Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குணக்குன்று 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2013 | , , , , , , ,

உதய நிலவின் குளிராக உஷ்ண பூமியியின் ஒரு சமுதாயத்திலிருந்து உத்தம நபியை உலகிற்கு அளித்தான் ஏக இறைவன் அல்லாஹ். நீதி மறையின் விளக்க உரையாக நற்குணத்தின் குன்றாக, இறைமறையோடு அருட்கொடையை இப்புவிக்கு பரிசாக தந்தான் வல்ல அல்லாஹ்.

தம்  தூய வாழ்வினால் மனித வாழ்க்கையின்அளவுகோலை மாற்றி , இருளை விட்டும் மக்களை அகற்றி, தங்களின் ஒழுக்கம், வழிகாட்டுதலில், சொல்லில், செயலில் ஒரே நேர்கோட்டுப்பாதையில் எள்ளளவும் பிசிறில்லாமல், தீமையெனும் களை எடுத்து, நன்மை என்னும் நாற்றங்காலை நட்டு, அதன் விளைச்சலை தன் வாழ்நாளிலேயே அறுவடை செய்து, அதன் பலனை அனைவரையும் அனுபவிக்கச் செய்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

நற்குணத்திலும், நற்செயல்களிலும், இப்புவியின் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வரும் வரை பின்பற்றப்பட வேண்டிய சமுதாயம் என்று ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிச் சென்ற , மனிதகுல முன்மாதிரி, இறுதி நபி (ஸல்) அவர்களின் குணம், அவர்களின் நடைமுறை வாழ்க்கை , பழகிய விதம், மற்றும் அவர்களின் உயர் பண்புகள் நாள்தோறும் எவ்வாறு இருந்தது என்பதை சுருக்கமாக எடுத்துரைக்கவே இந்தப்பதிவு.

உயர் பண்பு 

வார்த்தைக்குள் அடங்காத சிறந்த பண்புகளையும் குணங்களையும் கொண்டவர்களாக, அவர்களோடு சமகாலத்தில் பழகியவர்களே, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையைப் போல், இதற்கு முன் யாருக்கும், யாரும் கொடுத்ததுவும் இல்லை, கொடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு  அருமை நபி (ஸல்) தம் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். 

ஒருவரைப்பற்றி விரும்பாத செய்தி கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் "சிலர் ஏன் இப்படி செய்கிறார்கள்" என்று பொதுவாகப் பேசுவார்கள்.  சம்பத்தப்பட்ட நபரின்  பெயரை குறிப்பிட்டு சங்கடப்படுத்த  மாட்டார்கள்.

மக்களில் உண்மையாளராக, ஒழுக்க சீலராக, திகழ்ந்தார்கள். இந்த உண்மையை நபித்தோழர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட தெரிந்து வைத்திருந்தார்கள். 

மலர்ந்த முகம், இளகிய மனம், நளினம் பெற்று இருந்தார்கள். கடுகடுப்பு, முரட்டு குணம், கூச்சல், அருவருப்பாக பேசுதல், அதட்டுதல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இருந்தார்கள். 

நபித்துவம் வருவதற்கு முன்பே,  "நம்பிக்கைக்கு உரியவர் " என்று அழைக்கப்பட்ட ஏந்தல் நபி, அறியாமைக் காலத்திலும் அறிவிலிகளுக்குக்கும் நீதமான தீர்வு சொன்ன நீதிமான்.

தனக்கு முன்பு யாரும் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள், பணிவு உடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டும் விலகியும் இருந்தார்கள். 

தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்பவர்களாக இருந்தார்கள். காலணியை தாங்களே தைத்து கொண்டார்கள், ஆட்டிலிருந்து பால் கறந்து பயன்படுத்தி கொண்டார்கள், ஆடைகளை துவைத்து பயன்படுத்தி கொண்டார்கள், எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை தனித்துக்காட்ட விரும்பியதே இல்லை. 

ஒருமுறை ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும்படி கூறினார்கள். ஒருவர் நான் ஆட்டை அறுக்கின்றேன் என்றார், ஒருவர் நான் உரிக்கின்றேன் என்றார், மற்றொருவர் நான் சமைக்கின்றேன் என்றார்,  அப்படியென்றால் நான் விறகு பொறுக்கிக் கொண்டு வருகின்றேன் என்று அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள்.

அதற்கு சஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஏன் சிரமம் நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள். 

அதற்கு கண்மணி நாயகம் (ஸல்) சொன்னார்கள் : " நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் , ஆனால் என்னை என் தோழர்களிடமிருந்து  தனித்து காட்ட விரும்பவில்லை. அப்படி தனித்து காட்டுவதை  அல்லாஹ் வெறுக்கின்றான் " என்றார்கள். 

அண்ணல் (நபி ஸல்) தெள்ளதெளிவாக பேசுபவர்களாக  இருந்தார்கள், அனைவராலும் அறியப்பட்ட ஒரு நல்லியல்பு பெற்றவர்களாக இருந்தார்கள். தெளிவாக, சரியாக, சரளமாக பேசக் கூடியவர்களாக இருந்தார்கள். நூதன நுட்பங்களுடன்  சொல்லாக்கம் முழுமை பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடமும் அவரவவர் மொழி நடையில் பேசும் திறமை பெற்றிருந்தார்கள். நகரவாசிகள், கிராமவாசிகளுக்கு தகுந்தார்ப்போல் அவரவர் தொனியில் பேசக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சிரமத்தை தாங்குவது, சக்தி இருந்தும் மன்னிப்பது, சகித்துக்கொள்வது பொறுத்துப் போவது அவர்களின் உயர் பண்புகளில் உள்ளவைகளாகும். சாதாரணமாக இடையூறுகள் அதிகமாக அதிகமாக பொறுமை குறைந்து கொண்டே போகும். ஆனால் இந்த நீதிமானுக்கோ பொறுமை கூடிக் கொண்டே போனது. 

ஒரு விஷயத்தை தேர்ந்தெடுக்க இரண்டு வாய்ப்புகள் என்று வரும்போது அதில் இலகுவானதையே தேர்ந்தெடுப்பார்கள். அது பாவகரமானது என்று தெரிய வரும்போது வெகு தூரம் விலகி விடுவார்கள். தங்களுக்காக தங்கள் சுய நலத்திற்காக யாரையும் பழி வாங்கியதில்லை. ஆனால் அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் அதற்குற்குரிய தண்டனையை வழங்கத் தயங்கியதில்லை.

மெதுவாக கோபப்படுவார்கள். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். வறுமைக்கு  அஞ்சாமல் தேவை உடையோர்க்கு உதவி செய்தார்கள். விரைந்து வீசும் காற்றின் வேகத்தைவிட செல்வத்தை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அண்ணல் நபி (ஸல்) யாரும் ஒன்றை கேட்டு அவர்கள் இல்லை என்று சொன்னதே இல்லை.  

இப்படி  எந்த குணாதிசயங்களிலும்  ஒரு கடுகளவு குறை சொல்லும் சந்தர்ப்பத்திற்கு  இடமே இல்லாமல் இவ்வுலகை விட்டும் விடை பெற்றுச் சென்று இருக்கின்றார்கள் என்றால் என்னே ஒரு அற்புதமான வாழ்வு வாழ்ந்து சென்று இருக்கின்றார்கள்.

அமைதியின் கம்பீரம்!

நபி (ஸல்) மிகக்குட்டையோ, நெட்டையோ அல்லர், கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர்கள், அடத்தியான சுருட்டை  முடி கொண்டவரும் அல்லர், கோரை முடி கொண்டவரும் அல்லர், சிவந்த வெண்மையானவர்கள், கருவிழி உடையவர்கள். புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர்கள். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்லும் வழியில் , அவர்களைக் கண்ட குஜைமா கிளையைச் சேர்ந்த உம்மு மஅபத் விவரிக்கும்போது, 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வயிறோ, தலையோ பெருத்தவர் அல்லர், கவர்ச்சிமிகு பேரழகும், கருத்த புருவமும் உடையவர்கள், நீண்ட இமை முடியும், கம்பீரக்குரல் வளமும் உடையவர்கள். அவரது அமைதி கம்பீரத்தைத் தரும், ஒளி இலங்கும் பேச்சுடையவர் என்றும் இன்ன பிற பண்புகளையும் விளக்குகின்றார்கள்.  

ஒரு விஷயத்திற்காக திரும்பிப் பார்த்தால் முழுவதுமாக திரும்பிப் பார்ப்பாகள். நடந்தால் பள்ளத்தை நோக்கி நடப்பது போன்று பிடிப்புடன் நடப்பார்கள். இரண்டு புஜங்களிலும் நபித்துவ முத்திரை இருக்கும். மக்களுக்கு அதிகமாக வழங்கும்  தன்மை   உள்ளவராகவும், துணிவு உள்ளம் கொண்டவராகவும், மக்களில் அதிகம் உண்மை பேசுபவராகவும்,  பொறுப்புகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்கள்

அழகின் அசல் !

அண்ணல் நபி (ஸல்) அவர்களோடு தம் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த, கணிசமான நபிமொழி தொகுப்புகளை அறிவிக்கக்கூடிய அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 

"அண்ணல் (நபி) அவர்களைப்போன்று அழகானதை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் வதனத்திலே சூரியன் இலங்கியது. நாங்கள் சிரமப்பட்டு நடக்கும் வேகத்தை அவர்கள் சர்வ சாதரணமாக நடப்பார்கள். அல்லாஹ் பூமியை சுருட்டி நாயகத்தின் கையில் கொடுத்து விட்டானோ என்றும் நாங்கள் நினைக்கும் அளவுக்கு அவர்கள் நடையில்   வேகம் இருக்கும். 

"ஜாபிர் இப்னு சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

"ஒருமுறை நான் ஒரு பௌர்ணமி நிலவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன் நிலவையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தேன். எனக்கு நிலவைவிட அண்ணல் நபி (ஸல்) அவர்களே அழகாகத் தெரிந்தார்கள்" (திர்மதி, மிஷ்காத் )

இப்படி பௌர்ணமி நிலவு தோற்கும் அளவுக்கு அண்ணல் நபியை இவ்வுலகில் உலவவிட்டான் பேரறிவாளன் அல்லாஹ். 

ருபைய்யி  பின்த் முஅவ்வித் ( ரலி ) கூறுகின்றார்கள் :

ரசூல் (ஸல்) அவர்களைப் பார்த்தால், உதிக்கும் அதிகாலை சூரியனைப்போல் இலங்குவார்கள். (முஷ்னத்தாரமி, மிஷ்காத்) 

அகன்ற புஜமும், சோனை வரை முடிவைத்தும் இருந்தார்கள். வேதக்காரர்களை ஒத்திருக்கவேனும் என்பதற்காக வகிடு எடுக்காமல் நேராக சீவிக்கொண்டிருந்தார்கள். (சஹீஹுல் புகாரி, முஸ்லிம் )

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கையைப் போன்றதொரு மெல்லிய பட்டாடையை நான் தொட்டதில்லை. அவர்களிடமிருந்து வரும் நறுமணத்தைப்போன்று  வேறு எந்த நறுமணத்தையும் நான் நுகர்ந்ததில்லை. 

வேறு அறிவிப்பில் கஸ்த்தூரியிலோ அல்லது  அம்பரிலோ, வேறு எங்குமே நான் இது போன்றதொரு மணத்தை நுகர்ந்ததில்லை -   (சஹீஹ் புஹாரி, முஸ்லிம் )

ஒரு வழியில் ரசூலுல்லாஹ் (ஸல்) சென்று சிறிது நேரம் கழித்து அதே வழியில் வேறொருவர் சென்றால், அந்த வழியில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையை  வைத்து, அவர் அந்த வழியில் சிறிது நேரத்திற்கு  முன்பு அண்ணல் நபி (ஸல்) அந்தப் பாதை வழியாக சென்றிருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் மேனி கஸ்தூரி மணம் கமழும் ஒரு சுகந்தமாகவே  வாழ்ந்திருக்கின்றார்கள்.  

