கடைசி இரண்டு பதிவுகளில் விளையாடிக்கொண்டு இருந்தது என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு சின்ன ப்ரேக்.
இன்று நானும் அவளும் என பதிவுகள் இட்ட போது சில நண்பர்கள் "நீயுமா" என கோபப்பட்டனர்.
சரி பார்ப்போம்
ஃபேஸ்புக் என்பது வெறும் அரட்டை அடிக்கும் தளம் மட்டும் அல்ல என்பது சமீப கால வெள்ள நிவாரண பணிகளில் இருந்து ஜல்லிக்கட்டு வரை அனைவருக்கும் தெரிந்ததே.
இரண்டு நாள் முன்பு சேட்டு டீக்கடை என்ற தலைப்பிட்டு என் அனுபவம் ஒன்றை எழுதி இருந்தேன்.
அதில் ஒரு தோழியின் கமெண்ட் பார்த்ததும் வியந்து என்ன பதில் சொல்வது எனத்தெரியாமல் நேற்றுதான் பதில் அளித்தேன்.
இதோ அவர் இட்ட கமெண்ட்... அப்படியே காபி செய்கிறேன்
//////
(என் நண்பர் வெளிநாடு சென்றிருந்த போது ஒருRestaurantல் நண்பருடன் காபி அருந்திக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு பெண் counter ல் பணம் செலுத்தும் போது five coffee,, two suspended என்று கூறினார்.
அடுத்து வந்த இளைஞர் ten coffee five suspended என்று கூறிவிட்டு 10 காபிக்கு பணம் செலுத்தி விட்டு 5 காபி மட்டும் வாங்கிக் கொண்டார்.
பின்னால் வந்தவர் five meals two suspended என்று கூறிவிட்டு இரண்டு உணவு மட்டும் வாங்கிச் சென்றார்.
என் நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன இது? என்று கேட்டார்.
பொறுங்கள் என்றார் அவர் நண்பர்.
சிறிது நேரம் கழித்து ஒரு முதியவர் கிழிந்த ஆடைகளோடு counter ஐ நெருங்கினார்.
Any suspended coffee என்று கேட்டார்.
Counter ல் இருந்த பெண் Yes என்று கூறிவிட்டு சூடான ஒரு கப் காப்பியை அந்த முதியவருக்கு கொடுத்தார்.
என் நண்பருக்கு மெய் சிலிர்த்தது. என்ன ஒரு மனித நேயம்.
வறுமைக்கோட்டில் உள்ள முகம் தெரியாதவர்களுக்கு நேர்மையான உதவி.
இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த பழக்கம் நேபாள் நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.,,
பிறர் துன்பம் கண்டு மனம் கசிவோர் எல்லாம் சிறந்தவர்களே.
நாமும்ஏன்இதைப்பின்பற்றக்கூடாது?)//////
இது அவர் அவருடைய தோழி ஒருவர் பதிவாக இட்டதாக என் பதிவில் இட்டு இருந்தார்.
நடுவில் ஆங்கிலம் கலந்து இருந்தாலும் சுலபமாக புரிந்து கொள்ள முடியும் இதை...
காரணம் கண்களால் படிக்காமல் உணர்வால் பார்த்தால் எல்லாமே புரியும்.
இதை படித்தவுடன் எனக்கு நேற்று ஒரு யோசனை வந்தது.
இதை ஏன் நான் இருக்கும் சேலத்தில் இந்த பழக்கத்தை கொண்டுவரக்கூடாது என்று...
நேற்று மதியம் என் அம்மாவின் கண் அறுவைசிகிச்சை முடிய நான் இன்று மதியத்திற்குள் நான் அடிக்கடி செல்லும் அறிமுகமான தேநீர் கடைகளில் அமர்ந்து கல்லாவில் இருந்தவர்களிடமும் அக்கடை முதலாளிகளிடமும் பேசி விளக்கினேன்.
என்ன விளக்கினேன்?
இந்த கமெண்டை எடுத்து படித்து காட்டியே வெளிநாடுகளில் இது போல காஃபி ஷாப்களில் காஃபியோ தேநீரோ உணவோ அருந்துபவர்கள் தான் இரண்டு காஃபி வாங்கினால் ஐந்து காஃபிக்கான காசை கொடுத்து அந்த suspended என்ற மூன்று காஃபிகளை எளிய மக்களுக்கு காஃபியோ தேநீருக்காகவோ கை நீட்டுபவர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருப்பதை எடுத்து சொன்னேன்.
மிக பொறுமையாக கேட்டு என்னை மனதார பாராட்டினர்.
அவர்கள் என் காசை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்து இருக்கிறது.
நேற்று முதல் ஐந்து கடைகளில் ஆறு தேநீர் அருந்தி பதினைந்து தேநீருக்கான காசை கொடுத்தேன்.
மிக கண்ணியமான வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களிடம் யாரையும் வற்புறுத்தாமல் இதை பற்றி சொல்லி செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்தேன்.
நிச்சயமாக செய்வதாக உறுதி அளித்தவர்கள் என் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு நேற்று மாலையும் இன்று காலையும் எனக்கு பேசி அந்த நான் கொடுத்த காசுக்கான தேநீரை எளிய மக்களுக்கு கொடுத்ததாக சொன்னார்கள்.
இதை நான் தொடர்வேனா நாளை எனக்கு ஒரு பிரச்னை என்றால் இது மறந்து என் கவலையில் மூழ்கி இதை மறந்துவிடுவேனா என்று எனக்கு தெரியாது.
அனைவருக்கும் அள்ளிக்கொடுக்க நான் ஒன்றும் கோடீஸ்வரனும் கிடையாது ஆனால் கிள்ளிக்கொடுக்க முடியும் என்னால்....
இப்போது ஒரு தீக்குச்சியை பற்ற வைக்கிறேன்.
இது தொடருமா என்றும் எனக்கு தெரியாது.
இன்னொரு விஷயம்,
நான் பிறந்து வளர்ந்த சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் நிறைய வெள்ளி நகை கடைகள் தங்க அடகு கடைகள் ஆசாரி பட்டறைகள் வெள்ளியின் தரம் பார்த்து சான்றிதழ் கொடுக்கும் ரிஃபைனரிகள் என நிறைய இருக்கும்.
அங்கு பல வருடங்களாகவே நிறைய கடைகளில் மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு கடைகளில் நுழையும் இடத்தில் ஒரு ஓரமாக மதிய உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.
ஒவ்வொரு கடையின் முதலாளியின் பண வசதிக்கு ஏற்ப உணவு பொட்டலங்களின் எண்ணிக்கை இருக்கும்.
யார் வேண்டுமானாலும் யாரிடமும் கை ஏந்தாமல் அதை எடுத்து செல்லலாம்.
ஒரு கடையில் தீர்ந்தால் இன்னொரு கடையில் நிச்சயமாக உணவு இருக்கும்.
இந்த கடைகளின் முதலாளிகள் பல்வேறு மொழி இனம் மதம் என வேறுபட்டு இருந்தாலும் ஒரு தார்மீகமாக செயலாக இதை செய்கிறார்கள்.
இது சேலம் வாழ் நாண்பர்களுக்கு தெரிந்த விஷயம்.
இப்போது என் வேண்டுகோள் என்னவென்றால் ஃபேஸ்புக் நண்பர்கள் ஏதாவது கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தால் மதியம் ஒரு ஐந்து உணவு பொட்டலங்களை மனம் இருந்தால் சேலம் வாழ் மக்கள் போல இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.
அதேபோல தேநீர் கடை சிறிய அளவிளான உணவு விடுதி வைத்து இருப்பவர்கள் தன் கடைக்கு வரும் மிக தெரிந்த வாடிக்கையாளர்களிடம் முதலில் சொன்ன suspended விஷயத்தை சொல்லி ஒற்றை தேநீருக்கான காசை வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.
அதே போல என் ஃபேஸ்புக் நண்பர்கள் என் மீது கொள்ளை மரியாதை கொண்டவர்கள் முடிந்தால் உங்கள் ஊரில் இருக்கும் தேநீர் கடையோ உணவு விடுதியோ அங்கு suspended காசை கொடுத்து அந்த கடை உரிமையாளரிடம் இதை பற்றி விளக்குங்கள்.
ஆனால் நிறைய பேர் மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் விளம்பரம் இல்லாமல் எளிய மக்களுக்கு உதவுவதும் எனக்கு தெரியும்.
இந்த விஷயங்களை பற்றி நான் நேரில் பார்க்கும் நண்பர்களிடம் எதுவும் பேசவில்லை.
காரணம் அவர்களால் தவிர்க்க இயலாமல் இதை ஏதோ காரணத்திற்காக செய்ய முடியாது போனால் நாளை என் முகம் பார்க்க தயங்குவார்கள் என்பதால் இங்கு ஃபேஸ்புக்கில் நான் முகம் பார்க்காத பலரிடம் ஒரு வேண்டுகோளாக இதை கேட்கிறேன்.
ஆயிரக்கணக்கான ரூபாய்களோ நூறு ரூபாயோ ஒரு கோப்பை தேநீருக்கான எட்டு ரூபாயோ அது அவரவர் வசதியை பொறுத்தது.
"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்பது பெரியோர் வாக்கு.
எதை எதையோ வெளிநாடுகளை பார்த்து காப்பி அடிக்கிறோம் இதையும் அடிக்கலாமே?
இதில் யாரும் யாரையும் ஒருங்கிணைக்க தேவையில்லை யாரும் யாரிடமும் காசு பறிமாற்றம் செய்யும் சிக்கல்கள் இல்லை.
அவரவர் ஊர் அவரவர் மக்கள் அது சேலமோ சென்னையோ தூத்துக்குடியோ எந்த ஊராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
அந்த ஊரில் இருக்கும் என் நண்பர்கள் இதை செய்தால் நான் மகிழ்வேன் என்பதை விட செய்து பாருங்கள்.
இரவு "நான் எதையோ சாதிச்சுட்டேன்டா" என்ற பெருமிதம் உள்ளுக்குள் பொங்க ஒரு நிம்மதியான உறக்கம் நிச்சயம் உண்டு.
நான் தொடங்கி வைக்கிறேன் இதை.....
நேரமும் கொஞ்சம் பணமும் இதற்காக ஒதுக்கும் நண்பர்கள் இதை செயலாக்கலாம்.
இப்பதிவை ஷேர் செய்வதை விட என் பெயர் இன்றி எடிட் செய்து அப்படியே காப்பி எடுத்து என் பெயர் தவிர்த்தும் அவரவர் சுவர்களில் முடிந்தால் பதியுங்கள்
ஷேர் செய்தால் அது போகும் ரீச் என்பது மிக குறைவு என்பதால் காப்பி எடுத்து போட்டுக்கொள்ளுங்கள்.
அவரவர் பெயரில் கூட போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கிறேன்.
என் சக மனிதர்கள் மீதான நம்பிக்கையுடன் என் சக மனிதர்கள் மீதான மகா தோழமையுடன் ராஜ் !
நன்றி : சபிதா காதர்
இது ஒரு முகநூல் பகிர்வு
இது ஒரு முகநூல் பகிர்வு
3 Responses So Far:
புனிதமான எண்ணம்; புதுமையான பதிவு!
YES புனிதமான எண்ணம்; புதுமையான பதிவு!
மாஷா அல்லாஹ்! மிக அருமையான பதிவு!
"தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:271)"
"வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக கொடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்! நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான்.
அவர்கள்: (1) நீதிமிக்க அரசன். (2) அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். (3) பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். (4) அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், (5) அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது ‘நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்’ எனக் கூறியவன். (6) தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், (7) தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி
Post a Comment