Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

திரும்பிப் பார்க்கிறேன் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | April 14, 2016 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்...

குறிகிய கால விடுமுறையில் ஊர் சென்று வந்த பின் உள்ளத்தில் உதித்த சில மலரும் நினைவுகளை இங்கு ஒரு சிறு கட்டுரையாக உங்களின் பார்வைக்கு விருந்தாக வழங்கிட விரும்புகிறேன்.

வல்ல இறைவன் நாட்டத்தில் சுழலும் வாழ்க்கைச்சக்கர சுழலில் சுழற்றப்பட்டு நாம் இன்று எங்கோ சிகரத்தின் உச்சிக்கோ அல்லது பள்ளத்தாக்கின் பாதாளத்திற்கோ வீசப்பட்டிருந்தாலும் நாம் கடந்து வந்த அப்பாதையை சற்று திரும்பிப்பார்க்க (சிந்திக்க)கடமைப்பட்டுள்ளோம். அது கரடுமுரடான முட்கள் நிறைந்த பாதையாக இருந்தாலும் சரி அல்லது மிருதுவான வெண்கம்பளம் விரிக்கப்பட்டு சாமரம் வீச அதன் மேல் நடந்து வந்த பாதையாக இருந்தாலும் சரியே.

நமதூர்க்குளங்கள் தண்ணீர் ததும்பி இருந்தும் குளித்து கும்மாளமிட ஆட்கள் இன்றி ஆதரவின்றி ஏங்கி நிற்கும் இக்காலத்தில் கடும் கோடைகாலங்களில் நீர் வற்றிக்குறைந்திருந்தும் அதில் குளித்து கும்மாளமிட்டு குதூகளித்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

கொள்கைக்கொரு தலைவனாய், கூட்டமாய் பல கட்சிகளுக்கு கொடி பிடிக்கும் நம் சமுதாயத்தின் இன்றைய அவல நிலையில் ஓரிரு கட்சிக்கு மட்டுமே கொடிபிடித்து நாரேத்தக்பீர் முழங்கி வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.
அரவணைக்க கம்பன் ரயிலின்றி அன்றாடம் அதன் ஓலமின்றி அமைதியாய் விதவையாகிப்போன இன்றைய நமதூர் ரயில் நிலையம் அன்று குதூகலமாய் ஓடி வந்த அந்தக்கம்பன் எக்ஸ்பிரஸும் அதன் முன் வரும் ஓசையையும் நம்மை வழியனுப்ப வந்த உறவினர்களையும் நினைவால் திரும்பி பார்க்கிறேன்.

அன்று ஊரின் எங்கோ ஒரு மூலையில் ஆக்கிரமிப்பு செய்து வந்தாவரத்தானாய் குடிவந்த சர்க்கரை நோயும், புற்று நோயும் இன்று பரவலாக எல்லாத்தெருக்களிலும் அழையா விருந்தாளியாய் ஊடுருவி அப்பாவிக்குடும்பங்களுக்கு வேட்டு வைத்து வேடிக்கைப்பார்ப்பதை எண்ணி வருந்தி ஆரோக்கியமாய் நம்மக்கள் வாழ்ந்து வந்த அந்த காலத்தை ஆசையுடன் திரும்பி பார்க்கிறேன்.

இன்று மாடிவீடுகளில் பல கோடிப்பிரச்சினையில் சிக்கி மனவேதனையுடன் வாழ்ந்து வரும் நம்மக்கள் ஓட்டு வீட்டில் வாழ்ந்து வந்து ஒய்யாரமாய் சந்தோசத்துடன் காலம் கழித்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

பல கோடிகளைக்காண தென்னந்தோப்புகளெல்லாம் மனைகளாகி தெருக்களாகிப்போன இக்காலத்தில் தென்னந்தோப்பின் தென்றல் காற்றும் அதன் மோட்டார் பம்புசெட் சப்தமும் தென்னந்தோகையில் வந்தமர்ந்த சாய்ங்கால கொக்கு, மடையானையும், சிறகடித்து சந்தோசமாய் பறந்து செல்லும் வண்ணத்துப்பூச்சியையும், திரைமறைவில் தானே பாடி மகிழும் குயிலின் அக்கால பாட்டின் இனிமையையும் திரும்பி பார்க்கிறேன்.

இன்று நம் வாழ்வாதாரத்தேவைக்காக தொலைதூரப்பயணங்கள் பரந்து விரிந்து உள்ளங்கள் ஏனோ சுருங்கிச்சுண்ணாம்பாகியதாய் உணர்கிறேன்.

ஊர், குடும்பப்பெரியவர்களின்றி வெறிச்சோடிக்கிடக்கும் இன்றைய நம் வீடுகளும், தெருக்களும் ஒரு காலத்தில் அவர்களின் ஆட்சியும், அதிகாரமும், அறிவுரையும் நம்மேல் செங்கோலாற்றி நம்மை செம்மைப்படுத்திய அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

மாலை நேர விளையாட்டுக்களை தான் விரும்பிய திடலில் நண்பர்களுடன் விளையாடி மகிழ திடல்களெல்லாம் வீட்டு மனைகளாகிப்போய் ஏங்கித்தவிக்கும் இளைஞர்கள் அதிகம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஒரு காலம் நினைத்த இடத்தில் விளையாடி மகிழ திடல்கள் ஆங்காங்கே நம்மூரில் பரந்து கிடந்து அதை பயன்படுத்திய அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

கடைத்தெருவுக்கு ஐந்நூறு ரூபாய் கொண்டு சென்றாலும் விரும்பியதை வாங்கி வர முடியாத இக்கால சூழ்நிலையில் வெறும் ஐம்பது ரூபாயில் பை நிறைய வேண்டியதை வாங்கி கையில் மிச்சக்காசுடன் வீடு வந்து சேர்ந்த அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

புதிய, புதிய நோய்நொடிகளும் அதைக்கண்டு பிடிக்க பல மருத்துவமனைகளும் அதன் தொழில்நுட்ப உபகரணங்களும் நாள் தோறும் ஆங்காங்கே உருவாகி வரும் இக்கால சூழ்நிலையில் வெறும் காய்ச்சல், தலைவலி, பல்வலி, வயிற்றுவலி மட்டுமே நம் பெரும் வியாதிகளாக இருந்து வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

பொருளாதார தேவைக்காக பெயர் தெரியாத மேற்கத்திய நாடுகள் நம் மக்கள் சென்று வரும் இக்கால சூழ்நிலையில் சவுதி, துபாய் மட்டுமே நம் தொலைதூர நாடாக இருந்து வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

நம் சமுதாயத்தின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பல அரசியல் கட்சிகளில் சேர்ந்து அந்தந்த தலைவர்களை சந்தோசப்படுத்த (வென்றதும் பிறகு அவர்கள் நமக்கு ஆப்படித்து அல்வா கொடுப்பது வேறு விசயம்) என்னென்னெமோ செய்து வரும் சொல்லி வரும் இக்காலத்தில் ஓரளவு பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு நம் சமுதாயத்திற்கு ஆதரவளித்த அந்த கட்சிக்கொடியை வண்ணப்பட்டங்களாய் செய்து வானில் உயர பறக்க விட்டு உள்ளத்திற்குள் யாருக்கும் தெரியாமல் மகிழ்ந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

கடைத்தெரு மீன் விலைகளெல்லாம் விண்ணைத்தொடும் இக்காலத்தில் கொட்டும் மழை நீரால் குளம் உடைந்து தெருக்களில் வீதி உலாவரும் சிறு மீன்களை பிடித்து மகிழ்ந்த அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

நமதூரில் ஏசிகள் பொருத்தப்படாத வீடுகளே இல்லை அது இல்லாமல் வெயில் காலத்தை கடத்த இயலாது என்று சொல்லி அது ஒரு அத்தியாவசிய சாதனமாக ஆகிப்போன இக்காலத்தில் தன் வீட்டு கொல்லை மரங்களே இயற்கை ஏசியாய் அன்றாடம் குளிர்காற்றை இலவசமாய் மின் தேவையின்றி, துண்டிப்பின்றி நமக்கு அள்ளித்தந்த அந்த நாட்களையும், புகை போடப்பட்ட மண் பானையில் இயற்கையின் குளிரூட்டப்பட்ட தாகம் தீர்க்கும் தண்ணீரின் இனிமையையும் இன்று திரும்பி பார்க்கிறேன்.

சின்ன, சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் இரு மனம் இணைந்த அத்திருமண வாழ்வை விவாகரத்து மூலம் நிறந்தரமாய் பிரித்து முடிவுக்கு கொண்டு வருவது பரவலாக அதிகரித்து இருக்கும் இன்றைய சூழ்நிலையில் எத்தனையோ குடும்பங்களில் பல பெரும் பிரச்சினைகள் பூதாகரமாக வந்து சபை முன் நின்றாலும் அதையும் பெரியவர்கள் தன் சமயோசித முடிவால் இரு குடும்பங்களுக்கும் சுமூக உறவை ஏற்படுத்தி இல்லற வாழ்வை இனிதே தொடர அவர்கள் வழிவகுத்த அந்த நாட்களையும் முடிவுக்கு வந்த தலாக் என்ற செய்தி எங்கோ, எப்பொழுதோ கேட்டதாக இருந்த அந்த நாட்களையும் திரும்பி பார்க்கிறேன்.

எதிர்பாராமல் வரும் பெரிய நோய்நொடிகளுக்கு நம் மக்கள் எங்கெங்கோ சென்று உயர் சிகிச்சையும், பண செலவும், நேர விரயமும் செய்து வரும் இக்காலத்தில் எந்த நோய் வந்தாலும் தன் வீட்டு பெரியவர்களின் கைப்பக்குவத்திலும், செந்தூரம் கொண்டு சிகிச்சையளித்து இறைவன் நாட்டத்தில் சுகமடைந்து வாழ்ந்து வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

வண்ண,வண்ண கார்களும், வகை,வகையான இரு சக்கர வாகனங்களும் நம் தெருக்களில் பவனி வரும் இன்றைய சூழ்நிலையில் மாட்டு வண்டியும், குதிரை வண்டியும் தன் சலங்கை ஒலி எழுப்பி சந்தோசமாய் தெருவில் ஓடி திரிந்த அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

கோடைகால கடும் வெயிலின் வெப்பத்தில் உள்ளத்தாகம் தீர்க்கும் அந்தக்கார்கால மழையின் இதமான சில்லென்ற அந்தச்சாரல் காற்றை தர்பூசணியின் சிகப்பு நிறத்தில் கம்பளம் செய்து அந்த நினைவுகளை வரவேற்று திரும்பி பார்க்கிறேன்.

மனிதர்கள் மரணித்திருக்கலாம் ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தின் நல்ல பல நினைவுகள் இன்னும் மரணிக்கவில்லை.

இன்னும் நம் வாழ்வில் திரும்பி பார்க்கப்படவேண்டிய, சிந்தித்து செயல் பட வேண்டிய எத்தனையோ காரியங்கள் நடந்தேறி இருக்கலாம். ஊர் சென்று வந்ததால் என்னால் ஞாபகத்துக்கு வந்ததை இங்கு வழங்கி இருக்கின்றேன். இதுபோல் உங்கள் வாழ்விலும் பல திரும்பி பார்க்கப்படவேண்டியவைகள் இருக்கலாம். அதை நீங்கள் உங்களின் பின்னூட்டம் மூலம் தொடரலாமே.... (வாப்ச்சாவிடம் பெருநாள் காசு வாங்கிய அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன் என்று யாராலும் ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்..)

இன்ஷா அல்லாஹ் மற்றொரு கட்டுரையில் சந்திப்போம்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது

புகைப்படங்கள்: சகோதரர் ஜாஹிர் ஹுசைன் மற்றும் அதிரைநிருபர் குழு

3 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கடந்த காலங்களில் நம் வாழ்வில் சில கஸ்டங்களும், சறுக்கல்களும்,துன்பங்களும், துயரங்களும் ரயில் நிலையத்தில் சற்று நின்று கடந்து செல்லும் ரயில்கள் போல் கடந்து எம் வாழ்வில் கடந்து சென்றிருந்தாலும் இன்றைய சூழலோடு ஒப்பிடுகையில் அக்காலம் ஓர் பொற்காலமாகவே உள்ள ஊஞ்சலில் ஒய்யாரமாய் ஊஞ்சலாடுகிறது. காலத்தை படைத்து அதை பக்குவமாய் கடத்தும் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் ஓங்குக.

கடந்த காலத்தை சுறுக்கமாய் வர்ணிக்கும் என் இக்கட்டுரையை இன்று திரும்பி பார்க்கிறேன்.

பதிவிட்ட அ.நி. குழுமத்திற்கும்,மூத்த அன்பு சகோதரர்களுக்கும்,வாசக நண்பர்களுக்கும் என் இனிய சலாமும்,நன்றிகளும்.

sheikdawoodmohamedfarook said...

அறுவடை காலங்களில் வைக்கோல் திறைகளை தலையில் சுமந்துகொண்டு ராஜாமடம் *கேட்வாசல்' வழியாக அணியணியாய் வந்த பெண்களை இன்று காணோம்.எங்கே போனார்கள்? வைக்கோல் திறை ஒன்று முக்கால் ரூவாதான்.

sheikdawoodmohamedfarook said...

அன்றைய வீட்டுவாசல்களில் தலைகடையும் சாய்ந்துகொள்ள திண்டும் இருந்தது.அவையெல்லாம் எங்கேகாணோம்.வந்த மனுஷருக்கு கொடுக்க வீட்டுக்கொருவெத்தலைபாக்கு பெட்டி இருந்தது.இப்போகாணோமே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு