பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
நெடுநாட்களாக மேற்சுட்டிய தலைப்பில் எழுத வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து கொண்டிருந்தேன், அதற்கான சூழலை நமது சகோதரர்களே உருவாக்கி விட்டனர்.
இன்றைய காலகட்டத்தில், அல்லாஹ் நமக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்பம், இதனை இஸ்லாமிய சமுதாயமாகிய நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறியதோடு அல்லாமல், மிகக் குறைந்தபட்ச எண்ணிக்கையைத் தவிர பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் வீணாகவே அதிகமதிகம் பயன்படுத்தி நம் சமூகத்திற்கு கேவலத்தையும், அவப்பெயரையுமே தோற்றுவிக்கிறார்கள்.
இவ்வகையான நிலை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட கைசேதம். வெள்ளைக்காரனை எதிர்ப்பதற்காக ஆங்கிலம் படிப்பதை ஹராம் என்று சொல்லி நம் நாட்டை ஆக்கிரமித்த வெள்ளையனை வீரத்தோடு வெளியேற்றிய பாரம்பரியமிக்க சமூகம், தற்போது இந்த நாட்டில் பலகீனமான குடிமக்களாக ஆக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு, பாசீச சக்திகள் மட்டும் ஒரு காரணமல்ல, நாமும் அதற்குக் காரணம். இஸ்லாம் கற்றுத் தந்த அழகிய வழிமுறையில் வாழத் தவறி அனாவசியமாக எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவது ஒருபுறம், சின்னச் சின்ன நிகழ்வுகளுக்காக முகஸ்துதி என்று வெத்துப்பெருமை இன்னொரு புறம். ஆனால், அல்லாஹ் நமக்குக் கொடுத்துள்ள தகவல் தொழில்நுட்பத்தை வைத்து நம்மை நாமே வலிமைமிக்க சமூகமாக மாற்றிக் கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தை நம்முடைய பொடுபோக்குத்தனத்தாலும், சில சமுதாயத தலைகளை திருப்தி படுத்துவதற்காகவும் இதனை நாம் தவற விடுகிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இன்றையச் சூழலில் “நம்முடைய செயல்கள் அல்லாஹ்வுடைய திருப்தியை பெறுவதற்கு” என்பது வெறும் நாவளவில் உள்ளதா? உண்மையில் செயலில் உள்ளதா? என்பதை ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்களின் காலம் முதல் இன்று வரை தூய இஸ்லாம் வளர்ந்து வரும் மார்க்கம் என்பதில் யாவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. பிற மதத்திலிருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக தழுவும் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்களின் வாழ்வைப் பார்த்து வருவதை காட்டிலும், திருக்குர்ஆனை பொருளுணர்ந்து வாசித்தும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உளப்பூர்வமாக அறிந்தும் உணர்ந்தும் இஸ்லாத்திற்கு வருபவர்களே அதிகம் என்பது நம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
தமிழகத்தில் நாமிருக்கும், அனுபவிக்கும் இந்த அழகிய மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்ற பிரபலங்கள் அப்துல் ஹாலிக் (யுவன் சங்கர் ராஜா), ரஹீமா (மோனிகா). கடந்த இரண்டு வாரங்களாக இணைய தளங்களிலும், சமூகத் தளங்களிலும் குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் தளங்களில் பேசப்பட்டு, செய்திகள் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருபவர்களாக இந்த முன்னால் சினிமா நட்சத்திரங்கள் இருந்து வருகிறார்கள். இவ்விருவரும் இஸ்லாத்தை அழகிய வாழ்க்கை நெறியாக ஏற்று இஸ்லாத்திற்கு வந்தவர்கள் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அப்துல் ஹாலிக் அவர்களுக்கு கீழக்கரையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது முதல் அவர்கள் இருவருடைய திருமணம் முடியும் வரை, சமூக தளங்களில் குறிப்பாக FACEBOOK, WHATSUP போன்றவைகளில் இவர்களை பற்றிய செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் எண்ணிலடங்காதவைகள் வெளியிடப்பட்டு வருகிறது. இச்செய்திகளை பரப்புகிறவர்களும், அதனை பார்த்து கருத்திடுபவர்களும் “சுப்ஹானல்லாஹ்” என்றும் “அல்ஹம்துலில்லாஹ்” என்றும் “பாரகல்லாஹ்” என்றும் கருத்துக்கள் இட்டு நம் தூய இஸ்லாத்தை வலுப்பெற செய்ய முயலுகிறார்கள்.
ஓரிரு தினங்களுக்கு முன்பு ரஹீமா (மோனிகா) என்ற சகோதரிக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கும் திருமணம் நடைபெற்றது, ஆனால் அந்த திருமண நிகழ்வை ஒருசிலர் புகைப்படம் எடுத்து இணையத்தளங்களிலும், FACEBOOK, WHATSUP போன்ற சமூக பினைப்புத் தளங்களிலும் இஸ்லாத்திற்கு ஏதோ மிகப்பெரிய பெருமையை சேர்த்து விட்டது போல் “முன்னால் நடிகை இஸ்லாமிய முறைப்படி(?) திருமணம் செய்து கொண்டார்” என்று பதிவுகள் இட்டு, இதை வாசிப்பவர்கள் “மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், பாரக்கல்லாஹ்” என்று மறுமொழிகளும் இட்டு தங்களின் தீனை வலுப்பெறச் செய்ய போட்டி போட்டதை உணராமல் இருக்க முடியவில்லை. அல்லாஹு அஃலம் [அனைத்தையும் அல்லாஹ் மட்டுமே அறிவான்] !
பிரபலங்கள் யாராயினும் இஸ்லாத்தை ஏற்பதால் இஸ்லாத்திற்கு பெருமை ஒன்றுமில்லை, இஸ்லாத்தை ஏற்றதால் அவர்களுக்குத் தான் பெருமை வந்து சேரும், அது யாராக இருந்தாலும் சரியே.
இன்று உலகில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லீம்களின் இல்லங்களில் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. நம் சகோதரர் அப்துல் ஹாலிக் அவர்களின் திருமணமாகட்டும், சகோதரி ரஹீமா அவர்களின் திருமணமாகட்டும். அது அவர்களின் தனிப்பட்ட நிகழ்வு. ஆனால் இந்த தனிப்பட்ட நிகழ்வை பெருமைக்காகவும், முகஸ்துதிக்காகவும் அந்த திருமண நிகழ்வின் புகைப்படங்களை இணையத்தளங்கள், facebook, whatsup போன்ற சமூக தளங்களிலும் முஸ்லீம்களாலே அறிந்தோ அறியாமலோ பகிரப்பட்டு நம் சமூதாயத்தின் மானத்தை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு (Private event), அது யாருடைய திருமணமாக இருந்தாலும் முஸ்லீம்களாகிய நம்மவர்கள் செய்வது சரியா?
பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் என்று காரணம் காட்டி முஸ்லீம் பெண்களைப் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பொதுதளங்களில் பரப்பும் கணவான்களே, பெரியோர்களே, தாய்மார்களே. உங்களிடம் கேட்கும் கேள்வி இதுதான். இது போன்ற திருமண நிகழ்வுகள் உங்கள் வீடுகளில் நடந்தால், பட்டுப்புடைவையோடும், அலங்காரங்களோடும், சீவி சிங்காரித்துக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டுப் பெண்கள் இருக்கும் புகைப்படங்களையும், விடியோக்களையும் நீங்கள் வெளியிட விரும்புவீர்களா? நிச்சயம் விரும்ப மாட்டீர்கள். ரஹீமாவும் ஒரு முஸ்லீம் பெண்தானே, அப்துல் ஹாலிக் மணம் முடித்திருக்கும் கீழக்கரையைச் சேர்ந்த அந்த பெண்ணும் மூஸ்லீம் பெண்தானே. இந்த முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களைப் பரப்புவது எவ்வகையில் நியாயம்?
தன் வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்வுகளில் நம்மவர்கள் வீட்டில் மகள், மனைவி, தாய் போன்றவர்களின் புகைப்படங்களைப் பொதுத் தளங்களில் போட மனம் தடுக்கும் போது பிற வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள பெண்கள் யாருடைய மகளாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ இருப்பாரல்லவா? நமக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? இது அப்பட்டமான இரட்டை வேடமில்லையா? இதோ உங்களுக்குக்கு நினைவூட்டுவதற்காக ஒரு ஹதீஸ்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி. 42 Volume :7 Book :93.
இணையத்தளங்கள், facebook, whatsup போன்ற தளங்களில் சகோதரர் அப்துல் ஹாலிக் அவர்களின் மனைவி, அந்த பெண்ணைச் சார்ந்த குடும்பப் பெண்கள் இருந்த புகைப்படங்கள், சகோதரி ரஹீமா, அவரோடு இருந்த முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களைக் கணக்கில்லாமல் பரப்பிய சகோதர சகோதரிகளே சிந்திக்க மாட்டீர்களா?
இஸ்லாத்தில் உள்ள சில மக்கள் மார்க்கத்தை சரியாக விளங்காத காரணத்தால், பிற மதத்தவர்களின் சடங்கு சம்பிரதாயங்களைத் தங்களின் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கடைப்பிடிக்கிறார்கள். இவைகள் முழுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவைகள். ஆனால் அவைகளை கண்டிக்காமல், இஸ்லாத்திற்கு மாற்றமான முறையில் நடைபெற்ற நிகழ்வுகளை ஆதரிக்கும் விதமாக செய்திகளைப் பரப்பி வருவது சரியான செயலா என்பதை எனதருமை சமுதாய மக்களே சிந்திக்க மாட்டீர்களா?
“எதை எடுத்தாலும் நெட்டில் போடு” என்று சமூக பொறுபற்ற போக்கை நம் சமூதாய சொந்தங்கள் கைவிட வேண்டும். அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரும் ஊடகங்களான இந்த இணையம், Facebook, whatsup, telegram போன்ற சமூகதளங்கள். இவைகளை முழுக்க முழுக்க இஸ்லாத்தின் வளர்ச்சிக்காவும், நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தி வெள்ளையனை வெளியேற்ற போராடிய நம் முன்னோர்கள், முப்பாட்டன்கள் மற்றும் பாட்டன்களைப் போன்று வீரமுள்ள சமூகமாக மாற்ற வேண்டுமே தவிர, சமூகத்திற்கு ஒன்றுக்கும் உதவாத கண்டதையும் செய்திகளாகவும், புகைப்படங்களாகவும், வீடியோக்களாக பதிந்து, பரப்பி உங்கள் நேரத்தையும், மக்களின் பொன்னான நேரத்தையும் வீண்டித்து அநியாயமாக பாவத்தை சம்பாதித்து, முகஸ்துதிக்காக பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும், இயக்கவாதிகளையும், நண்பர்களையும் திருப்திபடுத்த மட்டுமே ஊடகத்தை பயன்படுத்தி கோழைகளாக நம் சமூகத்தை ஆக்க வேண்டாம்.
நாளை மறுமையில் அல்லாஹ்விடம் அனைவரும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம். அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஊடகத்தை பயன்படுத்துவோம்.
"எல்லாத்தையும் நெட்டில் போடு” தொடரும்...
தாஜுதீன்
23 Responses So Far:
சரியான பஞ்சிங் வலி தாங்க முடியலே
Yaa Allah show US the right path to worship you
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வெல்கம் பேக், தாஜுதீன்.
'என்ன இந்த அலம்பல் பண்றாங்க?' என்று எரிச்சல் பட்டுக்கொண்டிருந்த விஷயத்தைக் கருவாகக் கொண்டு நீங்கள் சொல்லும் செய்தியும், கேட்கும் கேள்விகளும் பளீர் பளார் ரகம்.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என்று தற்பெருமையைத் தலையில் குட்டி அடக்கும் மார்க்கத்தில் இணைந்ததன் மூலம் மேலும் புகழைத் தேடிகொண்டதோடு, மறுமை வாழ்வையும் சுகமானதாக ஆக்கிக் கொண்டுள்ள இரண்டு கலைஞர்களையும் வரவேற்போம், வாழ்த்துவோம்.
அதைவிடுத்து அவர்களின் சொந்த வாழ்க்கையின் ப்ரைவஸியைக் கெடுக்காதிருப்போம்.
நல்ல பதிவு தம்பி.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
//தன் வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்வுகளில் நம்மவர்கள் வீட்டில் மகள், மனைவி, தாய் போன்றவர்களின் புகைப்படங்களைப் பொதுத் தளங்களில் போட மனம் தடுக்கும் போது பிற வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள பெண்கள் யாருடைய மகளாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ இருப்பாரல்லவா? நமக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? இது அப்பட்டமான இரட்டை வேடமில்லையா//
நச் !!!
இந்தப் பதிவில், இரண்டு முஸ்லிம் மணமகள்களையும் அந்தக் குடும்பங்களின் பெண்களையும் அவர்களின் நிக்காஹ் நிகழ்ச்சி சமய அலங்காரத்தோடான புகைப்படங்களைப் பகிர்ந்து பரப்பியதைத்தான் மார்க்க அடிப்படையில் சாடியிருக்கிறதேயன்றி, அந்தச் செய்தியை அல்ல.
செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்திற்கு வந்துவிட்ட பிறகு அந்தச் சகோதரிகளின் வனப்பும் வடிவமும் பிற ஆண்களின் கண்களுக்கு விருந்தாகக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து கூடாது.
"பாரு பாரு பிரபலங்கள் இஸ்லாத்தைத் தழுவியதை" என்று மாற்று மதத்தவரை வெறுப்பேத்தும்விதமாக பெருமை யடித்துக் கொள்வதற்காக ஷேர் செய்வதை அதிரை நிருபர் கண்டிக்கிறது.
(மேற்கண்ட விளக்கம் ஒரு காரியமாகத்தான் பதிந்துள்ளேன்)
//(மேற்கண்ட விளக்கம் ஒரு காரியமாகத்தான் பதிந்துள்ளேன்) //
என்னாச்சு ? சடப்புடமா வந்துடுச்சா ?
'கால்' மேல 'கால்' போட்டு இருந்தியலே... இதுக்குத்தானோ ?
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த பதிவை கவலையோடு வாசித்து கருத்திட்ட சகோதரர்கள் மற்றும் வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..
தான் விரும்பாத/ வேறுக்கும் ஒன்றை மற்றவர் விசயத்தில் விரும்புவது ஓர் நல்ல முஃமீன்களுக்குஅழகா?
திருமணம் என்பது ஒரு குடும்பத்தின் தனிபட்ட நிகழ்வு, எப்படி நம் வீட்டு திருமண நிகழ்வில், பொதுவாக ஹிஜாப் பேணக்கூடிய முஸ்லீம்களாகிய நாம் நம் வீட்டு பெண்களின் புகைப்படங்களை பொது தளங்களில் வெளியிட தயங்குவோம் என்பதில் பெரும்பான்மையான முஸ்லீம்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஹிஜாபை பேணும் அல்லது பேணாத முஸ்லீம் குடும்பங்களில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை மகிழ்ச்சியோடு வெளியிடுவதை தவறாக எண்ணுவதில்லை நம்மில் பலர்.
இவ்வாறு தவறு என்பதை சுட்டிக்காட்டவே, ஒரு சிலரின் உள்ளக்குமுறலில் எழுந்த ஓரிரு கேள்விகளை நறுக்கென்று கேட்க தோன்றியது.
என்னுடைய கருத்து தவறாக இருக்குமானால், தாராலமாக இங்கு சுட்டிக்காட்டலாம், கருத்து தெரிவிக்கலாம்.
இஸ்லாத்தின் கோட்பாடுகளை மறந்து, கண்டதை இணையத்தில் பகிருவது 100 சதவீதம் கருத்து சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் அவைகளில் இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கும், கண்ணியத்திற்கும் வேட்டு வைக்கும்விதமாக இருந்தால் அதனை கண்டிப்பதும், விமர்சிப்பதும், திருத்துவதும் 100 சதவீத கருத்துச் சுதந்திரம் என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது.
சபீர் காக்கா நானும் மேற்கண்ட கருத்து ஒரு காரியமாகத்தான் பதிந்துள்ளேன்.
ஜாஹிர் காக்கா, சாவன்னா காக்கா, இ.அ. காக்கா, நண்பர் யாசிர் ஒன்னுமே சொல்லக்காணம்?
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
அன்பின் சகோதரர் தாஜுதீன் அவர்களுக்கு ,
எல்லாத்தையும் நெட்டில போடு - ஊடக போதை தொடர்கிறது..
என்கிற தலைப்பிலான தாங்களின் இந்த விழிப்புணர்வுக் கட்டுரை வாசித்தேன். கால சூழ்நிலைக்கேற்ற அவசியமான பதிவுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்க்கு முன் ஒரு சில செய்தியை தாங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
நமது ஊரில் நமது சகோதரர்களால் பலதரப்பட்ட வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டு செய்திகள் பதிந்து வருகிறார்கள். சில தளங்கள் நமது மார்க்க சம்மந்தமான செய்திகள் மட்டும் பதிந்து அறியத் தருகிறார்கள். சில தளங்களில் கவிதையும் கட்டுரையும் மட்டும் பதிந்து பயனுள்ள விழிப்புணர்வு செய்திகளைத் தருகிறார்கள் மேலும் சில தளங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் செய்திகள் நிகழ்வுகள் மற்றும் நமதூர் வாசிகள் சம்மந்தப்பட்ட அயல்நாட்டுச் செய்திகள் நிகழ்வுகளை பதிந்து செய்திகளை அறியத் தருகிறார்கள்.
இத்தகைய பலதரப்பட்ட தளங்கள் நமதூரில் இயங்கி வருவதால் இலகுவாக வெளிநாடுவாழ் நம் அதிரைச் சகோதரர்களுக்கு நமதூரின் அனைத்து நிகழ்வுகளும் செய்திகளும் அறியமுடிகிறது.பல சிரமங்களுக்கு மத்தியில் எந்த வித ஆதாயமும் எதிர்பார்ப்புமில்லாமல் சமூக சேவையாக இதைச் செய்து வருகிறார்கள்.இது இப்படி இருக்க
தாங்கள் முக்கியமாக குறிப்பிட்ட சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யுவன் [காலிக் ] [மோனிகா] ரஹிமா ஆகியோரின் கல்யாணப் புகைப் படங்ககளையும் பதிவுகளையும் பதிந்த பிற சகோதர வலைத்தளங்களை ஆதங்கப்பட்டு வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தீர்கள்.தாங்களின் வேதனையும் குறிப்பிட்டு சுட்டிக் காண்பித்ததும் நியாயமானதே ! மறுக்கவில்லை.ஆனால் வலைதள நாகரீகமில்லாத அநாகரிக வார்த்தைகளை உதாரணம் காண்பித்து எழுதியது .வருத்தமளிப்பதாக உள்ளது.
காரணம் அனைத்து முக்கிய நாழிதளிலும் தொலைக் காட்சியிலும் இன்னும் பல ஊடகங்களிலும் இச்செய்தி இன்னும் விரிவாக விமரிசிக்கப்பட்டு செய்திகள் வந்தது மட்டுமல்லாது இன்னும் பல புகைப் படங்களும் பதியப்பட்டுள்ளது. அதை நான் சரி என்று நியாயப்படுத்தவில்லை. அதனைப் பார்த்தே நமது உள்ளூர் வலைதள பதிவர்களும் பதிந்து இருக்கிறார்கள்.
இச்செய்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் அனைவராலும் நன்கு அறிந்த இந்த சகோதர , சகோதரி நமக்கு ஹராமான ஒரு துறையிலிருந்து வெளிவந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு இஸ்லாமியரையே மணமுடித்து உள்ளார்கள். என்பதாலேயே தளத்தில் பதிந்து மகிழ்வினை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி இச்செய்தி தவறு என்று தாங்களுக்கு தெரியும் பட்சத்தில் அவர்களுக்கு இப்பதிவு அவசியமில்லாதவை என்று சுட்டிக் காட்டி மின் அஞ்சல் வழியாக அல்லது அலைபேசி வழியாக சொல்லி இப்பதிவை நீக்க முயற்ச்சித்திருக்கலாம் அப்படி செய்திருந்தால் உங்களின் உயர்வான எண்ணம் மெச்சும்படி இருந்திருக்கும். சகோதரத்துவத்தை மேன்மைப் படுத்துவதாக இருந்திருக்கும்.அதை விடுத்து மார்க்கத்தை நன்கு அறிந்த தாங்களே இப்படி அநாகரீக வார்த்தைகளை குறிப்பிட்டு இருக்கக் கூடாது.
ஒற்றுமையெனும் கயிற்றைப் பற்றிப் பிடித்து
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிற தாரகை மந்திரத்தை மனதில் விதைத்து சகோதர உணர்வுடன் அனைவரும் ஓர் அணியில் சேருங்கள். குறை இல்லாத தவறு செய்யாத மனிதர்கள் யாருமில்லை.
எனது கருத்துக்களில் தவறுகள் இருப்பின் மனம் பொறுத்துக் கொள்க.
வ அலைக்குமுஸ்ஸலாம் மெய்சா காக்கா, நலமா இருக்கிறீர்களா?
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ் ஹைரா..
இந்த தலைப்பில் குறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பான செய்தி நம் முஸ்லீம் பெண்கள் நிறைந்த அதிக புகைப்படங்களுடன் பொதுவாக தமிழத்தில் உள்ள நிறைய முஸ்லீம்களால் பரப்பட்டு வருகிறது. நான் பொதுவாக எந்த ஊர் தளத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை என்பதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
நீங்கள் குறிப்பிடும் அதிரை தளங்களில் வரும் செய்திகளை முழுமையாக வாசித்து பல நாட்கள் ஆகிவிட்டது காக்கா. அலுவல் வேலை பளுவுக்கு மத்தியில் முன்பு போல் ஊர் நம் சமூக வலைத்தளங்களில் நேரம் கழிப்பது மிகவும் குறைவு. நான் பொதுவாக எந்த தளத்தில் பெயரையும் குறிப்பிடாமல் எழுதியதை நம்மூர் தளங்களை குறிவைத்து எழுதியது போன்று நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல. காக்கா..
பொதுவில் செய்தி வரும் பட்சத்தில், நிச்சயம் பொதுவில் விமர்சனம் எழுத்தான் செய்யும். இந்த விமர்சனம் நான் செய்யாவிட்டாலும் வேறு யாராவது செய்திருக்கலாம். ஏன் whatsup போன்ற தளங்களில் இது போன்று ஹிஜாபோடும், ஹிஜாப் இல்லாமலும் நம் பெண்கள் இருக்கும் திருமண புகைப்படங்களை பகிருகிறவர்களை நிறைய சகோதரர்கள் கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.
//அப்படி இச்செய்தி தவறு என்று தாங்களுக்கு தெரியும் பட்சத்தில் அவர்களுக்கு இப்பதிவு அவசியமில்லாதவை என்று சுட்டிக் காட்டி மின் அஞ்சல் வழியாக அல்லது அலைபேசி வழியாக சொல்லி இப்பதிவை நீக்க முயற்ச்சித்திருக்கலாம் அப்படி செய்திருந்தால் உங்களின் உயர்வான எண்ணம் மெச்சும்படி இருந்திருக்கும். சகோதரத்துவத்தை மேன்மைப் படுத்துவதாக இருந்திருக்கும்.அதை விடுத்து மார்க்கத்தை நன்கு அறிந்த தாங்களே இப்படி அநாகரீக வார்த்தைகளை குறிப்பிட்டு இருக்கக் கூடாது..//
ஒன்று... நான் எந்த ஒரு தளத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை. இரண்டு... இந்த பதிவில் என்ன அநாகரீகமான உதாரணம் கொண்ட வார்த்தையை கொண்டு விமர்சனம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். நான் யாரை, எந்த தளத்தை அநாகரீகமான வார்த்தையைக் கொண்டு விமர்சனம் செய்துள்ளேன் என்பதை நீங்கள் தான் சுட்டிக்காட்ட வேண்டும். பொதுவாக சொன்னதை தனிப்பட்ட முறையில் நீங்கள் எழுத்துக்கொள்ளவே கூடாது.
பிற மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள், அவர்களின் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் பதிவதை நான் எதிர்க்கவில்லை. சந்தோசகமாக பாராட்டி, அவர்களுக்காக து ஆ செய்து செய்திகள் போடலாம். இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் முஸ்லீம் பெண்கள் பங்கேற்கும் திருமணம் போன்ற தனிப்பட்ட வீட்டு நிகழ்வுகளில் உள்ள புகைப்படங்களை பகிர்வதை எதிர்க்கிறேன். நம் வீட்டில் நடக்கும் இது போன்ற நிகழ்வின் புகைப்படங்களை பொதுவில் வெளியிடுவதை நீங்களோ நானோ விரும்பமாட்டோம் தானே காக்கா. நாம் செய்ய தயங்கும் செயல், பிறர் விசயத்திலும் செய்யாமல் இருப்பது தானே நியாயம்.. இவ்வாறு கேட்பது கேட்பது தவறா காக்கா?
என்னுடைய ஆதங்கள் நியாயமானது என்று ஏற்றுள்ள உங்களைப் போன்றவர்கள். இது போன்ற முஸ்லீம் பெண்களின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை பொதுவில் பதிவதை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் எதிர்ப்பார்ப்பு.
//ஒற்றுமையெனும் கயிற்றைப் பற்றிப் பிடித்து
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிற தாரகை மந்திரத்தை மனதில் விதைத்து சகோதர உணர்வுடன் அனைவரும் ஓர் அணியில் சேருங்கள். குறை இல்லாத தவறு செய்யாத மனிதர்கள் யாருமில்லை.//
நீங்கள் குறிப்பிட்டுள்ள " ஒற்றுமை எனும் கயிறு" என்பது இஸ்லாமிய கருத்தல்ல. இந்த கருத்துக்கு பின் வரும் குர்ஆன் வசனத்தையும் என்னுடைய ஏனை பதிலையும் வாசித்துப் பாருங்கள் காக்கா..
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.
(திருக்குர் ஆன் 3:103 - 105)
அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்கள், இவை இரண்டிற்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக நாம் வாழ்ந்து சகோதரத்துவம் பேணுவோம். அல்லாஹ்வின் கட்டளை, நபி ஸல் அவர்களின் வழி முறைகளுக்கு மாற்றமாக நம் மக்கள் நடந்தால் அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதும், திருத்துவதும் நமது பிராதான கடமை என்பதை நினைவில் வைத்துக்கொண்டால் குழப்பமில்லை, சகோதரத்துவம் வலுபெறும்.
இதல்லாமல் பத்திரிக்கை தர்மம், கருத்துச் சுதந்திரம் என்று இஸ்லாத்திற்கு வேட்டுவைத்துவிட்டு சகோதரத்துவம் பற்றி பேச இஃலாஸுல்ல எந்த ஒரு முஸ்லீமும் முயலமாட்டான் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
என்னுடைய கருத்தில் தவறு இருந்தால், நீங்கள் மூத்தவர் என்ற முறையில் உரிமையோடு சரியாக சுட்டிக்காட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன் காக்கா.
பயனுள்ள கட்டுரை சகோ தாஜுதீன்.THANKS
இன்றையசமுதாயம்இதுபோன்றவைகளிலில்நேரத்தைவீனடிப்பதைவிடபலனுள்ளகாரியங்களில்கவனம்செலுத்தலாம்.நல்லபதிவுதம்பிதாஜுதீன்.
அன்பின் சகோ. தாஜிதீன். தாங்களிடம் ஒரு சந்தேகத்தை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதாவது நமது இஸ்லாமிய அமைப்புக்கள் நமது உரிமை மற்றும் சமுதாய பிரச்சனைகளுக்காக. நமது பெண்களை முன் நிறுத்தி பொதுக்கூட்டம் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்வதுடன் அவர்களை புகைப்படம் எடுத்தும் காணொளியில் பதிவு செய்தும் அவர்களின் பேச்சுக்களையும் பதிவு செய்து பல. சமூக. தளங்களிலும் மீடியாக்களிலும் வெளியிடுகிறார்களே. அது ஏற்றுக்கொள்ளக் கூடியதா.? அப்படி கூடாது என்று சொன்னால் அதற்கு நீங்கள் ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. விளக்கம் தரவும்
நண்பா,
போர்க்களத்தில் பணிவிடை செய்த பெண்களைக் கண்டது நம் மார்க்கம்.
பெரும்பாலான ஆண்கள் வெளிநாடுகளுக்குப் பிழைப்புத் தேடி சென்றுவிட்டதால், கூட்டத்தின் அளவை வைத்தே போராட்டங்களின் விளைவுகள் நிர்ணயிக்கப்படும் அட்டு ஜனநாயகத்தில் வாடும் நம் சமூகத்திற்கு வேறு வழி இல்லாததால் பெண்களையும் களத்திற்கு அழைக்கிறார்கள்.
இது சரிதான் என்பது என் தனிப்பட்ட கருத்து. தாஜுதீன் முரண்படலாம்; எனக்குத் தெரியாது.
அஸ்ஸலாமு அலைக்கும், மெய்சா காக்கா,
//நமது இஸ்லாமிய அமைப்புக்கள் நமது உரிமை மற்றும் சமுதாய பிரச்சனைகளுக்காக. நமது பெண்களை முன் நிறுத்தி பொதுக்கூட்டம் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்வதுடன் அவர்களை புகைப்படம் எடுத்தும் காணொளியில் பதிவு செய்தும் அவர்களின் பேச்சுக்களையும் பதிவு செய்து பல. சமூக. தளங்களிலும் மீடியாக்களிலும் வெளியிடுகிறார்களே. அது ஏற்றுக்கொள்ளக் கூடியதா.? அப்படி கூடாது என்று சொன்னால் அதற்கு நீங்கள் ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. விளக்கம் தரவும் //
தங்களின் அழகான கேள்விக்கு இதோ என் பதில்..
பெண்களை போராட்ட களத்திற்கு அழைத்துச் செல்வதில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. இது பற்றி "எல்லாத்தையும் நெட்டில் போடு" தொடரில் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. காத்திருக்கவும் காக்கா.. இருப்பினும் முகநூல்களில் இது தொடர்பாக நிறைய கருத்துப்பறிமாற்றம் செய்ய்ம் வாய்ப்பு கிடைக்கும் போது, என்னுடைய மாற்றுக்கருத்தை பதிந்துள்ளேன். தகவலுக்காக ஊரில் பிற முஸ்லீம் பெண்களை போராட்டத்துக்கு அழைக்கும் கூட்டத்து கிளைத் தலைவர்கள் சிலர் தங்கள் வீட்டுப் பெண்களை அழைத்துச் செல்ல முடியவில்லை என்பது வேறு சங்கதி.
இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற்கு முஸ்லீம் பெண்களை அழைத்துச் செல்லுவது சரி என்று சொல்லுபவர்கள் நடத்தும் போராட்டங்கள் என்பது பொது காரியம், அதில பெண்கள் அநேகம் பஃர்தா அணிந்தவர்களாகவே நாம் பார்க்கிறோம். முஸ்லீம் பெண்கள் கண்ணியமான முறையில் பார்தா அணிந்து தங்களின் மார்க்க பணிகள், மேடை பேச்சுக்கள் பேசுவதை எதிர்ப்பது தவறு.
நான் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன், திருமணம் என்பது ஒரு குடும்பத்தில் தனிப்பட்ட நிகழ்வு, குறிப்பாக முஸ்லீம்கள் பெண்கள் தங்களின் அளங்காரங்கள், அழகிய உடைகளுடன் அவர்கள் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கும் ஒரு private event. இது போன்று நம் வீடுகளில் நடைபெறும் திருமண நிகழ்வில் நம் வீட்டுப் பெண்கள் இருக்கும் புகைப்படங்களை பொதுவில் வெளியிட நாம் நிச்சயம் அனுமதிக்க மாட்டோம், ஆனால் பிற முஸ்லீம்களின் விட்டுக் கல்யாண புகைப்படங்களில் நம் மார்கத்தின் சகோதரிகளான முஸ்லீம் பெண்கள் இருக்கும் புகைப்படங்கள் பொதுவில் வெளியிடுவது நியாயமா?
சரிதான் என்றால், அதற்கு விளக்கம் வேண்டும்.. தவறு என்றால் அது போன்று நாம் சார்த்திருக்கும் தளங்களில் இனி பகிராமல் இருத்தல் வேண்டும்.
திருமணம் போன்ற தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளை பொது நிகழ்வுகளோடு கேள்வி கேட்பதி நியாயமா காக்கா?
நான் ஏதோ அநாகரீகமான வார்த்தைகள் கொண்டு விமர்சித்ததாக நீங்கள் என் மீது குற்றம் சுமத்தினீர்களே காக்கா.. அதனை நீங்கள் சுட்டிக்காட்டுவீர்கள் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன் காக்கா.
உங்கள் பதிலை எதிர்ப்பார்த்தவனாக.
தாங்கள் எழுதிய கட்டுரையில் என் மனதை நெருடிய வரிகள்
//தற்போது இந்த நாட்டில் பலகீனமான குடிமக்களாக ஆக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு, பாசீச சக்திகள் மட்டும் ஒரு காரணமல்ல, நாமும் அதற்குக் காரணம். இஸ்லாம் கற்றுத் தந்த அழகிய வழிமுறையில் வாழத் தவறி அனாவசியமாக எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவது ஒருபுறம், சின்னச் சின்ன நிகழ்வுகளுக்காக முகஸ்துதி என்று வெத்துப்பெருமை இன்னொரு புறம்.//
// பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் என்று காரணம் காட்டி முஸ்லீம் பெண்களைப் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பொதுதளங்களில் பரப்பும் கணவான்களே, பெரியோர்களே, தாய்மார்களே. உங்களிடம் கேட்கும் கேள்வி இதுதான். இது போன்ற திருமண நிகழ்வுகள் உங்கள் வீடுகளில் நடந்தால், பட்டுப்புடைவையோடும், அலங்காரங்களோடும், சீவி சிங்காரித்துக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டுப் பெண்கள் இருக்கும் புகைப்படங்களையும், விடியோக்களையும் நீங்கள் வெளியிட விரும்புவீர்களா? நிச்சயம் விரும்ப மாட்டீர்கள். ரஹீமாவும் ஒரு முஸ்லீம் பெண்தானே, அப்துல் ஹாலிக் மணம் முடித்திருக்கும் கீழக்கரையைச் சேர்ந்த அந்த பெண்ணும் மூஸ்லீம் பெண்தானே. இந்த முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களைப் பரப்புவது எவ்வகையில் நியாயம்?
தன் வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்வுகளில் நம்மவர்கள் வீட்டில் மகள், மனைவி, தாய் போன்றவர்களின் புகைப்படங்களைப் பொதுத் தளங்களில் போட மனம் தடுக்கும் போது பிற வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள பெண்கள் யாருடைய மகளாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ இருப்பாரல்லவா? நமக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? இது அப்பட்டமான இரட்டை வேடமில்லையா?//
மேற்கண்ட வரிகளை இன்னும் சற்று மென்மையாக குறிப்பிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்தாக உள்ளது . இன்னும் சொல்லப் போனால் சம்மந்தப்பட்டவர்கள் அனுமதியோடு தான் புகைப் படங்களும் காணொளியும் எடுக்கப்பட்டு எல்லா சமூகதளங்களிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. [ இதை மார்க்க ரீதியாக நான் தர்க்கம் பேசி நியாயப் படுத்தவில்லை. ] அப்படியானால் அவர்களுக்கும் தாங்களின் இந்த ஆதங்கத்தை சமூக தளங்கள் மூலம் அறியப்படுத்த வேண்டும்.
வார்த்தைப் பிரயோகம் என்பது மிக முக்கியமாக கவனிக்கப் படவேண்டும்.. எந்த சூழ் நிலையிலும் அடுத்தவர்கள் மனம் புண்படியான வார்த்தைகளை நாம் ஒருபோதும் உபயோகப் படுத்தக் கூடாது என்பதே எனது அறிவுரையாக இருக்கிறது. [ என்னைப் பொருத்தமட்டில் இந்த விசயத்தில் யார் மனதையும் புண்படுத்தாதவாறு மிகக் கவனமாக நடந்து கொள்வேன். அதையே பிறரிடமும் உரிமையுடன் எதிர் பார்ப்பேன். எனது தகப்பனார் எனக்குச் சொல்லித்தந்த நல்லுபதேசங்களில் இதுவும் ஒன்று. ]
மற்றும் அடுத்ததாக என்னுடைய விடைதெரியாத கேள்விக்கு தாங்களும் எனது அன்பு நண்பன் சபீரும் விளக்கம் தந்தீர்கள். ஆனால் இஸ்லாமிய நிகழ்ச்சியானாலும் எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் புகைப் படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவது சரியா தவறா என்பதற்கு மார்க்க ரீதியான கூடும் கூடாது என சரியான விளக்கம் தரவில்லை..
அஸ்ஸலாமு அலைக்கும் மெய்சா காக்கா,
தங்களின் மற்றுமொரு கருத்துக்கு மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ் ஹைரா..
நான் அநாகரீகமான வார்த்தை பயன்படுத்தி இருப்பதாக முன்பு குற்றம் சாட்டினீர்கள், ஆனால் நீங்கள் இறுதியாக இட்ட கருத்தில் இந்த பதிவில் வார்த்தைகள் இன்னும் மென்மையாக குறிப்பிட்டிருக்கலாம் என்பது எங்கள் கருத்து என்று சொல்லி உள்ளீர்கள்.... இதன் மூலம் நான் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன் என்று நீங்கள் முன்பு கூறிய குற்றச்சாட்டை நீங்கள் வாபஸ் பெற்றுக்கொண்டதாக உங்கள்மீது நல்லொண்ணம் வைத்து எடுத்துக்கொள்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் தான் கட்டுரையின் முக்கிய பகுதி. ஆனால் இதில் எந்த வரியில் மென்மையற்ற வார்த்தைகள் உள்ளது என்பதை நீங்களோ அல்லது வேறு சகோதாரர்களோ சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
தன் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளில் நம் குடும்பப் பெண்கள் உள்ள புகைப்படங்களை பொதுவில் நாம் வெளியிட விரும்பாத போது. பிற முஸ்லீம் குடும்பத்தின் தனிபட்ட நிகழ்வுகளில் எடுக்கப்படும் முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை பொதுவில் வெளியிட்டு சந்தோசப்படுவது சரியா? தவறா? இதற்கு பதில் தாருங்கள்.
இந்த கட்டுரை எழுதியதன் நோக்கம் யாரின் மனதையும் புண்படும் நோக்கம் ஒரு துளிக்கூட இல்லை என்பதை அல்லாஹ் அறிந்தவன். இதற்கு மேல் வேறு வார்த்தையில்லை இல்லை காக்கா..
இந்த கட்டுரை என்னுடைய முகநூல் பக்கத்திலும் பதியப்பட்டு, நிறைய மக்களை சென்றடைந்துள்ளது. அவசியம் சென்று பாருங்கள்.. https://www.facebook.com/thowheedtv2/posts/417265451760141
இறுதியாக..
//இஸ்லாமிய நிகழ்ச்சியானாலும் எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் புகைப் படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவது சரியா தவறா என்பதற்கு மார்க்க ரீதியான கூடும் கூடாது என சரியான விளக்கம் தரவில்லை.. //
பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்களை புகைப்படங்கள் எடுப்பதில் குர்ஆன் ஹதீஸ் புரிதலில் இருவேறு கருத்துக்கள் உள்ளது. அத்தியா விசயமானவைகள் (பாஸ்போர்ட், ஐடி கார்ட் எடுக்க) தவிர புகைப்படங்கள் தவிர்க்க வேண்டும்,, மார்க்க நிகழ்ச்சிகளை வீடியோ எடுப்பதின் மூலம், அந்த நிகழ்ச்சி பிற மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நன்னோக்கில் வீடியோ எடுக்க அனுமதிக்கிறார்கள் சில உலமாக்கள், இதற்கு மாற்றமான கருத்துக்களும் உலமாக்கள் மத்தியில் உள்ளது. நீங்கள் கேட்டிருக்கும் இந்த சப்ஜெக்ட் ஒரு நீண்ட விளக்கம் கொண்டு புரிய வைக்க வேண்டிய ஒன்று. பொதுவாக மக்கள் கூட்டத்தை ஆவணப்படுத்துவதற்காக புகைப்படம், வீடியோ எடுக்கும்போது பெண்களை அமர்ந்திருக்கும் பகுதிகளையும் நிகழ்ச்சிய எடுக்கிறார்கள் மார்க்க நிகழ்ச்சி நடத்துபவர்கள். அவ்வாறு செய்வது ஒன்றும் தவறில்லை. காரணம் அது பொதுவான நிகழ்ச்சி, வரும் பெண்கள் பொது இடங்களுக்கு வருவது போன்ற உடைகளை (பர்தா) அனிந்தவர்களாக வருகிறார்கள். இருப்பினும் ஹிஜாப் பேனிய பெண்களாக இருந்தாலும் அவர்களை மட்டுமே முன்னுறுத்தி போட்டோக்கள், வீடியோக்கள் எடுப்பதை தவிர்ப்பது சமுதாயத்திற்கு நலன் தரும் என்பது என் நிலைபாடு. மார்க்கத்தில் கூடுமா கூடாத என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளது. என் நிலைபாடு முஸ்லீம் பெண்களை புகைப்படங்கள் எடுத்து பொது தளங்களில் வெளியிடுவதை தவிர்ப்பது நல்லது. காரணம் சைத்தான் உள்ளத்தில் தவறான எண்ணத்தை போடுவான் என்பதால் தவிர்ப்பது நல்லது.
நாம் நம் விசயத்தில் செய்ய அறவே விரும்பாத ஒரு செயலை, பிறர் விசயத்தில் அச்செயலை செய்ய விரும்புவதும், அனுமதிப்பதும் நியாயமா?
நான் இந்த பதிவில் கேட்கும் இந்த கேள்வி சரியா? தவறா?
என்னோடு கண்ணியத்தோடு உரையாடிய உங்களுக்கு (மெய்சா காக்கா) மிக்க நன்றி. அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.. இதற்கு மேல் இந்த பதிவில் நான் கருத்திட்டு நேர விரயம் செய்ய விரும்பவில்லை. அல்லாஹ் போதுமானவன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைவரின் கருத்தையும் நான் இன்னும் படிக்கவில்லை..
இருப்பினும், இந்த கேடுகெட்ட செயலை பற்றி புகழ்ந்து வெளிவந்த தளத்திலேயே நான் ஆக்கம் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்.. இன் ஷா அல்லாஹ் நேரம் கிடைத்தால் எழுதுவேன்.
common sense ஐ குப்பையில் போட்டுவிட்டு நம் மக்கள் மாக்களாக மாறியதை இந்த இரு திருமணங்களில் பார்க்கமுடிந்தது.. இசுலாத்திற்கு வந்ததற்காக இவ்வளவு பெரிய அலப்பரை "ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை கொலை செய்யவும் தயங்காத உமர் (ரழி) அவர்கள் இசுலாத்தை ஏற்ற சமயத்தில்கூட சஹாபாக்கள் இவ்வளவு விமர்சையாக கொண்டாடியதாக தெரியவில்லை.. அப்படியே இருந்திருந்தால்கூட சத்தியத்தை ஏற்று, அந்த சத்தியத்திம் காட்டிக்கொடுத்த வழியில் நடக்காத இந்த திருமணங்களுக்கு இவ்வளவு அலப்பரை கோபத்தைத்தான் வரவழைக்கின்ற்றது..
நாசூக்காக சொல்லப்போனால் -உற்சாக மடத்தனங்கள்
//நாசூக்காக சொல்லப்போனால் -உற்சாக மடத்தனங்கள் //
மிகச் சரியே !
பயனுள்ள கட்டுரை சகோ தாஜுதீன்.THANKS
Post a Comment