நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தொடு... துலங்கும் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், பிப்ரவரி 04, 2016 | , , ,

எட்டிப் பிடித்துவிடும் தூரத்தில்தான்
இருந்தது
என்றாலும்
துரத்திப்பிடிக்கும் தூரம் செல்லும்வரை
விட்டுப்பிடித்தே
வாழ்ந்து பழகுகிறோம்

சுட்டுவிடும் என்றறிந்திருந்தும்
கட்டுப்படுத்திக் கொள்ளாமலே
தொட்டுவிட்டுப்
பின்
பட்டுத் தெளிகிறோம்

கற்றறிந்தோ பட்டறிந்தோ
பெற்றுவந்த புத்தியெல்லாம்
இற்றுப்போக இருந்துவிட்டு
மற்றொரு நாளையும்
வெற்றொரு நாளாக்குகிறோம்

முந்திச்செல்லும் முயற்சியைச்
சிந்தித்தும் பாராமல்
உந்தித் தள்ளுவார் எதிர்நோக்கி
பிந்தியே நிற்கிறோம்

கவனத்தில் கொள்க:

காற்றையும் கனவுகளையும் தவிர
கைப்பிடியளவு மண்ணோ
கவளம் உணவோ
கையுழைப்பின்றி கிடைக்காது

நகர்ந்து செல்லாவிடில்
நதியோ மனிதனோ
தேங்கியோ தூங்கியோ
தகர்ந்து போய்விடுவது சத்தியம்

சோம்பிய உடலும் சுருங்கிய எண்ணமும்
சோலியின்றி கிடந்தால்
நோய்ச் சேரும், நேர்ப்படாது
வாய்ச் சோறும் வசப்படாது

முயல்பவன் தன்னின்
செயல்களுக்கு மட்டுமே
இலக்கை நோக்கி
இழுத்துச் செல்லும் பலமுண்டு
முடங்கிக் காத்திருப்பவன்
முயற்சி யின்மையால்
முவ்வெட்டு ஆண்டுகளுக்குள்
முதுமை எய்திடுவான்

யாக்கையின் வேட்கையில்
வாழ்க்கையைத் தொலைத்தால்
மேற்கையும் கிழக்கையும்
மிஞ்சிய திசைகளையும்
மின்னலற்ற இருளே நிறைக்கும்

செய்ய ஒன்றும் இல்லையெனில்
சிந்திக்க நிறைய உண்டு;
சிந்திக்கக்கூடச் சோம்பலா?
செவிவழிச் செய்திகளில்
சம்பாத்திய வழிகள் கேள்

எழுந்து பார்
எட்டிவிடலாம்

நடந்து பார்
அடைந்து விடலாம்

விதைத்துப் பார்
விளையும்

நகர்த்திப் பார்
நகரும்

தொடு...
துலங்கும் !

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

13 Responses So Far:

crown சொன்னது…

எட்டிப் பிடித்துவிடும் தூரத்தில்தான்
இருந்தது
என்றாலும்
துரத்திப்பிடிக்கும் தூரம் செல்லும்வரை
விட்டுப்பிடித்தே
வாழ்ந்து பழகுகிறோம்
-----------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.காரணம் சோம்பல்!இந்த பல் கடித்தால் எளிதில் விடாது கவ்விக்கொ(ல்)ள்ளும்!

crown சொன்னது…

சுட்டுவிடும் என்றறிந்திருந்தும்
கட்டுப்படுத்திக் கொள்ளாமலே
தொட்டுவிட்டுப்
பின்
பட்டுத் தெளிகிறோம்
----------------------
ஒருவித செறுக்கு! சருக்கியபின் தான் தெளியும்! சிலருக்கு சறுக்கியபின்னும் தெளியாது!

crown சொன்னது…

கற்றறிந்தோ பட்டறிந்தோ
பெற்றுவந்த புத்தியெல்லாம்
இற்றுப்போக இருந்துவிட்டு
மற்றொரு நாளையும்
வெற்றொரு நாளாக்குகிறோம்
------------------------------
இது ஒருவகை மமதை! மனதில் திடமாக இது தவறு!சரி யென தெரிந்தும் ஏற்று கொள்ளாமல் தோற்று போகும் தொற்று நோய் இது!

crown சொன்னது…

முந்திச்செல்லும் முயற்சியைச்
சிந்தித்தும் பாராமல்
உந்தித் தள்ளுவார் எதிர்நோக்கி
பிந்தியே நிற்கிறோம்
----------------------
இதை சிந்திக்கும் நிலை வராவிட்டால் சந்திக்கு வரும் சந்ததியும்!

crown சொன்னது…

காற்றையும் கனவுகளையும் தவிர
கைப்பிடியளவு மண்ணோ
கவளம் உணவோ
கையுழைப்பின்றி கிடைக்காது
---------------------------------
எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை இது! ஒருக்கால் இப்படி ஒரு நிலை வந்தால் மூக்கால் அழுதாலும், நாக்கால் நாம் ஒருவார்தையும் சொல்ல முயன்றாலும் அது வெல்லாது!இருக்காலும் ஒத்துழைத்து நடை போடவே கடின பாதை கடக்கமுடியும்!

crown சொன்னது…

நகர்ந்து செல்லாவிடில்
நதியோ மனிதனோ
தேங்கியோ தூங்கியோ
தகர்ந்து போய்விடுவது சத்தியம்
--------------------------------
(கணினியில் ஏற்பட்ட சில கோளாறு சரிசெய்யபட்ட பின் தொடர்கிறேன்).சரியாக சொன்னீர் நகராத நதியின் கதி கொசுக்கள் தேங்கும் குட்டை! மனிதனோ வெறும் கட்டை!யாரும் செய்யார் சட்டை!

crown சொன்னது…


சோம்பிய உடலும் சுருங்கிய எண்ணமும்
சோலியின்றி கிடந்தால்
நோய்ச் சேரும், நேர்ப்படாது
வாய்ச் சோறும் வசப்படாது
--------------------------------
உண்மை,உண்மை,உண்மை!கவிதை செல்லும் இடமெல்லாம் கோலோச்சுகிறது!

crown சொன்னது…

முயல்பவன் தன்னின்
செயல்களுக்கு மட்டுமே
இலக்கை நோக்கி
இழுத்துச் செல்லும் பலமுண்டு
முடங்கிக் காத்திருப்பவன்
முயற்சி யின்மையால்
முவ்வெட்டு ஆண்டுகளுக்குள்
முதுமை எய்திடுவான்
---------------------------
கல்வெட்டில் பொறிக்கவேண்டிய வைர வரிகள்!

crown சொன்னது…

யாக்கையின் வேட்கையில்
வாழ்க்கையைத் தொலைத்தால்
மேற்கையும் கிழக்கையும்
மிஞ்சிய திசைகளையும்
மின்னலற்ற இருளே நிறைக்கும்
--------------------------------------
வார்தைக்கு வார்தை மின்னலடிக்குது!அடங்கி அழுக்கான மனங்களை வெளுத்து கட்டுது!அருமை! கவிஞரே வாழ்த்துக்கள்!

crown சொன்னது…

எழுந்து பார்
எட்டிவிடலாம்

நடந்து பார்
அடைந்து விடலாம்

விதைத்துப் பார்
விளையும்

நகர்த்திப் பார்
நகரும்

தொடு...
துலங்கும் !
-------------------------------------
அருமை!அருமை! உழைப்புக்கு உந்துதல் தரும் உற்சாக பானம் இந்த கவிதை வரிகள்! நன்றி கவிஞரே!பாராட்ட வார்தை இல்லை இ.அ.காக்காவை எதிர்பார்க்கிறேன்!

அதிரை.மெய்சா சொன்னது…

தொடு துலங்கும்
துலங்கிற்று வரிக்கு வரி
உன் கவி மொழியில்

தன்னம்பிக்கையை தாரைதாரையாய் தந்துள்ளாய் நண்பா அருமை வாழ்த்துக்கள்.

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahruk,

A great poem for encouraging to act.!!!

Action is one of the characteristics living things.
Thinking and acting is giftedness of human begins.

Lets act to reach excellence.!!!

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk சொன்னது…

வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன் / B. Ahmed Ameen,

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

(ஓரிரு நாட்கள் ஊரில் பிஸி)

மெய்சா,
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+