Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என்னங்க அநியாயம் இது ? 16

அதிரைநிருபர் பதிப்பகம் | July 24, 2011 | , , ,

ஊரு, உலகத்துலெ எவ்ளோ பெரச்சனையலுவோ தலெவிரிச்சி ஆடுது. வெலெவாசி ஒயர்வு, பெட்ரோல், டீசல் வெலெ ஒயர்வு, பள்ளி, கல்லூரிக் கட்டணம் ஒயர்வு, மின்கட்டண ஒயர்வு, மின் தடை, போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும், எங்கு பாத்தாலும் ஊழல், லஞ்சம், நில அபகரிப்பு, உணவுப்பொருட்களின் வெலெவாசி ஒயர்வு மற்றும் பதுக்கல், கடத்தல், சில மாநிலங்களில் பசி, பட்டினி, பஞ்சம், வேலெயில்லாத் திண்டாட்டத்துனாலெ அன்றாடம் சர்வசாதாரனமாக்கப்பட்ட கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஒரு புறம் தீவிரவாத தாக்குதல்கள் (காவித்தீவிரவாதமா? இல்லை கபோதி தீவிரவாதமா?தெரியவில்லை பட்டிமன்றத்தில் தலைப்பிட்டு விவாதிக்கப்பட வேண்டியவை) குழந்தைகள் கடத்தல், போலி சாமியார்களின் காம அட்டூழியங்கள், கருப்பு பண பதுக்கல், கள்ளச்சந்தை என்று நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் பெருச்சாலி போன்று ஆங்காங்கே மேய்ந்து/ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில்.

"நிமிசத்திற்கு எத்தனையோ லட்சங்கள் வருவாய் ஈட்டக்கூடிய, சிறுவயதிலிருந்து இந்திய அணியில் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு, சர்வதேச போட்டிகளில் விளையாண்டு பல கோடான கோடிகளையும், விலையுயர்ந்த பரிசுப்பொருட்களையும் சிறுவயதிலேயே சம்பாதித்து இன்று இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரன் என்றும் கிரிக்கெட்டின் கடவுள்(??)  என்றும் ஊராலும், உலகத்தாலும் புகழப்பட்டு நாட்டின் மொத்த ஊடகத்தின் கவனத்தையே தன் பக்கம் திருப்பி வைத்துள்ள "சச்சின் டெண்டுல்கர்" க்கு இந்தியாவின் உயரிய விருதான "பாரத் ரத்னா" விருது வழங்க வேண்டுமென மஹாராஷ்ட்ர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கச்சல் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி, நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சகமும் வரிந்து கட்டிக்கொண்டு அதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சிபாரிசு கடிதம் எழுதி அதை அப்படியே முன்மொழிந்து மத்திய உள்துறை அமைச்சகமும் இந்த விளையாட்டுத் துறையை பாரத ரத்னா விருது வழங்கும் பட்டியலில் உடனே சேர்க்கச்சொல்லி வலியுறுத்தி பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கின்றதன் அவசியம் தான் என்ன? அவசரம் தான் என்ன?

அவர் கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிப்புடன் சிறப்பாக விளையாண்டு நாட்டிற்கு நல்ல பெயரையும், புகழையும், பெருமையும் தேடித் தந்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லை தான். அவர் என்ன நாட்டுக்காக சும்மாவா விளையாண்டார்? ஒவ்வொரு போட்டிக்கும் பல கோடிகளை சம்பளமாக பெற்றும் அதற்கு மேல் விளம்பரத்தில் பல நூறுகோடிகளையும் சம்பாதித்தும் அல்லவா? அரங்கில் சிறப்பாக விளையாண்டார். நமக்கெல்லாம் விளையாட்டு அரங்கில் நுழைய இலவச டிக்கெட்டா கொடுத்தார்கள்? இல்லை தொலைக்காட்சியில் காண இலவச மின்சாரம் (!!!) தந்தார்களா ?

நாட்டை செழிப்பாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழே அன்றாடம் செத்து, செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தாய் மண்ணின் கோடான கோடிமக்களை கைப்பிடித்து மேலே கொண்டு வர முயற்சித்தாரா? அறிவியல் மற்றும் மருத்துவத்துறையில் சிறப்பான ஆராய்ச்சி செய்து அதை நாட்டிற்காக அர்ப்பணித்தாரா? தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மூலம் விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டாரா? இல்லை நாட்டின் கடும்குளிரும் குண்டு மழையும் பொழியும் எல்லையில் நின்று அந்நிய நாட்டு படையுடன் சண்டையிட்டாரா? அல்லது நாட்டிற்கு பெருமை மட்டும் சேர்த்து விட்டு ரோட்டோர குடிசையில் வாழ்ந்து வருபவரா? நல்லா வெளையாண்டார் என்பதற்காக அவருக்குத்தான் தக்க சன்மானங்களும், வெகுமானங்களும், பரிசுப்பொருட்களும், பண முடிச்சுகளும் ஊராலும், உலகத்தாலும் உடனுக்குடன் கொடுக்கப்பட்டு விட்டதே? அவருக்கு எப்படியாவது பாரத ரத்னா விருதை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று இராப்பகலாய் உறங்காமல் துடியாய் துடித்து வரும் மஹாராஷ்டிர முதல்வரும், நாட்டின் விளையாட்டு மற்றும் உள்துறை அமைச்சர்களும், பாரத பிரதமரும் அவர்கள் தங்கள் சொத்தில் ஒரு பங்கை அவருக்கு கொடுத்து அதை ஒரு பெரு விழாவாக எடுத்து மகிழ வேண்டியது தானே? யார் தடுத்தார்கள்? இல்லை வேண்டாம் என்றார்கள்? போட்டியில் நன்றாக விளையாண்டால் தலையில் தூக்கி வச்சி கொண்டாடுவார்கள். சரிவர விளையாட வில்லை எனில் தூக்கி எறிந்து கும்மியடிச்சி கேவலப்படுத்தி அட்ரஸில்லாமல் ஆக்கி விடுவார்கள்.

தமிழகத்தின் ஒரு கிராமத்தில் சொந்த வீடு கூட இல்லாத ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 1200க்கு 1171 மார்க்குகள் வாங்கி மாநிலத்திலேயே மூன்றாம் இடம் பிடித்து மருத்துவராக வேண்டும் என்ற தன் உயரிய கனவுடன் மருத்துவக்கல்லூரியில் இடமும் கிடைத்து மேற்கொண்டு அங்குள்ள கட்டணம் செலுத்த இயலாமல் அதை அப்படியே விட்டு விட்டு மேற்படிப்பெல்லாம் வீட்டின் பொருளாதார சூழ்நிலையால் தனக்கு ஒத்துவராது என்றெண்ணியவனாக தன் தந்தையுடன் ஒத்தாசையாக மண்வெட்டியுடன் வரப்பு வெட்ட கிளம்பி விட்டான் அந்த ஒரு இளைஞன். இவன் போல் எத்தனை லட்சம் இளைஞர்கள் நம் நாட்டில் உள்ளனர். இந்த வாலிபனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க பரிந்துரைக்கப்பட்டால் பாரத ரத்னாவிற்குத்தான் பெருமையாக இருக்குமே ஒழிய இந்த மாணாவனுக்கல்ல....(இப்படியாக மாணவனுக்குஎல்லாம் நம்மை கொடுக்கிறார்களே என்று அந்த பாரத் ரத்னா விருது பெருமைப்படும்).

சச்சின் டெண்டுல்கரின் மேல் நமக்கு எவ்வித பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவர் ஒரு மிகச் சிறந்த மட்டையடி வீரர் இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நாட்டில் பல பிரச்சினைகள் பூதமாக உருவெடுத்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இதெல்லாம் தேவைதானா? என்பதே கேள்வி. சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாட்டின் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வந்து அதை வைத்து ஊரறிய, உலகறிய ஒரு பெரு விழாவில் சச்சின் போன்ற ஏழைகளுக்கு வேண்டிய விருது கொடுத்து மகிழ்ந்தார்கள் என்றால் பரவாயில்லை.

அரசியல், புகழ், ஆட்சி, அதிகாரம் என்று கையில் வந்து விட்டால் உலக பொருளாதார மாமேதைகளும், புள்ளியல் மற்றும் கணித மேதைகளும், உலக வங்கியின் செயலாளராக பரிந்துரைக்கப்பட்ட நாட்டின் திட்டக்குழு வல்லுநர்களும் கூட கடைசியில் மழுங்கினிகளாகவும், மந்தாண்டைகளாகவும், சாதாரன மனிதர்கள் போல் ஆகி விடுவார்கள் போலும்......

இறைவா! நாம் பல்லக்கில் செல்ல விரும்பவில்லை; மாறாக நாலு பேர் எம்மை பார்த்து கேவலமாக எதற்கும் பல்லிளிக்க வைத்து விடாதே....

ஆதங்கத்தில் சாதாரன இந்திய மண்ணின் மைந்தனாக....

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

16 Responses So Far:

Yasir said...

சகோ.நெய்னாவின் ஆதங்கம் மட்டுமல்ல இது, நானும் சிந்தித்துக்கொண்டிருந்த ஆத்திரம்....
///தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மூலம் விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டாரா? இல்லை நாட்டின் கடும்குளிரும் குண்டு மழையும் பொழியும் எல்லையில் நின்று அந்நிய நாட்டு படையுடன் சண்டையிட்டாரா? அல்லது நாட்டிற்கு பெருமை மட்டும் சேர்த்து விட்டு ரோட்டோர குடிசையில் வாழ்ந்து வருபவரா?// இதனை மாமனிதர்களுக்கு அல்லவா...சிறப்பு செய்யவேண்டும்...கிரிகெட்டால் தரிகெட்டு போன மாணவர்கள்தான் அதிகம்....அரசு இது மாதிரி தவறான வகையில் பாரத ரத்னா கொடுத்து ஒரு கேவலமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கொஞ்சலாக எங்க வூட்டு பொடிசு கிட்டே ஒரு கேள்வி கேட்டேன் "சச்சின்"டா யாரு ? "தண்டுல்கர்"னா யாருன்னு ?

பட்டுன்னு பதில் வந்துச்சுங்க "சச்சின்" கையாளும் கால்களாகும் அடிப்பாராம் அதிலும் காமெடியும் செய்வாராம் ஆனால் "தண்டுல்கர்" மட்டையால் மட்டும்தான் அடிப்பாராம் !!

அப்போதாங்க புரிஞ்சுச்சு இரண்டுபேரும் தனித் தனி வேலை செய்றாங்கன்னு அப்படின்னா ஏனுங்க இரண்டு பேருக்கும் சேர்த்தா விருது கொடுக்க முட்டி மோதுதறாங்க ?

மெய்யாலுமே கொடுக்கவா போறாங்க !? அப்படின்னா எனக்கு யாரும் சிபாரிசு செய்றதுக்கு கொடி தூக்கிடாங்க அப்பு !! நாஞ்சும்மாதான் கெடக்கிறேன்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல தரமான தேசிய பத்திரிக்கையில் வெளிவரும் தலையங்க கட்டுரைக்கு இணையான No.1ஆதங்கம்.

அந்த மாநில அரசு சொல்வதற்காக எவ்வளவோ ஆக்கப்பூர்வமானதை எல்லாம் விட்டுவிட்டு விளையாட்டுக்கு போய் பரிந்துரை செய்வதைப் பார்த்தால், நம் மாநிலத்தில் கல்வியோடு அரசுக்கல்விதுறை விளையாடுகிறது என்று தெரிந்தும், கல்வி வல்லுநர்கள் கூட கடைசியில் மழுங்கினிகளாகவும், மந்தாடைகளாகவும், சாதாரன மனிதர்கள் போல் இருந்து அரசுக்கு ஜால்ரா போடுவதைப் போல் உள்ளது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி MHJ நான் முன்னரே சொல்ல் எத்தனித்ததை அப்படியே பிர்திபலித்து இருக்கிறீர் ! தாம் சொல்வதுபோல் இது தலையங்கமே ! ஏன் அந்த தரமான இணை இதழ் நம் அதிரைநிருபராகக் கூட இருக்கலாம்தானே !?

இந்த வராத் தலையங்கம் ! இதுவே...

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்
.
சகோ.நெய்னாவின் ஆதங்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

அதுலா ஈக்கட்டும் உங்களுக்கு ஒரு விசயம் தெரியாதா?

நம்ம நாட்டுலே உள்ள அம்புட்டு அரசியல் வாதியும் நம்ம நாட்டு மேலே கண்ணும் கருத்துமா ஈக்குறாங்க.எப்புடி தெரியுமா? மேலே சொல்லப்பட்ட அம்புட்டு விசயங்களும்.நம்ம நாட்டுல இல்லன்டா இந்தியாங்கிற பேரு இல்லாம போயிருமுலே! அது இல்லன்டு போய்ட்டா அரபு நாடுன்டு பேரு வந்துருமே! அதான்.

லெ.மு.செ.அபுபக்கர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இந்த வாரத் தலையங்கம் ! இதுவே...ஆம் காக்கா!
அதிரைநிருபராகக் கூட இருக்கலாம்தானே !? நிச்சயமாக!

Adirai Iqbal said...

முதலில் கிரிகெட்டையே தடை செய்ய வேண்டும் . இந்த விளையாட்டு மனித சக்திகளை வீணடிக்கிறது . ஆளும் வர்க்கங்களால் இது ஊட்டி வளர்க்கப்படுகிறது . ஏனென்றால் மக்களின் கவனங்களை அரசுக்கு எதிரான சிந்தனையிலிருந்து திருப்ப இந்த கிரிக்கெட் உதவுகிறது . மேலும் கோடிகணக்கான கருப்பு பணங்களை வெள்ளையாக்கவும் இந்த கிரிக்கெட்தான் உதவுகிறது . இந்தியாவின் விலைவாசி உயர்வு வலதுசாரி தீவிரவாதம் போன்ற முக்கிய பிரச்சினைகளிருந்து எளிதாக மக்களை திசை திருப்ப இது உதவுகிறது.

அபூ சுஹைமா said...

பாமரர்களின் ஆதங்கத்தை நயமாக வெளிப்படுத்தியுள்ள நெய்னாவுக்கு வாழ்த்துகள்!

அதிரைக்காரன் said...

சர்வதேச அளவில் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்கப் பட்டபோது, அதன்மீதான நன்மதிப்பு குறைந்தது.பாரத ரத்னா விருதை டெண்டுல்கர் மாதிரியான காசுக்காக மட்டையடிக்கும் விளையாட்டுப் புள்ளைக்குக்கொடுத்து அதன் மதிப்பையும் கெடுக்க சதி என்றே நினைக்கிறேன்.

அய்யா அரசியல்வாதிகளா! நாட்டின் கவுரவத்தோடு விளையாடாதிங்கய்யா!

இதை பதிவிட்ட நெய்னாவுக்கு அதிரை ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கிறேன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நல்லதொரு ஆதங்கம்
நாட்டின் மக்கள் மாறாத வரை
மக்களுக்கு சேவை செய்வேன்
என்று உறுதிமொழி கொடுத்த
மனசாட்சி இல்லாத அரசாங்கமும்??? மாறாது
கிரிக்கெட் என்பது சூதாட்டம் என்பது
உலகளவில் சிறு பிள்ளைக்கும் தெரியும்
பரீட்சை நேரத்திலும் விளையாட்டு தேதியை
மாற்ற முடியாது என்று சொல்லிய கொள்ளைக்கார
கும்பலின் விளையாட்டுதான் கிரிக்கெட்
நமது சமுதாய இளைஞர்கள் இந்த கிரிக்கெட்டிற்கு
அடிமையாகி விட்டதை கண்டு திருந்தவும்,
திருத்தவும் முடியாமல் இருப்பது வேதனையே.

வாழ்த்துக்கள் சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது.

sabeer.abushahruk said...

நெய்னாவின் ஆதங்கம் மிக நியாயமானதே. ஒரு நல்ல பேச்சாளரின் மேடைப்பேச்சு கேட்ட உணர்வு.

இவனுகளுக்குத்தான் அர்ஜூனா விருது இருக்கே பிறகென்ன?

crown said...

sabeer.abushahruk சொன்னது…

நெய்னாவின் ஆதங்கம் மிக நியாயமானதே. ஒரு நல்ல பேச்சாளரின் மேடைப்பேச்சு கேட்ட உணர்வு.

இவனுகளுக்குத்தான் அர்ஜூனா விருது இருக்கே பிறகென்ன?
---------------------------------------------------------------
அஸ்ஸலாமுலைக்கும். சச்சின் என்னும் மட்ட(மானவன்)யாளருக்கு,(அவரின் சில பல காரியங்களை பிறகு தேவைப்படும் போது பகிர்ந்து கொள்கிறேன்)அர்ஜுனா விருது கொடுக்காததற்கு காரணம் சச்சின் மகன் பெயர் அர்ஜுன் என்பதாலா? மகன் பெயரில் அவார்ட் கொடுக்க கூடாதா தந்தைக்கு? இப்படியெல்லாம் யோசிக்கும் சாதாரண அப்பாவி அதிரை வாசி தஸ்தகீர்.இதுக்கு யார் பதில் சொல்றாங்களோ அவங்களுக்கு நானும் பட்டம் தருவேன்(சகோ.யாசர் முதல ஓடி வர மாதிரி தெரியுதே!).

crown said...

அதிரைக்காரன் சொன்னது…

சர்வதேச அளவில் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்கப் பட்டபோது, அதன்மீதான நன்மதிப்பு குறைந்தது.பாரத ரத்னா விருதை டெண்டுல்கர் மாதிரியான காசுக்காக மட்டையடிக்கும் விளையாட்டுப் புள்ளைக்குக்கொடுத்து அதன் மதிப்பையும் கெடுக்க சதி என்றே நினைக்கிறேன்.

அய்யா அரசியல்வாதிகளா! நாட்டின் கவுரவத்தோடு விளையாடாதிங்கய்யா!

இதை பதிவிட்ட நெய்னாவுக்கு அதிரை ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கிறேன்.
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். எப்படிடா மாப்ள நான் நினைச்ச மாதிரியே அச்சு பிசகாம எழுதியிருக்கே? உன்ன மாதிரி எழுதவும் என் மூளை வேலை செய்கிறது!!!!.(உன் மூளைக்கு என் மூளை எந்த மூலைக்கு?)

N.A.Shahul Hameed said...

Dear friends Assalamu Alaikkum!
விளையாட்டுக்குத்தான் கேல்ரத்னா விருது கொடுக்கிறார்களே பின் எதற்கு பாரத ரத்னா?
N.A.Shahul Hameed

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் நெய்னா முகம்மது,

எனக்கு மாலை நேரத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமிருந்தாலும், கிரிக்கெட் ஹீரோக்களின் மேல் எந்த மரியாதையுமில்லை.

விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு, குறிப்பாக கிரிக்கெட் நேர விரையம் செய்யும் பொழுதுபோக்கு. விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும். எத்தனையோ ஜீவன்கள் இந்திய விடுதலைக்காக தங்களின் உடமைகள், உயிர்களை இழந்தார்கள், அவர்களுக்கு விருது கொடுத்து கவுரவித்தால் இந்தியர்கள் பெருமை படுவார்கள். அதை விடுத்து , சச்சின் அல்ல வேறு யாருக்கும் பாரத ரத்னா விருது கொடுத்தாலும், அந்த பாரத ரத்னா என்ற பெயர் கொண்ட விருது மட்டுமே பெருமை பட்டுக்கொள்ளலாம், உண்மை இந்தியர்கள் அல்ல.

Well done MSM Naina Mohamed.

பணிச்சுமையுடன் கூடிய மின்னஞ்சல் சுமை, அதான் உடன் கருத்திட முடியவில்லை நெய்னா..

அப்துல்மாலிக் said...

இந்திய நாடே கிரிக்கெட்க்கு அடிமைபட்டு கிடக்கும்போது அதில் நிறைய சாதித்தவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்தாலும் தப்பில்லை. மற்றவிளையாட்டைவிட இதுக்குமுக்கியத்துவம் கொடுப்பதால்தான் இன்றைய சிறுவர்களும் இந்த விளையாட்டையே தேர்வு செய்கிறார்கள், புட்பால் / ஹாக்கி என்ற விளையாட்டெல்லாம் எந்த மூலையில் இருக்கு என்பது கேள்விக்குறி, எனவே பெற்றோர்களும் கிரிக்கெட் தவிர மற்றவை கற்றுத்தர ஆரவம் காட்டுவதில்லை, எந்தளவு வெற்றிப்பெற்றாலும் (ஒலிம்பிக்கில் கோல்ட் வாங்கினாலும்) அந்த நிமிஷத்துடன் மறக்கும் நாம் ஐ.பி.எல் இல் சப்ஜூட்டாக இருப்பவனைக்கூட என்றுமே மறப்பதில்லை, இதனால்தான் கிரிக்கெட் என்றும் ஜெயிக்கிறது...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு