Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வயலும் வாழ்வும்... ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2012 | , , ,


விதவைகளாகிவிட்ட விளைநிலங்கள்.

சமீபத்தில் படித்த ஒரு புதுக்கவிதை சற்று சிந்திக்கவைத்தது.

நம் கண்முன் காணும் காட்சிகளும் அதற்கு கட்டியம் கூறின.

"வயல வெளியில் -
நெல் போட்டேன் – நஷ்டவாளியானேன்
கரும்பு போட்டேன் கஷ்டவாளியானேன்
பருத்தி போட்டேன் பதட்டவாளியானேன்
பிளாட் போட்டேன் பில்லினர் ஆனேன்."


முன்பெல்லாம் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை செல்லும் சாலையில் முதல்சேரி தாண்டி,  செல்லிக்குறிச்சி ஏரி வரை இருபுறமும் வயல் வெளிகள். இன்று அவை லாரல் பள்ளிவளாகமாக மாறிவிட்டன. அதுதான் போகட்டும் என்றால் காதர் முகைதீன் கல்லூரிக்கு எதிர்புறத்தில் இருந்து ராஜாமடம் வரை இருந்த வயல் வெளிகள் கொஞ்சம் எம். எஸ். எம். நகராகவும் மற்றவை எந்த நகராகவும் இல்லாமல் வெறும் கழுத்து விதவையாக விளைநிலங்கள். அன்று பச்சை பசேல் என்று காட்சியளித்த பகுதிகள் இன்று வெறும் கருவைக்காடாக காட்சியளிக்கின்றன.

விதிவிலக்காக இங்கும் அங்குமாக இரு கட்டிடங்கள் அத்துடன் உருவாகும் ஒரு இறை இல்லம். இது தவிர எங்கு பார்த்தாலும் சிறிதும் பெரிதுமாக எல்லை கற்கள் . தேவை இருக்கிறதோ இல்லையோ இடங்களின் விலை ஏறும் என்றும் இன்னும் ஏறட்டும் என்றும் எதிர்பார்த்து ஜீவநாடியான  விவசாயத்தை தொலைத்துவிட்டு வெட்டியாக மனித பேராசைக்கு சாட்சியாக நம்மை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.  அன்று அன்னமூட்டிய  விளை நிலங்கள் இன்று விதவைக் கோலத்தில்.

இந்த காட்சி நம் ஊர்போன்ற உப்புக்காற்று வீசும் காவிரியின் கடைமடைப்பகுதிகளில் மட்டுமல்ல. முப்போகமும் விளைந்த வரலாறு படைத்த – சோழநாடு சோறுடைத்து என்ற பெருமைக்கும் மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த பெருமைக்கும்  சான்றாய் நின்ற பகுதிகளிலும்தான் என்பது கசப்பான நிதர்சனம்.

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் விளைநிலங்கள் ஐந்து லட்சம் ஹெக்டேர்கள் அளவுக்கு குறைந்துள்ளன என்று மாநிலத் திட்டக்குழுவே தெரிவித்துள்ளது.

நகரமயமாதல் (URBANIZATION) மற்றும் தொழிற்துறையின் அபரிமிதமான வளர்ச்சி (INDUSTRIAL GROWTH) காரணமாகவே விளைநிலங்கள் குறைந்துவிட்டன என்று சுட்டிக்காட்டியுள்ள மாநிலத் திட்டக்குழு, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களின் வளர்ச்சியும் திட்டமிட்ட அளவுக்கு இல்லை என்று கூறியுள்ளது.

விளை நிலங்கள் குறைந்திருப்பதற்காக இந்த காரணங்களை சொல்லலாம்.

1. விவசாய வேலைகளுக்கு தேவையான ஆட்கள் கிடைப்பதில்லை.

2. விவசாயத்தில் வேண்டும் என்கிற அளவுக்கு உற்பத்தி இருந்தாலும்கூட விலை போகிறதில்லை. சாதாரணமாக உற்பத்தி செலவுகளுக்கு கட்டுப்படியாகிற பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்காத ஒரு காரணத்தினால் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்ற வாய்ப்பு அதிகமாய் வருகிறது.

3.அரசினுடைய வளர்ச்சி திட்டங்களுக்காக விவசாய நிலங்களை எடுத்துக்கொள்கின்றார்கள். சிப்காட் போன்ற தொழில் பேட்டைகள், சாலை, ஸ்பெஷல் எக்ஸ்போர்ட்ஸ் பூங்காக்கள்,. ஐ.டி. , நவீன விமான நிலையங்கள் இந்த மாதிரி எல்லாவற்றையுமே கட்டிட வசதிகளுக்காக எடுத்துக்கொள்கிறார்கள். 

4. சாலை வசதிகள் இப்போது பெருமளவு பெருகி வருகிறது. நான்கு வழிச்சாலைகள் அதிகளவில் போடுகிறோம். அதற்காக விவசாய நிலங்களைததான் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது.

5.. நகரங்கள் விரிவடைந்து கொண்டே போவதால் வீடுகள் கட்ட நிறைய இடங்கள் தேவையும், வீட்டுமனைகளின் விலை உயர்வையும் பொறுத்து விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுகின்றன.

இவற்றுள் விவசாயத்துக்கு தேவையான ஆட்கள் கிடைப்பதில்லை என்பது தலையாய காரணமாக திட்ட கமிஷன் சுட்டிக்காட்டுகிறது.

கிராமப்புறங்களில் இருந்து ஒரு கணிசமான கூட்டம் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதும், அரசின் இலவச திட்டங்களால் இன்றியமையாத பொருள்களுக்கு உழைத்து வரும் வருமானத்தை எதிர்பார்த்திருக்க வேண்டியதில்லை என்கிற நிலைமைகளும், இருபத்தி நாலு மணி நேரமும் மக்களை கட்டிப்போடும் தொலைக்காட்சி சேவைகளும்,  இலகுவாக கிடைக்கும் மதுவுக்கு உழைக்கும் கூட்டத்தின் கணிசமான சதவீதம் அடிமைப்பட்டு கிடப்பதும், பாடுபட்டு செய்யும் விவசாயம் பலதடவைகளில் பொருளாதார ரீதியில் பொய்த்து போவதன் காரணமாக ஏற்படும் மனரீதியான ஊக்கமின்மையும் ஆட்கள் கிடைப்பதில்லை என்பதற்கு காரணங்களாக சொல்லலாம்.

அரசின் நூறு நாள் வேலை திட்டத்தின் காரணமாகவும் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனால் அதற்கு பரிகாரம் செய்யமுடியும். அரசின் ஊரக மேம்பாட்டுத்திட்ட (RURAL DEVELOPMENT)  பணிகளோடு விவசாய நிலங்களையும் மேம்படுத்தும் பணியையும் இணைத்துக்கொண்டால் இக்குறையை ஓரளவு களைய முடியும்.

ஒரு காலத்தில் வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வந்தால் புரோக்கர்கள் என்று சொல்லப்படுகிற வெளிநாட்டு சாமான்களை வாங்கி விற்கும் ஆட்கள் கொண்டுவந்த சாமான்களுக்கு நல்ல விலை தருவதாக சொல்லி பட்டியல் போட வீடு தேடி வருவார்கள். இன்றோ நாம் ஊர் போன மறுநாள் நம் வீடு தேடி வருபவர்கள் நில பேரங்களில் ஈடுபட்டுள்ள புரோக்கர்கள். தடுக்கி விழுந்தால் இப்போது புரோக்கர்கள் மேல் விழ வேண்டி இருக்கிறது. தாமரங்கோட்டையில் தோப்பு இருக்கிறது. அங்கு ஒரு தங்கப்புதையல் இருக்கிறது என்றும் சம்பையில் சதுப்பு நிலம் இருக்கிறது. அங்கு சாத்துக்குடி சாகுபடி செய்யலாம் என்றும் ஏரிப்புரகரையில் இடம் வாங்கினால் ஏலக்காய் பயிரிடலாம் என்றும் ஆசை வார்த்தை காட்டி எதையாவது தலையில் கட்டிவிடுகிறார்கள். சில இடங்களில் அதிகமான இலாபம் கிடைப்பதால் நிறைய இடங்களில் வெறும் இடங்களை வாங்கிப்போட்டு அப்படியே விலை  ஏறும் என்று காத்து இருக்கிறார்கள். அந்த முன்னாள் விவசாய பூமிகள் விவசாயம் செய்யப்படாமல் வீணாக கிடக்கின்றன.

இப்படி சிலர் பெருமளவில் வாங்குகிற இடங்களை செப்பனிட்டு விவசாயத்துக்கு ஏற்ற இடமாக பக்குவப்படுத்தி பயிர் செய்ய எத்தனிக்கிறாகளா என்றால் அது ஒப்பிடுகையில் மிகக்குறைந்த சதவீதமே.

இந்த மாதிரி விளைநிலங்கள் மற்ற ஒரு காரணங்களுக்காக மாற்றப்படுவது என்ற போக்கு தொடர்ந்து நீடித்து வருவதன் காரணமாக தேவைப்படும் உற்பத்தியினுடைய அளவு குறைவதோடு மட்டுமில்லாமல் யூனிட் புரொடக்ட்விட்டி என்று சொல்லப்படுகிற ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து நாம்  உற்பத்தி பண்ணுகிற விளைபொருளை இரண்டு மடங்காக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுகிறோம்.

அப்போதுதான் இருக்கக்கூடிய மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்றவகையிலே உணவு உற்பத்தியை செய்ய முடியும். அப்படியே குறைந்த அளவு விளை நிலத்தில் இடுபொருள் (INPUT) என்கிற ஒரு காரணியை மட்டும் கூடுதலாக்கிவிட்டு (OUTPUT) என்கிற கண்டுமுதல் வரவில்லை என்றால் அது பொருளாதார கோட்பாடுகளின்படி குறைந்து செல் உற்பத்திவிதி (LAW OF DIMINISHING MARGINAL RETURNS ) க்கு உட்படும்.

இது கையில் இருக்கிற வெண்ணையை விற்றுவிட்டு நெய்க்கு அழும் கதையாகவே இருக்கும். கண்களை விற்றுவிட்டு சித்திரம் வாங்க முயன்றால் உலகம் கை கொட்டி சிரிக்காதா? அரிசி வாங்கும் பணத்தில் சட்டி வாங்கி வைத்தால் எதைப்போட்டு சமைப்பது?

இப்படி விளைநிலங்களை வாங்கிப்போட்டுவிட்டு அதை எந்த உற்பத்திக்கும் பயன்படுத்தாமலும் ஏற்கனவே உற்பத்தியானதையும் நிறுத்திவைத்திருக்கும் போக்கை சட்டத்தாலோ அரசின் தலையீட்டாலோ தடுத்து நிறுத்தமுடியுமா என்று சிலர் மனதில் கேள்வி எழுகிறது.

இதற்கு பதில் தடுத்து நிறுத்தமுடியும் என்பதே.

விளை நிலங்களாக இருந்தவற்றை தொடர்ந்து மூன்று வருடங்கள் (CULTIVATION) என்கிற விவசாயப்பணிகளில் ஈடுபடுத்தாமல் விதவை நிலங்களாக போட்டுவைத்தால் அரசு ஊராட்சி மன்றத் தலைவரின் சிபாரிசின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவில் அவற்றை மீண்டும் மாற்றி அமைத்துக்கொள்ளவோ அல்லது அரசுக்கு தேவை என்று எடுத்துக்கொள்ளவோ சட்டப்படி முடியும் . குறைந்த பட்சம் இந்த போக்கை தடுக்கவாவது முடியும்.

இந்தியா ஒரு விவசாய நாடு என்றும் , 70 சதவீதம் மக்கள் விவசாயத்தை சார்ந்து பிழைக்கிறவர்கள் என்றும் சமூக அறிவியலில் படித்து எழுதி மார்க் வாங்கி இருக்கிறோம். இன்றோ 52 சதவீதம் நகரீயமாக்கப்பட்டுவிட்டது என்றும், நமது கிராமங்களில் இருந்து விவசாயத்தை சார்ந்து பிழைத்தவர்கள் நகர்புறங்களுக்கு நகர்ந்து விட்டார்கள் என்றும் திட்ட கமிஷன் கூறுகிறது. இது ஆபத்தின் அறிகுறி.

சென்னை ,மதுரை ,திருச்சி, கோவை ,சேலம், நெல்லை போன்ற பெரு நகரங்களை ஒட்டி அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அண்டை மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அயல் நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனத்தினர் போன்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கியும் விற்றும் ஒரு செயற்கையான மற்றும் கடுமையான விலை ஏற்றத்தை உருவாக்கியுள்ளனர் இதனால் அன்றாடம் காய்ச்சிகளான ஏழை எளிய மக்கள் நிலம் சார்ந்த கூலித் தொழிலையும் இழந்து தமது தாய் மண்ணையும் பறி கொடுத்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர் ஆகவே பரவலாக விளை நிலங்கள் பறிபோவதை தடுக்கவும்  பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் வணிகத்தின் பெயரால் விவசாய நிலங்களின்  மீது செலுத்துகிற ஆளுமையை அல்லது ஆக்கிரமைப்பை கட்டுப்படுத்த வேண்டும்

எந்த ஒரு நாடும், தனக்கு காலகாலமாக கை கூடி வந்த மண்ணின் பரம்பரியமான தொழிலை மறந்து அந்த வாழ்வாதாரங்களை தலைகீழாக மாற்ற தலைப்பட்டாலோ பேணிகாக்காமல் உதாசீனம் செய்தாலோ  முன்னேற முடியாது. சரித்திரம் அப்படி சான்று பகரவில்லை.

தனக்கே உரித்தான-தன தாய் மண்ணுக்கே சொந்தமான- தலைமுறைக்கும் கைவந்த தொழில்களோடு புதிய மாற்றங்களோடும் நவீன தொழில் வளரச்சிகளோடும் கைகோர்த்து அரவணைத்து வளர்ந்த நாடுகளே அதிகம். ஒரு விவசாய நாடு என்று முத்திரை குத்தப்பட்ட நாட்டின் விவசாய நிலங்கள் வீணாகி கிடப்பதையும் அதன் விவசாயிகள் மனமொடிந்து மாற்று தொழில்களுக்கு மண்டியிடுவதும் ஆரோக்யமான பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக கருத முடியாது. 

ஒரு நாட்டு மக்களின் உண்மையான வளர்ச்சி அவர்கள் கையில் இருக்கும் செல் போன்களும், தோளில் தொங்கும் லேப்டாப்களும் அல்ல. பசி இல்லாத வயிறுகளும்-உற்பத்தி பெருக்கமும் -ஏற்றுமதி அதிகரிப்பும் -அன்னியசெலாவணி கை இருப்பின் பெருக்கமும்- வெளிநாட்டு கடன் சுமை குறைவும்- உள்நாட்டு சேமிப்பின் பெருக்கமும்தான் வளர்ச்சி அடையும் நாடுகளின் அடையாளம். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் நடக்காது. விளை நிலங்களை விதவைகளாக்கிவிட்டு ஒரு விவசாய நாடு விந்தைகள் செய்ய இயலாது. வல்லரசு ஆகப்போகிறோம்  என்று வார்த்தை சாயம்தான் அடிக்கலாம்.

இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ – இப்படியே போனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா இன்னொரு எத்தியோப்பியாகவோ.

சோமாலியாகவோ மாறி சோத்துக்கு சிங்கி அடிக்கப்போவது திண்ணம்.

-இபுராஹீம் அன்சாரி
வண்ணப்படம் : Sஹமீத்

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அருமையான அலசல் !

சுருக்கமாகச் சொல்வதனால் - மனைகளுக்கு அணை கட்ட வேண்டும் !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அறிவுபூர்வமான ஆக்கம்.மனைகளில் எல்லை வறப்பு போட்டு லச்ச லச்சமாய் பண மடைகளை உள்வாங்கும் உள்ளங்களுக்கு நல்ல அணையாகதான் இருக்கிறது.

ZAKIR HUSSAIN said...

To Brother இபுராஹீம் அன்சாரி

//இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ – இப்படியே போனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா இன்னொரு எத்தியோப்பியாகவோ. சோமாலியாகவோ மாறி சோத்துக்கு சிங்கி அடிக்கப்போவது திண்ணம்.//


இது உண்மை..உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை; காரணம் 5 ஆண்டுகளில் விலையேற்றத்தின் அளவு 45% - 70%

ZAKIR HUSSAIN said...

அளவுக்கு அதிகமான ரியல் எஸ்டேட் விலையேற்றம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் சரிவு மக்களை ஏழையாக்குவதுடன் வேலையில்லாத்திண்டாட்டத்தை உருவாக்கும். [ உதாரணம்; கேத்ரினா புயலுக்கு பிறகு வந்த பொருளாதார மந்தம்..அமெரிக்காவில் ]

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான இபுறாஹிம் அன்சாரி காக்கா,

நாம் வாழ்வாதாரமான விளைநிலங்கள் இன்று குடிகட்டி வாழும் நிலங்களாக மாறியதற்கு காரணம் பல சொன்னாலும். நம் மார்க்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க அடம்பிடிப்பதே முழுக்க முழுக்க காரணம். குறிப்பாக பெண்ணுக்கு வீடு என்ற கேடுகெட்ட சம்பிரதாயமே காரணம்.

வீடும் சீதனமாகுமா? என்ற இந்த மார்க்க சொர்பொழிவை நேரம் கிடைத்தால் மீண்டும் ஒரு முறை எல்லோரும் கேளுங்கள். குறிப்பாக வீட்டில் உள்ள பெண்களை கேட்க சொல்லுங்கள்...

http://www.ustream.tv/recorded/19602003

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இயற்கை பேரழிவுகளால் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை காட்டிலும், சமூக சீர்கேடுகளாலும், தவறான பொருளாதார கொள்கைகளாலும் விளைநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைகிறது என்பது தெள்ளத்தெளிவான உண்மை..

விளைநிலங்களின் விலை ஏற்றமும், அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றமும் சமச்சீராக செல்கிறது. சமச்சீர் கொள்கை இங்கு தான் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இபுறாஹிம் அன்சாரி காக்காவின் ஆக்கம் நல்லதொரு ஆக்கம் மட்டுமல்ல நம் நாட்டிற்கு தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அக்கறையுள்ள ஓர் எச்சரிக்கை!!!

இந்த ஆக்கத்தை எங்கோ ஒரு மூலையிலிருந்து எவனோ ஒருவன் (முஸ்லிம்) எழுதியிருக்கிறான் என்றென்னி யாரும் பொடுபோக்காக இருக்கலாகாது.

'வ‌ய‌லும் வாழ்வுமாக‌ இருந்த‌ ம‌க்க‌ளை "தானே" புய‌ல் வ‌ந்து புய‌லும் தாழ்வுமாக‌ புர‌ட்டிப்போட்டுவிட்ட‌து'.

தொன்றுதொட்டு விவ‌சாய‌ம் செய்து வ‌ந்த பெரும்பான்மையான‌ விவ‌சாய‌க்குடும்ப‌ங்க‌ள் எல்லாம் த‌ங்க‌ள் விளைநில‌ங்க‌ளை விற்று விட்டு சென்னைப்போன்ற‌ பெருந‌க‌ர‌ங்க‌ளில் க‌ட்டிட‌ங்க‌ள் வாங்கி அத‌ன் வாட‌கையில் குடும்ப‌த்தின் வாழ்வாதார‌த்தை தேடிக்கொண்டு விட்ட‌ன‌.

ப‌ல‌ விவ‌சாய‌க்குடும்ப‌ங்க‌ளில் வீட்டின் பிள்ளைக‌ளை ந‌ல்ல‌ ப‌ள்ளிக‌ளில் சேர்த்து உய‌ர்க்க‌ல்வி ப‌டிக்க‌ வைத்து ந‌க‌ர‌ங்க‌ளுக்கும், அய‌ல்நாடுக‌ளுக்கும் ச‌ம்பாதிக்க‌ அனுப்பி வைத்து விட்ட‌ன‌. அத‌னால் குடும்ப‌த்தொழிலை மேற்கொண்டு க‌வ‌னிக்க‌/தொட‌ர‌ அவ‌ர்க‌ளால் இய‌லாம‌ல் போன‌து.

இவைக‌ளெல்லாம் விவசாய குடும்பங்களின் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் என்று சொன்னாலும் உண‌வ‌ளிக்கும் விவ‌சாய‌த்தொழில் நாள‌டைவில் ந‌சிந்து, அழிந்து அரசு மூலம் மாற்றுப்பரிகாரம் ஏதும் இல்லாமல் இத்தொழில் செய்வோரின் ச‌த‌விகித‌ம் க‌ணிச‌மாக‌ குறைந்து விட்ட‌து என்ப‌து தான் நித‌ர்ச‌ன‌மான‌ உண்மை.

ந‌ம்மிட‌ம் ப‌ண‌ங்காசுக‌ள் பிற‌தொழில்க‌ள் செய்து அதன் மூலம் கொட்டிக்கிட‌ந்தாலும் அரிசி போன்ற‌ அத்தியாவ‌சிய உணவுப்பொருட்க‌ளின் த‌ட்டுப்பாடு உலகில் ப‌ர‌வ‌லாக‌ ஏற்ப‌ட்டு அண்டை நாட‌ல்ல‌, எந்த‌ நாடிலிருந்தும் இற‌க்கும‌தி கூட‌ செய்ய‌ இய‌லாம‌ல் போய்விடும்.

இந்த‌ பிர‌ச்சினைக‌ளுக்கெல்லாம் ம‌க்க‌ள் தொகைபெருக்க‌ம் ஒரு சிறு கார‌ண‌மாக‌த்தான் இருக்க‌ முடியும். க‌ள்ள‌ச்ச‌ந்தை, ப‌துக்க‌ல், தேவையில்லாம‌ல் விளைநில‌ங்க‌ளை என்ன‌விலை கொடுத்தேனும் வாங்கி பதுக்கி வைத்துக்கொள்ளுத‌ல், அப‌ரிமித‌மான‌ லாப‌த்தால் உள்நாட்டில் ப‌ண‌ப்ப‌ரிவ‌ர்த்த‌னை செய்து அர‌சின் க‌வ‌னத்திற்கு செல்லாம‌ல் சுவிஸ் போன்ற‌ நாடுக‌ளில் ப‌ண‌த்தை ப‌துக்குதல், ம‌னித‌னாக‌ வாழ‌ தேவையான குறைந்த பட்ச‌ ம‌னிதாபிமான‌ம் கூட‌ இல்லாமை போன்ற‌வைக‌ளே பிர‌தான‌க்கார‌ண‌ங்க‌ளாகும்.

ஒரு காலத்தில் நம் ஊரில் எல்லா வீடுகளிலும் பத்தாயம் (பத்தாயத்து அறை)என்று சொல்லப்படும் நெற்களை வருங்கால வீட்டின்/குடும்ப தேவை கருதி சேமித்து வைக்கும் மரத்தாலான சேமிப்பு கிடங்கு இருந்தது. அது இப்பொழுது யார்,யார் வீட்டில் இருக்கிறது சொல்லுங்கள்? பார்ப்போம். அப்படி இருந்தால் அது அழிந்து போன பொருட்களின் அருங்காட்சியகத்தில் அவசியம் வைக்கப்பட வேண்டிய ஒன்று.

இயன்றால் நம்மூரில் "புழக்கத்தில் இருந்து அழிந்து போன பொருட்கள்" என்ற தலைப்பிட்டு அவைகளை பட்டியலிட்டு ஒரு கட்டுரை எழுதலாம். அவ‌ச‌ர‌ உல‌கில் எல்லாம் அநாதைக‌ளாக‌ப்ப‌ட்டு விட்ட‌ன. ஆரோக்கியமும் அத்துடன் தொலைந்து விட்டன.

ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்க விரும்புகிறேன். தன் தோட்டத்தின் விளைப்பொருட்களான மாங்காய், நெல்லிக்காய், எலந்தப்பழம், நாகப்பழம், மரவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, கொட்டிக்கிழங்கு, நிலக்கடலை, பயறு, சோளம் போன்ற பல பருவத்தில் விளையும் காய், கனிகள் கொண்டு வந்து தெருதோறும் விற்றுச்சென்ற தெருஆச்சிகளின் வரத்து குறைந்து விட்டது. அவர்களில் பலர் வயோதிகத்தால் இறந்து விட்டனர். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத்தவிர. அவர்கள் விற்று வந்த‌ விளைப்பொருட்கள் விளைச்சலின்றி நின்று விட்டனவா? அல்லது அவர்கள் வேறு ஏதேனும் தொழிலுக்கு சென்றுவிட்டனரா? என்பது தெரியவில்லை.

ப‌ண‌ம் இருந்தால் எல்லாவ‌ற்றையும் வாங்கிவிடலாம். ஆனால் ப‌ண்டைய‌ கால‌த்தை வாங்க‌ முடியுமா?

இந்த‌ ஏக்கங்கள் யாருக்குத்தான் இல்லை? ஏக்கங்கள் தீர‌ வ‌ழி தான் என்ன‌? இது ஏதோ மூன்று பேர் சேர்ந்து முடிவெடிக்க‌ வேண்டிய‌ விச‌ய‌ம‌ல்ல‌. முப்ப‌டைக‌ளைக்கொண்டு அர‌சாலும் நாடு சிந்தித்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றுவது அதன் தலையாய க‌ட‌மையும், பொறுப்புமாகும்.

மேற்கண்டவை யாவும் இன்றைய உல‌கால் வ‌ந்த‌ வ‌ருத்த‌ங்க‌ள். ந‌ம் உள்ளூர் வ‌ருத்த‌ங்க‌ளை (பெண்ணுக்கு வீடு கொடுத்து மார‌டிக்கும் ப‌ழ‌க்க‌ம்) சொல்லிமாளாது எழுதித்தீராது.....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"புழக்கத்தில் இருந்து அழிந்து போன பொருட்கள்"//

MSM(n)க்கு சொல்லவா வேனும் எழுதிட்டா போச்சு(ன்னு) பதிலும் தருவீங்க "தானே" !! :)

Unknown said...

நீண்ட காலமாக எல்லோர் மனதில் உள்ள ஏக்கம் ஒரு அறிவார்ந்த கட்டுரையாக வந்துள்ளது .

மனித இனம் மிக மூர்க்கமாக எவ்வுலவுதூரம் இயற்கை சார்ந்த விசயங்களில் இருந்து விலக

முடியுமோ அவுளவு தூரம் விலகியாகிவிட்டது.அவ்வுளவும் செயற்கை.

ஒரு நாள் செயற்கையான விஷயங்கள் யாவும் தன் அலைவரிசையிலிருந்து விலகும் ,

இந்த தருணத்தில் மனித இனம் இயற்கை சார்ந்த விசயங்களை மறந்து ,விலகி பல வருடங்கள்

கழிந்திருக்கும் .

Thameem said...

விவசாய தொழில் அழிவதற்கு Globalization, Privatization, Liberalization போன்ற காரணமும் உண்டு.அணைத்து தொழில்களும் கணினியை நாடுவதால் எவரும் விவசாய தொழிலில் கவனம் செலுத்துவது இல்லை.

sabeer.abushahruk said...

சமூக அக்கறை மிளிரும் ஆக்கம். சிந்தனையைத் தூண்டியது.
வாழ்த்துகள்!

Shameed said...

மலரும் நினைவாகவும் அறிவார்ந்த அலசலாகவும் அமைந்து உள்ளது கட்டுரை

மாமாவின் கட்டுரைக்கு மருமகன் எடுத்த போட்டோ அதிரை நிருபரின் செலக்சன் அசத்தல்

Yasir said...

உரத்த சிந்தனை ...அழகாக ஆழமாக சொல்லி இருக்கின்றீகள்...விளை நிலங்களை கூறுபோட்டு வித்துவிட்டு..பொருட்களின் விலை உயர்ந்து விட்டது என்று வெற்றுக்கூச்சல் எதுக்கு

Anonymous said...

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

வயலும் வாழ்வும் என்று தலைப்பிட்ட ஆக்கத்துக்கு அனைவரும் தந்துள்ள ஊக்கம் மிக்க மகிழ்வைத்தருகிறது.

ஜசக்கல்லாஹ்.

தம்பி மு.செ.மு.நெய்னா முஹம்மது அலசலை இன்னும் ஆராய்ந்து அலசி அற்புதமான பின்னூட்டத்தை தந்திருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்டுள்ள ஆச்சிகளை விலைக்காரத்தெருக்களில் மிகவும் இழந்து இருக்கிறோம். (முக்கியமாக அந்த முட்டை சர்க்கரை வள்ளிக்கிழங்கு).

தம்பி தாஜுதீன் அவர்கள் பெண்ணுக்கு வீடு கொடுக்கும் பழக்கத்தை இணைத்து சாடி இருககிரார்கள். அதிரை, கீழக்கரை, நாகூர், காரைக்கால் ஆகிய ஊர்களைத்தவிர வேறு எங்கும் இப்பழக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் விளைநிலங்களை விலங்கு பூட்டி அடிமையாக வைத்திருக்கும் அவலம் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மருமகன் தமீம் அவர்கள் கணிணியை நம்பி இருப்பதால் இந்நிலை என்று சுட்டி இருககிரார்கள். கணிணி வைத்து இருப்போர்கள் பசிக்கு கணினியில் உள்ள ஒரு ஸ்பேர் பார்ட்சை எடுத்து சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்க இயலாது. இதை கணினியை நம்பி காலம் ஓட்டலாம் என்று நினைப்பவர்கள் உணரவேண்டும். “ வயிற்றுக்கு சோறு வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்”.

மருமகன் சா. ஹமீது உடைய வண்ணப்படம் பொருத்தமாக வெளியிடப்பட்டு இருப்பதற்கு என் சார்பிலும் நிருபர் அணியை பாராட்ட விழைகிறேன். அடுத்து வரும் எனது ஆக்கங்களுக்கும் மருமகன் சா. ஹமீது அவர்களின் வண்ணப்படம் வெளியிடப்பட்டால் மகிழ்வாக இருக்கும்.

எதற்கும் இன்னொரு வண்ணப்படம்-

வேலைதேடி வரும் இளைஞர்-

கையில் கோப்புக்களுடனும்-

கண்ணில் கனவுகளுடனும் – நேர்காணலுக்கு புரப்படுவதுப் புறப்பட தயாராக இருப்பதுபோல் எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

அடுத்து இன்ஷா அல்லாஹ் அதுதான் சப்ஜெக்ட்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி.

Thameem said...

வயலும் வாழ்வும் பயனுல்ல கருத்து.Ansaari Mama Fantastic.

Indian said...

சிந்திக்க வேண்டிய விஷயம் அருமையான கட்டுரை.... குமரி மாவட்டத்தில் எனக்கு தெரிந்து 15வருஷம் முன்பு வயல் வெளியாக இருந்த இடம்மில்லாம் இப்போ குடியிருப்புகளாக மாறிவிட்டது... உணவுக்கு கஷ்டபட போகிறோம் என்பது மட்டும் உண்மை.... இன்று வீட்டுமனைகளுக்கு இருக்கும் போட்டியும் விலை உயர்வும் விளைநிலங்களுக்கு ஒருநாள் வரும்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.இபுராஹீம் அன்சாரி
விழிப்புணர்வூட்டும் பதிவு...
நெத்தியடியான வார்த்தைகளோடு...

பின்னாளில் 'விலை' நிலங்கள் ஆக வேண்டும் என்று 'விளையும்'நிலங்களை வாங்கி அதை வேண்டுமென்றே...
விதவை நிலங்கள் ஆக்கி வைத்திருக்கும் நம்மை.....
நிச்சயம்,
நாளைய தலைமுறை பசியால் சோத்துக்கு சிங்கி அடித்து உணவு ஏதும் விதைக்க பயிர்விக்க நிலமே கிடைக்காமல் எலிக்கறி சாப்பிடக்கூட எலி கிடைக்காமல் செல் போனையும் லேப் டாப்பையும் தங்க நகையையும் பென்ஸ் காரையும் சோனி எல்ஈடியையும் கடித்து திங்கும்போது...

நாளைய தலைமுறை நம்மை மன்னிக்கவே மன்னிக்காது..!

அப்போது, பசியை போக்க... சிலர் தங்கள் வீட்டை இடித்துவிட்டு அதை விளை நிலமாக்கி விதைப்பார்கள். சிலர் மொட்டை மாடியில் மண்ணை நிரப்பி பயிர் செய்வார்கள். அப்போது ஒரு லாரி லோடு விளை மண்ணை வாங்க... தன்னிடம் உள்ள இரண்டு காரை விற்று பணத்தை தர வேண்டி இருக்கும்..!

பட்டுத்தான் திருந்துவோமோ..?
இதற்கு அரசு உடனே ஏதாவது செய்யவேண்டும்.

விவசாயிகளை அரசு ஊழியராக்கலாம்.
வேறு வேலையில் இருந்துகொண்டே விவசாயம் பார்ப்போருக்கு வரிவிலக்கு, பதவி உயர்வு, ஊக்கத்தொகை தருதல்...
விளை நிலங்களை, விலை நிலமாக்க... பிளாட் போடுவோருக்கு தண்டனைச்சட்டம்,
ஏதும் விதைக்காமல் விதவையாக விளையும் நிலத்தை "விலை ஏறும்" என்று தரிசாக வைத்து இருப்போருக்கு மாதாமாத வரி...
இப்படி...
அரசு உடனே ஏதாவது செய்யவேண்டும் சகோ..!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு