Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நமதூரில் புதியக் கலாச்சாரம் உருவாகுது! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 18, 2016 | , , , ,

பிஸ்மில்லாஹ்

நமதூரில் புதியக் கலாச்சாரம் உருவாகுது! 

மாப்பிள்ளைக் கடத்தல்

25, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அதிகமாக இரவுக் கல்யாணம் தான். திருமணம் நடந்தால், நிக்காஹ் மஜ்லிஸ் முடிந்து மணமகன் – மணமகள் கை இணைப்பு ஏற்படுத்திய பின் மணமகன் ரூமிலிருந்து வெளியே வந்து பந்தலில் இருக்கும் நண்பர்களைச் சந்தித்து நன்றி கூறி, பதிலுக்கு நண்பர்களும் வாழ்த்துக் கூறி சென்றிடுவர்.

'காலையில் ரெடியாக இரு' என மாப்பிள்ளையும் நண்பர்களை அன்பாக, அதிகாரமாகக் கூறிடுவார் "தோழன் சாப்பாட்டுக்கு". மாப்பிள்ளைத் தோழர் விருந்து என சகட்டுமேனிக்கு 3 நாட்கள், 5 நாட்கள் என வெவ்வேறு நண்பர் குழாம் சாப்பிட்டு வெளுத்துக்கட்டிவிட்டு வருவர். 
ஆனால், இன்றோ பகல்நேர,  மாலைநேரத் திருமணங்கள் தான் அதிகம். அதில் பல நன்மைகளும் உண்டு. குறிப்பாக இன்றைய காலத்தில் மாத்திரைகள் சாப்பிடுவோர் அதிகமாகிவிட்டனர். இவர்களுக்கு இரவுத் திருமணங்கள் மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் கடந்த விடுமுறையில் நடந்தத் திருமணங்களில் அதைக் கண்டு கொண்டேன். மக்கள் அவ்வாறுக் கூற எனது காதுகளினால் கேட்டேன். இரவு 9 மணி 10 க்கு திருமணம் வைத்தால் நாங்கள் எப்போது மாத்திரை சாப்பிட்டு, எப்போது உறங்குவது என்று கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

சரி, மேட்டருக்கு வருகிறேன்.

நிக்காஹ் மஜ்லிஸ் முடிந்து, மணமகன் மணமகள் கை இணைப்பும் முடிந்தது. பந்தலில் நண்பர்கள் காத்திருக்கின்றனர். மணமகன் வெளியே வந்து சலாம், நன்றி கூறி விடைபெறுவார்கள் என நாம் வழக்கம் போல் எதிர்பார்த்து இருந்தோம். வெளியே சென்று பந்தலில் இருந்த நண்பர்களுக்கு கைகொடுத்ததுதான் தாமதம் அப்படியே நைஸாக அழைத்து, காரில் ஏற்றி வெகுதூரம் (கடத்திச்) சென்றுவிடுகின்றனர். பெண் வீட்டார் மாப்பிள்ளை இதோ வருவார், இதோ வருவார் என ஏக்கத்துடன் சற்று மன சஞ்சலத்துடன் எதிர்பார்த்து இரவைக் கழிக்கின்றனர். என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ என்று பல நினைப்புகள். அந்த நண்பர்களுக்கு இப்படிக்கடத்திச் செல்வதில் அலாதியான பெருமகிழ்ச்சி. காரணம் மணமகனான நண்பனின் முதலிரவை வெற்றிகரமாக வெற்றிடமாக ஆக்கிவிட்டோம் என்று!

அடப்பாவிகளா அந்தப் பெண் என்ன பாவம் செய்தாள்? பெண் வீட்டார் என்ன தப்பு செய்தனர்? விசாரித்ததில் அவர்கள் தொண்டி, இராமேஸ்வரம் என வெகுதொலைவுக்குக் கடத்திச் சென்று, வெத்துப் பேசி, இரவைக் கழித்து ஊர் திரும்புகின்றார்களாம்.

கடந்த விடுமுறையில் ஊரில் இருந்தபோது ஒரு திருமணம் அதுவும் இரவில்! மாப்பிள்ளை வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. பெண் வீட்டாரோ மாப்பிள்ளையை, "வெளியே சென்று நண்பர்களுக்கு சலாம், நன்றி கூறி வாருங்கள்" என சொன்னபோது, பயம் கலந்த வார்த்தைகளில் மணமகனின் பதில் அதிர்ச்சியாக இருந்தது: "என்னைக் கடத்திச் சென்றுவிடுவர்" என்றாரே பார்க்கணும்! ஏன் என விசாரித்ததில் "பதிலுக்குப் பதில் - பதிலடி" காத்திருந்தது தெரிந்தது. ஆம், இவரும் பல திருமணங்களில் மணமான நண்பர்களை கடத்தல் காரியங்களில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமகின்னா பிற்பகல் தாமே வரும் என்பதிற்கிணங்க காத்திருந்தது கடத்தல் செய்தி.

இதற்கிடையில் நண்பர்கள் பொறுமையிழந்து வீட்டின் முகப்பு உள்வாசல் வரை வந்து கூச்சல். மணமகன் எங்கே? என்ற கேள்வி. "மேல்வீட்டில் இருக்கின்றார்" என்று சொன்னபோது உடனே யாவரும் மேலே சென்றுவிட எத்தனித்தபோது, "அங்கே பெண்கள் இருக்கிறார்கள்" என நாங்கள் சொன்னதும்; இல்லை, இல்லை நாங்கள் மேல்வீட்டிற்கு (மொட்டமாடிக்கு) போய்விடுகிறோம், மேலும் மாப்பிள்ளை வந்தால் தான் நாங்கள் வீட்டிலிருந்து கீழே இறங்குவோம் என Blackmail செய்துவிட்டனர்.

வேறு வழியில்லாமல் மாப்பிள்ளை தனது காக்காவுடன் மேலே சென்றால் கூத்தும் கூச்சலும். அப்போது நடு இரவு தொட்டுவிட்டது. அங்கே பேரம் நடக்கிறது. மாப்பிள்ளைக்கும் நண்பர்ளுக்கும்.

இதில் கொடுமை என்னவென்றால் வந்திருந்த நண்பர்களில் பலர் தாடி (Untrimmed Beard), தொப்பி அணிந்த முழு முஸ்லிம் உருவம். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கீழே இறங்குபவர்களாக இல்லை. "நாங்கள் கொஞ்ச நேரம் இவனுடன் பேசிவிட்டு, சின்ன டீ பார்டி முடித்துவிட்டுச் சென்று விடுகிறோம்" எனக் கூறி பொழுதைக் கடத்தினர்.

சற்று நேரம் கழித்து யாவருக்கும் இஞ்சி டீ ஆர்டர் வந்தது. சப்ளை முடிந்தது. அவ்வளவாக யாரும் எழும்புவது போல் இல்லை. பிறகு ஒரு நபர் கீழே இறங்கினார். இன்னும் சற்று நேரம் கழித்து ஓரிருவர் இறங்கினர். நேரம் நடு இரவைத் தாண்டிவிட்டது.

இவை யாருடைய பழக்கம்? யாருடைய கலச்சாரம்? சற்றுமுன் தான் "திருமணம் எனது வழிமுறை" என்ற ஹதீஸ் வரிகளைக் கேட்டுத்தான் வந்திருக்கிறோம் என்கிற உணர்வு கூட இல்லாமல், எல்லோருக்கும் இடைஞ்சல், சிரமம் தரக் கூடிய வகையில் இந்த நண்பர்கள் கூட்டம் செயல்படுகிறது.

வாலிபர்களே, இளைய தலைமுறையே! சிந்தியுங்கள். நமது பழக்க வழக்கம் மாற்றாருக்கு "தஃஅவா"-வாக அமைய வேண்டும். தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது. நமதூரில், நமக்கு அருகில் மாற்று மதத்தினர் இருக்கின்றனர் என்ற சிந்தை வேண்டும்.

இது போதாததற்கு, இப்போது வெடி வெடிக்கும் கலச்சாரமும் கொஞ்சம் தலைக் காட்டுகிறது. மணமகன் வீட்டிலிருந்து மாப்பிள்ளை கிளம்பிவிட்ட சிக்னல்: வெடி. பெண் வீட்டில் வந்து கை இணைப்பு முடிந்தவுடன் ஒரு சிக்னல் மறு வெடி. என்ன பழக்கம் இதுவெல்லாம்?

நமதூரில் பல ஆண்டுகளுக்கு முன் திருமணத்தில் வெடி வெடித்து பல தகாத சம்பவங்கள், ஏன் விபரீதமே நடந்திருக்கிறது. அத்தோடு வெடி கலாச்சாரம் ஓய்ந்து இருந்தது. இப்போது அது இலேசாகத் தலைக்காட்டுகிறது.

எல்லாம் வல்ல ரப்புல்ஆலமீன் நமது இளைஞர்களுக்கும் இளைய சமூகத்திற்கும் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.

குறிப்பு: ஊரில் நடக்கும் எல்லாத் திருமணங்களிலும் இவை நடப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் நடக்கிறது. இருப்பினும், இவை நம் சமூகத்திலிருந்தே துடைத்தெறியப் படவேண்டியவை என்பதால் இங்கே பதிவிடுகிறேன்.

அபூஹாமித்
அல்லாஹ் நாடினால் மீண்டும் சந்திப்போம்…

7 Responses So Far:

அப்துல்மாலிக் said...

எங்க காலத்தில் இதெல்லாம் இல்லை, இது என்னா புதுசா இருக்கு, எவனோ ஒருத்தன் ஆரம்பிச்சது உன் கல்யாணத்துலேயும் செய்றோம் பார் என்று திரும்ப திரும்ப இதை நடைமுறைப்படுத்துவது பெண்வீட்டாருக்கு மனவேதனையின் உச்சம், இப்போதான் கொஞ்சம் தோழன் சாப்பாடு கலாச்சாரம் குறைந்துவருது, இப்போ இதுவேறா

sabeer.abushahruk said...

செய்தி எனக்குப் புதிது.

உழைப்பில், எண்ணத்தில், முன்னேற்றத்தில் சமூக மேம்பாட்டில் புதுமைகள் நிகழ்த்த வேண்டிய கடமைப்பட்ட இளைஞர்கள் இதுபோன்ற கேலிக்கூத்துகளைப் புதிதுபுதிதாய்க் கொண்டு வருவது வேதனையளிக்கிறது.

N. Fath huddeen said...

தம்பி அப்துல்மாலிக்!

கருத்திட்டத்திற்கு நன்றி.

//25, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்...// இது இல்லை தம்பி. உங்கள் காக்காவுக்கு கல்யாணம் நடக்கும் போது இல்லை. வேண்டுமெனில் காக்கவிடம் கேளுங்கள், தெரியும்.

//பெண்வீட்டாருக்கு மனவேதனையின் உச்சம்,//

உண்மையான வரிகள்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் ! செய்தி எனக்குப் புதிது அல்ல.

நானே பலியாகி இருக்கிறேன். எனது முதல் திருமணம் இரவுத் திருமணம்தான். கல்லூரித் தோழர்கள், வெளியூர் உள்ளூர் நண்பர்கள் ஒன்று கூடி திட்டமிட்டு கோரசாக சப்தமிட்டு வெளியே வரச் சொல்லி அழைத்தார்கள். வந்தவனை விடாமல் பிடித்துவைத்தார்கள்.

நிறைவாக , ரூ. 300/= ( 1974 - ல் ) கைமாறி விடுதலையானேன். அந்த நினவு வருகிறது.

முறைஈடும் பணத்துக்காகவும் என் வாப்பா அவர்களிடம் வழக்கு சென்ற போது அவர்கள் சிரித்துக் கொண்டே இவன் யார் யாரை என்னவெல்லாம் செய்தானோ என்று சொல்லிக் கொண்டே பணம் கொடுத்தார்கள். ஆனால் நான் அப்படியெல்லாம் செய்தவனல்ல.

இப்போது தம்பி பத்ஹுத் தீன் குறிப்பிட்டு இருப்பவை - அதாவது மாப்பிள்ளையை இடம் விட்டுக் கடத்துவது - அநீதி . அக்கிரமம்.

"அணி"யாயம் .

( ஒரு கொசுறுச் செய்தி: எனது திருமண போட்டோ ஆல்பத்தில் தூணைப் பிடித்துக் கொண்டு பத்ஹுத் தீன் நிற்கிறார். )

crown said...

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமகின்னா (பிற்பகல்)முன் இரவில்(முதல் இரவில்) தாமே வரும்

N. Fath huddeen said...

Kaka pls send me that photo to my whtsapp. Jazakallah

N. Fath huddeen said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு