நொங்கு வண்டியிலே....


நம்மூரில் வறண்ட கோடை காலத்தை வரவேற்க பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் சுற்று வட்டார கிராமப்புறங்களில் தக்க பருவத்தில் வெட்டப்பட்ட நுங்குகள் குலைகுலையாக கொண்டு வந்து ஊரின் முக்கிய முச்சந்திகளில் இளம் பனை ஓலையுடன் பவ்வியமாய் வந்திறங்கும்.

தலை சீவப்பட்ட இளம் நுங்கில் கைப்பெருவிரல் கடப்பாறை போல் உள் சென்று நுங்கை வெளிக்கொண்டு வந்து வாயிற்குள் இலகுவாக உட்செலுத்தும். அப்பொழுது பீறிட்டு அடிக்கும் நுங்கின் நீர் முகம், சட்டையை வேதனை ஏதுமின்றி நன்கு பதம் பார்க்கும். (ஒன் மேன் சோ அடிக்கும் உங்களுக்கு அதுவும் ஆசைக்கு ஸ்ப்ரே செய்யும் ஊட்லெ போயி நல்லா சட்டையெ கழுவிக்கிடுங்க.....இல்லாட்டி கரைபுடிச்சிடும்.....)

சீவப்பட்ட நுங்கின் கண் போன்ற இளஞ்சுளைகளை பனை ஓலையில் வாங்கி வந்து துவர்க்கும் அதன் வெண் தோலை சேதாரம் ஏதுமின்றி அகற்றி பாத்திரத்தில் இட்டு தேவையான அளவு பசும்பால் ஊற்றி அதற்கு சுவை கூட்ட பன்னீரும் கொஞ்சம் இட்டு, இனிப்பு சுவை கூட்ட சீனியும் கொஞ்சம் சேர்த்து அதற்கு குளிரூட்டி நல்ல உச்சி வெயில் வரும் சமயம் (உச்சி உரும நேரம்) ஒரு கிளாஸ் பருகினால் உடலுடன் உள்ளமும் குளிர்ச்சியடையும். (கரண்டு போனாலும் வந்த தூக்கம் கலையாது....அப்படி ஒரு சுகம் பருகியதும்)

நல்ல இளம் நுங்காக பார்த்து வாங்க வேண்டும். முற்றிய கடுக்காயை வாங்கி சாப்பிட்டு விட்டால் பிறகு வயிறு கடுக்க ஆரம்பித்து விடும். பிறகு காலைக்கடனை செலுத்த வேண்டிய இடத்திற்கு கண்ட நேரத்திலும் செல்ல வேண்டி வரும்.


ரசாயன பொருட்கள் கலந்த செயற்கை குளிர்பானங்களான பெப்சி, கொக்ககோலா, சவன்அப் போல் பருகும் சமயம் இதமான சூழலை தந்து பிறகு பக்க விளைவுகள் (கேன்சர், சிறுநீரக, இதயக்கோளாறுகள்) ஏராளம் தராத இயற்கையாக பருவ மாற்றங்களுக்கு ஏற்ப இறைவன் மனித குலத்திற்கு மருத்துவ குணங்கள் அடங்கிய காய்கறி, பழவர்க்கங்கள் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் மாறுபட்டு நமக்கு தடையின்றி அளித்துக்கொண்டிருக்கிறான். (எல்லா மரங்களும் மக்கள் பெருக்கத்தைக்காரணம் காட்டி ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வெட்டப்பட்டு மெல்லமெல்ல அழிக்கப்பட்டு வருவதால் இனி வரும் காலங்களில் மாம்பழம், பலாப்பழம், நுங்கு திண்ண கூட விமானம் ஏறி அமேஜான் காட்டிற்குத்தான் செல்ல வேண்டும்)

பனை மரத்தில் நன்கு முற்றிய நுங்குகள் பனம் பழமாக ஆகி அதை நம் மக்கள் வாங்கி அடுப்பில் சுட்டு பனம்பழமாக சாப்பிடுவர். (காக்கை உக்காந்தாலும் உக்காராட்டியும் நேரம் வந்துடுச்சிண்டா பனம்பழம் ஆட்டோமேட்டிக்கா கீழே விழுந்துடும். உடனே வேணும்டா மரத்துலெ ஏறித்தான் ஆக வேண்டும்)

பனை மரத்தின் இளம் பாளைகளை சீவி அதிலிருந்து வடியும் சுனை நீர் தான் பதநீர் என்றழைக்கப்படுகிறது. அதில் கொஞ்சம் சுண்ணாம்பிட்டு பானையில் கிராமப்புறங்களிலிருந்து கொண்டு வந்து நம்மூரில் விற்பர். அதுவும் உடலின் உஷ்ணம் போக்கும் நறுமணம் வீசும் நல்ல இயற்கை பானம். (இப்போ எங்கே கெடக்கிது பதநி? இனி வரும் காலங்களில் பெரிய சூப்பர் மார்க்கட்டில் டின்களில் அடைத்தாவது பதநி கிடைக்குமா? என்று தெரியவில்லை. பதநி எடுத்த ஆட்களெல்லாம் இன்று பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் எப்படி கிடைக்கும்?)

பிறகு பனங்கொட்டைகளை தரையில் ஊன்றி அதிலிருந்து வரும் வேர்களே தக்க சமயத்தில் பிடுங்கப்பட்டு நமக்கு பனங்கிழங்காக விற்கப்படுகிறது. அதை வாங்கி வெண்ணீரில் அவித்து தோல் நீக்கி (சம்சாப்பையில்) சுரண்டி அத்துடன் கொஞ்சம் தேங்காய் துருவி போட்டு இனிப்புக்கு சீனியும் சேர்த்துக்கொண்டால் நல்ல கமகமக்கும் இனிப்பு உணவாக அது மாறிவிடுகிறது. (இதன் சுவையை மறக்க முடியாத, தவிர்க்க முடியாத நம் மக்கள் எத்தனையோ பேர் இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் மற்றும் அரபு நாடுகள் போன்ற உலகின் எந்த பிரதேசத்தில் இருந்த போதிலும் பருவமறிந்து ஊரிலிருந்து வரும் ஆட்கள் மூலம் தருவித்து அதை முறையே உண்டு ஊரிலிருக்கும் உணர்வை அங்கேயும் பெற்றுக்கொள்கின்றனர். முன்னாடி எல்லாம் ஊரிலிருந்து பனியான் சுட்டு வந்தது. அதை திண்டு திண்டு சலித்து விட்டது. எனவே எங்கிருந்தாலும் பருவ கால இயற்கை உணவுகளை விரும்பி உண்ணத்தொடங்கி விட்டனர் மக்கள்).

எல்லாம் முடிந்து இறுதியில் சிறுவர்கள் பக்கம் வருவோம். முக்கண்கள் தோண்டப்பட்ட இரண்டு நுங்குகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு இன்ச் தடிமனுள்ள ஒரு அடி கம்பு ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். கம்பின் இரு நுனிகளையும் கிட்டிக்கம்பு போல் சீவிக்கொள்ளுங்கள். பிறகு இரண்டு நுங்கின் மையப்பகுதியில் சீவிய கம்பின் இரு முனைகளையும் ஒரு முனைக்கு ஒரு நுங்கின் மையப்பகுதி என சரிசமமாக செருகிக்கொள்ளுங்கள். பிறகு வீட்டின் கொல்லையில் உள்ள முருங்க மரத்தில் ஏறி நுனியில் அட்டபில் கவை போன்று இரண்டு, மூன்று அடிகள் உள்ள கம்பை உடைத்துக்கொள்ளுங்கள். பிறகு நொங்கு வண்டி ரெடி. ஒடித்த கம்பின் இரு பிளவாக உள்ள பகுதியை நொங்கு வண்டியின் மையப்பகுதியில் வைத்து நகர்த்துங்கள். மெல்லமெல்ல நகர்த்தி ஊரைச்சுற்றி வந்து உல்லாசத்தை இலவசமாய் அனுபவியுங்கள். (வெலெவாசி கூடுதலா இருக்கும் இந்நேரத்தில் வாப்பா, உம்மாட்டெ அது வேனும், இது வேனும் என வாங்கி கேட்டு அடம் பிடிக்காதீர்கள்.......நல்ல பிள்ளைகளாக வளர்ந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் கண்குளிர்ச்சியைத்தாருங்கள்.......)

திடீர்ண்டு நொங்கு நெனப்பு வந்துச்சா அதான் இப்புடி.........

படிச்சிட்டு சுவையான உங்கள் கருத்துக்களை இங்கு பதிய மறக்காதீர்....

-மு.செ.மு. நெய்னா முஹம்மது.

17 கருத்துகள்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

///சீவப்பட்ட நுங்கின் கண் போன்ற இளஞ்சுளைகளை பனை ஓலையில் வாங்கி வந்து துவர்க்கும் அதன் வெண் தோலை சேதாரம் ஏதுமின்றி அகற்றி பாத்திரத்தில் இட்டு தேவையான அளவு பசும்பால் ஊற்றி அதற்கு சுவை கூட்ட பன்னீரும் கொஞ்சம் இட்டு, இனிப்பு சுவை கூட்ட சீனியும் கொஞ்சம் சேர்த்து அதற்கு குளிரூட்டி நல்ல உச்சி வெயில் வரும் சமயம் (உச்சி உரும நேரம்) ஒரு கிளாஸ் பருகினால் உடலுடன் உள்ளமும் குளிர்ச்சியடையும். (கரண்டு போனாலும் வந்த தூக்கம் கலையாது....அப்படி ஒரு சுகம் பருகியதும்)///

MSM(N), கடந்த மூன்று நாட்களாக நுங்கு சூஸ் சாப்பிடுகிறேன் நெய்னா... ஊருக்கு சீக்கிரம் வாங்க.... நுங்கு சீசன் முடியப்போகுது...

crown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். நொங்கை தோண்டினால் நல்ல சுவையான பானம் கிடைப்பதுபோல். நைனா தன் கற்பனையை தோண்டி தன் பங்கை இங்கே பந்தியிட்டுள்ளார். நல்ல குளிர்ச்சினான பங்களிப்பு.இயற்கையில் பதமாக பதம் ஆக்கபட்ட இதமான நீர் நல்ல பதனீர்" இது சூடு தணிக்கும் குடித்து முடித்தும் இனிக்கும். நல்ல சுவையான தகவல்கள் மண்ணின் மைந்தன் நைனாவிடமிருந்து.
வாழ்த்துக்கள்.(அப்பாடா! கவிதைக்கு மட்டும் தான் கருத்து சொல்வான் இவன் என்ற பழிசொல் இனி இல்லை)

Ebrahim Ansari சொன்னது…

அன்புள்ள தம்பி நெய்னா
அஸ்ஸலாமு அலைக்கும்.
நன்றாகத்தான் நொங்கு நோண்டி இருக்கிறீர்கள். அத்துடன் பழைய நினைவுகளையும் நோண்டி விட்டுவிட்டீர்கள்.
விடியற்காலையில் முன்னரே திட்டமிட்டபடி எட்டு, பத்து சைக்கிள்களில் நண்பர்கள் பட்டாளம் சூழ அளத்திக்காடு தோப்புக்கு சென்று தோப்புக்காரன் பழனி கையில் பத்து ரூபாய் கொடுத்து நுங்கு குலைகளை வெட்டி சரித்து, சீவி, வயிறு முட்ட முட்ட நுங்கு நோண்டித்தின்று திணறி வந்தது நினைவுக்கு வந்தது.

இதற்கும்

இந்த முறை விடுமுறையில் சென்றிருந்தபோது பட்டுக்கோட்டை ரயில் நிலையம் எதிரே வரிசையில் நின்று ஒரு நொங்கு கண் இரண்டு ரூபாய் என்று அந்த வெற்றிலைகறை படிந்த விரல்களால் எண்ணப்பட்டுக் கட்டி வாங்கி வந்து வீட்டில் லஸ்ஸி அடித்துக்குடித்ததும் - இரண்டுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசங்கள்???

காலமாற்றங்கள் அந்நிய கணிணி கால்சட்டைக்குள் - சொந்தமான நுங்கு எட்டாத உயரத்தில் .

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

கோடைக் காலச் சூழலுக்கேற்றப் குளிர்ச்சிப் பதிவு.........!

நானே இதைப்பற்றி ஒரு கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என எண்ணிருந்தேன்........சகோ. நெய்னா அவர்கள் அவர்களின் பாணியில் அழகிய வடிவில் பதிந்துள்ளார் வாழ்த்துகள் !

நமதூரில் நொங்கு விற்பனைகள் ஏராளம் குறிப்பாக தக்வாப் பள்ளி அருகில்.................விலை என்னவோ ரொம்ப சீப்பாகத் தான் இருக்கு 12 சுளைகள் இருபது ரூபாய்.........ஆனால் “கடுக்காய்” எண்ணிக்கையில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளவும். பேக்கிங் பனை ஓலையில் தருவது கூடுதல் சிறப்பு..............!

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

சகோ நெய்னா தந்தது நல்ல சுளையான (கருத்தான)நுங்கு.வாழ்த்துக்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நொங்கு சுவையை இங்கு கொண்டு வந்த நெய்னா சூப்பரு!

நொங்கு வண்டி செய்வது எப்படி? செய்முறை விளக்கத்தோடு அருமை.

.....ஆனால் இப்பொ இந்தப் புள்ளெ சொல்லுது இந்த வண்டியா? வேணாமா...வெட்கமா ஈக்கிது....

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

இப்பொழுதெல்லாம் நமதூரில் கோடை காலத்தில் நடக்கும் வசதியானவர்கள் வீட்டு கலியாணங்கள் சிலவற்றில் பந்தலில் வெறும் சர்பத், டீ, காப்பி கொடுப்பதற்கு பதிலாக‌ ரோல் மில்க் சர்பத்தை பெரும் அண்டாவில் கலக்கி அதில் அண்டார்டிகாவில் மிதப்பது போல் பெரிய ஐஸ் பாரை மிதக்க விட்டு அதில் பிசின், பாதாம், ஜம்ஜா விதையுடன் கடல் பாசியும் தேவையான அளவு சதுரம், சதுரமாக (சொத்து வாங்கிப்போடும் நினைப்பில் சதுர அடி எவ்வளவு என கேட்டு விடாதீர்கள்) வெட்டி போட்டு அதில் இளம் நுங்கையும் தோப்புகளிலிருந்து சிரத்தை எடுத்து பறித்து வந்து சுளைகளை எடுத்து சர்பத்துடன் கலந்து அதற்கு கூடுதல் சுவையூட்டி கலியாணப்பந்தலுக்கு வரும் இனிப்பு நீர்க்காரர்களை கூட அவர்கள் வீட்டிற்குத்தெரியாமல் நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் இரண்டு, மூன்று கிளாஸ் கமுக்கமாக‌ குடிக்க வைத்து விடுகிறார்கள். பிறகென்ன சுகர் கூடி விட்டது என ரத்தப்பரிசோதனை நிலையங்களிலிருந்து வரும் தகவலறிக்கையை பார்த்து மனதிற்குள் திட்டிக்கொள்பவர்களும் உண்டு. வீட்டில் பெண்களிடம் ஏச்சு வாங்குபவர்களும் உண்டு.

இது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த கம்ப்யூட்டர் யுகம் என்பதனால் இயற்கையாக செய்து சிறுவர்களால் தெருவில் ஓட்டப்படும் நொங்கு வண்டிகளை எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் தேடாதீர்கள் வாப்பாமார்களே............

சகோ. தாஜூத்தீனின் அழைப்பிற்கு நன்றி. ஊருக்கு வந்து நுங்கு திண்ண வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் அதன் வகையறாவான பன‍ங்கிழங்காவது ஊர் வந்து திண்ண முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்......

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

ரோல் மில்க் அல்ல "ரோஸ் மில்க்" என படித்து மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுமாறு வாசகர்கள் அனைவரும் அன்புடன் அ.நி. சார்பாக இங்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ZAKIR HUSSAIN சொன்னது…

ஊரில் நுங்கு வியாபாரம் ஆரம்பித்திருப்பதை பார்த்தேன். சேண்டா கோட்டை, மாளியக்காடு பகுதிகளில் ரோட்டோரமாக விற்கிறார்கள். நுங்கு சாப்பிட இந்த அளவு டேஞ்சர் ரிஸ்க் எல்லாம் எடுக்க இந்த வயதில் பயம் இருப்பதால் கீழே இறங்கவே இல்லை.

சகோதரர் நெய்னா, உங்களின் நுங்கு ஆராய்ச்சி அருமை.

பதனி எடுக்க இனிமேல்.....ரோபோ தான் வர வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

//காலமாற்றங்கள் அந்நிய கணிணி கால்சட்டைக்குள் - சொந்தமான நுங்கு எட்டாத உயரத்தில் .///

உண்மைதான் இபுறாஹீம் அன்சாரி காக்கா.. புகைப்படம் எடுக்கக்கூட தென்படாத இடத்தில் உள்ளது நுங்கு... எட்டா கணி...

Shameed சொன்னது…

சீசனுக்கு ஏற்ற கட்டுரை ,நாசா செய்வாய் கிரகத்தில் இறக்கிய Pathfinder என்ற வாகனத்தை போல் உள்ளது நமதூர் நொங்கு வண்டிகள்

sabeer.abushahruk சொன்னது…

இந்தப் பதிவு சில இடங்களில் கட்டுரையாகவும் பல இடங்களில் கவிதையாகவுமே எனக்குப் படுகிறது.

தம்பி நெய்னாவின் மற்றுமொரு வருடல், கலையான செய்திகளோடும் குறிப்புகளோடும்.

மனம் கனிந்த வாழ்த்துகள்.

Saleem சொன்னது…

அப்போ நொங்கு ஒன்று 5 ரூபாய் தேங்காயும் 5 ரூபாய்!!!!!

Yasir சொன்னது…

நொங்கு நினைப்பை கிளறிவிட்டு நொங்கோ நொங்கெண்டு நொங்கிவிட்டீர்கள் ....ஆசையாதான் இருக்கு

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

லேட்டா வந்துட்டேனா ?

சீஸன் முடியலையே ?

MSM(n) எழுத்துக்கு, சொல்லவா வேனும் தேன் இனிக்கும் என்று... !

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

//லேட்டா வந்துட்டேனா ?//

காக்கா,நீங்க லேட்டா வந்தாலும்
லேட்டஸ்ட் தகவலோடுதான் வந்திருப்பிய,
கொஞ்சம் பகிர்ந்துக்கலாமே?