Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒன்றாக இருந்தார் ஒற்றையாக பார்சல் செய்யப்பட்டார் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | March 17, 2013 | , , , , ,


2002ம் வருடம் ஏப்ரல் மாதம் 12ம் தேதி தனது பணியைத் தொடங்கினார், முதல் வேலையாக என்னிடமே அனுப்பி வைக்கப்பட்டார் அவருக்கான வேலையின் பொறுப்புகளை பொறுமையாக எடுத்துரைத்தேன் அவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டார். அதோடு இல்லாமல் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டார்.

அவருக்கான வேலை புரடெக்ஸன் ப்ளேனிங் அதாவது உற்பத்திற்கான கால அளவை நிர்ணயிப்பது, வேலையாட்கள் பணியமைப்பை திட்டமில், உற்பத்திக்கான பொருட்களை முன்கூட்டியே தயார் செய்ய திட்டமிடுதல் என்பதாகும். அவர் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர், பார்ப்பதற்கு குள்ளமாக இருப்பார் நல்ல ஆங்கிலப் புலமை எழுத்தில் இருக்கும். நாளடைவில் டைரி, மற்றும் அச்சுக்கு செல்லும் அனைத்து ஆங்கில எழுத்துருக்களையும் புரூஃப் பார்ப்பதற்கும் பணிக்கப்பட்டார்.

உடன் வேலை செய்யும் அனைவரையும் மரியாதையாகவே அழைத்துப் பழகியவர், அதனையே அவரும் எதிர்பார்ப்பார். லேபராக இருந்தாலும் மேலாளராக இருந்தாலும் அவர்களின் பிறந்த நாள், கல்யாண நாள், குழந்தை பிறந்த நாள் என்று அவருக்கு தெரியவரும் பட்சத்தில் கட்டாயம் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்கு தவறமாட்டார். அதோடு ஈத் (பெருநாட்கள்) தேசிய தினம், கிருஸ்துமஸ், என்று எது வந்தாலும் அவரிடமிருந்து அவரோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள் நிச்சயம் கிடைக்கும்.

வேலையில் இருக்கும்போது ஏதாவது கொரித்துக் கொண்டோ சாப்பிட்டுக் கொண்டோ இருப்பார், அதனால் மற்றவர்களுக்கு ஏதும் சிரமங்கள் இல்லாவிடினும் அவரின் தொடர் செயல்களால் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் ஷாப்பிங் செல்வது அவரின் வழக்கம். நிறைய பரிசுப் பொருட்களும் ஆடைகளும் வாங்கி 71x45x71cm என்ற கொள்ளலவு கொண்ட பாக்ஸில் மாதம் ஒரு பார்சல் பிலிப்பைன்ஸுக்கு அவரால் அனுப்பப்படும் அதில் அவரின் வீட்டார் அனைவருக்கமான பரிசுப் பொருட்கள் நிரம்ப இருக்கும்.

கம்பெனியில் (தொழிற்சாலையில்) நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் அவரின் பங்கு அதிகமாக இருக்கும், விழாவானாலும், பிரெசெண்டேஷன் ஆனாலும், இன்னும் முக்கிய நிகழ்வுகளானாலும்.

சில சமயங்களில் வேலையில் நடக்கும் கோபதாபங்களில் அவரும் அதிகம் பாதிக்கப்படிருக்கிறார், 'யாருக்கு யார் ?' என்று அவரால் அடிக்கடி எனக்கு மின்னஞ்சலில் கேட்கப்படும் கேள்வி, பல விஷங்களை அவர் என்னோடு வாதிடும்போது தெரியவரும். என்ன இவன் இவ்வளவு பீடிகை போடுகிறானே என்று நெளிய வேண்டாம்.

அவருடைய பெயர் 'சார்ல்டன்'

கடந்த சில நாட்களாக அதிகமாக இருமிக் கொண்டே இருந்தார், பலமுறை அவரிடம் டாக்டரிடம் செல்லும்படி தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தி வந்தேன், அவரும் இன்று நாளை என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அதற்கு முன்னர் அவரின் ஆரோக்கியம் பற்றி சின்ன குறிப்பு கடந்த மூன்று வருடங்களாக ஹைபர்டென்ஷன், சுகர் இருப்பதாகவும் தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தார்.

கடந்த ஃபிப்ரவரி மாதம் 11ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு வந்தார் அவரின் முகத்தில் வாட்டம் தெரிந்தது அவரிடம் "என்ன சார்ல்டன்?" என்றேன். "உடல்நிலை சரியில்லை" என்றார், உடனடியாக டிரைவரை அழைத்து அவர் எங்கு வழமையாக மருத்துவத்திற்கு செல்வாரோ அங்கே அழைத்துச் செல்லும் படி சொல்லிவிட்டு நானும் என்னுடைய வேலையைப் பார்த்துக் கொள்ள தொடர்ந்தேன்

அடுத்த நாள் 12ம் தேதி, அவர் வேலைக்கு வரவில்லை நானும் ஒருவேளை மெடிக்கல் லீவாக இருக்கும் என்று என்னுடைய அசிஸ்டெண்டிடம் என்ன வென்று விசாரிக்கச் சொல்லியிருந்தேன். அவரும் விசாரித்து விட்டு இன்று மெடிக்கல் லிவு என்றார்.

பிப்ரவரி 13ம் தேதியும் அவர் வேலைக்கு வரவில்லை, நானே அவரின் மொபைலுக்கு ஃபோன் செய்தேன், பதில் இல்லை... அன்று மதியம் சுமார் 2:30 மணிக்கு டேரா பெல்ஹோல் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலிருந்து எனக்கு அழைப்பு வந்தது கம்பெனியிலிருந்து யாராவது அங்கு வரவேண்டும் என்றும் அவருக்கு உடணடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் அதற்காக இன்சூரன்ஸ் அப்ருவல் இன்னும் வரவில்லை அது வந்தாலும் வராவிட்டாலும் கம்பெனியிலிருந்து அவர்கள் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யச் சொன்னார்கள்.

அன்று மாலையே அங்கு செல்லலாம் என்று இருக்கும்போது, ஒரு மணிநேரம் கழித்து 'சார்ல்டனே' என்னிடம் மொபைலில் பேசினார், ஆப்ரேஷன் இன்று இல்லை பிறகு செய்ய விருப்பதாக டாக்டர் சொல்லியிருக்கிறார் என்றார். "இப்போது நீ வரவேண்டாம் நாளை அல்லது மறுநாள் மருத்துவமனையிலிருந்து நான் திரும்பி விடுவேன்" என்று தெளிவாகச் சொன்னார்.

அடுத்த நாள் 14ம் தேதி காலை 11:30 மணிக்கு மீண்டும் மருத்துவமனையிலிருந்து ஃபோன் வந்தது, அவர்கள் என்னிடம் உடணடியாக டெபாசிட் செய்யுங்கள் அப்போதுதான் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியும் என்றனர். நானும் எனக்கிருக்கும் அனுமதியைப் பயன்படுத்தி அவர்கள் சொன்ன தொகையை ரொக்கமாக எடுத்துக் கொண்டு மாலை 4:30 மணியளவில் அங்கு சென்றேன். முதலில் 'சார்ல்டனை' பார்க்கலாம் என்று விசாரித்தேன் அவரை ICUவில் வைத்திருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு சுல்லென்றது 'என்னடா நேற்று பேசும்போது நாளை அல்லது மறுநாள் திரும்பி விடுவேன்' என்று சொன்னார் இப்போது ICU என்றதும் அதிர்ச்சியாக இருந்தது.

அங்கு சென்று பார்த்ததும் அதிர்ந்தே விட்டேன் அவரின் நிலையைக் கண்டதும், ஒரு குழந்தையைப் போல் பிதற்றிக் கொண்டிருந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த நர்ஸிடம் சொன்னதும் அவரும் இரண்டாவது மாடிக்குச் சென்று பார்க்கச் சொன்னார். டாக்டரை பார்த்ததும் அவர் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல உறைந்து போய்விட்டேன்.

அன்றே அவரின் சொந்தக்காரர்கள் யாரும் இருக்கிறார்களா என்று விசாரிக்க ஆரம்பித்தேன் யாரும் சிக்கவில்லை, உடணடியாக அவரின் மனைவிக்கே (பிலிப்பைன்ஸ்க்கே) தகவல் கொடுத்தேன், அதோடு மருத்துவமனை தொலைபேசி, டாக்டர் பெயர், நர்ஸ் பெயர் அனைத்தையும் கொடுத்தேன். அன்றிருலிந்து அவரின் மனைவியும் காலை, மாலை என்று இரண்டு நேரமும் ஃபோன் போட்டு பேசி வந்திருக்கிறார்.

இருமல், மயக்கம் என்று சொல்லித்தான் அங்கே அட்மிட் ஆனார், அடுத்த நாள் கிட்னியில் கல் இருப்பதாகச் சொல்லி ஆபரேஷன் என்றனர், அதன் பின்னர் ஹார்ட் வீக்காக இருக்கிறது ஆப்ரேஷன் செய்ய முடியாது அதனை பிறகு செய்யலாம், முதலில் ஹார்ட்டுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர். அடுத்து மூன்று விதமான MRI எடுத்தனர், அப்புறம் CT-Scan எடுத்தனர்.

அன்றிலிருந்து நான் அதிகாலை 6:30 மணிக்கும் மாலை 5:00 மணிக்கும் தினமும் அவரைப் இருமுறை பார்க்கச் சென்று வந்தேன், அவரின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஒவ்வொரு நாளும் அவரின் சுயநினைவுகள் மறைந்து கொண்டே சென்றது. ஆரம்பத்தில் என்னோடு நன்றாக பேச ஆரம்பித்தவர் அடுத்து மெல்லிய புன்னைகயை காட்டினார், அதன் பின்னர் "yeah" என்று சத்தம் மட்டுமே அவரால் எழுப்ப முடிந்தது.

ஃபிப்ரவரி 19ம் தேதி காலை 10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து மீண்டும் ஃபோன், மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்லி அதனை உடணடியாகச் செலுத்துங்கள் மற்றுமொரு ஸ்கேனிங் இன்றே செய்ய வேண்டும் அவசரம் என்றனர். நானும் இன்ஷூரன்ஸில் பேசுகிறேன் முதலில் ஆன்லைன் ரெகுஸ்ட் செய்யவும் என்றேன் அவர்களும் அதனையும் செய்து வைத்திருக்கிறோம் இருந்தாலும் நீங்கள் இந்த தொகையையும் டெபாஸிட் செய்யுங்கள் என்றனர்.

வேறு வழி, அவர்கள் சொன்ன தொகையை டெபாஸிட் செய்து விட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கும் மற்றொரு மருத்துவரை சந்திக்கச் சென்றேன், அவரோ இன்று இரவு மற்றொரு ஸ்கேனிங்க் செய்ய இருக்கிறோம் "we suspect there is bleeding" என்றார் என்னடா இவர் மொட்டையாகச் சொல்கிறாரே என்று விளக்கமாகக் கேட்டேன். அவரோ "சார்ல்டன் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது, அதனால்தான் நினைவு மாறி மாறி வருகிறது" என்று சொன்னவர். "அதனைச் சரி செய்து விட்டோம்" என்றார்.

நானும் நிம்மதிப் பெருமூச்சுடன் எனது இருப்பிடம் திரும்பி வந்தேன்.

பிப்ரவரி 20ம் தேதி காலை 06:30 மணிக்கு அவரை பார்க்கச் சென்றபோது அதே நிலையில்தான் இருந்தார். ஐந்து நிமிடங்கள் அங்கிருந்த நர்ஸிடம் விபரங்களை கேட்டுவிட்டு அலுவலகம் வந்து கொண்டிருந்தேன் மீண்டும் அலைபேசியில் அழைப்பு வந்தது அதில் டாக்டர் பேசினார் "தயவு செய்து அவரின் குடும்பத்திற்கு தகவல் கொடுங்கள் சார்ல்டன் நிலமை இன்னும் இரண்டோ மூன்றோ நாட்கள்தான் என்ற குண்டை போட்டார்" எனக்கோ காரை ஓட்ட முடியாமல் தடுமாறிவிட்டேன். அப்புறம் சுதாகரித்துக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்ததும் என்னுடைய முதலாளியிடம் கலந்து பேசினேன். உடணடியாக சார்ல்டன் மனைவியை இங்கு வரவைக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் அதனைச் செய் எதனை பற்றியும் யோசிக்க வேண்டாம் உன்னுடைய முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார்.

அதற்குள் அவரின் மனைவியும் அன்று காலை மருத்துமனையில் நர்சுடன் பேசியிருக்கிரார் அவர்களும் இதே தகவலை அவரிடம் சொல்ல, அதனைத் தொடர்ந்து சார்ல்டன் மனைவி எனக்கு ஃபோன் செய்து உடணடியாக விஷா ஏற்பாடு செய்யும்படி கெஞ்சினார். நானும் 'சரி' என்று சொல்லி அவரிடம் பாஸ்போர்ட் காப்பியை அனுப்பச் சொல்லிவிட்டேன் அவரும் தனது மகனோடு வருவதாக சொன்னார்.

ஃபிப்ரவரி 21ம் தேதியும் அதே கவலையுடனே கழிந்தது, பாஸ்போர்ட் காப்பி கேட்டு இன்னும் வரவில்லையே என்று மீண்டும் ஃபோன் செய்தால் மாலைக்குள் அனுப்பி விடுகிறேன் என்று சொன்னார் ஆனால் வெள்ளிக்கிழமைதான் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

வெள்ளிக்கிழமை, ஃபிப்ரவரி 22ம் தேதி காலை மருத்துவமனை சென்ற என்னை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு சார்ல்டன் புன்னகைத்தார் நான் சொல்வதை அவர் கேட்பது போன்று தலையசைத்தார் அப்போதுதான் சொன்னேன் "உங்கள் மனைவியும் குழந்தையும் வருகிறார்க்ள் விஷா ஏற்பாடு செய்கிறேன்" என்றேன் அப்போது "தேங்க்ஸ்" என்று மெல்லிய உதடு அசைப்பாக காற்று மட்டும் அவரின் வாயிலிருந்து வந்தது.

சனிக்கிழமை ஃபிப்ரவரி 23ம் தேதி காலை நான் நேரடியாக அலுவலகம் சென்றுவிட்டேன் எனக்கு ஒரு அவசர வேலை இருந்ததால். காலை 9:00 மணியளவில் டாக்டரிடம் பேச வேண்டும் என்று என்னுடைய முதலாளி சொன்னார் உடணடியாக டெலிஃபோனில் பேசுவதற்கு ஏற்பாடு செய்தேன். அப்போது டாக்டர் எங்கள் முதலாளியிடம் அரபியில் நிறை விஷயங்களை சொல்லியிருக்கிறார், அவரும் அதனைக் கேட்டுவிட்டு அதிர்ச்சியில் அப்படியே மவுனமாக இருந்தார் சிறிது நேரம். 

சரியாக 12:15 மணிக்கு டாக்டர் மீண்டும் ஃபோன் செய்தார் "he is no more" என்றார்.... !

அபூஇப்ராஹீம்

8 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Abu Ibrahim,

Sympathetic and emotional narration of real story of your colleague and friend Mr. Charlton, touches heart. Expect the next part to know what was really happened to him.

Thanks and best regards,B. Ahamed Ameen from Dubai,

www.dubaibuyer.blogspot.com

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் பொறுமையையும், நாடி இருந்தால் நேர்வழியையும் கொடுப்பானாக ஆமீன்.

இந்நிலை வராமல் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

Ebrahim Ansari said...

Administration Dept.ல் பொறுப்பாக இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்படும்.

ஒவ்வொரு நிகழ்வாக நீங்கள் சொல்லும்போது பல நினைவலைகள் நெஞ்சில் மோதுகின்றன.

உடன் பணியாற்றிய ஒருவரின் - அவர் எவராக இருந்தாலும் - இழப்பு நெஞ்சைவிட்டகல நெடுநாட்கள் பிடிக்கும். இந்த சக ஊழிய நண்பரின் இழப்பைத் தாங்கும் வலிமையை இறைவன் தருவானாகவும். அவ்வாறே அவரின் குடும்பத்தோருக்கும் அமைதி அளிப்பானாகவும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

படிக்கவே மனம் கலங்குகிறது

Adirai pasanga😎 said...

//உடன் பணியாற்றிய ஒருவரின் - அவர் எவராக இருந்தாலும் - இழப்பு நெஞ்சைவிட்டகல நெடுநாட்கள் பிடிக்கும். இந்த சக ஊழிய நண்பரின் இழப்பைத் தாங்கும் வலிமையை இறைவன் தருவானாகவும். அவ்வாறே அவரின் குடும்பத்தோருக்கும் அமைதி அளிப்பானாகவும்.//

முழுமையான இறை நம்பிக்கை இறுதி வரை இருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.

Abu Easa said...

//உடன் பணியாற்றிய ஒருவரின் - அவர் எவராக இருந்தாலும் - இழப்பு நெஞ்சைவிட்டகல நெடுநாட்கள் பிடிக்கும். இந்த சக ஊழிய நண்பரின் இழப்பைத் தாங்கும் வலிமையை இறைவன் தருவானாகவும். அவ்வாறே அவரின் குடும்பத்தோருக்கும் அமைதி அளிப்பானாகவும்.//

முழுமையான இறை நம்பிக்கை இறுதி வரை இருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட சம்பவங்களை கையாண்டிருந்தாலும், இது எனக்கு கொஞ்சம் அழுத்தத்தை கொடுத்தது என்னவோ மெய்யே.

இரண்டொரு நாட்களில் மீதம் சொல்ல வேண்டியதையும் சொல்லி விடுகிறேன்... நோக்கம் நிகழ்வின் சூழலையும், நான் சந்தித்த தெரியாதவர்களுக்கும் தெரிந்து கொள்ளத்தான் அடுத்த பகுதில் இன்ஷா அல்லாஹ்...

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நீண்ட ஒரு விளக்கம் மனிதாபிமானத்தின் சுருக்கம் வருத்தங்கள் நிறைந்த தமக்கு எனது ஆறுதல்கள் அவரின் குடும்பத்திற்கு அல்லாஹ் அமைதியை தருவானாக

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு