எழுத்துப் பிழைகள்! - 03 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]

எழுத்துப் பிழைகள் – 3 ‘இதுதான் எனக்குத் தெரியுமே!’

இத்தொடரில் நான் சுட்டிக் காட்டும் திருத்தச் சொற்களும் சொற்றொடர்களும் சிலருக்குத் தெரிந்தவையாக இருக்கலாம். ‘இதுதான் எனக்குத் தெரியுமே’ என்று கடந்து செல்லாமல், தெரியாத மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக, அவற்றையும் படிக்கக் கோருகின்றேன். சிறு நிகழ்வு ஒன்று என் நினைவுக்கு வருகின்றது:

தெருவின் முச்சந்தி முனையில் பையன்கள் நால்வர் இரவில் நாள் தோறும் கூடிப் பல செய்திகளைப் பேசிக்கொள்வர். அவர்களுள் ஒருவன் மட்டும் ‘ஓவர் ஸ்மார்ட்’. மற்றவர்கள் எந்தச் செய்தியைச் சொன்னாலும், “இதுதான் முன்பே எனக்குத் தெரியுமே” என்று மட்டம் தட்டிச் சொல்லி மடக்கிவிடுவான். ஒரு நாள், மற்றவர்கள் மூவரும் தமக்குள் பேசி, அந்த ‘ஓவர் ஸ்மார்ட்’டை மடக்க எண்ணினர்.

வழக்கப்படி, அடுத்த நாள் வந்தான் நம் ‘ஓவர் ஸ்மார்ட்’. மூவரும் பேசாமல் இருந்த நிலையில், நம் OS ஒரு செய்தியைச் சொல்லத் தொடங்கினான். அதைக் கால்வாசி சொல்லிக்கொண்டிருந்தபோது, மூவரும் ஒரே குரலில், “இதுதான் எங்களுக்குத் தெரியுமே” என்றனர். அத்துடன் நின்றுபோயிற்று, OSன் புதிய செய்தி. அடுத்து ஒரு செய்தி. அதற்கும் மூவரும் ஒன்றாக, “இதுதான் எங்களுக்குத் தெரியுமே” என்றனர். மூன்றாவதாக, ‘கண்டிப்பாக இந்தச் செய்தி, இவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை’ என்றெண்ணி, ஒரு புதிய தகவலைச் சொன்னான் OS. அதையும் இடைமறித்து, “இதுதான் எங்களுக்குத் தெரியுமே” என்றனர். அப்போதுதான் நம் ஓவர் ஸ்மார்ட் தனது தவற்றை நினைத்து வருந்தினான்; திருந்தினான்.

வாசகர்களே! நீங்கள் அப்படி இருக்கமாட்டீர்கள்; நானும் ஓ எஸ் ஆக இருக்கமாட்டேன். சரி, இப்போது சில எழுத்துத் திருத்தங்களைப் பார்ப்போம்: 

ஒருவர், “எனது மகனிற்கு முஹம்மத் என பெயர் சூட்டுகிறோம்” என்று முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார். இந்த ஒற்றை வரியில் நான்கு பிழைகள் உள்ளன! (1). ‘எனது’ எனும் சொல், என் + அது என்று பகுபடும். ‘அது’ என்பது அஃறிணைக்குத்தான் பொருந்தும். ஆனால் இங்கு, ‘மகன்’ என்ற சொல் உயர்திணை. எனவே, ‘என் மகன்’ என்பதுவே சரியாகும். (2). ‘மகனிற்கு’ என்பது, ‘மகனுக்கு’ என்று சரியாக அமையவேண்டும். (3). ‘என பெயர்’ என்பதில், ஓர் ஒற்றெழுத்து ‘ப்’ விடுபட்டுள்ளது. எனப் பெயர் என்றிருக்க வேண்டும். (4). ‘எனது’ என்று ஒருமையில் தொடங்கி, ‘சூட்டுகிறோம்’ என்று பன்மையில் முடித்துள்ளார்! ‘சூட்டுகிறேன்’ அல்லது, ‘சூட்டினேன்’ என்றிருக்க வேண்டும். இவ்வாறு ஒருமையில் தொடங்கிப் பன்மையில் முடிப்பதும், பன்மையில் தொடங்கி ஒருமையில் முடிப்பதும், பலருக்கும் நிகழ்வதே. கருத்தூன்றி எழுதினால், களைந்துவிடலாம் பிழைகளை.


‘நமது மாணவச் செல்வங்களின்’ என்று ஒருவர் எழுதியுள்ளார். எப்படி எழுதியிருக்க வேண்டும்? ‘நம் + அது’. புரிகின்றதா? ‘நம் மாணவச் செல்வங்களின்’ என்றிருக்க வேண்டும். ‘மாணவச்செல்வங்கள்’ என்பது பன்மை.

இப்போதைக்கு, இவ்வளவு போதும்.

தொடரும்...

நன்றி ; https://www.facebook.com/adiraiahmadh/posts/1089010904573391

1 கருத்து

عبد الرحيم بن جميل சொன்னது…

அருமை, அதிகம் பகிருங்கள் அறிவமுதை....