(*)
உணவும் மருந்தென்று
உட்கொள்ளும் நிலை மாறி-பூச்சி
மருந்து தாக்கிய
விருந்துண்ணும் உலகமிது !
(*)
உழுது களைபறித்து தன்
உணவை தான் விளைத்து
பழுது பாழாகா பதத்தில்
பயிர் செய்து,முற்றி அதை பறித்து
முழுதாய் பயன்கண்டு வாழ்ந்தார்.
முழுநூறு ஆயுளுக்கு.
(*)
உழைத்து அவர் இழக்கும்
ஊட்டம் அத்தனைக்கும்
இழந்த திடம் தன்னை
ஈட்டும் உணவு அது.
பிழைப்பும், உடல் பேணும்
பக்குவமும் இருந்ததனால்
நிலைத்த உடல் திறனில்
நீளப் பெறுவர் தம் ஆயுள்.
(*)
இழையும் உரல் பிடித்து
இழுத்து அரைத்திடுவார்.
குழைய வழித்தெடுப்பார்
அம்மியில் அத்தனையும்.
வளைந்த தம் இடையில்
வாகாய் குடம் சுமப்பார்
பழைய உழைப்பில்லா காரணமே
பெண்டிரின் நோய்கட்கு பிரதானம்.
(*)
ஆளுக்கொரு வைத்தியம்
அத்துப்படி என்றிருந்த
ஆண்டுகள் மாறியதால்,
நாளுக்கொரு நோயும் நம்மை
நலிவடைய செய்திடுதே..
(*)
பாலுக்கு அழுகிறதா? பகீரென்னும்
பயத்தாலே அழுகிறதா?- இல்லை
போலிக்கு அழுகிறதா? செல்ல
குழந்தை கண்ணில்நீர் குற்றாலமாய்
பொள பொளவென விழுகிறதா?
(*)
நல்லாவே தெரிந்திருக்கும்
நம் வீட்டு பெண்டிற்கு...
எல்லாமும் ஒருகாலம்.
அப்படி ஓர் நிலையின்று
இல்லாது போனதுவே..
இல்லாளும் மருத்துவத்தின் முன்னறிவு
இல்லாளாய் இருக்கின்றாள்.
(*)
கதகதப்பான துணிகொண்டு
கச்சிதமாய்ச் செய்யும்
காலுக்கு வைத்தியமும்
கை வைத்தியமே.
வெது வெதுப்பாய்த் தெரியும்-பின்
வேதனையும் குறைந்திடுமே..
புது புது வைத்தியத்திலும் கிட்டா
புத்துணர்வு கிடைத்திடுமே..
(*)
அறிவியலின் வளர்ச்சியிலே
ஆயிரம் கிடைத்திருந்தும்
செறிவான சிலவற்றை
சத்தியமாய் இழந்திட்டோம்.
அறிவோமா? அப்படிஓர்
பேரிழப்பே, அடுத்த தலைமுறைக்கு
அறிவிக்காமல் போய்விட்டோம்
கைமருந்து கலைதன்னை....
- அதிரை N.சஃபாத்
14 Responses So Far:
அதெப்படி !
வரிகள் கை(கட்டி)வைத்தியம் செய்கிறது !
//நல்லாவே தெரிந்திருக்கும்
நம் வீட்டு பெண்டிற்கு...
எல்லாமும் ஒருகாலம்.
அப்படி ஓர் நிலையின்று
இல்லாது போனதுவே..
இல்லாளும் மருத்துவத்தின் முன்னறிவு
இல்லாளாய் இருக்கின்றாள்.//
இது அதிரையின் மறுபக்கமல்ல மாறாக அகம் கண்ட அச்சு !
உணவும் மருந்தென்று
உட்கொள்ளும் நிலை மாறி-பூச்சி
மருந்து தாக்கிய
விருந்துண்ணும் உலகமிது !
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
பூச்சி மருந்தும் விருந்தாகி நமக்கு மருந்தும் நாளடைவில் தேவையெனும் பொழுதுக்கு வந்த காலம் பின் நோயிக்கு விருந்தாகும் நம் ஆரோக்கியம்.
சபாஸ் சபாத்!!!! சாப்பாடு விசம் ஆனதை கவியில் கூப்பாடு போட்டு எப்பாடு பட்டாவது இந்த நிலைபாடு மாற ஏற்பாடு செய்திருக்கிறாய் வாழ்துக்கள் நல்ல தொரு ஆரம்பம்.
உழுது களைபறித்து தன்
உணவை தான் விளைத்து
பழுது பாழாகா பதத்தில்
பயிர் செய்து,முற்றி அதை பறித்து
முழுதாய் பயன்கண்டு வாழ்ந்தார்.
முழுநூறு ஆயுளுக்கு.
(*)
உழைத்து அவர் இழக்கும்
ஊட்டம் அத்தனைக்கும்
இழந்த திடம் தன்னை
ஈட்டும் உணவு அது.
பிழைப்பும், உடல் பேணும்
பக்குவமும் இருந்ததனால்
நிலைத்த உடல் திறனில்
நீளப் பெறுவர் தம் ஆயுள்.
-----------------------------------------------
தனக்கு தேவையான உணவை இயற்கை முறையில் விதைத்து பின் அந்த ஆரோக்கிய உணவை உண்டு ,பின் உண்ட உணவு செறிக்க நித்தம் உழைத்த மூத்த உழவன் காலம் ஆயுள் நீண்ட தொரு ஆரோக்கிய கணவு காலம்.இப்படி ஒவ்வொரு பெரியார்களூம் தத்தம் துறையில் உழைத்து செழுத்து நோய் நொடித்துபோகும் அளவில் வாழ்ந்ததெல்லாம் ஏட்டில் படிக்க எமக்கு செய்தி .ஆனாலும் அந்த ஏட்டு சுரைக்கா அது நம் கறிக்கு உதவாத அலங்கோலம் காலம் செய்த ஜாலம். எல்லாம் மாய் மாலம்.
இழையும் உரல் பிடித்து
இழுத்து அரைத்திடுவார்.
குழைய வழித்தெடுப்பார்
அம்மியில் அத்தனையும்.
வளைந்த தம் இடையில்
வாகாய் குடம் சுமப்பார்
பழைய உழைப்பில்லா காரணமே
பெண்டிரின் நோய்கட்கு பிரதானம்.
(*)
ஆளுக்கொரு வைத்தியம்
அத்துப்படி என்றிருந்த
ஆண்டுகள் மாறியதால்,
நாளுக்கொரு நோயும் நம்மை
நலிவடைய செய்திடுதே..
(*)
பாலுக்கு அழுகிறதா? பகீரென்னும்
பயத்தாலே அழுகிறதா?- இல்லை
போலிக்கு அழுகிறதா? செல்ல
குழந்தை கண்ணில்நீர் குற்றாலமாய்
பொள பொளவென விழுகிறதா?
--------------------------------------------------------
அக்காலம் பெண்டீரும் ஆரோக்கிய வழி நடந்து நீண்ட ஆயுள் பெற்றனர். பின் அதன் வழி நம் பெண்டீர் நடவாத வாழ்கை சோகம். புத்தம் புது நோய் நித்தம் வரும். அக்காலம் கைவைத்தியம் என்னும் இயற்கை வைத்தியத்தில் கிடைத்த நிவாரனி. இப்ப விஞ்ஞானம் வளர்ந்த பின்னும் முழுவதிலும் குணம் கான முடியாத காசு திண்ணும் "நோயின் வாய்" நிறைய சிவப்பு நிறம் ரத்தம் குடித்த காறை!
====================================================
போலியேனும் ஏமாற்றும் இப்படியே கலிகாலம். போலியோ எனும் நோய் தடுப்பு மருந்தும் போலியாய் அதை தடுத்திடும் நல்லாதாய் கொடுத்திடும் நிலையும் இக்காலத்தில் இல்லை. அதனாலேயே பிள்ளை அழுவதில் கூட அறியமுடியாத நிலையை இளம் கவிஞர் அழகாய் சொல்லி உள்ளார். தம்பி! உன்னை வாயாற பாராட்ட நாளை நான் பேசுவேன். எல்லா புகழும் அல்லாஹுக்கே!
நல்லாவே தெரிந்திருக்கும்
நம் வீட்டு பெண்டிற்கு...
எல்லாமும் ஒருகாலம்.
அப்படி ஓர் நிலையின்று
இல்லாது போனதுவே..
இல்லாளும் மருத்துவத்தின் முன்னறிவு
இல்லாளாய் இருக்கின்றாள்.
---------------------------------------------------------
வரும்முன் காப்போம் என்பது படிப்பதுடன் சரி அதை படிப்படியாய் பயன்பாட்டில் கொண்டுவரா சோம்பல் வாழ்கை. மேலும் பெண்கல்வியின் அவசியமும் அலசியவிதம் அருமை. இந்த சமுதாய பிணிக்கு மருந்தாக இந்த கவிதை மருந்து சீட்டு இனி மகளிர் கவனம் கொண்டு படித்திடுவீர் இந்த சமுதாயத்தில் பங்கு கொள்வீர்.
கதகதப்பான துணிகொண்டு
கச்சிதமாய்ச் செய்யும்
காலுக்கு வைத்தியமும்
கை வைத்தியமே.
வெது வெதுப்பாய்த் தெரியும்-பின்
வேதனையும் குறைந்திடுமே..
புது புது வைத்தியத்திலும் கிட்டா
புத்துணர்வு கிடைத்திடுமே..
(*)
அறிவியலின் வளர்ச்சியிலே
ஆயிரம் கிடைத்திருந்தும்
செறிவான சிலவற்றை
சத்தியமாய் இழந்திட்டோம்.
அறிவோமா? அப்படிஓர்
பேரிழப்பே, அடுத்த தலைமுறைக்கு
அறிவிக்காமல் போய்விட்டோம்
கைமருந்து கலைதன்னை....
------------------------------------------------------------
அறிவு என்பது நாம் அறிந்ததை அடுத்தவர் அறிய வைப்பதே! அது நம் கடமை கூட. இப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிய தாராத காரணத்தால் பல அறிய பொக்கிசம் அழிந்தே போய்விட்டது. இதில் ஒன்றுதான் வீட்டு வைத்தியம் எனும் நாட்டு வைத்தியம். கைவைத்தியன் கால் வைத்தியன் என பெயர் வைத்தாய் தம்பி ! கவிதை வைத்தியம் மூலம் சமுதாயத்தில் வைத்தியம் பார்கவந்த உன்னை முழுவைத்தியன் என நான் வைத்திடுவேன் என் இதயத்தில். அதற்குண்டான தகுதியும் உமக்குண்டு வாழ்க பல்லாண்டு.
அஸ்ஸலாமு அலைக்கும்,
தம்பி ஷஃபாத், மிக அருமை..
நகரத்தில் வாழ்ந்தாலும் சிறு சிறு நேய்களுக்கு கை மருந்து வைத்தியம் இன்னும் நிறைய வீடுகளிலில் பிடிக்கப்பட்டுவருகிறது. இவைகளை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க தவறியது என்னவோ உண்மை தான்..
தம்பி நாம் அனைவரின் ஆதங்கங்ளை கவிதையாய்,முழுமயாய்,தெளிவாக அள்ளி தெளித்து இருக்கிறீர்கள்.....வாழ்த்துக்கள்
//அறிவியலின் வளர்ச்சியிலே
ஆயிரம் கிடைத்திருந்தும்
செறிவான சிலவற்றை
சத்தியமாய் இழந்திட்டோம்.
அறிவோமா? அப்படிஓர்
பேரிழப்பே, அடுத்த தலைமுறைக்கு
அறிவிக்காமல் போய்விட்டோம்
கைமருந்து கலைதன்னை....// 100 % கரெக்க்ட்
அதிரையில் கவிஞர்கள் அதிகரித்துவிட்டர்கள் சந்தோசம்.
To bro - அதிரை N.சஃபாத்
இதுதான்முதல் ஆக்கமா? ஆச்சர்யம்தான்..... கிரவுன் பக்கத்தில் இருப்பதால் தமிழ் ஒட்டிக்கொண்டதில் அதிசயமில்லை.
நிறைய எழுதுவீர்கள் என்பது எழுத்தில் தெரிகிறது...தொடர்ந்து எழுதுங்கள்
ஜாகிர் காக்கா, இதற்கு முன்பு பல பதிவுகள் அதிரைநிருபரில் வெளிவந்திருக்கின்றனவே.. 'மனத்தண்டவாளம்' 'அதிரையில் அழகிய மழைக்காலம்' .
- அதிரை என்.ஷஃபாத்.
கிரவுனார் தமிழுரை எழுதப்பட்டுவிட்டதால் நாம் இனி எது சொன்னாலும் எடுபடாது என்பதே நிதர்சனம்!
எனினும், நான் கவனித்த சிலவற்றைச் சொல்லாவிட்டால் மனசு கேட்காது.
01) இவை யோசித்து கவிதையாக புனையப்பட்டவையல்ல; மாறாக, கவிதையாகவே யோசிக்கப்பட்டது என நினைக்கிறேன்.
02) பல இடங்களில் மரபுத்தனம் தொணிக்கிறது; ஒரு ரிதம் இனிக்கிறது; பாட்டுச் சாயல் பரவசப்படுத்துகிறது.
03) கவிஞர்களுக்கே உரித்தான இளங்கோபம் அக்கறையாக வெளிப்படுகிறது.
04) ஹார்மீஸ் அப்துர்ரஹ்மானின் லயிக்கவைக்கும் எழுத்தின் சாயல் சில இடங்களில் தித்திக்கிறது; கிரவுனின் சமூகக் கவலை தொக்கி நிற்கிறது, அதிரை நிருபரின் வாசக வட்டத்தின் நாடிபிடிக்கத் தெரிந்திருக்கிறது ஷஃபாத்துக்கு.
என்ன ஒரு பயமென்றால், இம்மாதிரி ரசனையோடு எழுதுபவர்கள் சட்டென காதல் வயப்படும் பலஹீன மனமுள்ளவர்களாக இருப்பார்கள். எனவே, கூலிங் கிளாஸ் ஏதும் போட்டுக்கொண்டால் நேரடிப் பார்வையெனும் ஆயுதத்திலிருந்து தப்பிக்கலாம். (ஏற்கனவே போட்டு இருக்காரோ?!!!:))
//sabeer.abushahruk சொன்னது…
கிரவுனார் தமிழுரை எழுதப்பட்டுவிட்டதால் நாம் இனி எது சொன்னாலும் எடுபடாது என்பதே நிதர்சனம்!
எனினும், நான் கவனித்த சிலவற்றைச் சொல்லாவிட்டால் மனசு கேட்காது. ///
இதுக்கெல்லாம் கொடுப்பினை வேனும்... ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹுஹூம்..
கவிக் காக்கா: கறுப்புக் கண்ணாடி போட்டவங்க தமிழ் நாட்டை ஆண்டிருக்கங்காலாமே !
//என்ன ஒரு பயமென்றால், இம்மாதிரி ரசனையோடு எழுதுபவர்கள் சட்டென காதல் வயப்படும் பலஹீன மனமுள்ளவர்களாக இருப்பார்கள். எனவே, கூலிங் கிளாஸ் ஏதும் போட்டுக்கொண்டால் நேரடிப் பார்வையெனும் ஆயுதத்திலிருந்து தப்பிக்கலாம். (ஏற்கனவே போட்டு இருக்காரோ?!!!:))///
முதலில் காதல் வயப்படுவது பலஹீனம் அன்று. 'பலமுறை' காதல் வயப்படுவது தான் பலஹீனம்.
அது ஒரு புறம் இருக்க, அதையெல்லாம் எப்போவே தாண்டி வந்தாகிவிட்டது. காதல் வயப்பட்டு, கல்யாணம் ஆகி, ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையும் ஆயாச்சு...
பி.கு : கூலிங் கிளாஸ் உபயோகிப்பதற்கு நீங்கள் தரும் விளக்கம் வித்தியாசமானது. அனுபவம்?
Post a Comment