பனிக்கட்டியைவிட குளிர்ச்சியாகவும், நறுமனத்திலிருந்து கையை எடுத்தது போன்று  நறுமணம் பொருந்தியதாகவும், அவர்களின் கைகள் இருந்தன என்றும் இன்ன பிற அறிவிப்புகளிலும் காணமுடிகின்றது

அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் மூன்று குணங்களை விட்டும் தங்களை பாது காத்துக்கொண்டார்கள் :

1. முகஸ்துதி , 2. அதிகம் பேசுவது, 3.  தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

மூன்று  காரியங்களிலிருந்து தங்களை தவிர்த்துக் கொண்டார்கள் :

1. பிறரை பழிக்க மாட்டார்கள்.  2.  பிறரை குறைகூற மாட்டார்கள்.  3.  பிறரின் குறையை தேட மாட்டார்கள். 

ரசூல் (ஸல்) அவர்கள் பேச ஆரம்பித்தால் , அதைக்கேட்பவர்கள், தலையில் பறவை அமர்ந்திருப்பது போன்று , ஆடாமல் அசையாமல் கேட்பர்.

நபி (ஸல்) சபையில் கண்ணியத்திற்குரியவர்களாக தோற்றமளிப்பார்கள். தங்கள் மேனியின் மறைக்கப்பட வேண்டியதை மறைத்தும் வேறு எதையும் வெளிக்காட்டமாட்டார்கள். அதிகம் மௌனம் காப்பார்கள். அவர்கள் புன்முருவலாகவே சிரிப்பார்கள். அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும்.  பேச்சு தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது. 

நபியவர்களை கண்ணியப்படுத்த வேன்டும் என்பதற்காக, சப்தமிட்டு சிரிக்காமல் எல்லா தோழர்களும் புன்முருவளிலேயே தங்கள் சிரிப்பை வெளிப்படுத்துவர். 

மறைவான நாணம்

சாதாரண மனிதர்களைப்போல் அல்லாமல் திரை மறைவிலுள்ள கன்னிப்பென்களைவிட நாணம் உள்ளவர்களாகவும், மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்..

எவருடைய முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பெரும்பாலும் பார்வை கீழ்நோக்கியே இருக்கும். பார்வை கடைக் கண்ணாலேயே இருக்கும்.வெட்கத்தினாலும் உயர் பண்பினாலும்  யாரையும் வெறுப்பூட்டும்படி பேசியதே இல்லை.  

சஹாபாக்களின் நேசம்

எங்கள் கழுத்துக்கு கத்தி வந்தாலும் பரவாயில்லை  ஆனால் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நகத்தில் ஒரு கீறல் விழுந்தால் கூட எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லும் அளவுக்கு , அண்ணல் நபியின் மீது உயிரையே வைத்திருந்தார்கள் சஹாபாப் பெருமக்கள். அவ்வளவு ஆழமாக நேசித்தார்கள். அவர்களின் சிறந்த பண்பும் , குண நலன்களுமே இதற்குக் காரணம். 

இப்படி, இஸ்லாமிய அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும் ஒரு சேர தலைவராக இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு வேற்றுமையோ,  உயர்வு, தாழ்வோ பாராட்டாமல், நெருக்கத்தோடு வாழ்ந்து, உயர் பண்பின் உச்சத்தில் நின்று வழி காட்டிச் சென்றிருக்கின்றார்கள் என்றால் இதைவிட உயர் பண்பை வேறெங்கு கற்றிட முடியும் ?"

"என்னைப் பற்றி எந்த ஒரு செய்தி கிடைத்தாலும் அதை எடுத்து சொல்லிவிடுங்கள்" என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்திய ஒரே தலைவர் உலகிலேயே அண்ணல் நபி (ஸல்) ஒருவராகத்தான் இருக்கும். 

ஏனெனில் இந்த சொற்றொடர் உண்மையிலேயே ஒரு ஒழுக்க நியதிக்கும், உயர்பண்பின் உச்சத்திற்கும், நற்குணங்கள் என்று என்னென்னவெல்லாம் உலக  வழக்கத்தில் வருகின்றதோ அனைத்தையும் உள்ளடக்கிய, அப்பழுக்கற்ற , தூய்மையான வாழ்வுக்கு சொந்தக்காரர் தான் இந்த வார்த்தையை பிரகடனப் படுத்த முடியும். 

அதனால்தான் , அல்லாஹ்வால் வழி நடத்தப்பட்டதால், அங்கொன்றும் இங்கொன்றுமாக பெருமானார்  வாழ்க்கையில் மனிதன் என்ற முறையில் சில கோபதாபங்கள், மற்றும் சறுக்கல்கள் வரும் சமயமெல்லாம், இடறி விழுந்து விடாமல் அல்லாஹ் நம்மை காப்பாற்றி இருக்கின்றான் என்ற முழு நம்பிக்கையில்,  தூய்மையான அப்பழுக்கற்ற வாழ்வுக்கு அங்கீகாரமாக அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களை  தேர்ந்தெடுத்ததால் தான் இதை சொல்ல முடிந்து இருக்கின்றது.

சுருங்கச்சொன்னால், நபி (ஸல்) நற்குணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். ரப்புல் ஆலமீன் எஜ்மானனாக இவர்கள் அல்லாஹ்வின் தூதராக அழகிய ஒழுக்க முறைகளை கற்று தேர்ந்திருந்தார்கள். 

நிச்சயமாக நீங்கள் நற்க்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள் - அல்-குரான் -68:4 என்று அல்லாஹ் குர்ஆனில் புகழ்கிறான். 

தாக்கம் ! 

இந்தப்பண்புகள்தான் நபியவர்களை அனைவராலும் நேசிக்க வைத்தது. முரண்டு பிடித்த சமுதாய உள்ளங்களை பணிய வைத்தது. மக்களை கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைய வைத்தது. 

தலையை கொய்ய வந்தவரை தலைகீழாக மாற்றி, ஈமானில் பிரகாசிக்க வைத்தது. ஒரு அடிமைக்கு அல்லாஹ்வை அழைக்கும் பணிக்கு முதலில் குரல் கொடுக்க வைத்தது. வெற்றியிலும் பணிவு வேணும் என்னும் கொள்கையில் அனைத்து மக்களையும் பணிய வைத்தது. 

செருக்கற்ற,  தூய , பரஸ்பர உதவி மனப்பான்மை, மனித நேயம் மற்றும்  உன்னத பண்புகளைக்கொண்ட சமுதாயத்தை உருவாக்கியது. 

மொத்தத்தில் நாகரிகமற்ற ஒரு சமுதாயத்தை ஒரு உன்னத சமுதாயமாக மாற்றி அதை இவ்வுலகின் முன்னோடி சமுதாயமாக அறிமுகப்படுத்தி   இவ்வுலக வாழ்விற்கு பிரியா விடை கொடுத்தது. 

சல்லல்லாஹு  அலா முஹம்மது 
சல்லல்லாஹு அலைஹிவசல்லம்

சல்லல்லாஹு  அலா முஹம்மது
யாரப்பி சல்லி அலைஹிவசல்லம் 

அபு ஆசிப்

15 Responses So Far:

Ebrahim Ansari said...

வர்ணனைகள் அற்ற வரலாற்றுச் செய்திகள். தெளிவான தொகுப்பு. சீரான எழுத்து நடை.

தம்பி அப்துல் காதர் அவர்களின் ஒவ்வொரு பதிவிலும் மெருகு கூடிக் கொண்டே போவதை உணர்கிறேன். பாராட்டுக்கள்.

Ebrahim Ansari said...

வர்ணனைகள் அற்ற வரலாற்றுச் செய்திகள். தெளிவான தொகுப்பு. சீரான எழுத்து நடை.

தம்பி அப்துல் காதர் அவர்களின் ஒவ்வொரு பதிவிலும் மெருகு கூடிக் கொண்டே போவதை உணர்கிறேன். பாராட்டுக்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

ஆற்றுநீர் ஓட்டம் எப்படி அமைதி
..அதன்நடை எழுத்தினில் கண்டேன்
ஆற்றலும் அப்துல் காதரின் குரலில்
..ஆனது போலவே கண்டேன்
போற்றுதல் வாழ்த்துச் சொல்லுதல் உன்னைப்
...பெரிதினும் பெரிதென மாற்றும்
ஆற்றலு டையோன் அருளினால் நீயும்
..ஆகிடு எழுத்தினில் உயர்வாய்!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

காதர்,

மடை திறந்ததுபோல் ஆரம்பம் முதல் அருமையாகப் பாய்கிறது உன் கட்டுரை. ஏந்தல் நபியின் நற்குணங்களைப் பற்றி ஏற்கனவே நிறைய பேர் சொல்லிவிட்டாலும் நீ சொல்வது தனி பாணியில் இறுதிவரை ஒரே மூச்சில் படிக்க வைக்கிறது.

தவிர,

இப்றாகீம் அன்சாரி காக்காவே பாராட்டுவது மோதிரக் கையால் ஷொட்டு.அதுவும் மூன்றாவது கட்டுரையிலேயே காக்கா போன்ற கைதேர்ந்த எழுத்தாளர்களிடம் பாராட்டு வாங்குவது கடினம். நீ வாங்கி விட்டாய். பிறகென்ன? தொடரட்டும் உன் எழுத்துப் பணி.

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

sabeer.abushahruk said...

//சிரமத்தை தாங்குவது, சக்தி இருந்தும் மன்னிப்பது, சகித்துக்கொள்வது பொறுத்துப் போவது அவர்களின் உயர் பண்புகளில் உள்ளவைகளாகும். சாதாரணமாக இடையூறுகள் அதிகமாக அதிகமாக பொறுமை குறைந்து கொண்டே போகும். ஆனால் இந்த நீதிமானுக்கோ பொறுமை கூடிக் கொண்டே போனது. //

எவன் எவனையோ தலைவா என்றழைக்கும் இந்த தட்டுக்கெட்ட தலைமுறைக்கு எப்படித் தெரியும் தலைவருக்கான பண்புகள் யாவை என்று.

சக்தி இருந்தும் மன்னிப்பது என்பது பொறுமையின் உச்சகட்டத்தை விளக்குகிறது.

Unknown said...

என் எழுத்துக்கு ஆணிவேராக ஆரம்பம் முதற்கொண்டு என்னை ஊக்கு வித்துவரும் என் அருமை காக்கா, இப்ராஹிம் அன்சாரி அவர்கள், கவியன்பன் kalam , கவி வேந்தர் சபீர் மற்றும் இதர A.N. வலை தளத்தில் பங்களிப்பாளர்களாக உலா வரும் ஏனைய நண்பர்களின் ஊக்குவித்தல்தான் இதற்க்குக் காரணமென்று நினைக்கின்றேன்.

அண்ணன் நபி (ஸல்) அவர்களின் குணாதிசயம் பற்றி எழுதுவதென்றால் சாதாரண மனிதர்கூட எழுதிவிடலாம். ஏனனில் நம் மனதில் என்னென்ன நற்க்குனங்களிப்பற்றி வார்த்தைகள் உதிக்கின்றனவோ அவை அனைத்திற்கும் பொருத்தமான ஒரு மாமனிதரைத்தான் நாம் இறுதித்தூதராக பெற்றோம்.

சொல்லுதல் யார்க்கும் எளிய , அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

என்ற குரலுக்கு மாற்றாக சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்து இவ்வுலகை விட்டும் பிரிந்தவர்கள் எம்பெருமான் (ஸல்).

அனைத்து நற்க்குனங்களுக்கும் ஒருமித்த ஒரு அழகிய வழிகாட்டி
அருமை நபி (ஸல்)

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயர் குணங்களை சிறப்பான தமிழெழுத்து நடையில் சொன்னது மிகவும் அருமை.

நாமும் அவர்கள் வழி வாழ்வோமாக!

சல்லல்லாஹு அலா முஹம்மது
சல்லல்லாஹு அலைஹிவசல்லம்
சல்லல்லாஹு அலா முஹம்மது
யாரப்பி சல்லி அலைஹிவசல்லம்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி அப்துல் காதர் மற்றும் கவிஞர் சபீர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

திறமைகளைக் கண்ட மாத்திரத்தில் திறமைசாலிகளைத் தட்டி கொடுத்துப் பாராட்டவேண்டுமென்ற குணம் ஒரு சிறப்பு என்று நான் கருதவில்லை அது ஒரு கடமை என்றே கருதுகிறேன்.

அண்மையில் அறிமுகமாகி மூன்றாவது கட்டுரையை மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் திறமை தம்பி அப்துல் காதருக்கு வாய்த்து இருப்பது இறைவனின் அருள். இவரை இங்கு அறிமுகப் படுத்திய தம்பி சபீர் அவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.

திறமைகள் இருந்தும் வாய்ப்பு இல்லாமலும் அவைகளைப் பயன்படுத்திக் கொள்ளாமலும் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களைத் தேடிக் கண்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துத் தட்டிக் கொடுத்து வளர்ப்பது தனி மனிதக் கடமை.

நான் பார்த்த வரையில் பலர் தன்னிடம் இருக்கும் திறமைகளை தானே உணராதவர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் தயக்கம், தன்னம்பிக்கைக் குறைவு ஆகியவை. நம்மால் முடியுமா என்று யோசிப்பவர்கள் மத்தியில் முடியும், என்று முனைவோர்களை ஊக்கப்படுத்துதல் ஒரு சமுதாயக் கடமை.

பசுவின் உடல் முழுதும் பால் பரவி இருக்கிறது ஆனால் பிடித்துக் கறக்க வேண்டிய இடத்தில் கறந்தால்தான் பால் வரும். அதேபோல் பதிவாளர்களைத் தேடிக் காணவேண்டும்.

நண்பர் பகுருதீன் இப்படிக் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு காம்பு. இன்று பால் மழை பொழிந்து கொண்டு இருக்கிறது. அவர் பேசும்போது நிறைய விஷயங்களை அள்ளி விடுவார். ஏன் இவற்றை நீங்கள் எழுதித் தரக் கூடாது என்று கேட்கப் பட்ட கேள்விக்கு விடைதான் இன்று வெற்றிகரமாகப் போய்க் கொண்டு இருக்கும் நேற்று இன்று நாளை தொடர். அடுத்து வரப போவது "துளி விஷம்" என்ற தலைப்பில் அரசியல் ஆய்வு.

அதே போல் தம்பி தாஜுதீன் அவர்கள் சிறிதாகத் தொடங்கி இன்று வாசகர்களை தனக்காக உருவாக்கி புதன் கிழமையை எதிர்பார்க்க வைத்து விட்டார். மாஷா அல்லாஹ்.

மரியாதைக்குரிய மச்சான் SMF அவர்கள் மிகச் சிறுவயது முதலே ஒரு எழுத்தாளர். இவர்களது கை எழுத்தில் பள்ளிக் கூட நோட்டு புத்தகங்களில் பல கவிதைகளை வாசித்த நினைவு எனக்கு உண்டு. காலம் கடந்தாலும் தனது அனுபவத்தை அழகுபட அள்ளித்தரும் வாய்ப்பு அவர்களுக்கும் அவற்றை அள்ளிப் பருகும் வாய்ப்பு நமக்கும் கிடைத்து இருப்பது மகிழ்வான விஷயம்.

இந்த முறையில் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு இளம் எழுத்தாளர் தம்பி அபூ ஆசிப். இவரின் எழுத்தில் ஈர்க்கும் சக்தி இறைவனருளால் நிறைய இருக்கிறது. இன்னும் நிறைய எழுதட்டும் இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எம்பெருமானாரின் நற்குணங்கள், பார் போற்றும் பண்புகள் பற்றி இவ்வளவு அழகாதிய, நரூசான எழுத்து நடையை காதர் சாச்சா எங்கு தான் ஒளிச்சி வச்சீந்தியலோ? எடுத்து வைக்க சரியான தளம் இவ்ளோவ் நாளா கிடைக்காமல் அவஸ்த்தை பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். தொடரட்டும் உங்கள் தூய தமிழில் இந்த‌ மார்க்கப்பாடம்....

சில சமயம் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்.) அலைஹி வஸல்லம் அவர்கள் தன் வாழ்நாளில் சில வேளை கடும் சினம் கொண்டு கடிந்து கொள்ளும் பொழுதும் அதே சமயம் பரிவு காட்ட வேண்டிய இடத்தில் பரிவு காட்டிய நிகழ்வுகளையும் நம் தாய் மொழியாம் தமிழில் படிக்கும் பொழுது கண்களும், உள்ளமும் சேர்ந்தே கலங்கி விடுகிறது.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் [வராஹ்]...

//ரஸுலுல்லாஹ் [ஸல்] அவர்கள் தங்களை விட்டும் பாதுகாத்துக் கொண்ட மூன்று குணங்கள்; தங்களைத் தவிர்த்துக் கொண்ட மூன்று செயல்கள்.//

இந்த ஆறு கோட்பாடுகளும் மனித வாழ்கையே மாண்புறச் செய்யும் சிறப்பான கோட்பாடுகள். இதை நமக்கு நினைவூட்டிய தம்பி அபுஆசிஃப் அப்துல் கதிருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

இயல்பான எளிய எழுத்து நடை இனிக்கிறது.

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Abu Asif,

Your article about great characters, personality of our Prophet Muhammed Sallallahu Alaihiwasallam is simply excellent. It's a short reference model for the readers. You have carved your own niche of style in writing. MashaAllah. Keep writing more and more.

Jazakkallah khairan,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நபிமணியும் நகைச்சுவையும் அழகு தமிழில் இலக்கிய நடையில் எக்காலத்திற்கும் பொக்கிஷமாக மலர்ந்தது ! (விரைவில் புத்தமாக அனைவரின் கைகளில் இருக்கும் இன்ஷா அல்லாஹ்).

குணக்குன்று ! எளிய உரைநடையில் இனிமையான ரசனையோடு மனதில் பதியவைக்கும் வீச்சு !

மூத்தோர் வாழ்த்த இளைவர்களான நாங்களும் கைகோர்த்து நிற்கிறோம் !

Unknown said...

காக்கா s. முஹம்மது பாரூக் அவர்கள் , என் காக்கா வின் அருமைப்புதல்வர் , முஹம்மது நைனா அவர்கள், சகோதரர் அமீன் அவர்கள், அபூ இப்ராஹிம் அவர்கள் இந்த அனைவரும் தமது பின்னூட்டத்தில் தரமான ஊக்கத்தினை தந்ததை அடுத்து ஒரு தரமிக்க மர்ர்க்கத்தின் மணம் கமழும் தொடரைத்தர ஒரு ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, மற்றும் விட்டமின் மாத்திரகள் சாப்பிட்டது போல் இருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் அடுத்து ஒரு தரமான பதிவை தர இதுபோன்ற தரமானவர்களின் ஊக்கத்தை எதிர்பார்த்து

அபு ஆசிப்.

Unknown said...

//அதுவும் மூன்றாவது கட்டுரையிலேயே காக்கா போன்ற கைதேர்ந்த எழுத்தாளர்களிடம் பாராட்டு வாங்குவது கடினம்//


சபீர்,

இது நான் எழுதிய நாலாவது கட்டுரை

abu asif.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்

அகில உலகத்தின் அருட்கொடை! ஏக இறைவனின் இறுதித் தூதர்! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய பன்புகளை அழகிய நடையில் கட்டுரையாக்கிய காக்கா அப்துல் காதர் அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

சல்லல்லாஹு அலா முஹம்மது
சல்லல்லாஹு அலைஹிவசல்லம்
சல்லல்லாஹு அலா முஹம்மது
யாரப்பி சல்லி அலைஹிவசல்லம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு