Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தீதும் நன்றும் பிறர்தர வாரா! 41

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2014 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சென்னையிலிருந்து அதிரைக்கு, அதிரை அறிஞர் அஹ்மது காக்கா அவர்களுடனும் என் அன்பிற்கும் பிரியத்திற்கும் உரித்தான ஜமீல் காக்கா அவர்களுடனும் பயணிக்கக் அமைந்த சந்தர்ப்பத்தை ஓர் ஆக்கப்பூர்வமான வாய்ப்பாகவே நான் எடுத்துக் கொண்டேன். 

அப்பயணத்தில் இருவருடனான கலந்துரையாடலில் அவர்களுக்குச் சாதாரணமாகத் தோன்றும் பல விஷயங்களில் எனக்குப் பாடங்கள் இருந்ததை மறுக்க முடியாது.

அத்துடன், என் வாழ்நாளில் எத்தனையோ முறை சென்னை அதிரை பயணித்தபோதும் ஒரு நிமிடம்கூட தூங்கி வழியாமல் பயணித்ததும் அப்பயணம் ஒன்றுதான்.

அப்போது அஹ்மது காக்கா சொன்னார்கள், " 'கனவு மெய்ப்பட வேண்டும்' நல்லா எழுதியிருந்தாய். மற்றுமொரு தலைப்பு செய்யுள்களிருந்து தருகிறேன், எழுதுவாயா?" என்றார்கள். 

"முயற்சி செய்கிறேன் காக்கா" என்றேன். அந்தத் தலைப்புதான் இது. தேறினேனா இல்லையா என்று காக்காமார்கள்தான் சொல்ல வேண்டும். ஜஸ்ட் பாஸ் என்றால்கூட சந்தோஷம்தான்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீரும் என்றும் துயர்நீ முயன்றால்
தீயும் நீரும் எதிர்ப்பொருள் தோழா
தீண்டும் முன்னர் உணர்தல் அறிவாம்

தேளும் பாம்பும் வாழும் உலகில்
தேனும் பாலும் தேடும் மனிதா
தென்னை விதைக்கத் தேங்காய் விளையும்
தீங்கை நினைக்கத் தீதே வினையாம்

தீவும் நாவும் நீர்சூழ நடுவில்
தேவைக் கேற்ப ஈரம் நன்றாம்
தேக்கை யொத்த திண்ணம் நாடு
தேகம் போகம் கூடின், குறையே

தேரை ஈந்த பாரியைப் போல
தேடிச் செய்வாய்த் தேர்ந்த உதவி
தோழன் என்னும் எண்ணம் கொண்டால்
தேசம் போற்றும் நேசன் நீயே

தோல்வி வெற்றி வாழ்வில் சகஜம்
தோற்றது என்றும் சிந்தையில் நிற்க
தொய்ந்து ஓய்தல் சாவின் சாயல்
துடித்து எழுந்தால் விடியும் கிழக்கு

தொற்றும் நோயென மடமை அறிவாய்
கற்றுத் தேர்ந்தால் காலம் கைவசம்
பெற்று எடுத்தப் பிள்ளை சிறக்க
வற்றிப் போகா செல்வம் கல்வி

பெற்றவர் தேவை பிள்ளைநீ செய்க
மற்றவர் மறுப்பினும் பெற்றவன் பார்ப்பான்
உற்றவர் உறவினர் சுற்றம் அமைந்திட
அற்றவர் வயிற்றுக்கு ஆகாரம் தந்திடு

உன்னைச் செதுக்க உளியாய் உழைப்பு
உண்மை வடிக்க உலகே மயங்கும்
தன்னைக் காட்டி முழங்கிடத் தலைவா
தகுதி வளர்க்க முனைந்திடல் அறிவாம்

முற்பகல் விதைக்க பிற்பகல் விளையும்
முட்செடி வளர்க்க முட்களே முளைக்கும்
புன்னகை விதைத்து பூசல்கள் ஒழித்திடு
பொன்னகை யொப்ப மின்னும் வாழ்க்கை

கற்றைக் கற்றையாய் செல்வம் பாரம்
சற்று நொடியில் சோகம் நீங்கிட
ஒற்றை இறையின் இல்லம் புகுந்திடு
குற்றமோ குறையோ தீர்ப்பவன் அவனே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

41 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தோல்வி வெற்றி வாழ்வில் சகஜம்
தோற்றது என்றும் சிந்தையில் நிற்க
தொய்ந்து ஓய்தல் சாவின் சாயல்
துடித்து எழுந்தால் விடியும் கிழக்கு//

அதெப்படி உங்களுக்கு மட்டும் எழுத்து எண்ணங்களும் கடலை விட பெரிதாக ஆர்ப்பரிக்கிறது !?

இதோ கருவென்று இருளைக் காட்டினாலும் அங்கே பொருளுணரும் கவிதை பிறக்கிறதே !

அதெப்படி கவி'காக்கா' !?

தூண்டில் போட மூத்தோர் இருக்க வலைக்குள் சிக்கிய எங்களை எண்ணி எண்ணி கவிதையாய் வடிக்கிறீர்களே !

N. Fath huddeen said...

ஜோ... நீங்க பாஸ்!
ஆம், அன்றைக்கு ஷப்னம் மினி டவரில் சந்தித்த போது காக்கா தந்த கேள்வி பேப்பரை (-ஒரு வரி கவிதை தான் கேள்வி) காட்டி சொன்னீர்கள் - இதற்கு பதில் எழுதணும் என்று!

மாஷா அல்லாஹ்.

///முற்பகல் விதைக்க பிற்பகல் விளையும்
முட்செடி வளர்க்க முட்களே முளைக்கும்
புன்னகை விதைத்து பூசல்கள் ஒழித்திடு
பொன்னகை யொப்ப மின்னும் வாழ்க்கை///

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். நூற்றுக்கு நூறு தேர்ச்சி!காரணம் தேர்ந்த பயிற்சியும்,தேயாத முயற்ச்சியும்!அல்ஹம்துலில்லாஹ்!

sabeer.abushahruk said...

//கருவென்று
இருளைக் காட்டினாலும் அங்கே
பொருள் உணரும்
கவிதை பிறக்கிறதே !//

அபு இபுறாகீம்,

கருவொன்று
உருவாகும்
கருவறை
இருள்தானே?

இருளிலிருந்து
குழந்தையே பிறக்கும்போது
கவிதை பிறக்காதா?

பின்னணியாக
இருள் இல்லையெனில்
பொருட்களுக்கு உரு ஏது?

வெளிச்ச உளி செதுக்கும்வரை
எப்பொருளும் இருள்தான்!

விரும்பி வாசித்து கருத்திட்டமைக்கு நன்றியும் துஆவும்!

இப்னு அப்துல் ரஜாக் said...

//கற்றைக் கற்றையாய் செல்வம் பாரம்
சற்று நொடியில் சோகம் நீங்கிட
ஒற்றை இறையின் இல்லம் புகுந்திடு
குற்றமோ குறையோ தீர்ப்பவன் அவனே!//
அருமை பாஸ்
நான்கு வரியில்
விளக்கம் நன்கு
Expecting more ...

sabeer.abushahruk said...

//நீங்க பாஸ்!//

ஜோ (ஃபத்ஹுதீன்),

மிக்க நன்றி, ஓட்டுப்போட்டு உற்சாகப்படுத்தியதற்கு. (வாத்தியார் வந்து பாஸ் போட்டா தேவலாம்.)

தவிர,

புதுக்கல்லூரி ஜூனியரே, இயற்பியலில் என்னைத் தொடர்ந்தவரே, பைத்துல்மால் உருவாகக் கருவானவரே, விளம்பரமில்லாத சமூக சேவகரே ஃபத்ஹுதீன்,

உங்களை அதிரை நிருபர் சார்பாக வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் அறிவுத்தாகத்திற்கு இங்கு அருந்த விருந்து கிடைக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து இணைந்திருங்கள், ஜோ!

விரும்பி வாசித்துக் கருத்திட்டமைக்கு நன்றியும் துஆவும்!

N. Fath huddeen said...

///(வாத்தியார் வந்து பாஸ் போட்டா தேவலாம்.)///

நிச்சயம் வாத்தியார் வருவார், பாஸ் போடுவார்.
காக்கா வருவார், உம்மை காக்க வருவார்!

வாழ்த்துக்களும் துஆவும்.

sabeer.abushahruk said...

//அஸ்ஸலாமுஅலைக்கும்.
நூற்றுக்கு நூறு தேர்ச்சி -காரணம்
தேர்ந்த பயிற்சி
தேயாத முயற்சி! //

வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவுன்,

தமிழ் வாத்தியாரிடம் பாஸானதுபோல் உணர்ந்தாலும் தலைமை ஆசிரியர் என்ன சொல்வாறோ என்கிற அச்சம் நிலவுகிறது!

ஓட்டுப்போட்டு உற்சாகப்படுத்தியதற்கும் வாசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றியும் துஆவும்.

(கிரவுனுரை உண்டா அல்லது பிஸியா?)

crown said...

தீவும் நாவும் நீர்சூழ நடுவில்
தேவைக் கேற்ப ஈரம் நன்றாம்
தேக்கை யொத்த திண்ணம் நாடு
தேகம் போகம் கூடின், குறையே
-------------------------------------------------------------------------
'தீவும் நாவும் நீர்சூழ நடுவில்
தேவைக் கேற்ப ஈரம் நன்றாம்'
----------------அருமை!!!! இது போல் யோசிக்க தாவு'த்தீர்ந்துவிடும்.உங்களுக்கு இயல்பாய் வருவது!அல்ஹம்துலில்லாஹ்!
---------------------------------
தேக்கை யொத்த திண்ணம் நாடு
தேகம் போகம் கூடின், குறையே!
-----------------------------
மோகம் தரிகெட்டு வேகம் எடுத்தால் தேகம்,முடிவு சோகம்! என்பதை சொல்லாமல் சொல்லியவிதம் அருமை!

crown said...

தோல்வி வெற்றி வாழ்வில் சகஜம்
தோற்றது என்றும் சிந்தையில் நிற்க
தொய்ந்து ஓய்தல் சாவின் சாயல்
துடித்து எழுந்தால் விடியும் கிழக்கு
----------------------------------------------------------------------
உற்சாகமூட்டும் டானிக்!வார்தை ஜாலம் உங்கள் டெக்னிக்!

sabeer.abushahruk said...

//அருமை பாஸ்,//

தம்பி இப்னு அப்துர்ரஸாக்,

அருமை pass என்று எடுத்துக் கொள்கிறேனே, அப்போதுதான் வாத்தியாருக்கு நெருக்கடி கூடி அவர்களும் பாஸ் போட்டு விடுவார்கள்.

வாசித்துக் கருத்திட்ட உங்களுக்கு நன்றியும் துஆவும்!

//நான்கு வரியில்
விளக்கம் நன்கு //

நாலாயிரம் வரிகளேயாயினும் நாயனின் புகழ்பாடத் தலைப்பட்டால் தங்கு தடையின்றி எழுதிவிட முடியாதா!

crown said...

தொற்றும் நோயென மடமை அறிவாய்
கற்றுத் தேர்ந்தால் காலம் கைவசம்
பெற்று எடுத்தப் பிள்ளை சிறக்க
வற்றிப் போகா செல்வம் கல்வி
---------------------------------------------------------------
மடமை ஒரு தொற்றும் நோய் அது சார்ந்தவர்களையெல்லாம் பற்றும் நோய் அது அற்று போக செய்ய கற்றுத்தேறவேண்டும்! யென நாலடியில் சொல்லும் பாடம் வாழ்கைக்கு போடும் பாதை!

---------------------------------------------------------------------

crown said...

உன்னைச் செதுக்க உளியாய் உழைப்பு
உண்மை வடிக்க உலகே மயங்கும்
தன்னைக் காட்டி முழங்கிடத் தலைவா
தகுதி வளர்க்க முனைந்திடல் அறிவாம்
---------------------------------------------------------------
உழைப்பு,உண்மை இரு தகுதிகள் தான் தலைவானாக வாய்க்கும்!வாய்க்கும் உண்மை,உள்ளத்திலும் நேர்மை! உள்ளவனை உலகம் போற்றும்!
-----------------------------------------------------------------------------

sabeer.abushahruk said...

அதிரை நிருபர்,

இவை என்ன, கருத்துகளா விருத்தங்களுக்கான முகவுரைகளா!

கவியரங்கத்திற்கான மேகம் சூழ்கிறதா?

//கருவென்று
இருளைக் காட்டினாலும் அங்கே
பொருள் உணரும்
கவிதை பிறக்கிறதே //

-அபு இபு

----------------------

//காக்கா வருவார் -உம்மை
காக்க வருவார்! //

-ஜோ ஃபத்ஹுதீன்

---------//----------

//நூற்றுக்கு நூறு தேர்ச்சி -காரணம்
தேர்ந்த பயிற்சி
தேயாத முயற்சி //

-கிரவுன் தஸ்தகீர்
------//----//---//-----

//நான்கு வரியில்
விளக்கம் நன்கு//

-இப்னு அப்துர்ரஸாக்

----//--------//-----

மீதம், கிரவுனுரை முடியட்டும்!


crown said...

முற்பகல் விதைக்க பிற்பகல் விளையும்
முட்செடி வளர்க்க முட்களே முளைக்கும்
புன்னகை விதைத்து பூசல்கள் ஒழித்திடு
பொன்னகை யொப்ப மின்னும் வாழ்க்கை
------------------------------------------------------------------------
நல்லது செய்! நல்லதே விளையும்! நம்மை ஏவி தீமை தடு!கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்தையும் நல்லதுக்காய் செலவிடு ! இப்படி கவிஞர் எந்த கவிதை எழுதினாலும் விதைப்பது என்னவோ நண்மைதான்! அல்லாஹ் அதற்குறிய நற்கூலித்தருவானாக!ஆமீன்!
-------------------------------------------------------------------------------

crown said...

கற்றைக் கற்றையாய் செல்வம் பாரம்
சற்று நொடியில் சோகம் நீங்கிட
ஒற்றை இறையின் இல்லம் புகுந்திடு
குற்றமோ குறையோ தீர்ப்பவன் அவனே
---------------------------------------------------------------------------------


ஹைலைட்!இது வழிகாட்டும் லைட் ஹவுஸ்! இருள் நீக்கும் இறைஇல்லம்! உள்ளம் வெளிச்சம் பெற! உதவிபெற!அச்சம் மற! அச்சமுடன் அல்லாஹ்வை தொழு! பின் நிமிர்ந்து எழு!கிடைக்கும் வலு!
கவிஞரின் எந்த எழுத்தின் முடிவும்,கருத்தும் முடிவிலா இறைவன் அவனை பற்றி இருப்பதால்! இதனைப்பற்றி,படிக்கவும்,பற்றி நடக்கவும் ஆவல் தோன்றுகிறது வாழ்த்துக்கள்!( சாட்சா பாஸ் மார்க்குமட்டுமல்ல ஒரு பூக்கொத்தே தருவாங்க!)

sabeer.abushahruk said...

கிரவுனுரை வாசிப்பது ஒரு adictionஆகவே போய்விட்டது எனக்கு. அதனால்தான் நானே பலமுறை கேட்டு வாங்குகிறேன்.

வாசிக்க வாசிக்க கிரவுனுடன் பேசிக்கொண்டிருந்த திருப்தியுடன் நல்ல தமிழும்(ட்டெக்னிக் ட்டானிக் தவிர) கலையுணர்வுடன் கூடிய விமர்சனனும் என்னையும் எப்போதும் ஈர்ப்பதுண்டு.

சான்றுகள் கீழே:

மோகம் - தரிகெட்டு
வேகம் எடுத்தால்
தேகம் தன்முடிவு
சோகம்!

உற்சாக மூட்டும் டானிக்!
வார்தை ஜாலம் டெக்னிக்!

மடைமை
ஒரு தொற்றும் நோய் -அது சார்ந்தவர்களையெல்லாம்
பற்றும் நோய்

அது
அற்று போக செய்ய கற்றுத்தேறவேண்டும் -யென
நாலடியில் சொல்லும் பாடம் வாழ்கைக்கு போடும் பாதை!

உழைப்பு உண்மை
இரு தகுதிகள்தான்
தலைவானாக வாய்க்கும்!

வாய்க்கும் உண்மை
உள்ளத்திலும் நேர்மை
உள்ளவனை
உலகம் போற்றும்!





இருள் நீக்கும்
இறை இல்லம்
உள்ளம் வெளிச்சம் பெற!
உதவிபெற அச்சம் மற!

அச்சமுடன் அல்லாஹ்வை தொழு!
பின் நிமிர்ந்து எழு!
கிடைக்கும் வலு!


எழுத்தின் முடிவும் கருத்தும்
முடிவிலா இறைவனைப்
பற்றி இருப்பதால் -இதனைப்
பற்றி படிக்கவும்,
பற்றி நடக்கவும் மாந்தரே!

மிக்க நன்றியும் கடப்பாடும் கிரவுன்!

Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

முதலில் கை கொடுங்கள். பள்ளிக்கூடப் பாடங்களில் இடம்பெறத் தக்க தகுதி உடைய பாடல் இது என்பது யெனது தாழ்மையான கருத்து.

பிறையாய்த் திகழும் எம்பள்ளி
பிறைபோல் வளர உதவிடுவாய்
நிறைவான் சீதக்காதி பெயர்
நின்றே நிலைக்கும் நிறுவனத்தார்
குறையாதோங்க அருள் புரிவாய்
குறைகள் தீர்க்கும் கோமானே!

- என்று இறையருட்கவிமணி அப்துல் கபூர் சாஹிப் அவர்கள் எழுதிய பாடலை எனக்கு இந்தக் கவிதை நினைவூட்டுகிறது.

இந்தக் கவிதையை அதே ட்யூனில் தம்பி ஜபாருல்லாஹ் அவர்கள் உடைய குரலில் ஒரு இசைவடிவம் பெற்றதாக அமைக்க வேணுமென்று விரும்புகிறேன்.

இன்னொரு ஆசையும் உண்டு. தம்பி தாஜுதீன் ஊர் வரும்போது நான் என் குரலில் இதைப் பாடிப் பதிவு செய்ய வேணுமென்றும் ஆசைப்படுகிறேன்.
( நானும் பாடுவேனாக்கும் )

இவ்வளவும் நான் எழுதிய பிறகும் அறிஞர்கள் இதற்கு டபுள் 100 போடமாட்டர்களா என்ன?

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கவிதையை படிப்பது ஒரு மாதுளம் பழத்தை கையாலேயே உறித்து சாப்பிடுபவனின் மனதைப்போன்றது.அருமை.அதுசரி ஏன் உங்கள் கவிதையை குரலொலியுடன் சேர்த்து தந்தால் அருகில் இருப்பவர்களும் கேட்டு மகிழலாமே..ஏதும் செலவு வருமோ .....?

Unknown said...

பாட்டுக்கு மெட்டா? மெட்டுக்க் பாட்டா? இதில் எதுவானாலும் சாதிக்கத் தெரிந்தவன் போல

தலைப்புக்குக் கவியா? கவிக்குத் தலைப்பா? எதுவானாலும் எ(உ)ன்னால் ) - உங்களால் முடியும் என்று நிரூபித்திருக்கிறீர்கள். அதிரை எழுத்துக்களின் அடையாளம் விடுத்த வேண்டுகோள்(தலைப்பு) கவியாக வருவதெனில்....? ஹேட்ஸ் ஆஃப் சபீர் காக்கா..!!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Abusharuk,

The ten commandments inside தீதும் நன்றும் பிறர்தர வாரா poem have important keys to successful life. Simply beautiful poem brother. You are pass, first class with distinction. Keep your passion for poem up.

B. Ahamed Ameen from Dubai

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இதுவும் எதுவும் பிறர்தர வாரா நன்கு!

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் காக்கா,

தட்டிக் கொடுக்கிறது உங்கள் பாராட்டு.

//தம்பி ஜபாருல்லாஹ் அவர்கள் உடைய குரலில் ஒரு இசைவடிவம் பெற்றதாக அமைக்க வேணுமென்று விரும்புகிறேன். //

விருப்பம் அறிவிக்கப்பட்டு ஜாஃபரும் "இன்ஷா அல்லாஹ்" என்று பதில் தந்தாயிற்று.

நீங்களும் பாடுவீர்கள் என்பது புதுச்செய்தியாகவல்லவா இருக்கிறது!!!!

வாசித்து வாழ்த்திய தங்களுக்கு நன்றியும் துஆவும்!

(வாத்தியார் கடைசி பீரியட்லயாவது வருவஷலா?)

sabeer.abushahruk said...

//ஏதும் செலவு வருமோ .....?//

ஹாஹ்ஹா!

வ அலைக்குமுஸ்ஸலாம் ZAEISA,

ருசியான பாராட்டிற்காக அப்பாவும் பேரனும்... ஐ மீன் நன்றியும் துஆவும்.

செலவு ஏதும் வந்தால் கம்ப்பெனி பொறுப்பேற்காதா? எல்லா பவுண்ட்ஸ்களும் ருபீஸாக மாற்றப்பட்டுவிட்டதா?

sabeer.abushahruk said...

தம்பி ஜாஃபர்,

அஹ்மது காக்கா அவர்களுக்கு நீங்கள் அணிவிக்கும்

//அதிரை எழுத்துக்களின் அடையாளம்// என்னும் சால்வை அழகாகப் பொருந்துகிறது.

உங்கள் குரலைப் போலவே கருத்தும் இனிமை.

பாராட்டியமைக்காக என் நன்றியும் துஆவும்.

sabeer.abushahruk said...

Dear brother B.Ahamed Ameen,

waAlaikkumussalam varah...

//You are pass, first class with distinction. //

Thanks for evaluating this posting possitively and it is quite encouraging.

I still remember that short meeting at main road where and when you said that you were on an important subject and that would be ready shortly.

pls spare some time to complete and send to us, ' cause 'one line' of your caption is so interesting and important for the current time as well.

thanks once again for your comment and my dhuA for you.

sabeer.abushahruk said...

MHJ,

//இதுவும் எதுவும் பிறர்தர வாரா நன்கு!//

பொங்கும் இந்த ரசனையை அடக்கிவைத்துக்கொண்டு எங்கே இருக்கிறீர்கள்?

செந்தமிழ் பாராட்டிற்கு நன்றியும் துஆவும்.

Shameed said...

//ஜஸ்ட் பாஸ் என்றால்கூட சந்தோஷம்தான்//

ஜஸ்ட் பாசல்ல யூனிவர்சிட்டி பஸ்ட்

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் இப்ராஹீம் அன்சாரி காக்கா

நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள வரிகள் அமைந்த பாடலின் ஆரம்ப வரிகள் என்ன,, ? இது நாகூர் ஹனீபா பாடிய பாடலா?

Unknown said...

கவிதைக்கு உரமிட்ட
வார்த்தை நுணுணக்கம்

விளங்கியும் விளங்காததை
விளக்கி,இரசிக்க
வைப்பவன் தான் கவிஞன்.

மங்கள்யாண்; கூட
வார்த்தை கண்டுபிடிப்பில் தோல்வி
மனித வாழ்க்கை தேவை
அத்தனையும் பதிவில் உள்ளது
உங்கள் வழியில்
பிரதமருக்கு சொல்லுங்கள்
இனியாவது இந்தியா
வல்லரசாகட்டும்

சிறிய வார்த்தை பல
மைல் தூரத்திற்கு
உள்ளத்தை தோண்ட வைக்க
வேண்டாம் - நோயாளிகள்
ஜாக்கிரதை – என முன்னறிவிப்பு
வேண்டுகிறேன்.

ஒன்னு இந்தாயிருக்கு
இன்னொன்னு – அதான்இது
கவிதைக்கு கவிதை

சிறிய வார்த்தை,எதனை,எதுவரை
விளங்க வைக்கும்
குறைந்தது லியோனி பட்டிமன்றம்
சாலமன் பாப்பையா பொறுத்திருக்கவும்

மதிப்பெண்கள் போட
வேண்டாம் எல்லைகள்
வகுக்க வேண்டாம்

நாங்கள் போடும் மதிப்பெண்
உங்களை வரையறுத்து விடும்
குறிப்பிட்ட மதிப்பெண் முடியாது
இது revaluation சங்கதி

கட்டுரை எழுத நினைத்தை
என்னை comment
போகவைத்தற்கு வாழ்க

Ebrahim Ansari said...

தம்பி ஜாபர் அவர்களுக்கு வ அலைக்குமுஸ் சலாம்.

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லா என்று நாகூர் ஹனிபா தொடங்கிப் பாடுவதைக் கேட்டிருப்பீர்கள்.

அதைத்தொடர்ந்து

அல்லாஹ் உனக்கே புகழெல்லாம்
அரிதாம் நன்றி உனக்கேயாம்
சொல்லில் உயர்ந்த சலாத்துள் சலாம்
சுடரைப் பொழியும் நின் தூதர்
நல்லார் பெருமான் நபிகள் பால்
நமைக் கிழைஞர் தோழர்பால்
அல்லும் பகலும் உண்டாக
அருளைப் பொழுந்து காத்திடுவாய் - என்று இறையருட்கவிமணி மர்ஹூம் கா. அப்துல் கபூர் சாஹிப் அவர்கள் எழுதிய பாடல்தான் அது.

சந்தங்களை இசைத்துப் பாருங்கள். சபீர் அவர்களின் வரிகள் சரியாக வரும்.
நான் இசைத்துப் பார்த்தேன் சரியாக வருகிறது. உங்களுக்கு இன்னும் நன்றாக வரும்.

தம்பி சபீர்! கவனித்தீர்களா?

புதிய ஒருவர் அறிமுகமாக கவிதை போட்டு இருக்கிறார். அத்துடன் கட்டுரை எழுதுவதாகவும் சொல்லி இருக்கிறார். இது ரத்த சம்பந்தம்.
ஆம்! இன்ஷா அல்லாஹ் இந்தப் புதுமுகம் விரைவில் கட்டுரை எழுத இருக்கிறார்.

sabeer.abushahruk said...

ஹமீது,

கொஞ்சம் ஓவராத்தான் மார்க் போட்டுட்டியலோ?

பாராட்டிற்கு நன்றியும் துஆவும்!

sabeer.abushahruk said...

சகோ மஹ்பூப் அலி அவர்களுக்கு (காக்காவா தம்பியான்னு தெரியலையே),

விளங்கியும் விளங்காததை
விளக்கி,இரசிக்க
வைப்பவன் தான் கவிஞன்

உண்மை. தங்களின் கருத்திற்கு நன்றியும் துஆவும்.

தங்களைப்போன்ற கல்வியாளர்களுக்குச் சரியான இடம் அதிரை நிருபர். தங்களை அ.நி. சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்.

ஆனா ஈனா காக்கா,

விரைவில் ஆட்டத்தை ஆரம்பிக்கச் சொல்லுங்கள். ஆர்வம் கூடுகிறது.

இப்னு அப்துல் ரஜாக் said...

இறையருட்கவிமணி மர்ஹூம் கா. அப்துல் கபூர் சாஹிப் அவர்கள்அரபி மொழி இலக்கியம் பற்றி ஒரு அருமையான புத்தகம் எழுதியுள்ளார்கள்.அதை வெளிக் கொணர்ந்து எங்கள் பார்வைக்கு வைக்கும் படி அதிரை நிருபரை( இப்ராஹிம் அன்சாரி காக்கா,ஷபீர் காக்கா,அபூ இப்ராஹிம் காக்கா ) கேட்டுக் கொள்கிறேன்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நான் தம்பி என்பதைவீட,நீங்கள் காக்கா என்பது சரி
பாடப்பகுதி இல்லை
உச்ச மதிப்பெண் இல்லை
வினாக்கள் இல்லை_விடை
குறிப்பு இல்லை மதிப்பெண்
எப்படி,இது syllabus இல்
இல்லாத சரியான விடை
இலங்கை இராணுவம் எங்களை
சிறைபிடிக்கும்_என்ன அநியாயம்
வர்த்தைகளால் சிறைபிடிப்பு
தமிழின தலைவர்களே
எச்சரியுங்கள்_ இந்த வலையதளத்தை
இங்குதமிழ் பூக்கள் பறிக்கப்படுகின்றன


crown said...

தமிழின தலைவர்களே
எச்சரியுங்கள்_ இந்த வலையதளத்தை
இங்குதமிழ் பூக்கள் பறிக்கப்படுகின்றன
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ.மக"பூ"ப்பு அலி வாத்தியார் சொன்னபடி இதுதான் நடக்கிறது!அதுவும் விரைவில் இங்கே மலர்கள் மறுபடியும் பூக்க இருப்பதாக கேள்விப்பட்டதில் மகிழ்சியில் மனம் துள்ளுகிறது!இ.அ.காக்கா தம்பிஉடையான் படைக்கு அஞ்சான்! நீங்களும் வழக்கம் போல் ஜமாய்யுங்கள்!

Riyaz Ahamed said...

சலாம் சின்ன வயசில் ஸ்கூலில் படித்த செய்யுல் எல்லாம் ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...

Unknown said...

வாழ்த்துகின்றேன்.

Yasir said...

ஜீடெக்ஸ் பிசி காக்கா....மாஷா அல்லாஹ் உங்கள் கவிதை மாலையில் இக்கவிதை வைரம்....துவாக்களும் வாழ்த்துக்களும்

sabeer.abushahruk said...

அஹ்மது காக்கா,

வாழ்த்திற்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

மேலும் வாசித்துக் கருத்திட்ட யாசிருக்கும் ரியாஸுக்கும் நன்றியும் துஆவும்.

வஸ்ஸலாம்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு