எங்கள் அனைவருக்குமே பேரதிர்ச்சிதான், என்னுடைய முதலாளிக்கு தகவல் கொடுத்தேன் அவரும் இதனை அவரின் மனைவிக்கு தெரிவித்து விடு ஆனால் நீ ஃபோனில் பேச வேண்டாம் ஃபிலிப்பினோ மொழி பேசும் உன்னோட அசிஸ்டெண்டை பேசச் சொல் என்றார். அதற்கான காராணம் எடுத்துச் சொல்லும்போது அவர்கள் மொழியில் தகவல் சொன்னால் அவர்களை சமாதானப் படுத்தலாம் என்றார்... ஆனால், மாறாக அங்குதான் வெடித்தது வினை !
அவரின் மனைவி திருப்பி கேட்டிருக்கிறார் “நேற்று வரை நன்றாக இருப்பதாக டாக்டர்களும் நர்சுகளும் சொன்னார்கள் ஏன் கம்பெனியில் இருப்பவர்களும் சொன்னார்கள் திடீரெண்டு என்ன ஆச்சு ? ஏன் உங்கள் கம்பெனி முதலாளி எனக்கு இந்த தகவலை சொல்லாமல் வேறு ஒருவரிடம் சொல்லச் சொல்கிறார்” என்று வெடித்தார், கதறினார்.
அந்த களோபரத்தினை தொடர்ந்து நானும் 10 நிமிடம் கழித்து ‘சார்ல்டன்’ மனைவியிடம் பேசினேன், முடிந்தவரை சூழலை எடுத்துச் சொன்னேன் அவரால் இழப்பை பொறுக்க முடியாமல் வார்த்தைகளை கொட்டினார் பொறுமை காத்தேன்.
இதற்கு முன்னர் எங்கள் கம்பெனியில் நிகழ்ந்த ஐந்து இறப்புகளை சந்தித்து இருந்ததால் எவ்வாறான நடைமுறைகளை கையாள வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அலைச்சல் குறைவே இருந்தாலும் மன உலைச்சல் அதிகம் இந்த விஷயத்தில்.
நானும் கம்பெனி பி.ஆர்.ஓ.வும் பெல்ஹோல் மருத்துவமனைக்கு தேவையான டாகுமெண்ட்களை சேகரித்துக் கொண்டு மதியம் 02:30 மணிக்கு சென்றடைந்தோம், அதற்குள் அவரின் உடலை ஐஸ்பெட்டியில் வைத்து பூட்டி விட்டனர். உடணடியாக பார்க்க வேண்டும் என்றதும் எங்களுக்கு திறந்து காட்டினார்கள்.
போலீசுக்கு மதியமே தகவல் கொடுக்கப்பட்டது அவர்களும் பார்த்து விட்டுச் சென்றிருக்கின்றனர், எங்களின் வருகைக்காக காத்திருந்ததால் மீண்டும் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் எங்களிடம் அடையாளம் சரியா ? இவர்தானா என்று உறுதி செய்து கொண்டதும் அருகில் இருக்கும் பரஹா அரசு மருத்துமனைக்கு வரச் சொன்னார்கள், பெல்ஹோலில் கொடுத்த இறப்பு அறிவிப்பு சான்றிதழுடன் அங்கே சென்றதும் அவர்கள் வழக்கமாக கொடுக்கும் (அரபி மொழியில்) கிளியரன்ஸ் லெட்டரை தயார் செய்து தந்தார்கள். அதற்கு முன்னர் உடலை எங்கு அனுப்ப இருக்கிறோம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். (அதில் பெல்ஹோல் மருத்துவமனைக்கு, ஃபிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு, இறப்பு / பிறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்திற்கு, துபாய் ஹெல்த் அத்தாரிட்டி சோனாப்பூர்க்கு, அடுத்து ஏர்லைன்ஸ்க்கு)
பெல்ஹோல் மருத்துவமனையில் அவர்களுக்கான போலீஸ் லெட்டரைக் கொடுத்ததும், அலுவலகத்திற்கு செல்லுங்கள் என்றனர் அங்கே சென்றதும் ஐ.பி.பில்லிங்க் செக்ஷனுக்கும் செல்லுங்கள் என்றனர் (இன் பேஷண்ட் பில்லிங்). அனைத்து முஸ்தீபுகளையும் தாண்டி அரை மணிநேரம் காக்க வைத்த அவர்கள் 68 பக்கங்கள் அடங்கிய பிரிண்ட் அவுட்டை எடுத்து கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அது என்ன வென்று பார்க்கலாம் என்று ஒவ்வொன்றாக திருப்பிப் பார்த்தால், அவர் அங்கு அட்மிட் ஆனதிலிருந்து ஐஸ் பெட்டிக்குள் அடைக்கும் வரையிலான பில்.
தொகை மிகப் பெரியதாக இருந்தது, ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகள் கேட்டுக் கொண்டே அந்த பில்லிங்க் ஸ்டாஃப்போடு பேசிக் கொண்டிருக்கும்போதே நர்ஸ் வந்தார் "சீக்கிரம் பணத்தை செலுத்தி விட்டு கிளியரன்ஸ்ஸை எடுத்துக் கொண்டு எம்.ஐ.சி.யூ.வுக்கு வாருங்கள்” சென்று சொல்லிவிட்டுச் சென்றார்.
கூட்டிக் கழித்து இன்சூரன்ஸ் அப்ரூவல் செய்தது போக மீதம் இன்னும் திர்ஹம் 9,400 செலுத்தி விட்டால் கிளியரன்ஸ் தருவோம் என்றார், சரி இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று அந்த தொகையை கட்டிவிட்டு மாளிகைக் கடை சிட்டு போல் ஒரு பேப்பரில் எழுதி கொடுத்தார் ‘ஒகே’ என்று அதில் அவரின் கையெழுத்தும் அந்த மருத்தவமனையின் தலையெழுத்தையும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
அந்த துண்டுச் சீட்டை எடுத்துக் கொண்டு எம்.ஐ.சி.யூ.க்கு சென்றதும் 'ஜஸ்ட் வெயிட்” என்றார்கள் காத்திருந்தோம். 'சார்ல்டனின்' உடமைகளை ஒவ்வொன்றாக பிரித்து பிரித்து எழுதிக் கொண்டு தனித் தனி பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்தார்கள். எங்கே கிளியரன்ஸ் என்றதும், காத்திருங்கள் போலீஸ் ஆம்புலன்ஸை அழைத்திருகிறோம் என்றனர். எனக்கோ அதற்குமேல் பொறுமை காக்க முடியவில்லை "இறப்புக்கான காரணம் - என்ன வென்று சர்டிபிகெட் தருவதற்கு ஏன் இந்த இழுத்தடிப்பு என்று சத்தம் போட்ட சிறிது நேரத்திலேயே எல்லாமே ரெடி என்றனர்.
மீண்டும் போலிஸுக்கு தகவல் கொடுத்து அவர்களும் வந்தனர் ஆம்புலன்ஸோடு (ஏன் தகவல் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை) அவர்கள் வந்ததும் நேரடியாக போஸ்ட்மார்ட்டம் செய்யும் கிஸ்ஸஸ் மருத்துவமனைக்குத்தான் எடுத்து செல்வார்கள் என்று எனக்கு தெரியும், இருந்தாலும் இது மருத்துவமணையில் இயற்கை(!?) மரணம் ஏன் போஸ்ட்மார்ட்டம் என்று ஆட்சேபனை தெரிவித்தேன் அப்போதுதான் போலீஸ் மீண்டும் முதல் மரண அறிவிப்பு சான்றிதழை மீண்டும் வாசித்து பார்த்தார் அவரும் நான் சொல்வதையே சொல்லிவிட்டு போலீஸ் ஆம்புலன்ஸில் எடுத்து செல்ல மாட்டோம் முனிசிபாலிட்டி ஆம்புலன்ஸில்தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர்.
பெல்ஹோல் மருத்துவமனை அலுவலர்களோ எங்களிடம் ஒரே ஒரு ஐஸ் பெட்டிதான் இருக்கிறது இடமில்லை எப்படியாயினும் இன்றே பாடியை எடுத்துச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினர். நாளை வரை இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னேன் காலையில் Death Certificate இறப்பு சான்றிதழ் பெற்றதும், கான்சுலேட் என்.ஓ.சி.யும் பெற்று அதன் பின்னர் பாடியை சோனாப்பூருக்கு எடுத்துச் செல்கிறோம் என்றேன். பாடி இங்கு இருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நீங்கள் சார்ஜ் கட்டணும் என்றானர். நாங்களும் சரியென்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம் அன்று இரவு 10:30 இருக்கும்.
அடுத்த நாள் பிப்ரவரி 24ம் தேதி, காலை 07:30 மணிக்கு துவங்கியது அன்றைய அலைச்சலின் அடுத்தக்கட்டும், நானும் என்னுடைய கம்பெனி பி.ஆர்.ஓ.வும் முதலில் இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு அல்பர்ஹா கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்குச் சென்றோம் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அங்கே ஒரு மணி நேரத்தில் வேலைகள் முடிந்தது. அதற்கிடையில் சார்ல்டன் மனைவிக்கும் குழந்தைக்கும் விஷா அப்ளை செய்ய நண்பரின் டிரவால்ஸில் ஏற்பாடு செய்துவிட்டு நகர்ந்தோம்.
கிடைத்த இறப்புச் சான்றிதழ் அரபியில் இருப்பதால் அதனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய மற்றொரு இடத்திற்கு சென்று அதனையும் பெற்றுக் கொண்டோம். பிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு சென்றோம் திர்ஹம் 100 கட்டி அவர்களிடம் ஒரு NOCஐ பெற்றுக் கொண்டதும், பாஸ்போர்ட்டையும் உடணடியாக கேன்ஷல் செய்து (பாஸ்போர்ட்டின் அட்டை முதல் இரண்டு பக்கங்களில் ஓட்டை போட்டு) கொடுத்தார் அந்த ஃபிலிப்பினோ ஆபிசர்... !
அங்கிருந்து நேராக அல்முசினா / சோனாப்பூர் என்ற இடத்தில் இருக்கும் துபாய் ஹெல்த் அத்தாரிட்டி மருத்துவமனைக்குச் சென்று அங்கே பாடி ஸ்டோரேஜுக்கு இடம் இருக்கிறதா என்று விசாரிக்கச் சென்றோம் (அங்கு இடம் இல்லை என்றால், கிஸ்ஸஸில் இருக்கும் போலீஸ் மார்சுவரியில்தான் இடம் பார்க்கனும்). நல்ல வேலை இடமிருந்தது, அங்கிருந்து அனுமதி வாங்கிக் கொண்டு முனிசிபாலிட்டி ஆம்புலன்ஸுக்குரிய தொகையை அங்கேயே கட்டிவிட்டு மீண்டும் பெல்ஹோல் மருத்துவமனைக்கு வந்தோம்.
நேரம் மதியம் 03:30 மணி, நாங்கள் மருத்துவமனையை அடைந்த அரை மணிநேரத்தில் ஆம்புலன்ஸும் வந்தது அடுத்து என்ன பாடியை ஆம்புலன்ஸில் ஏற்றி அல்-முஹ்சினா / சோனாப்பூர் மார்சுவரிக்கு அனுப்ப வேண்டும். ஆனால், மருத்துவமனை பெண் அலுவலர் மீண்டும் ஓடி வந்தார் பாடியை ரிலீஸ் செய்ய ஸ்டோரேஜுக்கு பணம் கட்ட வேண்டும் அதன் பின்னர்தான் ரிலீஸ் செய்வார்கள் என்றார் (என்னடா கொடுமையிது !) வேறு வழி !?
முந்தைய நாள் (அதாவது அனைத்து தொகையும் செட்டில் செய்த பின்னர்) இரவு 07:30 மணியிலிருந்து அடுத்த நாள் மாலை 04:00 மணிவரை ஒரு மணிநேரத்திற்கு திர்ஹம் 100 என்று நன்றாகவே கணக்கு செய்து கட்டச் சொன்னார்கள், அங்கே திர்ஹம் ஐம்பது குறைவாக இருந்தது அந்த ரிசிப்டில் டிஸ்கவுண்ட் திர்ஹம் 50/= (ஸ்பெஷல்) கையில் எழுதிக் கொடுத்தார்.
அங்கிருந்து பாடியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் கிளம்பியது மாலை 5:00 மணியாகிவிட்டது. மீண்டும் ஜெபல் அலி அலுவலகம் வந்து அடுத்த நாட்கள் செய்ய வேண்டிய பணிகளை நெறிப்படுத்தி விட்டு வீட்டுக்கு வந்தேன் இரவு 10:30 மணி.
அடுத்த நாள் ஃபிப்ரவரி 25ம் தேதி, விசா கேன்சலேஷன் 09:00 மணிக்கே செய்து கொண்டு அவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு, நேராக பிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு சென்று அங்கே அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுத்து விட்டு அவரது மனைவிக்கும் மகனுக்கும் ஏற்பாடு செய்திருந்த விஷாவுக்கும் NOC வாங்கி விசாவை பிலிப்பைன்ஸுக்கு அனுப்பிவிட்டு காத்திருன்தோம் ஃபேமிலி வருகைக்காக.
பிலிப்பைன்ஸில் இருக்கும் பயணச் சடங்குகளை முடித்துக் கொண்டு 27ம் தேதிதான் சார்ல்டன் மனைவி மட்டும் வந்தார். அன்று மதியம் 2:00 மணிக்கு அவரை அழைத்துக் கொண்டு மார்சுவரிக்கு சென்று இறந்தவரின் உடலை பார்க்கச் சென்றோம். அவர் இறந்தவரின் (சார்ல்டன்) உடலை கட்டிப் பிடித்து நிறைய ஃபோட்டோ எடுத்துக் கொண்டார் (விளக்கம் மிக நீண்டதாக கொடுத்தார் ஃபோட்டோக்களை ஏன் எடுத்தேன் என்று). அன்று மாலையே அவரை ஜெபல் அலிக்கு அழைத்து வந்து அவரின் கணவருடைய உடமைகளை அவரை வைத்தே பேக் செய்து மொத்த 7 பாக்ஸ் மொத்தம் 382 கிலோ அவரே அனைத்து பெட்டிகளிலும் அவரது முகவரியை எழுதினார்.
அடுத்த நாள் 09:00 மணிக்கு அவரை எங்களது தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அவரது கணவருக்கு சேர வேண்டிய அனைத்து வகையான செட்டில்மெண்டை பணமாகவே கொடுத்து விட்டு கையெழுத்தும் வாங்கிக் கொண்டோம். அன்றே அவர் மீண்டும் மருத்துவம் செய்த டாக்டரை சந்திக்க வேண்டும் என்று அடம் பிடித்தார் அவரை பெல்ஹோல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று டாக்டரை பார்க்க வைத்து (அது ஒரு பெரிய கதை) அவரை அங்கிருந்து டாக்ஸியில் அனுப்பி விட்டு நான் வீடு திரும்பும் போது மணி இரவு 8:00.
சனிக்கிழமை மார்ச் 2 2013, சார்ல்டன் மனைவி திரும்பிச் செல்வதற்கான டிக்கெட்டை ரீகன்பாஃர்ம் செய்து விட்டு (மார்ச் 3ம் தேதி காலை 10:00மணிக்கு) அந்த டிக்கெட் நகலை எடுத்துக் கொண்டு மீண்டும் சோனாப்பூர்.
அங்கே பாடி பேக்கிங்கிற்கும் அவர்களின் சேவைக்கான கட்டணம் திர்ஹம் 1010/- (மூன்று நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் ஊசி, மருந்து தெளிப்பு) மற்றும் பெட்டிக்கு (மரப்பெட்டி) திர்ஹம் 1,500/- என்று கட்டணங்களை செலுத்திவிட்டு எல்லாம் ரெடியாக பகல் 01:30 மணியாகிவிட்டது. அடுத்து ஆம்புலன்ஸ் (மீடும் திர்ஹம் 210/- மார்சுவரியிலிருன்து எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ (துபாய் கார்ஜோ வில்லேஜுக்கு) எடுத்துச் செல்ல கட்டணத்தையும் செலுத்தியாகிவிட்டது.
ஆம்புலன்ஸ் அரைமணி நேரத்திற்குள் பாடியை எமிரேட்ஸ் கார்கோவில் இறக்கி வைத்து விட்டு சென்றது. அடுத்து என்ன நேரடியாக அங்கே இருக்கும் போலிஸ் அலுவலகத்தில் அவர்களுக்கு தேவையான ஆவணங்களை கொடுத்து விட்டு, NOC (ஸ்டாம்புதான்) அடித்துக் கொண்டு, மீண்டும் பாடி வைக்கப்படிருந்த அந்த மேற்கூறையுடன் இருந்த பக்கவாட்டில் திறந்த வெளித் திண்ணைக்கு வந்து அங்கிருந்த எமிரேட்ஸ் ஸ்டாஃபிடம் அனைத்து ஆவணங்களை காட்டியதும் அவர் பாடிக்கு எடை போட்டார். அப்புறம் அதனை ஸ்கேனிங்க் உள்ளே அனுப்பிவிட்டு எடையை எழுதி சீல் அடித்து தந்தார்.
ஸ்கேனிங் உள்ளே சென்றதும் அங்கே உள்ளே இருந்த போலீஸ் அந்தப் பெட்டியை சரிபார்த்து உள்ளே இருப்பது அவர்தானா என்று என்னிடம் கேட்டுவிட்டு மற்றொரு கையொப்பம், மொபல் நம்பர் வாங்கிக் கொண்டார்.
கட்டணங்கள் செலுத்த எமிரேட்ஸ் அலுவலகம், அங்கே அனைத்து ஆவணங்களையும் கொடுத்ததும் எடைக்கு எவ்வளவு என்று சொன்னதும் அந்த தொகையை கட்டிவிட்டு அவர்கள் கொடுத்த ஏர்வே பில்லை வாங்கிக் கொண்டு, பாடியுடன் செல்லும் அவரது மனைவியின் டிக்கட்டோடு கார்கோவை புக்கிங்க் செய்துவிட்டு அங்கிருந்து நகரும்போது மாலை 6:00 மணி.
அடுத்த நாள் அதிகாலை 06:30 மணிக்கு டெர்மினல் - 3 சார்ல்டன் மனைவியிடம் அவருக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுத்து அனுப்பிவைக்க அங்கே சென்றதும் மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டார்....
ஊருக்கு சென்றதும் அவரது கணவரைப் புதைக்க இடம் வாங்க வேண்டும் அதற்கு யார் பணம் தருவார்கள் என்று !
இத்தோடு போதும் தானே.... (இதனை வம்பு செய்து வாசிக்க வைத்த வசை என்னோடு போகட்டும்)
அபூஇப்ராஹீம்
22 Responses So Far:
வெளிநாட்டில் வேலை செய்ய நினைத்தது தவறோ என்று பல குடும்பங்களை / ஆட்களை யோசிக்க வைக்கும் ஆக்கம்.
இருப்பினும் மனித இனம் மற்றும் ஒரு மகிழ்ச்சியை பார்த்தவுடன் சென்ன்டிமென்டை தூக்கி கடாசிவிட்டு வாழப்பழகிவிடும்.
பொதுவாக அரபு நாடுகளில் மரணம் அடையும் ஆட்களுக்கு பாதி நரகவேதனை இப்படி டாக்குமென்ட்டுக்கு அலைக்கழிக்கப்படுவதிலேயே முடிந்து விடுகிறது.
மரணமும் , வேதனையும் இப்படி மனிதன் போட்ட எல்லைக்கோட்டுக்கும், உருவாக்கிய காகித சம்பிரதாயங்களிலும் சிக்கித்தவிக்கிறது.
ZAKIR HUSSAIN சொன்னது…
மரணமும் , வேதனையும் இப்படி மனிதன் போட்ட எல்லைக்கோட்டுக்கும், உருவாக்கிய காகித சம்பிரதாயங்களிலும் சிக்கித்தவிக்கிறது.
-----------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.மிகச்சரியா சொன்னீங்க மொத்தத்துல கசக்கிவிடுறாங்க!
அபு இபு,
இதுல பாதிதானே எனக்குச் சொல்லிக் காட்டினீர்கள்? இவ்வளுவு அவதியா? உலகம் எவ்வளவு சுயநலமானது என்பதை இந்த மரணத்தின் பின்னணியில் நடந்த உறவினர்களின் எதிர்வினைகள் தெளிவாக்குகின்றன.
கிரவுன்,
நம்ம நவாஸ் இறந்தபோது (ஜுபைல், சவுதி அரேபியா) இதைப் போன்றதொரு நிலமையில் நானிருந்தும் அபு இபு போல எல்லாவற்றையும் நான் செய்யவில்லை. நவாஸின் கம்ப்பெனியே பார்த்துக் கொண்டது. ஆனால், அந்த வலி?
நண்பா சபீர்,
கலப்படமற்ற தூய எண்ணம்கொண்ட மனிதநேயம் யுவ்வுலகை விட்டுப்பிரிந்து
1400 ஆண்டுகள் உருண்டோடிவிட்டதுடா என் நண்பா !
அபு ஆசிப்
ரியாத் சவுதி அரேபியா.
\\மரணமும் , வேதனையும் இப்படி மனிதன் போட்ட எல்லைக்கோட்டுக்கும், உருவாக்கிய காகித சம்பிரதாயங்களிலும் சிக்கித்தவிக்கிறது.\\
உளவியலாரின் கவித்துவம் உள்ளத்தை உருக்கியது!
அன்பு நெறியாளர் அபுஇபு அவர்கள் பட்டக் கஷ்டங்கட்கும், காட்டிய பொறுமைக்கும் அல்லாஹ் இம்மை-மறுமையில் நற்கூலி வழங்குவான் அதற்கு இவ்வாக்கமும் இதனை வாசித்துணர்ந்த நாங்களும் சாட்சிகளாக இருப்போம்.
உங்கள் கம்பெனியில் PRO செய்ய வேண்டியதை எல்லாம் அபுஇபு தான் செய்ய வேண்டுமா? என்று நான் கேட்க நினைத்தாலும், எனக்கும் இதுபோன்ற ஓர் அனுபவம் யன்ப அ (சவூதியில்) ஏற்பட்டது; அங்கு secretary to Project Manager cum Camp-Boss என்ற பொறுப்பில் அமர்த்தப்பட்டேன்; இதுபோன்றே ஒரு ஃபிலிப்பினோ மாரடைப்பால் இறந்து விட்டார். அவரின் உடைமைகளைக் கணக்கெடுத்து அதற்கான ஆவணங்களைச் சரி பார்த்து ஃபிலிப்பைன்ஸுக்கு அவர் மனைவிக்கு ஒப்படைக்கும் பணி வரைக்கும் தான் நான் செய்தேன்.மற்றவைகள் எல்லாம் PRO தான் செய்தார். ஆனால் இங்கு அபுஇபு அவர்களின் அயராத உழைப்பை எண்ணி வியக்கிறேன்; இடையில் இந்த வலைத்தளத்தின் நெறியாளர்ப் பொறுப்பும் கூடுதல் என்றால், அவர்களின் உழைக்கும் நேரம் உறங்கும் நேரத்தை விட அதிகம் தான்.
காதர்,
அதிருக்கட்டும். பள்ளிக்காலங்களில் எல்லாப் போட்டிகளிலும் ஈ எம் ஹனீஃபா பாடல்களைப் பாடி முதல் பரிசைத் தட்டிச் சென்ற உன்னிடம்
ஜுபைல் கேம்ப் 14ல் என்னறையில் உன்னைப் பாடச் சொல்லி (அதிகாலை நேரம் சுபுஹூக்குப் பின்னே அண்ணல் நபி நடந்த போதூ... இன்னல் செய்தால் ஒரு மாது) நான் கண்மூடி ரசித்த தினங்கள் மறக்க முடியுமா?
(பி.கு.: காதர் இஸ்லாமிய கானங்கள் பாடும்போது இசைக் கருவிகளின் அவசியம் இராது. அவ்வளவு ஃபீல் பண்ணிப் பாடுவான்)
இனிய நண்பா,
ஏன் அந்த இனிய தருணங்களை இப்பொழுது மலரச்செய்கிறாய் ?
ஏனனில், மீண்டும் அந்தக்காலங்கள் திரும்ப வராதா என்று ஏங்கவைக்கின்றது .இயற்கையின் நியதியில், ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.
சென்றது சென்றதே . திரும்பவரப்போவதில்லை
அல்ஜுபைலின் வசந்தகால நினைவுகளுக்கு என்னை ஏன் இழுத்துச்செல்கிறாய் ! ஏக்கம் இரட்டிப்பு மடங்காயிற்று
அதே ஏக்கத்துடன்
அபு ஆசிப் என்ற அப்துல் காதர்
ரியாத் சவுதி அரேபியா.
இனிய நண்பா,
ஏன் அந்த இனிய தருணங்களை இப்பொழுது மலரச்செய்கிறாய் ?
ஏனனில், மீண்டும் அந்தக்காலங்கள் திரும்ப வராதா என்று ஏங்கவைக்கின்றது .இயற்கையின் நியதியில், ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.
சென்றது சென்றதே . திரும்பவரப்போவதில்லை
அல்ஜுபைலின் வசந்தகால நினைவுகளுக்கு என்னை ஏன் இழுத்துச்செல்கிறாய் ! ஏக்கம் இரட்டிப்பு மடங்காயிற்று
அதே ஏக்கத்துடன்
அபு ஆசிப் என்ற அப்துல் காதர்
ரியாத் சவுதி அரேபியா.
கவிஞரும் பாடகரும் ஒரே அறையில் இருந்தது; கவிதையும் ஓசையும் இணைந்ததோர் இயல்பான கூட்டு! மீலாது மேடைகளில் பாடகர் அப்துல்காதரின் பாட்டைக் கேட்டு இரசித்தவர்களில் அடியேனும் ஒருவன.
மாமாவை இழுத்து வந்த கவிவேந்தர் மருமகன் (தலைத்தனையனை) இழுத்து வந்தால் நாங்களும் எங்களின் வசந்தகால நினைவலைகளில் நீந்துவோமே!
//இதற்கு முன்னர் எங்கள் கம்பெனியில் நிகழ்ந்த ஐந்து இறப்புகளை சந்தித்து இருந்ததால்//
அது அப்படி என்ன கம்பெனி பயமாயிருக்கு!
Assalamu Alaikkum
Thanks for sharing the story of philipina friend Charlton.
There is another present story of a young man of Adirampattinam Mr. Mohideen M.S(IT) graduate (son of Mr. Nagoorpichai, non-teaching staff,KMC, Adirai) died on 1st April 2013 (because of heart attack) before admitted in the hospital in Sharjah. He came on visit to search job, just after a week, he passed away. The body is still in the martuary not handed over to his brothers. Its one of the painful happenings now. The family and relatives(he is my distant relative too) are having keen concern and multiplied worries over the brother's death.
News regarding the brother's death in Adirai Express.
http://www.adiraixpress.blogspot.ae/2013/04/blog-post.html
I visited to meet his brothers in Sharjah, the body will be buried in Dubai, they mentioned, expected to be on Sunday.
Lets make dua.
Thanks and regards,
B. Ahamed Ameen.
மண்ணரை செல்வதற்கே இத்தனை நடைமுறைகளைக் கடக்க வேண்டுமென்றால். அதையும் தாண்டி நீண்டநெடிய கபுருடைய நடைமுறைகளை வெற்றிகரமாகக் கடக்க வேண்டுமே என்ற மலைப்பு ஏற்படுகிறது. சோக நிகழ்வை சுவாரஸ்யமாகச் சொன்னவிதம் அருமை.
050-7347676 is the contact number of Br.Thaha who is assisting such cases for completing funeral procedures. Let someone to contact if necessary. This service is sponsored by ETA Salahudden kaka fo all Indian origin in UAE.
அஸ்ஸலாமு அலைக்கும். அபுஇபுறாகிம் காக்கா! ஒருவர் செத்ததில் நீங்கள் செய்த சேவைக்கு( எப்பொழுதும் அதுக்கு முந்திதான் நிப்பீங்க!)அல்லாஹ்விடம் உங்களுக்கு நற்கூலிஉண்டு!அனால் அதற்குள் இப்படி செத்து ,செத்து பிழைச்சிருக்கீங்க ! அப்பாடா!
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!
வளைகுடா அனுபவத்தில் இந்த மாதிரியான இழப்புகளை கையாளுவதற்கு ஸ்பான்சரின் (கம்பெனி) ஒத்துழைப்பு மிக மிக அவசியம். அதோடு அடுத்தடுத்த காரியங்களுக்கு நகர்த்துவதற்கு உறுதியான நபரும் வேண்டும். [சில நேரங்களில் பணமும் வேண்டும் இப்போதுதானே இன்ஷூரன்செல்லாம் கட்டாயம் அப்போது ஏது !?]
ஏற்கனவே நிகழ்ந்த அனுபவத்தில் பங்களாதேஷ் சகோதரர் ஒருவரின் மரணம் சம்பவித்த 36 மணி நேரத்திற்குள்ளும் ஆவணச் சடங்குகளை முடித்து அவரின் சொந்த ஊருக்கு அனுப்பியிருக்கிறோம்.
குறிப்பாக விடுமுறை நாட்களுக்கு ஒருநாள் முன்னர் இவ்வாறு நிகழ்ந்தால் கதி அதோ கதிதான் !
//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
//இதற்கு முன்னர் எங்கள் கம்பெனியில் நிகழ்ந்த ஐந்து இறப்புகளை சந்தித்து இருந்ததால்//
அது அப்படி என்ன கம்பெனி பயமாயிருக்கு!//
ஐந்தில் இரண்டு இயற்கையாகன மரணம் (படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை - ஹார்ட் அட்டாக்), இரண்டு மருத்துவமணையில் இருவேறு காரணங்களால், ஒன்று சாலை விபத்து... எங்கிருந்தாலும் மரணத்தை சந்தித்து தானே ஆகனும் !
கிரவுன்(னு): ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தை விட இது நீ சொன்ன மாதிரி செத்து செய்த்து பிழைப்பது போன்ற அனுபவமே... :) 4 நாட்கள் அவரின் குடும்பத்தினரிடம் மாட்டிக் கொண்டதுதான் அந்த அனுபவம் !
//050-7347676 is the contact number of Br.Thaha who is assisting such cases for completing funeral procedures. Let someone to contact if necessary. This service is sponsored by ETA Salahudden kaka fo all Indian origin in UAE. //
Assalamu Alaikkum
Dear brother Adiraikkaaran,
Thanks for sharing the contact number of brother Mr. Thaha.
Jazakkallah Khairan.
இங்கே இறப்பது ஒரு விபத்து என்றாலும் அதை பக்குவப்படுத்தி ஊருக்கோ, இங்கேயோ அடக்கம் செய்வதற்குள் படாத பாடு (இவனுங்க பண்ணுற அக்கப்போர்) இறப்புக்கு வருத்தபடுவதைவிட இதையெல்லாம் சமாளிக்க போதும் போதும்னு ஆகிடும்
சுவராஸ்யமா சொல்ல முற்பட்டிருக்கீங்க காக்கா, ஆனால் அந்த ஒவ்வொரு மூவ்மெண்ட்லேயும் எவ்வளவு கஷ்டங்கள் இருக்குனு பார்த்து அ அனுபவித்தால்மட்டுமே தெரியும்
இது போல இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கும் ஓர் அனுபவம் ஏற்பட்டது, ஒரு UK டூரிஸ்ட் மரணம் அடந்தார், ஆனால் அவரின் உடல் இரண்டு நாட்களுக்குள் லண்டனுக்கு பார்சல் செய்யப்பட்டது.அந்நிய செலாவனி வருவாயில் கவனம் செலுத்தும் அந்த நாடு அக்கறை எடுத்தது போல் மற்ற தூதரகங்களும் குறிப்பாக இந்திய தூதரகமும் இதில் அக்கறை செலுத்த வேண்டும்.
திக்..திக்..திக் நிமிடங்கள்..அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் இந்த மாதிரியான மரணங்களைவிட்டும் ..சொந்த நாட்டில் சொந்தங்கள் முன்னிலையும் நாம் நடித்து முடித்திருக்க வேண்டும்...உங்களின் மனிதாபமான உதவி பாரட்டதக்கது காக்கா
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
////அங்கே சென்றதும் மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டார்....ஊருக்கு சென்றதும் அவரது கணவரைப் புதைக்க இடம் வாங்க வேண்டும் அதற்கு யார் பணம் தருவார்கள் என்று !////
இறப்பை விட தன் கணவரை புதைக்க இடம் வாங்க பணத்திற்கு கவலைப்பட்டது. நம்மை சிந்திக்க வைக்கும் காரியம் வல்ல அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தில் மட்டும் தான் அனைத்தையும் இலகுவாக்கி வைத்திருக்கிறான்.
பிற மதங்களில் பிணத்தை அடக்கம் - எரிக்க செலவுகளும் அதிகம்தான்.
இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் இறந்தவரை எரித்து காற்றை மாசுபடுத்துகிறார்கள்.
கிறித்துவ மார்க்கத்தில் கல்லறையைக் கட்டிக்கொண்டே போகிறார்கள். இதனால்தான் கிறித்தவர்கள் அடக்கம் செய்யும் இடத்திற்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.
நமது மார்க்கத்தில் மட்டும் தான் இறந்த பிறகும் மண்ணில் புதைத்து சுகாதாரம் பேணப்படுகிறது – செலவும் அதிகம் இல்லை.
நம்மை இஸ்லாத்தைப் பின்பற்ற வைத்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!
மனிதர்களுக்கு (எந்த மதத்தவராக இருந்தாலும்) உதவி செய்பவர்களுக்கு வல்ல அல்லாஹ் உதவி புரிகிறான்.
எனக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் .... அந்த சந்திர தேவ் சவுஹான் மறக்கவே முடியாது. என்னவென்று யாரும் கேட்டுவிடாதீர்கள். குறுந்தொடர் எழுத நேரிடும்.
தம்பி உங்களின் முயற்சிகள் பாராட்டத்த் தக்கவை. ஆனால் மனைவி புருஷனைப் புதைக்க இடம்வாங்கச்சொன்ன செய்தியும் சொல்லி இருந்தால் அறிந்து கொள்ள உதவியாக இருந்து இருக்கும்.
//திக்..திக்..திக் நிமிடங்கள்..அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் இந்த மாதிரியான மரணங்களைவிட்டும் ..சொந்த நாட்டில் சொந்தங்கள் முன்னிலையும் நாம் நடித்து முடித்திருக்க வேண்டும்...உங்களின் மனிதாபமான உதவி பாரட்டதக்கது காக்கா//
ஆம். ””இறப்பு என்பது உறுதிச் செய்யப்பட்டது பிறப்பின் போதே என்பதை நாம் அறிந்தாலும், அவ்விறப்பு எப்படி எங்கு நிகழும் என்பது மட்டும் அறிய முடியாது; ஆனால், ஓரு மலரானது செடியிலிருந்து தானாக மண்ணில் விழுவது போல் மென்மையான ஒரு நிகழ்வாகவும், நம் உடலுக்கோ மற்றவர்க்கோ ஏதும் தீங்கில்லா நிகழ்வாகவும் அமைய வேண்டும்”” என்று கவிப்பேரசு வைரமுத்து அவர்கள் எழுதியிருந்ததைக் கண்டதும், அவர்க்கு நான் எழுதிய பதில்: “கடவுள் மறுப்பாளராகக் காட்டிக் கொண்டிருந்த நீங்கள் இப்பொழுது மரணம் என்ற தூது வரும் என்கின்ற பயமும் என்றைக்கு உங்கள் உள்ளத்தில் ஒட்டிக் கொண்டதோ அன்றைக்கே இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையும் கூடவே வந்திருக்க வேண்டும்; இனியாவது, நான் அனுப்பிய அல்-குர் -ஆன் தமிழாக்கத்தைப் படியுங்கள்” என்று கோரியிருந்தேன்.
Post a Comment