நேற்றைக் கிழித்து
நினைவுக் கூடையில் வீசி
காற்றைக் கிழித்து
கனவு வெளியில் பற!
பறப்பது எங்ஙனம்?
றெக்கை விரிக்கும் பறவைக்கு
காற்றில் மிதக்க
எடை குறைவே
விடை
கனவை விரித்துப் பறப்பதற்கு
கவலை அழுத்தாத
கனம் குறைந்த
மனம்.
எந்திரப் பறவைக்கே
இயக்க,
புற சக்தி
எண்ணப் பறவைக்கோ
மயக்கும்
அக யுக்தி
காற்றின் மூலக்கூறும்
நாம்
உராய்ந்து பறக்க
உற்சாகமாய்
நமை வாழக்கூறும்.
பறக்க
இறக்கைகள
வளர்க்க வேண்டியதில்லை
வாய்த்தாலே போதும்
பூமித் தாயை
மூன்று பரிமாணங்களில்
கண்டு களிக்கயில்
எங்கும் வருடிக் கடக்கும்
எம் நிழல்.
கூர் புத்தியால்
குழப்பங்களைக் கீறி
குடைந்து குடைந்து பறந்து
ஈர்ப்பு விசை
இழந்த வெளியில்
இளைப்பாறலாம்,
மிதந்து கோண்டே
சுமை என்றால்
நடக்காத பொழுதினில்
கால்களும்
பறக்காத போதினில்
சிறகுகளும்கூட சுமைதான்
ஒற்றையாய்ப் பறப்பது
சுமைகளிலிருந்து
விடுதலை என்றல்ல;
இனியும் சுமக்க
இனிய சுமை வேண்டியத்
தேடலே!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
30 Responses So Far:
/சுமை என்றால்
நடக்காத பொழுதினில்
கால்களும்
பறக்காத போதினில்
சிறகுகளும்கூட சுமைதான்//
நாற்பது வயதை நெருங்கிவிட்டாலே உடல் நோய்களின் கூடாரமே. இது எப்பொழுதென்றால் கால்களும் சிறகுகளும் சுமையாக தெரியும்போதுதான்.
முயற்சி எனும் சிறகடித்து பறக்கும்போதுதான் இலக்கு எளிதாகும்.
நீ பறக்க சொல்லும் இப்பதிவு
உழைக்க மறுக்கும் சோம்பேறிகளுக்கு ஒரு விழிப்புணர்வு
பற என்ற உன் ஈரெழுத்து தலைப்பில் சிறகில்லாமலே
என்னையும் பறக்க வைத்து விட்டாய் சிந்திக்க வேண்டிய சிறப்பான உன் கவிபடைப்பு சீராக பறக்க வைப்பது உந்தன் தனிச்சிறப்பு
காதர்,
நீ குறியிடும்
நாற்பதைத் தாண்டுகயில்
நோய்
உடலில்
கூடாரம் இட்டு
கும்மியடிப்பதுடன்
நரைகூடியோ - மொசைக்த்
தரையென உதிர்ந்தோ
தலை
தன்
தன்மையில் மாறும்
நாக்கு ருசி
நசுக்கப்படும்
வாய்க்குணவு -விரும்பியவாறு
வாய்க்காது
எனினும்...
நல்ல எண்ணங்கள்
நம்மை
என்றுமே
இளமையாகவே பராமரிக்கும்!
(உப்பிட்டவரை உள்ளவரை நினை, வாய்க்கு சீனிதான் போடனும் என்று சொல்பவரைக் கண்டால் அவரிடம் நாற்பது வயதைத் தாண்டியவரின் மெடிக்கல் ரிப்போர்ட்டைக் காட்டி ஞாயம் கேட்கனும்)
அஸ்ஸலாமுஅலைக்கும். வழக்கம் போல் கவிஞரின் கைவண்ணத்தில் என்ன சிறகும் பறக்கிறது!இதில் வழக்கம் போல் பட்டம் வாங்கிவிடுகிறார்!தாம் கற்ற நூல்களின் அறிவினால்.
மெய்சா,
கருத்துகளில்கூட கவித்துவைத்தைப் பதுக்கி வைத்தே எழுதுகிறாய்.
பறபறவென வாழ்க்கை
நம்மைப் போன்றவர்களுக்கு
சற்றுநேரம்
இளைப்பாரவே -இந்தக்
கிளை!
(கா மு மேநிலைப்பள்ளி நினைவுக்கு வருகிறது உன்னையும் காதரையும் இங்கு காணும்போது. மகிழ்ச்சி!)
நேற்றைக் கிழித்து
நினைவுக் கூடையில் வீசி
காற்றைக் கிழித்து
கனவு வெளியில் பற!
----------------------------------------------------------
இன்று பிறந்த குழந்தையை கண்வாங்காமல் பார்த்து ரசிப்பது போலவே இந்த வரிகளை மறுபடிம்,மறுபடியும் வாசிக்கிறேன்! கிறங்குகிறேன் ,சிறகாய் காற்றில் பறக்கிறேன்!உன் கனவு களைந்து நிஜத்துக்கு வந்து சிறகு அணிந்து விரிந்த வான் நோக்கி பற!இப்படி பரப்பரபான வாழ்வில் நிதானமாய் வேகமட்டுமல்ல விவேகமாய் காற்றை தடையை கிழித்து பற என உந்துவது இப்படித்தானோ?? அல்லாஹுக்கே எல்லாப்புகழும்!
அலைக்குமுஸ்ஸலாம் கிரவுன்,
நாட்பட காணவில்லையெனில் நலம்தானே என்கிற அச்சத்துடனான துஆ என்னில் நிலவும். முகநூலில் கண்டபின் நிம்மதியாகும்.
பட்டம் வாங்கிய பின்னரும்
பலர்
பறக்காதிருக்கின்றனர்
காற்றிருந்தும் நூற்
கயிறிருந்தும் (பட்டத்தைக்)
கட்டிக்கொடுத்தவன் கீழிருந்து
வெட்டிவெட்டி இழுத்தும்
வெளியை
எட்டிப்பறக்காதோரை
என்ன செய்ய?
காற்றின் மூலக்கூறும்
நாம்
உராய்ந்து பறக்க
உற்சாகமாய்
நமை வாழக்கூறும்.
-------------------------------------
இப்படி உங்கள் மூளைக்கூறும் கூரிய சிந்தனையில் கூறும் மழுங்கி போனவனுக்கு கூறும் அவன் இனி தேறும் படி சொன்ன சொல் ஆயுதம்! ரத்தமின்றி மொன யுத்தம் செய்து புரட்சி செய்கிறது!இப்படி மூலக்கூறு வகுக்க வைத்தவன் அல்லாஹ் அவனுக்கே எல்லாப்புகழும்!
//இன்று பிறந்த குழந்தையை கண்வாங்காமல்
பார்த்து ரசிப்பது //
இது
இளநீரை
இளநியிலேயே
இச்சென்று
இதழ்ப்பதித்து
இழுத்துறிஞ்சும்
இன்பம்!
காற்றிருந்தும் நூற்
கயிறிருந்தும் (பட்டத்தைக்)
கட்டிக்கொடுத்தவன் கீழிருந்து
வெட்டிவெட்டி இழுத்தும்
வெளியை
எட்டிப்பறக்காதோரை
என்ன செய்ய?
-------------------------------------------------------------
அவரும் நம் இழுப்புக்கு வரும் மட்டும் இப்படி இழுக்கதான் வேண்டும் கவிஞரே!அன்பு தேடலும்,துஆவும் எப்பவும் இருக்கும் என்பதால் இங்கே கலவரமில்லை!அன்பினாலே நிலவரம் தெரியாமல் கலவரம் வரும் இயல்புதானே!
sabeer.abushahruk சொன்னது…
//இன்று பிறந்த குழந்தையை கண்வாங்காமல்
பார்த்து ரசிப்பது //
இது
இளநீரை
இளநியிலேயே
இச்சென்று
இதழ்ப்பதித்து
இழுத்துறிஞ்சும்
இன்பம்!
-------------------------------------------------------
இப்படி ஸ்ட்ரா போட்டு இன்பமாய் உறிஞ்சும் இலக்கிய சுவை முன்னே நான் எக்ஸ்ராவாய் எது போட்டாலும் வாய்க்குதவாது உங்களிடம் வாக்கு வாதம் செய்தால் என் வாக்கு வாதம் பெற்று நொண்டும்!
பறக்க
இறக்கைகள
வளர்க்க வேண்டியதில்லை
வாய்த்தாலே போதும்
-------------------------------------------------
உண்மையை ஓங்கி சொல்லும் மந்திரம் இந்த வார்தை!
ஒற்றையாய்ப் பறப்பது
சுமைகளிலிருந்து
விடுதலை என்றல்ல;
இனியும் சுமக்க
இனிய சுமை வேண்டியத்
தேடலே!
-------------------------------------------------
இந்த தேடலேதான் வாழ்வின் அடுத்த ,அடுத்த கட்டம்!வளர்சி இதை நம்மவர்கள் தேடல என்பதுதான் அதிர்ச்சி! வழக்கம் போல் இலக்கிய ரசனை மிக்க ஊட்ட சத்து' வாழ்த்துக்கள் கவிஞரே!
//உங்களிடம்
வாக்கு வாதம் செய்தால்
என் வாக்கு
வாதம் பெற்று நொண்டும்!//
க்ரவ்ன்,
நொண்டும் ஒரே வாதம்
பிடிவாதம்
இது
வாதம் அல்ல
உம்மொழிக்கும் எம்மொழிக்கும்
நடக்கும்
விவாத விவாகம்
விளைவாக
இந்தக்
'கரு'த்தரைக்குள்தான் எத்தனை
கவிதைக் குஞ்சுகள்!
>> கூர் புத்தியால்
குழப்பங்களைக் கீறி
குடைந்து குடைந்து பறந்து
ஈர்ப்பு விசை
இழந்த வெளியில்
இளைப்பாறலாம்,
மிதந்து கோண்டே <<
யோசித்து, பிறகு புரிந்து கொள்ளும்போது அருமையாய் இருக்கிறது காக்கா இந்த வரிகள்.. கவிதை'யின் மூலம் வாசகனை சென்றடைய சில வழிகள் நீங்கள் வகுத்தது அருமை..!
//ஒற்றையாய்பறப்பதுசுமைகளிலிருந்துவிடுதலையல்ல;இனியும்சுமக்க இனியசுவைவேண்டிதேடலே//சுமப்பதிலும் ஒரு சுகமுண்டு; ஒரு கடமை சுமையும்உண்டுதான்.அதற்கொரு வரம்பும்உண்டு.ஆனால் சுமைதாங்கியாகி விடக்கூடாது.All lay the load on the willing horse.இது ஒரு ஆங்கிலபழ மொழி.இனிய சுவையே சுமக்க கொடுப்பவர்கள் இங்கேயாருமில்லை!
கிரவ்னு.... ! நீ எப்போதும் கவிதைக்கு 'கிரவ்னு'தான்ய !
//யோசித்து, பிறகு புரிந்து கொள்ளும்போது அருமையாய் இருக்கிறது//
இர்ஷாத்,
யோசித்துப் புரிந்து கொள்ள ஏதுவாய் எழுதுவதும் வாசித்துச் செல்லும்போதே புரிந்துகொண்டு பிறகு கருவைப் பற்றி யோசிக்க வைப்பதுவும் கவிதையின் இரு வேறு பரிமாணங்கள்.
குறைந்தபட்சம், இறுதிவரை வாசிக்கவாவது தூண்ட வேண்டும் என்பது முக்கியம். இரண்டு வரிகளுக்குமேல் வாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி கைவிடப்பட்டக் கவிதைகள் ஏராளம். சில, பொருள் புரியாததால்; வேறு சில, எழுதியவர் அளவிற்குத் தமிழ் எனக்குத் தெரியாததால்.
தம் திறமையைக் காட்ட எழுதியோர் பலர் தோற்றனர். வாசகனின் ரசனைக்கேற்ப எழுதியோர் வென்றனர்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிரைத் தும்பியை, தருமியையும் சேர்த்தே சொல்கிறேன், விரும்பி வாசித்தோரைவிட மதிப்பெண்ணுக்காகவும் ஆயிரம்பொண்ணுக்காகவுமே வாசித்தோம்.
ஆறாம் வகுப்பிலேயே பொம்பளக் கூந்தல் மணக்கும்டான்னு சொல்லி மோப்பம் புடிக்க வச்சிட்டானுகளே இர்ஷாத்.
ஃபாரூக் மாமா,
பெற்றோரும் -நாம்
பெற்றெடுத்தோரும்
என்றுமே
சுகமான சுமைதான்,
அளவீடு அநாவசியம்!
மறுப்பீர்களேயானால்
ஏன் பிறப்பு
எதற்காகப் பெற்றெடுத்தல்
என்கிற கேள்வி சுடும்.
அளவற்ற சுமையை
அழகாகச் சுமந்து
தாங்கள் பெற்ற சுகம்
பெறட்டும் இவ்வயகம்.
அபு இபு,
உட்கார்ந்திருந்தவனை எழுப்பி "பற" என்று சிறகுகள் தருவதுபோல் பறவையின் புகைப்படும் தந்து உசுப்பி விட்டமைக்கு நன்றி.
க்ரவுன் விஷயத்தில் நீங்கள் நீதமாகவே சொல்கிறீர்கள். க்ரவுன் கருத்திட, அதில் மயக்கும் மொழி பல எடுத்து நான் மேற்கொண்டு கருத்திட என்று இத்தளம் கற்றுக்கொண்டிருப்போருக்கான தளம் எனும் கம்பீரத்தை நிலை நிறுத்துகிறது.
//நாற்பது வயதை நெருங்கிவிட்டாலே உடல் நோய்களின் கூடாரமே.//
கடுமையாக கண்டிக்கிறேன் அப்துல் காதர்...
40 வயதிலேயே "இப்படித்தான்" என்று எழுதுவது ஒருவிதமான தவறான உண்மையை மனதில் பதித்துவிடும்.
உடல் தன்னை சரி செய்ய எடுத்துக்கொள்ளும் விசயத்தையெல்லாம் நோய் என்று சொல்வதும் Objection your honour
உலகில் இருக்கும்வரை கிடைக்கும் நிமிடங்களை ரசிக்கத்தொடங்கினால் வாழ்க்கை வசப்படும்.
அந்த நிமிடத்துக்கு லெட்ஜர் எடுத்து வைத்துக்கொண்டு லாப நஷ்ட கணக்கு பார்த்தால் ஹிந்துவாக இருந்தால் சங்கும், முஸ்லீமாக இருந்தால் ஊதுபத்தியும் கண்ணில் வந்து காட்சி தரும்.
வானம் ஏகும் பறவைகட்கு
வாய்த்தச் சிறகே நம்பிக்கை;
கானம் பாடும் குயிலுக்கு
குரலின் மீதே நம்பிக்கை;
மானம் உள்ள மனிதனுக்குள்
மறைந்து கிடப்பதும் நம்பிக்கை;
ஆனதினால் சோம்பல் விலக்கினால்
ஆற்றல் பெறும் வாழ்க்கை...!!!!!
அருமை; அழகு; இனிமை
துவக்கமாக உள்ள வரிகளைத் துயர்ந்தால் நீயும் எட்டி விடுவாய் மரபின் கிளையை!
//கடுமையாக கண்டிக்கிறேன் அப்துல் காதர்...
//
ஜாகிர்,
நாற்பது என்று காதர் குறியிடுவது ஒரு பொதுவான நிலவரம்தான். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் நாற்பதை எட்டிவிட்டால் 'டோட்டல் ப்ரொஃபைல் செய்து கொள்ளச் சொல்வதும் ஒரு ட்ரெட்மில் ஓடச்சொல்வதும் வாடிக்கையே. அதற்காக, நாற்பதில் நோய் வந்தே தீரும் என்பதல்ல. வர வாய்ப்புகள் அதிகம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மற்றபடி, காதரின் கருத்தில் டிஸ்கரேஜிங்காக எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இன்னும் சொல்வதானால்,
//இது எப்பொழுதென்றால் கால்களும் சிறகுகளும் சுமையாக தெரியும்போதுதான். //
என்று பதிவின் பேசுபொருளைச் சார்ந்தே சொல்லி இருக்கிறான். அதாவது, உழைக்காதவனுக்குத்தான் நாற்பதில் உடல் நோய்களுக்குக் கூடாரமிடும் என்னும் கருத்து கண்டிக்கத்தக்கதல்ல. மாறாக சிந்திக்கத்தக்கது.
(நீதான் ஏதோ அவசர அவசரமாகக் கருத்திட்டதுபோல் தெரிகிறது)
//நரைகூடியோ - மொசைக்த்
தரையென உதிர்ந்தோ
தலை
தன்
தன்மையில் மாறும்//
ஏய்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அன்பிற்குரிய கவியன்பன்,
தங்களின் வருகை என்னைக் கெளரவப்படுத்துகிறது.
நம்பிக்கைதான் பறப்பதற்கான அடிநாதம் என்பதைப் பலாச்சுளைத் தமிழில் படிக்கக் கருத்திட்டிருக்கிறீர்கள்.
இறக்கைகள்
என்றுமே
இளமையாய் இருப்பது
தங்களைப் போன்ற
கவிஞர்களுக்குத்தான் என்பதை
தாங்கள்
தற்போது பறக்கும்
வானத்தின்மூலம் அறிகிறேன்.
நன்றி!
(மரபை வாசிக்கப் பிடிக்கும். மரபில் வார்க்கத் தெரியாது)
செவிக்கு ணவாகச் சிறப்புச் சுவைதான்
கவிக்குத் தருமோசைக் காண்
//வானம் ஏகும் பறவைகட்கு
வாய்த்தச் சிறகே நம்பிக்கை;
கானம் பாடும் குயிலுக்கு
குரலின் மீதே நம்பிக்கை;
மானம் உள்ள மனிதனுக்குள்
மறைந்து கிடப்பதும் நம்பிக்கை;
ஆனதினால் சோம்பல் விலக்கினால்
ஆற்றல் பெறும் வாழ்க்கை...!!!!!
அருமை; அழகு; இனிமை?/
பறத்தலுக்குக் கவியன்பனின் கருத்து மிக அருமை!
அதனையே நான் வழிமொழிகிறேன்.
(கலாம்காதிருக்கு ஈமெயில் அனுப்பினால் பதில் வருவதில்லையே ஏன்? என்ன காரணமாக இருக்கலாம்?
கருத்து செறிவுமிக்க கவிதை.....
//கனவை விரித்துப் பறப்பதற்கு
கவலை அழுத்தாத
கனம் குறைந்த
மனம்.//
பிடித்த வரிகள்
வாழ்த்துக்கள் கவிக்காக்கா
இக்பால்,
கவியன்பனின்
கற்கண்டு வரிகளைக்
கடன் வாங்கி
வழி மொழியும் அளவிற்கு -உன்
மொழி மெலிந்து விட்டதா?
அல்லது
நீ
தருமியா?
(ச்சும்மா வுட்டேன் :-) )
யாசிர்,
உங்கள் கருத்தைக் காணும்வரை நம் வாசக வட்டம் சுருங்கிப்போனதோ என்கிற கவலை இருந்தது.
கருத்தாடலுக்குப் பெயர்போன தளத்தில், 'லைக்ஸ்' போடும் சலுகை வந்த பிறகு, உரையாடல் குறைந்தாலும் வாசிக்கிறீர்கள் என்ற விதத்தில் சந்தோஷமும் நன்றியும்.
Post a Comment