அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரை பேரூராட்சி மன்ற வரலாற்றில் அதிகார மாற்றம் நிகழ்ந்து இரண்டு வருடங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் நமதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் S.H.அஸ்லம் அவர்கள் நேற்று அதிரை வலைப்பூ ஒன்றிற்கு வழங்கிய காணொளிச் செய்தியில் மிகவும் மனவேதனையுடன் தனது ஆதங்கத்தை வெளியிட்டார் !
அரசியல் விமர்சனங்களை ஒருபக்கம் தள்ளி வைத்து விட்டு, பதவிக்கு வரும் நாட்களுக்கு முன்னர் தன்னார்வத்துடன் தான் சார்ந்து இருக்கும் பகுதிகளில் மிகச் சிறந்த சமூக முன்னோக்கு பார்வையுடன் சுகாதாரம் பற்றி பேசியும் செயலிலும் ஈடுபட்டு வந்த நமதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்கள் பேரூராட்சி மன்ற தலைமைப் பொறுப்பை ஏற்றதும் நிச்சயம் சாதிப்பார் என்பது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதன்படியே, தான் பதவியேற்ற சில தினங்களிலேயே அதிரைச் சுகாதாரத்திற்கு சவாலாக இருக்கும் குப்பைகளையும் ப்ளாஸ்டிக் பைகளையும் அகற்றும் துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆதரவுகள் இருந்தாலும், பெரும்பாலோர் பெருமூச்சு விட்டனர் ஒருவழியாக சீக்கிரத்தில் சுகாதாரம் செழிக்கும், ப்ளாஸ்டிக் பைகள் ஒழிக்கப்படும் என்று நம்பினர்.
அதிகாலை நேரங்களில் தனது சொந்த அலுவல்களைப் போன்று ஊர் நலனை முன்னிருத்தி களப்பணியில் செயல்பட்டார் நமதூர் சேர்மன் அவர்கள். மாஷா அல்லாஹ் ! அவரின் பொதுநல எண்ணத்திற்கு அவரின் தூய செயலுக்கும் இறைவனின் நற்கூலி நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ் !
நிற்க !
ஒரு தனிமனித பேரூராட்சி மன்றத் தலைவரால் மட்டுமே இது சாத்தியமா என்று ஏளனம் பேசியவர்களும், முட்டுக்கட்டைகள் வெட்டிப் போட்ட வெட்டிகளும் இன்று கைகொட்டிச் சுட்டிக்காட்டுகின்றனர் அதிரையில் மீண்டும் குப்பைகள் ப்ளாஸ்டிக் பைகள் என்று விளம்பரம் தேடும் கயவர்களுக்குரிய சூழலை உருவாக்கிக் கொடுத்தது யார் !?
அரசியல் பழிவாங்களாக நினைத்து, அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவரின் வளர்ச்சி தடுக்கப்பட வேண்டும் என்று தனது கட்டுப்பாட்டில் பே.ம.ஊழியர்களை கட்டுப்படுத்துபவர்களா ?
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஒருவரை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தக்க ஒன்றிணைந்த சகோதர்களுக்குக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் தூரோகம் விளைவிக்க ஒத்துழையாமை இயக்கம் போல் தனித்தே பளிச்சிட நினைக்கும் பே.ம.துணைத் தலைவரா ?
பே.ம.ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் சார்பாக தான் போட்டியிட்ட வார்டிலேயே தோல்வியைத் தழுவியவர், தேர்தல் நேரங்களில் வசூலுக்கும் வாக்குக்கும் படையெடுக்கும் இஸ்லாமியர்களின் ஒன்று விட்ட சகோதரனைப் போல் வேடமிடும் அந்த கட்சிக் காரரின் சூழ்ச்சியா ?
பேரூராட்சி மன்ற அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளா ? அல்லது அங்கே வேலை செய்யும் துப்புறவு தொழிலில் ஈடுபடும் ஊழியர்களா ?
யாரைச் சுட்டுவது !? மேற்சொன்னவற்றிற்கு காரணகர்த்தவாக ஒருசாராரோ அல்லது அதற்கு மேலோ ஒன்றிணைந்துதான் இருப்பார்கள் என்று சந்தேகிக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது சமீபத்திய நிகழ்வுகளில் !
நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் செயல்வீரராக இருக்க பொதுமக்களாகிய நாம் தான் முன்னின்று அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
சரி, என்னதான் செய்ய வேண்டும் !?
அவரின் ஒரே கோரிக்கை, குப்பைகளை அவற்றிக்கென வைத்திருக்கும் தொட்டிகளில் இடுவதும், ப்ளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை அறவே நிறுத்துவதும் ! இந்த இரண்டையும் முறையாக செயல்படுத்த அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்களால் மட்டுமே செய்ய முடியும்.
மாறாக, தனது முகத்திலேயே தூப்பிக் கொள்ளும் கேடுகெட்ட பழக்கம் நம்மவர்களிடையேதான் இருக்கிறது. அதுதான் தனது வீட்டு வாசலியிலே குப்பைகளைக் கொட்டிவிட்டு அல்லது அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கொட்டிவிட்டு அதனைச் சுத்தம் செய்ய பேரூராட்சி மன்றத் தலைவரைத் தேடுவதும் அவரைச் சாடுவதும் எவ்வகையில் நியாயம்.
பூக்களைத் தூவுவதுபோல் வீடுகளில் உருவாகும் கழிவுகளையும் குப்பைகளையும் தான் வசிக்கும் தெரு ஓரத்திலோ அல்லது தனக்கு பிடிக்காதவர்களின் வீட்டு வாசலிலோ போட்டுவிட்டுச் செல்லும் கேடுகெட்ட பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.
நமது சகோதரர் ஒருவரால் மட்டுமே இந்த சுகாதாரத்தை கொண்டு வர முடியாது அதற்கு நம்மக்களாகிய நீங்களும் முழுவதுமாக சுகாதராப் பொறுப்புடன் தனது மற்றும் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு அவசியம் ஒத்துழைக்க வேண்டும்.
முதல் நடவடிக்கையாக பேருராட்சி மன்றத் தலைவரோடு கைகோர்த்து அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இனியொரு சூழல் இவ்வாறு நிகழாமல் இருக்க ஒத்துழைப்போம் !
வாய்க்காலைக் கண்டால் வாயிலிருப்பதை துப்புவதும், வீதியோரத்தைக் கண்டால் வீசிவிட்டுச் செல்வதும் ஒழிக்கப்பட வேண்டும்.
நமக்கு சுகாதாரம் அவசியம் அதற்கு நமது வீடு சுத்தம் அவசியம். சார்ந்திருக்கும் தெருவின் சுத்தமும் நமது வீடுகளின் சுகாதாரத்தை பேச வைக்கும் !
சிந்திப்போம் அதிரைச் சமூகமே !
பேரூராட்சி மன்றத் தலைவரின் ஒற்றைக் கோரிக்கையை ஒவ்வொருவரும் செயல்படுத்தினால் விரைவில் சுத்தம் நம்மோடு சுகமாக இருக்கும் !
இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்
12 Responses So Far:
தலைவரால் நல்லத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் அறிவிக்கவும் மட்டுமே முடியும். அதை அமல் படுத்த ஊழியர்கள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பும் மிகமிக அவசியம் என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கும் இப்பதிவை வரவேற்கிறேன்.
யாரையும் ஒட்டுமொத்தமாக வெறுக்கவோ விரும்பவோ கூடாது; அந்தந்த நடவடிக்கையைப் பொறுத்தே ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுவதுதான் நேர்மையான ஊடக தர்மம் என்னும் கொள்கைக்கேற்ப சகோ அஸ்லம் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அதிரை நிருபருக்கு பாராட்டுகள்.
சுத்தம் ஈமானில் பாதி.
இது எந்த அளவுக்கு நம் மக்கள் மனதில் பதிந்திருக்கின்றது என்று தெரியவில்லை . பொதுமக்களின் ஒத்துழைப்பில் தான் ஊரின் சுத்தமே அடங்கி இருக்கின்றது.
ஒரு தனி நபர் ஊரையே வளைத்துப்போட்டு ஒன்றும் செய்து விட முடியாது. 50 வருஷங்கள் ஒருவர் பதவியில் இருந்தாலும். ஒத்துழைப்பு என்று ஒன்று இருந்தால்தான் , இதுமட்டுமல்ல, எதுவுமே சாத்தியம்.
அபு ஆசிப்.
தலைவனை தேர்ந்தெடுத்த மக்களை குறை கூர்வது எந்த விதத்தில் நியாயம் ? குப்பைகளை போட வேண்டாம் என்பது மட்டுமே அதிகார கட்டளையாக உள்ளது மாறாக அதற்கு மாற்று ஏற்பாடுகள் இல்லை சில காலங்களுக்கு முன்பு துப்புரவு தொழிலார்கள் பற்ற குறை என்ற ஒரு அறிவிப்பு கூட வந்துள்ளது .மிகப்பெரிய நகராட்சிக்கு நிகரான அதிரை பேரூர் நிர்வாகம் தினமும் குப்பைகளை அள்ள ஏற்பாடு செய்யவேண்டும் துப்புரவு செய்ய தன்னிடம் உள்ள ஆட்களையும் அற்கான சாதனங்களையும் பொது மக்களுக்கு அதிரை பே .ஆ நிர்வாகம் பட்டியல் இட முடியுமா ?
சுத்தம் ஈமானில் பாதி.இதை உணர்ந்தால் மட்டுமே சாத்தியம்.
அஸ்ஸலாமுஅலைக்கும்,
ஊருக்கு செய்யும் நன்மைகளுக்கு யார் தடைகல்லாக இருக்கிறார்களோ
அவர்களை அடுத்த தேர்தலில் தோற்கடிக்க மக்கள் சபதம் செய்ய வேண்டும். ஆனால், வாக்காளர்களுக்கு போதுமான பக்குவமும், விழிப்பு உணர்வும் இல்லை! தேர்தல்களில் குறிப்பாக பஞ்சாயத்து தேர்தலில் அவர்கள் பார்ப்பதெல்லாம் தெரு, ஜாதி, மதம், கட்சி, இன்னொரு முக்கியமானது பணம்.
பொது தேர்தலில், பணம், ஜாதி, மற்றும் மதம், இதனால் ஜனநாயகத் தாய் பட்டப்பகலிலேயே நட்ட நடு ரோட்டில் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகனால் கற்பழிக்கப்படுகிறாள். இந்த பிற்போக்கு, உணர்வுகளை முன் நிறுத்தி மக்கள் வாக்களிப்பதனால் நாட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது.
மக்கள் விழித்து சிந்தித்து வாக்களித்தால் சுய நலவாதிகளையும் தடைக் கற்களையும் ஒழித்து நாட்டையும் ஊரையும் சுபிச்சத்திற்க்கு கொண்டு செல்லாம்'. இல்லையென்றால்!' யானைபோல் தலையில் மண்ணை வாரிபோட்டுக் கொள்ளலாம்!. அல்லது வெள்ளாட்டு மந்தைபோல் ''மே! மே!'' என்று கத்திக் [ஜூன், ஜுலை'' சொல்ல வேண்டிய அவசியம் இல்லை] கொண்டே ஒன்று போன பாதையில் கண்ணை மூடிக்கொண்டு நடக்கலாம். தற்போதைய நம் ஊர்பஞ்சாயத்தில் நடக்கும்' நானா? நீனா'? போட்டி தொடர்ந்தால் ''இரண்டு பூனைகள் ஒரு ஆப்பதுக்கு சண்டைபோட்டு அதை குரங்கு கையில் கொடுத்து விட்டு ஏமாந்த கதையே நாம் மீண்டும் படிக்கலாம்.
ஊர்சுற்றும் உமர்கயாம் // யாதும் ஊரே;; யாவரும் கேளிர் //
அல்லதை சாடி, நல்லதை தேடும் அதிரை நிருபரை பாராட்ட வேண்டும்.
சொல்லி சொல்லி இல்லை பலன் என தெரிவதால் நம் ஊர் நலனுக்காக இனி சட்ட நடவடிக்கை மூலமே பேரூராட்சி நம் மக்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
இக்கட்டுரைக்கு சாரம்சமாக ஒரு தடவை மதிப்பிற்குரிய வாவன்னா சார் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
//மக்கள் தங்கள் ஜனநாயக கடமையான வாக்குகளையும், குப்பைகளையும் போடக்கூடாத இடத்தில் போட்டு விட்டு செல்கின்றனர்.//
குப்பைகளை கொண்டு போய் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டி அவற்றை அழிக்க தீயிட்டு எரித்து விட்டால் ஊர் சுத்தமாகி விடாது. அதனால் காற்று மாசடைந்து புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் பரவ வழிவகை செய்யும். இப்பொழுதுள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு ஊரின் தேவை என்னவெனில் ஒவ்வொரு ஊருக்கும் ஒதுக்குப்புறமான இடத்தில் அரசால் ஒரு பரந்த இடம் ஒதுக்கப்பட்டு அங்கு ஊரின் அன்றாட திடக்கழிவுகள், திரவக்கழிவுகள், மக்கும் கழிவுகள், மக்கா கழிவுகள் என பிரித்தறியப்பட்டு அவைகள் உரம் போன்ற விவசாய பொருட்களின் உற்பத்திக்காக (ரீசைக்கில்) மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்த அதற்குரிய பிரத்யேக சாதனங்கள், இயந்திரங்கள் மூலம் அரசால் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதெல்லாம் நடக்குற காரியமா? சாத்தியமா? என்றால் குப்பைகளை ஒழிப்பது நிச்சயம் சாத்தியம் இல்லை தான்.
நமதூர் பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச். அஸ்லம் அவர்களுக்கு குடும்பத்திற்குள்ளேயே ஏதோ முன் பகையால் நெருங்கிய சொந்தக்காரர்களே எதிராக வெளிப்படையாகவே செயல்படும் பொழுது அவருக்கு ஊரைச்சுற்றி சில எதிரிகள் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் அவருக்கு யார், யாரெல்லாம் எதிராக செயல்படுகிறார்களோ அவர்களிடம் சென்று நட்பு பாராட்டும் நிகழ்வுகளையும் நான் சென்ற முறை ஊர் சென்றிருக்கும் பொழுது நேரில் கண்டேன்.
அல்லாஹ்வுக்காக, மக்களுக்காக நல்லது எவன் செய்ய முற்படுகிறானோ அவனுக்கு முழு ஆதரவையும் கொடுத்து ஒத்தாசையாக இருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. குற்றங்கள், குறைகள் காணப்படின் அவைகள் உரிய முறையில், உரிய நேரத்தில், உரிய இடத்தில் எடுத்து வைக்கப்பட்டு களையப்பட வேண்டும்.
ஊரின் பேரூராட்சி தலைவர் என்பவர் "ஊர் முச்சூடும் சென்று வீடு தோறும் வீசி எறியும் குப்பைகளை அள்ளக்கூடிய துப்புறவு பணியாளர் அல்ல".
ஊருக்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கே தெரிவிக்கப்பட வேண்டிய செய்தி என்னவெனில் "ஆயிரம் மகாத்மாக்கள் பிறந்து வந்தாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர ஒத்துழைப்பு, மத துவேசம் இல்லாத எந்த மத, ஜாதி, குலப்பெருமைகளை தாண்டி நம் நாட்டின் குடிமகன் என்ற உண்மையான மனிதம் போற்றும் மாண்பு அறவே இல்லாத பட்சத்தில் நாடென்ன வீடு கூட உருப்படாமல் தான் போகும்".
மோடியை நல்ல நண்பர், வல்லவர் என புகழ்வதால் வெறுப்படைந்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வென்றிருந்த போதிலும் ராஜ்ய சபை தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளர் கனிமொழிக்கு ஓட்டளித்தது த.மு.மு.க.வின் அரசியல் பிரிவு ம.ம.க. இப்பொழுது சமீபத்தில் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என எம்பிக்கள் கையெழுத்து சமாச்சாரத்தில் தி.மு.க. தலைவரின் கடுங்கோபம், நாட்டில் மோடியின் போலி அலையால் வந்த விசுவாசத்தை பார்க்கும் தி.மு.க. வரும் பாராளுமன்ற தேர்தலில் வேண்டாப்பொண்டாட்டியாய் இருந்து வரும் காங்கிரஸை விவாகரத்து செய்து விட்டு பா.ஜ.க.வுடன்/தே.மு.தி.க.வும் சேர்ந்து அந்த பழைய அறுந்து போன தொடர்பை புதுப்பித்து பாராளுமன்றத்தில் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கணக்கு போட்டு வைத்துள்ளதை சாதாரன பாமரன் கூட இன்று பண்டார ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
எனவே கட்சிகளின் செயல்பாடுகள் பல சமயம் நம் செப்பையில் அறையக்கூடும். எனவே ஊர் நலனை மட்டும் கருத்தில் கொண்டு கட்சி பாகுபாடின்றி செயல்பட்டால் நம் ஊர் ஒரு முன் மாதிரி ஊராக திகழும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.
இந்தியக்குடிமகனாய், மண்ணின் மைந்தனாய் என் மேற்கண்ட கருத்தை இந்த தளத்தில் பதிய விரும்புகிறேன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
தம்மை சார்ந்தவர் ஒருவ ஊரின் உயர்பதவியில் இருக்கிறார் என்பது அக்குடும்பத்துக்கும் அதை சார்ந்தவருக்கும் பெருமையே...
குப்பைகளை அள்ளி தன் வீட்டுக்குள்ளேயே பரப்பிவிடுவது போல்தான் தான் சார்ந்த ஊரை தூய்ம்மையாக வைக்க தன் பங்கும் உண்டு என்பதை மக்கள் எப்போதான் உணர்வார்களோ...
குறிப்பாக நாம் ஒன்றை இங்கே நினைவில் கொள்ளவேண்டும், பலதரப்ப்ட்ட புது பொது நோய்கள் வருவதுக்கு காரணம் குப்பை கூளங்களே, அதை அகற்ற உதவுங்கள் அதை அகற்ற நான் உதவி செய்கிறேன் நீங்கள் உபத்திரம் செய்யாமல் இருங்க என்று ஒருவன் அட்வைஸ் செய்தால் அது எப்படி சாத்தியமாக விடுவோமா என்று மாக்கள் கங்கணம் கட்டி மல்லுக்கு நிப்பவர்களை என்னவென சொல்வது
குப்பை அகற்றுவோம்
தூமையான அதிரையை உருவாக்குவோம்...
எனக்கு தெரிந்து இதற்க்கு முன் அதிகாரத்தில் இருந்தவர்களைவிட
இந்த தலைவர் எவ்வளவோ மேல்.
தூரத்தில் இருந்துகொண்டு எதுவும் சொல்லிவிட்டு போகலாம்.
அருகில் சென்று பார்க்கும்போதுதான் அதன் ஆழமும் அதன் உல் அருத்தங்களும் யாருக்குமே பிடிபடும்.
மீண்டும் சொல்கின்றேன் , மக்களின் ஒத்துழைப்பு, ஒத்துழைப்பு, ஒத்துழைப்பு,
இதில் ஒன்றே சுத்தம் என்பது சாத்தியம்.
வேறு யாராலும் முடியாது, எந்த சர்வாதிகாரத்தாலும் முடியாது.
அபு ஆசிப்.
''அதிராம்பட்டினம் என் ஊர்!
அதிராம்பட்டினம் என் வீடு!'' என்று எல்லோரும் எண்ணி பொறுப்புடன் செயல்பட்டால் அதிரை நகரை பூலோக சொர்க்கமாக்கலாம்
S.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்
பேரூராட்சி தலைவர் சகோ.அஸ்லம் வெற்றிபெற்றவுடன் முதல் நேர்காணல் நான் எடுத்தேன்.. சுத்தம், சுகாதாரம் பற்றியே அதிகம் கூறினார்.. பிறகு நமதூர் பேருந்து நிலையத்தில் வார்டு மெம்பர்கள் மற்றும் தலைவர் மற்றும் துணை தலைவர் நின்று துப்புரவு தொழிலாளர்களை வார்டு வாரியாக பிரித்தார்கள்..
அப்பொழுது கண்டேன் சிலர் அரசியலை எந்தளவு தினிக்க முயற்சித்தார்கள் என்று.. அதன் பிறகு துணை தலைவர், எதிர்க்கட்சி தலைவர், வார்டு மெம்பர்கள் என்று பலரையும் பேட்டி எடுக்க நேர்ந்தது.. மேலும் பல அரசியல் தெரியவந்தது.. மொத்தத்தில் காழ்புணர்ச்சி,போட்டி, பொறாமையில் நமதூரை இவைகள் நாசமாக்குகின்றது என்பதுதான் உண்மை..
தேர்தல் முடிவிற்கு பிறகு பேட்டி எடுத்த சில காணொளிகள்
Chairman Interview
http://www.youtube.com/watch?v=YQQhGUIyAPQ&list=TLSoi1oQmdBFI
Vice Chairman Interview
http://www.youtube.com/watch?v=w6PAfOW7hgA
19th ward Cleaning - Bro.Haja
http://www.youtube.com/watch?v=feIjziKlkyQ
19th Ward-Bro.Haja
http://www.youtube.com/watch?v=Y8RqPT9X-Nk
21st Ward Member - Bro.Ibrahim
http://www.youtube.com/watch?v=fIX0mDo-rlM
Post a Comment