாரமா ’ வளந்திருக்கு 
அதுனாலே நீ
கர்மவீரர் மட்டுமல்ல 
கருவேலரும் தான். !   

வெறகு வெட்டி மூட்டம் போட்டு 
வருமானத்தை பெருக்கச் சொல்லி 
நீதந்த வெதைவித்துக்களை 
அறுவடைசெய்ய
எஞ்சனங்களும்
வெட்றாங்க... வெட்றாங்க
வெட்டிக்கிட்டே இருக்காங்க
அருவாளும் அழுகுது 
இடைவேளை கேட்டு!

அண்ணா தந்த அரிசி கூட 
அள்ள  அள்ளக் குறையுது 
ஆனா-
நீ தந்த அட்சய மரம் ...
அடடா...!

உன்னால நான் படிச்ச பாடம் 
“வெட்ட வெட்ட 
வேகமாத் தழையிறது 
வாழைமரம் மட்டுமில்ல 
நீ தந்த 
வேலமரமும் தான்!”

நீதந்த அதிசய மரங்கள் 
என்னைக்காவது ஏமாந்ததனமா 
வழிதவறிப் பெய்யுற 
கொஞ்ச நஞ்ச மழைத்தண்ணியவும்
அடையாளம் தெரியாத அளவுக்கு 
அப்பவே சாப்பிட்டுருதே..! 

ஒருகாலத்துல –
முத்துமுத்தா நெல்லு வெளஞ்ச
எங்க சேதுசீமையோட 
சொத்துக்களைக் காப்பாத்த- 
வறட்சியத் தாங்குற 
புரட்சியச் செஞ்ச கர்மவீரரே! – நீ 
என்னைக்குமே எங்களுக்குக் 
‘கர்மா வீரர்’ தான்!

அரசியல் வளர்ச்சிக்கு
நீதந்த ‘ K Plan ’  ஐ 
ஆட்சியில மாறிமாறி 
அமருறவங்க நினைவுல 
இருக்கோ இல்லையோ 
நீ தந்த இந்த ‘ K Plan ‘ ஐ 
மாத்தி- எங்க 
மண்ணைக் காக்குற திட்டம் 
மருந்துக்குக்கூட இல்லை!
காந்திக்குக் கதர் மாதிரி 
ஒருவேளை – உன் 
நெனவுக்கு அடையாளம்னு 
நெனக்கிறாங்களோ என்னமோ ...!

இன்பச்சுற்றுலான்னு    
கேட்டிருக்கேன் – ஆனா 
என்னைக்காவது 
இராமநாதபுரத்துப் பக்கம்
யாரும் வந்ததுண்டா?
எது எப்படியோ –
ஆனை கட்டிப் போரடிச்ச 
பாண்டியனார் தேசத்துக்கு 
இப்போ 
‘ தண்ணியில்லாக்காடு’னு 
பேருவாங்கித் தந்த 
பெருமையெல்லாம் 
உங்களைத்தான் சேரும்...
இத்தனைக்கும் உத்தமரே – இது 
நீ பொறந்த மண்ணு இல்லையா...!

இதுக்குமேல உன் புகழச் சொன்னா
‘ இவன் ஏதோ 
சாதிக்கலவரத்த தூண்டுறான்டா ‘ னு 
சங்கத்தைக் கூட்டி சிலபேரு 
சந்திக்கு வந்துருவாங்க
ராசரே...!
நேரமாச்சு ,
நான் போறேன் வெறகு வெட்ட...

- பெயர் சொல்ல விரும்பாத மண்ணின் மைந்தரான ஒரு பேராசிரியர். #

காட்டுக் கருவேல மரங்கள்! காட்டுக் கருவை என்றும் வேலிக்கருவை என்றும்   இதை அழைக்கலாம். Proposis Juli Flora என்று தாவர இயலில் இதை அழைக்கிறார்கள்.  சுட்டெரிக்கும் வெயிலும் வறட்சியும்  தலைவிரித்துத்  தாண்டவம்               ஆடினாலும் என்றும்  பசுமையாக  இருக்கும் இந்த மரத்தினையும் செடிகளையும்  பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்கமுடியாது. விதைபோடாமல் நீர் ஊற்றாமல் பராமரிக்காமல்  ஒரு தாவரம்   தழைத்து வளருமென்றால் அது இதுதான்.  


கொடியவைகள்தான் தமிழ்நாட்டில் இலகுவாக தழைத்து வளரும் என்பதற்கு இந்தத் தாவரமும் ஒரு உதாரணம்.  தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும்  பரவி வியாபித்து வளர்ந்து கொண்டு இருக்கிறது இந்த ஒரு மரம். எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நாம் பார்க்கலாம்.  சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது . 

தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று வல்லுனர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.  இந்தக் காட்டுக்  கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியவை . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது. ஏனெனில் ஒரு காட்டுக் கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடிநீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.

இதன் கொடூரம் அத்துடன் நிறைவுபெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னைச்  சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறதாம். காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும் எண்ணெய்ப் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுவதாக உணரப் படுகிறது. 

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கியகாரணம் என்பது புரியவேண்டிய யாருக்கும் இதுவரை புரியவில்லை.

ஆனால் இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள். தங்கள் வீடுகளுக்கும் தோப்புகளுக்கும்  வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள். வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்தமரத்தை வளர்த்துவருகின்றனர். அத்துடன் இம்மரத்தை வெட்டி மூட்டம் போட்டு எரிபொருள் கரியாக மூட்டை மூட்டையாக பெரு நகரங்களின் தேநீர்        விடுதிகளின் பாய்லரில் போட அனுப்புகிறார்கள். இந்த மரம்  நம் வாழ்வை கரியாக     ஆக்குகிறது என்கிற உண்மையையும்  இந்த மண்ணின் நீர் வளத்துக்கும்  பேராபத்தை உருவாக்குகிறது  என்பதையும்  அவர்கள் அறியாது  இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும்  பயன்படாது. இதன் காயை வெட்டிப் போட்டு சாம்பார் வைக்க முடியாது. இதன் பூவைப் பறித்துப் போட்டு ரசம் வைக்க முடியாது. பழங்களைப் பறித்து பைகளில் போட்டு யாருக்கும் பரிசளிக்க முடியாது. ஆடுமாடுகள் கூட இதன் பக்கம் நெருங்காது. இதன் ஒரே உபயோகமாக நாம் காண்பது நமக்குப் பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரர்கள் நடக்கும் பாதையில் இதன் கிளைகளை வெட்டிப் போட்டு இடையூறு செய்யலாம் என்பது மட்டுமே.  வேறொரு முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடுமாம்,  கருத்தரிக்காதாம்.   ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமேஅது ஊனத்துடன்தான் பிறக்கும். கருவைக் கலைக்கும் மரத்துக்கு கருவை மரம்  என்று பெயர் வைத்து இருப்பதே ஆச்சரியமானது. 

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில்வேறு எந்தச்  செடியும் வளராது .  தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடு கட்டுவதும் இல்லை. தேனீக்கள் கூடுவதும் இல்லை.  காரணம் என்னவென்றால் இந்த வேலிக்கருவை  கருவேல மரங்கள், ஆக்சிஜனை  மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்கின்றன, ஆனால் கார்பன் டை ஆக்சைடு என்கிற கரியமில வாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புறக்  காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறி விடுகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாத நிலையை உருவாக்கி வருகிறார்கள்.  சில ஆண்டுகளுக்குமுன் ஒரு திட்டமிடலுடன் செயல்பட்டு இந்தமரத்தை அவர்கள் தேடித்  தேடி அழித்து இருக்கிறார்கள்.  அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது. நமதூர் வனத்துறையினர் குருவி பிடிப்பவர்களை சுடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். 

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பதுதான் இந்த காட்டுக்  கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால்தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி ! தமிழ்நாட்டில் அகற்றப்பட வேண்டியவை அரசியலிலும் சமுதாயத்திலும் மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம். மண்ணிலும் வேரூன்றி இருக்கின்றன.  ஆகவே கருவேலமரங்களை  கண்ட இடங்களில் உடனே ஒழிப்போம் ! நம் மண்ணின் தன்மையைக் கட்டிக் காப்போம்!

#இந்தக் கவிதையை எழுதிய கல்லூரியின் பேராசிரியர் “ உயிர் வாழப் போராடும் கருவாடு “ என்கிற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பை விரைவில் வெளியிட இருக்கிறார். இந்தக் கவிதைத் தொகுப்பு இராமநாதபுர மாவட்ட மக்களின் வாழ்வின் பல பரிமாணங்களைப் பேசும் .  நாமும் பகிர்வோம். இன்ஷா அல்லாஹ்.   

இபுராஹீம் அன்சாரி

25 Responses So Far:

Adirai pasanga😎 said...

நல்ல கருத்தை நயம்பட விளக்கும் கவிதை - கவிதையும் அதற்க்கான தங்களின் விளக்கமும் அருமை

//கொடியவைகள்தான் தமிழ்நாட்டில் இலகுவாக தழைத்து வளரும் என்பதற்கு இந்தத் தாவரமும் ஒரு உதாரணம்.///

உலகமே அப்படித்தானே உள்ளது?

//மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்.//

அது போலவே நன்மக்களுடன் ஒட்டியும் தீயவர்களிடம் எட்டியும் வாழவேண்டும் என்பதை இது உணர்த்துவதுபோல் உள்ளது.

த்ங்களின் வழமையான சிறப்பான ஆக்கங்களின் வரிசையில் இதுவும் ஒன்று. அதன்படி அனைவரும் செயல்பட்டால் சொன்ன பலன் நிச்சயம். வாழ்த்துக்கள் காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதுக்குமேல உன் புகழச் சொன்னா
‘ இவன் ஏதோ
சாதிக்கலவரத்த தூண்டுறான்டா ‘ னு
சங்கத்தைக் கூட்டி சிலபேரு
சந்திக்கு வந்துருவாங்க
ராசரே...!
நேரமாச்சு ,
நான் போறேன் வெறகு வெட்ட...

- பெயர் சொல்ல விரும்பாத மண்ணின் மைந்தரான ஒரு பேராசிரியர். #//

மண்ணின் மைந்தரான பேராசிரியர் அவர்களின் கவிதை வரிகள் மட்டுமா...! உங்களின் பதிவுகளில் ஒவ்வொரு பத்தியும் அதிலிருக்கும் புத்தியும் சிலசமயங்களின் கத்தியும் தெரியும் !

sabeer.abushahruk said...

இத்தனை ஆபத்தான கருவேல மரத்தைக் கண்டும் காணாமல் இருக்கும் அரசாங்கத்தை என்ன சொல்ல.

நாமாகக் களத்தில் இறங்கினால்தான் உண்டு.

கருவேலம் மரம் அழித்து
காட்டு ரோஜா வளர்க்கனும்

என்று எப்போதோ எழுதிய நினைவு.

இதைப் பற்றிய விழிப்புணர்வு பதிவு இந்தத் தளத்திலும் ஒருமுறை வந்ததாக நினைவு.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அழிக்க வேண்டியது பற்றிய நல் பதிவு.

சதி செய்த அன்னியனிடமிருந்து இதை காப்பற்ற இன்னமும் மாமூல் வரத்து எதுவும் தொடர்கிறதோ என்னவோ. விசாரணை தேவை!

தெரியாமல் வளர்த்த, வளர்ந்த காலம் போய் தெரிந்தும் இப்படி இருப்பது ஏனோ!

குறைந்த பட்சம் வரும் தேர்தலிலாவது இதை அழிப்பது பற்றி வாக்குறுதி வருமா?

Ebrahim Ansari said...

தன்பி கவிஞர் சபீர் அவர்கள்

//நாமாகக் களத்தில் இறங்கினால்தான் உண்டு.// குறைந்த பட்சம் நமது வீடுகளில், வீட்டின் அருகில், நமது தோப்புகளில் உள்ளவைகளை வேரோடு பிடுங்கி எறியலாம். அடுத்த அடுத்த வீட்டினருக்கும் இந்த ஆபத்தை சொல்லலாம்.

தம்பி ஜகபர் சாதிக்.

//குறைந்த பட்சம் வரும் தேர்தலிலாவது இதை அழிப்பது பற்றி வாக்குறுதி வருமா?// - இதற்காக அரசியல்வாதிகளை நம்பிக் கொண்டு இருக்க வேண்டாம். அவர்கள் இந்தச் செடியை விட ஆபத்தானவர்கள். நாமே இதன் கேடுகளை உணர்ந்து ஒழிக்க முற்படவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள்
இடையே ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்படுத்தலாம். அந்தந்த ஊர் ஜமாஅத மற்றும் பொதுமக்கள் திரண்டு அவரவர் ஊர்களில் இவற்றை அடையாளம் தெரியாதபடி அழிக்கலாம்.



Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்கள்

//இதைப் பற்றிய விழிப்புணர்வு பதிவு இந்தத் தளத்திலும் ஒருமுறை வந்ததாக நினைவு.//

இருக்கலாம். எனக்குத்தெரியாது.

கவிதை எழுதியவரின் கை எழுத்துப் பிரதியாக எனக்குக் கிடைத்தது. எனவே கவிதை வந்திருக்க வாய்ப்பு இல்லை. மற்ற தகவல்கள் என்னால் திரட்டப்பட்டு எழுதப் பட்ட தகவல்களே. ஆனால் அதிரை நிருபரில் இருந்து திரட்டப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த செடியைப் பற்றி சிலர் எச்சரிக்கை செய்து வெளிவந்திருப்பது உண்மையே. அதிரை நிருபர் தளத்தில் நான் குடி புகும் முன்பு வந்தததா என்பது எனக்குத் தெரியாது.

கவிதை தந்த உந்துதலால் மேலும் உண்மைகளைத் தொகுத்தே எழுதினேன்.

sabeer.abushahruk said...

காக்கா,

கருவைமரம் எதற்கும் உதவாது என்பதைத் தெளிவாகப் படம் வரைந்து பாகங்களைக் குறித்துவிட்டீர்கள். எதற்குமே உதவாதுதான். இருப்பினும், ஒரு உணர்ச்சிபூர்வமான

கவிதைக்குக்
கருவாக உதவியுள்ளதே
கருவேல மரம்
கர்மவீரர் கைங்கர்யமோ?

தவிர,

பள்ளிப் பருவத்தில் பிடிக்காத ஆர்ட்ஸ் குரூப் சமாச்சாரங்கள் தற்போது விரும்பி வாசிப்பதற்கு ஒரே காரணம் பாடம் நீங்கள் எடுப்பதே.

அவ்வச்றே, எதைப்பற்றியும் யார் யார் வாயிலாகக் கேட்டாலும் நீங்கள் சொல்லக் கேட்பதில் ஸ்வாரஸ்யமே தனி. அதுபோல்தான் இந்தப் பதிவும்.

ப்ளீஸ் டோன்ட் ரெக்ரெட் ஒன் ரிப்பிட்டீஷன் ஆஃப் த சப்ஜெக்ட்.

இப்னு அப்துல் ரஜாக் said...

பகிர்வுக்கு நன்றி காக்கா

அப்துல்மாலிக் said...

பாலைவனம் கல்லிச்செடி மாதிரி எந்தவித பராமறிப்புமில்லாமல் வளரும் ஒரே செடி இது...இது பற்றி நிறைய விழிப்புணர்வு கட்டுரை படித்திருக்கேன், ஆனால் இங்கே சொன்னவிதம் புதுமை நன்றிகாக்கா

Ebrahim Ansari said...

தம்பி நூர் முகமது அவர்கள் அலைபேசியில் அழைத்தார்கள். இந்தப் பதிவு பற்றி தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்கள்.

பலரையும் அச்சுறுத்தவேண்டிய வகையிலும் நம்மைச்சுற்றி இருக்கிற பயங்கரமான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டதையும் பாராட்டுகிற வேளையில் அவர்களின் ஆதங்கம் என்னவென்றால் இந்தக் கருத்துக்கள் நமதூரில் எத்தனை பேரைப் போய்ச் சேரும்? எத்தனை பேர் இந்ததீமையை எதிர்த்து களத்தில் இறங்கி இதை ஒழிக்கத் தலைப்படுவார்கள்? என்பதே.

நம்மில் வெளிநாட்டில் இருக்கிற சிலபேர் இதைப் படித்துவிட்டு மறந்துவிடுகிறார்கள். ஒழிக்க வேண்டியதை ஒழிக்கும் செயல்பாடு இல்லாமலே இருக்கிறது என்று குறைப் பட்டார்கள். என்னை பொருத்தவரை பத்து பேர் பதிவைப் படித்துவிட்டு பாராட்டுவதைவிட இதைப் படித்த பிறகு பத்து காட்டுக் கருவை மரங்களை வேட்டிவீழ்த்தினோம் என்பதே உண்மையில் மகிழ்வைத் தருவதாக இருக்கும்.

இந்த உண்மைகளை குறைந்த பட்சம் பேரூராட்சியின் தலைவர் வரை கொண்டு செல்லப்பட்டு அவர்கள் மூலமாக வார்டு உறுப்பினர்கள் யாவரும் அறியச் செய்வதன் மூலம் இந்த செடிகளை ஊரைவிட்டு அப்புறப் படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் அதற்காக தேவையான நடவடிக்கைகளை முடிந்தவரை செய்யும்படியும் ஆலோசனை கூறினார்கள். பிளாஸ்டிக் ஒழிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த செடியை ஊரில் இருந்து அகற்றுவதும் ஆகும் என்பது அவர்கள் கருத்து. நமது கருத்தும் அதுவே.

இதற்காக சில முக்கிய பெரியவர்களை தொடர்பு கொண்டேன். ஏதாவது வடிவில் செயல் திட்டம் வகுக்கப் படுமா என்று எதிர் நோக்குவோம்.

அதற்கு முன் இதைப் படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நமக்கு நாமே என்கிறபடி நம்மைச் சுற்றி இருக்கிற இந்த விஷச்செடியை அழிப்பதற்கு முதல் அரிவாளை நாம் தூக்கினால் என்ன?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இது பற்றி நிறைய விழிப்புணர்வு கட்டுரை படித்திருக்கேன், ஆனால் இங்கே சொன்னவிதம் புதுமை நன்றி காக்கா.

//அதற்கு முன் இதைப் படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நமக்கு நாமே என்கிறபடி நம்மைச் சுற்றி இருக்கிற இந்த விஷச்செடியை அழிப்பதற்கு முதல் அரிவாளை நாம் தூக்கினால் என்ன?//

//மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். //

இன்ஷா அல்லாஹ்... உடனே கண்ணில் பட்டவைகளை வெட்டி எறிக்க வேண்டும்.

ஷிஃபா மருத்துவமனை அருகில் இருக்கும் இமாம் ஷாபி பள்ளி, முன்பு எங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு மைதனானமாக இருந்தது, சக நண்களர்களால் இந்த கருவேல மரங்கள் வெட்டி எறிக்கப்பட்டது.

ரோட்டோரமிருக்கும் புளிய மரங்களை வெட்டி சாலை மறியல் செய்யும் அரசியல் மரவெட்டிகள் இது போன்ற மரங்களை வெட்டினால் இன்று தியாகியிருப்பார்கள்..

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன்!

//ரோட்டோரமிருக்கும் புளிய மரங்களை வெட்டி சாலை மறியல் செய்யும் அரசியல் மரவெட்டிகள் இது போன்ற மரங்களை வெட்டினால் இன்று தியாகியிருப்பார்கள்..//

மக்களின் கருத்துக்களில் பண்பில் கருவேலச்செடிகளை வளர்ப்பவர்கள் அவர்கள்தானே!அதை எங்கே வெட்டப் போகிறார்கள்? காடுவெட்டிகள் கூட இந்தக் காடுகளை வெட்டினால் பாராட்டு விழா நடத்தலாம்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Ebrahim Ansari,

The poem and the related article related to proliferation of karuvelam are reflecting social responsibilities of you and the brothers who expressed their concern through comments.

Actually the karvuvelm invaded our land in Mr. Kamaraj period, could have been benefited our community in those days in the form of low cost wooden fuel, quality charcoal, soil erosion prevention, etc. But now the invation of the those trees become negative impact to the land means the community has to respond in an organized way to clean.

Particularly this awareness has to be spread among school, college NSS - National Service Scheme volunteers, then the agenda of uprooting the karvuvlem trees should be added in government schemes from local to state.


Hope these suggestions would be thought by the right people and considered for organized effective destruction and further prevention of karuvalem trees in our region.

Thanks and best regards
B. Ahamed Ameen from Dubai


www.dubaibuyer.blogspot.com

Yasir said...

மாமா இந்த கருவேல மரம்போல சில பேர் திரியுறானுங்களே எந்த பயனும் இன்றி, பிறர் உழைப்பின் பயனை உண்டு...அவனுங்கள என்ன செய்யலாம்..

Yasir said...

அதேப்போல இங்க துபாய்ல கடற்க்கரைத்தெரு ஓடாவிபோல வளர்ந்து நிமிர்ந்து நிற்க்கும் டாமாஸ் மரமும் (Conocarpus lancifolius) ஒன்னுக்கும் ஆகாததுதான்

http://gulfnews.com/news/gulf/uae/environment/damas-tree-campaign-1.1087012

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி அஹமது அமீன், அலைக்குமுஸ் ஸலாம்.
//Particularly this awareness has to be spread among school, college NSS - National Service Scheme volunteers, then the agenda of uprooting the karvuvlem trees should be added in government schemes from local to state.//
மிகச் சிறந்த கருத்து. முயற்சிக்கிறோம் இன்ஷா அல்லாஹ். ஜசக்கல்லாஹ்.

அலாவுதீன்.S. said...

///இதற்காக சில முக்கிய பெரியவர்களை தொடர்பு கொண்டேன். ஏதாவது வடிவில் செயல் திட்டம் வகுக்கப் படுமா என்று எதிர் நோக்குவோம்.///
***********************************************************************************
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருவேல மரத்தைப் பற்றிய நல்லதொரு விழப்புணர்வு!
இதற்கு பெரிதாக சிரமம் எடுக்க வேண்டியதில்லை.
வல்ல அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் வெள்ளிமேடையில் ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இந்த விஷச்செடியைப் பற்றி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு ஊரில் இருக்கும் பள்ளியிலும் தொடர்ந்து ஜூம்ஆவில் அறிவிப்பு செய்து கொண்டே --- இளைஞர்களை களத்தில் இறக்கினால் வேரோடு கருவேல விஷ மரத்தை அகற்றி விடலாம்.

இதைத் தவிர கவுன்சிலர் செய்வார், நகராட்சி செய்யும், அரசியல் வியாதிகள் செய்வார்கள் என்று நினைத்தால் காடுகள் பெருகி நாம் நடக்க முடியாத நிலைதான் ஏற்படும்.

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ் ஸலாம். அன்பின் சகோதரர் அலாவுதீன் அவர்கள் நல்ல ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

அவரவர் தெருவைச் சார்ந்த ஜூம் ஆ பள்ளியில் இது பற்றிக் கூறும்படி பயான் செய்பவர்களிடம் எடுத்துரைக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறோம்.

பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த சகோதரர்களும் இப்பணியில் ஈடுபடலாம்.

Jasak Allah .

Iqbal M. Salih said...

'கண்ணப்பரின் நம் நாட்டு மூலிகைகள்' என்ற அருமையான நூலில் இந்தக் கொடிய கருவேலமரத்தின் தீமைகள் பற்றி, முன்பு படித்திருக்கிறேன். விழிப்புணர்வு தரும் பயனுள்ள பதிவுக்கு நன்றி டாக்டர்.

ZAKIR HUSSAIN said...

முன்பு இதுபோன்ற காட்டுகருவேலமரங்களை வெட்ட முயற்சிகள் இருந்தது. இப்போது பொது மக்கள் தனது அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கவே ஓட்டுக்கு பணம் கேட்பதால் இது போன்ற நல்ல விசயங்களை செய்ய சொன்னால் 'எவ்லோ தருவீங்க" நு கேட்கலாம்.

Adirai pasanga😎 said...

The WORLD ENVIRONMENT ASSOCIATION recognize a list of 10 trees which are all place an important role in making the ENVIRONMENT HARMFUL gives the first place to the BABOOL TREES (ie) KARUVELAM TREES Termed in tamil.This trees can able to absorb more moisture present in air surrounding it and emits only low oxygen but emits more carbondioxide to the atmosphere.
Almost all countries banned this karuvelam trees in their country.
This tree will grow in least water/water scarcity areas like Ramanathapuram, Sivagangai, pudukottai, virudunagar and Theni districts in Tamil nadu. That's why the above said districts found dry always eventhough they are coastal. Viceversa the neighbor state kerala there is no cultivation of this plant so they are always found greeny and wealthy.So we are going to educate and to create awareness among the people in the above districts. First we are going to start this campaign in Athiviranpatti Village in Virdhunagar District and we will continue this campaign in most of the villages in the above districts

Adirai pasanga😎 said...
This comment has been removed by the author.
Adirai pasanga😎 said...

continuity -
///Hope these suggestions would be thought by the right people and considered for organized effective destruction and further prevention of karuvalem trees in our region. ///
So, all necessary steps which are gathered from experts to destroy this trees to be taken in to consideration and should be followed

Ebrahim Ansari said...

அன்பின் சகோதர்களே!

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

படித்துவிட்டு மறந்துவிடும் பதிவாக இதைக் கருதாமல் அவரவர் அரிவாளைத் தூக்கி இந்த அரக்க தாவரத்தை அரக்கப் பறக்க அழித்தொழிக்கும்படிக் கோருகிறேன்.

முன்னரே கேட்டுக் கொண்டபடி அவரவர் வார்டு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள இயன்றோர் அவைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

சகோதரர் இப்னு அப்துல் வாகித் அவர்கள் குறிப்பிட்டுள்ள அத்திவீரன்பட்டியில் தொடங்கும் இயக்கம் அதிரை வரை தொடரட்டும் . அதைத் தொடர்ந்தும் தொடரட்டும். இவைகளை தொண்டிஎடுக்கும் இடங்களில் பயன்தரும் வேறு மரங்களை நட்டு வைக்கலாம்; வளர்க்கலாம்.

Adirai pasanga😎 said...

Brother Ebrahim ansari said :
///படித்துவிட்டு மறந்துவிடும் பதிவாக இதைக் கருதாமல் அவரவர் அரிவாளைத் தூக்கி இந்த அரக்க தாவரத்தை அரக்கப் பறக்க அழித்தொழிக்கும்படிக் கோருகிறேன்///

சொன்னதை செய்பவர்களாகவும் செய்வதை சொல்பவர்களாகவும் நாமிருக்க அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு