நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஜெட் ! ஜெட்லி! பட்! பட்ஜெட்! பட்டும் படாத பட்ஜெட். 27

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஜூலை 15, 2014 | , , , , , ,

அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலும் – அந்தத் தேர்தலில் பாரதீய ஜனதா அள்ளி விட்ட வாணவேடிக்கை வாக்குறுதிகளும் – அவற்றை நம்பி மக்கள் அந்தக் கட்சிக்கு அளித்துள்ள மகத்தான வெற்றியும் – அதைத் தொடர்ந்து ஏற்பட்ட புதிய ஆட்சி தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கும் பட்டை நாமப் பரிசுகளின் பட்டாளத்தில் இப்போது பட்ஜெட்டும் சேர்ந்து இருக்கிறது.

கடந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்ற ஒரு பட்ஜெட்டின் விமர்சனக் கட்டுரையில் நான் குறிப்பிட்டதை மீண்டும் குறிப்பிடுகிறேன். பட்ஜெட் என்பது அறிஞர் அண்ணா சொன்னது போல் BUD GET என்ற இரண்டு சொற்களால் ஆனது. BUD என்றால் ஒரு மலரின் மொட்டு என்று பொருள். இதைத்தான் தொடர்பு படுத்தி தனது முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்த போது அண்ணா சொன்னார். இந்த மலரின் மொட்டு இப்போதுதான் கட்டவிழ்கிறது. இது மணம் வீசுமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும் என்றார். அதே போல் பாரதீய ஜனதா ஆட்சிப் பொறுப் பெற்று அவைக்கு அளிக்கும் முதல் பட்ஜெட் இது . இந்த முதல் மலர் இன்று தனது மொட்டுக்களை விரித்திருக்கிறது. இது மணம் வீசுமா - குணம் தருமா அல்லது குழிபறிக்குமா என்பதைச் சொல்ல வேண்டுமானால் “ போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் “ என்று சொல்லி இந்த விமர்சனத்தைத் தொடங்கலாம். 

எடுத்த எடுப்பிலேயே சொல்வதானால் இந்த பூ பட்ஜெட் – தாமரைப் பூவின் பட்ஜெட் . பொதுவாக தாமரைப் பூ அழகாக இருக்கும் ஆனால் மணக்காது . எட்டாத உயரத்தில் இருக்கும் சூரியனைப் பார்த்து பல்லிளிக்கும்; இழுக்க முயற்சிக்கும் ஆனால் அருகில் இருக்கும் வண்டுகளை அவ்வளவாகக் கவராது. பூக்களின் புகுந்த வீட்டு சீதனமான தேன் துளிகள் தாமரைப் பூவில் வலைவீசிப் பார்த்தாலும் வாய்க்காது. நீர் நிறைய இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்கும் தாமரைப் பூ, நிலத்தில் பூத்துப் படரும் மல்லிகைக் கொடிக்கு இணையாகாது. இப்போது அருண்ஜெட்லி சமர்ப்பித்து இருக்கும் இந்த அருணோதய பட்ஜெட்டும் அப்படித்தான் இருக்கிறது. தாமரைப் பூவின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லும் சித்த வைத்தியர்கள் தாமரைப் பூ மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று கூறுகிறார்கள். இந்தப் பூவோடு அடிக்கடி புழங்குகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இதுவாகும் என்ற தொடக்கத்தை அடக்கத்தோடு சொல்லி அதன் அம்சங்களை அலசுவோம். 

ராஜாதி ராஜ ராஜ கம்பீர புலிப்பால் குடித்த பராக்கிரம நரேந்திர மோடி மகராஜ் பராக்! பராக்! பராக்! என்று பறையரிவித்து அவர் வந்தால் மண்ணைப் பொன்னாக்குவார் – பூனையை யானையாக்குவார் – கிளியை புளியாக்குவார் என்றெல்லாம் கூறினார்கள். பதவியேற்ற உடனே விலைவாசி குறைந்துவிடும் – இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தும் மந்திரக் கோல் அவர் கைகளில் இருக்கிறது- அவர் ஆண்ட குஜராத் மாடலில் ஆட்சி நடக்கும்- நிதிப் பற்றாக்குறை நீங்கி கஜானா நிரம்பி வழியும்- வேலை வாய்ப்புகள் வீடுதேடி வந்து கதவுதட்டும்- அரசு நிர்வாகம் முன் எப்போது இல்லாத அளவில் விரைவான வேகத்தில் செயல்படும் – அதிகாரிகள் அலறுவர்- வரி ஏய்ப்போர் கதறுவர்- கருப்புப்பணம் காலடியில் வந்து மண்டியிடும்- என்றெல்லாம் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு போர்காலகனவுலகப் பின்னணியில் நிதியமைச்சர் திரு. அருண் ஜெட்லி தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து இருக்கிறார்.

ஆட்சி மாறியதும் எரிவாயு சிலண்டர் விலை அண்மையில் ஏற்றம் கண்டது. அதற்குக் காரணம் முன்பு ஆண்ட காங்கிரஸ் ஆட்சிதான் என்று சொல்லப்பட்டது. டீசல் விலை ஏற்றம் கண்டது. அதற்கும் காரணம் காங்கிரஸ் ஆட்சிதான் என்று கூறப்பட்டது . இரயில் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டன; இதற்கும் காரணம் காங்கிரஸ் ஆட்சி தயாரித்து வைத்திருந்த விலைஉயர்வுத் திட்டங்கள் தான் என்று கூறப்பட்டன . ஆனால் ஆட்சிக்கு வந்து சமர்ப்பித்துள்ள பட்ஜெட் மட்டும் அருண் ஜெட்லி தயாரித்ததாக ஆளுக்கு ஆள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருப்பதைத்தான் நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை. இப்படிப் புகழ்வோர் வரிசையில் இராமதாசரும், விசயகாந்தனும், வைகோவும் நிற்பது பற்றி நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு நீ முந்தியா! நான் முந்தியா! என்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் தானைத்தலைவர் கருணாநிதியும் கூட நிற்பதுதான் வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருக்கிறது. 

உண்மையில் , ஒரு அரசுமாற்றம் நிகழும்போது முந்தைய அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின் தொடர் அடிப்படையில்தான் தனது முதலாவது நிதிநிலை அறிக்கையை அருண் ஜெட்லி தயாரித்தாக வேண்டிய நிலைப்பாடு கட்டாயமாக இருந்ததை எந்த அரசியல் அறிவியலாரும் மறுப்பதற்கு இடமில்லை. முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் தயாரித்த நிதிநிலை அறிக்கைக்கு பார்டர் கட்டி, பெயின்ட் அடித்து, சீரியல் செட் கட்டி, ஜிகினா காகிதங்களால் ஜோடித்துத் தந்திருப்பதுதான் அருண்ஜெட்லியின் இந்த பட்ஜெட் என்பது அரசியல் நோக்கர்களுக்கு அரை சதவீத சந்தேகம் கூட இல்லாமல் புரியும். அதுதான் நடைமுறையும் கூட.

ஒரு புதிய அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் அது சமர்ப்பிக்கும் முதலாவது நிதிநிலை அறிக்கையை பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் ஆய்ந்து பார்த்து விமர்சிப்பது தவிர்க்க இயலாதது. இதற்குக் காரணம் ஆட்சிக்கு வர முன்பு அவர்கள் அளித்த தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகளின் வாடை வீசுகிறதா என்று பார்ப்பது இயல்பான ஒன்று.. அதே நேரம் முதல் நிதிநிலை அறிக்கையிலேயே தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகள் நிழலாடுகிறதா என்று பார்க்க நினைப்பதும் பொருளாதார ரீதியில் நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றுதான். ஆனால் மக்கள் அவற்றை எதிர்பார்ப்பதை தவறு என்று சொல்ல இயலாது.

பொதுவாக பொருளியல் வல்லுனர்கள் நிதிநிலை அறிக்கையில் நான்கு அம்சங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். அவை:- 
  1. இருக்கும் பொருளாதார மூலவளங்களை கட்டுக்குள் வைத்தல், 
  2. இருக்கும் மூலவளங்களையும் இனி வளர்ந்து வருமென்று உத்தேசிப்பதையும் வைத்து வளர்ச்சிக்கான தொடர்ந்த தொலை நோக்குத் திட்டங்கள், 
  3. வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வது, 
  4. தொழில் மற்றும் விவசாயத்தின் மீது முதலீடு செய்பவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றச் செய்வது மற்றும் வளர்ப்பது. 
ஆகியவைதான் அந்த நான்கு அம்சங்கள். அருண் ஜெட்லி சமர்ப்பித்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் இந்தக் கொள்கைகள் மேலோட்டமாகத் தென்படுகிறதே அன்றி உருப்படியான திட்டங்கள எதுவும் ஊடுருவவில்லை என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

வருமான வரியின் தனிநபர்களின் உச்சவரம்பு இரண்டரை இலட்சமாக உயர்த்தப் பட்டு இருக்கிறது. இதைப் பற்றி பெருமைப்பட ஒன்றுமில்லை. காரணம் கடந்த வாரம் தக்காளி ஒரு கிலோ பதினைந்து ரூபாய் இந்த வாரம் முப்பது ரூபாய். விலைவாசிகள் ஏறிக் கொண்டல்ல எகிறிக் கொண்டு இருக்கும்போது அரை இலட்சம் உயர்வு ஒன்றும் அதிகமல்ல என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உச்சவரம்பை இன்னும் அரை லட்சம் கூட்டி அறிவித்து இருந்தால் அரசு ஊழியர்களுக்கும் மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பப்பிரிவில் பணியாற்றுவோருக்கும் சிறு இளைப்பாறுதல் கிடைத்திருக்கும். 

கங்கை நதியை தூய்மைப்படுத்த ரூ.2,047 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் ஆனால் கங்கையே சூதகமானால் எங்கு போய் முழுகுவது” என்பதுதான் புரியவில்லை. பிணங்களை கங்கையில் விடுவது இறந்தவர்களை மோட்சத்துக்கு கொண்டு சேர்க்கும் என்கிற நம்பிக்கை உள்ள இந்து சகோதரர்கள் நிரம்ப வாழும் நாட்டில் – காசியில் எரிறியும் பிணங்களைத் தின்னும் சாமியார்கள் சுற்றித் திரியும் சூழ்நிலையில் அவர்களை ஒரு பகுத்தறிவுப் பாதைக்கு மாற்ற அரசு முயற்சி எடுப்பதுதான் கங்கையை உண்மையிலேயே தூய்மைபடுத்துவதற்கு அச்சாரமாக இருக்க முடியும். பிணங்கள் கங்கையில் விடப்படும்போது அவற்றுடன் சேர்த்து பூமாலைகளும் இறந்தவர்கள் பயன்படுத்திய அல்லது அவர்களுக்கு விருப்பமான ஆடைகள் மற்றும் மெத்தை தலையணை வரை கங்கை நீரில் விடப்படும் நிலை உள்ள வரை கங்கை எப்படி தூய்மையாகுமென்று புரியவில்லை. இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதைவிட்டுவிட்டு கங்கையையே தூய்மைப் படுத்த என்று ஒரு பெரும் தொகையை எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கி இருப்பது வியப்பும் வேடிக்கையும் நிறைந்த செயலாகவே தோன்றுகிறது. அருளாதாரம் என்று நம்பும் விசயத்துக்கு பொருளாதாரத்தை பலியிடும் நிகழ்வு இது.

காலமெல்லாம் முழங்கி வந்த நதி நீர் இணைப்பைத் தொடங்குவதற்கு நூறு கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஒரு தொடக்கமாகக் கருதி வரவேற்கலாம். மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் வழக்குகள் நீர்த்துப் போகவேண்டுமானால் நாட்டின் நீர்வளம் நாடு முழுதும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். வாஜ்பாய் அவர்களின் காலத்திலேயே எடுத்துவைக்கபட்ட இதற்கான முதல் முயற்சியின் அடிகள், “வளர்ச்சியின் நாயகன் ” காலத்தில் தடைகளைக் கடந்து நிறைவேற்றப்பட்டால் வரலாறு அதனை வாழ்த்தும். வருங்கால பட்ஜெட்டில் இதற்கான முன்னெடுப்பு தீவிரமாக இருக்குமென்று நமது நம்பிக்கையை இப்போது பதிவு செய்வோம்.

நெடுஞ்சாலைகள் வளர்ச்சியை கனிவுடன் பார்ப்பது, நேரடி வரிகளை அதிகம் போட்டுத் தாக்காதது ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கையில் உண்மையிலேயே வரவேற்க வேண்டிய அம்சங்கள்தான். எல் இ டி டிவிக்களின் பிக்சர் ட்யூப் போன்ற சில உபரிப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைத்திருப்பதும் பாராட்டத் தக்கதுதான். இதனால் உள்நாட்டு உற்பத்திகள் உயர வாய்ப்புண்டு. 

சேமிப்புகளுக்கு ஊக்கம் தரும் விதத்தில் சில அறிவிப்புகள் வந்துள்ளன. உதாரணமாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், முன்தேதியிட்டு வரிகள் விதிப்பதில்லை என்கிற முடிவை குறிப்பிடலாம். அத்துடன் அத்தகைய ஊக்கங்களின் நோக்கம் சேமிப்புகளை பங்குச் சந்தைகளை நோக்கி திருப்பி விடுவதாக இருக்கலாம் என்கிற தோற்றம் கிழக்கே சூரியன் உதிப்பது போல் உதித்திருப்பதாகத் தோன்றுகிறது. இதுவும் ஒரு நல்ல அம்சம்தான். இதனால் அடுக்குப் பானைகளில் தஞ்சம் புகுந்துள்ள சேமிப்புகள் கூட பங்குச் சந்தைகளுக்கு வர வாய்ப்பும் சேமிப்புகளுக்கு ஒரு புதிய பரிணாம வளர்ச்சியும் ஏற்பட வாய்ப்புண்டு. 

எல்லா நகர கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் தடையில்லாத மின்சாரம் தரப்படும் என்றும் இதற்கான கால அளவையும் 2019 ஆம் ஆண்டுக்குள் என்றும் சொல்லபட்டிருப்பது- இதை நாங்கள் செய்யபோகிறோம் ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இதைக் கேட்காதீர்கள் ஐந்தாண்டுகாலம் அவகாசம் தாருங்கள் என்று கேட்டிருப்பது அடுத்த தேர்தலையும் மனதில் வைத்தே என்று எண்ணத் தோன்றினாலும் நோக்கம் நல்ல நோக்கம் என்று பாராட்டலாம். அத போல் வீட்டுக்கு வீடு கழிப்பறை வசதிகள் விசயத்திலும் அரசு மேற்கொண்டுள்ள நிலையையும் வரவேற்கலாம். ஆனால் இதற்கான செயல் திட்டங்கள் எதையும் குறிப்பிடாமல் விட்டிருப்பது நாம் ஏற்கனவே கூறியிருப்பதுபோல் ஜிகினா வேலையோ என்று சந்தேகிக்கவும் வைக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் என்ன சாதனைகளைச் செய்தார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பபட்டால் அவர்கள் தரும் சாதனைப் பட்டியலில் முதலில் இருப்பது நூறுநாள் வேலை வாய்ப்பு என்பதுதான். ஆனால் நடை முறையில் இந்தத் திட்டம் அரசின் நிதிவளத்தை ஆக்கபூர்வமான விஷயத்துக்கு அல்லாமல் சும்மா அள்ளிவிட்ட கதையாகவே இருந்தது. செய்யப்பட்ட செலவுக்கும் அதனால் விளைந்த பயனுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஆனால் இப்போது திரு அருண் ஜெட்லி ஒரு உருப்படியான திட்டத்தை முன் வைத்து இருக்கிறார் . இதற்காக அவரைப் பாராட்டலாம். 

காரணம் இந்த வலை தளத்தில் விளை நிலங்களைப் பற்றிய ஒரு பதிவை நாம் எழுதிய போது நூறு நாள் வேலைத் திட்டத்தை விவசாய நிலங்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டுமென்று கேட்டிருந்தோம். இப்போது அருண் ஜெட்லி இப்போது நூறுநாள் வேலைத்திட்டத்தை விவசாயத்துடன் இணைத்து இருக்கிறார். இது செயல்பாட்டுக்கு வந்தால் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். இவ்வளவு நாள் நூறுநாள் வேலை என்று வருகிற கூலித் தொழிலாளர்கள் கூடையைக் கவிழ்த்துப் போட்டுவிட்டு காட்டுக் கருவைச் செடிகளின் நிழலில் அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுவிட்டுப் போய்க் கொண்டு இருந்தார்கள். இந்த மனித உழைப்பை விவசாயத்துடன் இணைத்திருப்பதற்கு மிகப் பெரிய பாராட்டை வழங்கலாம். 

காப்பீட்டுத்துறை, நாட்டின் பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் நேரடி அந்நிய முதலீடுகளை வரவேற்று அனுமதி அளித்திருப்பது அடிப்படையில் அரசியல்வாதிகளின் கருப்பை வெள்ளையாக்கும் நடவடிக்கையைச் சார்ந்திருக்கும் என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது. அவ்வாறு வரும் முதலீடுகளை அரசு எவ்வாறு கையாளப் போகிறது, கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போகிறது முதலீடு செய்பவர்களின் வாரிச்சுருட்டும் இலாப நோக்கை எப்படி வகைப் படுத்தப் போகிறது ஆகிய அம்சங்களைப் பொறுத்தே இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். 

நேரடி அந்நிய முதலீடுகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் பொதுத்துறை நிறுவனங்களில் – நவரத்னா எனப்படும் வெற்றிப் பாதையில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்நாட்டின் தனியார் முதலீடுகளைப் பற்றி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விலைவாசிக் குறைப்பு , டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைக் கூட்டுவதற்கான திட்டங்கள், உற்பத்தி ஊக்குவிப்பு, ஏற்றுமதிகள் ஊக்குவிப்பு, இறக்குமதிக் குறைப்பு ஆகியவை பற்றியும் நிதியமைச்சர் தொட்டுச் சொல்கிறாரே தவிர எதிலும் பட்டுக் கொள்ளவில்லை. 

அதே போல், கறுப்புப் பணப் பிரச்னை எவ்வாறு நாட்டி உலுக்குகிறதோ அதே போல் பெரிய நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத வாராக்கடன் , வரிகளின் நிலுவைகள், ஆகியவைகளை வசூலிக்க இந்த அரசு என்ன செய்யபபோகிறது என்ற கேள்விக்கு இந்த பட்ஜெட்டிலும் விடையில்லை. இதற்கு முன்பு காங்கிரஸ் அரசு போட்ட பட்ஜெட்டுகளிலும் விடை இல்லை. கார்பரேட் கம்பெனிகளுக்கு வரிச் சலுகைகள், அவர்களின் வரிஎப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது போன்ற காரியங்களில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே “ உள்ளடி வேலை” – எழுதப் படாத ஒப்பந்தம் இருப்பதை இந்த பட்ஜெட் இன்னும் உறுதி செய்கிறது. ஆட்சிகள் மாறினாலும் இது போன்ற காரியங்களை எந்த அரசையும் செய்ய விடாமல் தடுக்கும் சக்திகள் எவை என்பதை சாமான்ய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

நமது முக்கியக் கவலை விவசாய உற்பத்தி- பொய்த்துப் போன பருவ மழை- ஆகிய பிரச்னைகளைக் கையாள இந்த அரசின் செய்லதிட்டம் எதுவும் அறிக்கையில் இல்லை. விவசாய மான்யங்களைக் குறைப்போம் என்கிற பேச்சு விவசாயிகளை அதிர்வடையச் செய்து இருக்கிறது. உரம் மற்றும் விவசாயம் சார்ந்த இடுபொருள்களுக்கான மானியங்களை உயர்த்திவழங்கி இருக்க வேண்டும். காரணம் பருவமழை காலை வாரிவிட்ட நிலையில் ஊக்கத்துடன் ஒரு விவசாயி தனது பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் அவனுக்கு ஆதரவளிக்க வேண்டும். இதற்கான அடையாளங்கள் பட்ஜெட்டில் இல்லை. ஆனால் எட்டு இலட்சம் கோடி விவசாயக் கடன் வழங்கவும் , கடன்களை ஒழுங்கான தவணையில் திருப்பிச் செலுத்துவோருக்கு மூன்று சதவீதம் ஊக்கத்தொகை தருவதும் நல்ல ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ்-க்கு (All India Institute of Medical Science) இணையான மருத்துவமனை அமைக்கப்படும், 15 இடங்களில் ஊரக சுகாதார ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. தூத்துக்குடி துறைமுகத்தில் அவுட்டர் துறைமுகம் அமைக்க வந்துள்ள அறிவிப்பை தமிழராக நாம் வரவேற்கவே வேண்டும். சூரிய மின்சக்தி உற்பத்திக்கு, தமிழகத்துக்கும் சேர்த்து ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதும் நம்மைப் புன்முறுவல் பூக்க வைக்கும். . 

அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழிகள் ஆராயப்படும் என்பதும், 2015-16-ஆம் நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை 3.6 சதவிகிதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கது. 

கிராமங்களில் அகன்ற வலை வரிசை இன்டர்நெட் அமைப்புகள், விவசாயிகளுக்காக தனியாக கிசான் டிவி ஆகியவையும் வரவேற்புக்குரியவை. டிவி அலைவரிசையை, ஆளும் கட்சி தனது அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்தாமல் நவீன விவசாய யுக்திகளை விவசாயிகளுக்கு பயிற்றுவிற்பதற்காகப் பயன்படுத்தினால் உண்மையில் வெற்றியே. இதில் பயிற்று மொழி சர்ச்சை வரவும் வாய்ப்புண்டு. தமிழக விவசாயிகளிடம் சாவல் சாவல் என்றால் அவர்களுக்கு அது அரிசி என்று தெரியாது. கூவும் சேவலைத்தான் அவர்களுக்குத் தெரியும். 

மொத்தத்தில், ப.சிதம்பரம் பெற்றுப் போட்ட குறைப் பிரசவக் குழந்தைக்கு டெக்ஸ்ட்ரோஸ் ( DEXTROSE) டிரிப் ஏற்றி, பொட்டும் பூவும் வைத்து , பவுடர் பூசி பெற்றவளின் பெயர் மாற்றி பிறந்திருக்கிறது இந்த பட்ஜெட் குழந்தை. ஆகவே, இது ஒரு கலப்பு சித்தாந்தங்களின் பட்ஜெட். ஆனால் முதலாளிகளை மட்டும் காப்பாற்றும் விதத்தில் கவனமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழந்தையைப் பெறுவதில் மன்மோகன் சிங் மற்று ப. சிதம்பரத்தின் ஆகியோரின் பங்களிப்பே அதிகம். இனி பிறக்கபோகும் குழந்தைகள்தான் நரேந்திரமோடிக்கும் அருண் ஜெட்லிக்கும் உண்மையாகப் பிறக்க இருக்கும் குழந்தைகள். அந்தக் குழந்தைகள் பிறந்து வளர்ந்து நடை போடுவதைப் பார்த்த பின்னர் வெளிவரும் விமர்சனங்களே வக்கனையாகவும் பொருத்தமாகவும் இருக்கும். 

இபுராஹீம் அன்சாரி

27 Responses So Far:

Khan testant சொன்னது…

அன்புள்ள பொருளாதார நோக்கர் இபுராஹீம் அன்சாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

உங்களது விமர்சன கட்டுரை பல விடயங்களை கூறுவதாக இருந்தாலும் அவசியமான விடயங்கள் பலவற்றை விட்டுட்டு இந்த பட்ஜெட் போன்றே வார்த்தை ஜோடிப்புக்கள் நிறைந்ததாக மாறியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

முதலாவதாக இந்த விமர்சனத்தில் 'ரயில்வே பட்ஜெட்' குறித்து நீங்கள் கருத்தே தெரிவிக்க வில்லை. பொது பட்ஜெட் குறித்த உங்களது விமர்சனமும் ஏனோ தானோ என்று குறிக்கோளற்ற சொந்த கருத்தின் பாற்பட்ட விமர்சனகளில்லாத வேறொரு ஆங்கில விமர்சனத்தின் 'மொழி பெயர்ப்பு' போன்று உள்ளது (அருண் ஜைட்லியுடன் நண்பரா நீங்கள்? அப்படியென்றால் குறிக்கோளுடன் எழுத அந்த நட்பை உடனே துண்டித்து விடுங்கள்).

ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் இரண்டிலும் உள்ள மிக பெரிய குறைபாடு என்னவென்றால் திட்டங்களுக்கான நிதி ஆதாரம் குறித்து சரியான தகவல் இல்லை என்பதே அது.

உதாரணமாக 'புல்லட் ரயில்' அறிமுகம் செய்ய செலவாகும் 60000 கோடி ரூபாய்கள் எங்கிருந்து வரும் என்பதற்கு வழிவகைகள் சொல்லப்படவில்லை.

அடுத்ததாக கச்ச என்னை விலை ஏற்றத்துக்கு ஏற்ப ரயில் கட்டணங்கள் விதிக்கப்படும் என்பது 'விலைவாசியை' கட்டுக்கடங்காமல் கொண்டு செல்லும் ஆபத்தை உள்ளடக்கியது.

பொது பட்ஜெட்டை பொறுத்த வரையில் - வல்லாபை படேல் சிலைக்கு சுமார் 2000 கோடி ருபாய் திரட்டி காட்ட வேண்டும் என்ற நிலையில் அரசு சுமார் 200 கோடி ருபாய் ஒதிக்கி இருப்பது கண்டனத்துக்குரியது - விரையமானது.

அடுத்ததாக விலைவாசி ஏற்றத்துடன் கூடிய பொருளாதார மந்த நிலையில் (Stagflaion) நாடு இருக்கும் நிலையில் பண சுழற்சிக்கு எந்த வழிவகையும் செய்யப்படவில்லை.

நீங்கள் விமர்சித்திர்க்கும் காங்கிரசின் நூறு நாள் வேலைத்திட்டம் அத்தகைய பண சுழற்சிக்கான ஒரு வழி முறைதான் என்பதை மறந்து விமர்சித்துள்ளீர்கள்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நீண்டு விடும் என்பதாலும் - நான் சுட்டிக்கட்டியதே உங்களுக்கு உங்களது 'விமர்சன குறிக்கோள்களை' சுட்டியிருக்கும் என்பதாலும் இதோடு விடுகிறேன்.

எதை விமர்சிக்க வேண்டுமோ அதை விட்டு விட்டு, விமர்சிக்க கூடாதவற்றுக்கு விமர்சிப்பது போன்று இந்த கட்டுரை அமைத்ததால் தான் உங்களது விமர்சனத்தை விமர்சிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

அடுத்த முறை இன்னும் சிறப்பாக 'பொருளாதார கட்டுரை' எழுத வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk சொன்னது…

ஆனந்த விகடனின் தலையங்கக் கட்டுரையைத் தோற்கடிக்கும் சுறுசுறு விறுவிறுவோடு ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.

இன்னும் கொஞ்சம் ஆழமாக வாசித்து விட்டு கருத்திடுவோம்ல!

Ebrahim Ansari சொன்னது…

அன்புள்ள Khan T அவர்களுக்கு , வ அலைக்குமுஸ் சலாம்.

விமர்சனத்துக்கு விமர்சனம். ஜசக் அல்லாஹ் ஹைரன்.

நான் இரயில்வே பட்ஜெட் பற்றி எழுதவில்லை அந்த தனி பட்ஜெட்டை விம்ர்சிப்பதற்குள் காலம் கடந்து விட்டது. பொது பட்ஜெட்டைப் பற்றி எனக்குத் தெரிந்த அளவே எழுதினேன். எந்த ஆங்கிலப் பத்திரிகையின் மொழிபெயர்ப்பும் செய்யவில்லை.

பட்டேல் சிலை தொடர்பாக நான் எழுதத் தவறிவிட்டேன் என்பதை உணர்கிறேன். பெரும் கண்டனத்துக்குரிய அதை எழுதாமல் விட்டது என் தவறுதான். கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட ஒரு சூழ்நிலையால் குறிப்புகளை பதிவுக்குள் கொண்டு வர விடுபட்டுப் போய்விட்டது.

தங்களுடைய கருத்துக்கும் அறிவுரைக்கும் மீண்டும் நன்றி.

தாங்கள் சொல்லி இருப்பது போல் அடுத்த முறை இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன். நீங்களும் எனக்காக து ஆச் செய்ய வேண்டுகிறேன்.

sheikdawood mohamedfarook சொன்னது…

//கங்கைநதியேதூய்மைபடுத்த2047கோடி//செத்தவர்கள்அங்கேபோய்புண்ணியம்தேடஇவ்வளவுசெலவா? அப்போஅவங்கபூமியிலேவாழும்போதுதேடுனதுஒன்னுமேஇல்லையா?

sabeer.abushahruk சொன்னது…

டியர் Khaan testant,

பட்ஜெட் பற்றிய அலசல் கட்டுரையில் எவை எவை விமர்சிக்கப் பட வேண்டும் என்று பரிந்துரைக்க உங்களுக்கு முழு உரிமையுண்டு.

ஆனால், அவசியமல்லாதவற்றை விமரிசித்திருப்பதாகச் சொல்வது ஏற்கத்தக்கதல்ல. விமரிசிக்கப்பட்டவற்றில் எது தேவ்சியில்லாதது என்று எடுத்துக் காட்டவும். உங்களுக்கு அவசியமில்லை என்று படுவது மற்றவர்களுக்கு அவசியம் என்று தோன்றலாம் அல்லவா?

நக்கீரத் தோரணை மட்டும் போதாது, ஞாயமும் இருக்க வேண்டும்.

sheikdawood mohamedfarook சொன்னது…

/செத்தவன்சிவலோகம்செல்ல2047கோடி!கண்நீரைமட்டுமேதண்ணீராககண்டவனுக்குநதிநீர்இணைப்புகொடுக்க100கோடி?/ஈரம்என்றால்என்னயென்றுதெரியாதஈரமில்லாநெஞ்சத்தார்போட்டபட்ஜெட்!

Ebrahim Ansari சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Khan testant சொன்னது…

அன்புள்ள சபீர்,

யதார்த்தை கூறும் அதே வேளை - நீண்டு விடாமல் இருக்கவும், அதிக காட்டமாக இருந்து புண்படுத்தி ஒரு 'சகோதர பொருளாதார ஆய்வாளரை' உற்சாகம் குன்ற செய்து விடக்கூடாது என்பதற்காகவே எனது விமர்சனம் சுருக்கமாக இருந்தது.

'இப்ராஹிம் அன்சாரி' அவர்களின் 'பொறுமையான', 'பெருந்தன்மையான', 'பணிவான' பதிலின் மூலம் அவர் நான் கூற வந்ததை அங்கீகரித்து, புரிந்து கொண்டார் என்பது தெளிவு.

நீங்கள் வினவியவாறு அவரது விமர்சித்தவற்றில் தேவையில்லாததாக உள்ளதற்கு உதாரணமாக 'நூறு நாள் வேலை திட்டம் குறித்து' கோடிட்டு காட்டியுள்ளேன்.

எனினும் மிகவும் எளிமையாக உங்களுக்கு ஏற்ற வகையில் புரியும்படி அடிப்படையில் இருந்து சுருக்கமாக விளக்க இயலாது என்பதால் 'இந்த பட்ஜெட்டின்' பலவீனங்களை மட்டும் பட்டியலிடுகிறேன்:

1. நடப்பு 'பொருளாதார மந்த நிலையை' சரி செய்ய எந்த தெளிவான திட்டமோ முயற்சியோ பட்ஜெட்டில் இல்லை. (குறிப்பாக ரகுராம் ராஜன் தலைமையிலான ரிசர்வ் வங்கி விலைவாசி உயர்வை வைத்து 'வட்டி விகிதத்தை குறைக்காமல் இருக்கும் நிலையில் - Stagflation காரணமாக)

2. உள் நாட்டில் பண சுழற்சியை மேம்படுத்தாதது. (காங்கிரஸ் கொண்டு வந்த நூறு நாள் வேலை திட்டத்திலும் மாறுதல் கொண்டு வந்தால் அது ஊழலை பேருக்குமே ஒழிய அடித்தட்டு மக்களை காத்து - பண சுழற்சியை பெருக்காது)

3.ஏற்றுமதி குறித்து 'வாயே திறக்க முடியாத' நிலையில் - உள்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கும், சேவை துறை வளர்ச்சிக்கும் எந்த தெளிவான திட்டத்தையும் இந்த பட்ஜெட் முன்வைக்கவில்லை.

4. வரவை பற்றி கவலை கொள்ளாமல் மேனா மினுக்கி தனமாக செலவு செய்து ( புல்லட் ரயில் போன்றவற்றில் செலவு செய்து சீனாவே கையை சுட்டுக்கொண்டு நிற்கிறது - பயணம் செய்ய ஆளே இல்லாமல்) இறுதியில் 'உலக வங்கியிடம்' இந்தியாவை கையேந்த வைக்கும் பட்ஜெட் இது.

இந்த பட்ஜட் மட்டுமின்றி - மைய்ய அரசின் எல்லா கொள்கைகளையும் அளவிடும் ஒரு மானியாக 'பங்கு சந்தைகள்' திகழ்கின்றன.

இந்த உலகின் நடப்பு மற்றும் எதிர்கால பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானிப்பது, அளவிடுவது பங்கு சந்தைகள் தான்.

எனவே பங்கு சந்தைகளில் ஈடுபட்டுள்ள ஒரு 'தொழிநுட்பப் ஆய்வாளன்' என்ற முறையிலும், முதலீட்டு ஆலோசகர் என்ற முறையிலும், இஸ்லாமிய பண மேலாண்மையில் ஈடுபட்டுள்ள அனுபவத்திலும் - இந்த பட்ஜெட் குறித்த 'பங்கு சந்தைகளின்' எதிர்வினையை வைத்தே, எங்களை போன்றவர்களால் 'பட்ஜட்டின் நிறைகுறைகளை' எளிதாக அளவிட முடியும்.

எனவே அது உங்களுக்கு நக்கீரன் தோரணையாக தெரிந்தாலோ, ஞாயமில்லாமல் தோன்றினாலோ அதற்கு நான் பொறுப்பல்ல.

'வட்டி ஹராம்' என்று கூவுவோர் பலர் 'இஸ்லாமிய மாற்று பொருளாதாரம்' என்றால் என்ன என்ற அறியாமையில் உழலும் நிலையில் - அதை விளக்க முயலும் 'இப்ராஹிம் அன்சாரி' போன்ற 'அறிவு பூர்வமான' அனுகுமுடையோருக்கான உந்துதலே நல்ல ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தான்.

அதை அவர் உணர்ந்துள்ளார் என்பதை இப்ராகிம் அன்சாரி அவர்கள் எனக்கு வழங்கிய 'அறிவார்ந்த நல்ல விதமான' பதிலில் யாவரும் தெரிந்து கொள்ளலாம்.

மற்றபடி எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

Ebrahim Ansari சொன்னது…

பட்டேல் சிலை பற்றி எழுத எண்ணிப் பதிய மறந்த வரிகள். இதோ மீண்டும்.

குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க, மத்திய அரசு ரூ.200 கோடியை ஒதுக்கும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளது சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலின் பிரமாண்ட உயரச் சிலை குஜராத் மாநிலம் பாரூச் நகரில் உள்ள கேவாடியா பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

ஒற்றுமைச் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள, உலகிலேயே உயரமான இச்சிலைக்கு, படேலின் பிறந்த தினமான கடந்தாண்டு அக்டோபர் 31ம்தேதி, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.படேலின் சிலை மொத்தம் 182 மீட்டர் (597 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக இந்த சிலை செய்ய ரூ.2074 கோடி செலவிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலைதான் 152 அடி உயரத்துடன் முதலிடத்தில் உள்ளது. சர்தார் வல்லபாய் படேல் சிலை அதை விட 2 மடங்கு உயரம் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய சிலை என்ற சாதனையை வல்லபாய் படேல் சிலை பெறும். இந்த சிலையை அமைக்கும் குஜராத் அரசுக்கு நிதி உதவியாக, ரூ.200 கோடி ஒதுக்குவதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். அதாவது மொத்த செலவில் 10 சதவீதத்தை மத்திய அரசு அளிக்கிறது.

நாடு அமெரிக்காவின் அளவுக்கு வளர ஆட்சியாளர்கள் வகை செய்யாவிட்டாலும் ஏதோ ஒரு சிலையாவது அமெரிக்காவில் இருப்பதைவிட உயரமாக இருக்கிறது என்று பெருமைப் பட்டுக் கொண்டு கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு சோறின்றி ஆடும் கலையங்களையாவது நமது குடிசைகளின் சவுக்குக் கம்புகளில் பார்த்துக் கொள்ளலாம்.

லக்னோ மற்றும் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில், திட்டம் அமைக்க ரூ.100 கோடியை மட்டுமே ஒதுக்கிய ஜெட்லி, சிலைக்கு 200 கோடியை ஒதுக்கியுள்ளார். மெட்ரோ திட்டத்துக்கு ஊறுகாய் வாங்கக்கூட அந்த நிதி பற்றாது. .

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சிலை வடிக்க செலவு செய்ய நிதி ஒதுக்கும் பட்ஜெட் மக்களின் நிலை உயர நிதி ஒதுக்குவதில் முனைப்புக் காட்டவில்லை என்பதே "ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்னும் அடிப்படையில் நீங்கள் எடுத்து வைக்கும் விமரிசனம்.

பட்ஜெட் விவகாரத்தில் விவாதிக்க Khan testant போல ஒரு capable contestant அல்ல நான். எனினும் எனக்கு விமரிசனம் பிடித்திருக்கிறது. இதற்கு பின்புலமாக தங்களின் observationனும் studyயும் என்னால் யூகிக்க முடிகிறது.

நிறைவாக, தங்களின் வழக்கமான நக்கலோடு பட்ஜெட்டை குழந்தையோடு உருவகித்து முடித்திருக்கும் பஞ்ச்சை சிரிக்காமல் படிக்க முடியவில்லை!

(பிரேஸிலின் படு தோல்விக்குக் காரணம் மைனாரிட்டி மைனர் கருனாநிதியின் தோள் துண்டு நிறமான மஞ்சள் நிற யூனிஃபார்மை பிரேசில் அணிந்து விளையாடியதுதான் காரணம் என்று சொல்லும் ஜெயலலிதாவும்; 1968ல் கலக ஆட்சியில் நிர்ணயித்த கோச்சை மாற்றுவதில் உள் வேலை செய்த ஜெயலலிதாவால்தான் பிரேசில் தோற்றது என்று அறிக்கை விடும் கலைஞரும் ஒரே குரலில் பட்ஜெட்டை வரவேற்றிருக்கும் மர்மம் என்ன காக்கா?)

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

Ebrahim Ansari சொன்னது…

தம்பி சபீர்!

//ஒரே குரலில் பட்ஜெட்டை வரவேற்றிருக்கும் மர்மம் என்ன காக்கா?//

அதற்கும் துண்டுதான் காரணம்.

அதாவது துண்டுபோட்டு இடம் பிடிப்பது.

ஒருவருக்கு பெங்களூருக்காகவும் மற்றவருக்கு பாடியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்காகவும் துண்டு போட வேண்டி இருக்கிறது.

சகோதரர் கான் அவர்கள் தந்திருக்கும் பட்டியல் அவரை ஒரு புரபாஷனலாகக் காட்டுகிறது. யார் என்று தெரிந்தால் அவரை அதிரை நிருபர் பயன்படுத்தலாம்.

சில பதில்களை தராவீஹ் முடிந்து எழுத நேரம் வாய்க்கும். இன்ஷா அல்லாஹ்.

sheikdawood mohamedfarook சொன்னது…

//மெட்ரோதிட்டத்துக்குஒதுக்கிய100கோடிஊறுகாய் வாங்ககூடபத்தாது//இப்பதானே ஆரம்பிச்சாங்க! அதுக்குலேயே மெட்ரோஊறுகாகேக்குதா?

adiraimansoor சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
adiraimansoor சொன்னது…

///இப்பதானே ஆரம்பிச்சாங்க! அதுக்குலேயே மெட்ரோஊறுகாகேக்குதா?///

பாரூக் காக்காவின் குசும்புக்கு அளவே இல்லை

மாஷா அல்லாஹ் சட்டமேதையின் ரோலில் இந்த பதிவை தந்திருக்கும் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு அல்லாஹ் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்து இன்னும் அரிய பல பதிவுகளை தொடர்ந்து தர அல்லாஹ் உதவி செய்யவேண்டும்

sheikdawood mohamedfarook சொன்னது…

//மெட்ரோதிட்டத்திற்கு100கோடிஓதுக்கியஜெட்லி,சிலைக்கு200கோடிஒதுக்கியுள்ளார்//மெட்ரோஅசையும்சொத்து;சிலையோஅசையாசொத்து.

Ebrahim Ansari சொன்னது…

அன்பானவர்களே!

நாமெல்லாம் அறிந்து இருபது போல் அதிரை நிருபர் வலைத் தளம் ஒன்றும் Economic Times , Wall Street Journal போன்ற பொருளாதாரத்துக்கு மட்டும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தளமல்ல.

பல்வேறு துறையினர் வந்து உலவும் இத்தளத்தில் அனைவருக்கும் புரியம் அளவில் எழுதவேண்டுமென்பதே நோக்கம்.

எனது பார்வையில் எழுத வேண்டுமென்று தோன்றுகிற சிலவற்றை மட்டுமே நான் எழுதுகிறேன். இது ஒரு REVIEW மட்டுமே. அதை அதிரை நிருபர் வெளியிடுகிறது. என் பார்வையில் படாத அல்லது எனது கவனத்தை ஈர்க்காத அல்லது நான் அறியாத சில பல விஷயங்களும் இருக்கலாம் . அவை விடுபட்டும் போயிருக்கலாம்.

நிறைய காம்ப்ளிகேடேட் என்று இருப்பதை விளங்குகிற வகையில் விளக்கக் கூடிய அளவுக்கு எனக்கும் தெரியாமல் இருக்கலாம். நீளம் கருதியும் சிலவற்றை தவிர்த்தும் இருக்கலாம்.

பட்ஜெட்டில் பளிச் என்று தெரியக் கூடியவற்றை மட்டுமே எனக்குத் தெரிந்தவரை இனிமை எளிமை என்கிற முறையில் விமர்சித்துள்ளேன்.

படிப்பவர்களை "சடப்பு " இல்லாமல் படிக்க வைக்க சில இயல்பாக வந்து விழும் வார்த்தை ஜாலங்களைப் போட்டு எழுத வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் பட்ஜெட் போன்ற Heavy Subject எல்லாம் போரடிக்கும்.

சகோதரர் Khan testant அவர்கள் தங்களைப் பற்றி கூறி இருப்பது போல் அவர்களைப்போல் முதலீட்டு ஆலோசகர் போன்ற பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு இவை பற்றி இன்னும் அதிக ஞானம் இருக்க வாய்ப்புண்டு. அவைகளை நம்முடன் பகிர்ந்து கொள்வதில் தடை இல்லை.
நாமும் இன்னும் அதிகம் அறிந்து கொள்ள இயலும்.

என்னைப் பொறுத்தவரை இந்தத்தளம் நமக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ மட்டுமே. மற்றபடி தர்க்கங்களில் ஈடுபட அல்ல.

தெரியாததை யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் பணிவும் பக்குவமும் - தவறு இருந்தால் அதை தைரியமாக ஒப்புக் கொள்ளும் மனப்பாங்கும் இயல்பாக அமைந்து இருக்கிறது.

நூறு நாள் வேலை திட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது.

சகோதரர் Khan அவர்கள் அதை பண சுழற்சியின் அனுகூலத்துடன் பார்க்கிறார்.

நான் அதை Productivity என்கிற கோணத்தில் பார்க்கிறேன்.

எப்படியானாலும் அதிரை நிருபரின் பதிவுகள் பல வல்லுனர்களின் பார்வையிலும் படுவது பற்றி மிக்க மகிழ்வே.

கருத்திட்ட இன்னும் கருத்திடாது இருக்கின்ற அத்தனை அன்பர்களுக்கும் நன்றி.

sheikdawood mohamedfarook சொன்னது…

//597அடிசிலைவைக்க, ருவா2074கோடிசெலவு// /ரயில்வேபட்ஜெட்தனியாகபோடுவதுபோலசிலைவைக்கும் பட்ஜெட்டையும் தனியேபோடலாம் .போனதலைவர்களின்சிலைகளைபார்த்ததுமே வந்தபசியெல்லாம்பஞ்சாய்பறந்துபோகும்!

Ebrahim Ansari சொன்னது…

இரயில்வே பட்ஜெட் பற்றியும் ஒரு விமர்சனம் எழுதித்தான் இருக்க வேண்டும்.

ஆனால் நான் பிளாட்பாரத்துக்குள் வருவதற்குள் இரயில் போய்விட்டது.

Khan testant சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Khan testant சொன்னது…

// சகோதரர் Khan அவர்கள் அதை பண சுழற்சியின் அனுகூலத்துடன் பார்க்கிறார்.

நான் அதை Productivity என்கிற கோணத்தில் பார்க்கிறேன். //

நீங்கள் சொந்தமாக நிலம் வைத்து பயிர் செய்யும் விவசாயியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

எப்போது, எதை, எப்படி செய்கிறோம் என்பதில்தான் ஒரு விடயத்தின் அனுகூலங்களும் பிரதிகூலங்களும் அடங்கியுள்ளது.

முதலாவதாக நாம் இப்போதுள்ள காலகட்டம் 'பொருளாதார மந்த நிலை' மட்டுமல்ல அதோடு கூடிய 'கடும் விலைவாசி ஏற்றத்திலும்' நாடு தத்தளிக்கிறது.

வட்டி பொருளாதாரத்தின் தீங்குகளில் முக்கிமான ஒன்றை ரெசர்வ் வங்கி சந்திக்கிறது.

அது என்னவென்றால் வட்டியை குறைத்தால் 'விலைவாசி மேலும் கூடும்' - வட்டியை கூட்டினால் பண சுழற்சி குறைவால் 'பொருளாதாரம் மடிந்து போகும்'.

ரேசெர்வ் வங்கியின் இந்த இரண்டும் கெட்டான் நிலையால் (Catch 22 situation) - பண சுழற்சி கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கும்.

மக்கள், குறிப்பாக சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளியோர் இதனால் கடும் பாதிப்பை அடைவர். அதன் விளைவாக குற்றங்கள் பெருகலாம், விவசாயிகள் தற்கொலை போன்றவையும், பசி மற்றும் பிணி போன்றவை சமூகத்தை குதறி போடலாம்.

இந்த நேரத்தில் ஒரு அரசின் முதல் கடமை 'பண சுழற்சியை' உறுதி செய்வதுதான்.

அது போன்ற நிலைகளில் 'உற்பத்தி ஞாயம்' பேசிகொண்டிருப்பது - கடும் நோய் தாக்கி ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக இருப்பவரிடம் - இன்று என்ன சம்பாதித்தாய் என்று கேட்பதை ஒத்தது.

நோயாளிக்கு தேவை உரிய மருத்துவம் - அதுவும் நோயாளி குணமாகும் வரை. காரணம் அவனுக்கு வந்த நோய்க்கு காரணமே அவன் மீது சவாரி செய்த 'வட்டி பொருளாதாரம் தான்'.

இதை தான் காங்கிரஸ் அரசு இரு வருடங்களுக்கு முன்னாள் செய்து - நோயின் ஆரம்ப நிலையிலேயே நோய் தீவிரத்தை தடுத்தது.

ஆனால் இப்போது நோயாளிக்கு நோய் 'தீவிரமாகி கொண்டிருக்கும் நிலையில்' தற்போதைய பட்ஜட் என்ன சொல்கிறதென்றால் 'வேலை செய்து கொண்டே மருந்துகளை சாப்பிடு' என்கிறது.

ஒரு வரலாற்றும் மாணவன் என்னும் முறையில் எனக்கு அதில் 'வலது சாரிகளின்' பளிசென்ற முத்திரை தெரிகிறது.

எதிர்காலம் குறித்து 'அல்லாஹுவை' தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியாது - ஆனால் நிகழ்காலத்தில் எது சரி, எது தவறு என்பதை கடந்த கால அறிவு மற்றும் அனுபவ தரவுகளை (Datasets) வைத்து சொல்லிவிடலாம்.

அல்லாஹ் மனிதர்களுக்கு - 'மூளை' என்ற வன்பொருளையும் 'அறிவு' என்ற மென்பொருளையும் அதற்கு தான் வழங்கியுள்ளான்.

அதுதான் என்னை போன்ற ஒரு 'தொழில் நுட்ப ஆய்வாளனின்' (Technical Analyst) செயல்பாட்டுக்கு அடிப்படையே. அவ்வளவுதான்.

adirai paamaran சொன்னது…

Khan testant என்பதில் எனக்கென்னவோ இவர் ஏட்டிக்குப் போட்டி பேசும் Contestant ஆகவே தெரிகிறது. காரணம் தன்னைபற்றி அவரே

//எனவே பங்கு சந்தைகளில் ஈடுபட்டுள்ள ஒரு 'தொழிநுட்பப் ஆய்வாளன்' என்ற முறையிலும், முதலீட்டு ஆலோசகர் என்ற முறையிலும், இஸ்லாமிய பண மேலாண்மையில் ஈடுபட்டுள்ள அனுபவத்திலும் - இந்த பட்ஜெட் குறித்த 'பங்கு சந்தைகளின்' எதிர்வினையை வைத்தே, எங்களை போன்றவர்களால் 'பட்ஜட்டின் நிறைகுறைகளை' எளிதாக அளவிட முடியும்.//
என்றும்
//என்னை போன்ற ஒரு 'தொழில் நுட்ப ஆய்வாளனின்' (Technical Analyst) செயல்பாட்டுக்கு //
என்றும் கூறிக் கொள்கிறார். இவ்வளவு தூரம் திறமை படைத்த இவர் யார் எங்கே இருக்கிறார் இவரது முகவரிஎன்ன இவரை எதுவும் ஆலோசனை கேட்டு எப்படித் தொடர்பு கொள்வது என்றெல்லாம் உலகுக்கு அறிவிக்காமலேயே தன்னிச்சையாக பட படா வார்த்தையெல்லாம் பிரயோகித்து எழுதுகிறார்.

பயறை ஊரை மறைத்து எழுதுபவரின் பின்னால் ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே நினைக்க வேண்டி இருக்கிறது.

நாஞ்ச்சொல்றது? சரிதானே!

adirai paamaran சொன்னது…

நீ மட்டும் அதிரை பாமரன் என்று எழுதுகிறாயே என்ற கேள்வி வரக்கூடும். நான் பாமரன். ஆனால் அவரோ முதலீட்டு ஆலோசகர் எனக்கு முகவரி வேண்டாம் அவருக்கு அவசியம் வேண்டும். இந்த சமுதாயம் அவரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கும் போலத் தெரிகிறது.

adiraimansoor சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
Khan testant அவர்களே
தங்களின் எதிர்வாதப்படி தங்களிடம் நிறைய மசாலா இருப்பதாக தோன்றுகின்றது
இபுறாஹீம் அன்சாரி காக்கா போன்று தங்களை இனம் காட்டி தாங்களும் அதிரை நிருபர் வளைத்தளத்தில் உங்கள் ஆக்கங்களையும் தந்தால் எங்களுக்கும் அதுபற்றி கொஞ்சம் அறிவு கிடைக்குமே
இனம் காட்ட சொல்வதின் அடிப்படை நம்பிக்கையின் பேரிலேயே கொஞ்சம் இனக்கம் அதிகமாகும்.
வேரு தவறாக கருதிவிட வேண்டாம்

Khan testant சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Khan testant சொன்னது…

மனித பலவீனங்களில் ஒன்று 'பொது புத்தியை' கண்மூடிதனாமாக நம்புவது அதற்கு எதிரானது 'உண்மையாக' இருந்தாலும் மறுப்பது.

உண்மையை மறுப்பது 'குப்ர்' எனவும் மற்றும் உண்மையை வெறுப்பது 'அகங்காரமாகும்' எனவும் இஸ்லாம் வரையறுக்கிறது.

எங்களது தெருவில் உள்ள மாற்று மத நண்பர் ஒருவர் என்னை சந்தித்த பொது - 'இப்போது தான் - உங்களது - நாகூர் தர்காவிற்க்கு சென்று வணங்கி விட்டு வருகிறேன்' என்றார்.

நான் 'தர்கா மற்றும் சமாதிகளை வணங்குவது கடும் குற்றம்' என்றேன்.

அவர் உடனே 'தர்காவிற்கு போகவில்லை என்றால் நீங்கள் என்ன முஸ்லீம்' என்றார்.

நான் அவருக்கு 'தர்கா என்பது இஸ்லாத்தை எதிர்த்த 'ஷியாக்கள்' உருவாக்கிய 'சுபி' சித்தாந்த வழக்கம் என்று வரலாற்றை ஆதாரத்துடன் எடுத்து கூறினால் கூட அவர் நம்புவார் போல தெரியவில்லை.

முஸ்லீம் அல்லாதோரை விடுங்கள் - நமது முஸ்லீம்களின் நிலை என்னவென்று பார்ப்போமா?

இந்தியாவில் உள்ள முக்கிய முஸ்லீம் இயக்கங்களான முஸ்லீம் லீக், ஜமாத்தே இஸ்லாமி, தப்லீக், தியோபந்த், பரேலவி என்று எதை எடுத்தாலும் அவற்றின் அடிநாதம் ஒன்று 'சுபி' மற்றும் 'ஷியா' கொள்கையாக இருக்கும்.
ஆனாலும் தாங்கள் தான் 'இஸ்லாத்தின் கொள்கை காவலர்கள்' என்று இவர்கள் அனைவரும் சத்தியம் செய்வார்கள்.

இந்த உண்மையை 'தௌஹீத்வாதிகள்' எடுத்து கூறி - இந்த இயக்கத்தை சேர்ந்தோரை இஸ்லாமிய எதிர்ப்பு தத்துவங்களான 'ஷியா' மற்றும் 'சூபி' கொள்கைகளில் இருந்து மீட்க நினைத்தால் 'உடனே' அத்துணை பெரும் சேர்ந்து அவனை 'வஹ்ஹாபி குழப்பவாதி' - 'முஸ்லீம்களின் ஒற்றுமையை குலைக்கிறான்' என்று தூற்றுவார்கள்.

ஆக 'தவ்ஹீதை கூறும் முஸ்லீம்' குழப்பவாதியாகி விடுகிறான் - இஸ்லாத்தில் கடந்த 1400 வருடங்களாக குழப்பம் செய்யும், செய்துவரும் 'ஷியா' மற்றும் 'சூபி' நல்ல முஸ்லீமாகிவிடுகிறான்.

பொது புத்தியை கண்மூடித்தனாமாக யோசிக்காமல் பின்பற்றுவதால் வரும் விளைவு இது.

மேலும் இதிலிருந்து தெரிவது என்னவென்றால் உண்மை கூறப்படும்போது அநீதமான தூற்றுதலுக்கு ஆளாவது சகஜம்தான். ஒரு படி மேலே சென்று - அநீதமான தூற்றுதலுக்கு ஆளாவது 'உண்மையை உண்மையென' அறிந்து கொள்ள வைக்கும் ஒரு 'உரை கல்'.

எனவே அந்த உண்மைகளால் வரும் கஷ்டங்களில் பொறுமையாக இருப்பதை இஸ்லாம் வெற்றிக்கான நான்கில் இரண்டு முன் நிபந்தனைகளாக கூறுகிறது.

"காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).(103:1-3)"

எனவே தான் உண்மையை கூறினேன் - அதனால் வரும் துன்பங்களில் இன்ஷா அல்லா பொறுமையாக இருக்க விளைகிறேன் - 'சமாதி வணக்கத்தை' எதிர்க்கும் ஒரு 'தௌஹீத் வாதியாக'.

அடுத்ததாக எனது தனி திறமைகளை அறிமுகபடுத்திய நோக்கம் சமீர் அவர்களின் சந்தேகத்தை தீர்த்து - பொருளாதாரம் குறித்த விமர்சனத்தில் எனது ஞாயமான தகுதியை மெய்ப்பிப்பதேயாகும்.

மேலும் ஒரு பத்திர்க்கையாளன் என்ற முறையில் நான் ஒரு நல்ல விமர்சகன். எனவே இப்ராஹிம் அன்சாரி போன்றோர் இன்னும் சிறப்பாக எழுத வேண்டுமானால் என்னை போன்ற விமர்சகர்கள் மிகவும் அவசியம்.

அடுத்ததாக பங்கு சந்தையில் உள்ள இஸ்லாம் அனுமத்தித்த முதலீட்டு மற்றும் வியாபார முறைகளில் ஈடுபட விரும்புவோர் மேலதிக விவரம் வேண்டுவோர் unitymedianews@gmail.com என்ற எனது மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் தர நிர்ணய திருக்கு க்குட்பட்ட ஹலாலான முதலீடு மற்றும் மாதந்திர லாப விவரங்களை தெரிந்து மற்ற சந்தேகங்களை தீர்த்து கொண்டு முதலீட்டை துவங்கலாம்.

இன்ஷா அல்லாஹ் - செல்வம், செல்வாக்கு, பெரும்பான்மை மக்கள் ஆதரவு, அரசியல் சக்தி இவை யாவும் 'உண்மைக்கு' முன்னால் தோற்கும் என்ற 'உண்மையுடன்' விடை பெறுவது.

- Khantestant

Adirai Ahmad சொன்னது…

'அதிரைப் பாமரன்' அவர்களுக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்.
'Mr. Khantestant' அவர்களின் whereabouts பற்றிக் கேட்டிருந்தீர்கள். அவர் என் நண்பர். எப்படியோ ஒரு நாள் 'அதிரை நிருபர்' வலைத்தளத்தின் மீது தடுக்கி விழுந்து, அதில் வெளியாகியிருந்த கட்டுரை பற்றி plus and minus விமரிசனம் செய்தார். ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் எங்களிருவரின் கைபேசிச் சொல்லாடல் நீடித்தது. அப்போது, நானே சொன்னேன்: "நீங்கள் நேரடியாக அதிரை நிருபரில் உங்கள் கருத்துகளைப் பதியலாமே."

அன்றிலிருந்து தொடங்கியது, அவருடைய சேட்டை! தயக்கத்தோடு நுழைந்தார். தைரியத்தோடு இன்று தன் கருத்துகளைப் பதிந்து வருகின்றார். படிப்பவர்களுக்குச் சற்று அலுப்பாகத் தோன்றலாம். அவர் ஓர் அறிவுஜீவி என்பதால் தளத்தினுள் நுழையச் செய்தேன். மறுப்பு / உடன்பாடு என்பவை அவரவர் அறிவின் அளவைப் பொறுத்தது.

To tell you the truth, அவரோடு கருத்தாடல் செய்யும்போது, அவர் எடுத்துவைக்கும் சில கருத்துகள் எனக்குத் தலைச் சுற்றலைத் தோற்றுவிக்கும். ஆனால், பொறுமையோடு கேட்பேன். அதனால் என்னை அவருக்குப் பிடிக்கும். சும்மா கொஞ்சம் try பண்ணிப் பாருங்களேன். அப்போது தெரியும், அவருடைய vast knowledge. அறிவு ஜீவிகள், அறிவு ஜீவிகளோடு ஒத்துப் போக வேண்டும், பொறுமையாக.

நண்பர் தவ்லத் கான் திருநெல்வேலி மாவட்டத்து ஏர்வாடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். ‘அந்தப் பக்கம்’ கொஞ்சம் சாய்ந்தவர்.

unitymedianews@gmail.com என்ற வலைத்தளச் சொந்தக்காரர். அதில் நுழைந்து பாருங்களேன். அறிமுகத்துக்கு இவ்வளவு போதும் என நினைக்கிறேன்.

அன்புடன்,- அதிரை அஹ்மத் adiraiahmad@gmail.com

adiraimansoor சொன்னது…

///unitymedianews@gmail.com என்ற வலைத்தளச் சொந்தக்காரர். அதில் நுழைந்து பாருங்களேன். அறிமுகத்துக்கு இவ்வளவு போதும் என நினைக்கிறேன்.///

அஹ்மது காக்கா

வலைத்தளம் சென்று பார்க்கலாம் என்றால்
வேறு ஏதோ ஒரு பார்மட்டில் வலைத்தளம் விரிகின்றது
அதற்குள் உள்ள லின்கை http://unitymedianews.com கிளிக் செய்தால் PAGE NOT FOUND என்று வருகின்றது

எனிவே அஹ்மது காக்கா நீங்கள் சர்ட்டிபிக்கட் கொடுக்கும் Mr.Khan testant சாதாரன ஆளாக இருக்க முடியாது
அவருடைய சேவை நமக்கு தேவை
அவர் அதிரை நிருபருக்கு வருகை தந்தது பெரும் சந்தோஷம்
மீண்டும் வருக உங்கள் பொன்னான ஆக்கங்களை எங்களுக்கு தருக

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+