Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஜப்பானில் மோடியும் இரண்டரை லட்சம் கோடியும் – ஒரு பார்வை ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | September 08, 2014 | , , , ,

உலக வரலாற்றில் ஜப்பானின் வரலாறு வித்தியாசமானது. பல நாடுகள் உதாரணமாகப் பின்பற்றத்தக்கது. அழிவின் ஆழத்திலிருந்து எழுந்து நின்று ஏற்றம் பெறுவது என்பது எல்லா நாடுகளாலும் இயலாது. உலகின் மூன்றாவது பணக்கார நாடாக கருதப்படும் ஜப்பானுக்கு ஐந்து நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்று வந்திருக்கும் செய்தி நாட்டின் பொருளாதாரப் பார்வையில் ஒரு முக்கியத் திருப்பமாக இருக்குமென்று ஒரு கருத்து பரவலாக நிலவுவதால் செய்தியின் முக்கியத்துவம் கருதி நாமும் நமது பார்வையை அந்தச் செய்தியின் மீது செலுத்தத் வேண்டி இருக்கிறது. இந்த பயணத்தில் நமது பார்வையில் பொருளாதார பிரச்னைகளுக்கும் மேலாக நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் எல்லைப்புற நாடுகளுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றையும் பார்க்கிறோம்.

பிரதமராக பதவி ஏற்ற களைப்பு தீரும் முன்பே பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்துக்கும் பூடானுக்கும் அரசுமுறைப் பயணமாக சென்று வந்தார். தேர்தலுக்கு முன்பாக நேபாளத்தையும் பூடானையும் இந்தியாவோடு இணைத்து ஒரு அகண்ட பாரதத்தை இந்து ராஜ்யமாக நிறுவுவோம் என்று மோடியின் பாரதீய ஜனதா பரப்புரை செய்தது. இத்தகைய பரப்புரைகளுக்கும் பிரதமரின் பூடான், நேபாள உடனடி பயணத்துக்கும் நாம் முடிச்சுப் போட்டு பார்க்க விரும்பவில்லை. அத்தகைய உள்நோக்கம் அவருக்கும் அவரை ரிமோட் வைத்து இயக்கும் இயக்கங்களுக்கும் இருந்து இருக்கலாம் . ஆனால் ஜப்பானுக்கு அவர் சென்று வந்தத்தில் இத்தகைய உள்நோக்கத்தின் ஒரு துளி கூட இருப்பதாக நாம் கருத இயலாது. காரணம் அவர் சென்றது ஜப்பானுக்கு. பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானியர்கள் சப்பாணியர்களல்ல. அத்தகைய உள்நோக்கங்கள் இருந்தாலும் ஜப்பானில் அந்தப் பருப்புகள் வேகாது. 

தனது அரசு ஒரு வளர்ச்சிக்கான அரசு என்று வர்ணித்துக் கொண்டிருக்கும் மோடி , ஏற்கனவே தானும் வளர்ந்து தன்னை நம்பும் நாடுகளையும் வளர்க்க உதவும் ஜப்பானைத் தேடிப் போவது ஒரு வகையில் தான் வளர்ச்சியை நோக்கிச் செல்ல ஆரம்பித்து இருக்கிறேன் என்று நாட்டோருக்கு அறிவிக்கும் உள்நோக்கமாக – இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால் ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன்பு போடப்படும் பீடிகை அல்லது பில்ட் அப் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட பயணங்கள் ஒரு போக்குக் காட்டவா பொழுது போக்கவா அல்லது உண்மையில் பொருளாதாரத்தை வளர்க்கவா என்பதையும் இந்தப் பயணத்தின் வெற்றியையும் இனி வரும் காலம்தான் நிரணயிக்கும். இப்போது இதை நாம் எதிர்மறையாக அல்லாமல் உடன்பாடாகவே இந்தப் பயணத்தைக் கருதலாம். அவ நம்பிக்கை கொள்ளாமல் நம்பிக்கையையே நரேந்திர மோடி மீது வைக்கலாம்.

இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமான உறவு என்பது நெடுங்கால வரலாற்றுப் பின்னணி கொண்டது. இந்தியாவில் வேதங்களால் ஏற்பட்ட விளைவுகளையும் மத-சாஸ்திர சம்பிரதாயங்களையும் சீர்திருத்துவதற்காக கவுதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட புத்த மதம் தனது வேர்களையும் கிளைகளையும் விரித்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று . இன்றும் கூட ஜப்பானின் தேசிய மதம் புத்த மதமே. ஆகவே ஜப்பானின் தேசியமதத்தின் பிறந்த இடம் இந்தியா அது புகுந்த இடம் ஜப்பான். எனவே கலாச்சார வழி உறவுகள் நமக்கும் ஜப்பானுக்கும் நெடுங்காலமாக இருப்பதால் இந்தியாவை ஒரே கலாச்சாரமான நாடாக மாற்ற வேண்டுமென்று பயிற்றுவிக்கப்பட்ட நரேந்திர மோடியின் ஆர் எஸ் எஸ் கொள்கைகள் புரையோடிப் போன மனதில், இந்தியா பல்வேறு இன மொழி கொண்ட நாடுதான் என்பதை இந்தப் பயணம் உணர்வதற்கு உரம் போட்டு இருக்கும் என்று நம்பலாம். 

கலாச்சாரத்துக்கு அப்பால், நவீன கால அரசியல் ரீதியாக இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் அவரது ஐ. என் ஏ இராணுவ அமைப்புக்கும் அங்கீகாரம் அளித்து வாரி அணைத்துக் கொண்ட நாடுகளில் ஜப்பான் தலையாயது. இந்த வரலாற்றையும் நரேந்திர மோடி ஜப்பானுக்குப் போயாவது உணர்ந்து இருக்கலாம்.

பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமரான காலம் முதல் ஜப்பானுடன் நல்லுறவை வல்லர்த்துவந்தார் என்பதும் ஒரு வரலாறுதான். குறிப்பாக அன்றைய ஜப்பானியப் பிரதமர் நொபுசுகே கிஷிக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவும், 1957-இல் அவரது இந்திய விஜயமும் இன்று நாம் உதாரணமாக காட்டும் அன்றைய இந்தியாவின் பல வளர்ச்சித் திட்டங்களில் ஜப்பானிய ஒத்துழைப்பை நாம் ஒதுக்கிவிட இயலாது. ஜப்பானின் பல பிரதமர்கள் இந்தியாவுக்கும் இந்தியாவின் கிட்டத்தட்ட எல்லாப் பிரதமர்களும் ஜப்பானுக்கும் சென்று வந்து உறவுளை வலுப்படுத்தி இருக்கிறார்கள். 

ஜப்பானுக்கு செல்லாத இந்தியப் பிரதமர்கள் என்று பார்ப்போமானால் மரியாதைக்குரிய வி. வி. சிங் அவர்கள் பிரதமராக செல்ல இயலவில்லை காரணம், மண்டல் கமிஷன் விவகாரத்தால் அவர் முதுகில் குத்தப்பட்டதால் பதவி விலக நேரிட்டதுதான். . அடுத்து சரண் சிங், தேவ கவுடா, சந்திர சேகர், குஜ்ரால் ஆகியோரும் ஜப்பான் செல்லவில்லை. காரணம் ஜப்பான் போவதற்காக விசா ஸ்டாம்ப் செய்வதற்காக இவர்களின் பாஸ்போர்ட் ஜப்பான் எம்பாசிக்கு செல்லும் முன்பே இவர்களின் பிரதமர் பதவி காலியாகிவிட்ட காலக்கிரகம்தான். 

இப்போதும் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு செல்லும் முன்பே நரேந்திரமோடி அவர்கள் ஜப்பான் விஜயத்தை தேர்ந்தெடுத்து இருப்பது பல பொருளாதார மற்றும் வெளியுறவுத்துறை அரசியல் இராஜ தந்திரம் என்று சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. 

ஜப்பானில் ஐந்துநாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் முதலாவதாக தனது சொந்தத்தொகுதியான வாரணாசிக்கு , வரப்பிரசாதமாக ஒரு மேம்பாட்டுத்திட்டத்தை மேற்கொள்ள ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வந்திருக்கிறார். கங்கையை தூய்மைப் படுத்துவது என்று பட்ஜெட்டில் அறிவித்தத்தன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தின் ஆரம்பம் இருக்கும் என்று கருதுகிறோம். இந்த ஒப்பந்தத்தின் தொடக்கமே அமர்க்களமாக ஆரம்பமாகி இருக்கிறது. எப்படிஎன்றால் ஜப்பானின் தலைநகரம் டோக்யோ. ஜப்பானின் ஸ்மார்ட் சிடி என்று வர்ணிக்கப்படும் நகரம் கியோட்டா . இந்த கியோட்டா நகரத்தின் அமைப்பின் அடிப்படையில் வாரணாசி நகரமும் அதன் பழமையும் பாரம்பரியமும் மாறாமல் வடிவமைக்கப்படும் என்பதற்கான ஒப்பந்தம் இந்த நகரில்தான் கையெழுத்தாகி இருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக டோக்கியோவை விட்டு கியோட்டா நகருக்கு வந்து மோடியை வரவேற்றார் ஜப்பான் பிரதமர். இந்த நகரில்தான் ஜப்பானின் பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார். 

அத்துடன் ஜப்பான் நாட்டு பாரம்பரியப்படி கியோட்டா நகரின் சடங்குகளில் ஒன்றான மீனுக்கு உணவளிக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் மீன்களுக்கான உணவை மோடி தனது கைகளில் வழங்கப்பட்ட தட்டில் இருந்து எடுத்து எடுத்துப் போட்டது கவின் மிகு காட்சியாக இருந்தது. 

அதே நேரம், இந்தியாவில் மோடி தான் கலந்துகொள்ளும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் அசைவ உணவைப் பரிமாறக் கூடாது என்று அரசு அனுப்பி இருக்கும் சூடான சுற்றறிக்கையும் ஏனோ நமது நினைவில் வந்து தொலைத்தது.

புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது, ரூ.2.10 லட்சம் கோடி நிதியுதவி, பாதுகாப்புத் துறையில் இருதரப்பும் உதவி என்று தொடங்கி, ஜப்பானிடமிருந்து பல ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

ஆனால் நீண்டகாலமாக முடிவு காணப்படாத இந்திய - ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இந்த பயணத்திலும் பற்பல சந்திப்புகளிலும் கலந்துரையாடகளிலும் விவாதிக்கப்படவோ தீர்வு காணப்படவோ இயலவில்லை. 

பிரதமராகப் பதவி ஏற்ற நூறு நாட்களுக்குள் நரேந்திர மோடி சீனாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல வெளியுறவு கொள்கைகளை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால், இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டுள்ளன என்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ரோனன் சென் தெரிவித்துள்ளார். இதனால்தான் தனது சதுரங்க ஆட்டத்தை ஜப்பானில் தொடங்கி இருக்கிறாரோ பிரதமர் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். சீனா என்பது நம்மால் அவசியம் கவனிக்கப்பட வேண்டிய நாடு என்பதை இந்தியாவில் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும் மறுக்க இயலாது ; ஒதுக்கிவைக்க இயலாது. 

ஆசியாவில் சீனாவின் வளர்ச்சி என்பது ஜப்பான் போன்ற பொருளாதார வளர்ச்சி மிகுந்த நாட்டுக்கும் இந்தியா போன்ற மனிதவளம் (எண்ணிக்கையில் மட்டும்) மிகுந்த நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள பொதுவான அச்சுறுத்தல்தான் என்பதை இவ்விரு நாட்டுத்தலைவர்களும் உணர்ந்து இருப்பார்கள்.

சீனாவின் வளர்ச்சி இப்படி ஒரு அச்சுறுத்தலை இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஒரே அளவில் ஏற்படுத்தி இருந்தாலும் சீனாவுடனான நட்புச்சுவரை இரண்டு நாடுகளுமே எளிதாக இடித்துத் தள்ளிவிட இயலாது. அந்த வகையில் நண்பனுக்கு நண்பன் நண்பன் என்ற தத்துவத்தையும் பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்ற தத்துவத்தையும் இரண்டு நாடுகளுமே கையாள வேண்டிய நிலைமையும் இருப்பதை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும்போது இரு நாட்டுப் பிரதமர்களும் பேசியே இருப்பார்கள். 

சீனாவைப் பற்றி ஜப்பானின் அந்தரங்கமான எண்ணங்கள் ஒரு புறமிருந்தாலும் சீனாவில் ஜப்பானின் முதலீடுகள் ஒன்றும் குறைவானதல்ல என்று எகனாமிக் டைம்ஸ் குறிப்பிடுகிறது. ஆம்! கொஞ்சமல்ல 20,000-க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஜப்பானின் அந்நிய முதலீட்டில் மூன்று லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவான தொகை சீனாவில் மட்டும் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. மீன் கொத்தும் இடத்தில் தூண்டில் போடுவதும் ஜப்பானிய பொருளாதார அணுகுமுறைதான்.

ஆனாலும் அண்மைக்காலமாக ஜப்பான் சீனாவில் செய்துவந்த முதலீடுகள் கணிசமாக குறைய ஆரம்பித்து இருக்கிறதாம். இப்படி சீனாவில் குறையத்தொடங்கி இருக்கும் ஜப்பானிய முதலீடுகளை இந்தியாவின் பக்கம் திருப்பிவிடுவது பற்றிய ஒரு கோரிக்கையும் பிரதமர் மோடியால் ஜப்பானியப் பிரதமரிடம் வைக்கபட்டிருக்கலாம் . ஆனால் அது பற்றி செய்திகள் வெளிவரவில்லை. இதற்குக் காரணம் இருக்கிறது. 

இவ்விதம் மோடியால் கோரிக்கைவைக்கப்பட்டால் ஏற்கனவே அங்கங்கே எல்லைப் பிரச்னையில் சீனாவுடன் மோதிக் கொண்டு இருக்கும் இந்தியாவுக்கும் ஏற்கனவே பல கோடி டாலர்களை சீனாவில் முதலீடு செய்துள்ள ஜப்பானுக்கும் சீனாவால் இன்னும் தொல்லைகள் வர வாய்ப்புண்டு என்று இரு தலைவர்களும் கருதி ‘ ஓடு மீன் ஓட உரு மீன் வரும்வரை வாடி இருக்கும் கொக்கு’களாக காத்திருந்து பார்க்க முடிவு செய்து இருக்கலாம். 

சரிந்து கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டுமானால் இந்தியா உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது உணவுக்கு உப்புப் போல் அவசியம். அவ்விதம் இந்தியா குறிக்கோள் வைத்து பயணித்தால் குறுக்கே வந்து நிற்பது ஏற்கனவே வளர்ந்து இமய மலை போல் நிற்கும் சீனாதான்.

அதே போல் ஆசியாவில் பொருளாதார வலிமையையும் இராணுவ வலிமையையும் தனது நாடே பெற்றிருக்க வேண்டுமென்று ஜப்பான் ஆசைப்படுவதும் இயல்பே. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவும் ஜப்பானும் நெருங்கி உறவாடுவது சீனாவின் ‘கண்ணைச் சுற்றி பறக்கும் கண் வலி கொசுவாகத்தான்’ சீனா உணரும். இந்த இரு நாடுகளின் நெருக்கத்தை சீனா கவலையுடன் கவனிக்கும் ; இந்த நாடுகள் நெருங்கிவருவது தனக்கு ஆபத்து என்று சீனா அந்தமுயற்சிகளைத் தடுக்கும் ஆயத்தங்களில் இறங்கும். 

பெரிய அளவில் ஜப்பானை சீனா மிரட்ட இயலாது என்றாலும் இன்றளவும், ஒப்பிடும்போது பலவகையிலும் பிற்பட்ட நிலையில் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் அளவுக்கு நோஞ்சானாக இருக்கும் இந்தியாவை பணியவைக்க சீனா நிச்சயம் முயலும். 

சீட்டுக் கட்டில் கட்டப்பட்ட கோட்டையில் ஒரு சீட்டை உருவிவிட்டால் கோட்டை தகர்ந்துவிடுமென்ற தத்துவத்தை சீனா அறியாமலிருக்காது . அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியாவை மிரட்ட, இலங்கையை சீனா துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் வாய்ப்புண்டு. 

அதற்கான அடையாளங்கள் இலங்கையில் தென்பட ஆரம்பித்துவிட்டன. இந்திய இலங்கை நாடுகளின் உறவில் இந்தியாவை இலங்கை மிரட்டும் தொனியிலும் இந்தியா இலங்கையை தாஜா செய்யும் நிலையிலேயே இருப்பதையும் அரசியல் நோக்கர்கள் கவனித்து இருக்கலாம். இந்த நிலமைக்கு இலங்கையின் மீது சீனாவின் செல்வாக்கும் ஒரு காரணம் என்பது யதார்த்தமான பதார்த்தம். 

மொத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பானிய விஜயம் , அந்த விஜயத்தின் போது மேளம் அடித்து தாளம்போட்டு கொண்டாடினாலும் ‘ஆரியக் கூத்தாடினாலும் காசுக் காரியத்தில் கண்வைத்து' தற்போது ரூ.2.10 லட்சம் கோடி நிதியுதவி பெற்று வந்துள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். ஏற்கனவே கூவம் மணக்கிறது என்ற கோஷத்தை பார்த்துவிட்டோம். இப்போது கங்கை மணக்கப் போகிறது என்பதும் என்னவாகப் போகிறது என்பதையும் பார்க்கலாம். நடப்பவை நல்லதாக நடக்குமென்று நம்புவது இந்தியனின் இயல்பு. அந்த இயல்பின்படி இன்றைய நிலையில் அவ்வளவாக எதிர்மறையாக விமர்சிக்க முடியாத பயணமாகவே இதை இப்போது காணலாம். காலம்தான், இந்த நம்பிக்கைக்கு பதில் சொல்லும். 

ஆனால் அங்கு ஒரு கூட்டத்தில் அவர் பேசும்போது, "இந்தியனின் மரபணுவில் அகிம்சைதான் இருக்கிறது" என்று பேசியதை கூடி இருந்தவர்கள் கைதட்டி வரவேற்றார்கள். ஆனால் அதைப் பார்த்த நமது மனதில் குஜராத் கலவரமும், போலி என்கவுண்டர்களும் , மோடியின் அமைச்சரவையில் இருந்தோர்கள் மீது இன்றளவும் இருக்கும் கொலைக் குற்ற வழக்குகளும் முழுநீள திரைப்படமாக ஓடியதை மறுக்க இயலாது. ஷைத்தான் வேதம் ஓதுகிறது என்றே நாம் நினைக்க வேண்டி இருந்தது. பார்க்கலாம் இந்தப் படம் நூறுநாள் ஓட்டினாலும் இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறது. ஐந்தாண்டுகள் ஓடவேண்டிய இந்தப் படத்தின் இறுதியில்தான் இதன் முடிவு காமெடியா அல்லது டிராஜெடியா என்று தெரியும்.

இபுராஹீம் அன்சாரி

19 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

வணராசிக்குஅடிச்சதுபணராசி'மத'ராசியும்அதில்இருக்கு!.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒரு வெளிநாட்டுப் பயணத்தின் பின்னணியில் இத்தனை அரசியலா? மூளையைப் போட்டுக் கசக்கினாலும் இவ்வளவு ஆழமாக எங்களால் ஆராய முடியாது காக்கா.

இது சதாரண பார்வை அல்ல; கூரான பார்வை; நேரான பார்வை.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

What an analysis article by Ansari kaka? Well done kaka. Blowing coanch to a deaf......

Unknown said...

Assalamu Alaikkum

Respected brother Mr. Ebrahim Ansari,

In my opinion by observing one of his speech(before becoming PM), that Prime Minister of India Mr. Modi is having more selfless service oriented rather than politically oriented. Being optimistic is always a positive thing.

Making cooperation with fellow countries of the world near & far and establishing harmonious relationship, and complementing the resources and competencies with each other is vital for growth rather than doing power politics and making conflicts.

Lets be optimistic, and wait and see.

May Allah save our land from evils.

B. Ahamed Ameen from Dubai.

Unknown said...

Assalamu Alaikkum

Seeing everything happening around us by having strong faith in The Creator of the universe that He has reason for everything happening(complex phenomenon) to us, around us and He is kind enough and The Sustainer for every living things in the universe.

Such a mental poise provide us the peace, hope and courage(complete absence of .fear)

May Allah bless us.

B. Ahamed Ameen from Dubai.

Yasir said...

இப்பயணத்தைப்பற்றிய அலசல்கள்
அறிவுரைகள்
நம்பிக்கைகள்
நெளிவு சுளிவுகள்
தீயவை கெட்டவைகள்....
அனைத்தையும்...இங்கே நீங்கள் பட்டியல் இட்டு இருப்பது...ஒரு சிறந்த பொருளாதார ஆய்வாளாரை அதிரை பெற்று இருக்கின்றது என்று பெருமை கொள்ள வைக்கின்றது....

sabeer.abushahruk said...

//இந்தியா போன்ற மனிதவளம் (எண்ணிக்கையில் மட்டும்) //

எதார்த்தத்தைப் போகிற போக்கில் அடைப்புகுறிகளுக்குள் சொல்லிவிட்டுச் செல்வது அதிக கவனம் ஈர்க்கிறதே, இது திட்டமிட்ட எழுத்து யுக்தி என்கிறேன்?

sabeer.abushahruk said...

//கண்ணைச் சுற்றி பறக்கும் கண் வலி கொசுவாகத்தான்’ //

ரசித்த வித்தியாசமான உவமானம்.

(கைதட்டுவது காதில் விழுகிறதா காக்கா)

sabeer.abushahruk said...

//அடுத்து சரண் சிங், தேவ கவுடா, சந்திர சேகர், குஜ்ரால் ஆகியோரும் ஜப்பான் செல்லவில்லை. காரணம் ஜப்பான் போவதற்காக விசா ஸ்டாம்ப் செய்வதற்காக இவர்களின் பாஸ்போர்ட் ஜப்பான் எம்பாசிக்கு செல்லும் முன்பே இவர்களின் பிரதமர் பதவி காலியாகிவிட்ட காலக்கிரகம்தான்//

ஹாஹ்ஹாஹா

காக்கா, அப்புறமா அவங்க சொந்த செலவுலகூட போயிட்டு வரலயா? தேவகவுடா எங்கே போனா என்ன வந்தா என்ன? தூக்கம் கண்ணச் சொக்கிடாதா அவருக்கு:-)

இப்னு அப்துல் ரஜாக் said...

அர்த்தம் ஆயிரம் உள்ள ஆ௧்௧ம்
Weldon Kakka

Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

உணமையை சொல்லவா

தேவகவுடா ஆகியோர் பற்றி எழுதும்போதே என் மனதில் உரைத்தது- நீங்கள் இதை ரசிப்பீர்கள் என்று.

Ebrahim Ansari said...

//இந்தியா போன்ற மனிதவளம் (எண்ணிக்கையில் மட்டும்) //

வேறென்ன? சீனா மக்கள தொகையில் முதலிடம் - ஒலிம்பிக் பதக்கபட்டியளிலும் முதலிடம் அல்லது இரண்டாவது இடம்.

இந்தியா? எத்தானவது இடம்? மனித வளம் எண்ணிக்கையில் மட்டுமே தரத்தில் அல்ல.

ரசிகர் மன்றங்கள் வைப்பதில் முதலிடம்.

ரஜினி பிறந்த நாளுக்கு பழனியில் மொட்டை போடுவதில் முதலிடம்.

காலில் விழுவதில் போட்டா போட்டி.

Ebrahim Ansari said...

எதுகை மோனை தலைப்பு உபயம்: நெறியாளர்.

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

மாஷா அல்லாஹ்

காக்கா நீங்க பெரிய பொகிஷம்

அதிரை நிருபருக்கு கிடைத்த ஒளி விளக்கு

நல் வழ்த்துகளுடன் உங்களை கூடிய சீக்கிரம் சந்திக்க இருக்கும்
உங்கள் கருத்து காவியத்தில் சிக்கியவன்

உங்கள் கைபேசியின் இலக்கத்தை
எனது மெயிலுக்கு அனுப்பி தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்
adiraimansoor@yahoo.com

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர்!

ஜசாக் அலாஹ். எங்கே பாலஸ்தீனத்துப் பக்கம் உங்களைக் காணோம்.

மின் அஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.

sheikdawoodmohamedfarook said...

//இந்தியாஎதில்முதலிடம்?//நடிகைக்குகோயில்கட்டுவதில்முதலிடமில்லையா?இதைசொல்லாமல் விட்டால்'சாமிகுத்தம்'.

அப்துல்மாலிக் said...

ஒரு விசிட் க்குள்ள் இவ்வளவு பொதிந்திருக்கா என்பது வியப்பா இருக்கு காக்கா. அரசியல் பொருளாதாரம் வரலாற்று நிபுணர், மாஷா அல்லாஹ்

Ebrahim Ansari said...

அடுத்து ஆயாள் போவது அமெரிக்காவுக்காம். அலசலாம். இன்ஷா அல்லாஹ்.

கருத்துரைத்த அனைவருக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு