Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை பள்ளிக்கூடத்தில் இசை நிகழ்ச்சி !!?? 20

அதிரைநிருபர் | March 05, 2013 | , , , , ,


அதிரையில் நேற்று ஒரு தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிகளின் காணொளியை இணையத்தில் கண்டபோது அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம்  சினிமா பாடல்களும், இசை நடன நிகழ்ச்சிகளும், அழகி போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களால் நடத்தப்படும் பள்ளியில் சீரழிவின் சிகரம் சினிமாவின் ஆதிக்கத்தையும், கேடுகெட்ட நடன காட்சிகளையும், ஆபசத்தை மட்டுமே மையமாகக் கொண்ட அழகி போட்டியையும் ஆதரித்து இளம் பிஞ்சுகளிடம் வக்கிர எண்ணத்தை விளைவிக்கும் இந்த அறியாமை போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

இது போன்ற விழாக்களில் இனிவரும் காலங்களில் இவ்வாறெல்லாம் நடைபெறாமல் இருக்க சம்பத்தப்பட்ட பள்ளி நிர்வாகம் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறோம் அதனையே வழியுறுத்துகிறோம். வளர்ந்து வரும் இந்த மழலையர் பள்ளிக்கூடத்தின் நலனில் அக்கறை கருதியே இந்த பதிவு.

மீண்டும் நினைவூட்டலுக்காக நான் முன்பு இசை பற்றிய பதிவிலிருந்து முக்கிய பகுதியை மீண்டும் பதிவு செய்கிறேன்.

இசை, பாடல் இவைகள் இரண்டற கலந்த அம்சமாகும். சில இடங்களிலேயே அவை தனித்து நிற்கின்றன. பாடல் இசையின்றிப் பாடப்படுகின்ற பொழுது அனுமதிக்கின்ற இஸ்லாம், அவை இணைகின்றபோது இரண்டையும் வன்மையாகத் தடை செய்வதை அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவைக் கொண்டு தெளிவு படுத்துகிறது

நபிமொழி அறிவிப்புகள் பலவற்றின் மூலமும் இதனை வன்மையான வார்த்தைகளால் தடை செய்யப்பட்டுள்ளது.  அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்:

 “விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள்…” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக், ஆதாரம்: புகாரி – 5590)

விபச்சாரம், மது போன்றவை ஹராம் என்று தெள்ளத் தெளிவாக தெரிந்த நாம், இவைகளை ஹலாலாகக் கருதுவோருடன் இசையைக் ஹலாலாகக் கருதுபவர்களையும் நபியவர்கள் இணைத்துக் கூறுவதிலிருந்து இசையை அவர்கள் எவ்வளவு மோசமான ஒன்றாகக் கருதியுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.  

 “இரண்டு ஓசைகள் சபிக்கப்பட்டவையாகும். சந்தோசத்தின் போது கேட்கும் குழல் ஓசை, சோதனையின் போது கேட்கும் ஓலம்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி) ஆதாரம்: பஸ்ஸார் – 1:377-795 பார்க்க: தஹ்ரீமு ஆலாத்தித் தர்ப் – 52)

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்த காலம் முதல் மரணிக்கும் காலம் வரை அவர்களோடே இருந்த அனஸ்(ரழி) அவர்களின் மூலம் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி நமக்குச் சொல்லுவது என்னவென்றால், சந்தோசத்தின் போதுகூட நபியவர்கள் குழல்கள் மூலம் எழுப்பப்படும் ஓசையைத் தடை செய்தது மட்டுமல்லாமல், ஓலமிடும் ஓசையையும் தடை செய்துள்ளார்கள்.  இந்த நபிமொழியின் மூலம் நாம் அறியும் விசயம் என்னவென்றால்,  Wind pipe (குழல்) வகை சார்ந்த அனைத்து இசைக் கருவிகளையும் தடை செய்கிறார்கள். பொதுவாக இசைக் கருவிகளைத் தடை செய்தது மாத்திரமின்றி, ஒரு சில கருவிகளின் பெயர்களைக் குறிப்பிட்டும் தடைசெய்தது, நபியவர்கள் இசையை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பதை எமக்குத் தெளிவாக்குகிறது.

 “மது, சூதாட்டம், மேளக் கருவிகளை அல்லாஹ் எனக்குத் தடை செய்துவிட்டான். போதை ஏற்படுத்தும் அனைத்தும் ஹராமாகும்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம்: அபூதாவூத்-3696, பைஹகீ-10-221)

பொதுவாக இசைக் கருவிகளைத் தடை செய்தது போன்று, இந்த அறிவிப்பில்  மேளம் போன்ற அனைத்துக் கருவிகளையும் அல்லாஹ் தன்மீது ஹராமாக்கியதாகக் கூறுகிறார்கள். அல்லாஹ் எனக்குத் தடை செய்துள்ளான் என்று சொல்லுமளவுக்கு, இசைக் கருவிகளின் தரம் இஸ்லாத்தின் பார்வையில் தாழ்ந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாக அறிவைத் தேடும் மக்களுக்கு நிச்சயம் புரியும்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு, அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள், ”(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?” என்று வினவினார்கள். அதற்கு நான், ”ஆம்” என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, ”எனக்குக் கேட்கவில்லை” என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்டபோது, அவர்கள் இதைப் போன்று செய்ததை நான் பார்த்தேன்” என்றும் கூறினார்கள். (நூல்: அஹ்மத் – 4307)

குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ’புஆஸ்’ எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், ”இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்) அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் – 1619)

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் அந்தச் சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.

”ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கருத்தை மறுக்கவில்லை. மாறாக, இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால், இன்றைக்கு மட்டும் விட்டுவிடுங்கள் என விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக் கருவிகள் ஷைத்தானுடையன என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால், ”நீர் சொல்வது தவறு; இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள்.

இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸும் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ் உங்களுக்கு மதுவையும் சூதாட்டத்தையும் மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டவையாகும்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம்: அஹ்மத்: 2494)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் இந்த ஹதீஸில், இசைக் கருவிகளுள் ஒன்றான மத்தளத்தையும் தடை செய்துவிட்டு, போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன என்று, இசைகருவியைப் போதையூட்டும் பொருளாகச் சொல்லப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இப்படி இசைக்குத் தடை விதிக்கப்பட்ட ஏராளமான ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டிக்கொண்டே போகலாம். அறிவிப்பாளர் வரிசையில் குறைபாடுள்ள ஹதீஸ்களைக் கணக்கில் எடுத்தால், இசைக்கு எதிராக 80க்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் உள்ளன என்பதைத்  தகவலுக்காக இங்குப் பதிவு செய்கிறேன்.

மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் இசைக் கருவிகளை முழுமையான வடிவிலே தடை செய்வதை அறிவுள்ளவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

நபிகளாருடைய காலத்தில் காணப்பட்ட எத்தனையோ கருவிகள் இன்று பல வடிவம் பெற்று வளர்ச்சி அடைந்து, ஒரு கலையம்சமாக மாறிவிட்டன. ஹதீஸ்களிலே இடம்பெறும் வார்த்தைகள்  நபிகளாருடைய காலத்திலே காணப்பட்ட கருவிகளைக் குறித்துப் பேசினாலும், அதே இசையை ஏற்படுத்தக் கூடிய ஏராளமான கருவிகள் இன்று உபயோகத்தில் உள்ளன. அதே நேரம், இசைக் கருவிகள் என்றுள்ள எல்லாமே அடங்கும் வண்ணம் இடம்பெற்றுள்ள வார்த்தை இவையனைத்தையும் முழுமையாகத் தடை செய்கின்றது என்பதை மேல் சொன்ன ஹதீஸ்களின் அரபி மூல வார்த்தைகளை வைத்துப் புரிந்துகொள்ளலாம். பின் வருபவை அவ்வார்த்தைகள்:

01-معازف அனைத்து இசைக் கருவிகளையும் இது குறிக்கும்.
02-الكوبة-الطبل பறை, பேரிகை, மத்தளம், தவுல், தப்பட்டை போன்ற (Drum) வகைகளை இது குறிக்கும்.
03-ارمزم புல்லாங்குழல் போன்ற காற்று வாத்தியங்கள் (Wind Pipe) வகை சார்ந்த அனைத்தையும் இது குறிக்கும்.
04-القنين வீணை போன்ற நரம்பு வாத்தியங்கள் (Daff) அனைத்தையும் இது குறிக்கிறது.

மேல் சொன்ன குர்ஆன் வசனத்தின் மூலமும் பின் சுட்டிக்காட்டப்பட்ட ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ள இசைக் கருவிகளின் பெயர்களை வைத்து அனைத்து விதமான இசைக் கருவிகளும் எல்லா நாட்களிலும் வெறுக்கப்பட வேண்டியவையே என்பதையே அறிவுள்ள அனைவரும் புரிந்துகொள்வார்கள். 

நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸை (முஸ்லிம் – 1619) இசைக்கு ஆதாரமாக ஒரு சிலர் எடுத்துக்காட்டுவார்கள். சிறுமிகள் பெண்கள் பாடிக்கொண்டு தப்ஸ் அடித்துகொண்டிருந்தார்கள்; அபூபக்ர் மட்டுமே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்; நபிகளார் அதனைத் தடுக்கவில்லை; மாறாக, ”அவர்களை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்;  இங்கு அபூபக்ருடையை செயலை நாம் எடுப்பதா? நபிகளாருடைய செயலை எடுப்பதா? என்ற நியாமான கேள்வியை வைத்து, இசையை நபிகளார் தடை செய்யவில்லை என்று வாதிடுபவர்களின் வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், பெருநாள் தினத்தில் மட்டும் சிறுமியர் அல்லது பெண்கள் மட்டுமே அத்துஃப் (الدف) என அழைக்கப்படும் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்ட கருவியை உபயோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்வதுதானே அறிவுடமை. இதுவல்லாமல் ஒவ்வொரு நாளும் இசைக் கருவிகளின் தாக்கமுடைய பாடல் ஓசையைக் கேட்பதற்கோ இசைப்பதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பதை அறிவுள்ள முஸ்லிம்  ஒவ்வொருவருக்கும் புரிந்திருக்கும்.

ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் இப்னு ஹஸ்ம் (லாஹிரிய்யா மத்ஹப்வாதி), இமாம் கஸ்ஸாலீ, தற்காலத்தில் வாழும் அறிஞர் யூசுஃப் கர்ளாவீ,  இன்னும் சிலர் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம்தான் என்று தங்களுடை புத்தகங்களில் எழுதிவைத்ததன் மூலம், இவற்றைப் படித்தவர்கள், மற்றும் இவர்களைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாத்தில் இசைக்குத் தடையில்லை என்று ஒரு சில வாதங்களை எடுத்துவைக்கிறார்கள். இது போன்ற மார்க்க அறிஞர்களையும் சூஃபியாக்களையும் பின்பற்றும் கூட்டமே இசைக் கருவிகளை ஹலாலாக்கி வழிகேட்டின் உச்ச நிலைக்குச் சென்றுள்ளார்கள்.

இஸ்லாமியப் புத்தகங்கள் எழுதுபவர்கள் எல்லாம் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் என்று சொல்லுவது அறிவுடைமையாகாது, இஸ்லாமியப் பார்வையில் உண்மையான அறிஞர் தன்னுடைய மனோ இச்சைக்கு இடமளிக்காமல், குர்ஆன் மற்றும் நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் இவைகளில் ஆதரப் பூர்வமானவைகளின் அடிப்படையில் ஆய்வு செய்து, இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் மாறு செய்யாத கருத்துகளைத் தெரிவித்தால் மட்டுமே அவர்களை அறிஞர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர, சொந்தக் கருத்துகளை மார்க்கம் என்று சொல்லும் வேறு எவனையும் மார்க்க அறிஞராக எந்த ஒரு அறிவுடைய முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதுதான் எதார்த்தமான உண்மை. 

ஒரே ஒரு தகவலைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோன். தியாகங்கள் பல செய்து வளர்ந்த நம்முடைய மார்க்கத்திற்காக நாம் என்ன செய்கிறோம் என்று சித்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த 30 வருடங்களுக்கு முன்புவரை நம்முடைய பல சொந்தங்கள் திருக்குர்ஆனின் அர்த்தங்கள் தெரியாமலே இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள். நாம் இருக்கும் இக்காலம் அறிவுப் பொக்கிஷங்கள் நிறைந்த காலம். இக்காலத்தில் நம்முடைய அறிவைப் பயன்படுத்தி, தியாகத்தால் வளர்ந்த இந்த மார்க்கத்தைப் பாதுகாப்பதோடு, இதைப் பிற சமூகத்திற்கு எத்திவைக்கும் வேலை செய்யத் தவறுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க்க் கடமைப் பட்டிருக்கிறோம். இறைவன் நமக்குத் தந்துள்ள இந்தப் பொன்னான நேரத்தை நபிகளார் வெறுத்த அனைத்து இசைக் கருவிகளின் ஓசையிலிருந்தும் விடுபட்டு, நம்முடைய அறிவைக் கொண்டு இந்த்த் தூய மார்க்கத்தை அறியாத மக்களுக்கு எத்திவைக்க ஒவ்வொருவரும் இன்று முதல் முயற்சிக்கலாமே.

சைத்தானின் சூழ்ச்சியால் வந்த இசை என்ற ஒன்றுக்கு இன்று ஒவ்வொரு மனிதனும் அடிமையாகியுள்ளான் என்பதை நான் இங்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. இசைக் கருவிகளை நாம் வெறுத்தால், தொடர்ந்து சினிமாப் பாடல்கள், நம் மொழி சினிமா, பிற மொழி சினிமா, சின்னத்திரை, நாடகங்கள் என்று  வீணானவற்றிலிருந்து விடுபடுவோம்; நேர்வழி பெறுவோம். இன்ஷா அல்லாஹ். 

எனவே அல்லாஹ்வுடையவும் அவன் தூதருடையவும் எச்சரிக்கைகளைத் தெளிவாக அறிந்த பின், இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் இசை கலந்த அனைத்து அம்சங்களையும் வெறுத்துத் தவிர்த்து, அல்லாஹ்விடத்திலே கூலியைப் பெற்றவர்களாக மாறுவோமாக.

இசைக் கருவிகளும் அதனைச் சார்ந்துள்ள பாடல்களும் வெறுக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை இதைப் படிக்கும் அன்பு நேசங்களான நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். 

சின்னஞ் சிறுசுகள் தானே என்று சினிமா பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சியை ஆதரிக்க முடியாது. இது போன்ற நிகழ்வுகளை நம் சமுதாயத்தின் அங்கமாக இருக்கும் அதிரை ஊடகங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்.

எவ்வளவோ அறிவு சார்ந்த போட்டிகள் அந்த பள்ளி ஆண்டு விழாவில் நடந்திருக்கலாம், ஆனால் இறைதூதரால் தடை விதிக்கப்பட்ட இசைக்கு, முஸ்லீமகளால் நடத்தப்படும் பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப்பதை எவ்வகையில் அனுமதிக்க முடியாது.

இது போன்ற தவறை மற்ற பள்ளிகளும் செய்வதை தடுக்கவே இந்த பதிவு.

M.தாஜுதீன்

தொடர்புடைய பதிவுகள்: http://adirainirubar.blogspot.in/2012/07/blog-post.html


20 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல பதிவு!

பிஞ்சிலே தப்பு என உணர்த்த வேண்டிய கடமை இருக்க, இப்படி ஊக்குவிப்பதை இனி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Unknown said...

நல்ல பதிவுக்கு நன்றி

நீங்கள் மார்க்க நிகழ்ச்சிகள் நடத்தும் ஏ.எல்.எம் பள்ளியில் கடந்த வருடம் இதே போல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதை நீங்கள் கண்டுக்கொள்ளவில்லை என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.


ஏ.எல்.மெட்ரிக். பள்ளி : ஆண்டு விழா பல்சுவை நிகழ்ச்சிகள் !
http://adiraixpress.blogspot.in/2012/03/blog-post_2533.html

Adirai pasanga😎 said...

//எவ்வளவோ அறிவு சார்ந்த போட்டிகள் அந்த பள்ளி ஆண்டு விழாவில் நடந்திருக்கலாம், ஆனால் இறைதூதரால் தடை விதிக்கப்பட்ட இசைக்கு, முஸ்லீமகளால் நடத்தப்படும் பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப்பதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது.//

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் MOHAMED ASHRAF தங்களின் பாராட்டுதலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ் ஹைரன்..

இணைவைப்பு போன்ற பிற மத நிகழ்வுகள் நடக்கும் திருமண மண்டபங்களில், இஸ்லாமிய நிகழ்ச்சிகள், பெருநாள் தொழுகை நடுத்துவது சரியா தவறா என்ற கேள்விகள் கேட்டு, நீங்கள் குறிப்பிட்டுள்ள பள்ளியில் நடைபெற்ற(?) இசை நிகழ்ச்சியை நியாயப்படுத்தும் ஆள் நானில்லை என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

மார்க்க நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் நலம் தானே..

Yasir said...

இளம் பிஞ்சுகளிடம் வக்கிர எண்ணத்தை விளைவிக்கும் இந்த அறியாமை போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

Meerashah Rafia said...

எடுப்பா எடுத்துக்காட்டும் ஃபேசன் ஷோவெல்லாம் நடந்திருக்கோ!!

புதமையான பள்ளிக்கூடங்கள் என்ற பெயரில் புதுமையான பித்அத்கள் அரங்கேற்றம் அபாரம்.. இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தளங்களுக்கு நன்றி.. பள்ளி நிர்வாகிகளுக்கு இது போய் சேர்ந்து இனி வரும் காலங்களிலாவது திருத்திக்கொள்ளட்டும்,இதுபோல் கந்தூரி அபினயாக்கள் ஆண்டுவிழாக்களில் அரங்கேறாமல் இருக்க..

ZAKIR HUSSAIN said...

ஸ்கூல் பெயர் என்ன?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.

100 கோடிகள், 200 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விளம்பரங்களால் மக்கள் மத்தியில் ஒரு பெரிய‌ மாய பிம்பத்தை ஏற்படுத்தும் மெகா திரைப்படங்களால் சொல்ல இயலாத/வக்கற்ற‌ அழகிய அர்த்தம் பொதிந்த நல்ல பல கருத்துக்களையும், விழிப்புணர்வுகளையும் இன்றைய 3 நிமிடங்களோ அல்லது 5 நிமிடங்களோ ஓடக்கூடிய ஆபாச, குத்தாட்டங்கள், எவ்வித துவேசங்கள் இல்லாத அழகிய‌ ஆவணப்படங்கள் நல்ல பல கருத்துக்களை ஆணித்தரமாக பிஞ்சு முதல் பெரிசு வரை காண்போர் அனைவரின் உள்ளத்திலும் பதிந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதற்கு அக்னாலெஜ்ட்மெண்டாக அவரவர் கண்களிலிருந்து கண்ணீரை தாரை வார்த்து விடுகின்றன.

குத்தாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டங்களுக்கு பதிலாக இது போன்ற ஆவணப்படங்களை சிறு முதலில் அந்தந்த பள்ளியில் பயிலும் மாணவர்களையே நடிக்க வைத்து ப்ரொஜக்டர் வைத்து திரையில் போட்டுக்காட்டி குழந்தைகளுக்கும், விழாவை காண‌ வ‌ரும் பெற்றோர்க‌ளுக்கும் ஒரு ந‌ல்ல‌ விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்த‌லாம்.

ந‌ல்ல‌ வேளை, க‌ற்ப‌னைக்காவிய‌ம் ராமாய‌ண‌ம், ம‌காபார‌த‌ம் என்ற‌ பெய‌ரில் அனுமான் வேச‌த்தை அமானுல்லாஹ்விற்கும், ராம‌ன் வேச‌த்தை அப்துல் ர‌குமானுக்கும், ல‌ட்சும‌ண‌ன் வேச‌த்தை அப்துல் ல‌த்தீஃப்பிற்கும், சீதை வேச‌த்தை யாரோ ஒரு சாஜிதாவிற்கும் தந்து ந‌டிக்க‌ வைக்காம‌ல் இருந்தார்க‌ளே???

sabeer.abushahruk said...

இளம் பிஞ்சுகளிடம் வக்கிர எண்ணத்தை விளைவிக்கும் இந்த அறியாமை போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

Unknown said...

சென்னையில் என் மகன் படிக்கும் களஞ்சியம் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி சென்ற ஞாயிறுக்கிழமை 3.3.2013 அன்று நடைபெற்றது.அதில் அபிசீனியாவுக்கு சஹாபாக்கள் ஹிஜ்ரத் செய்து நஜாசி
மன்னருக்கு இஸ்லாம் குறித்து விளக்கும் நிகழ்ச்சி,பெற்றோரை பெணுதல்,தர்மம் செய்தல் மற்றும் பல குர் ஆன் ஹதீஸில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகளையும் இந்திய விடுதலை போராட்ட தியாகி பகத்சிங் வெள்ளையர்களால் தூக்கிலிடப்படும் நிகழ்வுகளை சிறார்கள் நடித்துகாட்டியது பயனுள்ளாக இருந்தது.

குர் ஆன் வசனங்களயும்,ஹதீஸ்களையும் அரபி மூலத்தில் ஓதி தமிழ், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து சொன்னது குறிப்பிடத்தக்கது.முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிகள் இதுபோன்று நிகழ்ச்சிகளை நடத்தி நல்ல மாணவர்களை உருவாக்கவேண்டும்.

Yasir said...

Allahu Akbar...preview of jahannam

http://www.bbc.co.uk/news/world-europe-21661278

அலாவுதீன்.S. said...

இந்த நிகழ்ச்சியை நடத்திய பள்ளி நிர்வாகிக்கும், நிகழ்ச்சியை ஆதரித்து தங்களின் பிள்ளைகளை கலந்து கொள்ள வைத்து மகிழ்ச்சி அடைந்த பெற்றோர்களுக்கும் வல்ல அல்லாஹ் நேர்வழி காட்டி நல்லருள் புரியட்டும்.

இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள், அதிரையில் உள்ள எந்த பள்ளியிலும் நடக்காமல் இருக்க வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

Abu Easa said...

இந்த நிகழ்ச்சியை நடத்திய பள்ளி நிர்வாகிக்கும், நிகழ்ச்சியை ஆதரித்து தங்களின் பிள்ளைகளை கலந்து கொள்ள வைத்து மகிழ்ச்சி அடைந்த பெற்றோர்களுக்கும் வல்ல அல்லாஹ் நேர்வழி காட்டி நல்லருள் புரியட்டும்.

இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள், அதிரையில் உள்ள எந்த பள்ளியிலும் நடக்காமல் இருக்க வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

Ebrahim Ansari said...

பதிவைத்தந்த தம்பி தாஜுதீன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்.
பலர் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதைப் பார்க்கும் போது மகிழ்ச்சி.

அதே நேரம் கல்வித்துறையில் உள்ள சில குறைபாடுகளை மற்றும் பள்ளிகளை நடத்துவோர்களின் நெருக்கடிகளை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்ட நினைக்கிறேன்.

இது பற்றி சில கல்வியாளர்களிடம் பேசினேன். அவர்கள் தந்துள்ள கருத்துக்களை தொகுத்து தந்துள்ளேன்.

சில தனியார் பள்ளிகள் அரசின் அங்கீகாரம் பெறுவதற்காக இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளை ஒரு கல்வியாண்டில் நடத்த வேண்டுமென்ற கட்டாயத்துக்கு ஆளாகப் படுகிறார்கள். Extracurricular Activities என்று இவற்றுக்குப் பெயர் வைத்து இருக்கிறார்கள். பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் மட்டும் அழாமல் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படவேண்டுமென்பது ஒரு அம்சமாகவும் கட்டாயமாகவும் இருக்கிறது.


மேலும் இன்றைய கல்வியின் பாடத் திட்டத்தைப் பாருங்கள். நமது மார்க்க நெறி முறைகளுக்கு அவை ஒத்து வருகின்றனவா? ஆனாலும் நாம் அவற்றைப் படித்து தேர்விலும் எழுதியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்.

உதாரணமாக ஆதம் நபியை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான் என்று மார்க்கம் சொல்கிறது. ஆனால் டார்வின் சித்தாந்தமாகிய குரங்கிலிருந்து மனிதன் என்கிற பரிணாம வளர்ச்சியை பாடமாகப் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் ஆளாகப் பட்டு இருக்கிறோம்.

வட்டியை மார்க்கம் கடுமையாக சாடுகிறது. ஆனால் வட்டி, கூட்டு வட்டியை நாம் கணக்குப் பாடத்தில் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தமிழ்ப் பாடத்தில் முதல் பாடலே கடவுள் வாழ்த்து நாம் நம்பிக்கை கொள்ளாத நம்ப முடியாத தேவாரம், திருவாசகம், திருவருட்பா ஆகியவைகளே மனப்பாடப் பகுதிகளாக வைக்கப் பட்டு இருக்கின்றன.

அத்துடன் ராமாயணமும் மகாபாரதமும் நமக்குப் பயிற்றுவிக்கப் படுகின்றன. சீறாப் புராணம் ஒரே ஒரு பாட்டு அதுவும் மனப்பாடப் பகுதி அல்ல.மார்க்கத்துக்குப் புறம்பான கல்வியைத்தான் நாம் விழுந்து விழுந்து படித்து பட்டம் பெறுகிறோம்.இல்லாவிட்டால் நமது தேர்ச்சி அம்பேல்.

நாம் படிக்கும் உலகக் கல்விமுறை நமது கல்வி முறை அல்ல. நாம் கற்க வேண்டிய கல்வி அல்ல. நாம் கற்கவேண்டிய கல்வி கற்பிக்கப் படாததால் இப்படிப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் இத்தகைய மார்க்க விரோதமான நிகழ்ச்சிகளை நடத்தும் இழிவுக்குத்தள்ளப்படுகின்றனர். பள்ளிகளில் நமது பிள்ளைகளுக்கு பாரத நாட்டியம், குச்சிப்புடி நடனங்கள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.

நாம் பெரும் ஆங்கிலத்தின் இலக்கியப் பட்டம் ஷேக்ஸ்பியரும் இன்னும் பலரும் எழுதியவைகளைப் படித்தே. இவைகளில் பல ஒழுக்கக் கேடான செய்திகள் இருக்கின்றன. பட்டியல் இட விரும்பவில்லை. இவைகளை மனப்பாடம் செய்தே நாம் தேர்வில் வெற்றி பெறுகிறோம். முனைவர் பட்டம் கூடப் பெறுகிறோம்.

இன்னும் இந்த தளத்தில் கருத்திடும் பல சகோதரர்களும் தங்களுடைய பள்ளி நாட்களில் பாட்டுப் போட்டி, நாடகப் போட்டிகளில் பங்க்கேடுத்தே இருப்பார்கள். தவறுகள் திருத்தப் படலாம். இளம் பயிர்களிடம் இஸ்லாத்துக்கு மாறுபாடான நிகழ்வுகளை அரசுத்தரப்பிலிருந்து இல்லாவிட்டாலும் நமது தரப்பில் இருந்து நிகழாவண்ணம் தொடர்புடைய பள்ளி நிர்வாகம் திருத்தி நடந்துகொள்ள து ஆச செய்வோம்.


தொடர்புடைய பள்ளி நிர்வாகத்திடம் அமைதியான முறையில் நமது எதிர்ப்பை சொல்லி வரும் ஆண்டுகளில் இஸ்லாம் தடுத்துவைத்திருக்கும் இத்தகைய நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறு சொல்லலாம்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

Although the schools are run by muslim management, the appointed teachers and staff are non muslims. So, there are possibilities of influencing of music, cinema and other non islamic culturals in muslim schools and colleges.

Another point we may have to notice that in our day to day talkings we(muslims) are unknowingly influenced by punch dialogues, songs and patterns of fashion, characters (revenging, heroism, villanism, sexism, groupism etc) from older to till date movies,songs and serials. We need to think about how can we relieve from these influences.

People are nowadays accessible to all kinds of poluted cultural media through internet.

Unless until the influence of basic islamic concepts are ingrained in the minds of our generations and disciplined from young age, we cannot stop these kinds of events everywhere in our community.

Thanks and best regards,


B. Ahamed Ameen
from Dubai



Unknown said...

கட்டுரையாளரிடம் நாம் சுட்டிக்காட்டியது தன்னை சார்ந்தவர்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்தால் கண்டும் காணமால் இருப்பது (நீங்கள் விரும்பினால் பட்டியல் தருகிறோம்) மற்றவர்கள் நடந்தால் அதை விமர்ச்சனம் செய்கிறீர்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//கட்டுரையாளரிடம் நாம் சுட்டிக்காட்டியது தன்னை சார்ந்தவர்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்தால் கண்டும் காணமால் இருப்பது (நீங்கள் விரும்பினால் பட்டியல் தருகிறோம்) மற்றவர்கள் நடந்தால் அதை விமர்ச்சனம் செய்கிறீர்கள்.//

சகோதரர் MOHAMED ASHRAF,

இங்கு பேசும் பொருள் இசை, நடனம் பற்றியே. தவறு யார் செய்தாலும் அவர்களிடம் சுட்டிக்காட்டி திருத்துவது நம் எல்லோரின் கடமை. என்னை சார்ந்தவர்,உங்களை சார்ந்தவர் என்று பிரித்து பேசுவதை தயவு செய்து கொஞ்சம் நிறுத்துங்கள். சின்னச்சிறு குழந்தைகளை சீர்கெடுக்கும் செயலை எந்த பள்ளிக்கூடம் செய்தாலும் ஹதீஸ்களின் மூலம் தவறை சுட்டிக்காட்டுவதே இந்த பதிவின் நோக்கம், இளம் கல்வியாளரால் நடத்தப்படும் இந்த மழலையர் பள்ளிக்கூடத்தை விமர்சனம் செய்ய அல்ல என்பதை நினைவூட்டுகிறேன்.

நாம்...பட்டியல் தருகிறோம்... என்று தங்களின் பதில் பன்மையில் உள்ளதே.. தனி நபர் இல்லையா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Ahamed Ameen சொன்னது… Unless until the influence of basic islamic concepts are ingrained in the minds of our generations and disciplined from young age, we cannot stop these kinds of events everywhere in our community.//

yes.. AMEEN this is what all our concern, instead of encouraging our young generation through Islamic thoughts, Muslim management schools are trying to influence our young generation's mind through music, dance, fashion shows.. This should be stopped from the beginning. You can not stop when they become 16 year old teen.

عبد الرحيم بن جميل said...

காலத்திற்க்கேற்ற பதிவு!இதில் பின்னூட்டம் தரும் நம்மில் எத்தனை பேர் இசையை விட்டு தவிர்ந்து இருக்கிறோம் என்று எண்ணி நம்மை திருத்திக் கொள்ள கடமை பட்டிருக்கிறோம்! இன்ஷா அல்லாஹ்! ஷைத்தானுடைய எல்லா சூழ்ச்சிகளை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!!

//இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸும் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.// சிறுமிகள் செய்துவிட்டமையால்(முடிந்து விட்டமையால்)வேண்டுமானாலும் நபி(ஸல்) அவர்கள் அனுமதித்திருக்கலாம்!!

Ebrahim Ansari said...

//அதிரையில் நேற்று ஒரு தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிகளின் காணொளியை இணையத்தில் கண்டபோது அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் சினிமா பாடல்களும், இசை நடன நிகழ்ச்சிகளும், அழகி போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளது.//

அதிரையில் ஒரு தனியார் பள்ளி என்றதும் பலருக்கு இமாம் ஷாபி ரஹ்மாத்துல்லாஹி பள்ளியின் நினைவு வர சாத்தியம் இருப்பதாகவும் இந்தப் பதிவில் சுட்டிக்காட்டபடுவது இமாம் ஷாபி பள்ளி அல்ல என்றும் இமாம் ஷாபி பள்ளியின் ஆண்டுவிழா கடந்த மாதமே நடந்து விட்டதாகவும் அந்த நிகழ்ச்சியில் யாரும் கண்டிக்கும் வண்ணம் எவ்வித கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை என்றும் இமாம் ஷாபி பள்ளியின் இயக்குனர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் அலைபேசியில் அழைத்து அவர்களின் இந்தக் கருத்தைப் பதியுமாறு கூறினார்கள். இதைப் படிபவர்களின் மேலதிக விபரத்துக்காக இது பதியப்படுகிறது.

ஆண்டு விழா நடத்தப் பட்டது அல்- ஷனா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியாகும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு