சென்ற 14,15 ஜனவரி 2011 தேதிகளில் அதிராம்பட்டினத்தில் ‘கல்வி விழிப்புணர்வு மாநாடு’ ஒன்றை நடத்தினோம். அதன் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக ‘கல்விக் கருத்தரங்கு’ ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தோம். அதற்குத் தலைமை வகிக்கக் கல்வியாளராகவும் உள்ளூர்வாசியாகவும் இருக்கும் ஒருவர் அழைக்கப்பட வேண்டும் என்ற எனது கருத்தைச் சகோதரர்களிடம் பதிவு செய்தேன்.
அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பை அவர்கள் என்னிடமே விட்டார்கள். நான் ஒருவரைப் பரிந்துரைத்தேன். அந்த அமர்வில் இருந்த எவருக்கும் அறிமுகமில்லாதவர் அவர்! யாருக்கும் தெரியாதவர்; எனக்கு மட்டும் அறிமுகமானவர் என்பதால், என்னையே பொறுப்புச் சாட்டி, ‘ரிஸ்க்’ எடுக்கச் சொன்னார்கள். நான் ஆர்வத்தோடும் பெரு நம்பிக்கையோடும் களத்தில் இறங்கினேன்.
‘சலாம்’ எனும் முகமனோடு தொடங்கிய எனது அழைப்புக்குப் பின்னர், “அதிரை அஹ்மது பேசுகிறேன்” என்றேன். நலம் விசாரித்த பின்னர், அடுத்த முனையிலிருந்து அழகிய மறுமொழி, அழகிய தமிழில் நலம் விசாரிப்பு, ஊர் நடப்புகள் பற்றியெல்லாம் கேட்டுவிட்டு, “எப்போது?” என்றார் சென்னையில் வசித்த அந்த ‘அதிரை அறிஞர்’, ‘தமிழ்மாமணி’, புலவர், அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள்.
நான் தேதிகளைச் சொன்னவுடன், “சரி, முதல் நாளே நானும் மகனும் வந்துவிடுகிறோம்” என்ற தேன்மொழியைத் தந்தார்கள். எப்படியும் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு; ஆனால், மற்ற சகோதரர்களோ, ‘வருவாரா? பேசுவாரா? என்ன பேசுவார்?’ என்றெல்லாம் புதிரில் ஆழ்ந்திருந்தார்கள்.
வாக்களித்தபடி, முதல் நாளே வந்து சேர்ந்து முகமலர்ச்சியைத் தந்தார்கள்! மெலிந்த உருவம், முதிர்ந்த வயது, தோளில் ஒரு துண்டு, தலையில் தொப்பி, கையில் ஒரு பை சகிதம் அரங்கினுள் நுழைந்து அகம் குளிரச் செய்தார்கள் அந்த ‘அதிரை அறிஞர்’.
முதல் நாள் நிகழ்ச்சி ஒரு பயிலரங்கு. ‘உனக்குள் உன்னைத் தேடு’ எனும் தலைப்பிலும், ‘அறிமுகமில்லாத அறிய படிப்புகள்’ என்ற தலைப்பிலும் பேராசிரியர் முனைவர் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய பயிலரங்கை நம் ‘தமிழ்மாமணி’யவர்கள் தம் மகனாருடன் கண்டு மகிழ்ந்தார்கள்.
முதல் நாள் நிகழ்ச்சி மாணவர்களுக்கு மட்டும் என்றிருந்தது. அடுத்த நாள் தொடங்கிய ‘கல்விச் சிந்தனைக் கருத்தரங்கு’ எல்லாருக்கும் பொதுவானதாக அமைந்ததால், ‘சாரா அரங்கு’ கலை கட்டி நின்றது. எனது அறிவிப்பழைப்பைத் தொடர்ந்து, ‘அதிரை அறிஞர்’ அவர்கள் கம்பீரமாக வந்து மேடையில் அமர்ந்தார்கள். அதுவரை, ‘இவர் என்ன பேசுவாரோ?’ என்று எண்ணிக்கொண்டிருந்த சகோதரர்களுக்கு, ஒரு நம்பிக்கை.
புலவர் பஷீர் ஹாஜியாரின் செந்தமிழ்ப் பேச்சு சிந்தையைக் கவரும் ஆய்வுரையாக அமைந்ததை உணர்ந்த அவையினர், ‘இப்படியும் ஒருவரா இந்த அதிரையில்!’ என அயர்ந்து போயினர். ‘சரியான தலைமை’ என்று சகோதரர்கள் பாராட்டியபோது, நான் பூரிப்படைந்தேன். ‘அடுத்தடுத்தும் இவர்களை அழைத்துப் பேச வைக்க வேண்டும்’ என்று அவர்களைக் கூற வைத்தது அந்தத் தலைமையுரை.
எமது அந்த மாநாட்டின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது அவ்வறிஞரின் பேச்சு. அதைவிட, புலவர் அவர்கள் காட்டிய ஆர்வம் மாநாட்டு அமைப்பாளர்களை அகமகிழச் செய்தது.
மாநாட்டைத் தொடர்ந்து, உள்ளூரில் இயங்கும் தனியார் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழாவிலும் சில மாதங்களுக்குப் பின்னர் சென்னையிலிருந்து வந்து கலந்துகொண்டு, சிறார்களை வாழ்த்திப் பேசினார்கள் அந்தக் கல்வியாளர். கல்வியாளரும் கவிஞரும் சிறுவர் இலக்கியச் செம்மலுமான அந்த ‘அதிரை அறிஞர்’, தாய்மார்களே அதிகமாகக் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பெண்மணிகளை மூக்கில் விரல் வைக்கச் செய்தார்கள். அன்று அவர்களிடத்தில் பரவியிருந்த ஆர்வத்தையும் அறிவாற்றலையும் கண்கூடாகக் கண்டேன் நான்.
அடுத்த கல்வி விழிப்புணர்வு மாநாடு நெருங்குகின்றது. ஆனால், அவ்வறிஞரை அல்லாஹ் தன் பக்கம் அழைத்துக்கொண்டான்! சென்ற செப்டம்பர் 26 ஆம் தேதியன்று பிற்பகல் மூன்றரை மணியளவில் அன்னாரின் புதல்வர் பேராசிரியர், அஃப்சலுல் உலமா, அஹ்மது ஆரிப் M.Com., M.Phil அவர்களிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு என்னை அதிர வைத்தது!
தமிழ்மாமணிவர்கள் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் ஆற்றிய தலைமையுரைக் காணொளியைக் கண்ட வெளிநாடுவாழ் அதிரைச் சகோதரர்கள் எங்களூர் வலைத்தளங்களில் அவர்களைப் பாராட்டிப் போற்றியதும், நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறியதும் இன்றும் பசுமையாக நிற்கின்றன.
தமிழ்மாமணி, புலவர் பஷீர் அவர்கள் அதிராம்பட்டினத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தமது கல்வி முன்னேற்றத்தின் பின்னர், சென்னையில் பள்ளித் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, அங்கேயே ‘செட்டில்’ ஆனவர். அதனால், ஊரிலிருக்கும் பெரும்பாலாருக்கு அவர்களைத் தெரியாது. எங்கள் முதலாவது கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் மூலம் பலரும் அறிந்துகொண்ட பண்பாளராகிவிட்டார்கள்.
இஸ்லாமியத் தமிழிலக்கியத்திற்கும் மார்க்கத்திற்கும் அவர்கள் படைத்தளித்த நூல்கள்:
* சிரி குழந்தாய் சிரி! (கவிதைகள்)
* முன்னேறு முன்னேறு மேலே மேலே (கவிதைகள்)
* மறுவாழ்வு (சிறுவர் நாடகங்கள்)
* குழந்தை இலக்கியம் (திறனாய்வு)
* இஸ்லாமியக் குழந்தை இலக்கியம் (திறனாய்வு)
* உமறுப் புலவர் கவித் திறன்
* முத்துக் குவியல் (சிறுவர் பாடல்கள்)
* கருணை நபி (ஸல்)
* புது மலர்கள் (ஒன்பது தொகுதிகள் கொண்ட சிறார் பாட நூல்)
* பெற்றோரே!
* படி... படி... படி... (வழிகாட்டி நூல்)
* சிரிக்கும் பூக்கள் (சிறுவர் பாடல்கள்)
நூல்கள் கிடைக்குமிடம்:
சிங்கைப் பதிப்பகம் (போன் : 0091 44 23772742)
270, கங்கை தெரு , சேக் அப்துல்லா நகர்
ஆழ்வார்த் திருநகர், சென்னை 600 087
- அதிரை அஹ்மது
10 Responses So Far:
"புத்தகங்களை குழந்தைகள் கிழிக்கும், சில புத்தகங்களோ.. குழந்தைகளைக் கிழிக்கும்" என்பார்கள். சிறுவர் சிறுமியர் படிக்கும் வகையில் நல்ல புத்தகங்கள் வெளிவருவது/வெளியிடுவது மிகவும் அரிதான காலம் இது. ஆனால், ஹாஜியார் அவர்களோ, சிலரே தொடுகின்ற ஒரு துறையை தேர்ந்தெடுத்து, குழந்தைகளுக்கான இலக்கியத்தை நல்ல தரத்துடன் உருவாக்கியிருக்கின்றார்கள். குறைந்த பட்சம், சிறுபான்மையினர் (எனச் சொல்லபடுகின்றவர்கள்) நடத்துகின்ற பள்ளிகளிலாவது ஹாஜியாரது சிறுவர் பாடல்களை பாட புத்தகங்களில் இடம்பெற முயற்சி மேற்கொள்ளுதல் அவசியம். அதுவே அன்னாருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் என நான் கருதுகிறேன்.
மூத்த அறிங்கரை இலந்தது அவரின் குடும்பம் மட்டுமல்ல, நம் ஊர், சமுதாயம், தமிழ் பேசும் நல்லுலகமும் தான்,
பேரறிஞர் தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில் தான் பிறந்த மண்ணிற்கு தனக்குள் சுமந்த கல்வி ஞானத்தை உறிதியுடன் விதைத்து விட்டு சென்றுள்ளனர் என்பதுதான் உண்மை. அன்னாரின் ஆக்கங்களை பக்குவமாக கல்வித்துறைக்கு எடுத்து செல்லவேண்டும். குறைந்த பட்சமாக தனியார் பள்ளிகளின் பாட திட்டங்களில் இணைக்க வழிவகை செய்யவேண்டும்.
அவரின் ஆக்கங்களை அரசு மற்றும் அனைத்து சமுதாய கல்வி நிருவனங்ககள் பயண படுத்தி கொள்ளவேண்டும். இல்லையெனில் அது மாணவ சமுதாயத்திற்கு கிடைக்கப்பெற வேண்டிய கல்வி உரிமை மறுப்பேயாகும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் பஷீர் ஹாஜியார் அவர்கள் பேசிய பேச்சை என்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அவர்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் வரலாறு, அவைகளை ஆவனப்படுத்த வேண்டும்.
மேலும் பஷீர் ஹாஜியார் அவர்களின் புத்தகங்களை வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப ebook வடிவில் கொண்டுவர அன்னாரின் புதல்வர் பேராசிரியர், அஃப்சலுல் உலமா, அஹ்மது ஆரிப் M.Com., M.Phil அவர்கள் முயற்சிக்க வேண்டும் என்பது ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
புலவர் நல் வழியில் அவர்களது புதல்வர்கள் தொடர வேண்டும்.அன்னாருக்கு துஆக்கள்.
மூத்தவர்களை வாழ்த்துதல் நற்பண்புகளில் ஒன்று. அதிலும் சிறப்பாக வாழ்ந்து மறைந்தவர்களை நினைவுகூர்வது ஒரு மனத்திற்குப் பிடித்த உணர்வு.
அதிரை அறிஞரைப் போலவே அவர்களை நமக்கெல்லாம் வெளிச்சமிட்டுக்காட்டிய அதிரை அஹ்மது அவர்களும் நமக்கெல்லாம் மிகவும் முக்கியமானவர்கள்தாம்
‘தமிழ்மாமணி’, புலவர், அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள்,
56 வருடகள் முந்தய ‘கல்வி விழிப்புணர்வு நினைவுட்டினர்,அதுபோன்ற அவரின் இனிய்குரளும் 56 வருடகளுக்கு முன்பு உள்ளதுபோல் உள்ளது,
//பாலகரே பாலகரே !
பலன்தரும் வேலையிலே !
கால நேரத் தோடே
கற்றுக் கொள்வீர் முக்கியமாய் !
புத்திரியே புத்திரியே - என்
பொருத்தமுள்ள புத்திரியே !
புத்தியுடன் என் சொல்லை
பொருந்திக் கொள்வாய் புத்திரியே !//
என்றும் நினைவில் நிழலாடும் குரல் !
அனைத்துப் புத்தகங்களையும் வாங்கனும் ஒவ்வொன்றாக வாசிக்கனும் ! இன்ஷா அல்லாஹ்...
மூத்தோர் பெருமைகள் அறியணும்,நாமும் அவர்களைபோல் குறைந்தளவினும் வாழப்பழகணும்..அருமையான நினைவாக்காம் சகோ.அதிரை அஹ்மது அவர்களே
ஒரு சிலரே விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள், இவர்களையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சீக்கிரமே தன் பக்கம் எடுத்துக்கொள்கிறான், மறைந்தவுடன் தான் அவர்களின் பேராற்றல் தெரியும் என்பார்கள், அல்லாஹ் அவர்களுக்கு சொர்கத்தை கொடுத்து அவர்கள் இதுவரை ஆற்றிய பணியின் மூலம் நல்ல கருத்துக்கள் மக்களை சென்றடைய செய்வானாகவும், ஆமீன்
ஊரில் இல்லாத போழ்தும் நூற்களினூடே சிறார்களின் சிந்தைகளில் வாழ்ந்த புலவர் அவர்கள் உலகில் இல்லாத போழ்தும் உள்ளங்களில் வாழ்கின்றார்கள்.தூரத்து உறவினராக அமைந்தும் காண முடியாமற் போனது. அவர்களின் கரங்களில் என் ஆக்கங்கள் தவழ வேண்டும்; அவர்கள் வதனங்கள் புகழ வேண்டும் என்ற என் பேரவாவும் நிறைவேறும் முன்பாகவே இறைவனின் நாட்டம் முந்தி விட்டது!மரபுப்பாக்களை மதிக்கும் புலமை மிக்கச் சான்றோரான புலவர் பெருமகனார் புவியினைக் கடந்து விட்டதில் கவியன்பன் எனக்குக் கலக்கம். இப்பொழுது அல்லாஹ் அருளால் நம்முடன் இருக்கும் அதிரை அஹ்மத் காக்கா மற்றும் அருட்கவி அதிரை தாஹா இருவரும் என் போன்ற மரபுப்பா காதலர்கட்கு இருக்கும் வரை காவலர்கள். அனைவரும் ஏற்றுக் கொண்ட வண்ணம், அன்னாரின் புதல்வர் அவர்கள் தந்தையின் இலக்கியப் பூக்கள் வாடா வண்ணம் மின் நூல் வடிவில் பதியம் இடுக. மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றிக் கடன் ஆகுக.
Post a Comment