Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 1 24

அதிரைநிருபர் பதிப்பகம் | August 10, 2013 | , , , , ,


அன்புள்ளம் கொண்ட அதிரைநிருபர் அபிமான நெஞ்சங்களே! 

அஸ்ஸலாமுஅலைக்கும் [வரஹ்]...

புத்தகம் தொடர்பான கட்டுரை எழுத ஆசை வந்தது. இது ஒரு பேராசைதான் ‘கடலைக் கலக்க கட்டெறும்பு கச்சை கட்டியது’ போன்றதே என் ஆசையும். என்றாலும் முயற்சித்துத்தான் பார்ப்போமே என்ற நம்பிக்கையில் என் பயணத்தை “பிஸ்மில்லாஹ்” என்று ஆரம்பிக்கிறேன். “ஆயிரங்காத பயணத்தின் ஆரம்பமே நாம் எடுத்து வைக்கும் ஒரு முதல் அடியில் தான் துவங்குகிறது’’.என்று ஒருமேதை சொன்னதாக  நினைவு.

மடிமீது எனை வைத்து தன் முந்தானையில்  மூடி பாலூட்டிய என் தாய்க்கு அடுத்து சுமார் ஐம்பது ஆண்டுகாலத்துக்கும் மேல் பாலும் சோறும் ஊட்டி என்னை ஆளாக்கிய செவிலித்தாய் புத்தகமே. கதை சொல்லி அறிவூட்டி ஊக்கமும் ஆக்கமும் தந்த அந்த புத்தகத்தின் கதை கூற மகன் வந்தேன். இது ஒரு நன்றிக்கடன். (பெரும்பாலான இந்தியர்கள் உச்சரிக்க மறப்பது அல்லது மறுப்பது இரண்டு வார்த்தைகள். ஒன்று; நன்றி. மற்றது; ஸாரி. இதைச் சொன்னது அதிரைநிருபர் தளத்துக்கு மிகநெருக்கமான ஒருவர்தான். அவர் சொன்னதை நான் வழி மொழிகிறேன்.)


சுமார்ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வயிறு வளர்க்க கப்பல் ஏறி மலேயா நாட்டுக்கு போய் பினாங்கு மாநகரில் வேலைதேடி கடை கடையா  அலைந்து அலைந்து வேலை கேட்டபோது எல்லாக் கடையும் கை விரித்து “இல்லை இல்லை” என்ற ஒரே பல்லவி பாட ஒரே ஒரு கடை முதலாளி மட்டும் எந்த ஊர் என்றுகேட்டார். ஊரைச் சொன்னேன்.” ஆட்டைக் கழுதை ஆக்கிய....” என்று இழுத்தவர் மனமிறங்கி “கடைல சேத்துகிறேன் ‘’என்று, கருணையோடு சொன்னார்.  அப்போதெல்லாம் நம்ம ஊர்க்காரங்க யாரும் கடைகளில் சம்பளகாரர்களாகவோ அல்லது கடைகண்ணி வச்சு பெருசாவோ சிறுசாவோ யாவாரம் செஞ்ச முதலாளி யாருமே  இல்லவே இல்லேன்னு எவர் முன்னால் வந்து நின்றும் நேர்படச் சொல்வேன்... 

ஒரு வியாபாரி இன்னொரு வியாபாரியிடம்‘ இவன் ஒழுங்கான பையன் கை சுத்தமான ஆளு சொல்ற பேச்சுக்கு மறு பேச்சு பேசாம வாயே மூடிகிட்டு வேலை பார்ப்பான். காசு பண விஷயத்தில் கை நீளாது” என்று ஒரு பரிந்துரையை ஒரு முதலாளி இன்னொரு முதலாளி காதுலே போட்டாத்தான் அந்த முதலாளியும் நம்மளை நம்பி வேலை போட்டுக் கொடுப்பார். 

இல்லேன்னா அம்போதான்! அந்த மாதிரியான பரிந்துரை செய்ய  நம்ம ஊரு ஆளுங்கதான் அந்த வெயிட்டுலே அங்கே யாரும் இல்லையே! “சோறு போடுறேன் வந்து வேலையே ஒழுங்கா பாரு. வேலை எப்புடினு பாத்துத்தான் சம்பளம் சொல்ல முடியும். இரண்டு வேளைச் சோறு; ஒரு வேளை பசியாற அம்பது காசு  இந்த அம்பது காசுக்கு இன்னொரு பேரு செலவுக் காசு [‘போனஸ் கீனஸ்’ என்றெல்லாம் பேச்சு வரப்படாது] நாங்களா பாத்து கொடுத்தாதான் வாங்கிகிடனும் .காலையில வெள்ளன (ஆறு மணிக்கு கடைக்கு வந்துடனும்” (இது முதல் எச்சரிக்கை) கடை மூடும் நேரம்? முதலாளி மூடு எப்படி இருக்கோ அப்படியே அமையும். இரவு மணி 9 லிருந்து 10 மணிக்கு மேல் போகாது [கொசுறு தகவல் : ”மூடும்’’ என்றசொல்’ அபசகுனம்’ என்பதால் எடுத்து வைப்பது” என்ற சொல் உபயோகத்தில் இருக்கும்].

"'நல்லா வேலை செஞ்சா பின்னாடி பார்த்து செய்வோம்” என்ற வாய்மொழி ஒப்பந்தம் போட்டு ஒரு புத்தககடை முதலாளி எனக்கு ’அபயக்கரம் நீட்டினார். நீட்டிய கரத்தை சிக்கெனப் பிடித்து நீண்டது என் பிழிப்பு. பிழைப்பில் பிழை ஏதும் செய்யாமல் ‘கை’ பதனம் வாய் பதனம் என்று கருமமே கண்ணா இருந்ததால் வயிற்றுக்கு கிடைக்க வேண்டிய சோறு கிடைத்தது. சில நேரங்களில் அறுபது நிமிசம் அல்லது கூடக்கூடப் போனால் நூற்று இருபது நிமிசம் தாமதம் ஆகும். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் போட்டதையே சாப்பிட்டுவிட்டு அறுசுவை சங்கதியெல்லாம் நாக்குக்கு காட்டாம கர்மமே கண்ணா இருந்து  வேலையே மட்டும் வெரசு வெரசா செஞ்சு முடிக்கனும். 

அதுதான் முதலாளிகளின் கோட்பாடு, ‘பசி வந்திட பத்தும் பறந்து போகும். ’இதை நன்றாகத் தெரிந்து கொண்ட புத்திசாலிகள் முதலாளிகளானார்கள். இந்த சூத்திரம் அறியாத அப்பாவிகள் நல்லபொழுதை எல்லாம் தூங்கிக்  கழித்தார்கள். உழைப்பாளிகளின் பசியும் மூடத்தனமும் முதலாளிகளின் மூலதனம் ஆனது. உழைப்பவனைப் பிழிந்து பிழிந்து சாற்றைக் குடித்து சக்கையைத் துப்பி முதலாளிகள் கொழுத்தார்கள். இவர்கள் ஒன்று கூடி தங்களுக்கு ஒரு  வர்க்கத்தை  நிறுவிக் கொண்டார்கள். இதை முதலாளி வர்க்கம் என்றும் சொல்லாம்.

"பசிநோக்கார் கண் துஞ்சார் செவ்வி அருமையும் பாரார் கருமமே கண்ணாயினார்" என்று சொன்னபடி நான் பணியாற்றிய போது இவர்களைக் கற்றேன். கற்றது பல; பெற்றது பல; விட்டது பல; விற்றது பல. . 

விட்டதை மட்டும் விட்டுவிட்டு மற்றதை தந்த “புத்தகத்திற்கு’’ நன்றிக் கடன் ஆற்றும் வண்ணம்’’ ஒரு புத்தகம் பிறக்கிறது” என்ற தலைப்பில் சிறு தொகுப்புக் கட்டுரை வரைய எனக்கு ஒரு ஆசை அந்த ஆசையில் பிறந்ததுதான் இந்த  சின்னஞ்சிறு தொடர் கட்டுரை.

தொடரும் இன்ஷா அல்லாஹ் !
S.முஹம்மது ஃபாரூக்

அறிவிப்பு : இந்த தொடர் வாரந்தோறும் பிரதி ஞாயிற்று கிழமை தோறும் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் !

24 Responses So Far:

Ebrahim Ansari said...

// ‘கடலைக் கலக்க கட்டெறும்பு கச்சை கட்டியது’ போன்றதே என் ஆசையும்// தொடரின் ஆரம்பமே கலக்க ஆரம்பித்து இருக்கிறது.

வரவேற்கிறோம். இனி ஒவ்வொரு பக்கத்துக்காகவும் காத்திருப்போம்.

அதிரை நிருபர் தரத்தொடங்கியிருக்கும் அன்பான பெருநாள் பரிசாக கருதுகிறேன்.

ZAKIR HUSSAIN said...

அன்புமிக்க எஸ். முஹம்மது ஃபாரூக் மாமா அவர்களுக்கு.....
நிறைய எதிர் பார்த்து காத்திருக்கிறோம். இப்படி ட்ரைலரிலேயே அசத்தியிருக்கிறீர்கள்.

உங்கள் அனுபவம் எங்களுக்கு வழிகாட்டி. வரும் காலங்களில் இளைஞர்கள் ஏமாறாமலும் , சுய கெளரவத்தோடும் வாழ வழிவக்கும் பாதையாக உங்கள் தொடர் அமையும். என்னுடன் பெருநாளைக்கு வாழ்த்து சொல்லும் நண்பர்கள் [ டெலிபோன் வழியாக வெளிநாட்டிலிருந்து ] எல்லோரும் உங்களைப்பற்றிதான் கேட்கிறார்கள். இவ்வளவு நாள் நீங்கள் எல்லோரும் ஏன் அவரை எழுத வைக்க வில்லை என்று. மறவாமல் எழுத வேண்டிய விசயம்.....பாவம் பார்த்து , நட்பை பெரிதாக நினைத்து நீங்கள் விட்டுக்கொடுத்த விசயங்களை மறவாமல் எழுதுங்கள். இனிமேலும் நம் சமுதாயம் இப்படி இருந்து விட வேண்டாம் என்று எழுதுங்கள்.

Unknown said...

அன்புள்ள பாரூக் காக்கா,
r
ஆரம்பமே அசத்தல்

கருமமே கண்ணா இருந்து காரியம் ஆற்றி இருக்கின்றீர்கள். சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி இருக்கின்றீர்கள்.

உங்களின் இந்த தொடர் நல்ல பல அனுபவங்களை எங்களுடன் நிச்சயமாக பக்ரிந்துகொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதுதான் முதலாளிகளின் கோட்பாடு, ‘பசி வந்திட பத்தும் பறந்து போகும். ’இதை நன்றாகத் தெரிந்து கொண்ட புத்திசாலிகள் முதலாளிகளானார்கள். இந்த சூத்திரம் அறியாத அப்பாவிகள் நல்லபொழுதை எல்லாம் தூங்கிக் கழித்தார்கள்.//

'நச்'சென்ற கருத்தாக வாசிக்கும் வாசகர்களைப் பொருத்தே பொருள் மாறுபடும் !

தொடரின் ஒவ்வொரு பக்கத்திலும் 'ச்' இருக்கும் ! அங்கே முன்னும் பின்னும் எழுத்துக்கள் மட்டும் மாறும் ! :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நிறைய விசயங்கள் அறிய இருப்பதை ஆரம்பம் அழகாய் சொல்கிறது.

அன்புடன் ஆவலாய் எதிர்பார்க்கிறோம்.

நன்றி!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr.S. Mohammed Farook,

Your writings are having charisma. Giving hope and the wisdom buried similar to silver linings among rainy clouds. Readers are recommended to read between the lines in order to dig out the insights lessons for life.

Keep writing more and more.

Jazakkallah khairan.

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

sabeer.abushahruk said...

ஏர்மைல் தவாலும் கூட்டெழுத்தில் சேதிகளும் இவிடஞ் சுகம் அவிடஞ்சுகங்களைவிட்டால் சூசகமாச் சொல்லிவச்ச செலவுப்பணம் பெறுமிடமும் எங்களுக்கு பினாங்கைச் சொர்க்கபுரியாகவே காட்டி வச்சிருக்க, பினாங்குக்குள்ள பொழப்புக்காகப் பட்ட கஷ்டங்களை நம் மூதாதையர் எங்களுக்குச் சொல்வதேயில்லை.

காரியங்களோ கப்பல் காலத்தவை; துவக்கமோ விமானத்தின் ட்டேக் ஆஃப் போல ஜிவ்வென்று மேலெழுகிறது.

புத்தகங்களை வளர்ப்புத்தாய் அளவுக்கு என்னாலும் மதிக்க முடிகிறது. புத்தகங்களைப் பற்றிய இவ்வரிய தொடரில் பினாங்க் சுவாரஸ்யங்களும் ஆங்காங்கே சொல்லப்படும் என்பதற்கான அடையாளம் முதல் அத்தியாயத்திலேயே தெரிகிறது.

அன்றும் இன்றும் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களைப் பற்றிய ஆக்கம் என்பதால் முதல் பெஞ்சில் அய்யா ஆஜர்!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Anonymous said...

//பாவம் பார்த்து நட்ப்பை பெரிதாக நினைத்து//

அஸ்ஸலாமுஅலைக்கும்.

அன்பு மருமகனே ஜாகிர்!:

இந்த தொடர் எழுத தொடங்கு முன்னே' அதை தொடுவோம்' என்று நினைத்தேன். ''சுயபுராணம் பாடுகிறான்'' என்று சிலர் அல்லது பலர் எண்ணக் கூடும் என்று அதை தொடவில்லை. அந்த Inferiority complexஐ உடைத்து உன் comment .கையில் விளக்கு இருந்தாலும் தூண்டினால் தானே அது சுடர் விடும். உன் தூண்டலுக்கு அல்லாஹ் துணை நிற்ப்பான். ஆமீன்,

தலைப்பை தேர்வு செய்துவிட்டேன் 'you too Brutes!' தலைப்பு சரியா?

அன்புள்ள தம்பி M.நெய்னால்தம்பி-அபூஇப்ராஹிம் அவர்களுக்கு,

Thank you for your kind comment! Sucச்a type of comments encourage me to write more and more! thank you and Zakir!

S.முஹம்மதுபாரூக்,'அதிராம்பட்டினம்

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
பீடிகையே அசத்தலாக ஆரம்பமாகின்றது இனி பதிய இருக்கும் பதிவுகளும் பாதம்பாலும் ஹார்லிக்சும் போஸ்ட்டும் கொடுகப்பட்டு வீரியமிக்க ஒரு நல்ல ஆர்ரோக்கிய முள்ள பதிவாகவந்து எங்களை ஆரோக்கியப்படுத்தும் என எதிர்பார்த்து விழி மீதுவிழி வைத்து காத்திருக்கின்றோம்.

தூங்கியே காலத்தைப்போக்கும் எங்களுக்கு டாக்டர் அ.இ.காக்காவின் பதிவுகள் போன்று விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்

///[கொசுறு தகவல் : ”மூடும்’’ என்றசொல்’ அபசகுனம்’ என்பதால் எடுத்து வைப்பது” என்ற சொல் உபயோகத்தில் இருக்கும்].///

மேலே தாங்கள் குறிப்பிட்ட மூட நம்பிக்ககளை போன்று கலைந்தெரியும் காவியமாக அமையட்டும்

///உழைப்பாளிகளின் பசியும் மூடத்தனமும் முதலாளிகளின் மூலதனம் ஆனது. உழைப்பவனைப் பிழிந்து பிழிந்து சாற்றைக் குடித்து சக்கையைத் துப்பி முதலாளிகள் கொழுத்தார்கள்.///

இப்படியாக படிப்பறிவில்லாத பாமரம மக்கள் எத்தனையோ நிருவனங்களில் தங்களின் கவுரவத்தை விலைபேசி விற்றுவிட்டு கொத்தடிமைகள் போன்று பனியாற்றும் காட்சிகள் நாம் அடிக்கடி கான்பதுண்டு இப்படி அப்பாவிகளை சாராக பிழிந்து சக்கையெடுக்கும் முதாலிகளுக்கு எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு வரியவர்களயும் பாமரமக்களையும்
நாம் நேச கரம் நீட்டி அவர்களின் வாழ்க்கை செம்மைபெற நம்மலால் முடிந்த உதவிகளைய் செய்யும் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்வோமாக

ZAEISA said...

மாஷா அல்லாஹ்.........அதிரை நிருபர் மெருகேறிக் கொண்டிருக்கிறது..இவ்வளவு நாளாக ஃ பாரூக் காக்காவை ஒளிச்சு வச்சிருந்த பாவம் அந்த மலேசியா...சார்ஜாகாரர்களெயெ சேரும் .

Shameed said...

ZAEISA சொன்னது…
//மாஷா அல்லாஹ்.........அதிரை நிருபர் மெருகேறிக் கொண்டிருக்கிறது..இவ்வளவு நாளாக ஃ பாரூக் காக்காவை ஒளிச்சு வச்சிருந்த பாவம் அந்த மலேசியா...சார்ஜாகாரர்களெயெ சேரும் .//

அப்பாடா நான் தப்பிச்சேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ZAEISA சொன்னது…
இவ்வளவு நாளாக ஃ பாரூக் காக்காவை ஒளிச்சு வச்சிருந்த பாவம் அந்த மலேசியா...சார்ஜாகாரர்களெயெ சேரும் .//

இப்புடி எல்லோர் முன்னாடியும் நடுப் பக்கத்திலே வச்சு நறுக்குன்னு கேட்கிறதுக்குதான் உங்களை எதிர்பார்த்து இருந்தேன்... நல்லா கேளுங்க காக்கா !

ZAKIR HUSSAIN said...

//தலைப்பை தேர்வு செய்துவிட்டேன் 'you too Brutes!' தலைப்பு சரியா?//

எத்தனையோ புத்தகங்களை வெளியிட்ட உங்களுக்கு , உங்கள் ஆக்கத்துக்கு தலைப்பு வைக்கதெரியாமலா போகும்.

உங்களின் கதையை எழுதசொன்னதற்கு காரணம் இருக்கிறது.

இன்றைய நவீன சமுதாயத்தின் கணிப்பு பல சமயங்களில் தவறாகவே போயிருக்கிறது.

கண் பார்வையில் பெரிதாக தெரிபவன், உள்ளுக்குள் எலி மாதிரி பயந்து வாழ்கிறான் என்பதை கணிக்க தவறுகிறது.

எத்தனை முறை வீழ்ந்தாலும், எழுந்துநடக்க தெரிந்தவனை போற்றுவது இல்லை. இன்றைக்கு யார் ஜொலிப்புடன் இருக்கிறார்களோ அது உண்மை / நிரந்தரம் என்று கண்ணை மூடி நம்புகிறது.

சாதனை என்பது பேங்க் பேலன்ஸ் மட்டும் தான் என்று சொல்லும் உலகம் ...தன் மானத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இத்தனை வருடம் கடந்து வந்தவர்களை சரியாக அங்கீகரிப்பதில்லையே என்ற வருத்தமும் எனக்கு இருக்கிறது.


உங்கள் அனுபவம் இதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லும்.

இனிமேலும் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனின் கனவுகள் திருடப்படாமல் இருக்க உங்கள் ஆக்கம் உதவும்.


ZAKIR HUSSAIN said...

//ZAEISA சொன்னது…
இவ்வளவு நாளாக ஃ பாரூக் காக்காவை ஒளிச்சு வச்சிருந்த பாவம் அந்த மலேசியா...சார்ஜாகாரர்களெயெ சேரும் .//

To bro ZAEISA...

நீங்கள் சொன்னபடி 'ஒளிச்சு" வைத்துதான் இருக்கிறோம்.

வைரம் எப்போதும் ஒளிர்வதுதானே..


ஒளிச்சு = வெளிச்சமாக
ஒழித்து = மறைத்து

கிரவுனை பற்றி நினைத்தாலே இப்படித்தான் எழுத வரும்.

Unknown said...

//ஒளிச்சு = வெளிச்சமாக //

ஜாகிர்,

மறைத்தல் , வெளிச்சம், இரண்டுக்குமே ஒளி என்ற வார்த்தைதான்.

ஒழி என்பது நீ அழிஞ்சுபோ அல்லது நாசமாப்போ என்று அர்த்தம்.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\“ஆயிரங்காத பயணத்தின் ஆரம்பமே நாம் எடுத்து வைக்கும் ஒரு முதல் அடியில் தான் துவங்குகிறது’’.\\

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

துவக்கமாய்ப் பேசும் கவித்துவம் வீசும் இத்தத்துவ முத்து எங்களைப் போன்ற கவிதை எழுத துணிபவர்கட்கு ஓர் அற்புதமான அடிகள்; ஆம், தாங்கள் அடியெடுத்து வைத்து எங்கட்கு அடியெடுத்துத் தந்த அந்த அற்புதமான அடிகள் எனக்கு முன்னரே கிடைத்திருந்தால், என் “ப்யணங்கள்” என்னும் கவிதைக்குள் இந்த தத்துவ மேதையின் முத்துக்களையும் தகுந்த இடத்தில் புகுத்தியிருப்பேன்; இனி, இன்ஷா அல்லாஹ் தவறாமல் தங்களின் “புத்தகம்” படிக்க படிக்க எனக்கும் அடிகள் பிறக்கும்; அதனால் என் கவிகள் சிறக்கும். இதனால் உங்கட்கு நன்றிகள்; ஜஸாக்கல்லாஹ் கைரன் காக்கா!

தாங்கள் மலேசியாவில் புகுந்த இடம் புத்தகம் (புதிய இடம்) ஆனாலும் ஆங்குப் புத்தகம் தான் உலகம் என்று இருந்ததனாற்றான் தாங்கள் ஓர் அறிவுஜீவியாகி எங்கட்கு வற்றாத அறிவமுதத்தை அள்ளி அள்ளித் தர இருக்கின்றீர்கள்; இதுவும் தங்கட்கும் எங்கட்கும் அல்லாஹ் அருளிய அருட்கொடை என்றே சொல்லலாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

// ''சுயபுராணம் பாடுகிறான்'' என்று சிலர் அல்லது பலர் எண்ணக் கூடும் என்று அதை தொடவில்லை.\\

அன்புள்ள காக்கா, என்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்த காக்காவாக இருப்பினும், இந்த ஒரு கருத்தில் தாங்கள் சொல்லும் காரணத்தைத் தமியேன் ஏற்க மறுக்கிறேன். இப்படியே சிலர் “சுயபுராணம் “ என்று சொல்லுவார்கள் என்று சொன்னால் சுயசரிதங்கள் நமக்குக் கிட்டா. மேலும்., உண்மையில் புரிந்துணர்வில் வேறுபாடுகள் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டு தானே இருந்திருக்கின்றன; அதனால், சொல்வதை விட்டு விடவில்லையே எவரும்! ஒன்றை மட்டும் நினைவில் கொள்க( தாங்கள் பெரியவராயினும் என் கருத்தைத் திணிப்பதாக எண்ண வேண்டா.) உளத்தூய்மை இரு வகைப்படும்.
1) பிறர்க்குத் தெரியாமல் தன்னிலைகளை மறைத்துக் கொள்வது
2) பிறர்க்குத் தெரியப்படுத்திக் கொண்டே தன்னிலைகளை விளக்குவது

இதில் இரண்டாம் நிலையைத் தான் உளவியல் அறிந்த “படிக்கட்டுகள்” கட்டிய அன்புச் சகோ.ஜாஹிர் ஹூசைன் அவர்கள் தங்கட்கு வற்புறுத்திக் கொண்டிருக்கின்றார்க்ள்; தமியேனும் வழிமொழிகிறேன்.
நூற்றுக்குநூறு இப்புத்தகம் “சுயசரிதம்” என்றே நினைக்க வைக்கும் அளவுக்குத் தங்களிம் எல்லா அனுப்வங்களும் இடம்பெற உள்ளதால், இதில் “சுயபுராணம்” என்ற எண்ணத்துக்கே இடமில்லை; அப்படி எண்ணுவோர்க்கு ஓர் அரிய விடயம் சொல்லிக் கொள்கின்றோம்;

”உன்னைக் குறை கூறுபவரின் குறைகளையும் அவதூறுகளையும் இகழ்ச்சிகளையும் நீ அவரிடமிருந்து வாங்காதே; எப்படி எனில், ஒருவர் உனக்கு ஒரு பொருளைத் தருகின்றார் அதனை வாங்க உனக்கு விருப்பம் இல்லை எனில் அதனை அவரிடமே இருக்கட்டும் என்று சொல்லி விட்டு நீ வாங்காமல் இருந்தால் அப்பொருள் அவரிடமே தங்கி விடும் அல்லவா? அதுவேபோல், பிறர் தரும் குறைகள் என்னும் பொருட்களையும் நாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்து விட்டால் அவைகள் நம்மிடம் இல்லாமல் தர நினத்தவரிடமே தங்கி விடும்”

இந்த விளக்கம் அண்மையில் தமியேன் ஒரு மனப்பயிற்சி ஆசானிடம் கற்றுக் கொண்ட விட்யமாகும்; இதனை தமியேன் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கத்தில் கொண்டு வந்தேன்; என்னே அற்புதம்! யாரை எல்லாம் எனக்கு எதிரியாகவே நினைக்க என் மனம் தூண்டியதோ அவர்களை எல்லாம் எனக்கு என்பால் மிகவும் அன்பொழுக அழைக்கும் நண்பர்களாகவே மாற்றி விட்டது. சத்தியம்; சாத்தியம்.

வாழ்க வளமுடன்;
சூழ்க பலமுடன்

KALAM SHAICK ABDUL KADER said...

\\புத்தகத்தைப் படித்துக் கிழிக்கின்றோம்;
நாட்காட்டியைக் கிழித்துப் படிக்கின்றோம்\\

முகநூலில் நான் கண்ட வரிகள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நிறைய விசயங்கள் அறிய இருப்பதை ஆரம்பம் அழகாய் சொல்கிறது.

அன்புடன் ஆவலாய் எதிர்பார்க்கிறோம்.

Anonymous said...

அன்பு மருமகன் சபீர் அபுசாருக்!

'ஒரு புத்தகம் பிறக்கிறது!' 'என்ற தலைப்பில் இந்த தொடர் வருவதால் மலேசியாவின் [மலேயா]வின் மொத்த முகமும் இதில் காண முடியாது. இன்ஷா அல்லாஹ்' You too Brutes 'என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத ஆவல். அது விரைவில் நிறைவு பெற அல்லாஹ்விடம் துவா செய்யவும். என் மீது நீங்கள் எல்லோரும் காட்டும் அன்புக்கும் பாசத்திற்கும் நான் என்ன நிகர்பலன் செய்யப் போகிறேன் என்பது தெரியவில்லை.

S.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்

Yasir said...

நிறைய விசயங்கள் அறிய இருப்பதை ஆரம்பம் அழகாய் சொல்கிறது.

அன்புடன் ஆவலாய் எதிர்பார்க்கிறோம்.

Thameem said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புள்ள வாப்பாவுக்கு

//புத்தகம் தொடர்பான கட்டுரை எழுத ஆசை வந்தது. இது ஒரு பேராசைதான்//

இது பேராசை இல்லை வாப்பா.தான் பட்ட கஷ்டத்தை எல்லாம் மற்றவர்கள் கஷ்டப்பட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நீங்கள் இந்த கட்டுரையை எழுதி இருக்குறீர்கள்.

A book of life.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
தாமதத்திற்கு மன்னிக்கவும். மந்திக்கு முந்தி எழுதிவிட்டேன். பிந்தி இதை எழுதுவதால் இது சிறந்த ஆக்கம் இல்லை என்பதாகாது( என்னிலைவிளக்கம்=தன்னிலைவிளக்கம்).ஒரு அனுபவம் புத்தக(ம்) முகத்தின் மூலம் பேசுகிறது!புத்தக புழு என்பார்கள் ஆனால் பாருக்காக்கா உண்மையில் புத்தக புழுவாய் இருந்துதான் சீவித்துள்ளார்கள்( நான் குறிப்பிடுவது சம்பாதிப்பு)"புத்தகம் விழுங்கி, செறித்து வரும் வார்தையெல்லாம் அனுபவமாய் இங்கே பதியப்படுகிறது"தொடருங்கள் உங்கள் பக்கங்களை!

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

அன்பு நெஞ்சங்களே!

ஒரு புத்தகம் பிறக்கிறது தொடருக்கு (முதல் அத்தியாயம்) உங்களின் அன்பான வரவேற்புக்கும் பாராட்டுக்கும் என் இதயங்கனிந்த நன்றியையும் சலாத்தையும். தெரிவித்துக் கொள்கிறேன். இன்சா அல்லாஹ் மீண்டும் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் தொடரில் சந்திப்போம்.

அன்புடன்.
S.முஹமதுபாரூக், அதிராம்பட்டினம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு