Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"எண்பது, தொன்னூறுகளில் என் ஊர்" 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2015 | , , , , , , ,



பழசை தனிமையில் நினைத்துப் பார்த்து நெஞ்சுக்குள் நமக்கு நாமே அவ்வப்பொழுது சிலாகித்துக் கொள்வதை அப்படியே இல்லா விட்டாலும் கொஞ்சமேனும் எழுத்துருவாய் இங்கு கொண்டு வந்து கிறிக்கிக் காண்பிப்பது என்பது சிரமம் தான். இருப்பினும் முயற்சித்துப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் அவை இங்கே கொஞ்சம் கிறுக்கி காண்பிக்கப்பட்டுள்ளன.

காலை வேளை சுபுஹுத் தொழுகைக்கு பின் ஊரில் நட்சத்திரங்கள் தன் இரவு டூட்டி முடிந்து மெல்ல,மெல்ல வானில் விடை பெற்று மறைந்து போகும். அந்த நீல வானமும் கொஞ்சம்,கொஞ்சமாய் சிவந்து, வெளுத்து விடிய ஆரம்பிக்கும். அதற்கு மரங்களில் அடைக்கலம் புகுந்திருக்கும் காக்கை, மைனா, சிட்டுக்குருவிகள் சுறுசுறுப்பாய் காச்மூச் என்று கத்தி அன்றைய பொழுதை அதற்கேயுரிய பிரத்யேக குரலில் விடியும்முன் வரவேற்கும்.

இவ்வளவு என வரையறுத்து இன்று கேட்டு வாங்கப்படும் பள்ளிக்கூட டியூசன் ஃபீஸ் போல் அல்லாமல் அன்று தானாகவே காலை குர்'ஆன் பள்ளி ஒஸ்தாருக்கு அன்பளிப்பாய் வாரமொருமுறை கொடுக்கப்படும் கம்சுகாசு (கமீஸ் வியாழன்).

நாளை கம்பனில் அயல்நாடுகளிலிருந்து வரும் உறவுகளை இறக்க இன்றே குதிரை வண்டிகள் முன்பதிவு செய்து வைக்கப்படும். மாமா கொண்டு வரும் அந்த கைக்கடிகாரம், மிட்டாய் சாமான்களுக்காக உற்சாகத்தில் அன்றைய இரவே உள்ளம் உறங்க மறுக்கும்.

காலை நாயக்கர் கடை இட்லி,வடை,சட்னி,சாம்பாருக்காக அணியணியாய் பெரியவர் முதல் சிறியவர் வரை அக்கடை நோக்கி நடக்க ஆரம்பிப்பர். குளத்தில் அல்லது தோப்பு போரில் சென்று நன்கு குளித்து வந்த பின் வீட்டில் வேறு காலை பசியாற தயாராக இருக்கும். அருணா பார் சோப்பு, அண்ணா பார் சோப்பும், குருவி சோப்பும் ஒன்றுக்கொன்று சந்தையில் போட்டி போடும்.

பத்திரிக்கைகளை நன்கு படித்து நாட்டு நடப்பு தெரிந்து கொள்வதற்கும் அதனுடைய இலவச வாராந்திர இணைப்புகளை முதல் நபராக பெறுவதற்கும் அப்படியே கடைத்தெருவுக்கும், மையின் ரோட்டிற்கும் கால்கள் அதுவே அழைத்துச்செல்லும்.


பால்காரன் மணியோசையுடன், புதினமாய் வந்திறங்கிய பாக்கெட் பாலும் வீடு வீடாய் கலியாண பத்திரிக்கை போல் போடப்படும் காலம்.

வீட்டுக்கிணற்றில் தனியே குளிர்ந்த நீரில் குளிக்க விருப்பமில்லாமல், நண்பர்களுடன் வேட்டி,டவலு,சோப்பு எடுத்துக்கொண்டு அதை நன்கு ஆலுபரோட்டா போல் மடித்து தெருக்குளக்கரை சென்று அதன் குருவிக்கூடு போன்ற குழிக்குள் திணித்து நண்பர்களுடன் படிக்கரையில் இறங்கி தண்ணீரை மெல்ல,மெல்ல உடல் சிலிர்க்க விளையாட்டாய் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு தற்காலிக அந்த குளிருக்கு தீர்வு காண தொபுக்கடீர் என குளத்திற்குள் குதிக்கும் அந்த உள்ளம் உற்சாகமடைந்து அதற்கு சான்றாக ஆழத்திற்கு சென்று மண் அள்ளி வந்து நண்பர்களிடம் காட்டி மகிழும்.

ஆசையாய் கலர்,கலர் கோழிக்குஞ்சுகளை கடைத்தெருவிலிருந்து வீட்டிற்கு வாங்கி வந்து இசட் பிரிவு பாதுகாப்பு போல் அதை தொட்டு,தொட்டு பாதுகாப்பாய் என்னதான் வளர்த்து வந்தாலும் செத்த நேரம் கண் அசரும் சமயம் அந்த காக்கச்சி கோழிக்குஞ்சை கீச்,கீச் சப்தத்துடன் கவ்விக்கொண்டு போகும் சமயம் அதைக் காணும் எம் கண்களில் கண்ணீர் தானாகவே வந்து அந்தக்காக்கச்சியை கண்டபடி வீடே திட்டித்தீர்க்கும்.

வேட்டிக்குள் அரிசியை வீட்டினருக்கு தெரியாமல் எடுத்து வந்து தெரு ஆச்சிக்கு கொடுத்து வேண்டியதை வயிறு நிரம்ப உண்டும்,திண்டும் மகிழும் பழக்க,வழக்கம் சரியானதாக இல்லாவிட்டாலும் அதை நினைக்கும் இன்று அது என்னவோ ஒரு சாதனையாகவே தெரிகிறது.

தெருவிலும், வீடுகள் இருக்கும் சந்துகளிலும் வீட்டின் அன்றாட சமையலுக்கு அடுப்பெரிக்க வாடியிலிருந்து வந்திறங்கிய தேங்காய் மட்டைகளும், பூக்கமளைகளும், வீடு கட்ட வந்திறங்கி இருக்கும் ஆற்று மணலும் குவியலாய் ஆங்காங்கே கிடக்கும். அந்த ஆற்று மணலே இரவில் சாகவசமாய் உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிக்க பேருதவி செய்யும். அதில் மணல் வீடுகள் கட்டி, களிமண்ணும் எடுத்து விளையாடச்சொல்லும். அப்படியே இரவு அம்புலிமாவை பார்த்து யாரோ சொன்ன "அவ்வையார் அங்கு உரல் இடிக்கும் கதை" நினைவுக்கு வரும். அப்படியே வர இருக்கும் வாழ்க்கைத்துணை பற்றி வெட்கமாய் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் சிற்றோடை போல் ஓசையின்றி அந்த ஆசையும் அதுவாய் ஓடும்.

அன்றைய சைக்கிள் கடைகளெல்லாம் இன்று எப்படி எமக்கு கண்கொள்ளாக்காட்சி தரும் வண்ண,வண்ண பி.எம்.டபுள்யூ, ஆடி, மெர்சிடஸ் கார்களின் ஷோரூம்கள் போல் ஆசையாய் காட்சி தரும். அதில் வயது, உயரத்திற்கேற்ற கால், அரை, முக்கால், முழு வண்டிகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும். மணி வாடகை, நாள் வாடகைகள் தேவைக்கும் வசதிக்கும் தகுந்தார்போல் பெயரும், நேரமும் குறிப்பிட்டு எடுத்து உபயோகிக்கப்படும் அதற்கேற்ற வாடகையும் வசூலிக்கப்படும்.

இன்று வாட்ஸ்'அப் போல் அன்று வால்டீப்பு பஞ்சர் பற்றி அதிகம் பேசப்படும். காரணம் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் சைக்கிள் பயன்படுத்தப்பட்டது.

மாமா கொண்டு வந்து தந்த சீக்கோ, கேசியோ வட்ட, சதுர கைக்கடிகாரங்களின் கண்ணாடிகளில் கீரல் விழுந்து பழசாகி விடாமல் இருக்க கடைத்தெரு வாட்ச் கடைகளில் விற்கும் கலர்,கலர் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டி மகிழும் காலம் அது.

வரும் பெரிய நோய்நொடிகளுக்கெல்லாம் ஒரு ஆட்டோ வாங்கும் செலவை வைக்கும் இன்றைய ஸ்கேன், ரத்த பரிசோதனைகளின்றி மீராசா, ஹனீபு, இபுறாகிம், ராஜ் டாக்டர்கள் போடும் ஒரே ஊசியில் அல்லாட காவலில் எல்லாம் ஓடிப்போகும்.

அடிக்கடி மின் தடை வருவதாலும், அரை கெரண்டு பிரச்சினைகளாலும் அயல்நாட்டு பெட்டி பிரிப்பில் அந்த சிகப்பு, பச்சை எமர்ஜென்சி லைட்டு அவசியம் இடம் பெறும்.

யாரோ வாங்கி ஓட்டி வந்த டி.வி.எஸ் மோட்டார் சைக்கிளை தட்டுத்தடுமாறி ஓட்டி பின் அதை ஒரு பெரும் சாதனை போல் மனதிற்குள்ளும், வெளியிலும் உள்ளம் சிலாகித்துக் கொள்ளும் காலம் அது.

கம்பூண்டும் வீட்டு, தெரு அப்பாக்களின் அதட்டல்களில் 144 தடை உத்தரவு போட்டது போல் சில சைத்தானிய சேட்டைகள் தன் வாலை பயந்து சுருட்டிக்கொள்ளும்.

ஒரு வகுப்பில் முன்னேறிய சீனியர் மாணவர்களிடம் பாதி விலைக்கு புத்தகங்களும், கோனார் உரையும் வாங்கி படிக்கும். அதன் மூலம் காசு பணம் கொஞ்சம் மிச்சம் செய்யும்.

பள்ளிக்கூடத்தில் ஏதோ தவறுக்காக பெற்றோரை கூட்டி வரச்சொன்ன ஆசிரியருக்கு தெரியாது என எண்ணி தெருவில் சென்ற தெரிஞ்ச ஆளைக்கூட்டி வந்து சிலவேளை தப்பித்தும் சிலவேளை மாட்டிக்கொண்டும் சங்கடப்படும்.

முட்டலாம்பு வைக்கும் வீட்டு மாடாக்குழிகளெல்லாம் இன்று புது வீடுகளாய் ஐஃபோன் சார்ஜ் பண்ணும் அலமாரிகளாக மாறிவிட்டன.

அன்று எட்டணா (50 காசு) காசுகளெல்லாம் நமக்கு இன்றைய எட்டு கிராம் தங்க காசுகள் போல் ஜொலிக்கும். அதை வைத்து வேண்டியதை கடையில் வாங்கி திண்டு மகிழும்.

ஒரு கிலோ ஆட்டுக்கறி எம்பது ரூபாய் என்ற கறிக்கடைகாரரிடம் அந்த கடையில் எழுபது ரூபாய் தானே என வாக்கு வாதம் செய்து பேரம் பேசும்.

கடைத்தெருவில் வாங்கும் முப்பது ரூபாய்க்கு மீனும், பத்து ரூபாய்க்கு காய்கறிகளும் வீட்டின் பகல், இரவு உணவுக்கு போதுமானதாக இருக்கும். (இன்று கருவாப்பிள்ளையும், பச்சமிளகாயுமே பத்து ரூபாய்க்கு தர மறுக்கின்றனர் காய்கறிகடைக்காரர்கள்).

குழல் பணியானும், நானா ஹத்தமும், அரியதரமும், வெங்காயப்பணியானும், பூவடையும், முட்டாசும், மைசூர் பாக்கும், சாதா, பீட்ரூட் ஹல்வாவும் சம்மந்திப்புறங்களை சமாதானப்படுத்த அதிகம் புழங்கும் அக்கால திண்பண்டங்கள். அதில் குறை வந்தால் சம்மந்தமே மாறிப்போகும் கொடுமை.

பாஸ்போர்ட் கிடைத்து விட்டால் அதுவே ஒரு நல்ல அரபு நாட்டு நிறுவனத்தில் சம்பளம், சகல வசதிகளுடன் வேலைவாய்ப்பு கிடைத்து விட்டது போல் சந்தோசப்பெருமூச்சு விடும். பாஸ்போர்ட் காப்பிகள் எடுக்கப்பட்டு அங்குமிங்கும் அயல்நாட்டு சொந்தபந்தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.அதற்கு அக்கால தோனா.கானாவின் நடமாடும் தபால்துறையே பேருதவி புரியும்.

கருத்த நெகடிவ் ஃபோட்டோக்கள் வீட்டு பத்திரம் போல் பாதுகாக்கப்படும். அதிலிருந்து தேவைக்கு கழுவி காப்பிகள் போட்டப்படும்.

அப்பொழுது குளோபல் வார்மிங் (புவி வெப்பமாகுதல்), நீர் மேலாண்மை பற்றியெல்லாம் அதிகம் பேசப்படவில்லை. காரணம் உலகம் அதன் உண்மை வடிவில் இருப்பதாகவே நம்பப்பட்டது. அதற்கான அதிக கவலைகள் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆகாச வானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமியின் குரல் எல்லோருக்கும் பரிச்சயப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. மாநிலச்செய்திகள் சரியான நேரத்தில் கேட்டு ஊர், உலக நடப்புகள் அறியப்பட்டன. புயல்களுக்கு தான் விரும்பிய பெயரூட்டி மகிழாத காலம் அது. காற்றின் வேகத்தின் அளவும், அது கடந்து செல்லும் ஊருமே அன்று வானிலை ஆய்வு மையத்தால் ரேடியோ மூலம் எச்சரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். பழுதடைந்த ரேடியோக்களும், எமர்ஜென்சி லைட்டுகளும் உடனே சரி செய்ய கொடுக்கப்பட்டன. அது பற்றி அடிக்கடி விசாரிப்புகளும் இருந்து வந்தன.

அந்த கறுத்த விரல் விட்டு எண்ணை சுற்றி வேண்டியவரை அழைக்கும் தொலைபேசி கொஞ்சம் நாகரிகமாற்றத்தில் புதுப்பொலிவு பெற்று வெள்ளை நிறத்திற்கு மாறி சந்தைக்கு வந்தது. டிரங்கால் புக் பண்ணுவது கொஞ்சம் முன்னேறி எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி என பரிணாமம் பெற்று தொலைத்தொடர்பு வளர்ந்தது.

டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிள் இருந்தாலே அந்த வீடு நிச்சயம் ஓரளவுக்கு வசதியான வீடாகவே கருதப்பட்டு வந்தது.

ஹஜ்ஜுக்கு போய் வந்த சொந்த,பந்த உறவுகள் ஆசையாய் தந்த ஜம்ஜம் தண்ணீரும், பேரிச்சம்பழமும், கண்ணுக்கு சுருமா, தசுமணி, மக்கத்து மோதிரம், தொப்பி, அத்தரு போன்றவை அக்காலத்தின் பெரும் பொக்கிஷங்களே. அதை அணிந்து மகிழ்வதால் ஆனந்தமே.

மாவில் சல்லடை, இடியப்ப உரல், பொரிச்ச முறுக்கு, ஐஸ் பம்பாய் (மூங்கிலில் தலையாட்டி பொம்மையுடன் சுற்றி சிறுவர்களின் கையில் ரயில், தேள், என செய்து விற்கப்படும் மிட்டாய்), ஷிஃபா மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு பிரபல இருதய மருத்துவ நிபுணர், உள்ளாங்குருவி, கொக்கு,மடையான், பழைய இரும்பு, பிளாஸ்டிக் வாங்குறது, அருவா, கத்தி சாணெ புடிக்கிறது....பாத்திரம் அடைக்கிறது..குடை ரிப்பேர் பண்றது..பழைய கட்டில், அலிமாலு, பத்தாயம் வாங்குறது..நிலக்கடலை வண்டியின் சப்தம்..பழைய செண்டு பாட்டுலு வாங்குறது...ராலு, மீனு.... போன்ற வியாபார, வர்த்தக தனி நபர், வாகனங்களின் சப்தங்கள் மாறி, மாறி கேட்டுக்கொண்டே இருக்கும் ஊர் முச்சூடும்..... இன்று கண்ட, கண்ட சாமான் சட்டிகளுக்காகவும், கெட்டுப்போக இருக்கும் பழங்களுக்காகவும் உறங்கும் நேரத்தில் கூட ஊருக்குள் வந்து சப்தமாய் ஒலி பெருக்கியில் கூச்சலிட்டு செல்கின்றனர். எல்லோரையும் எரிச்சலடைய வைக்கின்றனர்.

அன்றைய ஆண்,பெண், சிறுவர்,சிறுமியர் தெருவில் விளையாடிய விளையாட்டுக்களை பட்டியலிட்டால் அதுவே ஒரு பெரும் கட்டுரையாக உருவெடுக்கும். அதை படித்த பின் உள்ளமோ இங்கு வந்து "உச்சி உருட்டு" விளையாடும்.

இன்று எங்கு பார்த்தாலும் மனித நேயத்தை குழிதோண்டி புதைக்கும் மத துவேசமும், கேன்சர் போன்ற ஆட்கொல்லி நோய்களும் ஒன்றோடொன்று ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் போல் வெகுவாக மிருக பலத்துடன் வளர்ந்தும் தன் விளையாட்டை சந்துபொந்துகளிலும் அரங்கேற்றி வருகின்றன. பலிகடாக்களாய் அப்பாவி பொது ஜனங்கள். சிறுவர்களைக்கூட ஈவு இரக்கமின்றி ரத்த வெள்ளத்தில் தன் அகோர ஆயுதத்தால் சாய்த்து விடுகின்றன. (சமீபத்திய முத்துப்பேட்டை சிறுவன் மீதான தாக்குதல் சம்பவமே சான்று).

இது போல் இன்னும் ஏராளமாய் எப்படியோ இருந்து வந்த என் ஊர் இன்று எப்படியோ மாறிப்போய் விட்டது. அதைக்கண்ட, அனுபவித்த எத்தனையோ என் மக்களும் அவரவர் போய்ச்சேர வேண்டிய இடமும் போய்ச்சேர்ந்து விட்டனர் நமக்கு முன்னரே.

இங்கு விடுபட்ட பழசுகளை உங்கள் பின்னூட்டம் மூலம் தொடரலாம் நீங்கள்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது
படங்கள் : பாரிவள்ளல் [நன்றி]

2 Responses So Far:

sabeer.abushahruk said...

ஊர் நெனப்பு நெஞ்சைக் கிள்ளுகிறது.

டிபிக்கல் எம் எஸ் எம் பதிவு

Unknown said...

எண்பது தொண்ணூறு

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு