Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 33 15

அதிரைநிருபர் பதிப்பகம் | June 21, 2014 | , , , ,


ன் ட்டைனும் ருநாம்

உலகப் பொருளாதாரம்,  இன்றைய நவீன  உலகில் வட்டியை அடிப்படையாகக்கொண்டே இருக்கிறது என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.  வட்டி பல அரிதாரங்களைப் பூசி ஆலவட்டம் போட்டு வருகிறது. வட்டிக்கு கடன் வழங்கும் முறை காலப்போக்கில்  பல வடிவங்களைப் பெற்றுள்ளது அவற்றுள் Mortgage, Finance, Leasing, Hire  Purchase , Hypothecation,  போன்றன அவற்றில் சில வடிவங்களாகும். அவற்றுள் ஒரு வடிவமே Credit Card என வழங்கப்படுகின்ற கடன் அட்டை என்கிற நடைமுறையாகும் . 

இப்படி வட்டி போடும் நவரச வேடங்களில் கடன் அட்டை என்கிற வேடம் ஒரு கவர்ச்சிகரமான வேடமாகும் ; இடுப்பில் இரண்டு இன்ச் கச்சையும் மார்பில் மாராப்பும் இல்லாமல் மறைக்க வேண்டியதை மறைக்காமல் குலுக்கு ஆட்டமும் குத்தாட்டமும் ஆடி வல்லவர்களைக் கூட வளைத்துப் போடும் வன்மை நிறைந்த வட்டியின் வனப்பான  அவதாரமே கடன் அட்டை. இன்றைய தனிமனித பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இந்தக் கவர்ச்சி உடை அணிந்த கடன் அட்டை கலாச்சாரம்தான். 

கடன் பற்றிய கடந்த அத்தியாயத்தில் ஒரு மனிதருக்கு அத்தியாவசியமான தேவை ஏற்படுகிற போது கடன் வாங்குவதில் தப்பில்லை என்கிற கருத்தை குறிப்பிட்டோம். ஆனால் தேவை ஏற்படாமலேயே கடன் வாங்கும் அளவுக்கு மனதை தயார்ப் படுத்துவதே கடன் அட்டையின் தனிப்பட்ட தன்மையாகும். அரை வயிறுக் கஞ்சியாவது குடிக்க வேண்டுமென்று அரிசியை கடன் வாங்கும் நிலைமையில் இருக்கும் ஒருவனிடம் கடன் அட்டை இருந்தால் அவன் ஐ பேடு வாங்கி மச்சினிக்குப் பரிசாக அனுப்பத துணிவான்.    

உலகத்தின் வரலாறுகளைப் பார்த்தால் ஒழுக்கத்தின் அழிவுகள் அனைத்துமே உருவாகும் பகுதி மேற்கத்திய நாடுகளே என்பதில் சற்றும் சந்தேகம் இருக்க இயலாது. நாகரிக வளர்ச்சி என்கிற பெயரில் மேற்கத்திய நாடுகளில் தோன்றத் தொடங்கிய   பழக்கங்களே மெல்ல மெல்ல  உலகெங்கும் பரவி குவலயத்தை ஆண்ட பல நாடுகளை குப்புறத் தள்ளிய வரலாறுகள் பல இருக்கின்றன. அவ்வகையில் மேற்கில் தோன்றிய ஒரு பழக்கமே கடன் அட்டை பயன் படுத்தும் கலாச்சாரமாகும்.  அத்துடன் அமெரிக்க மற்றும் யூத மூளைகள் ஒன்று சேர்ந்து ஈன்ற குழந்தையே இந்த கடன் அட்டை எனும் இந்த  ஈனக் குழந்தை.  

பொருளாதார நடவடிக்கைகளின் தொடக்கம் எது என்று பார்ப்போமானால் அது மனிதர்களுக்கு ஏற்படும் தேவையும் ஆசையும்தான்.  இந்தத் தேவைகளை அத்தியாவசியத் தேவை (Necessities)  என்றும் ஆடம்பரத்தேவை (Luxuries) என்றும்  பொருளாதார இயல் பகுத்து இருக்கிறது. கையில் உள்ள காசுக்குத் தகுந்தபடி தனது செலவினங்களைத் திட்டமிடும் மனிதன் முதலில் தனது அத்தியாவசியத்தேவைகளுக்கே அந்தக் காசை பயன் படுத்துவான். ஆடமபரத் தேவைகளையும் , ஆசைப்படும் தேவைகளையும் கையில் காசில்லாமலேயே நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமைகளை உருவாக்குவது கடன் அட்டை கலாச்சாரமாகும். 

இந்த கடன் அட்டையின் ஆபத்தை அறிந்தவர்கள் அவற்றைக் கண்டு ஒதுங்கிப் போனாலும் நிதி நிறுவனங்களும் வர்த்தக வங்கிகளும் வீட்டுக் கதவுகளைத் தட்டுவது மட்டுமல்லாமல் நேரில் சந்தைப்படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளை நாம் வேலைபார்க்கும் அலுவலகத்துக்கும் அனுப்புவதுடன்  அலை பேசி மற்றும் இணைய தளங்களின் முகவரி  மூலமாகவும் கவர்ச்சியான விளம்பர  உக்திகளைக் கையாண்டு இவர்கள் விரிக்கும் வலையில் பல மான்களும் மீன்களும்  வீழ்ந்துவிடுகின்றன.  கடன் அட்டைகளை வைத்திருப்பதை ஒரு பெருமையாகக் கருதும் மனப்பான்மையிலும்  பலர் இந்த வலையில் வீழ்ந்துவிடுகின்றனர். 

உலகிலேயே  மிகவும் கொடியது என்ன வென்று கேட்டால் நல்லது போலத்தோன்றும் கெட்டதுதான். நல்லவர்கள் போலத் தோன்றும் கெட்டவர்களே உலகில் ஆபத்தானவர்கள். வெறும் பனை ஓலைதானே  என்று கை வைக்கப்போனால் அது பச்சைப் பாம்பாகி கண்களைக் கொத்திவிடும்  உதாரணம் இந்தக் கடன் அட்டைக்குக் கச்சிதமாகப்  பொருந்தும். 

உண்மையில் கடன் அட்டை என்பது நுகர்வோரை கடன்காரராக மாற்றும் ஒருவகையான சமூகக் கொடுமையாகும். சம்பாதிப்பதை உறிஞ்சும் அட்டைப் பூச்சியே இந்த கடன் அட்டை. பணம் இல்லாத நிலையில் மனோதத்துவரீதியாக ஒரு தைரியத்தைக் கொடுத்து செலவு செய்யத் தூண்டும் ஒரு இழைதான் இந்த கடன் அட்டை. தங்களின் பர்சுகளில் இருக்கும் கடன் அட்டைகளின் மதிப்பு ஏதோ ஒரு தனிமனிதன் தான் தேடி சேமித்து வைத்திருக்கும் செல்வத்தின் மதிப்பு அல்ல என்பதை உணராமல்  செலவழித்துவிட்டு அதிலிருந்து விடுபட முடியாமல் பல மில்லியன் மக்கள் இன்று உலகெங்கும்  பொருளாதார சிக்கலில் ஆழ்ந்து மூழ்கிவிட்டதாக ஒரு ஆய்வு சொல்கிறது.  ஒரு வகையில் இது ஒரு நாகரிகமான  அடிமை சாசனம். 

கடன் அட்டை கலாச்சாரத்தை ஆதரித்துப் பேசுவோர் கூறும் முதல் வாதம் பெரும் தொகைகளை ரொக்கமாக கைகளில் வைத்திருப்பது ஆபத்தானது. அதற்கு பதிலாக பெருந்தொகை மதிப்புக்கு ஒரு கடன் அட்டையை வைத்திருப்பது பாதுகாப்பானது என்பதாகும்.  ஆனால் உலகெங்கும் கடன் அட்டையின் இரகசிய சங்கேத வார்த்தைகள் திருடப்பட்டு பலரின் பணம் பதைக்கப்பதைக்க களவாடப்படும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றனவே! கூட்டம் கூட்டமாக இப்படிப்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபடுகின்றனவே!  போலியாக கார்டுகள் தயாரிக்கப்பட்டு பல இலட்சங்கள் சுருட்டப்படுகின்றனவே ! ஆகவே திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.   

பணத்தைப் பாதுகாப்பதற்காக கடன் அட்டையைப் பயன்படுத்துவோர் காசோலைகளைப் (Cheques) பயன்படுத்தலாம் அல்லது (Traveller’s Cheques)  சுற்றுலா காசோலைகளைக்  கூட பயன்படுத்தலாம். மேலும் கிரெடிட் கார்டு என்கிற ஷைத்தானுக்கு ஒரு குணமுள்ள  சக்களத்தி உண்டு. அதன் பெயர் டெபிட் கார்டு (Debit Card). இந்த டெபிட் கார்ட் என்பது நமது கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு மட்டும் நம்மால் நுகர் பொருட்களையோ அல்லது சேவைகளையோ வாங்கிக் கொள்ள உதவும். பணத்தை ரொக்கமாக தூக்கி சுமக்க அஞ்சுவோர் இந்த டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம். இப்படி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்திக் கொள்வதில் எவ்வித குற்றமோ தடையோ நாம் காண இயலாது. வெளியூர்களுக்குச் செல்பவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி அதை தங்களது டெபிட் கார்டுகளில் வரவு வைத்துக் கொண்டு செல்லமுடியும். பாதுகாப்பாகவும் இருக்கும் ; தேவைக்கும் பயன் படுத்தலாம். 

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாமென்று வாதிடுவோர் வைக்கின்ற இன்னொன்று வாதம் கடன் அட்டைகள் இருந்தால் அவைகளைப் பயன்படுத்துவதன்  மூலம் இணைய தளங்கள்  மூலம் பணம் செலுத்தி நாம் செல்ல முடியாத இடங்களில் இருந்து கூட நுகர் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும்.  உதாரணமாக விமான டிக்கெட்டுகள் முதல் இரயில் மற்றும் பேருந்து  டிக்கெட்டுகள் வரை இவ்விதம் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. மேலும் இணைய தளங்கள் அல்லது தொலைக் காட்சிகள் மூலமாக  விளம்பரம் செய்யப்படும்  டெலி மார்கெடிங் மூலமாகவும் பொருட்களை வாங்க கடன் அட்டைகள்   பயன்படுத்துவது வசதியாக இருக்கிறது என்றும்  நகராட்சி வரிகள்,  தொலைபேசி,   மின்வாரியப்  பட்டியல் தொகைகளைக் கூட  செலுத்திவிட வசதியாக இருப்பதாகவும் வாதிடுகிறார்கள். ஆனால் மேற்கண்ட அனைத்து வசதிகளையும் நம்மிடம் நமது கணக்கில் இருக்கும் பணத்தின் அளவுக்கு டெபிட் கார்டுகள் மூலமும் நாம் பெற்றுக் கொள்ள இயலும்.இதன்மூலம் கடன் வாங்க வேண்டிய நிலைமையும் தவிர்க்கப்படும் ;  வட்டி எனும் வஞ்சகனின் ஆட்சியும் இம்முறையில் இல்லை. 

இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பார்வையில் கடன் அட்டைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் யாவை?  

பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எவ்வித கொடுக்கல்வாங்களாக இருந்தாலும் அது இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையில் அது தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தடுத்துக் கொள்ள வேண்டுமென்பதன் அடிப்படைக் காரணம். 

கடன் அட்டைகளை தேவைகளுக்காகப்  பயன்படுத்திக் கொண்டு பின் அவ்விதம் பயன்படுத்திய தொகைக்கான வட்டி கணக்கிடப்படும் தேதிக்கு  முன்பே  பணத்தை கடன் அட்டைகளை வழங்கும் நிறுவனத்திடம் செலுத்திவிட்டால் வட்டி இல்லாமல் தவிர்த்துக் கொள்ளலாமே! என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த வாதம் இரு விதங்களில் தவறு என்று இஸ்லாமியப் பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள். 

ஒன்று,  கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்ளும் முன்பு அவற்றை வழங்கும் நிறுவனத்துடன் நாம் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்கிறோம். அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களின்படி தாமதமாகும் நாட்களுக்கு குறிப்பிட்ட  சதவீதத்தில்  வட்டி செலுத்த நாம் ஒப்புக் கொண்டு கை எழுத்திட வேண்டும். இத்தகைய கையெழுத்திடும் ஒப்பந்தம் இஸ்லாமிய பொருளாதார விதிகளின்படி ஹராமானது/ விலக்கப்பட வேண்டியது. 

இரண்டாவதாக, நாம் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குரிய பணத்தை வட்டி கணக்கிடபப்டும் தேதிக்கு முன்பே செலுத்திவிடுவோம் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. சில நேரங்களில் நமது பணக் கையிருப்பு எதிர்பாராதகாரனங்க்களால்  குறைவாக இருந்துவிட்டாலோ  அல்லது நமது கவனக் குறைவாலோ குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்தாவிட்டால் வட்டியின் வலையில் விழும் வாய்ப்புக்கள் அதிகம். ஒருமுறை வட்டி,  நமது வாழ்வில் அரங்கேற்றம் ஆகிவிட்டால் பலமுறை அது பாலச்சந்தர்  படம் போல நமது கதவுகளைத் தட்டும்.   ஆகவே நெருப்போடு  விளையாடுவதை தவிர்த்துக் கொள்வதே நல்லது. 

வட்டியைப் பற்றி இறைவன் தனது திருமறையிலும் பெருமானார் ( ஸல்) அவர்கள் தனது நபி மொழிகளிலும் தந்திருக்கும் எச்சரிக்கைகளை ஏற்கனவே தனி அத்தியாயத்தில் கண்டு இருக்கிறோம் . மீண்டும் கீழ்க்கண்டவற்றை நினவு படுத்திக் கொள்வோம். வட்டியோடு தொடர்புடைய கடன் அட்டையை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்வோம். 

“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” (அல்குர்ஆன் 2:275)

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” என்பதை அறிவிப்பவர்  ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த அத்தியாயத்தில் பங்கு சந்தைகள்    பற்றிப் பார்க்கலாம்.
தொடரும்
இபுராஹீம் அன்சாரி

15 Responses So Far:

Aboobakkar, Can. said...

அடியேனின் மதிப்பிற்குரிய மூத்த சகோதரர்கள் ...இப்ராஹிம் அன்சாரி காக்கா மற்றும் முகமது பாரூக் காக்கா ஆகியோர்களின் இந்த வலைதள சமூக விழிப்புணர்வு ஆக்கங்கள் இந்த அதிரை நிருபர் வலைதளத்தில் அதிகம் பதிவுகளாக வருவது என் போன்ற அதிரையர்களுக்கு மிகவும் சிறப்பு ...கருத்திட முடியா நமது தமிழ் சமூகம் கனடா ,UK , ஜப்பான் போன்ற நாடுகளில் இதை நிறைய பார்கின்றனர்.
அவர்களின் பதிவுகளில் கேட்கும் சந்தேகங்களை பூர்த்தி செய்பவனும் அடியேனே என்று நான் பெருமை படிகின்றேன்.

ஒரு சின்ன உதாரணம் Credit Card அதை நாம் வைத்திருக்கும் பட்சத்தில் கூடவே ஒரு கத்தியையும் நாம் நம்முடன் வைத்திருப்பதாகவே அர்த்தம் .....

Ebrahim Ansari said...

தம்பி அபூபக்கர் அவர்களின் கருத்தும் அவர் சுட்டிக் காட்டி இருக்கும் காட்சியும் மிகவும் ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

sheikdawoodmohamedfarook said...

கடன்அட்டைகையில்இருந்தால்அதுதேவையற்றதையும்வாங்கத்தூண்டும். தேவையற்றதைவாங்குபவன்தேவையானதைவிற்க்கவேண்டியநிலைவரும். சிக்கன வாழ்வேசிறந்த வாழ்வு. சிக்கனத்திற்குபெயர்போனவர்கள் பெண்கள்.’’சேர்த்தபணத்தைசிக்கனமாசெலவுபண்ணபக்குவமாஅம்மாகையிலேகொடுத்துப்பாருசெல்லக்கண்ணு-அவஆறேநூறுஆக்குவாங்கசெல்லக்கண்ணு!’’என்றபாட்டுபெண்களின் சிக்கனத்தைசெப்புகிறது.இதுஅந்தக்காலத்துபெண்களுக்கேபொறுந்துகிறது. இந்தக்காலத்துபெண்களுக்கு? ‘’ஆனமுதலில்அதிகம்செலவானால் மானம்அழிந்துமதிகெட்டுப்போனதிசை எல்லோர்க்கும் கள்ளனாய்யேழ்பிறப்பும்தீயனாய் நல்லார்க்கும்பொல்லனாய்நாடு’’ என்றுசங்ககாலபாடல்உண்டு.
கடன்அட்டைரத்தத்தை உறிஞ்சும்அட்டை! நெருங்காதேஅதன்கிட்டே!

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல அறிவுரைகள்.
ஜஸாக்கல்லாஹ் கைரன் காக்கா.
/////////////////////////////////////////////////
சில கமெண்டுக்களின் கருத்துக்கள் விரசமாக உள்ளது . அவைகள் களையப் பட வேண்டும்.

Shameed said...

கடன் அட்டை பற்றி ஆக்கபூர்வமான ஆக்கம்

Shameed said...

மாமா அவர்கள் கடன் அட்டை பற்றி விபரமா எழுதி உள்ளதால் பேங் காரங்க தொலைபேசியில் தொல்லை கொடுக்க வாய்ப்பிருப்பதால் தொலைபேசியை கவனமாக கையாளவும்

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

கடன் அட்டை, காலில் ஒட்டி ரத்தம் உறிஞ்சும் காட்டு அட்டை என்பதை உணர்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ், என் வாழ்நாளில் ஒரு முறைகூட நான் ஒரு கடன் அட்டை கூட உபயோகித்ததில்லை, அல்ஹம்துலில்லாஹ்.

அருமையான ஆக்கத்திற்கு அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

Ebrahim Ansari said...

என்றோ சொன்னது இன்றும் இனிப்பது.
=================================

//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அனுபவத்தில்...
கடன் அட்டையும் கிடையாது
காசு அட்டையும் கிடையாது
கடவுட்சீட்டு மட்டுமே உண்டு.\\

So touching and speaks nothing but reality.
கடன் அட்டை
காலில் ஒட்டும் அட்டை
குருதி யுறிஞ்சாமல் நீங்காது!

கடன் அட்டை
கதர் சட்டை கட்சிக்காரன்
கழுத்தை நெறிக்காமல் விடாது

கடன் அட்டை
காக்கிச் சட்டை காவல்
கை யொடிக்காமல் ஓயாது

கடன் அட்டை
கண்தெரிந்தே இறங்கும்
உடன்கட்டை
முடிக்காமல் முடியாது

கடவு அட்டைதான்
நமக்கு நடவு
அறுவடைதான் வரவு!

- கவிஞர் சபீர்.

adiraimansoor said...

///இடுப்பில் இரண்டு இன்ச் கச்சையும் மார்பில் மாராப்பும் இல்லாமல் மறைக்க வேண்டியதை மறைக்காமல் குலுக்கு ஆட்டமும் குத்தாட்டமும் ஆடி வல்லவர்களைக் கூட வளைத்துப் போடும் வன்மை நிறைந்த வட்டியின் வனப்பான அவதாரமே கடன் அட்டை///

காக்கா
இதைவிட கடன் அட்டைக்கு விளக்கம் தேவையில்ல.
மதி மயக்கும் விளக்கம் சூப்பர்

adiraimansoor said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

காக்கா,

சலாம்.

உண்மையிலேயே நல்லாருக்கேன்னு வாசிச்சுக்கிட்டே வந்தேன். கடைசியில் என் பெயரைப் போட்டிருக்கிறீர்கள்.

இரண்டு கேள்விகள்:

ஒன்று:
கவிஞர் சபீர்? நான் கவிஞன் தானா?

இரண்டு:
உண்மையிலேயே நான் எழுதியதா?

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு அலைக்குமுஸ் சலாம்.

முதல் கேள்விக்கு பதில் : பராசக்தியில் நீதிமன்றத்தில் கேட்பார்களே ! கல்யாணி உன் தங்கை என்பது உணமைதானா? அதற்கு சிவாஜியின் பதில்தான் என் பதில்.

கவிஞர் என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறேன். கவிப்பேரரசு , கவிமாமணி , கவிஞர் திலகம் என்றெல்லாம் பட்டம் பலருக்கு ஏற்கனவே கொடுத்துவிட்டார்கள். உங்களுக்கு இன்னும் சத்தான ஊட்டமான பட்டம் விரைவில் அவையைக் கூடி அறிவிக்கப்படும் அதுவரை கவிஞர் என்றே அழைப்போம்.

இரண்டாவது கேள்விக்கு பதில்

இந்த இணைப்பு

http://adirainirubar.blogspot.in/2013/04/blog-post_26.html

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விலக்கப்பட்ட வட்டியிலிருந்து விடுபட்டு டெபிட் கார்டை கொண்டே நடப்பில் அனைத்து வசதிகளையுமே பெறமுடியும் என்பது வரை அழகு விளக்கங்கள்.

அதோடு பழசையும் கிளறி மகிழ்வித்தமைக்கு சந்தோசமும் சலாமும் காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு