நீண்ட நாட்கள் கழித்து எதோ ஒன்று ஆரவாரமாய் எழுத வேண்டும் என தோன்றியது இந்த பதிவு. அது என் சோம்பேறித்தனமா, இல்லை உங்கள் நல்ல நேரமா எனத் தெரியவில்லை!. இவ்வளவு நாள் எழுதாமல், இணையத்தில் அதிகம் படிக்காமல் விட்டதால், மண்டையில் ஒட்டடை படிந்து நானே, எதோ பழசான பொருளாய் மாறிப்போனது போல ஒரு உணர்வு. இனியும் நேரம் கடத்துவதாய் இல்லை.
அதிரை - புதுமனைத்தெரு வழியே நான் சென்று கொண்டிருக்கும் பொழுது "தம்பி" என்ற ஒரு குரல் திரும்பிப் பார்த்ததும் வயதான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரியம்மா (மூதாட்டி) இருந்தார். அவர் என்னிடம் வேண்டியது "தம்பி என்னாலே நடக்க முடியலே நீ.. நேராக போனால் ஒரு ஆட்டோ இருந்தா வர சொல்லுமா" என்றார். நானும் "சரியென்று" என்று அங்கே ஒரு ஆட்டோவை வரச்சொல்லி விட்டு சென்றுவிட்டேன்.
மறுநாள் அந்த பெரியம்மாவை மீண்டும் பார்க்க நேர்ந்தது அவன் என்னை அழைத்து "நீ ஒரு ஆட்டோ வரச்சொன்னியே அவர் நெருப்பு விலை கேட்கிறான்" என்றார். "எங்கே சென்றீர்கள்" என்று நானும் கேட்க, அவர் "சித்திக் பள்ளியிலேர்ந்து செக்கடிமோடு கூப்பன் கடைக்கு செல்ல 40 ரூபாய் கேட்கிறான்" என்று சொல்லி ஆதங்கப்பட்டார்
மற்றுமொரு அனுபவம் நானும் என்னுடைய நண்பனும் பட்டுக்கோட்டை செல்லலாம் என்றெண்ணி ஆட்டோவை நெருங்கி நாங்கள் செல்லுமிடத்திற்கு எவ்வளவு என்று கேட்டதற்கு, என்னிடமும், நண்பன் தன் இடுப்பில் (பர்சில்) முடிந்து வைத்திருக்கும் பணத்தையும் தவிர, மூன்றாவதாக இன்னொருவரிடம் கேட்டு வாங்கும் தொகையையே அந்த ஆட்டோக்காரர் கூறினார். என் நண்பன் 'அதிகபட்சமாக 250 ரூபாய்க்கு மேல் வராது (வரமாட்டோம்)' என்றதால், அந்த ஆட்டோவை தவிர்த்து இன்னொரு ஆட்டோவிடம் சென்றோம். அந்த ஆட்டோக்காரரிடம் சென்று பேசுவதற்கு முன்பாகவே. முதலாவது ஆட்டோகாரர் இரண்டாவதாக இருக்கும் ஆட்டோக்காரருக்கு ஒரு குரல் கொடுத்து "ஏற்றாதே" என சொல்ல. தொடர்ந்து அடுத்த ஆட்டோவிடம் சென்றோம்.. அங்கயும் அதே குரல். எல்லா ஆட்டோகாரர்களும் கூட்டாக இருப்பதை கண்டு வெறுப்பாகி முதல் ஆட்டோகாரனிடமே சரணடைந்தோம்.
ஏகப்பட்ட இழுபறிகளுக்கு பின் 350 ரூபாய்க்கு அவன் ஒப்புகொள்ள ஏறி அமர்ந்தோம். ஆட்டோ கிளம்பி ஒரு ஐந்து கிலோ மீட்டர் சென்றிருக்கும். தீடிரென ஆட்டோ டிரைவர் "பெட்ரோல்" தீர்ந்து விட்டதாய் சொல்லி வண்டியே ஓரம் கட்டி நிறுத்தி விட்டான். நீண்ட நேர முட்டி மோதல்களுக்கு பிறகு வேறொரு ஆட்டோவை அந்த டிரைவர் பிடித்து கொடுக்க. ஒரு வித சந்தேகத்துடனே அந்த ஆட்டோவில் ஏறினோம். (தேவையற்றது இருந்தாலும் அவர்களால் ஏற்படும் சிரமங்கள், மன உளைச்சல்கள் தெரிந்து கொள்ளவே இச்சம்பவம்.).
அரசின் தகவல் அறிக்கை : தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்நேரத்திலும் உயர்த்தபடலாம். ஆனால் இந்த கட்டண உயர்வு மக்களை பாதிக்காத வண்ணம் இருக்குமாம்(என்னவொரு அக்கறையான அறிக்கை).
தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து பல வருடங்கள் ஆகின்றன. அப்போது துவக்கமாக இரண்டு கிலோ மீட்டருக்கு குறைந்த பட்சமாக பதினான்கு ரூபாய் என்றும் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஆறு ரூபாய் என்றும் அரசு கட்டணத்தை நிர்ணயித்தது. ஆனால் அரசு நிரணயித்த அந்த கட்டணத்தை எந்த ஆட்டோக் காரரும் பின்பற்றவில்லை. மீட்டர் போட்டு யாரும் ஓட்டவில்லை. ஓடுதூரத்துக்கு ஏற்றார்போல் நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டணத்தை மட்டும் வாங்க எந்தவொரு ஆட்டோ டிரைவரும் முன் வருவதில்லை. பயணம் செய்ய விரும்பி ஆட்டோ டிரைவரிடம் குறிப்பிட்ட இடத்தை கூறினால், அப்போது மனதில் தோன்றும் கட்டணத்தை மக்களிடம் கேட்கிறார்கள்.
குறைந்த பட்சமாக 2 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கான கட்டணம்; அதைத் தொடர்ந்து செல்லும் தூரத்துக்கான கட்டணம், என்றெல்லாம் அரசு எந்தவொரு கட்டண விகிதத்தையும் இதுவரை புதிதாக நிர்ணயிக்கவில்லை. எனவே மிக அதிகமாக கட்டணங்களை ஆட்டோ டிரைவர்கள் கேட்கும்போது, அவர்களுடன் மக்கள் தகராறு செய்கின்றனர். இதனால் தேவையற்ற சண்டை, மன உளைச்சல், மனவலிகள் ஏற்படுகின்றன.
எனவே ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டண விகிதத்தை அரசு நிர்ணயித்து உடணடியாக உத்தரவிட வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மீட்டர்களை பொருத்தவும், அதில் காட்டப்படும் கட்டணத்தை மட்டும் மக்களிடம் இருந்து வசூலிக்கவும் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆணை பிறப்பிக்கும்படி சட்டங்கள் கடுமைப் படுத்தப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை ஏறிய போதும் எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் கட்டணத்தை உயர்த்திக் கேட்கிறார்கள் அதிக கட்டணமே வாங்கினார்கள். இதை முறைப்படுத்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
பெட்ரோல் விலை இரண்டு முறை குறைக்கப்பட்டது. ஆனால் ஆட்டோ கட்டணம் மட்டும் குறைக்கப்படவில்லை ஏறியது ஏறியதுதான். இப்போது குறைந்தபட்ச கட்டணமாக நாற்பது ரூபாய் என்று வாய்க்கு வந்ததை கட்டணமாகக் கேட்கிறார்கள். இந்த திடீர் கட்டண உயர்வால் ஆட்டோக்களில் தினமும் பயணிக்கும் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொது மக்களுக்கு சுமை ஏற்பட்டுவிடாமலும், அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் இப்பொழுதாவது ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த அரசு முன் வருமா? நமதூரில் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யலாமா? உடனடியாக ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். எல்லா ஆட்டோக்களுக்கும மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். இதை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமா?,
சற்று சிந்தியுங்கள் எதற்கெடுத்தாலும் ஆட்டோவில் செல்லும் நாம் ஏன் நடை போட முன் வருவதில்லை,
நடையின் சிறப்பை பற்றி என் தளத்தில் முன்பே ஒரு ஆக்கமாக பதிந்துள்ளேன் அதை காண்க :நடைப்பயிற்சி அவசியம் ஏன்? http://adiraithenral.blogspot.in/2011/01/blog-post.html
அதிரை தென்றல் (Irfan Cmp)
11 Responses So Far:
சற்று சிந்தியுங்கள் எதற்கெடுத்தாலும் ஆட்டோவில் செல்லும் நாம் ஏன் நடை போட முன் வருவதில்லை//
ithu ellorukkum poruntha vaaipillai irfan.. any way overall good article.. thanks..
நெருப்பு புடிச்சிவன் மாதிரி காசு கேட்குறவன குனிய வச்சி கும்மி அடிக்கணும்...எவனாவது சிக்கட்டும்..இருக்கு அவனுக்கு..
வெளிநாட்டு சம்பாத்தியம்தானே பணம் கொடுக்கபோகுதுன்னு சில ஆட்டோ ஓட்டுனர்கள் ரியாளையும்,தினாரையும்,டாலரையும் மனதில் வைத்து விலையை உயர்த்தி சொல்கின்றார்கள் போல.
ஒரு ரியாலுக்கு/தினாருக்கு குபுசு வாங்கி சாப்பிட்டு வயிற்றை நிரப்புபவர்கள் ஏராளம் என்று இட்டலிக்கு மூணு வகை சட்னி சாப்பிடுபவர்களுக்கு தெரிவதில்லை..
கண்டனத்திற்குரிய கட்டணங்களும் ஆட்டோ ஓட்டுனர்களும்!
விழிப்புணர்வூட்டும் நற்பதிவு சகோ.இர்பான்.
வீடுகள் பரந்த் விரிந்து எல்லை வரை சென்று விட்டது ஊருக்குள்ளேயே தூர தொலைவிலிருந்து வரும் பெண்டிர் முடிந்த வரை நடத்துதான் சொந்த பந்த வீடுகளுக்கு செல்கிறார்கள், சிறு குழந்தைகளை தூக்கிக் கொண்டு முன்புபோல் பாதுகாப்பாக தெரு ஓரங்களில் நடக்க முடியாத சூழல்.
ஒன்று பெருகியிருக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் எங்கிருந்து எப்படி வருகிறார்கள் என்று யூகிக்க முடியாத அளவுக்கு வேகமும் கண்மூடித்தனமான ஓட்டமும், அடுத்து குழந்தைகளை தெரு ஓரங்களில் குவிந்திருக்கும் குப்பைகளிலிருந்து பாதுகாத்து அழைத்துச் செல்வதில் சிரமம் (இவைகள் என் காதில் விழுந்தது).
இதனை தவிர்க்கவே ஆட்டோவை நாடுகின்றனர் தெருக்களிடையே பணிக்க இருந்தாலும் ஆட்டோக்களின் கொள்ளை கொடுமை !
இடைவெளி விட்டு எழுத வந்தாலும், இன்றைய Current issueஐ கையில் எடுத்திருப்பது சாதுரியம்!
நிச்சயமாக, நல்ல பயனுள்ள அலசல்! தங்களின் ஆதங்கம், அநியாய ஆட்டோக்காரர்களை அணைபோட்டு நிறுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
ஆனால், ஜனங்களுக்கு என்னவோ நடையின் அருமை வியாதி வந்தபிறகுதான் தெரிகிறது!
அவசியமான, அவசரமாக முடிவெடுக்கவேண்டிய விசயத்தைப்பற்றிய பதிவு
ஆட்டோகாரர்கள் லூட்டர்களாக இல்லாமல் நியாமாக வாங்க வேண்டும்...
இந்த பெட்ரோல் முடிஞ்சிபோச்சு என்பது ஒரு காமன் பிரச்சனை என்று நினைக்கின்றேன்...இரண்டு தடவை எனக்கு இதுபோல் நடந்தது..சமுதாயநலன் சுள்ளென்று வீசுகின்றது தென்றலின் இப்பதிவில் வாழ்த்துக்கள் நண்பரே
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய பிரச்சனை இது. அனைத்து முகல்லா கூட்டமைப்பு (AAMF)இதில் தலையிட்டு முறைப்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
பட்டுக்கோட்டை சவாரிக்கு ரூ.200/- உள்ளூர் சவாரிக்கு ரூ.15/- என நிர்னயம் செய்தால் அது நியாயமான கட்டனமாக அமையும்.
1 ஆடோக்களின் அட்டகாசம் ஊரில் பெருத்துபோச்சு
2 கூடுதல் காசு கொடுத்தும் நம்மை சில நேரங்களில் நடு ரோட்டில் நிறுத்திவிடுகின்றார்கள்
3 எந்த ஆட்டோவும் பெட்ரோல் போட்டு தயார் நிலையில் இருப்பதில்லை ஆளை எற்றியபின்புதான் பெட்ரோல் போடவே போகின்றார்கள்
ஊர்லெ ஒரு பழமொழி சொல்வார்கள் "நாசுவனுக்கு மீசையைக்கண்டால் கை பரபரக்குமாம்" அதுபோல் ஆட்டோவில் சவாரி ஏறி அமர்ந்ததும் தான் பெட்ரோல் டேங்குக்கு தாகம் எடுக்குமோ? (சடப்பா ஈக்கிம் அவந்தரைக்கு எங்கையாவது போகனும்ண்டாக்கா இவனுவோ நேரா பெட்ரோல் பேங்குலெ போயி நிப்பாட்டிட வேண்டியது)
"இவ்ளோவ் காசு அநியாயத்துக்கு வாங்கியும் பெரும்பான்மையான ஆட்டோக்காரர்கள் தான் ஓட்டும் ஆட்டோவை சொந்தமாக்கிக்கொள்ள முடியவில்லை. யாரோ ஒரு முதலாளியின் ஆட்டோவை நாள் வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகின்றனர். (பரக்கத் இல்லாமல் போய் விட்டது).
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் கவனம் செலுத்துவதோடு நமதூர் சேர்மன் இதுபோன்ற மக்களின் பொருளாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் செயல்களிலும் தலையிட்டு ஒரு கட்டுப்பாடு வைக்க வேண்டும்.
சில நியாயமாக ஓட்டக்கூடிய ஆட்டோக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்னையைப் பற்றிய தம்பி இர்ஃபானின் இக் கட்டுரை வரவேற்கத்தக்கது.
அதிரைத் தென்றலின் சமுதாய அக்கறைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அந்த ஆபத்துக் கட்டணத்தை நானும் உணர்ந்தேன்.
Post a Comment