Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எழுத்துப் பிழைகள்! - 07 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 25, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 7 ஒவ்வாத ஒற்றுப் பிழை

எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும்போது, சிலருக்கு அலட்சியம். ‘ஆமாம், இதெத் தெரிஞ்சுதான் நாம பெரிய எழுத்தாளனாப் போகப் போறோமா?’ எனும் எண்ணம். இன்னும் சிலருக்கோ, ‘இப்படியெல்லாம் பிழைத் திருத்தம் செய்வதற்குச் சான்று வேண்டாமா?’ என்ற எதிர்க் கேள்வி. இவ்விரு சாராருக்கும் இடையில் நின்று, வழக்கில் – நடைமுறையில் நிகழும் எழுத்துப் பிழைகளையும், அவற்றை எந்த அடிப்படையில் பிழைகள் என்று நிறுவும் இலகுவான இலக்கணக் குறிப்புகளையும் தொகுத்துரைப்பதே இத்தொடரின் நோக்கம்.

எழுத்தாளர்கள் செய்யும் எழுத்துப் பிழைகளுள் ஒற்றுப் பிழையே மிகையாக இருப்பதால், இதுபற்றி இன்னும் சற்று விரிவாக எழுத வேண்டியுள்ளது.

ஒரு சொற்பெயர் முற்றுப் பெறாமல் நின்றால், அது பெயர் எச்சம் எனப்படும் அல்லவா? எடுத்துக்காட்டாக, முழுச் சொற்றொடரின் ஒரு சொல், சிறிய, பெரிய, இன்றைய, நாளைய போன்றவையாக இருக்கும்போது, அவற்றை அடுத்த ‘வருமொழி’ க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துகளைக் கொண்டு தொடங்குமாயின், அங்கு ஒற்றெழுத்து மிகாது. அதாவது –

‘சிறிய பெட்டி’ என்பது, ‘சிறியப் பெட்டி’ என்றாகாது. ‘பெரிய கட்டிடம்’ என்பது, ‘பெரியக் கட்டிடம்’ என்றாகாது. ‘நடைபெற்றது’ என்று சரியாக எழுதுவதை விட்டுவிட்டுப் பெரும்பாலார், ‘நடைப்பெற்றது’ என்று தவறாகவே எழுதுகின்றனர். ‘நாளைய கூட்டம்’ என்றே எழுதவேண்டும்; நாளையக் கூட்டம் என்று எழுதுவது தவறு.

ஒரு பண்பு முற்றுப்பெறாமல் நிற்குமாயின், தமிழிலக்கணம் அதனைப் ‘பண்புத் தொகை’ எனப் பகுக்கும். ‘முதுபெரும் அறிஞர்’ என்பதில் உள்ள ‘முது’ என்பது, முதுமையைச் சுட்டும். அதனை அடுத்துள்ள ‘பெரும்’ எனும் சொல் வல்லினத்தில் இருப்பதால், இங்கே ‘முதுப்பெரும்’ என்று ஒற்றெழுத்து மிகாது. உயர்திணை, தொடுபொருள், சிறுபெட்டி போன்றவை, உயர்த்திணை, தொடுப்பொருள், சிறுப்பெட்டி என்றெல்லாம் ஒற்று சேர்த்து எழுதப்படமாட்டா.

‘நல்ல தமிழ் எழுதுவோம்; நம் மொழியைப் பேணுவோம்’ என்ற ஒரே நோக்கில் வரையப்பெறும் இத்தொடர், எனது ஆய்வையும் பட்டறிவையும் அடிப்படைகளாகக் கொண்டு அமைவதாகும். இதில் சுட்டிக் காட்டப்பெறும் திருத்தங்களுக்கான சான்றுகள் பண்டைத் தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் போன்ற மொழியியல் நூல்களில் விரவிக் கிடக்கின்றன. ஆனால், அச்சான்றுகளையும் இங்கு எடுத்தெழுதினால், விரையும் நேரச் சூழலில் விளைவு போற்றத் தக்கதாக இருக்காது. அதனால்தான், சான்றுகளை விடுத்துச் சரக்குகளை இறக்கிவைக்கின்றேன்.

ஒற்றுப்பிழை நீக்க – நீங்க, இவ்வளவு போதுமா?

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு