Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கற்கை நன்றே! - National Education Day 11-November... 27

அதிரைநிருபர் பதிப்பகம் | November 11, 2016 | , , , , ,

கைநாட்டுக் காலங்கள்
கடந்து போகட்டும் - குறுகிக்
கைகட்டும் கோலங்கள்
கலைந்து போகட்டும்

கண்கட்டும் வித்தைகளைக்
களைந் தெடுக்கவே - கல்வி
கலைகற்று உலகில்
கிளர்ந்து எழட்டும்

கல்லாதோர் கூடி
கைப்பற்றிய நாட்டில் - நன்கு
கற்றுத் தேர்ந்தோர்
கைகள் உயரட்டும்

அளவுகள் விளங்காத
அறியாமை யாலேயே - காணி
களவுகள் போனது
கவனத்தில் இருக்கட்டும்

சட்டதிட்டம் எதிலும்
பட்டம் பெறாததால்- இன்று
கிட்டத்தட்ட சமூகம்
கெட்டதுவும் போதும்

பாமர சனமென
பாராமுகம் காட்டும் - நம்
பாராளு மன்றத்தினருக்குப்
பயந்ததுவும் போதும்

அறிவினில் சிறக்கவும்
அறிவியல் விளங்கவும் - நாம்
கல்வியின் மூலம்தான்
களம் காண வேண்டும்

வாசிக்கக் கற்பதுவே
வசிப்பதின் அர்த்தம் - இதை
வசியச் செய்வினைபோல்
வாழ்வினில் காண்போம்

கொடுக்கக் கொடுக்க
குறையாச் செல்வம் - கல்வி
எடுக்க எடுக்க
என்றும் நிலைக்கும்

பிச்சை எடுத்தேனும்
பயிலச் சொல்வர் - மூச்சை
விட்டுக் கொடுத்தேனும்
கற்கை நன்றே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

27 Responses So Far:

Ebrahim Ansari said...


//பிச்சை எடுத்தேனும்
பயிலச் சொல்வர் - மூச்சை
விட்டுக் கொடுத்தேனும்
கற்கை நன்றே!//

========================================================
பொருத்தமான நாளில் பொருத்தமான கவிதை. இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினமான தேசிய கல்வி தினத்தில் . பாராட்டுக்கள்.

புரியும் வகையில் புறநானூறு, தம்பியின் கையால் தரப்படுத்தப்பட்டு தரப்பட்டிருக்கிறது.

===========================================================

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,

===============================================================

இந்தப் பாடலில் இரு குறிப்புகளை நாம் கவனிக்க வேண்டும்.

ஒன்று -

//பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; //= - தாயின் மனம் கூட , படித்த சிறப்பு மிக்க மகனை அதிகமாக அரவணைப்பாள்.

இரண்டு

//வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,// = புறநானூறு கூட மனுநீதியை சுட்டிக் காட்டுகிறது.

Ebrahim Ansari said...

இந்திய சுதந்திற்கும் சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை செம்மை செய்வதற்கும் நேருவோடு தோளோடு தோள் நின்று பாடுபட்டவர்கள் பலர்.
அவர்களில் முஸ்லிம்களுக்கும் முக்கியமான பங்கு உண்டு.
அந்த முஸ்லிம்களை காங்கிரஸ் கட்சிக்காரர்கள்தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.
இந்திய முஸ்லிம்கள் ஜின்னாவையும் காயிதே மில்லத்தையும் கொண்டாடுவதோடு நிறுத்திக் கொண்டார்கள்.
மிகச் சிறந்த கல்விமானாகவும் அறிவு ஜீவியாகவும் வாழ்ந்துகாட்டிய மவ்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைப் பற்றி இளைய முஸ்லிம் தலைமுறைக்குத் தெரியாமலே போய் விட்டது.
வயதான சமுதாயத்திற்கு தெரியுமா என்று கேட்டு விடாதீர்கள்.
அவர்களுக்கும் தெரியாது...
கொஞ்சம் பேரைத் தவிர.
முஸ்லிம் தலைவர்களும் அவர்களைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளவில்லை...காரணம் அவர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த முஸ்லிம் என்பதால் இருக்கலாம்.


crown said...

கைநாட்டுக் காலங்கள்
கடந்து போகட்டும் -
-----------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.கை நாட்டுக் காலங்கள் கால் கடந்து போகட்டும்.

crown said...

குறுகிக்
கைகட்டும் கோலங்கள்
கலைந்து போகட்டும்
-------------------------------------------------
சிந்தனைச் சொல்" இங்கே கம்பீரமாக கைகட்டி இருக்கு!கை தட்டி வரவேற்க வேண்டிய சிந்தனை!

crown said...

கண்கட்டும் வித்தைகளைக்
களைந் தெடுக்கவே - கல்வி
கலைகற்று உலகில்
கிளர்ந்து எழட்டும்
---------------------------------------
அறிவுக்கண் திறக்கும் அற்புத சாவி இந்த கல்வி!
களைந்தெடுக்க,கலைகற்று என மொழியின் நடை நளினமாக உள்ளது!.

crown said...

கல்லாதோர் கூடி
கைப்பற்றிய நாட்டில் - நன்கு
கற்றுத் தேர்ந்தோர்
கைகள் உயரட்டும்
-----------------------------------------------
கல்வெட்டில் பதிந்து மனதில் பதிக்கவைத்து பின்பற்றவேண்டிய அறிவுரை!

crown said...

அளவுகள் விளங்காத
அறியாமை யாலேயே - காணி
களவுகள் போனது
கவனத்தில் இருக்கட்டும்
--------------------------------------------------------
காலத்தின் கட்டாயமாக அமைந்த எச்சரிக்கை!விளை நிலங்களுக்கு ஏற்படும் வினையை 'கையகப்படுத்தும் களவை சுட்டிக்காட்டும்படி அமைந்திருக்கு. நன்றி!

crown said...

சட்டதிட்டம் எதிலும்
பட்டம் பெறாததால்- இன்று
கிட்டத்தட்ட சமூகம்
கெட்டதுவும் போதும்
----------------------------------------------
இதை பிரதி எடுத்து சட்டம் போட்டு வீட்டில் மாட்டி வைக்க வேண்டிய அறிவுரை! .இனியேனும் இதுபோல் நடவாது இருக்க நினைவூட்டல்.

crown said...

பாமர சனமென
பாராமுகம் காட்டும் - நம்
பாராளு மன்றத்தினருக்குப்
பயந்ததுவும் போதும்,போதும்,போதும்,போதும்.....இனி ஒரு இழினிலை வேண்டாம் எப்போதும்.

crown said...

வாசிக்கக் கற்பதுவே
வசிப்பதின் அர்த்தம் - இதை
வசியச் செய்வினைபோல்
வாழ்வினில் காண்போம்
---------------------------------------------------
இப்படி ஒரு செய்வினை இருந்தால் தான் செயல்பாட்டில் வரும்! இல்லை என்றால் வாழ்வில் நோய்வினை தரும் அறியாமை வினை இது!

crown said...

கொடுக்கக் கொடுக்க
குறையாச் செல்வம் - கல்வி
எடுக்க எடுக்க
என்றும் நிலைக்கும்
--------------------------------------------------------------
நிதர்சன உண்மை,'தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

Shameed said...

இப்படி வரிக்கு வரி வரிந்துக்கட்டிக்கொண்டு விளக்கம் கொடுத்துவிட்டால் நாங்களெல்லாம் என்ன செய்வது crown

crown said...

பிச்சை எடுத்தேனும்
பயிலச் சொல்வர் - மூச்சை
விட்டுக் கொடுத்தேனும்
கற்கை நன்றே!
--------------------------------------
உச்ச எச்சரிக்கை! வரும் மிச்ச மீதி எச்சத்துக்காவது(வருங்கால ,சந்ததி) நச்'சென்று நன்மை பயக்கும் பூச்சென்று! நன்று!வாழ்துக்கள் கவியரசே!

crown said...

இப்படி வரிக்கு வரி வரிந்துக்கட்டிக்கொண்டு விளக்கம் கொடுத்துவிட்டால் நாங்களெல்லாம் என்ன செய்வது crown
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமுலைக்கும். நலமா? என் சிற்றறிவிற்கு எட்டியதை செய்கிறேன். நீங்கள் எல்லாம் வானம் நோக்கிய அறிவு!மிகப் பெரியது! நான் அன்னார்ந்து மட்டும் தான் பார்க்க முடியும்.

crown said...

பொருத்தமான நாளில் பொருத்தமான கவிதை. இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மிகச் சிறந்த கல்விமானாகவும் அறிவு ஜீவியாகவும் வாழ்ந்துகாட்டிய மவ்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைப் பற்றி இளைய முஸ்லிம் தலைமுறைக்குத் தெரியாமலே போய் விட்டது.
வயதான சமுதாயத்திற்கு தெரியுமா என்று கேட்டு விடாதீர்கள்.
அவர்களுக்கும் தெரியாது...
கொஞ்சம் பேரைத் தவிர.
முஸ்லிம் தலைவர்களும் அவர்களைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளவில்லை...காரணம் அவர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த முஸ்லிம் என்பதால் இருக்கலாம். அவர்களின் பிறந்த தினமான தேசிய கல்வி தினத்தில் . பாராட்டுக்கள். மிகச் சிறந்த கல்விமானாகவும் அறிவு ஜீவியாகவும் வாழ்ந்துகாட்டிய மவ்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைப் பற்றி இளைய முஸ்லிம் தலைமுறைக்குத் தெரியாமலே போய் விட்டது.
வயதான சமுதாயத்திற்கு தெரியுமா என்று கேட்டு விடாதீர்கள்.
அவர்களுக்கும் தெரியாது...
கொஞ்சம் பேரைத் தவிர.
முஸ்லிம் தலைவர்களும் அவர்களைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளவில்லை...காரணம் அவர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த முஸ்லிம் என்பதால் இருக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுலைக்கும்.எனக்கும் அந்த ஆதாங்கம் இருக்கு! விஞ்ஞானி கலாம் நல்லவராக இருந்திருக்கலாம்!ஆனால் மிகச் சிறந்த கல்விமானாகவும் அறிவு ஜீவியாகவும் வாழ்ந்துகாட்டிய மவ்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைப் பற்றி நம் சமூகம் அறியாமல் போக அன்று இதுபோல் கணினி காலம் இல்லை என்பதும் ஒருகாரணம். எப்பொழுதும் நான் போற்றும் மேதை இ.அ.காக்கா(தகவல் கலஞ்சியம்) நன்றி!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

பதிவிற்கு அணி சேர்க்கும் செய்யுளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

கல்வியறிவு இல்லாததால் கடல்கடந்து சென்றும் சொர்ப்பமாகவே பொருள் ஈட்டும் எம் சமூகத்தவரை எண்ணிப்பார்த்தால் நெஞ்சு பொறுக்குதில்லை.

என்றைக்கு, " நாந்தான் படிக்கல. நம்ம பிள்ளையாவது படிப்பான்னு பார்த்தால்..." என்னும் புலம்பல் ஓயுமோ அன்றைக்குத்தான் விடியும்.

N. Fath huddeen said...

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-10/article7860827.ece?homepage=true&relartwiz=true

இன்று இவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.
இளம் தலைமுறைக்கும் கொஞ்சம் எத்தி வைப்பது நல்லது.

அவர் தான் அல்லாமா இக்பால்.

Ebrahim Ansari said...

கவிக் குயில்கள் தம்பிகள் சபீர் & கிரவுன்

வ அலைக்குமுஸ் சலாம்.

அதிரை.மெய்சா said...

கற்கை நன்றே

கல்வியறிவில்
மேன்மை பெறட்டும்
காரிருள் நீங்கி
கண்கள் திறந்திடட்டும்

சொல்லில் தூய்மை
இருந்திடட்டும்
சுகபோக வாழ்வு
வாழ்ந்திடட்டும்

ஏட்டை ஒழுங்காய்
படித்திடட்டும்
ஏகபோக சிந்தனை
வளர்ந்திடட்டும்

கல்வியை நன்றாய்
கற்றறிவோர்
காலம் சிறந்து
வாழ்ந்திடுவர்

Ebrahim Ansari said...

கல்வி தினமா? கவிதை தினமா?

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

//கை நாட்டுக் காலங்கள்
கால் கடந்து போகட்டும்.//

என்று துவங்கும் மொழி விளையாட்டு...

//செய்வினை இருந்தால் தான் செயல்பாட்டில் வரும்!//

என்று இலக்கணத்திலும் புகுந்து விளையாடுவது தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கத் தோன்றுகிறது.

பதிவை அலங்கரித்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

sabeer.abushahruk said...

ஹமீது / ஜோ,

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்

sabeer.abushahruk said...

//காரிருள் நீங்கி
கண்கள் திறந்திடட்டும்//

மெய்சா,

கல்வி விழிப்புணர்விற்காக மேலும் மேலும் எழுதப்பட, பேசப்பட, பரப்பப்பட வேண்டும்.

நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஞாபகப் படுத்தினேன்...!

`கனவு மெய்ப்பட வேண்டும்` தந்தவங்க கிட்டே....

Yasir said...

கவிஞரின் கவிதை `படிக்க வைக்க வேண்டும்` நம் பிள்ளைகளை என்ற விதையை ஒவ்வொருவரின் மனதிலும் விதைக்கின்றது

sheikdawoodmohamedfarook said...

இந்தியாவின் இன்னொரு ஜனாதிபதியாக ஒருதமிழ் முஸ்லிம் நம் பிள்ளைகளில் ஒருவர் வரவேண்டுமென்று அவர்களை கற்கவைப்போம்.

Unknown said...

Dear brother Mr. Abushahruk,

Very nice and useful poem about education.

Jazakkallah khair,

B. Ahamed Ameen

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு