Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையின் முத்திரை - (Version - 2) 27

அதிரைநிருபர் பதிப்பகம் | May 24, 2015 | , ,

அருளாளன் அன்புடையோன்
'அல்லாஹ்'வின் ஆசியுடன்
அதிரையெனும் அழகூரின்
அருமைதனை அறியவைப்பேன்

அதிகாலை அழைப்பொலிகள்
அகஇருளை அதிரவைக்கும்
அறிவுடையோர் அணியணியாய்
'அவன்'இல்லம் அடைந்திடுவர்

இதயமெலாம் இதமாக
இயல்பாக இறைவணங்கி
இறைவேதம் இன்னிசைக்க
இளங்காலை இலங்கிடுமே

இத்தினமும் இனியென்றும்
இன்பமுற இருந்திடவே
ஈடில்லா இணைகளற்ற
ஈருலகின் இறையருளால்

ஊரோரம் ஊர்ந்தோடும்
ஊர்தியொலி உயிருசுப்பும்
ஊதலொலி ஊரெழுப்ப
உள்ளமெல்லாம் உவகையுறும்

ஊர்போன உறவினரும்
உடன்சென்ற உற்றாரும்
ஊணுருக உழைத்தலுத்து
ஊர்திரும்பும் உற்சாகம்

எடைகனத்தோர் எட்டுவைத்து
எதிரெதெரே ஏகிடுவர்
எட்டுமணி எட்டிவிட்டால்
ஏடெடுத்தோர்  எழுதச்செல்வர்

எத்தனையோ ஏழையெல்லாம்
எனதூரில் ஏற்றம்பெற்றார்
எண்ணப்படி எப்படிப்பும்
ஏற்றெழுதி எழுச்சிபெற்றார்

ஐவேளை ஐயமற
ஐயாமார் தொழுதிடுவர்
ஒற்றுமையாய் ஓரணியாய்
'ஒருவனிடம்' ஒன்றிடுவர்

ஓடைத்தண்ணீர் ஓட்டத்தைப்போல்
ஒழுக்கத்தையும் ஓம்பிடினும்
ஒவ்வொன்றாய் ஓய்ந்துவர
ஒவ்வாமை ஓங்கிடுதே

அத்தனையும் அங்குமிங்கும்
அலைகழித்து அழிந்துவர
அதிரையென்னும் பெயருண்டு
அஃதொன்றே மாற்றமில்லை

கண்குளிர கண்டுவந்த
கதிர்விளையும் கழனியெலாம்
கட்டடமாய்க் காட்சிதரும்
காசுடையோர் கைங்கர்யம்

கிணறூறும் கொள்ளையில்லை
கனிசுமக்கும் கிளைகளில்லை
கொத்துக்கொத்தாய் காய்காய்க்கும்
கொய்யாயில்லை குருவியில்லை

சாளரத்தின் சாரலிலே
சொக்கிநின்ற சந்தோஷம்
சடுதியிலே சிதைந்ததுவே
சோகமனம் சோர்ந்திடுதே

சாலையெலாம் சகதிமிக
செருப்பில்சிக்கி சேற்றுத்துளி
சிதறிஅது சிறுபுள்ளியாய்ச்
சட்டையிலே சாயமிடும்

தோப்புகளில் தொங்கிவந்த
தென்னங்குலை தடிமனற்று
தொற்றுநோயால் துவண்டுவிட
தேங்காய்கள் தினமுதிரும்

வழித்தடம்போல் வாய்க்கால்கள்
வளர்ந்துவிட்ட விஷக்கொடிகள்
வெப்பத்திலே வெடிப்புகண்டு
வற்றிவிட்ட வெறும்குளங்கள்

வெளிநாட்டில் வேலைதேடி
வாலிபத்தை வீணடித்து
வங்கிகளில் வட்டிகட்டி
வறுமையிலே வீழ்கின்றவர்

அதிரையுண்டு அழகுயில்லை
ஆட்களுண்டு அன்புயில்லை
இதயமுண்டு இரக்கமில்லை
ஈட்டியதை ஈவதில்லை

உறவுவுண்டு உணர்வுயில்லை
ஊருணியில் ஊற்றுயில்லை
எல்லாமுண்டு எதுவுமில்லை
ஏக்கமுண்டு ஏற்றமில்லை

எத்திசையில் சென்றாலும்
என்னுலகம் அதிரையன்றோ
என்னிறைவா எனதூரின்
எழில்மீட்டு எமக்கருள்வாய்

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

27 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

/இஸ்லாத்தில்ஜாதிஉண்டு;இல்லைஎன்பார்யாருண்டு? சஹனிலேசோறுண்டு;அங்கேயேஅதுஉண்டு// என்றவரிகளையும்போட்டிருந்தால்கவிதைக்கு1000/1010மார்க்கு. நம்மால்கொடுக்கமுடிந்தமார்க்குஅவ்வளவுதான்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuShahruk,

A nice and beautiful poem about our home town Adirampattinam. It brings the scenes and feelings of our town in me.

Jazakkallah khair

B.Ahamed Ameen from Dubai

அதிரை.மெய்சா said...

அதிரையினை அழகாக்கி
அணியணியாய் நெய்த கவி
சுளைசுளையாய் நீ தந்த சொற்க்களிலே தெரிகிறதே

மதுரையிலே கிடைக்காதது
அதிரையிலே கிடைத்திடுமே
மாமரத்து குயிலினோசை
மாறிமாறி ஒலித்திடுமே

ஆங்காங்கே உள்ளகுறை
அதன் ஏக்கம் புரிந்ததப்பா
அவையனைத்தும் நிறைவாக்க
அனைவர் கையும் சேரனுமப்பா

எக்குறைகள் இருந்தபோதும்
ஏற்றமானது நம் அதிரை
ஏட்டினிலே எழுதவேண்டும்
எட்டுத்திசையும் புகழ்மணக்க

வந்தாரை வாழவைத்து
வனப்பாக்கி அழகு பார்க்கும்
வறியோரை வாரியணைத்து
வயத்துப்பசி போக்கச் செய்யும்

ஆங்காங்கே குறையிருந்தும்
அதன் நிறைவு பல உண்டு
மார்தட்டிச் சொல்ல நாமும்
மாநகர்போல் வாழும் ஊரு



crown said...
This comment has been removed by the author.
crown said...


சகோ.மெய்சா!
அஸ்ஸலாமுஅலைக்கும்.அதிரைக்கு அதிவிரைவில் இன்னுமொரு முழுக்கவி உருவாகி வருகிறார்.வாழ்த்துக்கள்!

sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா, B.அஹமது அமீன், மெய்சா, க்ரவ்ன்:

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

sabeer.abushahruk said...

மெய்சா,

அருமையாக அருவியென கொட்டுகிறது. கட்டுப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. மொத்தமாக எழுதி முடி.

கலக்குறே.

Unknown said...

அன்பு,,, பாசம்,, ஏக்கம்,..விரக்தி... இதையெல்லாம் தாண்டிய ஆசை அனைத்தையும் ஒருசேர தந்த கவி... க்ரேட் கவி காக்கா

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.அவசரபட்டு ஏற்புரை எழுதிடாதிய அதுக்குள் மற்றொரு ஆக்கம் வெளியீடா? கொஞ்சம் நேரம் தாங்கயா?

அதிரை.மெய்சா said...

http://nijampage.blogspot.in/2012/12/blog-post.html?m=1. அன்பின் சகோ. Crown நான் அதிரையின் சிறப்பை பற்றி 3. வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதையின் Link ஐ அனுப்பியுள்ளேன் வாசித்துக்கொள்ளவும்

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி! அஸ்ஸலாமு அலைக்கும்.

இது இது இதுவேதான் இந்த வருடத்தின் சிறந்த கவிஞர் விருதை தங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

நேற்றைய நிகழ்வில் தங்களின் எளிமையும் இனிமையும் கலந்த வார்த்தைகளால் ஆன கவிதைகளைப் பாராட்டி பேராசிரியர் செய்து அகமது கபீர் அவர்கள் தங்களை அறிமுகப் படுத்தியபோது ஒரு உடன் பிறந்த சகோதரனின் உணர்வுடன் நான் அமர்ந்து இருந்தேன்.

ஒரு தம்பிக்கு நல்லாசிரியர் விருது! மறு தம்பிக்கு சிறந்த கவிஞர் விருது! . எனக்கோ வயிறு புடைக்க விருந்துண்ட மன நிறைவு.

வாழ்த்துக்கள்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். இதற்குதானா காத்திருந்தாய் மனமே! இத்தினமே என் மனம் பறக்கிறதே! சிறந்த கவி விருது!இவருக்கு வருது என்பதே சாலச்சிறந்தது வாழ்துக்கள்.!

crown said...

அதிகாலை அழைப்பொலிகள்
அகஇருளை அதிரவைக்கும்
அறிவுடையோர் அணியணியாய்
'அவன்'இல்லம் அடைந்திடுவர்
--------------------------------------------------------------------------
அக இருளை அதிரவைக்கும்! இந்த அதிரை கவியின் வார்தை அகலாது புது வெளிச்சம் பாய்சும் ... அருமை!

crown said...

ஊர்போன உறவினரும்
உடன்சென்ற உற்றாரும்
ஊணுருக உழைத்தலுத்து
ஊர்திரும்பும் உற்சாகம்
---------------------------------------------------------
மாசா அல்லாஹ் இவரிடம் வார்தை ஊற்றெடுத்து கவிதை வயல் ஓடி நல் மணிகளாய் கருத்து பெட்டகம் முழுவதும் நிறைகிறதே!

crown said...

எடைகனத்தோர் எட்டுவைத்து
எதிரெதெரே ஏகிடுவர்
எட்டுமணி எட்டிவிட்டால்
ஏடெடுத்தோர் எழுதச்செல்வர்
---------------------------------------------------------------
இவரின் எழுத்து நடை கம்பீரம்! இவரின் எழுத்து நடை பின்னே கணத்த இதயம் ஓடி வருகிறது இன்பத்தை அள்ளிக்கொள்ள!

crown said...

கண்குளிர கண்டுவந்த
கதிர்விளையும் கழனியெலாம்
கட்டடமாய்க் காட்சிதரும்
காசுடையோர் கைங்கர்யம்
----------------------------------------------------------
விளை நிலமெல்லாம் விலை நிலமாய்.... நியாயமான ஆதாங்கம்!பணம் அதிகமாகி நம் மவர் மனங்கள் மட்டும் தரிசாய் போனது!

crown said...

கிணறூறும் கொள்ளையில்லை
கனிசுமக்கும் கிளைகளில்லை
கொத்துக்கொத்தாய் காய்காய்க்கும்
கொய்யாயில்லை குருவியில்லை

சாளரத்தின் சாரலிலே
சொக்கிநின்ற சந்தோஷம்
சடுதியிலே சிதைந்ததுவே
சோகமனம் சோர்ந்திடுதே
--------------------------------------------------------
இமைச்சாளரத்தில் துன்ப சாரல் தூவல்!இதயம் கணக்கிறது,இயலாமை என்ன செய்ய?

crown said...

தோப்புகளில் தொங்கிவந்த
தென்னங்குலை தடிமனற்று
தொற்றுநோயால் துவண்டுவிட
தேங்காய்கள் தினமுதிரும்
---------------------------------------------------------
அது சரியான காலம் வரை மரத்தில் தேங்கா(து)விழுவதால்தான் தேங்காயா? தீக்காயத்தில் தேள் வந்து கொட்டியது போல் இயற்கை உரம் செத்து செயற்கை வருகையினால் எல்லாம் தேறாத காய்யாகி கசப்பான அனுபவங்கள்!

crown said...

அதிரையுண்டு அழகுயில்லை
ஆட்களுண்டு அன்புயில்லை
இதயமுண்டு இரக்கமில்லை
ஈட்டியதை ஈவதில்லை
----------------------------------------------------------
ஈட்டியதை ஈயாததால் சமுதாயத்தில் பலர் நெஞ்சில் ஈட்டியதில் துளைத்ததுபோல் வருமை எனும் ஓட்டை வழி எல்லாமே ரத்தகண்ணீர் வடிகிறதே!பலரிடம் இதயமுண்டு இறக்கம் இல்லை!அன்பு இறந்து பலர் இரந்து(பிச்சை எடுத்து )வாழும் நிலை!

crown said...

உறவுவுண்டு உணர்வுயில்லை
ஊருணியில் ஊற்றுயில்லை
எல்லாமுண்டு எதுவுமில்லை
ஏக்கமுண்டு ஏற்றமில்லை
------------------------------------------------------
ஆற்றிலும்,ஊற்றிலும், இதயகிணதிலும் ஈரம் வேண்டும் என கவிஞர் சொல்வது நம் இனத்தின் ஈன நிலைதனை வகுத்து கூறும் கவிதை இது. அல்லாஹ்விடம் மறுமை நாளில் எல்லாரிடமும் கேள்வி உண்டு!

crown said...

எத்திசையில் சென்றாலும்
என்னுலகம் அதிரையன்றோ
என்னிறைவா எனதூரின்
எழில்மீட்டு எமக்கருள்வாய்
----------------------------------------------------------
நேட்டிவ் அதிரையின் பாசிடிவ், நெகடிவ் விளக்கி சொல்லி விழிப்புணர்வு செய்த கவிதை படைத்த கவிஞருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி! எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!என்னிறைவா எனதூரின்
எழில்மீட்டு எமக்கருள்வாய்!என கேட்கும் எம் இதயத்தின் ஆசை வாய்க்குமா? பொய்க்குமா? தூஆ செய்வோம்!

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய இபுறாகீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…

அல்ஹம்துலில்லாஹ்.

இந்தக் குடமிட்ட விளக்கின் வெளிச்சத்தை நல்ல இடமிட்டுக் காட்டிவிட்டீர்கள். கண்ணுக்கெட்டா தூரத்தில் கடலில் பெய்த மழையின் ஒரு துளி நான்; கண்டெடுத்து முத்தென அறிவித்துவிட்டீர்கள். சமூக தொற்றுநோய் தாக்காமல் இனி, இந்தச் சிறு துளி, சொட்டு மருந்தென வருமுன் காக்க எழுதி உதவும். பொட்டு நிலவும் சுட்டெறிக்கும் கதிரும்கூட சிறு வடிவங்கள்தான்; நெருங்க நெருங்கவே அதன் நிசப் பரிமாணம் புலப்படும்.

நீங்கள் என்னை இழுத்துப் பிடித்துச் சென்று நிறுத்தி வைத்த மேடையை தக்க வைக்க தக்கவற்றையே எழுதுவேன், இன்ஷா அல்லாஹ்.

நன்றி.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

இந்த அங்கீகாரத்தை பிரகடணப்படுத்திய அதிரை நியுஸ் மற்றும் குழுவினருக்கும் என் நன்றியும் கடப்பாடும்

sabeer.abushahruk said...

தம்பி ஜாஃபர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகா வீடுகட்டி
தோட்டமிட்டு செடிவளர்த்து
ஜோராக குடியிருப்போம்"

என்ற பழைய பாடலின் ராகம் பொருந்துவதைக் கவனித்தீர்களா? உங்கள் குரலில் வெர்ஷன் ஒன்றை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை எனக்கு.

வெர்ஷன் 2: என்ன சேதி?

sabeer.abushahruk said...

அன்பு க்ரவ்ன்,

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

உங்கெளுக்கெல்லாம் எனக்கான விருது சரி என்று பட்டால் எனக்குச் சம்மதமே, நன்றி.

கருத்துத் தோரணங்கள் தங்கத் தமிழில் ஜொலிக்கின்றன.

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuShahruk,

My heartfelt congratulations for the award. Its the recognition for your efforts you have done so far and for the coming days' commitments as you have expressed.

Jazakkallah khair

B. Ahamed Ameen from Dubai.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuShahruk,

My heartfelt congratulations for the award. Its the recognition for your efforts you have done so far and for the coming days' commitments as you have expressed.

Jazakkallah khair

B. Ahamed Ameen from Dubai.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள சபீர் அஹமது அபுஷாரூக் அவர்களுக்கு தங்கள் கவிதைகள் நன்றாக உள்ளது. நான் ஒரு இசையமைப்பாளன். தங்கள் கவிதைகளை எனக்கு அனுமதி அளித்தால் இசைக்கோர்வை படுத்த விரும்புகிறேன். இன்ஷா அல்லாஹ் விருப்பம் இருக்கும் பட்சத்தில் zubair61u@gmail.com ல் தொடர்பு கொள்ளவும். என்னால் இசையமைக்கப்பட்டு, எழுதப்பட்ட ஷிர்கில்லாத பாடல் சௌதி அரேபியாவிலிருந்து கீழேயுள்ள லிங்கில் வெளியிடப்பட்டுள்ளது https://www.youtube.com/watch?v=zYluBPv-2kc காணவும்.
வஸ்ஸலாம்.
கூ.செ.செய்யது முஹமது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு