Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாங்க! வாங்க! இந்த சஹனில் உட்காரலாம். 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2017 | , , , , , ,

“தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு “ என்று நாமக்கல் கவிஞர்  இராமலிங்கம் பிள்ளை பாடினார். 

தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இனத்தோருக்கும் ஒரு சிறப்பான அல்லது தனியான குணம் இருப்பது இயல்பே. கேரளாக்காரர்களுக்கும், வங்காளத்தைச் சேர்ந்தோருக்கும், ஆந்திராக்காரர்களுக்கும் , மார்வாரிகளுக்கும் கூட  தனிப்பட்ட சில பழக்கங்கள் இருக்கின்றன.

இன ரீதியாக மட்டுமல்ல, மொழி ரீதியாக மட்டுமல்ல, சாதி ரீதியாக மட்டுமல்ல, ஊர்கள் ரீதியாகவும் சில பழக்கங்கள் இந்த மண்ணில் வாழும் மைந்தர்களோடு ஊறிப் போய் இருக்கிறது. அந்தப் பழக்கங்கள் அந்த குறிப்பிட்ட ஊரின் மக்களோடு ஒன்றிவிட்ட அடையாளங்கள்.

சில ஊர்களில் சில உணவு வகைகள் ஊர்பெயருடன் சிறப்பாக குறிப்பிடப்படும். உதாரணங்களாக , மணப்பாறை முறுக்கு, சாத்தூர் சேவு, காஞ்சிபுரம் இட்லி, திருநெல்வேலி ஹல்வா, ஸ்ரீ வில்லிப் புத்தூர் பால்கோவா, திருவையாறு அசோகா, கீழக்கரை தொதல், பரங்கிப்பேட்டை தூள் சம்சா , அதிராம்பட்டினம் பீட்ரூட் ஹல்வா  போன்றவைகளும்  விருந்து அயிட்டங்களில் தோப்புத்துறை சொறி ஆணம், அய்யம்பேட்டை வெள்ளை மட்டன் குருமா, அதிராம்பட்டினம் கத்தரிக்காய்பச்சடி, பரங்கிப்பேட்டை கோழி சம்மா, முத்துப் பேட்டை   தாளிச்சா , கூத்தாநல்லூர் கொத்துக்கறி கூட்டு ஆகியவையும் புகழ்பெற்றவை. 

அதே போல வாணியம்பாடி,  ஆம்பூர் பகுதி பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி, மதுரை மாலை மட்டன் ஸ்டால் அயிட்டங்கள், விருதுநகர் புறாக்கறி, மதுரை சித்திரக்காரத்தெரு மண்பாண்ட சமையல் அயிட்டங்கள், நாஞ்சில் நாட்டு இடலக்குடி நெய்மீன் கறி ஆகியவையும் சீரும் சிறப்பும் சுவையும் வாய்ந்தவை. 

செட்டி நாட்டு சமையல் என்று தனிச்சுவையுடைய சாப்பிடும் வகையறாக்கள் , பாண்டிய நாட்டு பனியார வகைகள் ஆகியவற்றை நாம் யாருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லாத அளவுக்கு அவை புகழ்பெற்றவை. 

மாநில ரீதியாகவும் உணவு வகைகள் தனித்தனி சுவை அம்சங்கள் பெற்று இருக்கும். கர்நாடகாவில் சாம்பாரில் வெல்லம் கலப்பார்கள் . ஆந்திராவிலோ காரம் நாக்கை துளை போட்டுவிடும். உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில்  நெய்யும் எண்ணெயும் வெண்ணையும் , கடித்துக் கொள்ள பச்சை மிளகாயும் வெங்காயமும் இல்லாமல் உணவு இருக்காது. உள்ளே இறங்காது. தயிரில் புகுந்து விளையாடுவது , முழு உருளைக் கிழங்கை அவித்து அதில் மிளகுப் பொடியைத்தூவி சாப்பிடுவது  பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் மாலை நேர                  சாலையோரக்கடைகளில்  நாம் காணும் காட்சிகள். சாட் மசாலா , பானி  பூரி போன்றவையும் வடமாநிலங்களில் அனைவராலும் விரும்பி ரசித்து உண்ணப்படும் சில்லறை உணவுகள். பச்சை முள்ளங்கியைக் கடித்து  சாப்பிடுவது டில்லியில் சர்வ சாதாரணம். 

கடுகு எண்ணெயில் பொறித்த கங்கை ஆற்று மீன் வகைகள் பாட்னாவில் பிரசித்தம். கடுகை வறுத்து தூளாக்கி அதை மீனில் தடவி ஊறவைத்துப் பொறித்துக் கொடுப்பதும் பெரிய பெரிய சைஸ் பீப் சாப்களை திரண்ட மசாலாவில் தோய்த்து சாப்பிடுவதும் முளைவிட்ட கொண்டைக் கடலையில் நறுக்கிய வெங்காயம்,  பச்சை மிளகாய் கலந்து  புளித்தண்ணீர் ஊற்றி ,  உதட்டோரம் ஒழுகினாலும் சப்புக் கொட்டி சாப்பிடுவது, கல்கத்தா நகரக் காட்சிகள். 

இவ்வாறு ஊருக்கு ஊர் மாநிலத்துக்கு மாநிலம் ஒரு சில குறிப்பிட்ட உணவுகள் , பழக்கங்கள், முறைகள், மாற்றவே  முடியாத கலாச்சார அடையாளங்கள் விரவியும் பரவியும் காணப்படுகின்றன.   

நமது ஊரான அதிராம்பட்டினத்துக்கு என்றும் சில  கலாச்சார அடையாளங்கள் காலம் காலமாய் நிலைத்து நிற்கின்றன. 

பெண்ணுக்கு வீடு கொடுப்பது 

ஒரு வீட்டில் பாதி பாதியை இரண்டு குமர்களுக்கு எழுதிவைப்பது 

உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் சம்பந்திகளாவது 

குண்டாமாத்து என்கிற பெண் மாப்பிள்ளை கொடுத்தல் , எடுத்தல் 

திருமண வீட்டுக்கு வரும் அனைவருமே  பொதுவாக வெள்ளை கைலி வெள்ளை சட்டை அணிவது. அதிலும் குறிப்பாக கைலி மட்டுமாவது மடமடவென்று கஞ்சிப்பாடம் கலையாமல் உடுத்துவது 

வெள்ளிக்கிழமை ஜூம் ஆவுக்குப் போகும்போது  சர்பத் குடிப்பது 

வெள்ளிக் கிழமை என்றாலே  பகல் உணவுக்கு ஆட்டு இறைச்சி அல்லது கோழி இறைச்சி      சமைப்பது  

எவ்வளவு பெரிய விருந்தானாலும் சஹனில் வைத்துப் பரிமாறுவது 

நெய்சோற்றுக்கு புளியாணம் என்கிற ரசம்  

ஆண்கள் லுஹர் தொழுகைக்குப் பிறகு கூட்டமாக  விருந்துக்கு வருவது , பெண்களுக்குரிய விருந்தை அதற்கு முன்னரே நிறைவு செய்துவிடுவது  

வெல்வட் தொப்பி போடுவது 

இரவுப் பயணம் போகும் போது கொத்துப்புரோட்டா  பார்சல் வாங்கிப் போவது 

பெருநாள் மாலை பட்டுக் கோட்டை சென்று இரவு உணவாக இட்லி சாப்பிடுவது 

இத்யாதி..... இத்யாதி. 

இப்போது இந்தப் பதிவில் சிலகாலமாக நாம் காணும் ஒரு மாற்றம் பாரம்பரியமாகவும் நமது ஊருக்கு அடையாளமாகவும் இருக்கும் ஒரு பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருவது பற்றி நமது கருத்துக்களை சொல்ல நினைக்கிறோம். 

அது சகன்களில் விருந்து பரிமாறுவது பற்றியது. 

அண்மைக்காலமாக  சகன்களில் விருந்து பரிமாறுவது மெல்ல மெல்ல மறைந்து வருகிறது . அந்த இடத்தை இலைச் சாப்பாடு பிடித்து வருகிறது. நமது ஊரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் சஹன் சாப்பாட்டை இலைச்சாப்பாடு எடுத்துக் கொள்வதை ஏனோ ஏற்க இயலவில்லை. நம்மில் சிலரும் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் அடையாளங்கள் தெரிகின்றன. 

ஒரு நண்பர்  மூலமாக ஒரு செய்தி நாம் அறிந்துகொண்டோம். அதாவது நமது ஊரில் நடைபெற்ற திருமணத்துக்கு   வெளியூரில் இருந்து பிறமத சகோதரர் ஒருவர் வந்திருந்தார். திருமணத்தில் கலந்துகொள்ள நமது ஊரைச்சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக பெரும் கூட்டமும் கூடி இருந்தது. திருமணம் முடிந்ததும் விருந்து சஹன் மூலம் பரிமாறப்பட்டது. ஒரு மணி நேரத்தில் எல்லோரும் உணவருந்திவிட்டுப் போய்விட்டார்கள். வெளியூர்காரருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் நடத்தும் திருமணங்களில் முகூர்த்தம் காலை பத்து  மணிக்கு முடிந்ததும் முதல்  பந்தி வைத்தால் , கடைசி பந்தி நிறைவுற பிற்பகல் மூன்று மணிவரை ஆகிறது. இந்த ஊரில் இவ்வளவு கூட்டமும் ஒரு மணி நேரத்துக்குள் உணவருந்திப் போய்விட்டதே என்று ஆச்சரியப்பட்டார்.  

கலாச்சாரம் என்பது ஒரு பக்கம் இருக்க, பெரும் மக்கள் தொகை கொண்ட நமது ஊரில் சஹன் சாப்பாடு என்பது விருந்து கொடுப்போர்கள் நிர்வகிக்க மிகவும் இலகுவானது. பேப்பரைப் போட்டோமா , மரவையை வைத்தோமா மறு சோறு போட்டோமா தட்ஸ் ஆல். ஆட்டம் குளோஸ். ஆனால் இலைச்சாப்பாடு அப்படியா? 

சாப்பாட்டு மேசை போடணும், பேப்பர் ரோலை விரிக்கணும் , இலைகளை ஒவ்வொன்றாய் போடணும் அதிலும் கிழிசல் மற்றும் சைஸ் சிறிய இலைகள் மாற்றிப் போட்டாக வேண்டும், தண்ணீர் பாக்கெட் வைக்கவேண்டும். பிறகு அயிட்டங்களை ஒவ்வொன்றாய் வாளியில் மற்றும் தட்டுகளில் கொண்டு வந்து கரண்டி வைத்துப் பரிமாறவேண்டும். அதற்குள் அடுத்த அணி , முன் சாப்பிடும் அணியின் பின்னால் நிற்கும். நேர விரயம் ஒருபக்கம் உணவு விரயம் மறுபக்கம் என்று நிர்வாகம் மிகவும் கஷ்டம். உணவுப் பொருள்கள் விற்கும் விலையில் சிறுவர்கள் கூட ஒரு இலையில் உட்கார்ந்து அதிகமான அளவு சமைத்த உணவுகளை வீணாக இலைகளில் மிச்சம் வைத்துவிடுகிறார்கள். 

ஆனால் சஹனில் தேவையானதை கலந்து பேசிக் கேட்டு வாங்கி சாப்பிடுகிறோம்; யாராவது கூடுதலாக சாப்பிட்டாலும் குறைவாக சாப்பிட்டாலும் சஹனில்   பெரும்பாலும் விரயமாவதோ வீணாவதோ இருக்காது. இருந்தாலும் அது அரிதானது.  மிச்சபடுவதில் ஆளுக்குக் கொஞ்சமாக சாப்பிட்டு முடித்துவிடும் அழகான முறைகளும் அங்கு அரங்கேறுகிறது.  

சகோதர வாஞ்சை, ஒற்றுமை ஆகியவைகளுக்கு சஹன் சாப்பாடு உதாரணமாக இருக்கிறது. 

சஹன்  சாப்பாடு என்பது உருவானது எவ்வாறு என்று  பார்க்க அரபுமக்களின் பாலைவனப் பயணங்கள் குறிப்பாக வணிகப் பயணங்களை சுட்டுகிறார்கள். நெடுந்தூரம் பயணிக்கும் அரபுகள் தாங்கள் கொண்டுவந்த வேறுபட்ட உணவுவகைகளை ஒரே தட்டில் வைத்து சுற்றி அமர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள். இவ்வாறு சுற்றி அமர உணவுகளைப் பகிர்ந்துகொள்வது ஒரு காரணமாக இருந்தாலும் பாலைவனத்தில் அடிக்கும் காற்றின் காரணமாக  மண் துகள்கள் உணவில் கலந்துவிடாமல் சுற்றி உட்கார்ந்து தடுப்பதும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறது. இவ்வாறு சாப்பிடுவதில் இருக்கும் வசதியையும் வீண் விரயம் இல்லாமல் இருப்பதையும் அறிந்தவர்கள் வணிகப் பயணம் முடிந்து வீடுகளுக்கு வந்ததும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் பழக்கத்தை தொடர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது. 

பெருமானார் ( ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் சஹனில் சாப்பிட்ட வரலாற்று நிகழ்வுகள் நாம் காணக் கிடைக்கின்றன. அகழ்ப் போர் சமயத்தில் பற்றாக்குறையான உணவைப் பகிர்ந்து உண்டதில் அதில் பரக்கத் உண்டானதாகவும் பலரின் பசி நீங்கி மிச்சமும் இருந்ததாகவும் அறிகிறோம். 

இன்றும் அரபு நாடுகளில் அரபுகளின் வீட்டு விருந்துகள் சஹனில்தான் பரிமாறப்படுகின்றன. பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளும் அவ்வாறே நடத்தப்பட்டு வருகின்றன. உலகின் அனைத்து பாகங்களிலிருந்தும் வேலைக்கு வந்துள்ள முஸ்லிம்கள் ஒரே சஹனில் சாப்பிடுகிறார்கள்.   

இன்றைய தமிழகத்தில் நாகூர், பரங்கிப் பேட்டை, காயல்பட்டினம், முத்துப் பேட்டை, கூத்தாநல்லூர் போன்ற ஊர்களுடன் அதிராம்பட்டினமும் இந்த சஹன் கலாச்சாரத்தைக் கொண்டு திகழ்கிறது. இந்தப் பழக்கம் 450 முதல் 500 ஆண்டுகளாக இந்த ஊர்களில் கடைப்பிடிக்கப்படுகிறது என்று நாகூரைச் சேர்ந்த ஒரு பெரியவர் கூறினார்.    

மருத்துவக் காரணங்களை சுட்டிக்காட்டி சில நவீனத் தம்பிகள் சஹன் சாப்பாட்டை தவிர்க்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். நாம் சொல்ல வருவது என்னவென்றால் சில மாற்றங்கள் தேவையாக இருந்தாலும் அந்த மாற்றங்களை நமது கலாச்சாரத்தின் அடிப்படையை  அழித்துவிடாமல் செய்துகொள்ளலாம் . மண்கலயத்தில் கொடுத்த தண்ணீரை பாட்டில்களில் கொடுப்பது போலவும், மண்சட்டியில் வைத்த கத்தரிக்காய் பச்சடியை எவர்சில்வர் கோப்பைகளில் வைத்துப் பரிமாறுவது போலவும் அடிப்படையை அழிக்காத மாற்றங்களை செய்துகொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்காக அடிமடியிலேயே கை வைக்கத் துணிய வேண்டாம். 

இன்றைக்கு உடல் பருமன் என்பது பரவலாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களால் சஹன்களில் சாப்பிட கீழே உட்கார்ந்து எழ இயலாமல் இருக்கிறது என்பது உண்மைதான். ஆகவே அவர்களைப் போன்றவர்களுக்கு இலைச்சாப்பாடு என்று தனியாக  வைத்தால் கீழே அமர்ந்து எழ சக்தி உடையவர்களும் இலைச்சாப்பாட்டுப் பந்தியில் வந்து அமர்ந்துவிடுகிறார்கள். அவர்களை எழச் சொல்வதில் தர்மசங்கடங்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இதைத்தவிர்க்க உடல்பருமன் உள்ளவர்களுக்கு சகனை ஒரு ஒற்றைக் கட்டிலில் வைத்து சுற்றி நான்கு நாற்காலிகளைப் போட்டு உணவருந்தச் சொல்லலாம். காலத்துக்கும் வசதிக்கும் ஏற்ப மாறுவதில் தவறில்லை. ஆனால் அந்த மாற்றம் அடிப்படையை மாற்றிவிடக் கூடாது என்பதையே வலியுறுத்த விரும்புகிறோம். 

ஆகவே சஹன் சாப்பாடு நமது கலாச்சாரத்தின் சின்னம். நாம் கட்டிக் காக்கவேண்டிய சின்னம். இலகுவானது; வசதியானது; சிக்கனமானது ; சிறப்பானது. நமக்குள் கைகலப்பு வேண்டாம் . கலகலப்பாக சகனில் கைகலந்து சாப்பிடலாமே சகோதரர்களே! 

எழுத்து உரு : இப்ராஹீம் அன்சாரி. M.Com

8 Responses So Far:

Ameen Bin Jamal said...

நாம் பின்பற்றி வரும் சகன் கலாச்சாரம் நீங்கள் சுட்டி காட்டியதைப் போல சுன்னத்தான நடைமுறை என்பதை இளைய தலைமுறை புரியும் வண்ணம் உணவு உண்பதில் சுன்னத்தை ஹயாத்தாக்குதல் என்ற தலைப்பில் அவ்வப்போது ஜும்மா பயான் செய்து வந்தால் சகன் சாப்பாட்டை தெறிந்தவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் இளைய தலைமுறைக்கு செய்தியயை கொண்டு போய் சேர்த்த நன்மை கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.உடல் தடித்து சிரமப்படுபவர்கள் விருந்து சாப்பாட்டை தவிர்த்து உடல் எடையை குறைக்கலாமே.

sabeer.abushahruk said...

மிகவும் சுவையான பதிவு

நன்றி காக்கா

sheikdawoodmohamedfarook said...

//வாங்க!வாங்க!இந்த சகனில் உட்காரலாம்//வந்தவர் சகனில் உட்கார்ந்தால் சகன் உடைந்துவிடுமே!

sheikdawoodmohamedfarook said...

நடுத்தெரு விருந்துக்கு அடுத்த தெருகார்கள் போனால் சுயமரியாதையே மூட்டைகட்டிபோட்டுவிட்டுபோகவேண்டும்.எந்த சகனிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.அங்கே இறைச்சிகறி சோறு திங்க ஆசைபட்டால் பந்திமுடியும்வரை காத்திருக்கவேண்டும். மிஞ்சினால் கிடைக்கும்!நீங்கள்அடுத்த தெருக்காரனாக இருந்து பந்தியில் மரியாதை கிடைக்கவேண்டு மென்றால் ECR ரோட்டில் ஒரு பெரிய கட்டிடம் இருக்கவேண்டும்.அல்லது பட்டுக்யிலோ சென்னையிலோ, மலேயாவிலோகட்டிடங்களோபெரியTrading.co இருக்கவேண்டும்.[மோப்பக் குழையும் அனிச்சம்முகம் திரிந்தி நோக்ககுழையும்விருந்து.]விருந்துக்கு வருவோரெல்லாம் பசியாலும்பட்டியலும்பட்டினியாலும் வருவதில்லை. அழைப்புக்குமரியாதை கொடுத்துவருகிறார்கள் என்பதைபந்தலில்யுணரவேண்டும்.

sheikdawoodmohamedfarook said...

கல்யாண விருந்து கொடுப்போர் புளிச்ச எப்பக்காரர்களுக்கும் தொந்தி பெருத்த பேர்வழிகளுக்கும்கொடுதால்மட்டும் போதாது.ஒட்டிய வயிறோடு பட்டினி கிடப்போனுக்கும்கொடுக்க வேண்டும்.இதில் காபீர் இஸ்லாம் வேற்றுமை வேண்டாம்.பசிக்கு மதம் கிடையாது.

sheikdawoodmohamedfarook said...

//சகனில் கைகலந்து சாப்பிடலாம்//அதற்க்கு முன்னதாக கையை நன்றாக கழுவிவிடவேண்டும்.

sheikdawoodmohamedfarook said...

//பரங்கி பேட்டைதூள் சம்சா//பரங்கிபேட்டைதால்சாவைதான் பிரபலமானதாக சொன்னார்கள்.

sheikdawoodmohamedfarook said...

நம்ம வட்டிலப்பம் மலேசியாவில் உள்ள மற்ற மாவட்டதுகாரர்களை திடுக்கிட வைத்தது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு