Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெண் இமைக்குள் ஆண்மை ! 41

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2015 | , ,


ஏதோவொரு  மூலையில்
முடங்கிய என் மீது
நீங்கள் தான் வெளிச்சம் பாய்ச்சினீர்கள்

பத்துபைசாவிற்குக்கூட  பிரயோஜனமற்ற
என் சிறுபிள்ளைத்தன கேள்விகளுக்கும்
மதிப்பளித்து விடையளித்தீர்கள்
பொறுப்பான தந்தையாய்

கேலி செய்யும்
குட்டிச்சுவர்வாசிகளும்
தெரு ஆக்ரமிப்பு ஜந்துக்களும்
எனைமட்டும் சீண்ட
பயங்கொள்ளச் செய்தீர்கள்
காவல்வரும் சகோதரனாய்

கற்றது போதுமென
உங்களை கரம்கோர்த்தபோது
அதே கரத்தில் ,
லட்சியங்களை நிறைவேற்ற
சத்தியபிரமாணம் வாங்கிகொண்டீர்கள்
வழிகாட்டும் கணவனாய்

அடுப்படி மேலாண்மை பயில
ஆவல்கொண்ட போது
யுவான்ரிட்லியையும், தவக்குல் கர்மானையும்
அறிமுகப்படுத்தி
எனக்குள் சாதிக்கும் வெறியை விதைத்தீர்கள்
பெண்மை மதிக்கும் ஆசானாய்

புத்தகமெனும் உற்றத்தோழனை
பரிசளித்து
என்னை மெல்ல மெல்ல செதுக்குனீர்கள்
உயர்ந்த தோழனாய்

கண் கொத்த  கழுகுகளும்
வீழ்த்தி விட  வல்லூறுகளும்
படையெடுத்து காத்திருக்கையில்
பாதுகாப்பு அரணாய் எனை காத்தீர்கள்
பொறுப்புள்ள சமுதாய அங்கத்தவனாய்


போதுமென முடங்கி கிடந்தபோதெல்லாம்
பாதைகளை வகுத்து பயணிக்கச் செய்தீர்கள்
உன்னதமான வாழ்க்கை வழிகாட்டியாய்

குறைகளை பக்குவமாய் சொன்னீர்கள்
என் கோபங்களில் ஒளிந்திருக்கும் நியாயங்களை புரிந்தீர்கள்
திமிரினை ரசித்தீர்கள்
என் பேச்சுக்களுக்கு ரசிகனாய் இருந்தீர்கள்

பெண்ணின் மனதை
பெண்ணால் தான் அறியமுடியுமென்ற
வாழையடி வாழை நம்பிக்கைகளையெல்லாம்
வேரோடு சாய்த்து
என் ஆதங்கங்களையும் ஆசைகளையும் உணர்ந்தீர்கள்

நான் யார் என்பதையே
நீங்கள் தான் அறியத் தருகிறீர்கள்
என் ஒவ்வொரு வளர்ச்சியிலும்
உங்கள் பங்களிப்பே ஆக்ரமித்திருக்க
எப்படி என் வாயால் பேசுவேன்
ஆண்களை மட்டும் குறை கூறும் பெண்ணியத்தை ???

ஆமினா முஹம்மத்

41 Responses So Far:

crown said...
This comment has been removed by the author.
crown said...
This comment has been removed by the author.
crown said...
This comment has been removed by the author.
crown said...
This comment has been removed by the author.
crown said...
This comment has been removed by the author.
crown said...
This comment has been removed by the author.
Unknown said...

புரியிது, புரியிது...!

//நான் யார் என்பதையே
நீங்கள் தான் அறியத் தருகிறீர்கள்
என் ஒவ்வொரு வளர்ச்சியிலும்
உங்கள் பங்களிப்பே ஆக்ரமித்திருக்க
எப்படி என் வாயால் பேசுவேன்
ஆண்களை மட்டும் குறை கூறும் பெண்ணியத்தை ???//

ஆண் பெயர்தாங்கிகளாகப் பெண்ணியம் பேசும் பேடிகளுக்கு இடையிலும்,
விரசக் கவி எழுதி அரசியல் இலாபம் பார்க்கும் 'கவிதாயினி' (?) களுக்குமிடையில், சகோதரி ஆமினா முஹம்மத் உண்மையை உரத்துக் கூறும் ஓர் ஒளித் தாரகை!

சகோதரி,
எங்கள், இளையவர் வாழ்வில் இனிய வசந்தமான 'இளம்பிறை' இதழில் உங்கள் 'அடம் பிடிக்கலாம் வாங்க!' என்ற கட்டுரை அருமை.
Different approach!

அதிரை.மெய்சா said...

ஆண்களை பற்றிய தவறான எண்ணத்தை போக்கும்விதமாக ஆண்களின் அருமையைபுரிந்து பாசிடிவாக கவிதை வரிகளால் அலங்கரித்துள்ளீர்கள். அருமை.

Unknown said...

Crown சொன்னது:

.//ஆனால் தந்தையாய் ஒரு மனைவிக்கு பணியாற்றினான் என்றால் இது அர்த்தபிழை வரும் என அஞ்சுகிறேன்.//

சகோதரி சொன்னது சரியே. தான் பெற்ற பிள்ளைகளுக்கு - கணவன் தனக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு - அவன் 'தந்தையாய்ப் பணியாற்றினான்' என்று கொள்ளலாம் அல்லவா? பின்ன என்ன, வாடகைத் தாயா அவள்?

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய க்ரவ்ன்,

வாசிப்பில் அவசரம் தெரிகிறது; பதிவதற்கான பரிசீலனையின்போது எனக்கும் தோன்றிய அதே பொருள் மயக்கம் உங்களுக்கும் தோன்றியிருக்கிறது.

கவிதாயினி அவர்கள் தம் வாழ்க்கையில் கடந்து வந்த ஆண்களின் பல பரிமாணங்களைப் பேசுகிறார்களே தவிர, கணவனை மட்டுமல்ல!

இப்போது மீண்டும் வாசியுங்கள்!

crown said...

Adirai Ahmad சொன்னது…

Crown சொன்னது:

.//ஆனால் தந்தையாய் ஒரு மனைவிக்கு பணியாற்றினான் என்றால் இது அர்த்தபிழை வரும் என அஞ்சுகிறேன்.//

சகோதரி சொன்னது சரியே. தான் பெற்ற பிள்ளைகளுக்கு - கணவன் தனக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு - அவன் 'தந்தையாய்ப் பணியாற்றினான்' என்று கொள்ளலாம் அல்லவா? பின்ன என்ன, வாடகைத் தாயா அவள்?
---------------------------------------------------
அஸ்ஸலாமுலைக்கும் சாச்சா! நலமா? நானும் இந்த ஐயத்தை எழுப்பித்தான் கேள்வி கேட்டுள்ளேன். இது சகோதரியின் நேரடிப்பார்வையாக கவிதை உள்ளது.தனக்கு நேர்ந்த உதவிகளை எழுதும் கோணதத்தில் நான் கேட்டேன்.மேலும் நான் பதிந்தது இதுதான்""(சகோதரி தாம் சொல்ல வந்தது ஒருதகப்பன் போல,எண்ணமும் அதுவே அறிவேன்.ஆனால் வார்தை அங்கே பிழை தரும் விதமாக இஸ்லாம் வழி நின்று பார்க்கிறேன். கணவன் ஒரு தந்தை போல் பணியாற்ற முடியும், தந்தையாக குழந்தைகளுக்கு பணியாற்ற முடியும் .ஆனால் தந்தையாய் ஒரு மனைவிக்கு பணியாற்றினான் என்றால் இது அர்த்தபிழை வரும் என அஞ்சுகிறேன். சகோதரியும் தந்தையை போல் எனக்கு உதவிகள் செய்பவர் என சொல்ல வந்திருக்கும் இடத்தில் ஒரு தந்தையாய் என இருப்பது தந்தைபோல என இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன் . இங்கே வரும் கவிஞர்களும் அறிஞர்களும் பதில் சொல்வார்கள் என நம்புகிறேன்.அதுவே சகோதரன் என்பதும் ஆனால் மற்ற அணைத்து உறவுமுறைகளும் மிக்கச்சரி). நானும் சாச்சா நீங்கள் எழுதிய படி அந்த சகோதரியின் குழந்தைக்கு தந்தை என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். இதுவரை மோதிரகையில் குட்டு வாங்கவில்லை என ஏக்கம் உண்டு ஆனால் இன்று நீங்கள் சுட்டி காட்டியதே மன திருப்தி தருகிறது.சகோதரியின் பார்வையில் அவளுக்கு கணவன் மூலம் அமைந்த நல் உதவியை பதிவு செய்ததால் அவர்களுடைய பார்வையின் படி ஒரு தந்தையாய் என வந்திருப்பது அறியாமல் வந்த வார்த்தை பிழை என்றே இன்னும் என் அறிவு சொல்லிக்கொண்டிருக்கிறது.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய க்ரவ்ன்,

வாசிப்பில் அவசரம் தெரிகிறது; பதிவதற்கான பரிசீலனையின்போது எனக்கும் தோன்றிய அதே பொருள் மயக்கம் உங்களுக்கும் தோன்றியிருக்கிறது.

கவிதாயினி அவர்கள் தம் வாழ்க்கையில் கடந்து வந்த ஆண்களின் பல பரிமாணங்களைப் பேசுகிறார்களே தவிர, கணவனை மட்டுமல்ல!

இப்போது மீண்டும் வாசியுங்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------
வலைக்குமுஸ்ஸலாம்.அட! சாச்சாவிற்கு பதில் எழுதிவிட்டு தங்களின் கருத்தை பார்த்தேன். அதானே எனக்கு தோன்றும் எல்லாமும் உங்களுக்குத்தோன்றுவது பல முறை நடைபெறுவது இயற்கையாய் அமைந்தது. மறுபடியும் படித்தேன் பல முறை யல்ல ஒரு முறை,ஒரேமுறை உடனே விளங்கியது கணவனை மட்டுமல்ல எல்லா ஆண்களின் பல பரிமாணங்களைப் பற்றிதான் என்பது. மிக்க நன்றி!எளிதாய் விளங்கிவிட்டாலும் சகோதரியின் ஒவ்வொரு ஆக்கமும் ஒரு கருத்துக்கு தீனிபோடும் அளவிற்க்கு தொடர் ஆரோக்கியமான விவாத பொருளாக அமைவது பொருள் பொதிந்துள்ளது"என்பதையே காட்டுகிறது.

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அனைத்துக் கருத்துக்களும் வாசித்தேன். சகோதரர் Crown அவர்களுக்கு விளக்கம் சொல்லும் முன்னே மற்ற சகோதரர்கள் கருத்திட்டமையால் என் பணி எளிதாகிவிட்டது :) நன்றி

//அவர்கள் தம் வாழ்க்கையில் கடந்து வந்த ஆண்களின் பல பரிமாணங்களைப் பேசுகிறார்களே தவிர, கணவனை மட்டுமல்ல!//

__________________

-ஆமினா முஹம்மத்

ஆமினா said...

சகோ அதிரை அஹ்மத் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உங்கள் கருத்துக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. உங்களின் " பேறுபெற்ற பெண்மணிகள்" முதலிரண்டு பாகங்களும் வாசித்துள்ளேன். அந்த புத்தகம் தான் , எங்கள் இஸ்லாமியப் பெண்மணி தளத்தில் "சாதனைப் பெண்மணி" தொடருக்கு காரணமாய் இருந்தது. இதே பாணியில் நாம் ஏன் தமிழகத்திலுள்ள சாதனைப் படைத்த முஸ்லிம் பெண்களை அறிமுகப்படுத்த கூடாது? என்ற எண்ணத்தை விதைத்தது உங்கள் எழுத்துக்கள் தான்.

உங்களிடமே பாராட்டு பெறும் போது மன நிறைவாய் உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

//சகோதரி,
எங்கள், இளையவர் வாழ்வில் இனிய வசந்தமான 'இளம்பிறை' இதழில் உங்கள் 'அடம் பிடிக்கலாம் வாங்க!' என்ற கட்டுரை அருமை.
Different approach! ///

ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ.

crown said...

ஆமினா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அனைத்துக் கருத்துக்களும் வாசித்தேன். சகோதரர் Crown அவர்களுக்கு விளக்கம் சொல்லும் முன்னே மற்ற சகோதரர்கள் கருத்திட்டமையால் என் பணி எளிதாகிவிட்டது :) நன்றி

//அவர்கள் தம் வாழ்க்கையில் கடந்து வந்த ஆண்களின் பல பரிமாணங்களைப் பேசுகிறார்களே தவிர, கணவனை மட்டுமல்ல!//

__________________

-ஆமினா முஹம்மத்
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.கவிஞர் சபீர்காக்காவின் விளக்கம் பார்த்தபின் மறுபடியும் ஒரு முறை வாசித்தேன் . விளங்கி கொண்டேன். என்னைபோல் சாமானிய வாசகனின் தேடலுக்கு உங்களைப்போல் விபரம் தெரிந்தவர்கள் எழுதும் எழுத்துக்களே பட்டை தீட்டுகிறது. வாழ்த்துக்கள் சகோதரி. இந்த சாமானியனுக்கு குற்றம் சாட்டுவது என்றும் நோக்கம் இல்லை என்பதை புரிந்து கொண்டால் சரி.

ஆமினா said...

/ இந்த சாமானியனுக்கு குற்றம் சாட்டுவது என்றும் நோக்கம் இல்லை என்பதை புரிந்து கொண்டால் சரி. //

இல்லையில்லை! அனைத்து கருத்துக்களும் எனக்கு சந்தோஷங்களையே தருகின்றன.

கவிதைகளெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்துவிடும் நிலையில் இணையதள வாசிப்பு இருக்க, என் கவிதைக்கு மதிப்பளித்து ஒவ்வொருவரும் கருத்து பகிர்வது திருப்தியை மட்டுமே தருகிறது.

பாராட்டுக்கள் மட்டுமல்ல, மென்மையாய் திருத்தங்களை கூறுதலும் . பக்குவமாய் ஆலோசணைகள் வழங்குதலும் ஒருமனிதனை செம்மையாக்கவே செய்யும் என்பதை அறிவேன். அதையே தான் நானும் எதிர்பார்க்கிறேன்

ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோதரர் க்ரவுன்

-ஆமினா முஹம்மத்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//என்னைபோல் சாமானிய வாசகனின் தேடலுக்கு உங்களைப்போல் விபரம் தெரிந்தவர்கள் எழுதும் எழுத்துக்களே//

என்னா கிரவ்னு... பம்முறே !

sum-மாணியமே இல்லாமலே... அருவியாய் கொட்டும் வர்ணனைக்கு சொந்தக் காரனாச்சே... நீ..

crown said...

புத்தகமெனும் உற்றத்தோழனை
பரிசளித்து
என்னை மெல்ல மெல்ல செதுக்குனீர்கள்
உயர்ந்த தோழனாய்
----------------------------------------------------------
உயிரற்ற பொருளாக இருந்தாலும் உயர் நிலைப்பொருளான புத்தகம் என்ற உற்ற தோழன் என அழைப்பது தகும். நல்ல சிந்தனை!அருமை!

crown said...

கண் கொத்த கழுகுகளும்
வீழ்த்தி விட வல்லூறுகளும்
படையெடுத்து காத்திருக்கையில்
பாதுகாப்பு அரணாய் எனை காத்தீர்கள்
பொறுப்புள்ள சமுதாய அங்கத்தவனாய்
-----------------------------------------------------------------------
சாதி,மதம் கடந்து செய்யப்படும் இதுபோல உதவிதான் சமூகத்தின் மூச்சுக்காற்றை இன்னும் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது!

crown said...

பெண்ணின் மனதை
பெண்ணால் தான் அறியமுடியுமென்ற
வாழையடி வாழை நம்பிக்கைகளையெல்லாம்
வேரோடு சாய்த்து
என் ஆதங்கங்களையும் ஆசைகளையும் உணர்ந்தீர்கள்
---------------------------------------------------------------------------------------------------
பெண்ணும் மனுசி என புரிதல் இருந்தாலே வாழ்வை சந்தோசம் அதிகமாகிவிடும்!இதை ஒரு பெண், பெண்னாக இருந்து பார்க்க வேண்டியதில்லை!மனதில் அன்பு உள்ள எந்த இனத்திலும் சாத்தியமே!

crown said...

நான் யார் என்பதையே
நீங்கள் தான் அறியத் தருகிறீர்கள்
என் ஒவ்வொரு வளர்ச்சியிலும்
உங்கள் பங்களிப்பே ஆக்ரமித்திருக்க
எப்படி என் வாயால் பேசுவேன்
ஆண்களை மட்டும் குறை கூறும் பெண்ணியத்தை ???
-----------------------------------------------------------------------------------------------
இஸ்லாம் கூறும் நல்லொழுக்கத்தை பெண் சுதந்திரதின் சாரத்தை உரக்க ஒத்துக்கொண்ட வாக்குமூலம். நன்றி கூறும் நல் பண்பு. உண்மையை உலகிற்க்கு எடுத்துச்சொன்னதுக்கு நன்றி!வாழ்த்துக்கள்!.

Unknown said...

வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள்

Unknown said...

Dear Crown,
It's a warning!

உங்கள் முதல் ஆறு பின்னூட்டங்களை நீக்கியது தவறு !
அவை இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆங்கிலத்தில், Treatise என்பார்கள் தெரியுமா? அதன் பொருள், 'ஆய்வு'.
ஓர் ஆய்வுக்கு, மாற்றுக் கருத்துகளையும் உட்படுத்தித்தான் அறிஞர்கள் அந்த ஆய்வை முழுமைப் படுத்துவார்கள்.

எடுத்துக்காட்டாக, சகோதரியின் முந்தையப் பதிவுக்கு முழித்த கண்ணோடு நான் இட்ட பின்னூட்டம் எத்தனை பேரின் சிந்தனையைக் கிளறி விட்டது பாருங்கள்!

கலிஃபோர்னியாவில் இப்போது இரவு பத்து மணிக்கு மேலாச்சே! இன்னும் உறங்கவில்லையா?
சும்மாத்தான்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரி கவிதாயினி அவர்களுக்கு,

நியாயமான கவிதை! நயமான மொழியோட்டம்! கூரான சிந்தனை! கூடுதல் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

பெண்மையைப் போற்றி, பெண்களைச் சரிநிகர் சமானமாக நடத்துவதில் நான் முன்னோடி என்கிற தகுதியில், எனக்குக் காணக்கிடைக்கின்ற பெண்ணியல்வாதிகளோடு கீழ்க்கண்டவாறு முரண்படுகிறேன்:

பெண்ணியம் என்றொரு
பிரம்பைக் கொண்டு
தன்னைத்தானே தாக்கிகொள்கின்றனர்
தற்காலப் புரட்சிப் பெண்டிர்

மேநாட்டு மோகத்தில்
முற்போக்குச் சிந்தனை
என்னும்
மூத்திரச் சந்துக்குள்
எத்துணை அடித்தாலும்
தாங்கி
ரொம்ப நல்லவர்களாகின்றனர்
பெண்ணியவாதிகள்

பெண் விடுதலை
என்னும் பிரம்மையில்
பூ விலங்குகளைக்கூட
பிய்த்தெரிகின்றனர்
கு கை பூ என

ஆணுக்குப் பெண் சரிசமம்தான்
அன்பில் பண்பில்
கற்பதில் -கற்றதற்குத் தக
நிற்பதில்

நாட்டைத் திருத்திவிட
நடு வீதிக்கு வரும்
நங்கையரே
வீட்டை விருத்தி செய்ய
வேலைக்காரியா...?
எனில்
அவளும் பெண்தானே!

ஆடை குறைப்பிலும்
அலங்கரிப்பதிலும்
பெண் முன்னேற்றம்
எப்படி சாத்தியம்?

ஒப்பனை என்று
அப்பிக் 'கொல்'வதைவிட
கண்மை கொண்டு
கண்களின் பாஷையை
அடிக்கோடிட்டால் போதாதா
ஆண்மையை வீழ்த்த!

படைத்தவன் அமைத்த
பெண்மையின் இயல்பை
பகுத்தறிவென்ற பிதற்றலில்
கடினமாக்கி
ஆண்மையை நோக்கி
அரைக்கிணறு தாண்டினால்
அங்குமில்லாமல் இங்குமில்லாமல்
அவனா இவன் எனும்
அபாயம் நிகழும்

நினைவிருக்கட்டும்
பெண்ணியத்தில்
தாரம் தனியுடைமை
தாய்மை மட்டுமே
பொதுவுடைமை!

crown said...

Adirai Ahmad சொன்னது…

Dear Crown,
It's a warning!

உங்கள் முதல் ஆறு பின்னூட்டங்களை நீக்கியது தவறு !
அவை இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆங்கிலத்தில், Treatise என்பார்கள் தெரியுமா? அதன் பொருள், 'ஆய்வு'.
ஓர் ஆய்வுக்கு, மாற்றுக் கருத்துகளையும் உட்படுத்தித்தான் அறிஞர்கள் அந்த ஆய்வை முழுமைப் படுத்துவார்கள்.

எடுத்துக்காட்டாக, சகோதரியின் முந்தையப் பதிவுக்கு முழித்த கண்ணோடு நான் இட்ட பின்னூட்டம் எத்தனை பேரின் சிந்தனையைக் கிளறி விட்டது பாருங்கள்!

கலிஃபோர்னியாவில் இப்போது இரவு பத்து மணிக்கு மேலாச்சே! இன்னும் உறங்கவில்லையா?
சும்மாத்தான்.
-------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சாச்சா! நீக்கிய கருத்துக்கள் நான் புரிந்து கொண்ட கோனத்தில் பதிந்தது. ஆனாலும் நீங்கள் சொல்லும் "ஆய்வு"விசயம் எனக்கு தோன்றவில்லை!இதிலும் உங்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வைத்த அல்லாஹுக்கே எல்லாப்புகழும். சாச்சா!கலிபோர்னியாவில் இப்ப 9 மணிதான் ஆகிறது. மேலும் சென்ற மாதம் இன்னேரம் 10மணி! ஒளிச்சேமிப்பு(Light savings) ஆறு மாதம் ஒருமுறை நேரம் ஒருமணினேரம் மாறும்.

crown said...

பெண்ணியம் என்றொரு
பிரம்பைக் கொண்டு
தன்னைத்தானே தாக்கிகொள்கின்றனர்
தற்காலப் புரட்சிப் பெண்டிர்
---------------------------------------------------
ஆஹா! அருமை!பெண்ணியம் என்பது ஒரு பிரமை!அதை வார்தை பிரம்பு கொண்டு அடித்து சொல்லியுள்ளீர் கவிஞர்!.தன் நகத்தை கொண்டு தண்னையே பிரான்டி கொள்ளும் நாகரீகம்!

crown said...

மேநாட்டு மோகத்தில்
முற்போக்குச் சிந்தனை
என்னும்
மூத்திரச் சந்துக்குள்
எத்துணை அடித்தாலும்
தாங்கி
ரொம்ப நல்லவர்களாகின்றனர்
பெண்ணியவாதிகள்
--------------------------------------------------------
ஹாஹாஹாஹா!.... நல்ல சொன்னிய போங்க!

crown said...

பெண் விடுதலை
என்னும் பிரம்மையில்
பூ விலங்குகளைக்கூட
பிய்த்தெரிகின்றனர்
கு கை பூ என
----------------------------------------------------
குரங்கும் விலங்கினம் எனவே பூவிலங்குகளையும் பிய்த்து எறிந்துவிடுகின்றனர்!விளங்கிடும்! போங்க!

crown said...

நாட்டைத் திருத்திவிட
நடு வீதிக்கு வரும்
நங்கையரே
வீட்டை விருத்தி செய்ய
வேலைக்காரியா...?
எனில்
அவளும் பெண்தானே!
----------------------------------------------------
அப்படி போடுங்க கவிஞரே!

crown said...

படைத்தவன் அமைத்த
பெண்மையின் இயல்பை
பகுத்தறிவென்ற பிதற்றலில்
கடினமாக்கி
ஆண்மையை நோக்கி
அரைக்கிணறு தாண்டினால்
அங்குமில்லாமல் இங்குமில்லாமல்
அவனா இவன் எனும்
அபாயம் நிகழும்
---------------------------------------------
அதானே!

crown said...

நினைவிருக்கட்டும்
பெண்ணியத்தில்
தாரம் தனியுடைமை
தாய்மை மட்டுமே
பொதுவுடைமை!
---------------------------------------------------
அது!!!!

crown said...

அப்பாடா! நீக்கிய ஆறு கருத்துக்கு ஆறு கமெண்ட் போட்டாச்சு !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அப்பாடா! நீக்கிய ஆறு கருத்துக்கு ஆறு கமெண்ட் போட்டாச்சு ! ///

இரி நீக்கியது எல்லாத்தையும் எடுத்து போடுறேன்... ! :)

crown said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அப்பாடா! நீக்கிய ஆறு கருத்துக்கு ஆறு கமெண்ட் போட்டாச்சு ! ///

இரி நீக்கியது எல்லாத்தையும் எடுத்து போடுறேன்... ! :)
----------------------------------------------------------------------------------------------
எல்லா உரிமையும் உங்களுக்கே!சொன்ன வார்தை பிறருக்குச்சொந்தம் தான்!.

crown said...

கருத்து எழுதும் காலந்தொட்டே நான் நீக்கியது இந்த 6 கருத்துமட்டும் முதல் முதலாய்!

Yasir said...

ஒரு சில சிறந்த ஆண்களின் பெருமைக் கூறும் நற்க்கவிதை....வாழ்த்துக்கள் சகோதரி

Unknown said...

வாழ்த்துக்கள் ஆமினா,,,எந்த வார்த்தை எடுத்து இது சிறந்தது என சொல்வது என்று தெரியல அனைத்து வரிகளும் அருமை.....!!!

Shameed said...

சிகரங்களும் இமயங்களும் கருத்து பரிமாறிக்கொள்கின்றனர். நாம "சும்மா" வேடிக்கை பார்த்தால் போதுமென்று நினைக்கின்றேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு