Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உண்ணாவிரதம்? - தலையங்கம் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2013 | , , , , ,


இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக கடந்த சில வாரங்களாக தமிழக கல்லூரி மாணவர்கள் அறவழியில் உண்ணாவிரதம், பேரணி, ஆங்காங்கே முற்றுகை என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பதை அன்றாட செய்திகளாக ஊடகங்களில் நாம் கண்டு வருகிறோம். கல்லூரிக்கு படிக்கச் சென்ற மாணவர்கள் இப்படி பொது பிரச்சினைகளுக்காக போராடுவது ஒன்றும் புதிது அல்ல. மாறாக! சேனல் 4 என்ற தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு ஆவணப்படத்தை கண்ட பின்புதான் இந்த e-தமிழினத்துக்கு சொரனை பீரிட்டு வந்துள்ளது. இது எவ்வளவு நாளைக்கு தாக்குப்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த 30 வருடங்களாக தமிழக அரசியல் பந்திக்கான ஊறுகாயாகவே இலங்கை தமிழர் பிரச்சினையை தொட்டுக் கொண்டு விரிந்த வெள்ளித் திரையில் போடப்பட்ட கருப்பு வெள்ளை கலைப்படப் படைப்பாகத்தான் தமிழக மக்கள் கண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. அதெல்லாம் சரி, அரசியலில் எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதமென்று காந்திய வழியில் போராடுகிறோம் என்று வடக்கே துவங்கி தெற்கு வரைக்கும் அன்றாட பொழுது போக்குதான். இந்த கலாச்சாரம் நம் அரசியல் கட்சிகளிடம் மட்டுமே அடைக்கலமாகி இருந்ததைக் கடந்து, இன்று அந்த நோய் மாணவ சமூகத்திடமும் அசுரப் பலம் கொண்ட ‘புலி’வேஷம் போட ஆரம்பித்திருப்பது வருந்ததக்கது.

ஒரு சமூகத்தின் மீது இழைக்கப்படும் இனப்படுகொலைகள் நேற்று துவங்கிய சுவடுகள் அல்ல. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் நடைபெற்ற இனப்படுகொலைகள், இந்திய சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்கள் நடத்திய இனப்படுகொலைகள், அவர்களுடன் சேர்ந்து எட்டப்பர்களாக வேலை செய்தவர்களில் ஒருவன் மகத்மா காந்தியை கொன்றது. ஆப்ரிக்கா நாடுகளில் குறிப்பாக காங்கோவில் அப்பாவி மக்கள் மீது நடைபெற்ற இனப் படுகொலைகள். அமெரிக்கா ஈராக், ஆப்கானிஸ்தானில் நடத்திய இனப் படுகொலைகள். சிரியாவில் பஸ்ஸார் அல் அசத் நடத்திவரும் இனப் படுகொலைகள். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் இனப் படுகொலைகள். விடுதலைப்புலிகள் தமிழ்(மட்டுமே)பேசும் முஸ்லிம்கள் மீது நடத்திய குரூர இனப்படுகொலைகள். அதே விடுதலைப்புலிகள் தன்னை ஆதரிக்காத தன் இனத்தைச் சார்ந்த தமிழ் மக்கள் மீது நடத்திய இனப் படுகொலைகள்.

குஜராத்தில் நரேந்திர மோடி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இனப் படுகொலைகள். கோவையில் இந்து தீவிரவாதிகள் நடத்திய இனப் படுகொலைகள். இன்று வரை காஷ்மீரில் இந்திய இராணுவம் நடத்தி வரும் இனப் படுகொலைகள். கம்யூனிஸ்ட்களின் கைக்கடிகாரமாக இருக்கும் நக்ஸலைட்டுகள் நடத்தி வரும் இனப் படுகொலைகள். இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் இருவரும் சேர்ந்து அப்பாவி தமிழர்களை கொன்றது கொடூரமான இனப்படுகொலைகள். 

இவ்வாறான இனப் படுகொலைகளுக்காக உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு 24 மணிநேரமோ, வருடத்தில் 365 நாட்களோ போதாது. இவ்வுலக வாழ்வை சுகமானதாக நம்புகிறவன் இது போன்ற இனப்படுகொலையை செய்வான். மறுவுலக வாழ்வை மட்டுமே நம்புகிறவன் இது போன்ற இனப்படுகொலைகளை எதிர்த்து நிற்பான். இனத்திற்கான விடுதலை, ஈழம் என்று சொல்லிக் கொண்டு கோழை (விடுதலைப்)புலிகள் போல் சைனைடு குப்பியை தின்று சாகவும் மாட்டான், மனித வெடிகுண்டாக அப்பாவிகளை கொள்ளவும் மாட்டான்.

உண்ணாவிரதமென்பது ஒரு போராட்டமா? இஸ்லாமிய பார்வையில் உண்ணாவிரதம் சரியா?

உண்ணாவிரதம் என்பதெல்லாம் வெறும் நாடகமே! என்பது கடந்த கால வரலாறு. உண்ணாவிரதம் எல்லாம் கபடநாடக செய்தி ஊடகங்களின் கேமராக் கண்களின் வெளிச்சம் விழும் வரை மட்டுமே என்பது மாதக் கணக்கில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு தெரியும். இது தொடர்பாக நகைச்சுவைக்கென்றே ஒரு தனிபதிவே எழுதலாம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில்நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)

நோன்பு சென்று போன சமூகத்தாருக்கும் கடமையாகி ஆரம்ப காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பை கடமையாக்கி இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

நோன்பு பசியை உணரச் செய்கிறது. நல்ல பழக்கங்களை கற்றுத் தருகிறது. பிறருக்கு உதவும் எண்ணத்தை தாராளமாக வழங்குகிறது. மற்ற நேரங்களில் உதவும் எண்ணம் இல்லாதவர்கள் கூட நோன்பு காலங்களில் பிறருக்கு உதவி செய்யும் நிலைகளை காணமுடிகிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.  புகாரி 1905. Volume :2 Book :30

ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்கவே நோன்பு ரமழான் அல்லாத நாட்களில் நபி(ஸல்) உபரியான நோன்பு நோற்க வழியுறுத்தியுள்ளர்களே தவிர போராட்டம் நடத்த அல்ல. 

நாங்கள் உண்ணாவிரதமெல்லாம் இல்லை, சுன்னத்தான நோன்பு வைத்துதான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று  வெட்டி விளக்கம் சொல்லும் பெயர் தாங்கி முஸ்லிம்களும் நம்மில் பலர் உள்ளார்கள் என்பதற்காகவே மேற்சொன்ன ஹதீஸ்.

எப்படி தொழுகை அல்லாஹ்வுக்காக தொழுகிறோமோ, அது போலவே நோன்பும் (உண்ணாமல் பருகாமல் இருப்பது) அல்லாஹ்வுக்காகவே நோற்கிறோம். இதை தவிர்த்து வேறு எவனுக்காகவும் எதுக்காகவும் நோன்பு (உண்ணாமல் பருகாமல்) இருப்பது படைத்தவனுக்கு படைத்தவனின் கட்டளைக்கு மாறு செய்வதாகும்.

இலங்கை பிரச்சினைக்காக மட்டுமன்று எந்த ஒரு பிரச்சினைக்கும் உண்ணாவிரதம் என்பது இஸ்லாமிய கொள்கைக்கு முரணானது. இது போன்ற உண்ணாவிரத போராட்டங்கள் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தராதது. ஆகவே முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருப்பதும், அதற்கு ஆதரவு அளிப்பதும், வாழ்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

இலங்கை பிரச்சினையில் மாணவர்களின் உண்ணாவிரத போராட்டங்களின் முஸ்லிம் கட்சிகளும், இயக்கங்களும் அற்ப அரசியல் இலாபத்திற்காக கலந்து கொண்டு தங்களின் அனுதாபங்களை பெற்று வருகிறார்கள். முஸ்லிம் மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது. அதுவும் அதிரை மாணவர்கள் கலந்து கொண்டிருப்பது அதற்கு அரசியல்வாதிகளும் அதனை ஊக்கப்படுத்துவதும் மிகவும் வருத்தமளிக்கிறது. படிக்கும் மாணவர்கள் தங்களுடைய எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற விரும்பத்தகாத போராட்டக் களங்களில் கலந்து கொள்ளுவதும், அதை ஊடகங்கள் ஊக்கப்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிராக நின்று, அவர்களை கொன்று குவித்த கோழைகளான இந்த விடுதலைபுலிகளின் தலைவன் பிரபாகரனை முன்னிருத்தி நடத்தப்படும் எந்த போராட்டத்தையும் பாதிப்புக்குள்ளான முஸ்லிம் சகோதரனின் நிலையில் நின்று எந்த முஸ்லீமும் அதனை ஆதரிக்கக்கூடாது. பின் வரும் நபிமொழி எடுத்துக்காட்டும் நன்னெறியை அறிந்து கொள்ளுங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன்’.  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா(ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள்.  புகாரி: 6874, Volume :7 Book :87

முஸ்லிம்களுக்கெதிராக ஆயும் ஏந்தியவர்கள் இந்த விடுதலைப்புலிகள், அவர்கள் நம்மை சார்ந்தவர்கள் அல்ல, விடுதலைப்புலிகளை முன்னிருத்தி நடைபெரும் எந்த போராட்டத்தை எந்த ஒரு முஸ்லிமும் ஆதரிக்க கூடாது.

இலங்கை தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு ராஜபக்சே எந்த அளவுக்கு காரணமோ, அதுபோல் விடுதலைப்புலிகளும் தான் காரணம் என்பதை புரிந்து கொண்டு போராட்டம் நடைபெற்றால் இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு விரைவில் கிடைக்கும். 

கொள்கையற்றவர்கள் ஒன்று கூடி ஆளுக்கொரு போராட்டங்கள் நடத்துவது வெறும் அரசியல் நாடகமே தவிர வேறொன்றுமில்லை.

பாதிக்கப்பட்டவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட இனம் மேலும் பதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் வகையில் நம்முடைய போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பதே மனிதநேயமுள்ள அனைவரின் விருப்பம்.

டாஸ்மார்க் போதையை, ஈழத்து போதை கேடுகெட்ட  ஊடக போதையின் பேருதவியால் வென்று விட்டது. படைத்தவனை மறந்து, படைப்பினங்களை நம்பிய இனம், அழிந்து போவது என்பது மட்டும் நிஜம். இதை யாராலும் மாற்ற முடியாது. 

தமிழினமே விழித்துக்கொள். இனத்தால், ழொழியால் பிரித்தாளப்படாத ஒரே மார்க்கம் அதுதான் உனக்கான ஒரே விடிவு, இஸ்லாம் என்ற நேர்வழி மட்டுமே..!

இனப் படுகொலைகளால் கொல்லப்பட்ட அனைத்து முஸ்லிம்களும் சொர்க்கத்தின் இனிமையான சுவாசத்தை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்! இதனை தமிழ் ஈழத்து சொந்தங்களுக்கும் நினைவூட்டுகிறோம்.

விழித்திருக்கும்போதே மொழி வெறியூட்டி இனவெறிக்கு பாதைபோடும் கேடுகெட்ட கலாச்சாரத்தை வெறுத்து ஒதுக்குவோம், மனிதநேயம் போற்றுவோம் !

அதிரைநிருபர் பதிப்பகம்

13 Responses So Far:

Abu Easa said...

மா ஷா அல்லாஹ்!

தெளிவான விளக்கங்களுடன் ஒரு எளிமையான ஆக்கம்!
இப்போராட்டக்காரர்களும் இணத்திற்காகப் போராடும் இண வெறியர்களே!

இவர்கள் மனிதாபமானிகளாக இருந்திருந்தால் மனிதம் மாய்க்கப்படும்போதில்லாம் பொங்கி எழுந்திருப்பார்கள்.

எல்லாம் அரசியல் சூழ்ச்சி! ஏதாவது ஒரு பிரச்சனை சூடுபிடிக்கும் போது இப்படிப் புகை மூட்டி கண்களை மறைக்கும் கபட நாடகம் நடத்துவது அரசியல் சானக்கியம்(?)

عبد الرحيم بن جميل said...

பயனுள்ள கட்டுரை! மார்க்கத்திற்க்கு மாறாக நடத்தப் படும் இதுபோன்ற உண்ணாவிரதங்களை அறியாமையில் செய்யும் நம் சகோதரர்கள் எப்போது தவறு என்பதனை உணரப் போகிறார்கள்? அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்!! மார்க்கம் சரியாகத் தெரியாதவர்கள் ஒரு பக்கம், மார்க்கம் நன்றாகத் தெரிந்த இயக்குனர் அமீரை என்ன சொல்வது?

KALAM SHAICK ABDUL KADER said...

ஆக்கபூர்வமான ஆக்கம்; உண்மையை உரத்துச் சொல்லும் நோக்கம்! நேர்மை, துணிவுடைமை, நடுநிலைமை என்பது தான் ஊடகத் துறையின் அடிப்படைக் கொள்கைகள் என்பதை நிலைநிறுத்தும் வண்ணம், அல்லாஹவைத் தவிர எவர்க்கும் அஞ்சாமல் உண்மையை மறைக்காமல் எழுதுவதற்கும் இப்படிப்பட்ட துணிவு வேண்டும். இஸ்லாத்தின் பெயரால் இயக்கங்கள் நடத்துவோரே! நயவஞ்சகத் தன்மையுடன் நயமாகப் பேசினால் மட்டும் நல்லவர்கள் அல்லர்; நாநயம் வேண்டா; நாணயம் வேண்டும். இன்ஷா அல்லாஹ் உங்களின் தலையங்கம் எங்களின் இறைநம்பிக்கையின் தலையாய அங்கம்; இதன்படி நடக்காவிட்டால் ஈருலகிலும் பங்கம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உண்ணாவிரதம் பற்றிய உயர்ந்த தலையங்கம்!

எதோ ஒரு கட்சியின் சுயலாப தூண்டுதலின் பேரில் அனைத்து மாணவர்களும் இதில் சிக்கி கல்வியில் சிலதை இழந்துள்ளனர் என்பதே உண்மை.

sabeer.abushahruk said...

இறையச்சத்தோடு உயிரும் உணர்வும் உடலும் ஒடுங்க வைக்கும், மார்க்கம் சொல்லும் நோன்பை; எதிர்ப்பைக் காட்ட பிரயோகிக்கும் ஒரு ஜனரஞ்சக அறப்போராட்டமான உண்ணாவிரதத்தோடு ஒப்பிடுதல் சரிதானா?

உண்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கம் (?) "பட்டினி கிடந்தே இறந்து போகப்போகிறேன். உலகம் உந்நாட்டை இழித்துரைக்கும். எனவே, என் கோரிக்கையைக் கேள்" என்பதேயாகும்.
நோன்பின் நோக்கமோ ஈருலக் ஈடேற்றத்திற்கானது.

உண்ணா விரதத்தில் தண்ணீர் குடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தவர்கள் அல்லது அறிந்தவர்கள் சொல்லவும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பெரிய சாத்தான் ஐநா வுல வேதம் ஒதுது, குட்டி சாத்தானுவே ஊர்ல உண்ணாவிரதம் இருக்குது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//உண்ணா விரதத்தில் தண்ணீர் குடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தவர்கள் அல்லது அறிந்தவர்கள் சொல்லவும். //

சாவன்னா காக்கா.. நீங்க ஊர்ல இருந்தா இதற்கு பதில் சொல்லுங்களேன்

Adirai pasanga😎 said...

தக்க சமயத்தில் தகுந்த ஆக்கம். இறைவன் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாகவும்.

இஸ்லாமிய அடிப்படையில் நோன்பு என்பது அறவே உண்ணாமல் பருகாமல் இருப்பதும் மார்க்கம் ஏவியவற்றைக் கொண்டு ஏற்றும் விலக்கியவற்றைவிட்டுத் தவிர்ந்தும் இருப்பதுமேயாகும்.

இவர்களின் உண்ணாவிரதம் என்பது உண்பதை மட்டும் தான் தவிர்ப்பது(?) பருகுவதை அல்ல. எனவே அவர்கள் விருப்பப்படி எதையும் அவர்கள் பருகலாம். இது தான் அவர்களின் உண்ணாவிரதம்.

Ebrahim Ansari said...

//உண்ணா விரதத்தில் தண்ணீர் குடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தவர்கள் அல்லது அறிந்தவர்கள் சொல்லவும்.//

தண்ணீர் குடிப்பார்கள் . நான் பார்த்தும் இருக்கிறேன். ஊற்றியும் கொடுத்து இருக்கிறேன்.( அது ஒரு கல்லூரிக் காலத்தில்).

உண்ணாவிரத்தை முடிப்பதற்குத்தான் ஜூஸ் குடிப்பார்கள்.மற்றபடி இடையில் தண்ணீர் குடிப்பார்கள்.

1970-ல் இராமானுஜம் என்கிற ஒரு வேதியல் துறை பேராசிரியர்( !!! பட்டை) வகுப்பில் ஒரு முஸ்லிம் மாணவனை மதத்தைக் குறிப்பிட்டுப் பேசியதால் அவரை வேலையை விட்டு நீக்க வேண்டுமென்று மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். என் பெயர் பட்டியலில் இருந்தது. ஆனால் பந்தலில் நான் இல்லை. அன்று இரவே எனக்கு வயிற்றுவலி (?) . ஆனால் மற்ற மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். மதியம் மூன்று மணிக்கு அய்யா(ர்) வந்து மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்டார். பிரச்னை முடிந்தது. அந்த நேரம் இடை இடையே தண்ணீர் குடித்துக் கொண்டார்கள்.


Ebrahim Ansari said...

//விழித்திருக்கும்போதே மொழி வெறியூட்டி இனவெறிக்கு பாதைபோடும் கேடுகெட்ட கலாச்சாரத்தை வெறுத்து ஒதுக்குவோம், மனிதநேயம் போற்றுவோம் !//

அதிரை நிருபர் குழுவில் இதை யார் எழுதி இருந்தாலும் தம்பி! உன் எழுத்துப் பொன்னெழுத்து.

Anonymous said...

இலங்கையில் மட்டும் இனப்படுகொலை நடக்கவில்லை இந்தியாவிலும் நடந்திருக்கிறது.

இலங்கையில் ராஜபக்சே போரை வைத்துத் தமிழர்களை அழித்தான் அதேபோல் இந்தியாவில் 11 வருடங்களுக்கு முன்பு நரமாமிசம் தின்னும் மோடியால் முஸ்லிம்கள் இனப்படுகொலைச் செய்யப்பட்டார்கள். ஆயிரகணக்கான பெண்கள் கூட்டுவன்புணர்ச்சி செய்யப்பட்டார்கள். இதுவரை அவர்களுக்கு நீதிக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தப் படுகொலையின் நாயகன் தான் நாளைய பிரதம வேட்பாளராம்.

மோ(ச)டி அரசின் கோரகொடிய முகத்தை மற்றச் சகோதரர்களும் அறிந்துகொள்ளவே இந்தப் பதிவு.

குஜராத்தில் ஒரு குடும்பத்திற்கு நடந்த கொடுமைகள்:-

குஜராத் தாஹோத் மாவட்டம் ராந்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ். 5 மாதக் கர்ப்பிணி, தனது கணவர் யாகூப் ரசூல், மூன்றரை வயது பெண் குழந்தைச் சலேஹாவுடன் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது பிறந்த வீட்டிற்குப் பில்கிஸ் பானு வந்திருந்தபொழுதுதான், குஜராத்தில் சங் பரிவாரால் மதவெறிப் பயங்கரவாதத் தாக்குதல் வெடித்தது.
ரந்திக்புர்க் கிராமத்தில் வசித்து வந்த முசுலீம்களின் 71 வீடுகளும்; அவர்களுக்குச் சொந்தமான 14 மளிகைக் கடைகளும்; வேறு சில பெட்டிக் கடைகளும் இந்து மதவெறிக் கும்பலால் முற்றிலுமாகத் தீக்கிரையாக்கப்பட்டன; அனைத்து முசுலீம் குடும்பங்களும் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள, கிராமத்தைவிட்டு வெளியேறின.

பில்கிஸ் பானுவும், தாயார் ஹலிமா, சகோதரிகள் மும்தாஜ், முன்னிச் சகோதரர்கள் இர்பான்,அஸ்லாம், மாமா மஜீத், தந்தைவழி அத்தைகள் ஆமின, சுக்ரா ,அவரின் கணவர்,ஆமினாவின் மகன் யூசுப் ,மகள்கள் ஷாமீம், மும்தாஜ், மதீனா, ஷாமீமின் மகன் ஹுசைன் உள்ளிட்டத் தனது உறவினர்கள் 16 பேரோடு ரந்திக்புரிலிருந்து வெளியேறி, பரியா என்ற ஊரை நோக்கித் தப்பிச் செல்லத் தொடங்கினார்.

ஷாமீம் நிறைமாதக் கர்ப்பிணி , 5 மாதக் கர்ப்பிணிப் பில்கிஸ் இருவருக்கும் ஓடக் கஷ்டமாக இருந்தது முதலில் 6 கிலோமீட்டர்த் தள்ளி இருக்கிற சுண்டாகி என்ற கிராமதிற்குத் தப்பி வந்து மதவெறியர்களின் கண்களில் அகப்பட்டுக் கொண்டு விடாமல் பில்கிஸ் பானுவின் குடும்பம் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருந்த நேரத்திலே, அவரின் அத்தை மகளுக்கு (ஷாமீம்), குஜாவல் மசூதியில் பெண் குழந்தையும் பிறந்தது. இதற்குல் மசூதிகள் , மதவெறிப்பிடித்த கும்பலால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அங்கிருத்துக் கிளம்பினர், பச்சிளம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியாத ஷாமீமை இழுத்துக்கொண்டு எப்படியோ மறுநாள் குத்ரா என்ற ஊருக்கு வந்தனர்.

அவ்வூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். அங்கு ஒருநாள் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு ஒவ்வொருவரும் பழங்குடியினர் போல வேடமணிந்து கொண்டு, குத்ராவில் இருந்து வெளியேறி, சாபர்வாட் என்ற கிராமத்திற்கு வந்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான வயல்வெளியில் பதுங்கியிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த இந்து மதவெறிக் கும்பலிடம் பில்கிஸ் பானுக் குடும்பம் மாட்டிக் கொண்டது. அக்கும்பலில் இருந்த ரந்திக்புர்க் கிராமத்தைச் சேர்ந்த இந்து வெறியர்கள் பில்கிஸ் பானுவை அடையாளம் கண்டு கொண்டு, தங்களின் வக்கிரமான தாக்குதலை நடத்தினர்.

தொடரும்... 1/2

Anonymous said...

தொடர்கிறது... 2/2

ஷைலேஷ் பட் என்ற மதவெறியன் பில்கிஸ் பானுவின் குழந்தைச் சலேஹாவை அவரிடமிருந்து பிடுங்கி, அவரின் கண் எதிரிலேயே அக்குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்றான். பிறகு அவனும், அக்கும்பலைச் சேர்ந்த லாலா டாக்டர், லாலோ வக்கீல், கோவிந்த் நானா ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, பில்கிஸ் பானுவைக் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தினர். கர்ப்பமாக இருக்கும் தன்னைவிட்டு விடும்படி பில்கிஸ்பானு கெஞ்சியதை, கதறியதை அக்கும்பல் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. தங்களின் காமவெறியைத் தீர்த்துக் கொண்ட பிறகு, அக்கும்பல் பில்கிஸ் பானுவைத் தீர்த்துக் கட்டும் வெறியோடு தாக்கியதில், அவர் சுயநினைவு இழந்து விழுந்தார்.

பில்கிஸ் பானு மட்டுமின்றி அவரின் தாயார், சகோதரிகள் முந்தின நாள் குழந்தை பெற்ற ஷாமீம் உள்ளிட்டு எட்டுப் பெண்கள் அக்கும்பலால் பாலியல் பலாத்காரப்படுத்த பட்டனர். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் கத்தியாலும், ஈட்டியாலும், குண்டாந்தடிகளாலும் தாக்கப்பட்டனர்.

இரண்டு மூன்று மணி நேரம் கழித்துப் பில்கிஸ் பானுவிற்கு நினைவுத் திரும்பிய பொழுது, தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களும், நான்கு சிறுவர்களும் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்; மீதிப்பேர் இருந்த சுவடே தெரியவில்லை. ஷாமீம்,அவரின் பச்சிளம் குழந்தை உள்படப் பலரும் பாறைகளால் நசுக்கப்பட்டுக் கொல்லபட்டார்கள் .பில்கிஸ் பானு அந்தப் பலவீனமான நிலையிலும் நடந்து சென்று, வழியில் தென்பட்ட ஒரு பழங்குடி இனப் பெண்ணிடம் இரவலாக ஆடை வாங்கி அணிந்து கொண்டு, கோத்ரா மு காமிற்கு வந்து சேர்த்தார் .

11 ஆண்டுகள் கழிந்தப் பின்னும்சொந்த வீட்டுக்கும் ஊருக்கும் செல்ல முடியாமல் இன்று வரை பல ஆயிரம் முஸ்லிம்கள் சொந்த நாட்டில் குஜராத்தில் அகதிகளாக முகாமில் தொண்டு நிறுவனகளின் பராமரிப்பில் வாழ்கிறார்கள்.

மார்கன்டையே கச்சு, அருந்ததி ராய், தெகல்காம், ஹர்ஷ் மந்தேர், நந்திதா தாஸ் .இவர்கள் போன்றோரின் உண்மையை வெளிபடுத்தும் பேச்சே முஸ்லிம்களின் ஒரே ஆறுதல்.

மனசாட்சி உள்ளவர்களே உங்களிடம் உண்மையையும், ஆறுதலையும் எதிர்பார்க்கிறோம்.. அநீதி இளைத்தவர்களே உங்களுக்கு இறைவனிடமிருந்து அழிவை எதிர்பார்க்கிறோம்..
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

Iqbal M. Salih said...

மதிப்பிற்குரிய சகோதரர் கவியன்பனின் பின்னோட்டக்கருத்து கண்களில் ரத்தக் கண்ணீரை பெருக்கக் கூடியது! மிருகத்தைவிடக் கேவலமான அந்தக் கொடியவர்களுக்கு நிரந்தரத் தண்டனையை அல்லாஹ் அளிப்பான். உடன்பிறவா அந்தச் சகோதரிகளுக்காக நாம் துஆச் செய்வோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு