Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெண்ணியம் 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 17, 2012 | , , , ,

பெண்ணியம் பற்றிய பார்வைக்கு முன் பெண்மையைப் பற்றி ஒரு தெளிவு அவசியம். பசியின் இருப்பை அறிவிக்காவிடில் உணவைப்பற்றிய தேடலுக்கு அவசியமிராது அல்லவா, அதைப்போல.

பெண்மை:

கண்ணியம் மிக்கது பெண்மை.  எண்ணியும் பார்த்து எடையிடவியலாத புண்ணியம் மிக்கது பெண்மை. உன்னையும் என்னையும் உள்ளிலே சுமந்து உயிரிலே உணர்ந்து, ஈன்றெடுத்து, கணக்கிடவியலாத கூலித்தொகை கடனாய் நம்மீது நிலுவையில் நிற்க அதைத் தள்ளுபடி செய்த தியாகத்தின் திருவிளக்கு பெண்மை.  விண்ணையும் மண்ணையும் உலகத்தில் படைத்தவன் தன்னையும் படைத்து தரணிக்கத் தரவிழைந்து தனக்குப் பதிலாக அன்னையைப் படைத்தான்.  அவன் தன் பண்புகளாம் கருணையையும் இரக்கத்தையும் அன்பையும் அருளையும் அவளுள் விதைத்தான்; அன்னையென அமைத்தான். 

ஆண் ஆணாகப் பிறந்து ஆணாக வளர்ந்து ஆணாகவே மரிக்கின்றான்; பெண்னோ பெண்ணாகப் பிறந்து பிறர்க்காக வாழ்ந்து, நிலவாக வளர்ந்து ஜொலித்தவள் பிறையெனவேத் தேய்ந்து, தாயாகத் திகழ்ந்து, சாகாமல் இருக்கின்றாள்; சிந்தையில் ஜொலிக்கின்றாள்.

எவர் மனத்திலாவது அவர்தம் அம்மா இறந்து விட்டிருக்கிறாளா? வேலை நிமித்தமோ வேறுவேறு தேவைக்கோ வீட்டை விட்டு வெளியேச் சென்றவனுக்கு வீடே மையப்புள்ளி என்பதுபோல, இறந்தாலும் இருந்தாலும் எல்லோருக்கும் மையப்புள்ளி அம்மா அல்லவா? இறக்காமல் இருக்கும் அம்மா நம் வழியெல்லாம் வாய்க்கும் வாச மலர்த் தோட்டமெனில் இறந்து நம் இதயத்தில் இருக்கும் அம்மா பாலைவனச் சோலை அல்லவா?

இறுதிப் படுக்கைக்குப் பின்னர் வாய்க்கும் இறுதி இருப்பிடத்தைப் போன்றது வாழ்க்கையும் அதன் வழிவகைகளும்; ஒற்றையானது; நெருக்கடியானது. அம்மா என்னும் உணர்வே நமக்கு எதையும் இலகுவாக்கித் தரும். 

அம்மா இறந்துவிட்டால், ஒரு மனிதனுக்காக இறைவனிடத்தில் யார் வேண்டினால் அது நிறைவேறும் சாத்திம் கூடுதலாக உள்ளதோ அவர் இறந்துவிட்டதாகவே அறியப்படுகிறது.  உலகில் மனிதன் யாருக்குக் கூடுதலாகக் கடமைப்பட்டிருக்கிறான் என்றொரு கேள்வியை மனிதப்புனிதர் ரசூல் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது அவர்கள் அம்மாவுக்கு என்று பதில் தர, அடுத்தடுத்து யார்யாருக்கு என்று கேட்கப்பட்டபோதெல்லாம் மூன்று முறையும் அம்மாவுக்கே என்று சொன்னதாக நபிவழி அறிவிப்புகள் உள்ளன.  ஒரு சமுதாயத்திற்கே நல்வழி காட்டியவரின் அறிவிப்பைவிட கூடுதலாக நான் ஒன்றும் சொல்லிவிடவியலாது அம்மாவின் சிறப்புகளை.  அத்தகைய அம்மா, பெண்மை எனும் தன்மைக்குக் கிரீடம்; பெண்களின் வளர்ச்சிமாற்றங்களின் உச்சகட்டச் சிறப்பு; தியாகமெனும் பண்பை படம் வரைந்து பாகங்களைக் குறித்ததுபோல் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் நேரலை.

பெண்மையின் மற்றுமொரு மாசற்ற வடிவம் மனைவி.  சுமைதாங்கியின் சுயநலமற்ற சேவையே மனைவியின் பிழைப்பு. மனைவியை மதிக்கத் தெரிந்தவனே மனிதனாகிறான்; மனிதத்தின் கோட்பாடுகளுக்குள் அடங்குகிறான். நம்மை ஈன்றவளைப் போலவே நமக்காக ஈன்றெடுப்பவளும் மேன்மையானவளே.  நம்மை கைபிடித்த நாள் முதல் கதி கணவனே என்றானவள்; கண்ணுக்கெட்டாத தூரத்தையும் வாழ்வில் நம்மோடு கைகோர்த்துக் கடக்கக் கூடியவள். தலை வலித்தால் தைலத்தைத் தொட்டாலும் தம் உயிர் தோய்த்தேத் தேய்த்து விடும் பாசம் மிக்கவள் மனைவி.  மருந்து குணப் படுத்துகிறதோ இல்லையோ அவள் அருகிலிருந்து கவனித்தது பிணி தீர்க்கும்.

சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன், “நல்ல மனைவி, கெட்ட மனைவி, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்என்றெல்லாம் பேசிக்கொள்ளக் கேட்டிருக்கிறேன்.  மனைவியில் நல்ல மனைவிதான் இருக்கிறாள்; கெட்ட மனைவி என்று யாருமில்லை – ஆரம்பம் முதல் வளர்க்கப்படும் விதத்திலும் அவள்தன் பெற்றோர்கள் வாழ்ந்து காட்டிய விதத்திலும் ஊடகங்களால் சித்தரிக்கப் படும் மாயத் தோற்றத்திலும் பாதிக்கப்பட்டு கெட்டவளாக உருவாக்கப் படுகிறாள் என்பதே என் நிலைப்பாடு.

மனைவியை மனைவியாய்ப் பார்த்தலே அவளுக்கு நாம் செய்யும் முதல் பிரதி உபகாரம். நாமோ ஆண் என்ற அர்த்தமற்ற அகந்தையில் அவளை அற்பமாகத்தான் பார்க்கப் பழகி இருக்கிறோம். புகார் எனச் சொல்ல விஷயமே இல்லாத அளவுக்கு அவளை அன்பாலும் பாசத்தாலும் முற்றுகையிட வேண்டும்.  மனைவிக்கு எதிரான பிரச்னைகளில் வெற்றியைவிடச் சுவையானது அவளிடம் தோற்பது. இதை உணர்ந்தால் யாவரும் நலமே.

சரி, மேலும்சகோதரியாகவும் மகளாகவும், பாட்டியாகவும் தோழியாகவும் பெண்மையின் வடிவங்கள் இருந்தாலும், பெண்மையின் இரண்டு முக்கிய முகங்களைச் சுருக்கமாகப் பார்த்து விட்டோம்.  ஆதலால் பெண்ணியம் பற்றிய என் கருத்தும் அதைத் தொடர்ந்து தற்காலத்தில் பெண்ணியத்தின் புரிதலும் நடப்பும் பற்றி அலசுவோம்.

பெண்ணியம்:

என்பதுகளில் என்று நினைவு, புதுமைப் பெண் என்றொரு புதுத் தோற்றத்தில் பெண்கள் ஆர்வம் காட்டத் துவங்கினர்.  அக்காலகட்டத்தில் வலுவான ஊடகங்களாகத் திகழ்ந்த தினசரிகளும் சஞ்சிகைகளும் திரைப்படங்களும் சமூகவியலரும் ஆணாதிக்கத்திற்கெதிராக பெண்களைப் புரட்சி செய்யத் தூண்டினர்.  அப்பாவிப் பெண்டிர் பலரும் புதுமைப் பெண் எனும் வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு தத்தமது சுய மரியாதை, பொருளீட்டல், கல்வி  மேம்பாடு, சமுதாயத்தில் அந்தஸ்து போன்றவற்றில் எழுச்சி பெறாமல், ஆணுக்குப் பெண் அனைத்திலும் சமம் என்னும் நோக்கிலும்,பாவாடை துறந்து ஜீன்ஸ் அணிவதிலும், பூ வைத்துப் பின்னி முடியாமல் கூந்தலை ஷாம்பூ இட்டு அலைபாய விடுவதிலும், மஞ்சள் முகம் மாற்றி பருக்களில் முடியும் களிம்புகளைத் தடவுவதிலும், இயற்கையான பொலிவைச் செயற்கையான எழிலாக மாற்றியமைப்பதிலும் புதுமை செய்தனர்.  புதுமைப் பெண் அநாவசியமான ஒப்பனைகளால் சீக்கிரமே முதுமைப் பெண் போல தோன்றலானாள்.

தீமைக்கு எதிராக பொங்கி எழுந்து கேள்வி கேட்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு மூத்தவரையும் கணவரையும் தாய் தந்தையரையும் எதிர்த்துப் பேசினாள் புதுமைப் பெண். தடுமலுக்குத் தும்முவதைப் போல தத்தம் கணவன்களின் சிறு கோபத்திற்கெல்லாம் தாலியைக் கழட்டி வீசினர் புதுமைப் பெண்டிர்.  சொந்தக் காலில் நிற்பது என்றொரு சந்தமில்லாப் பாட்டுக்கு அபிநயம் பிடித்தனர். சுயமாக உழைத்து சம்பாதித்து பொருளாதாரத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும் தன்னிச்சையாக எல்லாவற்றையும் தீர்மானித்து மூத்தவர்களின்அறிவுரைகளைத் தூக்கி வீசினர்; யாரையும் எடுத்தெரிந்து பேசினர்.

தெளிந்த நீரோடையென சிலிர்த்தும் சிரித்தும் நகர்ந்த வாழ்க்கைமுறை கல்பட்டு கலங்கியதுபோல புதுமைப் பெண் என்னும் சொல்பட்டுச் சிதறியது. காட்டாறு என வேகம் பிடித்துக் கரைகளை உடைத்தது என்னவோ உண்மை என்றாலும் கலந்தது இலக்கில் அல்ல; தேங்கிக்கிடந்த சாக்கடையைச் சேர்ந்தது; சகதியாய் முடிந்தது.

தொடர்ச்சியாக, கவர்ச்சிமிக்க மேநாட்டு நாகரித்தின்பால் வீணாக ஈர்க்கப்பட்ட புதுமைப் பெண் நம் நாட்டுக் கலாச்சார கட்டுக்கோப்புகளை உடைத்தெறிந்தாள்.  காலவோட்டத்தில் இருந்த இடத்துப் பெருமையை இழந்தும் நாடிய இடத்து நாகரிகத்தில் முற்றிலுமாகக் கலந்து நாசமாகப் போய்விடாமலும் இரண்டுங்கெட்டான் நிலைக் குத்தள்ளப்பட்டுப் போனாள் புதுமைப் பெண்.

கசப்பு மருந்தில்தானே கடும் நோய் குணமாகும்? உடலுக்கும் மனத்திற்கும் சுகமான சிலவற்றைத் துறந்து வாழ்ந்தாலே ஈடேற்றம் கிடைக்கும்.  கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழத் தலைப்பட்டால் தற்காலிக சுகத்தில் சொக்கி இளமையும் இல்லறமும் எல்லாமும் சட்டென முடிந்து சூனியமே மிஞ்சும். 

புதுமை என்னும் பெயரில் பெண்ணியம் நன்னயம் கெட்டு தன்னையும் கெடுத்து தன் சமுதாயத்தையும் சீரழிக்கும் அவலம் நீங்க வேண்டும்.  புதுமை என்றால் என்ன என்றொரு தெளிவு வேண்டும்.

பெண்ணாக வாழ்தலே பெண்ணுக்குப் பெருமை; பெண்ணாக வாழ்ந்தாலே பெண்ணியம் சிறக்கும். பெண்களை அடிமைப் படுத்தி வைத்திருந்ததற்காக சிலிர்த்தெழுந்திருக்கும் பெண்ணியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்; ஊக்குவிக்கவும் வேண்டும் அவர்கள் மென்மேலும் சிறப்புகளும் புகழும் பெற எல்லா விதத்திலும் உதவ வேண்டும்,அதுவே சரியான ஆண்மை.

அதே சமயம், பெண்ணியம் சிறக்க என்ன வழி என்பவற்றில் மிகவும் கவனமாகவும் உண்ணிப்பாகவும் சில கோட்பாடுகளை வகுத்துக் கொள்ளவேண்டும்.

பெண்ணியம் சிறக்க:

பெண்மையின் மென்மையோடு பெண்ணியம் சிறக்க வேண்டும்.  கற்றுத் தெளிவுற வேண்டும். உலக மற்றும் மார்க்கக் கல்வியில் சிறக்க வேண்டும்.  நன்மை எது தீமை எது என்று பகுத்துணரப் படிக்க வேண்டும். பாசமெனும் ஆயுதத்தால் தம் சொந்த பந்தங்களைக் கட்டிப்போட வேண்டும்.

வீட்டில் உழைக்க வேண்டும், குடும்பம் தழைக்க வேண்டும். ஊட்டி வளர்க்கும்போது உள்ளன்பைக் காட்டி வளர்க்க வேண்டும்.  பொருளாதாரத் தேவை அழுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டும் தன் உடைதனைப் பேணி அன்னிய ஆடவரிடமிருந்து விலகி உழைத்தல் நடைமுறைச் சாத்தியமெனில் வேலைக்குப் போய் பொருளீட்டி தன்னிறைவு பெறவேண்டும். அங்கங்கள் மறைக்கச் சொல்வது அடிமைப் படுத்துவதா? பெண்மையெனும் தன்மையே பெண்ணுக்குச் சிறப்பென்ற சீர்திருத்தம் செப்பினால் பெண்ணுரிமைப் பறிப்பதாய் பிதற்றுதல் நேர்மையா?! தெருச்சரக்கா பெண்மை திறந்து கிடக்க?
தீயவர் கண்கள் தீண்டிக் கெடுக்க? நட்சத்திர அந்தஸ்தல்லவா நங்கையர்க்கு உலகில்?

மதங்களின் தலைப்பின் கீழ் ஒன்றும் வேண்டாம், புர்கா என்று பெயரேதும் அவசியம் அல்ல.  அங்கங்கள் தெரிய ஆபாசமாய் அணியாமல் பெண்களே நீங்களே ஓர் உடையை வடிவமையுங்கள். அது பெண்ணின் அழகை வெளிச்சம்போட்டு காட்டாதிருக்க வேண்டும்; இயல்பாகவே பெண்ணின்பால் ஈர்க்கப்படும் ஆடவரைக் தவறானக் கண்ணோட்டத்தில் கவர்ந்திழுக்காதிருக்க வேண்டும். பெண்கள் சமூகத்தில் தத்தமது அகத்தழகால் போற்றப்பட வேண்டுமேயன்றி சடுதியில் அழிந்து போகும் புறத்தழகுக்காகவல்ல. அரைகுறை ஆடையோடு வலம் வரும் பெண்ணிற்கு ஏற்படும் கொடுமைகளுக்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்லலாகாது. ஆணும் பெண்ணும் ஒருவர்மீது ஒருவர் ஈர்க்கப்படும் குண நலன்களோடுதான் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.  மனக் கட்டுப்பாடுகளை உடைத்தொழிக்கும் திறன் தோற்றத்திற்கு உண்டு என்பதே இயற்கை. மானம் காப்பது அனைவரின் கடமை அதிலும் பெண்களின் மானம் பிரத்தியேக கவனம்கொண்டு பாதுகாக்கப்பட வேண்டியதாகும்.

பெண்கள் மீது ஆண்களால் விலங்குகளாக அணிவிக்கப்பட்ட சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் வீசி யெறிந்து விடலாம்.; படைப்பிலேயே இறைவனால் விதைக்கப்பட்ட பண்புகளை, பெண்மையெனும் தன்மையை உதறிவிட இயலாது; உதற முனையவும்கூடாது.

ஊடகங்களில் பெண்களின் கைகள் ஓங்கியிருப்பது வரவேற்கத்தக்கதே.  ஆனால், புதுமை, நவீனம் என்னும் சமாலிப்பில் எழுத்துகளின் ஆடை உறித்து ஆபாசமாகவும் பெண்களின் அங்கங்களின் கொச்சைப் பெயரை உபயோகித்து எழுதுவதும் முட்டாள்தனமானது. நவீனத்துவம் என்னும் வேடத்தில் வசதியாக மறைந்துகொண்டு ஆபாசமாக எழுதுவதை பெண்ணியத்தின் எழுச்சி என்று ஏற்றுக் கொள்ள முடியாது.  எத்தனையோ பெண்கள் நாகரிகமான முறையில் இலக்கியம் படைக்கிறார்கள், எழுத்தால் புரட்சி செய்கிறார்கள், மாற்றங்கள் கொணர்கிறார்கள்.  அத்தகையோர்களே புதுமைப் பெண்கள்.

எழுத்தோ சொல்லோ சீர்திருத்தமாக அமைய வேண்டும்; சமுதாயத்தை நாற்றமடிக்கச் செய்யக் கூடாது.   அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களோடு ஆண் பெண் உறுப்புகளை வர்ணிப்பது படுக்கையறைக் காட்சிகளை அப்பட்டமாக எழுதுவது போன்றவற்றால் யாருக்கு என்ன பயன் என்று புரியாமல் பெண்ணியம் நவீன உலகக் கொடியைக் கைகளில் பிடித்து கோஷம் எழுப்புவதைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது.  நன்மை என்று கருதி அவர்கள் தமக்கு எதிராகவே காரியமாற்றுகிறார்கள். 

புகழ்போதைக்கோ பணத்தேவைக்கோ பெண்மையை தாரை வார்க்கும் நிலை மாற வேண்டும். பெண்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி பெண்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தால் மட்டுமே பெண்ணியம் தழைக்கும்; பெண்மையும் பிழைக்கும்.

sabeer abushahruk

13 Responses So Far:

Yasir said...

பெண்ணியம் பற்றிய கண்ணியமான கட்டுரை.....நான் தஞ்சாவூரில் பெண்கள் தினத்தன்று நடந்த பேச்சுப்போட்டியில் பேசியது நினைவுக்கு வந்து சென்றது...வாழ்த்துக்கள் காக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பெண்ணியம் சிறக்க சொன்னவைகள் அனைத்தும் முத்துக்கள் !

இங்கே துபாயில் பணியில் இருக்கும் ஒரு சகோதரிக்கு மின்னஞ்சல் வழி அனுப்பி இதனை வாசித்து விட்டு கருதினைக் கேட்டேன்...

அவரின் மின்னஞ்சல் பதில் "கட்டுரையாளர் முப்பது வருடங்களுக்கு மேலாக இன்றைய நிலைவரை கண்டு வந்த பெண்ணியம் பற்றி அற்புதமாக சொல்லியிருக்கிறார்" என்பதே !

பட்டவங்களுக்குத்தானே அந்த பரிதவிப்பு தெரியும் !

Ebrahim Ansari said...

நெஞ்சில் மயிலிறகால் மெல்ல வருடி விடுவது போன்ற நடை.

சொல்லப்படவேண்டிய கருத்துக்கள். எந்த ரூபத்திலும் தம்பி சபீர் அவர்களால் ஜொலிக்க முடியும் என்பதற்கு உதாரணம்.

பாராட்டுக்கள்.

ZAKIR HUSSAIN said...

//பெண்மையின் மென்மையோடு பெண்ணியம் சிறக்க வேண்டும்//

பெண்மையின் அழகே இதில்தான்.எப்போது மென்மை கீறல் விழுகிறதோ...பூகம்பம்தான்.


//மஞ்சள் முகம் மாற்றி பருக்களில் முடியும் களிம்புகளைத் தடவுவதிலும், இயற்கையான பொலிவைச் செயற்கையான எழிலாக மாற்றியமைப்பதிலும் புதுமை செய்தனர்.//

விடுங்க பாஸ்..காஸ்மெட்டிக் கம்பெனிக்காரனுங்கல்லாம் திட்டுவானுங்க நம்மளை

Unknown said...

அன்புக் கவிஞர் சபீர்,

கவிஞன் கட்டுரை எழுதினால் இப்படித்தான், அதுவும் கவிதையாகவே
ஆகிவிடும். அழகிய நடையில் தேவையான தளத்தில் வெற்றிநடை
இட்டிருக்கிறீர்கள். பெரும்பான்மை எனக்கு ஏற்புடையவையாகவே
இருக்கின்றன. பாராட்டுக்கள்.

>>>>>>>
மனைவிக்கு எதிரான பிரச்னைகளில்
வெற்றியைவிடச் சுவையானது
அவளிடம் தோற்பது
>>>>>>>

வெகு அழகு. அது தோற்பதா? அதுதானே வெற்றி :)

>>>>>>>
மதங்களின் தலைப்பின் கீழ் ஒன்றும் வேண்டாம், புர்கா என்று
பெயரேதும் அவசியம் அல்ல. அங்கங்கள் தெரிய ஆபாசமாய்
அணியாமல் பெண்களே நீங்களே ஓர் உடையை வடிவமையுங்கள்.
>>>>>>>>

அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் சபீர். இதை நான்
வரவேற்கிறேன்.
வித்தியாசமான உடைதான் பலரையும் கவர்ந்திழுக்கிறது என்பதை நாம்
புரிந்துகொள்ளவேண்டும். பார்வையை விகராமாய் ஈர்க்கும் எதுவும்
சரியல்ல. உற்று நோக்கக் காரணமாய் இருக்கும் எதுவும் சரியல்ல.

இயல்பாய் கண்ணியமாய் மதிப்பு தருவதாய் அமையும் ஆடையே
பெண்களுக்குச் சரி. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்
அதேதான்.

ஜீன்ஸ்போட்டு கௌரவமாகத் இருக்கும் பெண்களையும் நான்
பார்க்கிறேன், சேலைகட்டியும் சில்மிசம் செய்யும் பெண்களையும் நான்
பார்க்கிறேன்.

அவர்கள் தங்கள் பார்வைகளைத்
தாழ்த்திக் கொள்ள வேண்டும்;
தங்கள் வெட்கத் தலங்களைப்
பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;
தங்கள் அழகலங்காரத்தை
அதினின்று தெரியக் கூடியதைத் தவிர
வெளிக் காட்டலாகாது;
இன்னும் தங்கள்
முன்றானைகளால் அவர்கள்
தங்கள் மார்புகளை
மறைத்துக் கொள்ள வேண்டும்;
(குர்-ஆன் 24:31.)

ஆடையால் வெட்கத்தலங்களை மறைத்துக்கொள்ள வேண்டும்.
அதைத்தான் இறைவன் கூறுகிறான். ஆடைக்கு மேல் ஆடை
இடுவதெல்லாம் நாம் எங்கே இருக்கிறோம் என்ற இடத்தைப்
பொருத்தது. ஊருக்கு ஏற்ற ஒழுக்கமான ஆடையே அவசியமானது.
இடம் பொருள் ஏவல் பார்த்து, அந்த இடத்திற்கு ஏற்ப
ஆடையணியவேண்டும். வெறியைத் தூண்டும் ஆடைகளை உடுத்துவது
கூடாது.

டெல்லியில் உடுத்தும் உடை பட்டுக்கோட்டையில் வெறியைத்
தூண்டுவதாய் இருக்கும். பட்டுக்கோட்டையில் உடுத்தும் உடை
சவுதியில் வெறியைத் தூண்டுவதாய் இருக்கும்.

ஆகவே இடம் பொருள் ஏவல் மிக முக்கியம். ஒரு பெண்ணுக்கு இது
மிக நன்றாகத் தெரியும். எங்கே நாம் வெறித்து நோக்கப்படுகிறோம்
என்று பெண்கள் நன்கு அறிவார்கள். அந்த வெறிப்பார்வைகளை
விரும்பும் பெண்கள் வளர்வதுதான் கேடு.


மேலும்,
தாங்கள் மறைத்து வைக்கும்
அழகலங்காரத்திலிருந்து
வெளிப்படுமாறு
தங்கள் கால்களைத் தட்டி
நடக்க வேண்டாம்;
(குர்-ஆன் 24:31. )

மறைக்க வேண்டிய அனைத்தையும் ஆடைக்கு மேல் ஆடையிட்டு
துப்பட்டி பூர்கா என்று இட்டு மூடிக்கொண்டிருந்தாலும், சில்மிசங்கள்
செய்துவிட்டால் எல்லாம் போச்சே!

அன்புடன் புகாரி

sabeer.abushahruk said...

//கவிஞன் கட்டுரை எழுதினால் இப்படித்தான், அதுவும் கவிதையாகவே
ஆகிவிடும்//

அப்ப கட்டுரை இல்லையா இது? :-( / :( /:(
இனிமே நான் எழுதல போங்கப்பா.

sabeer.abushahruk said...

சகோ கவி புகாரி:

அங்கங்களை மறைக்க மட்டுமல்ல, ஆடையின் அலங்காரங்கள் பெண்மைக்கு கவர்ச்சியை/அழகைக் கூட்டிக்காட்டுகிறது எனும் அபிப்ராயத்தில்தான் மறைப்பதற்காக புர்காவை வடிவமைத்தார்கள்.

ஆனால், தற்போது புர்காக்களில் செய்யப்படும் எம்ராய்டரி, கல் வேலைப்பாடுகள் சாதாரண் சுடிதாரை விட கவர்ச்சியாக புர்காவைக் காட்டுகின்றன.

எனவேதான் புர்கா என்று சொல்லாமல் கவர்ச்சியில்லாத உடைதான் புர்காவின் அர்த்தத்தை வரையறுக்கும் என்று நினைக்கிறேன். இங்கு துபையில் உடலை ஒட்டியே இருக்கமாக அணியப்படும் புர்காவால் பயன் குறைவே.

Unknown said...

>>>>>>>
அங்கங்களை மறைக்க மட்டுமல்ல, ஆடையின் அலங்காரங்கள் பெண்மைக்கு கவர்ச்சியை/அழகைக் கூட்டிக்காட்டுகிறது எனும் அபிப்ராயத்தில்தான் மறைப்பதற்காக புர்காவை வடிவமைத்தார்கள்.
>>>>>>>

ஆமாம். நோக்கத்தைப் புரிந்துகொண்டால், எந்த ஆடை தேவை என்பது புரிந்துவிடும்.

அலங்காரமில்லாத எளிமையான கண்ணியமான ஆடையே தேவை. அது புர்காவாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. எது அலங்காரமற்றதாகவும் எளிமையாகவும் கண்ணியமாகவும் பெண்மையை மதிக்கும் வகையிலும் இருக்கிறதோ அதுவே தேவை.

மூடியதே
திறந்ததைவிட
கவர்ச்சியாய் இருந்தால்,
மூடுவதால் ஏது பயன்?

>>>>>>>>>>>>
ஆனால், தற்போது புர்காக்களில் செய்யப்படும் எம்ராய்டரி, கல் வேலைப்பாடுகள் சாதாரண் சுடிதாரை விட கவர்ச்சியாக புர்காவைக் காட்டுகின்றன.
>>>>>>>>>>>>

அவ்வளவுதான் மேட்டர் :)

>>>>>>>>>>>>>
எனவேதான் புர்கா என்று சொல்லாமல் கவர்ச்சியில்லாத உடைதான் புர்காவின் அர்த்தத்தை வரையறுக்கும் என்று நினைக்கிறேன். இங்கு துபையில் உடலை ஒட்டியே இருக்கமாக அணியப்படும் புர்காவால் பயன் குறைவே.
>>>>>>>>

மிக மிகச் சரி

அன்புடன் புகாரி

Unknown said...

கண்ணியம் மிக்கது பெண்மை.
எண்ணியும் பார்த்து எடையிடவியலாத
புண்ணியம் மிக்கது பெண்மை.
உன்னையும் என்னையும்
உள்ளிலே சுமந்து உயிரிலே உணர்ந்து,
ஈன்றெடுத்து, கணக்கிடவியலாத
கூலித்தொகை கடனாய்
நம்மீது நிலுவையில் நிற்க
அதைத் தள்ளுபடி செய்த
தியாகத்தின் திருவிளக்கு பெண்மை.

விண்ணையும் மண்ணையும்
உலகத்தில் படைத்தவன்
தன்னையும் படைத்து
தரணிக்கத் தரவிழைந்து
தனக்குப் பதிலாக அன்னையைப் படைத்தான்

அவன் தன் பண்புகளாம்
கருணையையும் இரக்கத்தையும்
அன்பையும் அருளையும்
அவளுள் விதைத்தான்;
அன்னையென அமைத்தான்.




ஆண் ஆணாகப் பிறந்து
ஆணாக வளர்ந்து ஆணாகவே மரிக்கின்றான்;
பெண்னோ பெண்ணாகப்
பிறந்து பிறர்க்காக வாழ்ந்து,
நிலவாக வளர்ந்து ஜொலித்தவள்
பிறையெனவேத் தேய்ந்து,
தாயாகத் திகழ்ந்து,
சாகாமல் இருக்கின்றாள்;
சிந்தையில் ஜொலிக்கின்றாள்.




எவர் மனத்திலாவது
அவர்தம் அம்மா இறந்து விட்டிருக்கிறாளா?
வேலை நிமித்தமோ
வேறுவேறு தேவைக்கோ
வீட்டை விட்டு வெளியேச்
சென்றவனுக்கு வீடே மையப்புள்ளி என்பதுபோல,
இறந்தாலும் இருந்தாலும்
எல்லோருக்கும் மையப்புள்ளி
அம்மா அல்லவா?
இறக்காமல் இருக்கும் அம்மா
நம் வழியெல்லாம் வாய்க்கும்
வாச மலர்த் தோட்டமெனில்
இறந்து நம் இதயத்தில் இருக்கும்
அம்மா பாலைவனச் சோலை
-----------------------------------
அப்ப கட்டுரை இல்லையா இது? :-( / :( /:(
இனிமே நான் எழுதல போங்கப்பா.
----------------------------------------------

சபீர் காக்கா மேல உள்ளது என்னவாம் ? :) :)

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் கவிவேந்தர் சபீர், அஸ்ஸலாமு அலைக்கும்!

நானும் நீங்களும்
வானூர்தியில் ஏறும்வரை
பேசிக் கொண்ட “பெண்ணியம்”
யோசிக்க வைத்தனவோ?

கவிஞனுக்குக் கட்டுரையும்
கவிதை நடைபயிலும் பாடசாலை
குன்றாப் புகழ்பெற்ற கவிப்பேரரசும்
“மூன்றாம் உலகப்போர்” முரசொலிப்பதும்
கவிதையாய் அமைந்தக் கட்டுரைதானே!

அன்புடன் புகாரி அவர்களின் கருத்தும் மிகச் சரியாகக் கவிவேந்தர் சபீர் அவர்களின் கருத்தை ஒட்டியே உள்ளதும்; என்னுடைய எண்ணமும் அஃதே என்பதும் வியப்பன்று; கவிதைப் படைப்போர் சிந்தனைகள் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதும் அதனாற்றானோ?

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சபீர்; : பெண்ணியம் கவிதை கட்டுரையாகி இருக்கிறது.
(கவிதையில் இப்படி விரிவாக சொல்ல முடியாதே!) இருந்தாலும் கவிதையோ - கட்டுரையோ : தாய்மை பற்றியும் , மனைவியைப் பற்றியும் கூடவே பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வும் அழகிய நடையில் கலந்து வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உயர்ந்த பெண்மை பற்றிய இயல் பெண்ணியல். அது பெண்ணியமாக உருமாறி கண்ணியமாகவும் எழுதியிருப்பது மிக அருமை.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். பெண்ணியம் பற்றி பலவாறு பின்னியும் எடுக்கமுடியும் அந்த பெண்ணியத்தை காக்கும் ஆடையாக என்பதை சொல்லியும், விளக்கியும் காட்டிவிட்டீர்கள். இங்கே பெண்ணின் மானம் காக்கும் ஆடைஎன்பதே அந்த் மானம்தான்.மானம் காக்க நல்ல மனம் உள்ள பெண்களே பெண்ணியத்தின் பெட்டகம்.ஒவ்வொருவரியும் கவிதையாய் வரிந்து கட்டுகிறது ஆனாலும் நீங்கள் எழுதும் எழுத்தே கவிதைபோல் இருப்பது ஆச்சரியமல்ல என்னைப்பொருத்தவரை அதுதான் உங்கள் தன்மை!தட்டி கொடுத்து, செல்லமாய் குட்டிகாட்டி நல்லதாய் அமைந்தது இந்த பெண்ணியம் கட்டுரை பெண்ணியம் போலவே கவிதையாய் அமைந்தது இயல்பே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு